1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
1. ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
ஒரு தாயின் வயிற்றில் வாசம் செய்துதான் ஒரு குழவி வெளிப்படவேண்டும் என்பது ஆன்மீகத்தில் சோர்ந்துபோன நம்முடைய இன்றைய நினைவு! மகாபாரதத்தில் துரோணர் பரத்வாஜ முனிவரின் வீரியத்திலிருந்து மட்டுமே தாயே இல்லாமல் தோன்றினார்.
அவதாரங்கள் என்றால் என்ன என்பதை முதலில் சரியாகாத் தெரிந்துகொள்ளவேண்டும்! அவதாரம் என்ற வடசொல்லுக்கு "இறங்கி வருதல்" என்று பொருள். ஸ்ரீவைணவப் பெரியோர்கள் பரம்பொருளின் வடிவங்களை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளனர்.
ஆண்டாள் புவியில் தோன்றிய பின் திருவரங்கனை மணக்கும் வரை வாழ்ந்த பொழுது அது விபவ அவதாரம்; இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் முதலான திருத்தலங்களில் சிலை வடிவில் இருப்பது அர்ச்சா அவதாராம். விபவ அவதாரத்தில் ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறப்பதும் உண்டு (இராமன், கண்ணன் போல). அல்லது நேரடியாகவே தோன்றுவதும் உண்டு (வராகன், நரசிங்கன் போல). இரண்டு வகையிலுமே நம் போன்று "நல்வினை தீவினை என்றவற்றால் பிறப்பு" என்பது போல் அல்லாமல் பரமபதத்தில் அல்லது ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள அப்ராக்ருத (பஞ்சபூதங்களுக்கு அப்பாற்பட்ட) திருமேனியுடன் பிறப்பர்.
திருமகளின் அவதாரமான அன்னை சீதையும் சனகனுடைய மனைவியாரின் கர்ப்பத்தில் வாசம் செய்து பிறந்த பெண் அல்லள். மக்கட்பேறு வேண்டி யாகம் செய்யத் (தன்னலம் கருதாதக் கரும யோகியான) சனகர் யாகசாலையை உழும்பொழுது அந்த யாகபூமியிலிருந்து தோன்றியவள். கவிச் சக்கிரவர்த்தி கம்பர் பெருமான் ‘சனகன் பெற்ற அன்னம்’ என்றே சீதையை அழைக்கின்றார்!
எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடும் தன்னலமற்றத் தொண்டரான பெரியாழ்வாரும் கண்ணபிரானுக்காகவே ஒரு திருநந்தவனம் (பூந்தோட்டம்) அமைத்து அவனுடைய மகிழ்ச்சிக்காகவே பூமாலைகள் கட்டிக்கொடுத்தார். இதுவே ஒரு மிகச் சிறந்த யாகம் அன்றோ? பாத்திகள் அமைத்து அவர் அமைத்த பூந்தோட்டமே யாகசாலை. திருத்துழாய் வனம் திருமகளுடன் திருமால் உறையும் வனம் என்பது சாத்திரங்களில் முழங்கப்பட்ட உண்மை. திருமால் உறையும் அப்படிப்பட்ட உயர்ந்த யாகசாலையில் திருமகளின் அம்சமான நிலமகள் திருவாடிப்பூர நன்னாளில் (சீதையைப் போலவே) தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள். அதனால் அவளும் பெரியாழ்வார் (அவர் ஆற்றிய தன்னலமற்றதொரு தொண்டான யாகத்தின் மூலம்) பெற்றெடுத்த பெண்பிள்ளையே.
2. பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில் பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?
"வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும்" - ???!!! இல்லத்தரசிதான் உண்டு - இல்லத்தரசன் இல்லை. நிர்வாகத்திறன், பொறுமை, அன்பு, கருணை போன்ற குணங்களால் இல்லத்தைப் பேணி ஆட்சி புரிபவள் பெண்.
ஆண்டாள் அவதரித்தபின் “ஆக்கமுறவில்லை” - ஒரு அவதாரத்தின் குறிக்கோள், பின்னணி (அவதார இரகசியம்) என்னவென்று புரிந்துகொண்டால் இதுபோன்ற குழப்பங்கள் வாரா.
“பெருமாள் சந்நிதியின் பாட்டுப்பொருள்” - ஆண்டாளைப் "பாடவல்ல நாச்சியார்" என்றே சான்றோர் அழைப்பர். அதன் பின்னணி சுவையானது - வராகப் புராணத்தின் ஒரு பகுதி கைசிக புராணம். இந்தப் புராணம் திருமால் பெருமையை இராகத்துடன் பாடி வந்த நம்பாடுவான் என்ற ஒரு அற்புதமான திருமாலடியார் (சண்டாளர் குலத்தில் உதித்தவர்!) பற்றி இயம்பும். இந்தச் சரித்திரத்தை மிகவும் விரும்பித் திருச்செவியுற்ற நிலமாமகள் நாச்சியார் பெருமகிழ்ச்சி எய்தியதாக இந்தப் புராணம் கூறுகின்றது. இதுவே ஆண்டாள் இறைவனின் பெயர்களைப் பாடியதன் / பாடவேண்டும் என்று அருளியதன் ரகசியம் என்று பராசர பட்டர் என்ற ஆசாரியப் பெருமகனார் விளக்கியுள்ளார்.
“ஆண்டாளின் திருவவதாரம் - பின்னணி, குறிக்கோள், ஏற்றம்” என்ற கட்டுரையில் மேலும் விவரங்களைக் காணலாம்.
3. ‘மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!’ என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின் மீது படர்ந்த நெஞ்சினள். தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
“இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?” - இந்தக் கேள்வியே சரியில்லை - “கிடந்த திருக்கோலத்தின் மீது படர்ந்த நெஞ்சினள்” என்று இவரே கூறுகின்றார்!! இந்த உறுதியும் உணர்ச்சியும் அந்தத் திருவரங்கனை அடைவதற்கான முன்னோட்டம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டுமா??!! அபத்தத்தின் உச்சம்!
பசி, பிணி, மூப்புத்துன்பம், பிரளய காலத்தில் நீண்ட ஒடுக்கம் ஆகிய தடைகள் இல்லாததொரு தொண்டு புரிய பிறப்பு-இறப்பு சூழலில் இருந்து விடுதலை வேண்டுமெனக் கதறுவோரின் குரல் ஒன்றும் புதிய குரல் இல்லையே! அனைத்து ஆழ்வார்களும் “விடுதலை” கேட்டுக் கதறினார்கள். நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கூட நாயகி மனோபாவத்தில் பேசும்பொழுது இறைவனை அடைய அவர்கள் துடிப்பதை வெளிப்படுத்தினர்.
பின் "விடுதலைக்குரல்" என்று இவர் கூறுவது எதை?? “முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது” என்று கூறும் இவர் கட்டுரையின் பின்பகுதியில் "சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்” என்றும் கூறியுள்ளதால் அதைச் சொல்வதற்கான அடித்தளத்தைத்தான் தந்திரமாக நடுகின்றார். இது மிகவும் கேவலமான செயல்.
“ஆண்டாளின் திருவவதாரம் - பின்னணி குறிக்கோள் ஏற்றம்” என்ற கட்டுரையில் கூறியதுபோல அவள் பிஞ்சாய்ப் பழுத்தவள்.
4. திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்; ஐக்கியமுற்றாள். இங்கும் சில வினாக்கள் விளைகின்றன. கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது. ஆனால், அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா?
5. ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது.
ஆண்டாளின் அவதாரம் குறித்த உண்மைகளே அவளது “பிறப்பின்” மீதுள்ள வினாக்களின் விடைகள்தான்! ஆண்டாளின் விபவ அவதாரம் அவள் திருவரங்கனை மணந்ததில் முடிந்தது. அதன் பின் அரச்சையில் தொடர்கின்றது.
அரச்சையில் உள்ள கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பதைப் பற்றி இவ்வளவு தூரம் மிரண்டு போக ஒன்றுமில்லை:
* முதலில் ஆண்டாள் ஒரு மானுடச்சியே அல்ல - அவளை நிலமகளின் அவதாரம் என்றுதான் எல்லோரும் முழங்கியுள்ளனர்.
* தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் என்று படைப்பில் பல வகையான கணங்கள் உண்டு - அவற்றுள் ஒன்றுதான் மானுட கணம்.
* அட்டமாசித்திகள் என்று 8 விதமான சித்திகள் சொல்லப்பட்டுள்ளன - அவற்றுள் அணிமா (அணுவளவு உடலைச் சிரியதாக்குவது), பிராப்தி (நினைத்த இடத்திற்குச் செல்வது) போன்றவையும் அடக்கம். இவற்றை உபாசனை போன்ற ஆன்மீக மார்க்கத்தில் ஓரளவு முன்னேற்றம் கண்டவர்களேகூட செய்யமுடியும்!
* சித்தர்கள் இதில் வல்லவர்கள். வானுலகில் வசிக்கும் தேவர்கள் வரம் அருளச் சடக்கெனத் தோன்றி (வந்த காரியம் முடிந்தவுடன்) சடக்கென மறைவதும் இது போன்ற சித்திசக்திகளால்தான்.
* பஞ்சபூதங்களால் ஆன உடலையே சித்தியடைந்த மனிதர்களும் தேவர்களும் இவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்க முடியுமெனில் பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்ட திருமேனியுடைய ஆண்டாளுக்கு இது ஒரு பொருட்டா??
* ஆண்டாள் சுவர்க்கத்தில் வசிக்கும் தேவர்களையும்விட பன்மடங்கு உயர்ந்தவர்களும் சக்தி வாய்ந்தவர்களுமான நித்தியசூரிகளில் ஒருத்தி. இறைவனின் தேவிமார்களுள் ஒருத்தி. அவதாரத்தின் குறிக்கோள் நிறைவேறத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் - முடிந்தவுடன் மறைந்து சென்றாள்.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment