Search This Blog

Monday, 23 July 2018

4.5 வைரமுத்துவின் கட்டுரை ('தமிழை ஆண்டாள்') - மறைகளின் தன்மை அறியாமை


   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   





1. சமண – பெளத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற ‘மெய்ஞ்ஞானம்’ வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.


இவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் சனாதன தருமம் முதலில் மக்களால் நெருங்க முடியாமல் இருந்து பின்பு பௌத்தம் சமணம் கொடுத்த கடும் போட்டியால் நடுநடுங்கி "மக்கள் இல்லாமல் நாம் தொலைந்தோம்" என்று பணிந்து வந்தது போலச் சித்தரித்து உள்ளார்!

மனிதர்களுக்காகக் கட்டுக்களைத் தளர்த்தும் மதங்களில் வைதீக மதமானச் சனாதன தருமத்திற்கு ஈடாக எந்த ஒரு மதமும் நிற்க முடியாது என்று துணிந்து கூறலாம்!

ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மீகப் பயணத்தில் அவரவர் முற்பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின்படி ஒரு குறிப்பிட்ட அளவு ஆன்ம முதிர்ச்சியை அடைந்திருப்பர். அதற்கேற்ப ஒவ்வொருவரின் ஆன்மீக வேட்கைகள், ரசனைகள், மன உறுதியின் எல்லை ஆகியவை வேறுபட்டு இருக்கும்.

அதனால்தான் வேதங்கள் "இதுதான் பரம்பொருள் - அடைய இதுதான் வழி" என்று எளிதில் அறுதியிட்டுச் சொல்லமுடியாத வண்ணம் மறைத்துச் சொல்லியதோடு நில்லாமல் அவரவர் ரசனைக்கு ஏற்ப பல தெய்வங்கள், பல வழிபாட்டு முறைகள், தெய்வத்தை அடைய பல வழிகள் என்று இயம்பின. இறைவன் இது ஒவ்வொன்றையும் கருணையுடன் ஏற்றுக்கொள்கின்றன என்பதுதான் அழகே!

யுகங்கள் தோறும் தருமத்தில் நாட்டம் குறையும் என்பதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு யுகத்திலும் இறைவனின் எதிர்பார்ப்பும் குறைகின்றது - தருமம் தழைக்கும் சத்திய யுகத்தில் கடுமையான தவங்களால் மட்டுமே அடையக்கூடிய வரங்களைத் தருமம் பலம் குறைந்திருக்கும் கலி யுகத்தில் இறைவனின் திருநாமங்களைப் பாடியே பெறமுடியும்!

எப்பொழுதெல்லாம் தருமம் துயர் அடைகின்றதோ அப்பொழுதெல்லாம் இறைவன் நேரடியாகவோ அல்லது தமது உயிர் போன்ற மகான்களையோ அனுப்பி தருமத்தைக் காக்கின்றான்.

* ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற மகான்கள் கலியுகத்தில் பிறந்ததின் காரணமும் இதுதான்.

* பௌத்தம், சமணம் ஆகிய மதங்களில் ஈடுபாடு கொண்டு பலரும் வேதங்கள் போற்றும் வைதீக மதத்தை விட்டுச் சென்ற பொழுது ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் அவதாரம் நிகழ்ந்தது.

* முகலாயர்கள் தலையெடுத்த காலத்தில் ஸ்ரீ இராமானுசரின் அவதாரம் நிகழ்ந்தது.

* ஸ்ரீ வியாசராய தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சமர்த்த இராமதாஸர் போன்ற மகான்களின் பெருமையைக் கண்டு முகலாய மன்னர்களின் அநீதிகள் குறைந்தன.




2. யாகம் – யக்ஞம் – தவம் – வேள்வி – விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் – காருண்யம் – செளலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுறமுடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.


கட்டுரையில் வேறு ஒரு இடத்தில் "பரம்பொருள் பழகாத பொருள்" என்கின்றார் - இங்கு "வாத்சல்யம் காருண்யம் சௌலப்யம்" என்கின்றார்! இது இரண்டும் முரண்படுவதைக் கூட அறியாமல் "ஆராய்ச்சிக்" கட்டுரை வரைந்துள்ளார்!!

அன்று ஈன்ற கன்றின் மேல் தாய்ப்பசு காட்டும் பரிவும் அதன் அழுக்கையும் உகக்கும் தன்மையும் வாத்சல்யம். (எந்த வித காரணமுமின்றி) நம் மீது பொழியும் கருணை காருண்யம். நாம் அவனைச் சுலபமாக நெருங்கும்படித் தன்னை அமைத்துக்கொள்வது சௌலப்யம்.

இவர் “யாகம்," “கடவுளின் நற்குணங்கள்," “காருண்யம்," “முக்தி” என்றெல்லாம் எழுதி நம்மைப் புல்லரிக்கவைத்ததால் (!) இவற்றையெல்லாம் கொண்ட ஒரு சம்பவத்தையே பார்ப்போம்.

காத்தியாயினி விரதம் குறித்து ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டிப் பார்த்த வைரமுத்து ‘யஃஞபத்தினி உபாக்கியானம்’ என்ற பகுதியைக் காணவில்லை போலும்.

பசியில் வாடிய ஆயர்ப்பிள்ளைகள் ‘கண்ணன் உங்களிடம் அன்னம் கேட்கச் சொல்லி அனுப்பினான்’ என்று உரைத்தும் திரும்பிக்கூடப் பாராமல் சில அந்தணர்கள் யாகம் செய்வதைத் தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களின் மனைவிமார்களோ கண்ணன் மீது கொண்ட பக்தியினால் யாகத்திற்கென்று படைக்கப்பட்ட அன்னங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கண்ணன் இருக்குமிடம் வந்து அனைவருக்கும் அன்னமிட்டனர்; அவர்களுக்காக அவர்களுடைய கணவன்மார்களைக் கண்ணன் மன்னித்தான்.

ஒருத்தியின் கணவன் மட்டும் பழையபடியே கண்ணன் மீது அன்பின்றி இருக்க, அவள் கண்ணனை மனம் உருகித் தியானிக்க அவளுக்கு அப்பொழுதே முக்தியும் அளித்தான் கண்ணன்.

ஸ்ரீவைணவ ஆசாரியர்களால் "தீர்க்க சிதயந்தி" என்று கௌரவத்துடன் அழைக்கப்படும் அந்தப் பெண்மணி முக்தி அடைந்தது யாகம் செய்ததினாலா? அல்லது கண்ணனின் கருணையினாலா?? அவர்களுக்கு அருள் செய்யவே கண்ணன் நண்பர்களுடன் வெகு தூரம் நடந்து அங்கு வந்தான்! இது துவாபர யுகத்திலேயே நடந்துவிட்டது.

இதே போல திரேதா யுகத்திலேயே இராமனும் கருணையினாலே - தாவரங்கள் விலங்குகள் உள்பட - அயோத்தியாவாசிகள் யாவற்றிற்கும் முக்தியளித்தான். அந்தத் தாவரங்களும் விலங்குகளும் யாகங்களா செய்தன?? இல்லை “கடுநெறிகளால்” ஞானத்தின் எல்லையைத் தொட்டனவா??

பல விதமான வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டன - அதே சமயம் "கர்ம பாகம்" என்றும் "ஞான பாகம்" என்றும் மறைகள் பிரிக்கப்பட்டன. ஞான பாகம் கர்ம பாகத்தை விடச் சிறந்தது என்று கூறினர். இவர் கூறும் “கடுநெறிகள்” கர்ம பாகத்தைச் சேர்ந்தவை. அதில் ஊற்றம் உள்ளவருக்குக் கூறப்பட்டவை. ஞானத்தில் முன்னேற்றம் கண்டவருக்கு 'ஞான பாகம்' அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.




   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   


No comments:

Post a Comment