1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
நாயகி மனோபாவம் பற்றி இழைத்தத் தவறுகளை மேலும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்:
i. ஆண்டாளின் பாடல்கள் தமிழ் மரபின் படி அமையவில்லை என்ற தவறான செய்தி அளித்தது
ii. ஆண்டாளின் பாடல்கள் நாயகி மனோபாவத்தில் அமைந்தவை என்று தெரிந்தும் தரம் தாழ்ந்த "விளக்கங்கள்" கொடுத்தது
ஆண்டாளின் பாடல்கள் தமிழ் மரபின் படி அமையவில்லை என்ற தவறான செய்தி அளித்தது:
1. மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது.
2. கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.
3. திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது? சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்துமீறலா?
4. ‘காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை’ என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது. கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட ‘கன்று முண்ணாது கலத்தினும் படாது’ என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான். ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்” என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையில் இதற்கான விடைகள் உள்ளன.
* சறுக்கல் # 10 (வீட்டுப் பொருள் அத்து மீறினாளாம்) என்றவிடத்திலும்
* சறுக்கல் # 14 (வைரமுத்துவின் கேவலக் கண்ணோட்டத்தின் சிகரம்) என்றவிடத்திலும்
* சறுக்கல் # 17 (கன்னிக் குரல் என்னும் வஞ்சகப் பேச்சு) என்றவிடத்திலும்
சங்ககாலத்துத் தமிழரின் பண்பாட்டுச் செய்திகளுடன் வைரமுத்துவின் மேற்கூறிய வரிகளைச் சாடுகின்றார்.
“ஆண்டாளும் சங்கத்தமிழ் படித்துதான் எழுதியிருக்கிறாள், நம்மாழ்வாரும் சங்கத் தமிழ் அறிந்துதான் எழுதியிருக்கிறார் என்பதற்கு முல்லைக் கலியே சான்று” என்கின்றார். சங்ககாலத்துத் தமிழர்களின் பண்பாட்டின்படி ஒரு அத்துமீறலும் நிகழவில்லை என்று மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.
இரண்டாவதாக உள்ள "கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்" என்ற வரிக்கும் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையில் உள்ள அதே விளக்கங்கள் பொருந்தும் என்பதால் அதை பற்றித் தனியாக ஏதும் சொல்லவேண்டியதில்லை.
இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் ஆன்மீக அன்பர்களிடம் இந்தக் கட்டத்தில் சில கேள்விகள்:
ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்” என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
இது என்ன பேச்சு?!!
* வைரமுத்துவின் கட்டுரையில் இந்தக் "கருத்தின்" தரம் என்ன?
* வைரமுத்து எழுதியிருக்கும் கட்டுரையில் "தேவதாசி" என்ற சொல்லும் அவர் காட்டிய ஒரு தவறான மேற்கோளும் மட்டுமே மிகப்பெரிய தவறுகள் என்று இப்பொழுதும் தோன்றுகின்றதா??
* வைரமுத்து வெளியிட்ட காணொளியில் அவர் “ஆண்டாளும் எனது தாய்” என்கிறார் - அது உண்மையான வார்த்தையென இப்பொழுதும் தோன்றுகின்றதா??
ஆண்டாளின் பாடல்கள் நாயகி மனோபாவத்தில் அமைந்தவை என்று தெரிந்தும் தரம் தாழ்ந்த "விளக்கங்கள்" கொடுத்தது:
5. பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
இந்த ஒரு வரி போதும் - இந்தக் கட்டுரையை ஒரு பயனற்ற கட்டுரை என்று கூற! பாகவதத்தில் கோபிகைகள் காத்தியாயினி (கார்த்தியாயினி அல்ல!) நோன்பு நோற்றதே கண்ணனைக் கணவனாக அடையத்தான்!! அதனையே கண்ணனைக் கணவனாக அடைய விரும்பிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் பின்பற்றினாள். பின் கடவுள் / கணவன் என்ற இந்த வார்த்தை விளையாட்டு எதற்கு??
உண்மையிலேயே இவர் திருப்பாவையை ஒரு முறையேனும் படித்திருக்கின்றாரா இல்லையா?!! அதிலே முழுக்க முழுக்க கண்ணனை அடைவதைப் பற்றித்தானே உள்ளது!!! 30 பாசுரங்கள் - மொத்தம் 240 வரிகள். பாமரருக்கும் புரியும் வண்ணம் கண்ணனையே போற்றுகின்றாள். அதைக் கூட சரியாகப் படிக்காமல் 3 மாதம் என்ன “ஆராய்ச்சி” செய்தார்???? கட்டுரையின் பெயரோ ‘தமிழை ஆண்டாள்!!!'
கணவனைத் தேடும் வரிகளில் இவர் ஏன் ஒரு மேற்கோள் கூட காட்டவில்லை??
இதோ திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்திலும் கம்பீரமாக ஒலிக்கும் கோதையின் தெய்வீகத் தேடல்:
1. நாராயணனே நமக்கே பறை தருவான்
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி
3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
4. ஆழி மழைக்கண்ணா
5. தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
6. அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து
7. நாராயணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
8. தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று
10. நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்
11. முகில்வண்ணன் பேர் பாட
12. தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
13. புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி
14. பங்கயக்கண்ணானைப் பாடு
15. வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடு
16. மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
17. அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
18. நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்...உன் மைத்துனன் பேர் பாட
19. நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
20. திருவே...உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு
21. உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
22. திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
23. பூவைப்பூவண்ணா...யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்
24. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி...என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்
25. கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம்
26. மாலே மணிவண்ணா...ஆலின் இலையாய் அருள்
27. கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உந்தன்னைப்பாடி...கூடி இருந்து குளிர்ந்து
28. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
29. உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்...எங்களைக் குற்றேவல் கொள்ளாமல் போகாது...கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
30. பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
இவ்வளவுகூட ஒரு "கவிப்பேரரசருக்குத்" தெரியாதா??? உண்மை என்னவென்றால் இந்த வரியை எழுதியதே “கண்ணன் ஒரு அற்ப மானுடன் - கடவுள் அல்ல; ஆண்டாளின் திருப்பாவையும் காதலும் தெய்வீகமானவை அல்ல” என்ற நச்சு எண்ணத்தை வாசகர்களின் மனங்களில் விதைக்கத்தான்.
6. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.
* ஆண்டாளோ ஆழ்வார்களோ - எல்லோருக்கும் திருமாலின் திருவடிகளில் சேவை புரிவது ஒன்றுதான் நோக்கம்.
* அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பது ஆண்டாளோ ஆழ்வார்களோ அல்ல - அவர்கள் செய்யும் தொண்டில் திருமால் ஆனந்தம் காணவேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.
* "விடுதலைக் குரல்" எல்லோர் பாடலிலும் காணலாம் - சேவை செய்யத் தடையாய் இருக்கும் பிறவிக்கடல், ஐம்புலன்கள் இவற்றிலிருந்து விடுதலையைக் கோருவார்கள்.
ஆழ்வார் | "அடிமையுறுவதில் ஆனந்தம் காணும்" வரிகள் | (பல வகை) "விடுதலைக் குரலின் வீச்சுடைய" வரிகள் |
பொய்கையாழ்வார் | "ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்" | "பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு தொழுதேன்" |
பூதத்தாழ்வார் | "நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம் ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய்" | "பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ" |
பேயாழ்வார் | "அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்" | "வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து" |
திருமழிசைப்பிரான் | "தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது" | "பிறந்திறந்து பேரிடர்ச் சுழிக்கணின்று நீங்குமா மறந்திடாது மற்றெனெக்கு மாய நல்கவேண்டுமே" |
நம்மாழ்வார் | "பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியாரெங்கோக்கள்" | "வைப்பாம் மருந்தாம் அடியரை, வல்வினைத் துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடானவன்" |
குலசேகராழ்வார் | "அரங்கவோஎன்றழைக்கும் தொண்டரடிப்பொடி ஆடனாம்பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கையென்னாவதே" | "விற்றுவக்கோட்டம்மானே நின்னையேதான் வேண்டி நிற்பனடியேனே" |
பெரியாழ்வார் | "எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே" | "எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே" |
தொண்டரடிப்பொடியாழ்வார் | "தொண்டரடிப்பொடியென்னும் அடியனை அளியனென்றருளி உன்னடியார்க்காட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே" | "ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே" |
திருப்பாணாழ்வார் | "அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த விமலன்" | "அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" |
திருமங்கையாழ்வார் | "திருவேங்கடமாமலை என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே" | "வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே" |
ஆண்டாள் | "கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப்பேறெனக்கருள் கண்டாய்" | "விட்டுசித்தன் கோதை சொல் மருந்தாமென்று தம்மனத்தே வைத்துக்கொண்டு வாழ்வார்கள் பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப்பிரியாதென்றுமிருப்பாரே" |
மதுரகவியாழ்வார் | "அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே" | "மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே" |
இப்படி இருக்க இவர் ஏன் ஆண்டாளை மட்டும் பிரித்துப் பேசுகின்றார்??
ஏனென்றால் இவர் பேசும் "விடுதலை" ஐம்புலன்களிலிருந்தோ அல்லது பிறவிக்கடலிலிருந்தோ கோரும் விடுதலை அல்ல - "பாலியல் சொல் விடுதலை."
நாயகி மனோபாவத்தில் உடல் உயிர் என்றெல்லாம் பாகுபாடு பாராமல் தன்னை மொத்தமாக இறைவனுக்கு அளிக்கவேண்டும் என்ற பரபரப்பும் துடிதுடிப்பும் மட்டுமே அந்த ஜீவாத்மாவிற்கு இருக்கும். அதனால் இந்த மனோபாவத்தில் பாடும் வரிகளில் உணர்ச்சிப் பிரவாகமும் மற்ற மனோபாவங்களைவிட அதிகரித்தே இருக்கும். ஒவ்வொரு வரியும் மோட்சம் அடையவேண்டும் என்ற "விடுதலைக்குரல்"தான்!
பராங்குச நாயகியாக நம்மாழ்வாரும் பரகால நாயகியாகத் திருமங்கையாழ்வாரும் அதேபோல பாடியிருக்கின்றனரே. அதென்ன ஆண்டாளை மட்டும் தனியே பிரித்துப் பார்ப்பது?
ஏனென்றால் ஆண்டாள் ஒரு பெண். அவளது பாசுரங்கள் முழுவதுமே (100 %) நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டவை. திருமாலின் மனைவியான அவள் அப்படிச் செய்ததில் வியப்பேதும் இல்லை (மனைவியாக இல்லாத ஒரு அடியார் இதைச் செய்தாலும் முற்றிலும் சரியே!) - அவளது மாறாத நாயகி மனோநிலைதான் அவளது முக்கியமான பெருமை என்று சான்றோர் இயம்புவர். ஆனால் வைரமுத்து இதையே அவரது (வழக்கமான) கண்ணோட்டத்துடன் மோசமாகச் சித்தரித்துள்ளார்.
அதெப்படி? நம்மாழ்வாரின் நாயகி மனோபாவம் ஆன்மாவின் இறைத்தேடல் என்றால் கோதையின் நாயகி மனோபாவமும் ஆன்மாவின் இறைத்தேடல் அன்றோ? ஆன்மாவிற்கு ஆண்-பெண் பேதம் ஏது? அனைத்து ஜீவர்களும் பெண் என்றால் கோதையின் மாறாத நாயகி மனோபாவம் அவளது தனிச்சிறப்பன்றோ?
உண்மைதான்! ஆனால் "கவிப்பேரரசருக்கு" ஆன்மாவைப் பற்றிக் கவலை இல்லை - அதனால் அவரது சிந்தனை உடலைத் தாண்டிச் செல்லவில்லை.
யாருக்கு எதில் நோக்கமோ அதைத்தானே பேசுவர்!
* ஆண்டாளுக்கும் மற்ற ஆழ்வார்களுக்கும் திருமால் மீது நோக்கம் - அவனைப் பாடிப் பரவினர்.
* ஆசாரியர்களுக்கு திருமால் மீதும் நோக்கம் நம் போன்றவர்கள் வீடுபேறு அடையவேண்டும் என்பதிலும் நோக்கம் - வீடுபேறு அருளும் ஆழ்வார் பாடல்களுக்கு நம் போன்றோரும் கடைத்தேற (!) உரை எழுதுவது, மோட்சம் அடையும் வழிகளை எல்லோரும் பெறும்படிச் செய்வது என்று வாழ்ந்தனர்.
* வைரமுத்துவிற்குப் "பாலியல் சொல் விடுதலையில்" (!) நோக்கம் - அதைப் பற்றித் தொடர்பே இல்லாத ஆன்மீகத்திலும் (!) அதைப் பற்றிப் பேசுகின்றார்.
7. ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
“முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” - "ஆண்டாள் என் தாய்” என்று காணொளி வெளியிட்டவராம் “கவிப்பேரரசர்” தாயைப் பற்றிப் பேசும் "பாங்கு!"
ஆண்டாள் திருமாலின் மனைவியருள் ஒருத்தியான நிலமகள் - ஸ்ரீஇராமாநுசரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் தெளிவாக அருளியது போல "வைகுந்தவான் போகந்தன்னை இகழ்ந்து எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் ஆழ்வார் திருமகளாராய் அவதரித்தாள்." ஒரு கற்புடைய மனைவி தன்னுடைய கணவனை மீண்டும் சென்றடைய "முந்தி நிற்பதில்" என்ன வியப்பு???!!!
வைரமுத்துவின் முயற்சியே ஆண்டாளை ஒரு சாதாரண மானுடப் பிறவியாகச் சித்தரித்து அவள் பாடிய பாடல்களும் கண்ணன் என்ற மானுடனைப் பார்த்துப் பாடிய காமப்பாடல்கள் என்ற "கருத்தை" எப்படியாவது பாமரர்கள் மனதில் பதியவைப்பதுதான்.
8. கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது.
எங்கே?? கனாக்காணும் கோதையின் பாசுரத்திலும் திருமணம் பற்றிய வருணனைதான் உள்ளது. வைரமுத்துவின் (வழக்கமான) தேடலான "பாலியல் சொல் விடுதலை” 11 பாசுரங்களில் எங்கேயுமே இல்லையே!! வெட்கமறுத்து விளையாடிக்கொண்டிருப்பது வைரமுத்துவின் கண்ணோட்டம் மட்டுமே.
இந்த இடத்தில் இது குறித்த ஒரு அனுபவத்தை வாசக அன்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்
இதில் மிகவும் வருந்தவேண்டிய உண்மை என்னவென்றால் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கூட நாச்சியார் திருமொழியின் பாடல்களைப் பற்றிய புரிதலும் ஏறக்குறைய இந்த வண்ணமே இருப்பதுதான்.
அண்மையில் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரைக்கு ஒரு அம்மையார் (பெயர் வெளியிட விரும்பவில்லை) எதிர்வினையாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது.
அது என்னவெனில்: “நாச்சியார் திருமொழியின் பாடல்களைப் பலரும் கேட்கும் வண்ணம் பாடமுடியாது. இதனாலேயே நித்தியானுசந்தானத்தில் (அனுதினம் ஓதவேண்டிய பாசுரங்களின் தொகுப்பில்) பெரியோர்கள் ‘வாரணமாயிரம்’ என்ற கனாக் காணும் பகுதியை மட்டும் சேர்த்தனர்” என்பதுதான். அவரது முழு கட்டுரையைப் படித்தால் (மட்டுமே) அவர் கோதையின் பெருமையைக் கூற முற்பட்டுள்ளது விளங்கும்!
இது தவறான கருத்து - அப்படிப் பார்த்தால் கீழ்காணும் பட்டியலில் உள்ள ஏற்பாடுகளைப் பெரியோர்கள் ஏன் செய்தனர்??
* ஒவ்வொரு நாளும் வைணவத் திருக்கோயில்களில் இராமானுசரின் கட்டளைப்படி 4000 திவ்ய பிரபந்தம் ஓதப்படும்போது பூரம் நட்சத்திரம் அன்று நாச்சியார் திருமொழி முழுவதும் தெளிவாக ஓதப்படும்!
* இராமானுசரின் கட்டளையின்படி இன்றும் திருவேங்கடத்தில் மூலவரின் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்போது அவரது திருமார்பைவிட்டு இறையும் அகலாதவளான திருமகளின் ஒரு மணி நேரப் பிரிவுத் துயரைப் போக்க ஆண்டாளின் நாச்சியார் திருமொழியைப் பாடுவர்.
* "அரையர் சேவை" என்று போற்றப்படும் 4000 திவ்ய பிரபந்தம் பாசுரங்களுக்கு அபிநயங்களுடன் நடனமாடும் சேவையிலும் நாச்சியார் திருமொழியும் உண்டு.
* இன்றும் ஆண் பெண் வேறுபாடின்றி நாச்சியார் திருமொழியைக் கற்கின்றனர், கற்பிக்கின்றனர் - இதில் எந்த தடையும் இல்லையே!
நித்தியனுசந்தானத்தில் பெரியோர்கள் ‘வாரணமாயிரம்’ என்ற கனாக் காணும் பகுதியை மட்டும் சேர்த்தது இப்பதிகம் பரமாத்மாவுடன் ஜீவாத்மா *வெற்றிகரமாக* இணைவதைப் பறைசாற்றுவதால். நாச்சியார் திருமொழியில் மற்ற அனைத்துமே பரமாத்மாவை அடைய ஜீவாத்மாவாகிய நாயகி துடிப்பதையே (பிரிவு நிலை) பேசுவதாக உள்ளன.
பக்தியில் சிருங்கார ரசம் இருப்பதை நம் போன்ற மனங்கள் ஏற்க மறுக்கின்றன. நாயகி மனநிலையைப் பற்றிய பூரணமான ஆன்மீக அறிவு இருப்பவர் மட்டுமே இதைப் புரிந்துகொள்ளமுடியும். பஞ்சபூதங்களால் ஆன இந்த அழியும் சரீரத்தில் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு என்றுமே அழியாத ஆன்மாவின் பேரின்பத்தை எப்படி அளவிடமுடியும்? அல்லது உணரமுடியும்? இது கடினம்.
இறைபக்தியில் மனோபாவங்கள் பல - வெளிப்படும் ரசங்கள் பல. இவை எல்லாவற்றையும் இறைவன் ஏற்பான். அவன் ஏங்குவது தூய்மையான அன்புக்கே.
ஒரு ஜீவாத்மா தன்னைப் பரமனின் காதலியாகவோ மனைவியாகவோ பாவித்து அவன் மீது பக்தி செலுத்துவது நாயகி மனநிலை. இந்த மனநிலை மற்ற மனநிலைகளை விடத் தத்துவக் கண்ணோட்டத்திலும் சிறந்தது; நவரசக் கண்ணோட்டத்திலும் சிறந்தது. இதற்கான காரணத்தை “இறை பக்தியில் நாயகி மனநிலை” என்ற கட்டுரையில் வாசிக்கலாம்.
மீராபாய் அம்மையாரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்: ஒரு முறை அவர் கண்ணபிரானின் இன்னொரு பக்தரான ஒரு துறவியிடம் ஆசி பெறச் சென்றார். துறவியின் ஆசிரமத்துள் செல்ல முயன்றபொழுது ‘பெண்கள் உள்ளே வரக்கூடாது’ என்று அவர் தடுக்க மீராபாய் அம்மையார் ‘கண்ணனைத் தவிர வேறு ஆடவன் உண்டோ? நாம் எல்லோருமே பெண்கள் அல்லவா?’ என்றாராம். மிகவும் வியப்புற்ற அந்தத் துறவியும் மனம் தெளிந்து அவரை உள்ளே அனுமதித்து ஆசி வழங்கினார் என்று வரலாறு. நாயகி மனோபாவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்தச் சம்பவத்தை நினைவில் தேக்கினாலே போதும்.
9. மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
மறுபடியும் பலபடிகள் கீழே இறங்குகின்றார் வைரமுத்து.
இந்தப் பதிகத்தின் சாரமாகத் தலைப்பில் (இந்தப் பதிகத்தின் இறுதியில் கோதையே அருளியபடி!) “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும் சுற்றமாக்குதல்” என்றே முழங்கியிருப்பர். திருச்சங்காழ்வானாகிய பாஞ்சசன்னியத்தின் பெருமையைப் பாடும் பதிகம் இது.
எம்பெருமானின் கையை விட்டகலாது அவனது வாயமுதத்தை அவ்வப்போது பருகும் ஒரே அடியார் திருச்சங்காழ்வான்! இதை நாயகி பாவனையில் பாடும்போது சிருங்கார ரசம் தோற்ற “மாதவனின் வாய்ச்ச்சுவையை அறிய விரும்புகின்றேன்” என்கிறாள் கோதை. இந்தப் பதிகத்தை ஓதுபவர்கள் திருச்சங்காழ்வான் போலத் திருமாலுக்கு அணுக்கர் ஆவார்கள் என்கிறாள். நாயகி மனோநிலையில் வாய்ச்சுவையைப் பாடியதும் சாலப் பொருந்தும்!
வைரமுத்து இதையெல்லாம் கவனியாதவர்போல இங்கு பாமரர் மனதில் பிரமையை உருவாக்குகின்றார். திரைப்படங்களுக்குத் தமிழில் காமக் கண்ணோட்டத்தில் பாடல்கள் எழுதியவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?
10. ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.
* ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் என்பதற்குப் பட்டர்பிரான் கோதையின் பாடல்களில் உள்ள அகச்சான்றுகள் முதலாகப் பற்பல நூல்களில் ஆதாரங்கள் இருப்பதாலும் மற்றும் பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளை என்பதற்கானக் காரணமும் பெரியோர்கள் தெரிவித்திருப்பதாலும்
* அவள் பிறப்பு குறித்து 6000 படி குரு பரம்பரா பிரபாவம், பிரபந்நாம்ருதம், திவ்விய சூரி சரிதம் முதல் அவளைத் துதிக்கும் தனியன்கள், வாழித்திருநாமங்கள், தமிழ் மற்றும் தெலுங்கு (திருவேங்கடமுடையான் ஆணைப்படி மன்னர் கிருஷ்ணதேவராயர் இயற்றிய "ஆமுக்தமால்யதா") மற்றும் வடமொழி துதிகள் என்று பற்பலச் சான்றுகள் இருப்பதாலும்
* அந்தணரான பெரியாழ்வார் முதலாக வேறு எவரும் ஆண்டாளது குலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வைரமுத்துவும் அவரது தூக்குத்தூக்கிகளும் மட்டுமே சரியான ஆதாரம் ஏதுமின்றி பொய்ச் சான்றுகளை மேற்கோள் காட்டியேனும் புலம்பிக்கொண்டிருப்பதாலும்
* சங்கத் தமிழில் முல்லைப்பாடல்களைப் பற்றி அறியாமல் (அல்லது அறியாதது போல் நாடகமாடும்) வைரமுத்து தாமே ஆண்டாளின் தெய்வீகப் பாசுரங்களில் தரங்கெட்டச் சிற்றின்பப் பொருள் காணும் நிலையை ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்
* ஆண்டாளைக் கோயிலுக்குக் காணிக்கை ஆக்கியதாக எங்குமே சான்றுகள் இல்லாமல் இருக்க ஆண்டாள் கதையின் மறு வாசிப்பு என்றுச் சொல்லிக்கொண்டு ஒரு (வக்கிரக்) கற்பனை மூலமாகத் தம்மைத் "தேற்றிக்கொண்ட" (?!) டேனியல் செல்வராஜ் அவர்கள் போலவே வைரமுத்துவும் எழுதுவதாலும் / பேசுவதாலும் (!!)
வைரமுத்துவின் உள்நோக்கம் (மற்றும் அவரது தூக்குத்தூக்கிகளின் உள்நோக்கம்) குறித்துக் கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குப் பல பக்தர்கள் ஆட்படுகிறார்கள்.
வாசக அன்பர்களுக்கு ஒரு குறிப்பு: டேனியல் செல்வராஜ் என்பவர் மிகவும் கீழ்த்தரமான ஒரு நாடகத்தை 'ஆண்டாள் கதை மறுவாசிப்பு' என்ற பெயரில் வெளியிட அதை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடப்புத்தகத்தில் சேர்த்தது. இதனால் வருந்திய ஸ்ரீவைணவர்கள் சிலர் (அடியேன் உள்பட) அவர்களுக்கும் பல்கலைக்கழகத்தாருக்கும் புத்தகத்தை வெளியிட்டோருக்கும் அதிருப்தி / கண்டனக் கடிதங்கள் அனுப்பினோம். பின்பு அதை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கினார் என்று கேள்வியுற்றேன். இது நடந்து சுமார் 6 வருடங்கள் இருக்கும். இந்தச் செய்தி ஸ்ரீவைணவர்களுக்கே அதிகம் தெரியாது! இப்பொழுது 2018-ல் வைரமுத்து அதே தோரணையில் அதே நோக்கத்துடன் கட்டுரை வெளியிட்டார். ஆனால் இம்முறை மக்கள் பலருக்கும் தெரியவந்து கண்டிக்கவும் செய்தனர்; செய்தவண்ணம் உள்ளனர்!
11. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது: “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.
இந்தக் கருத்தைத்தான் பலரும் அலசி ஆராய்ந்தாகிவிட்டது. காட்டப்பட்ட மேற்கோள் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரின் அரைகுறை “ஆராய்ச்சியில்” விளைந்த "ஊகம்" (அதாவது ஆதாரமற்ற உளறல்) என்று நிரூபணமும் ஆனது.
ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் ஆன்மீக அன்பர்களிடம் இந்தக் கட்டத்தில் சில கேள்விகள்:
* வைரமுத்துவின் கட்டுரையில் இந்தக் "கருத்து" / மேற்கோள் மட்டும்தான் தவறானதா??
* நாயகி மனோபாவத்தைப் பற்றி வைரமுத்து எழுதியிருக்கும் மற்றக் "கருத்துக்கள்" வைரங்களெனவும் முத்துக்களெனவும் மின்னுகின்றனவா??
* வைரமுத்து வெளியிட்ட காணொளியில் அவர் “ஆண்டாளும் எனது தாய்” என்கிறார் - அது உண்மையான வார்த்தையென இப்பொழுதும் தோன்றுகின்றதா??
* நாயகி மனோபாவம் அல்லாத மற்றைய தலைப்புகளில் வைரமுத்து செய்த தவறுகளையும் பார்த்தால் அவர் தம்முடைய கட்டுரையில் ஸ்ரீவைணவத்தை மொத்தமாகவே தாக்கிப் பேசியிருப்பது போலவும் பொதுவாகவே சனாதன தருமத்தைத் தாக்கியிருப்பது போலவும் தோன்றவில்லையா??
12. சமண – பெளத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம்.
ஒரு இடத்தில் வைதீக மதம் கடுநெறிகள் விதித்தது; பௌத்தம் சமணம் கொடுத்த போட்டியில் தளர்த்தியது என்கிறார். இங்கே பௌத்தம் சமணம் கடுநெறிகள் உடையன - சனாதன தருமம் மாறாகத் துய்ப்பின் கதவுகளைத் திறந்தது என்கிறார்!!!! "நல்ல" ஆராய்ச்சி.
“துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகள்” என்று இவர் எதைக் குறிப்பிடுகின்றார் என்று புரியவில்லை!
பக்தியில் எந்த ஒரு மனோபாவமும் இறைவனுடைய துய்ப்பிற்குச் சேவை செய்வது குறித்தே இருக்கும் - பக்தர்கள் ஏங்குவது தங்களுடைய துய்ப்பிற்கு அல்ல!! அம்மனோபாவங்களில் நாயகி மனோபாவமும் ஒன்று.
அனைத்து ஆழ்வார்களும் குருமார்களும் ‘உனக்கும் உன்னடியார்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்படி குற்றேவல் புரியும் வண்ணம் அருள்வாய்’ என்றே கேட்பர்; “வாழி வாழி” என்று பல்லாண்டு பாடியிருப்பர். இதுதான் பல யுகங்களாக நடந்துவருகின்றது. இதில் குழம்பவோ குழப்பவோ ஒன்றுமே இல்லை.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment