1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
கட்டுரையில் கையாளப்பட்டுள்ள தந்திரங்கள்
பெரும் சர்ச்சைக்குள்ளாகிய 'தமிழை ஆண்டாள்' கட்டுரையை வைரமுத்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வரைந்திருக்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒரு எதிரியின் உயிர்நாடிகளைத் தாக்கவே திட்டமிடப்பட்ட போர்வியூகம் போல வரைந்திருக்கின்றார்!! இதை மனதில் கொண்டே மூன்று மாத ஆராய்ச்சியும் செய்திருப்பார் போலும்.
அவர் அக்கட்டுரையை ஸ்ரீவைணவத்தில் ஊன்றியவர்களுக்கு எழுதவில்லை. அவர்கள் அதனை நிச்சயம் ஏற்கமாட்டனர் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். 'பக்தர்கள் ஏற்கமாட்டார்கள்' என்று அவரே கூறிவிட்டாரே! அப்படிப்பட்ட "பக்தர்கள்" மிகக் குறைவு - இது தெரிந்துதான் கவலையின்றி இதைச் செய்துள்ளார்.
சரி, அப்படி என்னதான் செய்தார்?? இதைப் புரிந்துகொள்ள முதலில் கட்டுரையின் போக்கைப் புரிந்துகொள்ளவேண்டும்:
1. கட்டுரையை நிதானமாகப் படிக்கவேண்டும் - நஞ்சு புதைந்துள்ள வரிகளை அடுத்தடுத்தாக வைக்காமல் ஆங்காங்கே வைத்திருக்கின்றார். அவசரப்போக்கில் படிப்பவருக்கோ அல்லது ஒருவர் இதனை வாசிக்க அதைக் கேட்பவருக்கோ சட்டென்று புரிந்துவிடாது. வைணவத்திலோ அல்லது தமிழிலோ சராசரிக்கும் சற்று அதிகமான ஊற்றமில்லையெனில் இவர் செய்திருக்கும் தந்திரம் நிதானமாகப் படித்தாலும் புரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது!!
2. எந்த ஒரு அவதூறையும் "வெட்டு ஒன்று, துண்டுகள் இரண்டு" என்பது போல உடைத்து நேரடியாகச் சொல்லவில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் தோரணையில் எழுதியிருக்கின்றார். முதலில் புகழாரம் சூட்டுவார். பின் சில "கேள்விகளைக்" கேட்டுக்கொள்வார் அல்லது சில "சிந்தனைகளை" அவிழ்த்துவிடுவார். பின்பு அந்தக் கேள்விகளுக்கு / சிந்தனைகளுக்கு விடையை ஆராய்ந்து அறிந்தவர் போன்றதொரு தோரணையில் தன் மனதில் உள்ள உண்மையான நச்சு நோக்கத்தைக் கவனமாக வெளியிடுவார்.
எடுத்துக்காட்டு வேண்டுமா? இதோ:
தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள்.
:
:
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் “அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்” என்று சொல்லி மறைகிறார். கோதையின் பெருமைகண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.
:
:
எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பெளர்ணமியாய் நிற்கிறது. மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. ‘மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!’ என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.
:
:
தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
:
:
‘காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை’ என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது.
:
:
ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்” என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
இதுதான் இந்தக் கட்டுரையின் போக்கு. ஆங்காங்கே தெளிக்கப்பட்டப் புகழாரங்கள் - "ஆராய்ச்சி" / "கண்ணோட்டம்" என்ற பெயரில் சில "கேள்விகள்" / "சிந்தனைகள்" - "ஆராய்ச்சியில் கண்ட விடைகள்" / "கருத்துக்கள்" என்ற பெயரில் தெரிந்தே புகுத்தப்பட்டிருக்கும் நச்சு வரிகள்.
இது போன்ற தவறுகள் இன்னும் எவ்வளவு உள்ளன? அவை யாவை? விவரங்களைத் தெரிந்துகொள்ள "பட்டியல்" என்ற தலைப்பில் உள்ள நான்காம் பாகத்தை வாசிக்கவும்.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment