Search This Blog

Saturday 17 April 2021

குரு பக்தியில் 8 பக்தி இலக்கணங்கள்


குரு பக்தியில் 8 பக்தி இலக்கணங்கள்


Image Credit: https://www.divyadesam.com/photos/july-2019/melkote-ramanuja.shtml


முன்னுரை
 
"திருமால் பக்தன் என்பவன் யார்?" என்பதை அடையாளம் கண்டுகொள்ளும்படித் திருமாலே எட்டு இலக்கணங்களை அருளியுள்ளார்.

"பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து" என்று ஸ்ரீ பெரியாழ்வார் அருளியுள்ளதுபோல, பரமனே குருவாக வந்து நம்மை ஆட்கொள்கின்றான்.

எனவே, திருமால் பக்தனின் எட்டு அடையாளங்களும் குரு பக்தனை அடையாளம் கண்டுகொள்ளவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இதனைச் சற்று ஆராய்ந்தால், இந்த எட்டு அடையாளங்களையும் ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது விளங்குகின்றது. இதைச் சுவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.




இலக்கணம் # 1: "என் அடியார்கள் பக்கல் வாத்சல்யம்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 26
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
வாத்சல்யம் என்ற வட சொல்லுக்கு "குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளும் குணம்" என்று பொருள். தாய்ப்பசு எப்படி கன்றின் அழுக்கை மகிழ்வுடன் நக்கிக் கொடுக்குமோ, அப்படி வாத்சல்யம் உள்ள ஒருவர் மற்றவர் செய்யும் குற்றங்களையும் நற்றமாகக் கொள்வர்.

இக்குணம் பெரும்பாலும் தாய் தந்தையரிடம் காணப்படும் ஒரு குணம் ஆகும். இதை ஸ்ரீ இராமானுசரின் அடியார்கள் திறத்தில் ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வெளியிடுகின்றார்:

"அனைத்து திசைகளிலும் பரவிய புகழை உடைய ஸ்ரீ இராமானுசர் என்ற கருணை மேகமானது நீசனேனின் குற்றங்களை நீக்கி, அதனால் விளைந்த உவகையில் விளங்கியது.

அந்த ஸ்ரீ இராமானுசரைப் பரவும் அடியார்களின் முந்தைய நிலை பற்றி அடியேனுக்கு ஏதும் கவலை இல்லை - அதாவது ஸ்ரீ இராமானுசரை அடையும் முன் அவர்களின் குற்றங்கள், இயல்புகள், பிறந்த குலம் ஆகியவை எதுவாயினும் இருக்கட்டும்.

ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளை வந்து அடைந்தபின், அந்த அடியவர்களின் குற்றங்கள், இயல்புகள், பிறப்பு ஆகியவையே அடியேனை ஆட்கொள்ளும்!" என்று இயம்புகின்றார்.




இலக்கணம் # 2: "என்னை ஆராதிப்பதில் ஈடுபாடு"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 100
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"ஸ்ரீ இராமானுசரே! தங்களது திருவடித்தாமரைகளில் தங்களது அழகிய திருக்கல்யாண குணங்கள் என்கிற தெளிந்த தேன் உள்ளது. 'அத்தேனை உண்டு, அத்திருவடித்தாமரைகளிலேயே இன்பமாக அமர்ந்திடவேண்டும்' என்று விரும்பி என் நெஞ்சு என்ற பொன்வண்டு தங்களது திருவடித்தாமரைகளை வந்து அடைந்துள்ளது.

இந்தத் தேனைத் தவிர வேறு ஒரு உணவை என் நெஞ்சு என்ற பொன்வண்டு உண்ணாது. எனவே, தாங்கள் இந்தப் பேற்றையே அடியேனுக்கு அருளவேண்டும். வேறு ஒரு தாழ்ந்த சுவையில் ஈடுபடும்படி அருளவேண்டாம்," என்று வேண்டுகின்றார்.

ஸ்ரீ இராமானுசரின் புகழ் பாடி, அவரது திருவடிகளுக்குத் தொண்டு புரிந்திருக்கவேண்டும் என்ற பேரார்வத்தை இதை விட இனிமையாகத் தெரிவிக்க முடியாது!




இலக்கணம் # 3: "என்னை ஆராதிப்பதைத் தாமே செய்வதில் ஊற்றம்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 84
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"ஸ்ரீ இராமானுசரை உள்ளபடி கண்டுகொண்டேன். அதனால்:

1. ஸ்ரீ இராமானுசரது தொண்டர்களின் பொன்னான தாள்களில் தொண்டு செய்தேன்.
2. அடியேனுடைய வெம்மையான, தீமை செய்யும் பழவினைகளை எல்லாம் நீக்கிக்கொண்டேன்.
3. ஸ்ரீ இராமானுசரின் சீர் என்ற நற்குணக்கடலை வாயார உண்டுகொண்டேன்.

ஸ்ரீ இராமானுசரின் பெருமைகளால் அடியேன் அடைந்த நன்மைகள் மேலும் உள்ளன. எனினும், அவற்றிற்கு எல்லையில்லை என்பதால் அவற்றைச் சொல்லிமுடியாது," என்கிறார்.

இங்கே ஸ்ரீ திருவரங்கத்தமுதனார், ஸ்ரீ இராமானுசரின் அடியார்களின் திருவடிகளில் தொண்டு புரிவதையும், ஸ்ரீ இராமானுசரின் குணங்களைப் பாடுவதையும் ஸ்ரீ இராமானுசரின் அருளால் தமக்கு நடந்த எல்லையற்ற நன்மைகளில் சில என்று அருளியுள்ளார்.

இதனால், இந்த இரண்டையுமே அவர் பெரும் ஊற்றத்துடன் செய்பவர் என்பது தன்னடையே விளங்கும்.




இலக்கணம் # 4: "என் மீதுள்ள அன்பில் டம்பமின்றி இருத்தல்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 27
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
இந்த ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் பற்பல இடங்களில் "ஸ்ரீ இராமானுசரின் கருணையைப் பெற அடியேன் தகுதியற்றவன்" என்று தமது தாழ்ச்சியை விண்ணப்பம் செய்துள்ளார். அவற்றுள் இது ஒரு பாசுரம்.

"ஸ்ரீ இராமானுசரே! தங்களது வள்ளல்தனம் கொள்ளக் கொள்ளக் குறைவற்று, கொழுந்து விட்டு ஓங்குவதால், இந்த வல்வினையேன் மனத்தில் நீர் புகுந்தீர் [நீசனேன் தங்களை நினைக்கவில்லை. நீரே புகுந்தீர்!].

ஆயினும், 'இந்த வல்வினையேன் மனத்தில் தாங்கள் வசிப்பது, [ஒப்பற்ற தூய்மையின் அடையாளமாய்] வெள்ளையாகச் சுடர்விட்டு ஒளி வீசும் தங்களது பெருமேன்மைக்கு இழுக்கு!' என்று எண்ணி, [வல்வினையை உடையோர்களில் மிகவும் கீழ்நிலையில் உள்ளதால்] துணையற்ற என் நெஞ்சம் தங்களை விட்டு அகலப்பார்க்கும்," என்கிறார்.

இப்படிப்பட்ட மனோநிலையில் இருப்பவர் உள்ளத்தில் 'டம்பம்' இடம் பெறாதன்றோ?




இலக்கணம் # 5: "என் கதைகளைக் கேட்பதில் ஊற்றம்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 94
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"ஸ்ரீ இராமானுசர் சரணாகதி என்ற தவத்தை அருள்வார். பக்தி என்ற செல்வத்தை அருள்வார். தமது பெருந்தன்மையை அருள்வார். ஓயாத பிறப்பிறப்பு சுழற்சியைத் தரும் தீவினையைப் போக்கி அருள்வார். 'பெருந்திவம்' என்று அழைக்கப்படும் பரமபதம் என்ற உலகத்தை அருள்வார்.

இப்படிப்பட்ட வரங்களை அருளும் தீதிலாத ஸ்ரீ இராமானுசரின் அடியார்களுக்கு மிகவும் உகப்புடன் ஆட்பட்டு இருந்தேன். ஸ்ரீ இராமானுசரின் குணங்களை அன்றி வேறு ஒன்றும் உள்ளத்தில் மகிழ்வுடன் அடியேன் சுவைப்பதில்லை," என்று அருளியுள்ளார்.

"கதைகளைக் கேட்பது" என்று இலக்கணத்தில் குறிப்பிட்டுள்ளது. அப்படிக் கேட்பதே அக்கதைகளை உள்ளத்தில் தேக்கி அவற்றைச் சுவைப்பதற்காகவே. மனம் அன்றோ ஐம்புலன்களின் முதலாளி?

எனவே, ஸ்ரீ இராமானுசரின் சீரான குணங்களை உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் நினைப்பதே இவ்விலணக்கத்தைச் செயல்படுத்தியதன் அடையாளம் எனத் தட்டில்லை.




இலக்கணம் # 6: "என் கதைகளைக் கேட்டால் மயிர்க்கூச்சம், கண்களில் நீர் போன்ற அடையாளங்கள் உடலில் ஏற்படுவது"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 102
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"ஸ்ரீ இராமானுசரே! தங்களது திருக்கல்யாண குணங்களை எண்ணி என் மனம் உருகும், என் நாவானது 'எம் ஐயன் இராமானுசன்' என்று வாயார அழைக்கும், கொடிய வினைகளை உடையேனாயினும் என் கைகள் உம்மைத் தொழும், என் கண்கள் உம்மைக் காண விழையும்.

கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள [சிரியவனான] அடியேன் மீதும் தங்களது வண்மை ஓங்கி வளர்ந்து இப்படி அருள் செய்ததே! இந்த வள்ளல்தன்மையின் சிறப்பு எத்தகையது!" எனறு பாரிக்கின்றார்.

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் தமது பக்தியின் வெளிப்பாடாக உடலில் ஏற்படும் அடையாளங்களைச் சொன்னதோடு நில்லாமல், தம்மை "அருவினையேன்" என்று அடையாளப்படுத்திக்கொள்கின்றார். அதாவது, இந்த பக்தியும், அதன் வெளிப்பாடும் ஸ்ரீ இராமானுசரின் வள்ளல்தன்மையால் ஏற்பட்டதேயன்றி, இவை தம்முடைய பெருமை அன்று என்கிறார்.




இலக்கணம் # 7: "என்னையே எப்பொழுதும் தியானித்தல்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 47
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"'[எல்லோராலும்] வணங்கத்தக்க நாயகன் பரம்பொருளாகிய திருவரங்கன்' என்ற அறத்தை இவ்வுலகத்தோருக்கு எடுத்தியம்பும் அண்ணல் ஸ்ரீ இராமானுசர்.

அந்த ஸ்ரீ இராமானுசர், நீசனேனின் திறம் மிக்க வினையைக்கூட வென்று, இராப்பகலாக விடாது என் சிந்தையில் 'இதற்கு ஈடு இணை இல்லையே!' என்று வியக்கும் வண்ணம் நிறைந்து எழுந்தருளியுள்ளார்.

இதனால் எனக்கு யாரும் நிகரில்லை!" என்று முழங்குகின்றார்.

"அடியேன் ஸ்ரீ இராமானுசரை எப்போதும் தியானம் செய்வது என்பதில்லை. ஸ்ரீ இராமானுசர் தாமே என் நெஞ்சில் எப்போதும் அவரது கருணையால் நீங்காமல் எழுந்தருளியுள்ளார்," என்று அருளியுள்ளது சிந்தனைக்கு மிகவும் இனியதாக உள்ளது.




இலக்கணம் # 8: "சுயநலம் பொருட்டு என்னை வழிபடாது இருத்தல்"


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 30
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம்
 
"பெருவீடு என்று அழைக்கப்படுவதும், இன்பம் தருவதும் ஆகிய பரமபதம் கிடைத்தால் என்ன? எண்ணற்ற துன்பங்கள் தரும் நரகங்கள் பல சூழ்ந்தால் என்ன?

'அநாதி காலமாக இருக்கும் உலகில், அழியாத தன்மை உடைய அனைத்து உயிர்களுக்கும் இறைவன் மாயனாகிய திருமால்' என்று மொழிந்தவரும், [நம் போன்றோர் மீதும்] அன்பு உடையவரும், குற்றமற்றவரும் ஆகிய ஸ்ரீ இராமானுசர் அடியேனை ஆட்கொண்டார். இதுவன்றோ அடியேன் வேண்டும் பேறு?"

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் தமக்குக் கிடைக்கப் போகும் நன்மை தீமை பற்றி ஆராயாமல், ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளில் தொண்டு புரிவதையே தம் பேறாகக் கொண்டவர் என்பதைப் பறைசாற்றும் பாசுரம்.




முடிவுரை
 
ஸ்ரீ இராமானுசர் "என் பக்தர்களின் இலக்கணங்கள் இப்படி இருக்கவேண்டும்" என்று கட்டளைகள் எதுவும் பிறப்பிக்கவில்லை. எனினும், அவரது அடியார்கள் மேற்கூறிய எட்டு இலக்கணங்களைக் கொண்டே ஸ்ரீ இராமானுசரிடம் ஒப்பற்ற பக்தியுடன் விளங்கியுள்ளனர்.

இதே போல நவ வித பக்தி [ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்] மிளிரும் பாசுரங்களையும் இதே ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் விளங்குவதைக் காணலாம்.

ஸ்ரீ இராமானுசரின் அடியார்களின் நிலையை எய்துவது நமக்குச் சற்று கடினமாகத் தோன்றினாலும், அவர்களுடைய மேன்மை மிக்க திருநாமங்களைப் பாடினாலும், சரித்திரங்களை வாசித்தாலும் நமக்கு பெருபெருத்த நன்மைகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

எம்பெருமானார் திருவடிகள் வாழி வாழி வாழியே!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானார் அடியார்கள் வாழி வாழி வாழியே!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




10 comments:

  1. Replies
    1. || Srimathe Ramanujaya Nama: ||

      Thank you so much, Sir!

      Delete
  2. Azhwars churned the ocean of Vedas and Upanishads and gave us the nectarine NDP. Our Acharyas too churned the Sri Sookthis of Azhwar's and their Purvacharyas and gave us the Saram of their works sweet as honey. Similarly, Devareer has beautifully churned the magnificent work of Sri Amudhanar and given us even sweeter Akkaravadisal with copious amount of honey added to it! ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்!! ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் திருவடிகளே ஶரணம்!!

    ReplyDelete
    Replies
    1. What a *sweet* comment! Glad that Devareer relished the amutham given by Amuthanar!

      ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்!! ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் திருவடிகளே ஶரணம்!!

      Delete
  3. As usual, great work. Dhanyosmi. Adiyen

    ReplyDelete
    Replies
    1. || Srimathe Ramanujaya Nama: ||

      All credits to Acharyas! Thank you. Adiyen.

      Delete
  4. Srimathe ramanujaya namaha🙏🏼

    ReplyDelete
    Replies
    1. || Srimathe Ramanujaya Nama: ||

      Thank you so much!

      Delete
  5. திருமாலின் அடியார்களிடம் காணப்படும் 8 பக்தி இலக்கணங்களும் குருபக்தியில் தோய்ந்த அடியார்களிடமும் சிறப்புற்று விளங்குவதை, ஸ்ரீ ராமானுச நூற்றந்தாதி மூலம் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    நீங்கள் மேற்கோள் காட்டிய பாடல்கள் துல்லியமாகக் குருபக்தியின் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜி.

      Delete