1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
இந்தக் கட்டுரைத் தொடரின் குறிக்கோள்
"ஸ்ரீ இராமானுசர் தரிசனம்" என்று போற்றப்படும் ஸ்ரீவைணவத்தின் கண்ணோட்டத்தின்படி வைரமுத்துவின் மொத்தக் கட்டுரையும் சான்றோர்களால் தள்ளத்தக்கதே! ஏன்? இதை எடுத்துரைப்பதுவே இந்தக் கட்டுரைத் தொடரின் தலையாய குறிக்கோள்.
"நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்" என்று திருப்பாவை பாடிய செல்வியும் "ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்கள் கூறும்" என்று திருப்பாவை ஜீயராம் ஸ்ரீ இராமாநுசரும் அருளியதுபோல் இந்தக் கட்டுரைத் தொடர் உண்மையைப் பெரியோர்கள் காட்டிய வழியில் தெரிந்துகொள்ள விழைவோருக்கு மட்டுமே.
வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் உறங்குவதுபோல பாசாங்கு செய்கின்றனர் என்பதை 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற வகையில் கண்டேன். இவர்களின் ஒரே நோக்கம்: கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சனாதன தருமத்தைக் குள்ளநரித்தனமாகத் தாக்குவது மட்டுமே. கண்டனங்களைக் கையாளும்போது அவர்கள் செய்யும் நேர்மையற்ற வாதங்களே அவர்களின் தரம் என்ன என்பதைப் "பறைசாற்றுகின்றன:"
1. சரியான மேற்கோள்களுடன் / அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் இவர்களுடைய தவறுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் பொழுது இவர்களின் விடை? மௌனம்.
2. காட்டிய மேற்கோளின் உண்மைப் பொருளைக் கூறினாலோ அல்லது அதே நூலில் இவர்கள் கூறுவதை முறியடிக்கும் மேற்கோள் காட்டினாலோ இவர்களின் விடை? மௌனம்.
3. எது குறித்துப் பேசுகின்றோமோ அதைத் தவிர்த்துத் தொடர்பே இல்லாதவற்றைப் பற்றிப் பேசி "வாதிடுவர்!"
4. இவர்கள் முன் சொன்னவற்றைத் இவர்களே மாற்றிப்பேசுவர்!
5. சனாதன தருமத்திற்கும் ஒரு நீதி - வேற்று மதத்தவருக்கு வேறு நீதி. அதிலும் பார்ப்பனர்களுக்கு ஒரு தனி "நீதி."
வாதத்திற்கு மருந்து உண்டு; பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. இது போன்ற நேர்மையற்றவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் கசக்கும்.
வைரமுத்துவின் கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்தவர்களிலும் சரி எதிர்ப்பு தெரிவித்தவர்களிலும் சரி:
1. கட்டுரையை முழுவதும் படித்தவர்களும் உண்டு
2. செய்திகளின் மூலம் மட்டுமே கட்டுரையைப் பற்றி அறிந்து கருத்து உரைத்தவர்களும் உண்டு
கட்டுரையை முழவதும் படித்து அதற்கு எழுந்த எதிர்ப்புகளில் மிகவும் ரசித்தவை:
1. 'ஆலய தரிசனம்' ஆசிரியரின் கண்டனங்கள்: இவற்றுள் இந்த ஆசிரியர் ஸ்ரீவைணவம் பொறுத்தவரையிலும் இந்தச் சர்ச்சையை அரசியல் ஆக்கியத்தைப் பற்றியும் சில சிந்திக்கத்தக்கக் கண்டனங்களையும் / கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்:
i. ஜனவரி 2018 இதழ் - கண்டனம் - ஒரு சுருக்கம் மற்றும்
ii. பிப்ரவரி 2018 இதழ் - கண்டனம் - ஒரு சுருக்கம்
ஜனவரி இதழில் ஸ்ரீவைணவ உரை ஆசிரியர்களின் பெருமை மற்றும் ஆழ்வார்களின் தெய்வப் பாசுரங்களின் பெருமை ஆகியவற்றை இரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளியிட்ட அழகு மிகவும் பாராட்டுக்குரியது. பிப்ரவரி இதழில் ஸ்ரீவைணவத்தைவிட்டு இந்தச் சர்ச்சை திசைதிரும்பியதன் துல்லியமான காரணங்களைக் கொடுத்துள்ளார். ஸ்ரீவைணவத்தைப் பொறுத்தவரை மிகச் சிறந்த கேள்விகளை எழுப்பியிருந்தார்!
2. சங்க காலத் தமிழ் / தமிழர் பண்பாடு என்ற கண்ணோட்டத்தில் ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மையார் அவர்கள் வரைந்த விரிவான, ஆழமான கண்டனம்:
i. "'தமிழை ஆண்டாள்' கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்"
ii. "வைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்"
இந்தக் கட்டுரைகளைப் படித்தால் சங்க காலத் தமிழர்களைப் பற்றியும் தமிழைப் பற்றியும் நாம் எவ்வளவு தெரிந்துகொள்ளவேண்டியிருக்கின்றது என்பது புரியும் - மிகவும் ஆழமான ஒரு எதிர்வினை!
வைரமுத்துவின் கட்டுரையை முழுவதும் படித்தவர்களிலும் செய்திகளின் மூலம் மட்டுமே அந்தக் கட்டுரையைப் பற்றி அறிந்து கருத்து உரைத்தவர்களிலும் பலர் அந்தக் கட்டுரையைக் குறித்துத் தமது எதிர்ப்பை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தனர். இவற்றுள் - நான் அறிந்தவரையில் - “தேவதாசி” என்ற ஒரு சொல்லும் ஒரு தவறான மேற்கோளும் மட்டுமே அந்தக் கட்டுரையில் உள்ள மாபெரும் தவறுகள் என்று நினைப்பவர்களே அதிகம் இருந்தனர். ஆனால் உண்மை அதுவல்ல!
வைரமுத்துவின் கட்டுரையின் போக்கினைப் பற்றிப் பொருளுரையில் வாசிக்கவும்.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment