வைரமுத்து அவர்களை விமர்சிப்பது எனது நோக்கம் அல்ல. அவரது கருத்துக்களை மட்டுமே விமர்சிக்கின்றேன்.
அவர் ஆன்மிகம் பற்றி பேசாமல் ஆண்டாளின் தமிழைப் பற்றி மட்டும் பேசி இருந்தால் எந்த ஒரு குறையும் இல்லை. அதை விடுத்து அவளது பிறப்பின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். “பக்தர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று அவரே சொல்கிறார்!
ஆண்டாளை பற்றிய சார்ச்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட வைரமுத்து அவர்கள் எதிர்வினையைப் பற்றி பேசும்போது மட்டும் “போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன” என்கிறார்! “ஏன் இப்படி எழுதினீர்?” என்றால் போதும் - "மதவாதி" என்று முத்திரையைக் குத்தி மூலையில் உட்கார வைத்துவிடுவார்கள். “நீங்கள் வளர்க்கும் தமிழில் இது இது தவறு” என்று சுட்டிக் காட்டினால் “உங்களிடம் தமிழ் வளர்க்க வந்தேனே” என்கிறார்! இது ஒரு வாதமா? அவர் வந்து வளர்க்கும் அளவு தமிழ் ஒன்றும் வளர்ச்சி குன்றி இல்லை. ஞானம் உள்ள தமிழர்கள் இவர் கூறியதில் உள்ள தவறுகளையும் புரிந்து கொண்டு சுட்டிக்காட்டுவார்கள் அல்லவா?
“கட்டுரையை வாசிக்கும் போது எந்த எதிர்ப்பும் இல்லை” என்கிறார் வைரமுத்து - அர்ஜுன் சம்பத் அவர்கள் போல சிலர் சபை நாகரிகம் கருதி அமைதி காத்து இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய கட்டுரையை நிதானமாகப் படிக்கும் போதுதான் அவருடைய அத்துமீறலை உணர முடிகின்றது!
வைரமுத்து அவர்களின் நோக்கமே ஆண்டாளின் பிம்பத்தைச் சிதைப்பதுதான் என்பது அவருடைய கட்டுரையை முழுவதும் படித்தவர்களுக்குப் புரியும். “தாசி” என்பது வைணவத்தில் புழங்கும் சொல். ஆனால் ஒரு சொல்லை எப்படி எங்கே பயன்படுத்தவேண்டும் என்று ஒரு முறை உள்ளது. “அடித்தே கொல்லுவேன்” என்று ஒரு தாய் குழந்தையிடம் சொல்லும் போது பொருள் வேறு; யாரோ ஒருவன் இன்னொருவனைப் பார்த்துக் கூறும்போது பொருள் வேறு!
அவர் கூறிய மேற்கோளை அமெரிக்க பல்கலைக் கழகம் வெளியிடவில்லை. மேலும் அந்த மேற்கோள் உள்ள கட்டுரையை எழுதியவரோ “இதற்கு சான்று ஏதும் இல்லை - வெறும் ஊகம்” என்கின்றார். “அவரை ஏன் எதிர்க்கவில்லை?” என்று கேட்கின்றார் வைரமுத்து! இவர் மேற்கோளை வைத்துத்தான் அப்படி ஒருவர் கூறியிருக்கின்றார் என்பதே தெரியும்!! அந்தத் தவறான மேற்கோளை அவர் திணிக்கவே அவ்வளவு வார்த்தை ஜாலங்களும் செய்துள்ளார்.
கருத்துக் சுதந்திரம் என்பது மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்கும் வரைதான்! இத்தனைப் பேர்களின் உள்ளங்கள் புண்பட்டதை இன்னும் வைரமுத்து அவர்கள் உணராமல் இருப்பதுதான் வியப்பை அளிக்கின்றது! பிரபலமான அவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தால் 1000 கணக்கில் மக்கள் நேரடியாகக் கேட்கின்றனர். ஒரு வரி விடாமல் பத்திரிக்கைகள் அச்சிடுகின்றன. லட்சக்கணக்கில் அவை சென்றடைகின்றன. அவரது கருத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குச் சட்ட ரீதியாக உண்டு - ஆனால் அது உரிய அளவில் சென்று சேராது. இது நியாய ரீதியில் எப்படி சரியாகும்?
“ராஜாஜி ஆண்டாள் ஒரு கற்பனை என்கிறார்” என்று கூறுவோருக்கு: ராஜாஜி அவதூறாகப் பேசவில்லை. தவிர அவர் தனக்கு வைணவம் தெரியாது என்றும் அது தன் தனிப்பட்ட கருத்து என்றும் கூறி வருத்தமும் தெரிவித்தார். லட்சக் கணக்கில் விற்கும் பிரபல பத்திரிக்கையில் தவறான கருத்துக்களைக் கூறுகின்றனர். 1000-2000 கணக்கில் விற்கும் பத்திரிக்கையில் மறுப்பும் மன்னிப்பும் தெரிவிக்கின்றனர். இதுவே பிரச்சினை.
வைரமுத்து அவர்களின் கட்டுரையைப் படிக்காமலும் படித்தும் புரியாமலும் பலர் இடையில் புகுந்து அறிவுப் பூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டனர்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வைரமுத்து அவர்களைப் பற்றி அரசியல் ரீதியாக விவாதம் செய்தனர் - அவர் கூறிய கருத்தைப் பற்றி விவாதம் நடக்கவில்லை. வைணவம் மற்றும் தமிழ் அறிந்த அறிஞர்கள் வைரமுத்து அவர்களின் கருத்துக்கள் ஏன் தவறானவை என்று விளக்கம் அளித்தனர் - ஊடகங்களோ மற்ற அறிஞர்களோ அதைக் கண்டு கொள்ளவில்லை. அறிஞர்கள் வைத்து விவாதித்தால் சுமுகமாக முடிந்துவிடும். ஒருவரை ஒருவர் தூண்டிவிடும்படி விவாதித்தால் சுவாரசியமாக இருக்கும். ஊடகங்களுக்கு இதுதான் வேண்டும்.
அறிஞர்கள் பலர் கண்டனங்கள் முன்வைத்தாலும் ஒருவர் முன்வைத்த மிகக் கடுமையான கண்டனத்தை மட்டும் வைத்து அவருக்கும் வைரமுத்து அவர்களுக்கும் பிரச்சினை என்பது போல சர்ச்சை திசை திரும்பிவிட்டது! கடுமையான வார்த்தைகளைக் கொண்டு வைரமுத்து அவர்களைக் காயப்படுத்தியதை நான் ஏற்கவில்லை. அதனால் வைரமுத்து அவர்கள் கூறியது சரியாகிவிடுமா?? அது தனி. இது தனி.
வைரமுத்து அவர்கள் அந்தக் கருத்துக்களுக்கு சரியான விளக்கம் கூற வேண்டும் அல்லது அவை தவறு என்று ஒப்புக்கொண்டு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். இதுதான் இதற்குச் சரியான முடிவு.
No comments:
Post a Comment