Search This Blog

Monday 7 May 2018

நம் நாட்டில் மொழிகளும் நம் முன்னோர்களின் மொழியறிவும்


முன்னுரை

ஒருவர் இப்படி ஒரு பதிவு செய்திருந்ததைச் சில நாள்கள் முன் கண்டேன்:

தமிழ் தத்துவங்களைப் பேசும் வைணவப் பேச்சாளர்கள், சில நேரங்களில் அதீத வடமொழிப் பயன்பாடும், வடநில முன்னாள் மன்னர்கள் பற்றியும் செய்கின்றனர். என் தனித்தமிழ் உணர்வுகளின் காரணமாக சில நேரங்களில் இது எரிச்சலூட்டவும் செய்கின்றது. எடுத்துக்காட்டாக, வேளுக்குடி கிருட்டிணன் எதற்கெடுத்தாலும் "இராமனே சிறப்பு" என்ற வகையில் வடதிசை முன்னாள் மன்னர்களான இராமன், பலராமன், கிருட்டிணன் ஆகியோரைப் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்.

அளவுகடந்த மொழிப்பற்றினால் நம்மில் சிலர் சில உண்மைகளைக் காணாமல் இருந்துவிடுகின்றனர் என்றே எண்ணுகின்றேன். மொழிகளைக் குறித்து பெரியோர்களிடம் கற்ற சில உண்மைகளை இக்கட்டுரையில் பகிர்கின்றேன்.


வடநாட்டவரும் போற்றிய தமிழும் தமிழரின் பக்தியும்

திருக்குடந்தையில் ஆராவமுதன் என்ற திருநாமத்தில் திருமால் அருள் புரிகின்றார். இந்த திருநாமத்தை வடமொழியில் “அபர்யாப்தாம்ருத:” என்று கூறுவர். வடநாட்டில் வாழ்ந்த ஒருவர் திருக்குடந்தையிலிருந்து வந்த ஒரு தமிழரிடம் ஆராவமுதனின் பெருமையைப் பற்றி அறிந்தார். வந்தவர் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டபோதும் அந்த வடநாட்டவருக்கு “ஆராவமுதன்” என்ற அந்த சொல்லின் இனிமையை நினைத்து நினைத்துச் சுவைக்காமல் இருக்கமுடியவில்லை. அவருக்கு அந்தச் சொல்லின் வடமொழி மொழிபெயர்ப்போ இவ்வளவு சுவையாகத் தெரியவில்லை. வடநாட்டை விட்டுத் திருக்குடந்தையில் குடிபுகுந்து தமிழைக் கற்று அந்த எம்பெருமானை வழிபட்டார் என்று வரலாறு! குறிப்பு: இதனை வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசத்தில் கேட்டபடி பகிர்ந்துள்ளேன்!

வடமொழி நூலான ஸ்ரீமத்பாகவதத்தில் ஸ்ரீசுக முனிவர் அருளியது: “கலி யுகத்தில் திராவிட நாட்டில் நாராயணனின் தூய அடியார்கள் பலரைக் காணலாம். தாமிரபரணி, வைகை, பாலாறு, மிகவும் உயர்ந்ததாம் காவிரி, பெரியாறு போன்ற நதிகளின் கரைகளில் அவர் இருப்பர்.” இதனைக் கேரளத்தைச் சேர்ந்த நாராயண பட்டாத்திரியும் தமது நாராயணீயத்தில் ஒரு கவியாக வடித்துள்ளார். இதனை ஆழ்வார்கள் மற்றும் இராமானுசன் அடிபணிந்த ஸ்ரீவைணவத் தொண்டர்களைக் குறிப்பதாகப் பெரியோர் பணிப்பர்.


ஸ்ரீவைணவத்தில் தமிழ் மொழியின் ஏற்றம் - சில எடுத்துக்காட்டுக்கள்

1. ஆழ்வார்களின் அமுத மொழிகளில் மிகவும் ஈடுபட்ட இறைவன் திருவீதிப் புறப்பாடு கண்டருளும்போது (வீதி உலா வரும்போது) ஆழ்வார்களின் ஈரச்சொற்களைப் பாடுவோரைப் பின்தொடர்வான். வடமொழி வேதம் ஓதுவோர் எம்பெருமான் பின் செல்வர்.

2. இராமானுசரின் கட்டளையின்படி இன்றும் திருவேங்கடத்தில் மூலவரின் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்போது அவரது திருமார்பைவிட்டு இறையும் அகலாதவளான திருமகளின் ஒரு மணி நேரப் பிரிவுத் துயரைப் போக்க ஆண்டாளின் நாச்சியார் திருமொழியைப் பாடுவர்.

3. திருக்கோயில்களின் கருவறையில் அந்தத் திருத்தலத்தின் தெய்வீகப் பாசுரங்களைப் பாடியபடி அர்ச்சகர்களும் கற்பூர ஆரத்தி எடுத்து எம்பெருமானைக் காட்டிக்கொடுப்பர்.

இன்றும் இவற்றைக் கண்டு மகிழலாம்! 

"ஆசார்ய ஹ்ருதயம்" என்ற அற்புதமான நூலில் ஸ்ரீவைணவப் பெரியோரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மிக மிக அற்புதமாக நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் ஏற்றத்தையும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் வடமொழி வேதங்களையும் விஞ்சிய சிறப்பு உடையவை என்றும் எடுத்துரைத்தார். அரங்கனும் இதனை ஆமோதித்தான்!


இறைவனின் மொழி அன்பு

கேரளத்தில் நாராயண பட்டாத்திரி என்ற ஸமஸ்க்ருத மொழிப பண்டிதர் இருந்தார். இவர் ஸ்ரீ குருவாயூரப்பனின் பக்தர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பெருமையை “நாராயணீயம்” என்ற நூலில் 1034 கவிகளில் வடித்தவர். பூந்தானம் நம்பூத்திரி என்ற இன்னொரு பக்தர் மலையாளத்தில் ஸ்ரீ குருவாயூரப்பனின் புகழ் பாடி நாராயண பட்டாத்திரியிடம் அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டும்படி வேண்ட, பட்டாத்திரியோ தமது வடமொழிப் புலமையின் செருக்கால் இவரையும் இவரது படைப்பையும் அலட்சியப்படுத்திவிட்டார்.

அவருக்கு ஞானம் புகட்ட முடிவு செய்த ஸ்ரீகுருவாயூரப்பன் ஒரு சிறுவன் வடிவில் அவரிடம் வந்து “நாராயணீயம்” நூலில் உள்ள இலக்கணப் பிழைகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டினான். அதிர்ந்த பட்டாத்திரி “நீர் யாரோ?” என்று வினவ, தமது உண்மைச் சொரூபத்தைக் காட்டிய ஸ்ரீகுருவாயூரப்பன் “உனது விபக்தியை விட எனக்கு அவனது பக்தி தான் பெரிது” என்று அருளி மறைந்தான். விபக்தி என்பது மொழி இலக்கணம் குறித்த ஒரு சொல் (வேற்றுமை உருபு). பட்டாத்திரியும் தெளிந்தார்.

திருமால் மீது மீராபாய் அம்மையார் (ராஜஸ்தானி), சோகாமேளர் (மராட்டி), புரந்தரதாசர் (கன்னடம்), பூந்தானம் (மலையாளம்), சலபேகா (ஒடியா), நரசிங்க மெஹ்தா (குஜராதி), போதனா (தெலுங்கு) என்று எவ்வளவோ மொழியில் பக்தர்கள் பாடியுள்ளனர். அவற்றையெல்லாம் இறைவன் மகிழ்ச்சியுடனும் பெருமதிப்புடனும் ஏற்கவில்லையா? தாம் பாடிய மராட்டி அபங்கங்களை ஒரு சூழ்நிலையில் பக்த துகாராம் அவர்கள் சந்திரபாகா நதியில் எறிந்தார். ஆனால் நதியின் அதிதேவதை அவற்றை அவரிடமே திருப்பிக்கொடுத்தாள். மொழி ஒரு பொருட்டா? அன்பின் ஆழம் அன்றோ முக்கியம்?


ஸமஸ்க்ருதம் அந்தணருக்கு மட்டும் சொந்தமான மொழியா?

மஹாபாரதத்தில் ஒரு காட்சி. துரியோதனன் பாண்டவர்களை அழிக்க ஒரு மெழுகு மாளிகையைக் கட்டியபின் தந்திரமாக அவர்களை அங்கே தங்கும்படிச் செய்கின்றான். இதனை அறிந்த ஸ்ரீவிதுரர் தருமர் புறப்படும் முன் தனியே அழைத்துப் பேசுகின்றார். பின்பு அன்னை குந்தியிடம் தருமர் “அவர் மிலேச்சர்கள் (வேத மதம் பற்றாதார்) மொழியில் வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி மறைமுகமாக எச்சரித்தார்” என்று கூறுகின்றார். நம் முன்னோர்கள் மற்றைய நாட்டு மொழிகளையும் கற்றிருந்தனர்!

ஸ்ரீவிதுரர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தருமர் அரச குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கல்வியை யாரும் தடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!

பேரறிவாளர் (மஹாமதி) என்று போற்றப்படும் ஸ்ரீவிதுரரின் பொன்னான அறிவுரைகள் வடமொழியில் உள்ளன. அவற்றை “ஸ்ரீ விதுர நீதி” என்று பெரியோர்கள் இன்றும் கற்பிக்கின்றனர்.


சனாதன தருமத்தில் மொழிகள்

மொழி என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகராக “பாஷை” என்ற வடசொல் கலந்த இன்னொரு சொல்லும் உண்டு. “பாஷா” என்ற வடசொல் நாமங்கையின் பல பெயர்களில் ஒன்று. சனாதன தருமத்தில் அனைத்து மொழிகளும் நாமங்கையின் வடிவம்! நமது நாக்கினை “வாணி விலாசம்” அதாவது “கலைமகளின் இருப்பிடம்” என்று சான்றோர் அழைப்பர். நாமங்கையின் ஆசான் திருமாலின் ஒரு அவதாரமான பரிமுகக் கடவுள். இந்த ஆன்மீக உண்மைகளை அறிந்த அறிவாளர்கள் மொழியில் வேற்றுமை காணமாட்டார்கள்.

ஸ்ரீமாத்வாசார்யர் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு: அவர் தமது சீடர்களுடன் இமயமலையில் தவம் புரியும் ஸ்ரீவேதவியாசரை வழிபடக் காஷ்மீரம் சென்றார். அங்கே முகலாயர்களின் படையினர் அவரைத் தடுத்து மிரட்டினர். வாயு பகவானின் அவதாரமான ஸ்ரீமாத்வாசார்யர் சற்றும் கலங்காமல் “உங்கள் அரசனை அழையுங்கள்” என்று துருக்க மொழியில் கூற அவரது சீடர்கள் உட்பட அனைவரும் அவர் அம்மொழியில் பேசியதைக் கேட்டு வியந்தனர். படையினர் உள்ளே ஓடி அரசனை அழைத்து வர அந்த முகலாய மன்னனிடம் ஆசார்யர் மிகத் தூய்மையான துருக்க மொழியில் விளம்பினார்! அவரது கம்பீரத் தோற்றத்தாலும் அப்பழுக்கற்ற துருக்க மொழி அறிவாலும் மிகவும் ஈர்க்கப்பட்ட அந்த மன்னன் அவர்கள் செல்வதைத் தடுக்காமல் இருந்துவிட்டான் என்று வரலாறு. கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பன்றோ?

மணிப்ரவாள நடை என்று ஒன்று உண்டு. பல மொழிகளைக் கலந்து பேசினால் அல்லது எழுதினால் மணிகளும் (மணி) பவழங்களும் (ப்ரவாள) கலந்தாற்போல் உள்ளது என்று நம் பெரியோர்கள் இப்படி அழாகாப் பெயரிட்டு அழைத்தனர். என்னே ஒரு ரசனை! என்னே ஒரு பரந்த நோக்கம்!


முடிவுரை

தாய் மொழி மீது நமக்கு ஒரு பற்று ஏற்படுவது இயற்கை. வேறு சில மொழிகள் மீதும் பற்று ஏற்படுவதும் சாத்தியம். யாரும் எந்த மொழியையும் கற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை - அது அவரவர் விருப்பம். புரிந்துவிட்டால் ஆங்கிலம், உருது உட்பட ஒவ்வொரு மொழியும் அழகு; அம்மொழியில் கூறப்படும் நல்ல கருத்துக்களை நாம் அறிவதற்கு ஒரு வாய்ப்பு.


No comments:

Post a Comment