Search This Blog

Friday 27 April 2018

இறை பக்தியில் நாயகி மனநிலை


முன்னுரை

சான்றோர்களின் திருவாக்கினால் அறியப்பெற்றதும் நாயகி மனநிலையைப் புரிந்து கொள்ளத் தேவையானதுமான சில உண்மைகளையும் நாயகி மனநிலையைப் பற்றி இராமானுசன் தரிசனத்தில் ஆன்றோர்கள் அருளியது என்ன என்பதையும் சுருக்கமாக இக்கட்டுரையில் வரைந்திருக்கின்றேன்.

இக்கட்டுரைக்கு ஒரு முன்னோடியாக "இறை பக்தி - மனநிலைகளும் ரசங்களும் நவ வித சம்பந்தங்களும்" என்ற தலைப்பில் இறை பக்தியைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை வைணவப் பெரியோர்கள் அருளியுள்ளபடி பகிர்ந்துகொண்டேன். இதைப் படித்து முடித்தபின் தற்போதைய கட்டுரையைப் படித்தலே முறையான அணுகுமுறை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


எதிர்மறை எண்ணங்களையும் ஏற்கும் எம்பெருமான்!

பௌண்டிரகன் என்ற அரசன் கண்ணன் உருக்குமிணியை மணந்தார் என்றதால் கண்ணன் மீது கோபம் கொண்டு சித்தபிரமை பிடித்திருக்க, அவனைத் தேற்ற எண்ணிய மந்திரிகள் “நீயே பரம்பொருள். கண்ணன் ஒரு மாயாவி” என்று கூற, அவனும் அறிவிழந்து கண்ணன் போல வேடமிட்டுக் கொண்டான்! கண்ணனுக்கு “எனது சக்கிரம் சங்கு ஆகியவற்றை என்னிடமே தராவிடில் மடிவாய்” என்று கடிதம் அனுப்ப, முடிவில் கண்ணனும் அவனைப் போரில் வீழ்த்தினார்.

• போரில் மடிந்த பௌண்டிரகனின் ஜீவாத்மா அடைந்த கதி என்ன? ஸ்ரீ வைகுண்டம்! ஆம். 24 மணி நேரமும் தன்னை நாரணன் என்று எண்ணி வேடமிட்டுக்கொண்டதால் அதையும் புருடோத்தமன் காரணமற்றக் கருணையால் நற்றமாகவே கொண்டான்!

• இதையே ஏற்கும் பரமன் உண்மையான அன்பு வெள்ளமெனப் பாய்ந்தால் ஏற்காமல் இருப்பானோ? நாயகி மனநிலை அவன் மீது வெறுப்பு ஏதுமின்றி பொழியும் அன்புதானே!


இறைவன் நம் மீது காதல் கொள்வது முறையா?

• எண்ணங்கள் யாவும் நிறைவேறிய குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுக்கு அவனது அப்பழுக்கற்ற திருமேனியால் நம் அழுக்கு உடலை அணைப்பதில் எவ்விதமான பயனும் இல்லை.

அவன் புதிதாக நம்மைத் தொடுவது என்பதும் இல்லை - உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துள்ள அவன் எப்போதும் நம்மைத் தொட்டவண்ணம் உள்ளான்!

• அவன் ஒரு ஜீவனைப் பார்த்து “நீ நாயகி மனநிலையில் மட்டுமே என்னை வழிபடலாம்” என்று வாள்முனையில் மிரட்டினானா?? மற்ற மனநிலைகளில் அவனை வழிபடுபவர்களை வாழ்விக்கத் தவறினானா??

• அவனது வடிவழகைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாலும் அவனுக்கே உடல் உயிர் இரண்டையும் அளிக்கவேண்டும் என்ற தீவிர எண்ணத்தாலும் சில ஜீவர்கள் நாயகி மனநிலையை அடைகின்றனர் - அவன் அந்த அன்பையும் ஏற்கின்றான்.

மனநிலையின் தூய்மையும் ஆழமும் எவ்வளவு என்பதுதான் முக்கியம். எதுவானாலும் அவன் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வான்.

• இருப்பினும் நாயகி மனநிலை மிக்க ஏற்றம் உடையது என்று பெரியோர் பணிப்பர். ஏன்?


நாயகி மனநிலை

ஒரு ஜீவாத்மா தன்னைப் பரமனின் காதலியாகவோ மனைவியாகவோ பாவித்து அவன் மீது பக்தி செலுத்துவது நாயகி மனநிலை. இந்த மனநிலை மற்ற மனநிலைகளை விட தத்துவக் கண்ணோட்டத்திலும் சிறந்தது நவரசக் கண்ணோட்டத்திலும் சிறந்தது.

1. நாயகி மனநிலை - தத்துவ ஞானம்:

• ஒரு ஜீவாத்மாவின் உண்மையான தன்மை (சொரூபம்) பெண்மை – நித்யர், முக்தர், பத்தர் என்ற அனைவருக்கும் இது பொருந்தும். அந்த பத்தர் எந்த உடலிலும் இருக்கலாம் – தாவரம், விலங்கு, மனிதர், தேவர், அரக்கர் போன்ற எதுவானாலும் சரி.

ஜீவாத்மா என்றுமே பெண் தன்மை உடையது. அனைத்து ஜீவாத்மாக்களின் ஒப்பற்ற தலைவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி. பரமாத்மா ஒருவனே ஆண்பிள்ளை. புருடோத்தமன். இந்த உயர்ந்த தத்துவ ஞானம்தான் நாயகி மனநிலையின் உயிர் நாடி.

• இந்த நாயகி மனநிலையில் பாடிய பக்தி இலக்கியங்களில் நாயகியின் கொங்கைகள் செழுமையான பக்தியின் உருவகம் என்றும் சிற்றிடை உலகியலில் பற்றின்மையின் உருவகம் என்றும் ஸ்ரீவைணவப் பெரியோர் பணிப்பர். இந்த உயர்ந்த தத்துவ ஞானம்தான் நாயகி மனநிலையில் பிறந்த இலக்கியங்களில் உள்ள உருவகங்களுக்கு உயிர் நாடி.

2. நாயகி மனநிலை - நவரச ஞானம்:

• எல்லா மனோபாவங்களுக்கும் எல்லா ரசங்களும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனோபாவத்திலும் சில ரசங்கள் மேலோங்கி இருக்கும் சில ரசங்கள் இருக்காது அல்லது குறைந்த அளவு தான் இருக்கும்.

• நாயகி மனோபாவத்தில் மட்டுமே சிருங்காரம் உள்பட அனைத்து ரசங்களும் பூரணமாக வெளிப்படும். கோபம், வீரம் (மடல் ஊர்தல்), அருவருப்பு போன்ற ரசங்கள் ஊடல் காலத்தில் வெளிப்படும்.

• நவரசங்கள் வெளிப்படுவது மட்டும் அல்ல அவை மிகவும் சுவையானதாகவும் அன்பின் எல்லையைத் தொடுவதாகவும் இருக்கும். உயிர் உடல் யாவற்றையும் அப்பொழுதே பரமனுக்கு சேவை செய்ய அளித்துவிடவேண்டும் என்ற தாங்கவொண்ணாததொரு துடிதுடிப்பும் பரபரப்பும் நிறைந்த ஒரு மனநிலை அல்லவா? உணர்வுகளின் உக்கிரமும் வேகமும் மற்ற மனநிலைகளைவிட விஞ்சி இருக்கும்.

• இதனாலேயே ஆண் உடலில் பிறந்த அடியார்களும் பெண் தன்மையை ஏறிட்டுக்கொண்டு தங்கள் அன்பின் மிகுதியை வெளிப்படுத்துகின்றனர்!

• ஒரு ஜீவனின் அன்புக்கு ஏங்கும் பரமனுக்கு இதைவிட ஒரு சுவையான விருந்து என்ன இருக்க முடியும்?


முடிவுரை

மறையவர் வேள்வியில் வகுத்த அவி போன்ற நாயகி மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையவனான குருவை அடைந்து கற்கவேண்டியது இன்றியமையாதது. இல்லையென்றால் கானிடைத் திரிவதோர் நரி புகுந்து அவியைக் கடப்பதும் மோப்பதும் ஒப்ப ஒரு கீழ்த்தரமான செய்கையைச் செய்த வல்வினைதான் மிஞ்சும். நல்லாசான்களைப் பணிந்து இதனைக் கற்றால் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!


2 comments:

  1. நாயிகாபாவத்தின் உட்பொருளை நயம்பட விளக்கியுள்ளீர்.ஸ்வபாவமாகவே ஆண்டாள் பெண்தன்மையை கொண்டமையால் நாச்சியார் திருமொழியில் நாயகியாக அவர் அருளிச்செய்தமை ஒரு அனுபவம்.பராங்குச நாயகியாக நம்மாழ்வாரும் பரகாலநாயகியாக திருமங்கையாழ்வாரும் நாயகி பாவத்தை ஏறிட்டுக்கொண்டு அருளிச்செய்த பாசுரங்களும் ஒருவகை அனுபவமே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. பராங்குச பரகால நாயகிகளின் காதல் பாசுரங்களும் மிக்க சுவை உடையவை. :-)

      Delete