Search This Blog

Monday 14 May 2018

இறை பக்தி - மனநிலைகளும் ரசங்களும் நவ வித சம்பந்தங்களும்


இறை பக்தி

• ஒருவரின் மீது இன்னொருவர் செலுத்தும் அன்பை நாம் பாசம், காதல், நட்பு, நேசம் என்ற சொற்களால் குறிக்கின்றோம். இவற்றை மனநிலைகள் / மனோபாவங்கள் என்று கூறுவர்.

• இறைவன் மீது செலுத்தும் அன்பு பக்தி எனப்படுகின்றது. குரு பக்தி, பதி பக்தி போன்றவை இருப்பினும் பக்தி என்றால் அதை இறை பக்தி என்றே பொதுவாகப் புரிந்துகொள்வர்.

• இறைவன் பிறப்பு இறப்பு சூழலுக்குள் இருக்கும் பத்தர்களாக (கட்டுண்டவர்கள் என்று பொருள்) இருக்கும் நம் போன்ற ஜீவாத்மாக்களை முக்தர்களாக (ஜன்மங்கள் பல செய்து முடிவாக பிறப்பு இறப்பு சூழலைத் தகர்த்துப் பரமபதம் அடைந்து உய்ந்தவர்கள் என்று பொருள்) ஆக்கவே விழைகின்றான். அதற்கு அவன் அருளும் பல கொடைகளில் ஒன்று அவன் மீது நமக்கு ஏற்படும் பக்தி.


இறை பக்தி - மனநிலைகளும் ரசங்களும்

• நம் உணர்வுகள் ஆனந்தம், கருணை (சோகமும் இதில் அடக்கம்), வியப்பு, பயம், கோபம், வீரம், அருவருப்பு, சிருங்காரம், அமைதி என்ற நவரசங்களாக வெளிப்படுகின்றன என்றும் நாம் அறிவோம். நம் மனநிலையானது தகுந்த ரசங்களுடன் கூடும் போது அன்பு பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றது. உதாரணங்கள்:

சூழ்நிலை மனநிலை / மனோபாவம் முக்கியமான ரசம்
ஒரு தாய் தனது மகனை வெகு நாள்கள் கழித்துக் காண்கின்றாள் தாயின் பாசம் ஆனந்தம்
ஒரு தந்தையின் பிரிவை நினைத்து மகள் வாடுகின்றாள் மகளின் பாசம் சோகம்
ஒரு மனைவி இல்லம் திரும்ப நேரம் ஆகின்றது - கணவரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை காதல் பயம்


• எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மனோபாவம் வலிமையாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதற்குரிய ரசங்களும் வலிமையாக வெளிப்படும் என்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

ஒரு ஜீவாத்மா பக்தியை வெளிப்படுத்த எந்த மனநிலையையும் தேர்ந்தெடுக்கலாம்! அந்த மனநிலைக்கேற்ற அனைத்து ரசங்களையும் வெளிப்படுத்தலாம்! இவை அனைத்தையும் பரம ரசிகனான எம்பெருமான் மிகவும் உகந்து ஏற்கின்றான். அதற்கு ஏற்றார் போல பதிலுக்கு அவனது அன்பைப் பன்மடங்காகப் பொழிகின்றான்! உதாரணங்கள்:

அடியார் மனநிலை
கருடாழ்வார், அனுமன் தாசர்
யசோதை, பெரியாழ்வார் தாய்
மஹாலக்ஷ்மி, மீராபாய் காதலி / மனைவி
குசேலர், அர்ச்சுனன் நண்பர்


• ஒரு ஜீவாத்மா ஏதாவது ஒரு மனோபாவம் மட்டுமே தேர்ந்து எடுக்கவேண்டும் என்றும் இல்லை. உதாரணங்கள்:

அடியார் சில மனநிலைகள்
நம்மாழ்வார் தாசர், காதலி
திருமங்கையாழ்வார் தாசர், காதலி, தாய், நண்பர்


இது எப்படி பொருந்தும்?? ஒரே நபர் தாயாகவும் காதலியாகவும் எங்ஙகனே இருக்கக்கூடும்??


நவ வித ஆன்ம சம்பந்தங்கள்

ஒரு ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒரே நேரத்தில் 9 வித சம்பந்தங்கள் உடையது! அவை:

பரமாத்மா ஜீவாத்மா
தகப்பன் பிள்ளை
கணவன் மனைவி
காப்பவன் காக்கப்படுபவன்
அறியப்படுபவன் அறிபவன்
ஆதாரமாய் இருப்பவன் ஆதரிக்கப்படுபவன்
நுகர்பவன் நுகரப்படுபவன்
ஆன்மா / சரீரி சரீரம்
எஜமானன் அடிமை
உடையவன் சொத்து


இது எப்படி சாத்தியம்?

1. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் உள்ளவை என்பதால் சாத்தியம்! உதாரணங்கள்:

i. (தாய் தந்தை மூலமாக) நம்மை எல்லாம் படைத்தவன் - அதனால் அவன் தகப்பன் நாம் பிள்ளைகள்

ii. நாம் அவனுக்கு மட்டுமே உரிமையானவர்கள் - அதனால் அவன் கணவன் நாம் மனைவியர்

2. இது முழுவதும் ஆன்மீக சம்பந்தம் என்பதாலும் இது சாத்தியம்!

i. ஆன்மாவைப் பற்றியது ஆன்மிகம் அன்றோ? ஆன்மாவின் தன்மைகளாகக் கீதையில் கண்ணன் கூறுவதைப் படித்தால் நாம் ஐம்புலன்களால் உடல் அளவில் நுகரும் இன்பங்கள் வேறு ஆன்மா அளவில் நுகரும் இன்பங்கள் வேறு என்பது புலப்படும்.

ii. இதனால் தான் ஆழ்வார்களும் பல மனோநிலைகளில் பாசுரங்கள் அருளியுள்ளார்கள். திருநாகை அழகியாரைப் பார்த்து நாயகி நிலையில் பரவசப்படும் திருமங்கை ஆழ்வாரின் தோரணையும் திருஇந்தளூரில் பாடும் திருமங்கையாழ்வாரின் தோரணையும் திருமலையில் பாடும் திருமங்கையாழ்வாரின் தோரணையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்!

iii. தமது ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்புகள் எத்தகையது என்பதை அறிந்த ஆழ்வார் ஒவ்வொரு திருத்தலத்திலும் இறைவனின் ஒவ்வொரு சிறப்பான குணத்தில் ஈடுபட்டு அதற்கு ஏற்ற வெவ்வேறு மனநிலைகளை எய்தி தமது அன்பை வெளிப்படுத்துகின்றார் – அவ்வளவுதான்.


No comments:

Post a Comment