Search This Blog

Monday 14 May 2018

ஆண்டாளின் திருவவதாரம் - பின்னணி, குறிக்கோள், ஏற்றம்


ஆண்டாளின் திருவவதாரம்
பின்னணி, குறிக்கோள், ஏற்றம்


Image Credit: https://in.pinterest.com/pin/853572935620886394/


முன்னுரை
 
அவதாரங்கள் என்ற கட்டுரையில் ஸ்ரீவைணவம் படி அவதாரங்கள் பற்றிய சில தகவல்களை வரைந்திருந்தேன். இக்கட்டுரையில் ஆண்டாளின் திருவவதாரம் பற்றிய பின்னணி, குறிக்கோள் மற்றும் ஏற்றம் ஆகியவை என்ன என்பதைப் பெரியோர்கள் அருளிய வழியில் பகிர்ந்துள்ளேன்.





ஆண்டாள் திருவவதாரத்தின் குறிக்கோள்


திருமால் வராகமாகத் தோன்றி இரணியாட்சன் என்ற அசுரனைக் கொன்று பூமிதேவியை மீட்டார். அவர்களுடைய உரையாடல் வராக புராணமாக வடிவம் பெற்றது. நிலமாமகள் நாச்சியார் ஞானப்பிரான் என்ற திருநாமம் உடைய வராகப்பெருமானிடம் "பூமியில் வாழும் நம் குழந்தைகள் உம்மை அடைய ஒரு எளிய வழியை அருள்வீர்" என்று வேண்ட "என் பெயர்களைப் பாடினால், என்னை மனத்தினால் சிந்தித்தால், என்னைத் தூய மலர்களால் அர்ச்சித்தால் என்னை அடையலாம்" என்று திருமால் அருளினார். இதை நமக்கு வெளியிடுவதே நிலமாமகளின் திருவவதாரமான ஆண்டாளின் குறிக்கோள்.

வராகப்பெருமானின் மூன்று அறிவுரைகளையும் திருப்பாவையில் ஐந்தாம் பாடலில் ஆண்டாள் தெள்ளத்தெளிவாக அருளினாள். இந்த ரகசியத்தை இராமானுசரின் முக்கியமான சீடரான திருமலை அனந்தான்பிள்ளை என்பவர் தம்முடைய "கோதா சதுசுலோகி" என்ற துதி நூலில் மூன்றாம் சுலோகத்தில் அருளியுள்ளார்.




திருமால் பெயர்களைப் பாடச் சொன்னதன் பின்னணி


திருப்பாவையில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி," "வாயினால் பாடி," "உன் மைத்துனன் பேர் பாட" என்று பல இடங்களிலும் பெயர்களைப் பாடுவதைக் குறித்து நம் கோதை அருளியது ஏன்? இதற்கு இராமானுசரின் வாரிசான பராசர பட்டரின் விளக்கம் ஒன்று உண்டு.

வராக புராணத்தின் ஒரு பகுதி கைசிக புராணம். இந்தப் புராணம் திருமால் உகந்த ஏகாதசி திதி அன்று இரவு முழுவதும் திருமால் பெருமையைப் பாடிவந்த "நம்பாடுவான்" என்ற ஒரு அற்புதமான திருமாலடியார் (சண்டாளர் குலத்தில் உதித்தவர்!) பற்றி இயம்பும்.

நம்பாடுவானைப் பசியில் வாடிய ஒரு பிரமராட்சதன் கொல்ல முயல, அவர் “திருமாலைப் பாடிய பின் உனக்கு உணவாகின்றேன்” என்று 18 சபதங்கள் செய்து ராட்சதனிடம் விடைபெற்று, இரவு முழுவதும் திருமால் பெருமையைப் பாடி, மனித உருவில் வந்த இறைவன் “உயிர் தப்ப வாக்கினைத் தவறுவது குற்றமாகாது” என்று கூறியும் அதை மறுத்து, தாம் அளித்த வாக்கினை மெய்ப்பிக்க ராட்சதன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்.

பிரமராட்சதன் “பாடிய பாடல்களின் நற்பயனை எனக்கு அளித்தால் உன்னை விடுவேன்” என்று பல முறை நயமாகப் பேசியும் நம்பாடுவான் தாம் செய்த இறைச்சேவையைத் தம் உயிருக்கு விலை பேசவில்லை. அதிர்ந்த பிரமராட்சதன் நம்பாடுவானின் அடி பணிந்து “இந்தக் கொடிய ராட்சதப் பிறவியிலிருந்து எனக்கு முக்தி அளிப்பீர்” என்று கெஞ்ச, நம்பாடுவானும் கருணையுடன் தாம் பாடிய கைசிகப் பண்ணில் அமைந்த பாடலின் நற்பயனை அளித்தார். பிரமராட்சதனும் நற்குடியில் ஒரு அடியாராகப் பிறந்து இறுதியில் மோட்சத்தை அடைந்தார்.

திருமால் நம்பாடுவானுக்கு இந்திரலோகத்துச் சுகங்களை அளித்தபோதும் அவர் சுவர்க்கத்திலும் எம்பெருமானின் பெருமையையே பாடி இருந்தார். மற்ற தேவர்களையும் பாட்டு கேட்கும் படிச் செய்தார். இறுதியில் மோட்சத்தை அடைந்தார்.

எம்பெருமான் "கைசிக புராணத்தை என் சந்நிதியில் வாசிப்பவனும் கேட்பவனும் என்னை வந்தடைகின்றான்" என்று அருள, இந்தச் சரித்திரத்தை மிகவும் விரும்பித் திருச்செவியுற்ற நிலமாமகள் நாச்சியார் பெருமகிழ்ச்சி எய்தியதாக இந்தப் புராணம் கூறுகின்றது. இதுவே ஆண்டாள் "இறைவனின் பெயர்களைப் பாடவேண்டும்" என்று அருளியதன் ரகசியம் என்று பராசர பட்டர் விளக்கியுள்ளார்.




ஆண்டாளின் ஏற்றம் - காரணம்


• உபதேசரத்தினமாலை என்ற ஈடு இணையற்ற நூலில் இராமானுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பிஞ்சாய்ப் பழுத்தாள் (பிஞ்சில் பழுத்தாள் அல்ல!) என்று பாடியதின் முக்கியமான காரணம் குழந்தைப் பருவத்திலேயே ஞானம் மிகுந்து அவளது இயற்கையான, என்றுமே எள்ளளவும் மாறாத நாயகி மனநிலையைப் பற்றியே என்று பெரியோர்கள் அருளியுள்ளார்கள்.

நாச்சியார் திருமொழியின் முதல் பதிகத்திலேயே ஐந்தாம் பாடலில்:

i. “சங்கும் ஆழியும் ஏந்திய புருடோத்தமனுக்கு மட்டும் என் ஆன்மாவும் உடலும்” என்று அறுதியிடுகின்றாள் பட்டர்பிரான் கோதை.

ii. “அதை விடுத்து என்னை ஒரு மானுடனுக்கு என்று பேசினாலும் கூட வாழகில்லேன்” என்று பரம கம்பீரமாக முழங்குகின்றாள்!

இது தான் நாயகி மனோநிலையின் உச்ச எல்லை.

• நம் போன்றோரின் கற்பு வெறும் உடல் அளவில்; மனம் அளவில். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் கற்பு உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று கோணங்களிலும் தழைத்து ஓங்கி மிளிர்கின்றது! மெய்யான கொண்டானை அல்லால் அறியாத குலமகள் அவள்! இதனாலேயே ஆண்டாளின் புகழ் ஓங்குகின்றது!

திருப்பாவையில் நம்மையும் நாயகி மனநிலையை முறை தவறாமல் எளிதாகப் பாடிப் பயிலும் படிச் செய்தாள்:

• “நீராடப் போதுவீர்! போதுமினோ!” என்று அனைத்து அடியார்களையும் அழைத்துக்கொண்டு

• “கோயில் காப்பானே!” என்றழைத்து ஆசாரியனை முன்னிட்டுக் கொண்டு

• “நப்பின்னாய்! வந்து திறவாய் மகிழ்ந்து!” என்று திருமகளைப் பற்றிய பின் பூவைப்பூவண்ணனை எழுப்பி “போற்றி” என்று அவனுக்குப் பல்லாண்டு பாடி (பெரியாழ்வார் திருமகளார் அன்றோ!)

• “உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்று வேண்டி நமக்கும் மனம் நிறைந்த ஆசிகளை வழங்கியுள்ளாள்.

தூயோமாய் வந்து சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே நல்ல குருவின் வழிகாட்டுதலின் படி படித்தால்தான் இது விளங்கும்.




முடிவுரை


ஆண்டாளின் திருவவதாரம் பற்றிய பின்னணி, குறிக்கோள் மற்றும் ஏற்றம் ஆகியவை மட்டுமே இவ்வளவு இரகசியங்களை உடையது என்றால் அவளது படைப்புகளின் ஆழ்பொருளை அறிய எவ்வளவு ஞானம் தேவைப்படும் என்று உணரவேண்டும்.


No comments:

Post a Comment