Search This Blog

Wednesday, 16 May 2018

இறைத்தொண்டின் இலக்கணம்


தொண்டு செய்வதின் தலையாய குறிக்கோள்

அந்தணர் குலத்துதித்த விட்டுச்சித்தர் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. எம்பெருமானுக்குத் தொண்டு செய்யும் முன் அவர் செய்த முதல் வேலை - 'ஸ்ரீமத் பாகவதம்' படித்தார். கண்ணபிரான் விரும்பித் தானே கேட்டு பெற்றுக்கொண்டது மாலாகாரர் என்பவரிடம் அழகிய நறுமணம் கமழும் மலர்களால் ஆன பூமாலைகள்! இதனால் கண்ணபிரான் உகப்புக்காக அழகிய நந்தவனம் அமைத்து அன்று அலர்ந்த மலர்களால் பூமாலைகள் காலையில் தொடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உறையும் வடபெருங்கோயிலுடையானுக்கு அளித்தார். அதன் பின் அவர் பெரியாழ்வார் என்று பெயர் பெற்று நிலமாமகளுக்கே திருத்தகப்பனார் ஆனார் என்று நாம் அறிவோம்.

இதே தொண்டினை இராமானுசரின் சீடர் திருமலை அனந்தாண்பிள்ளை என்பவர் இராமானுசரின் மகிழ்ச்சிக்காகத் திருவேங்கடமுடையானுக்குச் செய்து வந்தார். இவருடன் திருவேங்கடமுடையான் பல முறை நேரில் பல திருவிளையாடல்கள் புரிந்தது மட்டும் அல்லாமல் இவருக்கும் அன்னை அலர்மேல்மங்கை ஒரு மகளாக அமையும்படி அருள் புரிந்தான்.

ஒரு முறை திருவரங்கன் அணிந்துகொள்ளும் ஆடைகளைத் துவைக்கும் ஒரு வண்ணான் வகுப்பைச் சேர்ந்தவர் மிகத் தூய்மையாக அவற்றைத் துவைத்து இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்த இராமானுசர் அந்த அடியவரை அரங்கன் முன் நிறுத்தி “இவருக்கு நீர் சிறப்பாக அருள் புரிய வேண்டும்” என்று வேண்ட அரங்கனும் அந்த அடியவரின் குலத்தையே ஆசீர்வதித்தான் என்று வரலாறு.

தொண்டு செய்வதின் தலையாய குறிக்கோள் குருவின் / இறைவனின் மகிழ்ச்சி - நாம் எந்த தொண்டு செய்தால் அவர்கள் மகிழ்வரோ அதைச் செய்வதே மிகவும் சிறப்பு - இதுவே தன்னலமற்ற தொண்டின் அடையாளம். அனைத்து வகையான தொண்டும் உயர்வானவைதான். இதனாலேயே “ஸ்ரீவைணவர்கள் யாவரும் தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறுவது.


தொண்டருக்குத் தொண்டராய் இருப்பது சாலச் சிறந்தது

இலக்குவன் கானகம் சென்று இராமனுக்குத் தொண்டு புரிந்தபோது

1. மூவரும் வாழ இராமன் விரும்பியபடி பர்ணசாலை அமைத்தார்
2. சீதை விரும்பிய மலர்களைப் பறித்துக் கொடுத்தார்
3. விராதனைப் புதைக்க குழியைத் தோண்டினார்
4. யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் இராமன் ஆணைப்படி சீதைக்கு காவல் இருந்தார்
5. இறுதியில் இராமன் ஆணைப்படி யுத்தத்திலும் பங்கு கொண்டும் தொண்டு புரிந்தார்

எதுவானாலும் இராமனின் நன்மை / மகிழ்ச்சி மட்டுமே குறியாய் இருப்பார். அவர் கோவம் கொண்டாலும் அது இராமனுக்காக இருக்கும்!

பரதன் இராமனின் ஆணைப்படி நாட்டை ஆண்டார். அது இலக்குவன் செய்ததைவிடச் சிறந்த தொண்டு என்பர் பெரியோர் - இலக்குவன் இராமனுக்காகத் தான் இயற்கையாக விரும்பியதைச் செய்தார்; ஆனால் பரதனோ இராமனுக்காகத் தான் இயற்கையாக விரும்பாததையும் (நாட்டை ஆள்வது) செய்தார் அன்றோ?

சத்துருக்கினன் இராமனின் தொண்டனான பரதனுக்குத் தொண்டு புரிந்தார். இதுவே மிகச் சிறந்த தொண்டு என்று ஆழ்வார்களும் ஸ்ரீவைணவ ஆசார்யர்களும் முழங்கியுள்ளனர் - இறைவன் தனக்குச் செய்யும் தொண்டைக் காட்டிலும் தன் அடியார்க்குச் செய்யும் தொண்டையே மிகவும் உகக்கின்றான். தன அடியார்களைக் கண்ணன் “கண்ணான செல்வங்கள்” என்றும் “ஞானிகள் என் உயிர்” என்றும் சிலாகித்துப் பேசியுள்ளான். தன்னையே அவன் “பக்த தாசன்” (“அடியார்க்குத் தொண்டன்”) என்று கூறியுள்ளான். அதனால் திருமாலடியார்க்குச் செய்யும் தொண்டு மிக்க ஏற்றம் உடையது.


No comments:

Post a Comment