Search This Blog

Friday 18 May 2018

தொடர்சங்கிலியான பிறவிகளும் ஆன்ம முன்னேற்றமும்


பிறவி - ஆன்மாவின் நீண்ட பயணத்தில் ஒரு சிறு பகுதி

நாம் எல்லோரும் பல முறை பற்பல சரீரங்களில் பிறந்துள்ளோம்.

ஆனால் பிறந்தவுடன் 'சடம்' என்ற ஒரு காற்று நமது முற்பிறவி நினைவுகளை எல்லாம் (பல குழப்பங்களைத் தவிர்க்க) மறக்கச் செய்கின்றது.

ஒவ்வொரு பிறவியிலும் நமக்கு ஏற்படும் இன்பங்களும் துன்பங்களும் நம்மை அறியாமல் நமது ஆன்மாவில் ‘சம்ஸ்காரங்கள்’ என்ற ‘ஆன்ம பாடங்கள்’ வடிவில் தங்கும்; நம் ஆன்மா பக்குவப்பட உதவும்.

தாயின் கர்ப்பத்தில் வசிக்கும் பொது முற்பிறவிகளின் நினைவுகள் யாவும் இருக்கும்! இறப்பின் பின்னும் மறுபடியும் இந்த நினைவுகள் நமக்கு வரும்! அந்த ஆன்மா ‘இனிமேலாவது நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும்’ என்று அதனுடைய தவறுகளை எண்ணி வருந்தும். இந்த வருத்தம் எப்பொழுது ஒரு இயற்கையான, ஆழமான, மாறாத எண்ணமாகவும் குணமாகவும் அமைகின்றதோ அப்பொழுது ஆந்த ஆன்மா ஒரு மேலான ஞானம் மற்றும் இறை பக்தியில் நாட்டம் உள்ள பிறவியில் பிறக்கும்.


உதாரணம் 1:

நான் இந்தப் பிறவியில் பலரை அச்சமுறச் செய்தேன் எனின் எனக்கு மறுபிறவி ஒருவேளை மானின் பிறவியாக அமையலாம். மான்களுக்கு அச்ச உணர்வு இயற்கையாகவே மேலோங்கி இருக்கும் அன்றோ?

அந்த மானின் பிறவியில் ஒரு ஜீவன் அச்சமுறும்போது அது அடையும் வேதனையை நான் அடைவேன். இதுவே என் ஆன்மாவில் ‘இந்த ஒரு உணர்வை இன்னொருவருக்கு இனிமேல் நிச்சயம் ஏற்படுத்த மாட்டேன்’ என்ற ஒரு இயற்கையான பக்குவமாக வடிவம் பெரும். என் ஆன்மா நல்வழிப்படும்.

ஒரு ஆன்மாவிற்கு இயற்கையாகவே தீவினைகள் மீது வெறுப்பு ஏற்பட இறைவன் செய்த ஏற்பாடு.

புலியாகப் பிறந்தால் கவலை இல்லை என்பதும் கிடையாது! ஏன்? தாயின் வயிற்றிலும், மரணித்த பின்னும் அந்த ஆன்மா புலியின் பிறவியை நினைத்து சொல்லமுடியாத அளவு வருத்தம் அடைவதால்!!


உதாரணம் 2:

நான் இந்தப் பிறவியில் ஏழை எளியோருக்குப் அன்றாடம் அவர்கள் மனதார வாழ்த்தும் வண்ணம் அன்னமிடுகின்றேன் எனின் எனக்கு மறுபிறவி சுவர்க்கத்தில் தேவனாக அமையலாம்.

அங்கு பல இன்பங்களை நுகரும்போது ‘அட! நல்வினைகள் செய்தால் இவ்வளவு பலனா!’ என்று என் ஆன்மா மேலும் நலவினைகள் செய்ய விழையும்.

அந்த சுவர்க்க வாழ்க்கையும் அழியக்கூடியதே, அசுரர்களின் தொல்லைகளால் அவதிகளுக்கு உட்பட்டதே என்று உணர்ந்தால் மோட்சத்திலேயே நாட்டம் ஏற்படும் பக்குவமும் அடைய ஒரு வாய்ப்பு.


'பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை' - ஏன்?

எந்தப் பிறவியில் செய்த வினை எந்தப் பிறவியில் பலன் தரும் என்பதை நிர்ணயிப்பது (இறைவனின் ஆணைப்படி இயங்கும்) 33 கோடி தேவர்கள். எந்த எந்த வினைகளின் கலவை ஒரு பிறவியில் நமக்கு தலையெழுத்தாக எழுதப்படும் என்பது நம் கையில் இல்லை.

"இதனால் எப்போதுமே தாவரமாகவோ விலங்காகவோ மனிதராகவோ பிறப்பது வீணோ? தேவர்களாகப் பிறப்பதே சிறப்போ?" என்ற எண்ணம் முற்றிலும் தவறு. ஏன்? எந்த ஆன்மாவிற்கு எப்போது எந்த வடிவில் இறைவன் அருளால் நன்மை அமையும் என்பதைச் சொல்லமுடியாது. ஒரு மகானின் அருட்பார்வை மட்டுமே பற்பல முற்பிறவிகளின் தீவினைகளைத் தவிடுபொடி ஆக்கிவிடும்!

அஜாமிளன் என்பவர் முதலில் புலன்களை அடக்கிய அந்தணராக இருந்து, தடம் மாறி, இறுதியில் நாராயண நாமத்தை பிள்ளையைக் கூப்பிடும் சாக்கில் உச்சரித்து நற்கதி பெற்றார்! இதனாலேயே நம் பெரியோர்கள் 'நல்லோர்களுடன் பழகு,' 'சாத்திரங்களை மதித்து நட,' 'உன்னால் ஆன நல்வினைகளைத் தவறாமல் செய் - எதுவும் வீண் போகாது,' 'இறைவனை அன்புடன் வணங்கு' போன்ற அறிவுரைகளைக் கூறுகின்றனர்.

கேரளத்தில் பூந்தானம் நம்பூத்திரி என்ற ஒரு ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர். ஒரு நாள் இரவு அவர் வீட்டு வாசலில் இருந்த 2 பலா மரங்கள், திருமாலின் பெருமையைக் கூறும் அவருடைய உரைகளை அனுதினமும் கேட்டு மோட்சம் அடைவதாகக் கனாக் கண்டார்! மறு நாள் அந்த மரங்கள் இரண்டும் உலர்ந்து சாய்ந்து இருக்க நம்பூத்திரியும் கண்டு வியந்தார்.

கஜேந்திரன் என்கிற யானை முற்பிறவியில் நம் பாண்டிய நாட்டு மன்னர்!! அவரது பெயர் இந்திரதியும்னன். சிறந்த திருமால் பக்தர். அகத்தியரின் சாபத்தால் யானை ஆனார். முற்பிறவி அவருக்கு நினைவு இல்லை. இருப்பினும் ஆன்ம அளவில் திருமாலின் நினைவு போகவில்லை, மாறவில்லை!!! மனிதரும் தேவரும் போற்றும்படி யானைப் பிறவியில் மோட்சம் அடைந்தார்!

தேவர்கள் சுவர்க்கத்தின் இன்பங்களில் மூழ்கி இருக்க, அவர்கள் காண மனிதப் பிறவி அடைந்த எவ்வளவு ஆன்மாக்கள் மோட்சம் அடைந்து தேவர்களாலும் வணங்கப்பெற்றனர்!!

இதனால் எந்தப் பிறவியையும் இகழ்தல் மாபெரும் தவறு. ஆன்ம முன்னேற்றத்திற்கு எந்த ஒரு குறிப்பிட்ட பிறவியும் தடை அல்ல. அடியார்களின் பிறவியை ஆராய்வது கொடிய தவறு. ஏதோ காரணத்தினால் அவர்களது ஆன்மா ஒரு குறிப்பிட்ட உடலில் இருந்தபோதும் அவர்களது ஞானமும் குணமும் தான் முதலிடம் பெறும்.


No comments:

Post a Comment