Search This Blog

Friday 11 May 2018

அவதாரங்கள்


ஸ்ரீவைணவப் பெரியோர்கள் அருளியபடி அவதாரங்கள் பற்றிய சில விளக்கங்கள்


ஸ்ரீவைணவத்தில் ஜீவாத்மாக்களை நித்தியர்கள், முக்தர்கள் மற்றும் பத்தர்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பர்.

அவதாரம் என்றால் என்ன?

அவதாரம் என்ற வடசொல்லுக்கு "இறங்கி வருதல்" என்று பொருள். பரம்பொருளின் வடிவங்களை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளனர்.

நிலை விளக்கம்
பரம்
1. மோட்சம் பெற்றோர் செல்லும் உலகமான திருநாடு என்கிற பரமபதத்தில் இருக்கும் நிலை.

2. திருமாமகள், நிலமாமகள், ஆயர்மாமகள் முதலான தேவிமார்களுடன் நித்தியர்களும் முக்தர்களும் புடைசூழ வீற்றிருப்பார்.

3. நம் போன்றவர்கள் முக்தர்கள் ஆகும் போது மட்டுமே காண முடியும்.

வியூக அவதாரம்
1. இவ்வுலகிலேயே இருந்தாலும் நாம் வாழும் பூமிக்கு வெளியே உள்ள திருப்பாற்கடலில் இருக்கும் நிலை.

2. தேவர்கள் முனிவர்கள் போன்றோரின் குறை கேட்கவே, திருமாமகள் பாதங்களைப் பிடிக்க, நாகணை மேல் கிடந்திருப்பார்.

3. நம் போன்றவர்கள் இவ்வுலகில் இருந்தாலும் அங்கே செல்ல இயலாது.

4. மோட்ச உலகத்து அதிபதி தேவர்களுக்காக இறங்கி வந்துள்ளதால் இதுவும் ஒரு அவதாரம்.

விபவ அவதாரம்
1. பிறப்பே இல்லாதவர் பிறவியை ஏறிட்டுக்கொள்வார்.

2. கோசலை, தேவகி போன்ற ஜீவர்களின் பெருமையை நம் போன்றவரும் அறிய ஒரு தாய் வயிற்றில் இருந்து இராமனாகவும் கண்ணனாகவும் பிறப்பதும் உண்டு. அல்லது நேரடியாகவே வராகமாகவும் நரசிங்கமாகவும் தோன்றுவதும் உண்டு. இரண்டு வகையிலுமே நம் போன்று "நல்வினை தீவினை என்றவற்றால் பிறப்பு" என்பது போல் அல்லாமல் தம்முடைய இச்சை மட்டுமே காரணமாகப் பிறப்பார்.

3. இரண்டு வகையிலுமே அவருடைய திருமேனி (உடல்) நமது உடல்கள் பஞ்சபூதங்களால் செய்யப்பட்டது போல் அல்லாமல் அவரது உண்மையான திருமேனியுடன் பிறப்பார். இருப்பினும் கர்ப்பவாசம் செய்ததாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ அவரது மோட்ச உலகத் திருமேனிக்கு எந்த அழுக்கும் ஏற்படாது.

4. சில அவதாரங்களில் அவரது செயல்களை நம்மில் ஒருவனாகவே அமைத்துக்கொள்வார். சில அவதாரங்களில் அவர் பரம்பொருள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துவார். பெரும்பாலும் அவதார ரகசியம் என்ன என்பதைப் பொறுத்தும் சில நேரங்களில் அவரது விளையாட்டு ரசனையைப் பொறுத்தும் இது வேறுபடும்! அச்சம், சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது இதனாலேயே என்பதை அறிதல் அவசியம். பரமனுக்கு அச்சமாவது சோகமாவது!!

5. மகிமையின் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கலாம்:

i. சாட்சாத் அவதாரங்களில் தாமே வந்து பிறப்பார் (இராமன், கண்ணன்). இதுவே வழிபடுவதற்கு உரியது.

ii. சொரூப ஆவேச அவதாரங்களில் ஒரு ஜீவாத்மாவின் உள்ளிருந்து சில காலம் செயல்பட்டு பின் வெளியேறிவிடுவார் (பரசுராமன்).

iii. சக்தி ஆவேச அவதாரங்களில் ஒரு ஜீவாத்மாவில் தனது சக்தியை மட்டும் செலுத்தி சில காலம் செயல்பட்டு பின் தனது சக்தியைத் திரும்பப் பெறுவார்.

அந்தர்யாமி
1. ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளும் - அது நித்தியரோ / முக்தரோ / பத்தரோ அல்லது தேவரோ / அசுரரோ / மனிதரோ / விலங்கோ / தாவரமோ - நம் ஆன்மாவின் ஆன்மாவாக இருப்பார்.

2. பொதுவாக யோகிகளுக்குத்தான் இந்த நிலையில் உள்ளிருந்தே பூரணமாகக் காட்சி அளிப்பார். ஆனால் யோக மார்க்கதில் இல்லாத வெகு சில பக்தர்களுக்கும் அதுபோல காட்சி அளித்தது உண்டு.

3. பொதுவாக நம் கர்ம வினைப்படித்தான் நமது புத்தியைச் சத்வம் / ரஜஸ் / தமஸ் ஆகிய குணங்களில் செல்லும்படி செய்வார். ஆனால் நல்வழிகாட்டும்படி வேண்டுவோருக்கு மிகவும் அன்புடன் செயல்பட்டு ஆன்மீக முன்னேற்றங்களை அருளுவார்.

அர்ச்சை அவதாரம்
1. அர்ச்சிக்கப் படுவது அர்ச்சை. அடியார்கள் உகந்த ஒரு சிலையாகவோ (கல், உலோகம், மரம் போன்ற எதுவாயினும் சரி) படமாகவோ பூரண மகிமையுடன் எழுந்தருள்வார். சிலைக்குள் / படத்துக்குள் அவர் இல்லை - அந்தச் சிலையே / படமே அவர். இந்த அறிவு மிகவும் அவசியம்.

2. இந்த நிலையில் பொதுவாக அசைவதோ பேசுவதோ செய்யமாட்டார். ஆனால் இராமானுசர், திருக்கச்சி நம்பிகள், கனகதாசர் போன்ற மகான்களுக்கு இந்த விதியைத் தளர்த்திக்கொண்டதும் உண்டு.

3. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் மதிப்புடனும் அவரை நடத்துகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் கோயிலிலோ வீட்டினிலோ பூரண மகிமையுடன் நம் தேவைகளை எல்லாம் கவனித்துக்கொள்வார்.

4. நம்மில் பலர் "கடவுளை நான் நேரில் பார்த்ததில்லை" என்றே எண்ணுகின்றோம். உண்மையில் அவரைப் பற்பல முறை திருவரங்கம், திருவேங்கடம் போன்ற திருத்தலங்களிலும் நம் இல்லங்களிலும் காண்கின்றோம்!!! அதை ஆழ்ந்து சிந்தித்து மனப்பூர்வமாக உணர்ந்தால் அதுவே மிகப் பெரிய ஞான முன்னேற்றம்.




அவதாரங்கள் - மேலும் சில உண்மைகள்

1. பிரபலமான முக்கிய அவதாரங்கள் பத்து. உண்மையில் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை.

2. மேற்கூறியவற்றிலிருந்தே அவதாரங்களின் தோற்றம் மற்றும் மறைவு ஆகியவை ஒரு விளையாட்டாகவே கடவுள் செய்கின்றார் என்று புரியும். அதனால் அவர் ஏன் / எப்படி பிறந்தார், ஏன் / எப்படி மறைந்தார் என்று ஆராய வேண்டியதில்லை என்று புலப்படும். அவதாரத்தை முடித்துக்கொள்வதும் அவருடைய விருப்பப்படிதான். கண்ணனாக ஒரு வேடன் விடுத்த அம்பினால் அவதாரம் முடிந்ததுபோல் ஒரு விளையாட்டு. துருவன் என்கிற சிறுவனுக்கு அருள் செய்ய இறங்கியபோது அருள் செய்தபின் அவன் பார்க்க அப்படியே "காற்றுடன் கலந்தாரோ?" என்னும்படி மறைந்தார்.

3. ஒரு நிலையில் அவதாரம் செய்ததால் மற்ற நிலைகளில் காணாமல் போய்விடமாட்டார் (உதாரணம்: இங்கே இராமனாகப் பிறந்தால் திருப்பாற்கடலிலோ பரமபதத்திலோ இல்லாமல் போய்விடமாட்டார்). ஒரே நேரத்தில் ஐந்து நிலைகளிலும் பூரண மகிமையுடன் இருப்பார்.

குறிப்பு: இது போன்ற சக்திகள் அவருடைய அன்பர்கள் (அதாவது திருமகள் போன்ற தேவிமார்கள் மற்றும் அனந்தன் போன்ற நித்தியர்கள் ஆகியோர்) அவதாரம் செய்யும்போதும் பொருந்தும்.


No comments:

Post a Comment