இராமனின் மாவீரத்தைப் பற்றிக் கேள்வியுற்று அந்த இராமனை நேரில் சந்திக்கத் துணிவின்றி அவன் மனைவியைத் திருட்டுத்தனமாகக் கவர்ந்தவன் இராவணன். அந்த இராவணன் போரில் ஆயுதம் இழந்து நிற்கும்போதும் "கிடைத்தது வாய்ப்பு" என்று அவனை வீழ்த்தாமல் "இன்று போய் நாளை வா" என்று தருமமும் கனிவும் தோற்றச் சொன்னவன் இராமன்.
"இவ்வளவு நேரம் (அழகியென பெயர் பெற்ற) நான் பேசும்போதும் மாற்றான் மனைவி என்பதால் என்னை ஒரு முறையும் பாராமல் தலை குனிந்து நிற்கும் நீ அல்லவா புலன்களை வென்றவன்!" என்று வாலியின் மனைவி தாரை வாலியைக் கொன்ற இராமனைப் போற்றுகின்றாள். இதுவன்றோ திருவள்ளுவர் மொழிந்த பேராண்மை?
இந்நாளில் உள்ள சிலருக்கு ஆழ்வார்கள் எதிரிகள் என்று பாகுபாடின்றி எல்லோராலும் போற்றப்பெற்ற நற்குணக்கடலான இராமனை விட்டு அவனை எதிர்த்த இராவணன் மீது ஒரு இனம் புரியாத பாசம்! இந்தப் பாசம் இவர்களின் அறிவுக்கண்ணை முழுவதுமாக மறைக்கின்றது!
முன்பே ஒரு முறை "அலர்மகள் அன்பன் அசுரரையும் அரக்கரையும் அவமதித்தானா?" என்ற கட்டுரையில் சூர்பணகையைப் பற்றிய உண்மைகள் சிலவற்றை எழுதியிருந்தேன். இந்தக் கட்டுரையில் அவளது அண்ணன் இராவணனின் "பெருமைகளைப்" பார்ப்போம்!
இராவணன் கடைந்தெடுத்ததொரு பெண்பித்தன், அதருமம் செய்பவன்
1. இராவணன் தன் வாயாலேயே தனது பெண் பித்தைப் பற்றிக் கூறியது - வால்மீகி இராமாயணம், யுத்த காண்டம், 13 சர்கம்:
அனுமன் இலங்கையை எரித்தபின் இராவணனின் மந்திரி ஆலோசனைக் கூட்டத்தில் அவனது மந்திரிகளுள் ஒருவனான மகாபார்சுவன் "அரசே! தாங்கள் ஏன் சீதை பலாத்காரமாக அனுபவித்தல் ஆகாது?" என்று 'ஆலோசனை' (?!) கூற அதற்கு இராவணன் அவனை உகந்து (!!) பின்வருமாறு கூறினான்:
"முன்னொரு நாள் நான் புஞ்சிகஸ்தலை என்றவளை அவள் விருப்பமின்றி புணர்ந்தேன். அவள் மிகவும் நொந்து பிரம்மனிடம் முறையிட "இனிமேல் இராவணன் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகப் புணர்ந்தால் அவன் தலை நூறு துகள்களாக வெடிக்கும்!" என்று அவர் சாபம் இட்டார். இதுவே நான் பேசாமல் இருப்பதன் காரணம்."
2. இராவணனின் வழிபாட்டுத் தெய்வமான சிவபெருமான் இராவணனின் அதருமம் பற்றி (அவனது மரணம் நிகழ்ந்தபின்) இராமனிடம் கூறியது - யுத்த காண்டம், 119 சர்கம்:
தாமரைக்கண்ணா! நெடுந்தோளா! பரந்த மார்பை உடையவனே! எதிரிகளை அழிப்பவனே! தருமம் காப்போரில் சிறந்தவனே! இந்த நல்ல காரியத்தை முடித்தனை! நன்று! இராம! உலகெங்கும் இராவணனால் ஏற்பட்ட பயம் என்ற கன இருள் இன்று உன்னால் போர்க்களத்தில் அகன்றது.
இராவணனின் போக்கு எல்லோரும் அறிந்ததே
இராமன் மீது அன்புள்ளவர்களான சீதை, ஜடாயு, அனுமன், விபீடணன், அங்கதன் ஆகியோர் இராவணனின் அதருமம் / பெண் பித்தைச் சுட்டிக்காட்டி அவனுக்கு அறிவுரை கூறியது ஒரு புறம் இருக்கட்டும். இராவணனின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் இதையே கூறியுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.
பெயர் | இராவணனுடன் உறவுமுறை | இராவணனின் அதருமம் / பெண் பித்தைப் பற்றி கூறியதன் சுருக்கம் | இராமாயண காண்டம் / சர்கம் |
மாரீசன் | மாமன் | சீதையை அடைவதும் இராமனை வெல்வதும் நடவாத காரியங்கள். கேட்பாரின்றி, தன்னிச்சையாகத் தீய எண்ணத்துடன் இலங்கை நாடு மற்றும் அவளது மடியில் வசிக்கும் அரக்கர் குடிக்குக் கேடு வரும் வண்ணம் செயல்படுகின்றாய். விபீடணனை முன்வைத்து தருமம் அறிந்த மந்திரிகளுடன் கலந்தாலோசித்து உனக்கும் அரக்கர் குலத்துக்கும் எது நன்மையோ அதையே செய். | ஆரண்யம், 37 |
கும்பகர்ணன் | தம்பி | பதவிச் செருக்கால் உனது நலனை உபதேசம் செய்தோரை அவமதித்து, எதை முதலில் செய்யவேண்டும் என்ற மதியின்றி, அரசனுக்கு உரிய அறிவின்றி, அதருமம் வழி நடந்து இப்போது அதற்கான விளைவுகளைக் காண்கிறாய். விபீடணன் முன்னால் நமக்கு எடுத்துச் சொன்னதே சரி. சிந்தித்து உன் விருப்பம் போல் செயல்படுவாய். | யுத்தம், 63 |
மால்யவான் | தாய்வழிப் பாட்டன் | புலன்களின் இன்பங்களை நுகர்வத்தில் நோக்கம் உள்ள நீ, தருமத்தின் பாதையில் செல்லும் முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளாய். அரக்கர்கள் அழியப்போவதைக் காட்டும் பல சகுனங்களைக் காண்கின்றேன். சீதையை இராமனிடம் ஒப்படைத்துச் சமாதானம் செய்துகொள். | யுத்தம், 35 |
மண்டோதரி | முதல் மனைவி | என் அன்புக்கு உரியோய்! உன் தாய் போன்றவளும் மிக உயர்ந்தவளுமான சீதையின் விருப்பமின்றி அவளைச் சிறை வைத்தாய். தருமம் தவறி கொடியன செய்தாய். என் தந்தையின் பேச்சையும் என் பேச்சையும் அலட்சியம் செய்தாய். உனக்கு நல்லதையே எடுத்துச் சொன்ன விபீடணன், கும்பகர்ணன் போன்ற உன் நலம் விரும்பிகளையும் கடுமையாக ஏசினாய். ஆசையினால் மதியிழந்து உன்னையும் உன் மனைவிகளையும் இலங்கையையும் அழித்தாய். கரனை அழித்தபோதே, இராமதூதன் அனுமன் இலங்கையை எரித்தபோதே, கடலில் அணை கட்டியபோதே இராமன் ஒரு அற்ப மானுடன் அல்ல என்பது விளங்கவில்லையா? அவன் பரம்பொருள் என்று உன்னை வீழ்த்தியதால் அறிந்தேன். | யுத்தம், 110-111 |
மேற்கூறியவற்றிலிருந்து இராவணன் பெண்பித்தன் மட்டும் அல்ல சுயநலம் பிடித்த மதிகேடன் என்பதும் விளங்கும்.
சூர்ப்பணகை "உனக்காக நான் சீதையை எடுத்துவர முயன்றபோது என்னை இராமனும் இலக்குவனும் இப்படிச் செய்துவிட்டனர்" என்று கூறியது பெரும்பொய் என்றாலும் அவள் இவன் ஒரு பெண்பித்தன் என்பதை அறிந்தே அவனைத் தூண்டும் வண்ணம் இதைச் சொன்னாள். இவனது உண்மை முகம் இவனது உற்றார் உட்பட எல்லோரும் அறிந்ததே.
முடிவுரை
இராவணனின் வழிபாட்டுத் தெய்வமான சிவபெருமான் உட்பட எல்லோருமே இராவணனின் பாதை அதருமம் என்று கண்டித்துள்ளனர். தருமம்-அதருமம் ஆகிய இரண்டின் மோதலாகத்தான் இதைப் பேசியுள்ளனர். இதில் ஆரிய-திராவிட மோதல் எங்கிருந்து வந்தது???
அது சரி. பிரமனின் மனதிலிருந்து தோன்றிய முனிவருள் ஒருவர் புலத்தியர். அவரது புதல்வன் விச்ரவசு. அந்த விச்ரவசுவின் புதல்வன் இராவணன். ஆகவே இராவணன் ஒரு பார்ப்பனன். கதிரவன் குலத்துதித்த தயரதன் என்ற அரசன் பெற்ற புதல்வன் இராமன். ஆகவே இராமன் க்ஷத்திரியன். இந்த எளிய உண்மையையே புரிந்துகொள்ள முடியாதவரிடம் மேற்கூறிய உண்மைகளைப் பேசி என்ன பயன்?
தங்கள் கண்களை மூடிக்கொண்டதால் உலகம் இருண்டதாக நம்புவர்களிடம் என்ன சொல்வது?? இப்படிப்பட்டவருக்கு அன்னை சீதையின் அருளால் இராமபிரானின் அருட்பார்வை கிட்டட்டும்.
No comments:
Post a Comment