1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இராஜபாளையத்தில், கடந்த மார்கழி (Dec 2017 - Jan 2018) மாதத்தில், 'தினமணி' நாளிதழின் ஏற்பாட்டில், கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற பெயரில் ஒரு கட்டுரையை வரைந்து வாசித்தார் என்பதும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில வாக்கியங்கள் மிகப்பெரியதொரு சர்ச்சயை ஏற்படுத்தியதும் பலரும் அறிந்ததே.
அரசியல்வாதிகள், தொலைக்காட்சிகளில் சில பிரபலங்கள், தமிழ்த் திரைப்படத் துறையினர் சிலர், சமூக வலைத்தளங்களில் பலர் என்று பலதரப்பினர் இதற்கு ஆதரவோ அல்லது கண்டனமோ தெரிவித்தனர்.
ஆண்டாள் பக்தர்கள் பலர் இக்கட்டுரையைக் கண்டித்தனர் - குறிப்பாக "ஆண்டாள் என்பவள் ஸ்ரீரங்கம் கோயிலில் வாழ்ந்து மறைந்த ஒரு தேவதாசி" என்று மேற்கோளாகக் காட்டிய வாக்கியத்தைக் கண்டித்தனர். கட்டுரையின் ஆசிரியர் வைரமுத்துவும் கட்டுரையை வெளியிட்ட நாளிதழான 'தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களும் அன்னை ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இக்கட்டுரையைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கியிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகளின் கோரிக்கைப்படி வைத்தியநாதன் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னை ஆண்டாளிடம் நேரடியாகவே மன்னிப்பு கேட்டார்.
கட்டுரையின் ஆசிரியர் வைரமுத்து 'இக்கட்டுரை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகின்றேன்' என்று பிரபல சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். பின்பு அவர் வெளியிட்ட ஒரு காணொளியில் அவர் கூறியதில் உள்ள ஒரு சில கருத்துக்களின் சுருக்கம்:
"எனக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்தத் தமிழச்சியான ஆண்டாளும் எனது அன்னையே. அவளைப் பற்றிப் பல பார்வைகளில் பல மேற்கோள்களைக் காட்டிய நான், அவளைச் சமூகவியல் பார்வையிலும் பார்த்ததால், அதற்குரிய மேற்கோள்களையும் காட்டினேன். 'தேவதாசி' என்பது கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்த உயர்குலப் பெண்களைக் குறிக்கும் சொல். அது 'தாசி' என்றும் 'வேசி' என்றும் திரிக்கப்பட்டுத் தவறாகப் பரப்பப்படுகின்றது. நான் தவறாக எதுவும் கூறவில்லை. அந்த மேற்கோளை எடுத்த மூலத்திலும் அவளை இழிவுபடுத்தவில்லை. என் பேச்சை நேரில் கேட்டோரும் என்னைப் பெரிதும் பாராட்டினர். இருப்பினும் செய்யாத தவறுக்கு மனிதாபிமானத்தால் நான் வருத்தம் தெரிவித்தேன். தினமணியும் அதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. மதவாதிகள் கலவரத்தைத் தூண்டும் வண்ணம் இதைப் பெரிதுபடுத்துகின்றனர். தமிழ்ச் சமூகம் ஞானச் சமூகம். புரிந்துகொள்ளும்."
வைரமுத்துவின் வாதத்திற்குப் பலரும் (வேற்றுமதத்தைச் சேர்ந்த பெயர்களுடையயோர் உள்பட!) ஆதரவு தெரிவித்தனர். அவற்றுள் அரசியல் கலந்த பற்பல கருத்துக்களும் கூறப்பட்டாலும் இந்தக் கட்டுரையைக் குறித்து மட்டுமே எழுந்த கருத்துக்களை இங்கே பட்டியலிடுகின்றேன்:
1. "வருத்தம்தான் தெரிவித்தாரே! பின்னும் என்ன போராட்டம்?"
2. "மேற்கோள் தவறு என்றால் அதை அறிவுப்பூர்வமாக நிரூபிக்கலாமே! ஏன் இவ்வளவு கூச்சல்?"
3. "மேற்கோள் தவறு என்றால் வைரமுத்துவை மட்டும் சாடுவானேன்? அந்தக் கட்டுரையை எழுதியவரையும் சாடவேண்டும் அல்லவா?"
4. "இந்த ஒரு தவறான மேற்கோளை மட்டும் காரணம் காட்டி மற்றபடி அக்கட்டுரை ஆண்டாளைப் புகழ்கின்றது என்பதை மறுப்பது ஏன்?"
5. "ஆண்டாளின் பாடல்களுக்கு வைரமுத்துவின் கண்ணோட்டத்தில் பொருள் கூறுவதில் என்ன தவறு?"
6. "ஆண்டாளின் பாடல்களில் பாலுணர்வு வெளிப்படுகின்றதே. வைரமுத்து கூறியதில் என்ன தவறு?"
வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையில் ஆன்மீக ரீதியில் அப்படி என்னதான் தவறு இருக்கின்றது?? இந்தக் கேள்விக்கு விடை காணவேண்டும் என்றால் ('இந்து மதம்' என்று அழைக்கப்படும்) சனாதன தருமம் பற்றியும் ஸ்ரீவைணவம் பற்றியும் பல அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவை என்ன? தொடர்ப்பதிவுகளில் பார்ப்போம்.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment