Search This Blog

Thursday, 26 July 2018

5. வைரமுத்துவின் கட்டுரை ('தமிழை ஆண்டாள்') - ஆன்மீகத் தவறுகள் - முடிவுரை


   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   





1. "வருத்தம்தான் தெரிவித்தாரே! பின்னும் என்ன போராட்டம்?"

2. "மேற்கோள் தவறு என்றால் அதை அறிவுப்பூர்வமாக நிரூபிக்கலாமே! ஏன் இவ்வளவு கூச்சல்?"

3. "மேற்கோள் தவறு என்றால் வைரமுத்துவை மட்டும் சாடுவானேன்? அந்தக் கட்டுரையை எழுதியவரையும் சாடவேண்டும் அல்லவா?"

4. "இந்த ஒரு தவறான மேற்கோளை மட்டும் காரணம் காட்டி மற்றபடி அக்கட்டுரை ஆண்டாளைப் புகழ்கின்றது என்பதை மறுப்பது ஏன்?"

5. "ஆண்டாளின் பாடல்களுக்கு வைரமுத்து அவரது கண்ணோட்டத்தில் பொருள் கூறுவதில் என்ன தவறு?"

6. "ஆண்டாளின் பாடல்களில் பாலுணர்வு வெளிப்படுகின்றதே. வைரமுத்து கூறியதில் என்ன தவறு?"


1. தெரியாமல் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தால் இந்தக் கேள்வி சரியானதே - மனமார்ந்த வருத்தம் மட்டுமே போதும். ஆனால் வைரமுத்து எழுதியிருப்பதைப் படித்தால் எதையும் தெரியாமல் செய்யவில்லை என்பது தெளிவு. திட்டமிட்டுத்தான் செய்திருக்கின்றார்.

2. மேற்கோள் தவறு என்பதை அறிவுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். "கூச்சலு"க்குக்கான மிக முக்கிய காரணம் நாயகி மனோபாவத்தைப் பற்றிய "பாலியல் சொல் விடுதலை (?) ஆராய்ச்சி" என்ற பெயரில் வைரமுத்து செய்த தூற்றுதல்.

3. அப்படி ஒரு உளறல் எழுதப்பட்டதே வைரமுத்து சொல்லித்தான் தெரியும்! அதை எழுதியவரையும் பல ஸ்ரீவைணவர்கள் கண்டித்துப் பேசினர் - இது பொதுமேடைகளுக்கோ ஊடகங்களுக்கோ எட்டவில்லை.

4. வைரமுத்துவின் கட்டுரையில் அவர் ஆண்டாளை மட்டும் அல்ல ஸ்ரீவைணவ ஆசாரியர்கள், ஆழ்வார்கள், அவதாரங்கள், மறைகள் என்று எதையுமே விட்டுவைக்கவில்லை - எல்லோரையும், எல்லாவற்றையும் தாழ்த்திப் பேசி இருக்கின்றார்.

5. பொருள் கூறுவதே தவறு இல்லை - தவறான, தரம் தாழ்ந்த பொருள் கூறுவதுதான் தவறு.

6. ஆன்ம ஞானமின்றி மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித் தோற்றும் அப்பாசுரங்களுக்கு உண்மைப் பொருளை அறியாமல், மனம் போன போக்கில் கொச்சையாகப் பொருள் கூறியதுதான் தவறு - திருவள்ளுவர் அருளியது போல் "எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு."


வைரமுத்து கூறும் கருத்துக்கள் பலருக்கும் சென்று சேரும் - அவர் சராசரி மனிதரைவிட இரு மடங்கு கவனமாக இருத்தல் அவசியம். வைரமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற அடிப்படை பண்பே இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கதும் கூட. மத உணர்வுகளைப் புண்படுத்துவது சட்டப்படிக் குற்றம்!

எங்கள் சனாதன தருமத்தைப் பற்றியோ தெய்வங்களைப் பற்றியோ வைரமுத்துவும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தரம் தாழ்ந்த தவறான “ஆராய்ச்சிகள்” செய்து நேரத்தை வீண் அடிக்காமல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் தமிழை மட்டும் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் அல்லது நாத்திகம் உட்பட அவரது மதக் கொள்கைகளின் பெருமைகளைப் பேசும் கட்டுரைகள் எழுதலாம். அப்படிப்பட்டவர்களுக்கு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.




சனாதன தருமத்தைச் சேர்ந்த வாசக அன்பர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்

இந்தக் கட்டுரையை எழுதியதன் முக்கிய காரணமே சில மிக முக்கியமான உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளத்தான்.

"இது போன்ற தவறான செய்திகளுடன் எப்படி ஒருவர் எளிதாக எழுதிவிடமுடிகின்றது?" என்றால் நமக்கே அவை தவறானவை என்று தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம். நம் மதக் கோட்பாடுகள் யாவை, அவற்றை ஏன் பின்பற்றவேண்டும் என்று நமக்குத் தெரிந்தால் இது போன்ற தவறான கருத்துக்களைத் தாங்கி வரும் கட்டுரைகளை நாம் சீண்டமாட்டோம். வாசகர்களிடம் இது விலைபோகாது என்று தெரிந்தால் ஏன் இவ்வாறு எழுதப்போகின்றனர்?

1. வைரமுத்துவின் கட்டுரையில் சனாதன தருமம் / ஸ்ரீவைணவம் குறித்த 27 தவறுகள் உள்ளன - "தேவதாசி என்ற ஒரு சொல்லும் ஆதாரமற்ற உளறலான ஒரு மேற்கோளும் மட்டுமே அந்தக் கட்டுரையில் உள்ள தவறுகள்" என்பது தவறான புரிதல்.

2. நமது தெய்வங்களை மட்டும் அல்ல நமது குருமார்களையும் (ஆழ்வார்கள் நாயன்மார்கள் உள்பட) அவர்கள் அருளிய புனித நூல்களையும் ஒருவர் இகழ்வதும் தவறுதான்; உண்மையில் இது தெய்வங்களைப் பழிப்பதைவிட மிகப் பெரியதொரு தவறு!! அந்தப் புனித நூல்களில் உள்ள கருத்துக்களைக் "கருத்துச் சுதந்திரம்" என்ற போர்வையில் கொச்சைப்படுத்தித் திரித்துப் பேசுவதும் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டிய தவறுதான்.

3. நாயகி மனோபாவம் பற்றிய தெளிவு நம் எல்லோருக்கும் நிச்சயம் இருக்கவேண்டும் - சிருங்கார ரசம் இருப்பதால் இது மிக எளிதாகத் தவறாகப் புரிந்துகொண்டுவிடக் கூடிய ஒரு ஆன்மீக நிலை. எண்ணம் தூயதாக இருந்தும் தவறான விளக்கங்கள் அளித்துவிடக்கூடிய சாத்தியக்கூறு மிக அதிகம்! ஞானியரிடம் பொறுமையுடன் கேட்டு, சிந்தித்து, புரிந்துகொண்டு, அடுத்த தலைமுறையினருக்கும் தெளிவாகவும் சரியாகவும் புரியவைக்கவேண்டும்.

4. அவதாரங்களைப் பற்றியும் மிகச் சரியான புரிதல் அவசியம் - திருக்கோயில்களில் வீற்றிருக்கும் திருமேனிகளும் அவதாரங்கள் - கல்லுக்கு "உள்" தெய்வம் இல்லை - அது தெய்வம்தான். கல் / உலோகம் / மானுடன் / மானுடச்சி என்றெல்லாம் நம் தெய்வங்களை ஒருவர் அழைப்பது தவறு - கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

5. இறையடியாராக இருக்க மொழியோ வருணமோ ஒரு தடையாக என்றுமே இருந்ததில்லை. வருணத்தாலோ மொழியாலோ நம் பிரிவினையைத் தூண்டும் தந்திரங்களுக்கு இடம் கொடாமல் இருக்கவேண்டும். இவற்றால் பிளவுபடாமல் நம்மிடையே ஒற்றுமை காக்கவேண்டும்!

6. "பரம்பொருள் யார்? மறைகள் என்றால் என்ன? யுகங்கள் என்றால் என்ன?" போன்ற கேள்விகளுக்கு விடை காண நேரம் செலவிடவேண்டும். தமிழர்களின் பெருமைகள் இதிகாச புராணங்களில் உள்ளன - அவற்றைப் படிக்கவேண்டும்.

7. வைரமுத்துவின் கட்டுரையைச் "சங்க காலத் தமிழர் பண்பாடு" என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் கூட 18 தவறுகள் உள்ளன - ஜெயஸ்ரீ சாரநாதன் அம்மையார் எழுதிய கட்டுரைகள் அதற்குச் சான்று. ஒருவர் பட்டங்கள் வாங்கியுள்ளார் என்பதால் அவர் தவறே இழைக்கமாட்டார் என்று கிடையாது.

நமது ஆன்மீக மார்க்கத்தின் பெருமையை நாமும் கற்கவேண்டும்; முடிந்தவரை மற்ற அன்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.




செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
 
ஆழ்வார் திருமகளாராம் பட்டர்பிரான் கோதை மலர்ப்பதங்கள் வாழி வாழி வாழி!
 
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வதுமில் குரவர்தாம் வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து





   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   


No comments:

Post a Comment