Search This Blog

Sunday, 5 August 2018

01. ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம்


முன்னுரை

அண்மையில் வெளியிட்ட ஒரு கட்டுரைத்தொடரில் நாயகி பாவம் குறித்து ஆத்திக அன்பர்களே "நோக்கம் நல்லதாக இருப்பினும் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்" என்று வருந்தியிருந்தேன்.

நேற்று ஒரு அன்பர் ஒரு கருத்து தெரிவித்தார். அதன் சாரமாவது: "ஆழ்வார்கள் அவர்களது தனிப்பட்ட அனுபவத்தைப் பாடிய மெய்ஞ்ஞானியர். அவர்களது மெய்ஞ்ஞானப் புலம்பல்களே 4000 திவ்வியப் பிரபந்தம். அவர்கள் அனுபவத்தைக் கடவுள் முன் பாட நாம் யார்? வேதங்கள் இருக்க 4000 திவ்வியப் பிரபந்தம் என்பவை கூடாது. அவரவர் தம்மை உணர்ந்து கடவுள் அனுபவத்தில் சிறந்து ஆழ்வார்கள் ஆகவேண்டும் என்பதே என் கருத்து."

இந்தக் கருத்தைத் தெரிவித்தவர் அன்னை ஆண்டாள் மீது பக்தி கொண்டவர்; நாத்திகத்தின் பரம எதிரி. அவரது எண்ணத்தில் எந்த வகையான தீமையும் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும் - அதாவது ஆழ்வார்களையோ அருளிச்செயல்களையோ அவமதிப்பது நிச்சயமாக அவரது நோக்கம் அல்ல. ஆனால் அவரை அறியாமல் அதனைச் செய்திருப்பதுவே மிகவும் வருந்தத்தக்க உண்மை. அவரது தவறான கருத்துக்களுக்கு மாற்றான பெரியோர்கள் வழியில் சரியான உண்மைகளைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.




பொருளுரை

இந்தக் கருத்தில் உள்ள தவறுகளைப் புரிந்துகொள்ள சில மிகவும் இன்றியமையாத ஸ்ரீவைணவ உண்மைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்:

1. ஆழ்வார்கள் யார்?

2. ஆசாரியர்கள் யார்?

3. 4000 திவ்வியப் பிரபந்தம் என்பது என்ன?

4. 4000 திவ்வியப் பிரபந்தம் "திராவிட வேதம்" என்று யார் கூறினர்? ஏன் கூறினர்?




1. ஆழ்வார்கள் யார்?

* ஆழ்வார்கள் அவதாரங்கள் அல்ல - நம் போன்ற பத்தர்களாய்ப் பிறவிக்கடலில் பல காலம் உழன்று முக்தர்களாய் உயர்ந்த ஜீவாத்மாக்கள்.

* கலியுகத்திற்கென்றே சில மகான்களைப் பிறப்பித்து நம் போன்றோரைத் தேற்ற எண்ணிய செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால் தம்முடைய காரணமற்ற கருணையால் 10 ஜீவர்களுக்கு சிறப்பாக மயர்வு (மயக்கம்) அற மதிநலம் (கோதற்ற ஞானம்) அருளினார். அவர் அப்படி அருளியபோது ஒவ்வொரு நித்தியரின் அம்சத்தினை ஒவ்வொரு ஜீவருக்கு அருளி ஞானம் அளித்தார். அவர்களே ஆழ்வார்கள். இதே போல் திருமால் திரும்பவும் செய்தால் ஒழிய அடுத்த ஆழ்வார் உதிக்க மாட்டார்!

* "பன்னிரு ஆழ்வார்கள்" என்று பொதுவாகச் சொன்னாலும் ஆழ்ந்து நோக்கினால் "பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை ஐயன், அருள்மாறன், சேரலர்கோன், துய்ய பட்டநாதன், அன்பர்தாள்தூளி, நற்பாணன், நற்கலியன்" என்றபடி ஆழ்வார்கள் பதின்மர் (10). பன்னிருவர் (12) அல்ல.

* ஆண்டாள் தம் குருவான பெரியாழ்வாரின் அடி பணிந்தவள். மதுரகவிகள் தம் குருவான நம்மாழ்வாரின் அடி பணிந்தவர். ஆகையால் இவர்களும் ஆசாரியர்கள்.

* ஆண்டாள் மற்றும் மதுரகவிகளின் பாசுரங்கள் 4000 திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளன. அது ஏன்?

* i. ஆண்டாள் ஆழ்வார்களின் சந்ததி. பட்டர்பிரான் கோதையாக அவள் அருளிய பாசுரங்கள் (பெரியாழ்வாரின் பாசுரங்கள் சேர்க்கப்பட்டதுபோல்) 4000 திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டன.

* ii. மதுரகவிகளின் பாசுரங்கள் இடம் பெற்றுள்ளதன் காரணம்: குருவின் ஏற்றம்; குரு பக்தியின் ஏற்றம். இறைவனுக்குச் சமானமாகக் குருவை வைத்தனர். இதே காரணத்தால் இராமானுசரின் புகழ் பாடும் 'இராமானுச நூற்றந்தாதி' 4000 திவ்வியப்பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதனை அருளிய திருவரங்கத்து அமுதனார் ஆழ்வார் அல்ல; ஆசாரியர்.




2. ஆசாரியர்கள் யார்?

* ஆழ்வார்களை அனுப்பியதன் காரணம் நம் போன்றோரைத் திருத்தித் திருமகள் கேள்வனிடம் சேர்ப்பிப்பதே - இருப்பினும் அவர்கள் வெகு விரைவில் இறைவனை அடையும் துடிப்பினால் திருநாடு என்ற பரமபதம் சென்றனர். காலம் செல்லச் செல்ல ஆழ்வார்களின் பாசுரங்களை அனைவரும் மறந்து போயினர்; அந்தத் தெய்வீகப் பாடல்களும் மறைந்து போயின.

* ஆழ்வார்களின் பாசுரங்களை மீண்டும் மலரச் செய்யவும், அவைகளின் உண்மையான பொருள்களை அனைவருக்கும் தெளிவுபடுத்தவும், அப்பாசுரங்களின் உட்கருத்தின் படி வாழ்ந்துகாட்டி நம்மை வழிநடத்தவும் தோன்றிய அற்புதமான அடியவர்களே ஆசாரியர்கள்.

* ஆசாரியர்களுள் பலர் அவதாரங்கள். சில எடுத்துக்காட்டுக்கள்: திருவனந்தாழ்வானே இராமானுசர் மற்றும் மணவாள மாமுனிகள்; சர்பநேத்திராம்சர் என்பவரே கூரத்தாழ்வான்; கருடாழ்வாரே எம்பார்; திருவேங்கடத்துத் திருமணியே வேதாந்தாசார்யார். இப்படிப் பலர்.

* ஆசாரியர்கள் திருமாலின் மனம் கவர்ந்த அணுக்கத் தொண்டர்கள். நம் மீது பெரும் பரிவு கொண்டவர்கள். நமது வீடுபேற்றின் மீது நம்மைவிட கோடானு கோடி மடங்கு கவனமாக இருப்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு ஒரு வேதம் என்னலாம்படி நம் நன்மைக்காக வாழ்ந்தவர்கள்.

* 'ஸ்ரீவைணவம்' என்ற பெயர் 'ஸ்ரீ இராமானுச தரிசனம்' என்று மாறியதைக் கொண்டே ஸ்ரீவைணவ ஆசாரியர்களின் தலைவர் இராமானுசர் என்பது விளங்கும்.




3. 4000 திவ்வியப் பிரபந்தம் என்பது என்ன?

* திருமாலின் இன்னருளால் அப்பழுக்கற்ற ஞானம் பெற்ற ஆழ்வார்கள் வாயிலாக வெளிவந்த தமிழ் மொழிப் பாசுரங்கள் 4000 திவ்வியப் பிரபந்தம்.

* இப்பாசுரங்களைத் "திராவிட வேதம்" என்றும் "தமிழ் மறை" என்றும் அழைப்பர்.

* இப்பாசுரங்கள் ஆழ்வார்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டவை - அதாவது எப்பொழுதுமே இருக்கும் வேதங்களை எப்படி முனிவர்கள் தமது ஞானத்தால் கண்டு வெளியிட்டனரோ அதே போல எப்பொழுதுமே இருக்கும் பாசுரங்களை இறையருளால் பெற்ற ஞானத்தால் ஆழ்வார்களாகிய முனிவர்களும் கண்டு வெளியிட்டனர்!

* குறிப்பாக ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமான பொருள்களை நான்கு பிரபந்தங்களாக வெளியிட்டார். அதனாலேயே அவரை "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றனர்! மற்ற ஆழ்வார்கள் வேதத்தின் அங்கங்கள், உபநிடதங்கள், இதிகாச புராண ரத்தினங்கள் ஆகியவற்றின் சாரங்களை வெளியிட்டனர்.




4. 4000 திவ்வியப் பிரபந்தம் "திராவிட வேதம்" என்று யார் கூறினர்? ஏன் கூறினர்?

i. திருமாலே கூறினார்

பத்ம புராணத்தில் பிரமனிடம் திருமால் கூறியது: "திராவிட வேதத்தின் பெருமையை 4 பேர் அறியச் சொல்வதே என் பக்தர்களின் இலக்கணம். ஆகையால் நான்முகனே, நீ சிறிதும் ஐயப்படாமல் வடமொழி வேதத்தைவிடத் தமிழ் மறையின் மீது பக்தி செலுத்துவாயாக!"


ii. நம்மாழ்வாரும் கூறினார்

ஆழ்வார்களின் தலைவரும் நமக்கு 4000 கிடைக்கக் காரணமான ஸ்ரீவைணவக் குலபதியும் இராமானுசரின் தெய்வமுமான நம்மாழ்வார் அவருடைய பொய்யில் பாடல்களில் கூறியது:

 



iii. நம்மாழ்வாரின் பெருமையைப் பேசும் 11 பாடல்களை 12000 முறை இடைவிடாமல் அனுசந்தானம் செய்து 4000 திவ்வியப் பிரபந்தங்களை நம்மாழ்வாரிடம் பெற்ற நாதமுனிகள் என்ற ஆசாரியர் கூறினார் (குறிப்பு: நம்மாழ்வார் திருநாடு என்கிற பரமபதம் சென்ற பல ஆயிரம் வருடங்களுக்குப் பின் நடந்த சம்பவம் இது!)



"1000 சாகைகள் உடைய உபநிடத்திற்குச் சமமான ஆகமமானத் திராவிட வேதசாகரத்தை வணங்குகின்றேன்" என்று பொருள். "1000 சாகைகள் உடைய உபநிடதம்" என்பது சாம வேதம்.

இந்த ஆசாரியாரே பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு வேதத்தின் சாரமான ஓம்காரம் என்றவர்! அதனை முதலிலும் முடிவிலும் ஓதவேண்டும் என்றவர். இன்றும் அதுதான் முறை, வழக்கம். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? திருக்கோயில்களில் இறைவன் முன்னிலையில் 4000 திவ்வியப் பிரபந்தம் ஓதுவதும் ஆசாரியர்கள் ஏற்படுத்தியதே - இதில் குறை காண நாம் யார்?


iv. ஸ்ரீவைணவத்தின் தலைவரும் பரம முக்கிய ஆசாரியருமான எம் ஐயன் இராமானுசன் கூறினார்

* இராமானுசர் ஆழ்வார்கள் மீதும் அவர்களது பாசுரங்கள் மீதும் வைத்த அன்பை விவரிக்க இந்த ஒரு கட்டுரை போதுமா? அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கவேண்டும்!

* ஸ்ரீவைணவத் திருக்கோயில்களில் இன்று 4000 திவ்வியப் பிரபந்தம் பீடு நடை போடுவதற்குத் தலையாய காரணம் இராமானுசர் ஆவார். இன்றும் அவரது ஏற்பாட்டின்படி உற்சவங்களில் (நாதமுனிகள் அருளியபடி) திராவிட வேதம் ஓதுவோர் முன்னே செல்வதும் எம்பெருமான் அவர்கள் பின்னே செல்வதும் அதன் பின் வடமொழி வேதங்கள் ஓதுவோர் தொடர்வதும் கண்கூடு! எதற்கு முதலிடம் கொடுத்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

* இராமானுசர் ஆழ்வார்கள் மீதும் அருளிச்செயல்கள் மீதும் செலுத்திய மதிப்பும் பக்தியும் எத்தகையது என்று உணர "இராமானுச நூற்றந்தாதி" ஒன்று போதுமே!

* இராமானுசர் எழுதிய ஸ்ரீபாஷியமே ஆழ்வார் பாசுரங்களைத் துணை கொண்டே என்பர் பெரியோர் - "ஸ்ரீபாஷியம்" என்பது உபநிடதங்களின் சாரமான பிரம்மசூத்திரத்திற்கு இராமானுசரின் விசிட்டாத்துவைத்த பரமான உரை!

* ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரைகளை (நம் போன்றோருக்கு) ஏடுபடுத்தும் முறையும் இராமானுசர் தொடக்கி வைத்தார்.

* இராமானுசர் பரமபதம் திரும்பும் முன் ஆறு கட்டளைகள் விதித்தார். அவற்றுள் ஒன்று "ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதுதல் ஓதுவித்தல்" என்பதுமாம். ஆழ்வார்களும் தமது பாசுரங்களைப் பாடுவோருக்குப் பலன் உரைத்தனரே! நாம் யாவரும் தாராளமாகப் பாடலாம் - பாடவேண்டும்.


* ஏன் இவ்வளவு ஏற்றம் 4000 திவ்வியப் பிரபந்தங்களுக்கு அளித்தார்? மூன்று காரணங்கள்:

வேதசாரமான கருத்துக்கள் பாசுரங்களில் ஒலிக்கும் பொழுது அதை உரைகளில் ஆசாரியர்கள் காட்டுவர் - இது ஒரு புறமிருக்க:

i. ஆழ்வார்கள் முனிவர்கள் போலத் தம் முயற்சியால் தவம் செய்து வெளிவந்த பாசுரங்கள் அல்ல 4000 திவ்வியப் பிரபந்தம் - இறைவன் தானே மனமுவந்து அருளியதால் ஆழ்வார்கள் 4000 திவ்வியப் பிரபந்தம் பாடினர்.

ii. வேதங்கள் "இவனே பரம்பொருள்" என்று எளிதில் புரியும்படி சொல்லவில்லை - ஆனால் ஆழ்வார்கள் "திருமகளின் கேள்வனே பரம்பொருள்" என்று ஆணித்தரமாக முழங்கினர்.

iii. வேதங்கள் இன்னார் இன்ன சுவரத்தில் இன்ன காலத்தில் சொல்லவேண்டும் என்றெல்லாம் பல விதிமுறைகள் உடையது - ஆழ்வார்களின் பாசுரங்களோ எல்லோரும் எப்பொழுதும் பாடிப் பயனடையும் பெருமையும் எளிமையும் உடையன.

* இதனாலேயே ஸ்ரீவைணவத்தில் வடமொழி வேதங்களைப் போற்றுவர் - இந்த மதம் பரம வைதீகமானாது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. எனினும் ஏற்றம் என்றென்றும் ஆழ்வார்களின் அமுதமொழிகளுக்குத்தான்! இக்கருத்தினில் நம்பிக்கை இராமானுச தரிசனத்தைப் பின்பற்றுவோருக்கு ஒரு அடிப்படைத் தகுதி!


v. எம் ஐயன் இராமானுசனின் அடியார்களான மற்றைய ஆசாரியர்களும் கூறினார்கள்

"நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமல்ல மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்களும் வேதசாரம்" என்பதைத் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழிக்கு எம்பாரின் தனியன் விளக்குகின்றது. அடுத்து நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குப் பட்டர் அருளிய 2 தனியன்களைக் காணீர்.

 


நம்பிள்ளையின் அருளால் திருவரங்கனின் அம்சமாகப் பிறந்த அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்கிற மஹாசாரியர் "ஆசாரிய ஹ்ருதயம்" என்ற நூலை இயற்றியதே "பல குலத்திலும் பிறந்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் ஞானியர். பக்தர். அது ஒரு புறம் இருக்கலாம். அதற்காக அவர்களுடைய தமிழ்ப் பாடல்களுக்கு வேதங்களுக்குச் சமமான மதிப்பு கொடுப்பது எப்படித் தகும்?" என்ற கேள்விக்கு விடையளிக்கத்தான். "திவ்வியப் பிரபந்தங்கள் வேதங்களுக்குச் சமம் அல்ல - வேதங்களைவிட உயர்ந்தவை" என்று நிலைநாட்டினார்!

கருடாழ்வாரின் கருணையினால் பரிமுகக் கடவுளின் அருள் பெற்ற வேதாந்தாசார்யர் என்ற ஆசாரியப் பெருமகனார்

* பாதுகா ஸஹஸ்ரம்

* திவ்வியப் பிரபந்த வைபவம்

* திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்தினாவளி

* அம்ருதசுவாதினி

* அதிகார சங்கிரகம்

ஆகிய நூல்களில் திராவிட வேதத்தின் மேன்மையைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளார்!

குறிப்பு: எந்த ஒரு நூலையும் படிக்க ஒரு தகுந்த குருவின் துணை மிக மிக மிக அவசியம் - நமது சொந்த முயற்சியில் மட்டுமே படிப்பது வீண்.




முடிவுரை

வைணவத்தில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒன்று "இராமானுசன் தரிசனம்" என்ற ஸ்ரீவைணவம். "திருமாமகளின் கொழுநனே பரம்பொருள்" என்று முழங்கும் இந்த மார்க்கத்தில்:

* திருமகள் மற்றும் அவளின் அம்சமான மற்ற நாயகிமார்களின் புருஷகாரத்திற்கும் (சிபாரிசு)
* ஆழ்வார்களுக்கும்
* ஆழ்வார்களின் ஈரச்சொற்களுக்கும்
* எம் ஐயன் இராமானுசனுக்கும்
* ஆசாரியர்களின் வாழ்விற்கும் வாக்கிற்கும்
* ஆசாரிய அபிமானத்திற்கும்
* இராமானுசன் அடியார்களுக்கும்

மிகுந்த ஏற்றம் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீவைணவம் பற்றிச் சரியானத் தகவல்களை வெளியிட குறைந்த பட்சம் இவற்றையாவது புரிந்துகொள்ளுதல் மிக அவசியம். இது சரியாகப் புரிய ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடையவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை. "பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து" என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய பெரியாழ்வார் அருளியது போல பரம்பொருள் குருவின் வடிவிலேயே அருள் செய்கின்றார்.

"முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாம் அதனைப் பேசவேண்டும்" என்று ஆன்றோர் அருளியிருக்க "என் கருத்து" என்று அவரவர் சொல்லத் தொடங்கினால் (நோக்கம் நல்லதாக இருப்பினும்) விளைவுகள் விபரீதமாகும்.

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதையின் தமிழ் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்! இன்று ஆண்டாள் திருவவதார உற்சவம் தொடக்கம். அன்னை ஆண்டாளின் இன்னருளால் எல்லோரும் நல்லாசானைப் பெற்றுச் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்.


8 comments:

  1. 🙏🙏 Dhanyosmi, Adiyen Dasan

    ReplyDelete
  2. திருத்தம்.மெய்ஞ்ஞான புலம்பல் என்றே கூறினேன்.

    நீங்கள் கூறுவது ஆப்ரகாமிய மத தத்துவங்களை ஒத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட நபர்களை ஆழ்வார்களாக அனுப்பி அவர்கள் மூலமாக வேதங்களை தானே வெளிப்படுத்திக் கொண்டார் என்பது.

    உதாரணமாக நான் ஒரு ஞானி. எனக்கும் இறை அனுபவம் இருக்கிறது. நான் திருமால் மீது ஒரு பாடல் பாடினால் அதற்கு பிரபந்தத்திற்கு தரும் மரியாதை தருவீர்களா?

    நீங்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். அது உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. திருத்தம் செய்துவிட்டேன் - தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

      தங்கள் கேள்விக்கு விடை கட்டுரையிலேயே உள்ளது.

      நான் ஞானி அல்ல. பெரியோர்கள் அருளியுள்ளவற்றைப் பகிர்ந்துள்ளேன். ஞானிகளான ஆசாரியர்களிடம் தங்கள் மற்ற கருத்துக்களுக்குச் சரியான விடைகள் கிடைக்கும். 🙏

      Delete
  3. மிக அற்புதமான கட்டுரை.
    1) ஆழ்வார்களில் ஆச்சார்யர்கள்;
    2) ஆச்சார்யர்கள் அவதார புருஷர்கள்;
    3) பிரபந்தங்கள் வேத சாரம்;
    4) அதனைப் பல ஆச்சார்யர்களும் தெளிவுறப் பலமுறை எடுத்துரைப்பது;
    5) இறைவனே திராவிட வேதம் என்று உணர்த்தியது
    6) பரம கருணாமூர்த்தியாக குரு வழிநடத்துவது; அப்பேர்ப்பட்ட ஆச்சார்யர்களைப் போற்றிப் பின்பற்றி உய்ய குருபரம்பரையை ஸ்ரீ வைஷ்ணவம் வலியுறுத்துவது;
    இப்படிப் பல கருத்துகளை அழகாகவும் நிதானமாகவும் எடுத்துரைத்தது இக்கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி 🙏

      ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

      ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

      Delete