1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
1. கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் ‘தெய்வம்’ என்கிறார். சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள். தெய்வம் – கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள்; பழகாத பொருள்.
"காரிக்கண்ணனார் தெளிந்த சொல்லாட்சியில் ‘தெய்வம்’ என்கிறார்.
அது சரியே. ஆனால் அதற்குப் பின் வைரமுத்துவின் தெளிவில்லாக் கற்பனைகள் மட்டுமே உள்ளன.
"சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்."
"கண்ணன் கடவுள் அல்ல. ஆண்டாள் கடவுளைப் பாடவில்லை" என்பதைத்தான் வேறு வடிவில் சொல்ல முயல்கின்றார், பாவம்.
"தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள்; பழகாத பொருள்."
நல்ல நாத்திகமடா சாமி! பரம்பொருள் என்பாராம் - ஆனால் அவாதாரங்களை ஒப்புக்கொள்ளமாட்டாராம்!! ஒன்று "வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஒன்றிலுமே நம்பிக்கையில்லை" என்று விட்டுவிடவேண்டும் - இல்லையெனில் அவை எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளவேண்டும்; முரண்படுவதுபோலத் தோன்றினால் ஞானமும் அனுட்டானமும் உடைய பெரியோர்களிடம் கேட்டுத் தெளியவேண்டும். "வேண்டியதை" மட்டும் மேற்கோள் காட்டிவிட்டு "வேண்டாதவையை" (!) அகற்றித் தன் கருத்தைப் புகுத்துவது எப்படிச் சரியாகும்??
அதென்ன "பரம்பொருள்; பழகாத பொருள்??!!" பழகுவதற்காகவே எடுக்கப்படுபவைதான் அவதாரங்கள்!!! பரம்பொருள் இன்றும் திருத்தலங்களில் அர்ச்சை வடிவில் எழுந்தருளி நம்முடன் எப்பொழுதுமே பழகிக்கொண்டிருக்கும் பொருள் - நாமும் அவனுடன் பழகமாட்டோமா என்று அன்புடன் ஏங்கும் (முதலும் முடிவும் இல்லாத) மிகமிகப் பழமையான பொருள்!
"தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள்."
தவறு.
* "திவ்" என்ற வடமொழி வேர்ச்சொல்லிருந்து உருவான "தைவம்" என்ற வடசொல்லே தமிழில் "தெய்வம்" என்று வழங்கப்படுகின்றது.
* "தேவ" என்ற சொல்லும் "திவ்" என்ற வேர்ச்சொல்லுடனும் "தைவம்" என்ற சொல்லுடனும் தொடர்புடைய சொல்லே - தேவனுடன் தொடர்புடையது தைவம் / / தெய்வம்.
* இந்தச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள - ஒளிவீசுபவர், புகழப்படுபவர், நம்பப்படுபவர் என்பவை உள்பட!
* ஒளிவீசுபவர் என்ற முக்கிய காரணத்தால் பரம்பொருள் அல்லாத சுவர்க்கலோகவாசிகளும் தேவர்கள் என்றழைக்கப்படுவர். ஒளியைத் தரும் பகலவன் "திவாகர:" (திவ: + கர:) எனப்படுகின்றான்.
* சுவர்க்கலோகவாசிகளும் "தேவ" / "தெய்வம்" என்று என்றழைக்கப்படுவர் என்பதால் பரம்பொருளை அப்படி அழைக்கமுடியாது என்பது அல்ல - "தேவ" என்ற திருநாமம் தாராளமாகப் பரம்பொருளுக்கும் பொருந்தும்! அதே காரணத்தால் பரம்பொருளைத் "தெய்வம்" என்றழைப்பதும் பொருந்தும்!
* ஆண்டாள் திருப்பாவையில் "தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்" என்று முழங்கினாளே! அதே தெய்வத்தைப் "பார்க்கடலுள் பையத்துயின்ற பரமன்" என்றும் அழைத்தாள்!!
* ஆண்டாள் "கண்ணனெனும் கருந்தெய்வம்" என்று நாச்சியார் திருமொழியில் அழைத்தாள்!! "பெருந்தாளுடைய பிரான்" என்றும் முழங்கினாள்!
* நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனுக்கு ஆழ்வார்கள் போற்றிய ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் "தேவ:," "ஆதிதேவ:," "தேவேச:," "தேவபிருத்" என்ற திருநாமங்கள் உள்ளன. திருமாலைப் பரம்பொருளாக முழங்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் "அலகிலா விளையாட்டுடையவன்," "முதல் காரண தேவன்," "ஒளிவீசுபவன்," "தேவர்களுக்குத் தலைவன்," "தேவர்களைக் காப்பவன்" என்ற பொருள்களில் இந்தத் திருநாமங்கள் அமைந்துள்ளன.
பலரும் படிக்கப்போகும் கட்டுரையில் சரியான தகவல்களைச் சொல்லவேண்டும்.
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment