1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
"ஆழ்வார்களுக்கு வருணாசிரம தருமத்தினால் சமநோக்குப் பார்வையில்லை" என்பதுபோலச் சித்தரித்ததால் இந்தப் பகுதியில் வருணாசிரம தருமம் குறித்துச் சொல்லப்பட்டத் தவறான கருத்துக்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
1. எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள்.
* ஒவ்வொரு வருணமும் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பொறுப்பு. அதனால்தான் இது வருணாசிரம *தருமம்* என்று அழைக்கப்படுகின்றது!
* அனைத்து வருணத்தவரும் தத்தம் கடமைகளை இரைச்சேவையாகச் செய்து சமுதாயத்திற்குப் பலம் சேர்ப்பதுதான் இறைவனின் எதிர்பார்ப்பு.
* இப்படி இருக்க ஒரு வருணத்தில் பிறந்தால் அவருக்கு வைதீக மதம் தேவைப்படாது என்று (முகலாயர்களும் ஐரோப்பியர்களும் நம்மை ஆண்ட காலங்களுக்கு முன்னால்) எவரும் நினைக்கவில்லை!
2. எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.
பல கோடி ஆண்டுகள் எந்தவிதமான குறையுமின்றி வழக்கத்தில் இருந்த தருமம் இது. இந்த வருணத்தவர் இன்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று முடிவாகியபின் "கெட்டிப்படுத்தவோ" அல்லது "உடைத்தெறியவோ" என்ன இருக்கின்றது??
ஒவ்வொரு வருணத்தவரும் மற்றைய வருணத்தவரைச் சார்ந்தே வாழ்ந்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு வருணத்தில் பிறப்பது நம் கடமைகளைத்தான் குறிக்கின்றதே ஒழிய பெருமையை அல்ல!!
ஒரு குறிப்பிட்ட வருணத்தில் பிறப்பதற்கும் அந்தப் பிறவியில் ஏற்படும் ஞானத்திற்கும் பெருமைக்கும் என்ன தொடர்பு?? அந்தப் பிறவியில் வாழும் வாழ்க்கைமுறையும் குணங்களும் அன்றோ ஞானத்தையும் மோட்சத்திற்கான அருகதையும் தீர்மானிக்கும்!!
தான்தோன்றித்தனமாக யாரும் எதையும் செய்யவில்லை. ஆழ்வார்கள் தோன்றும் முன்னமேயே பகவத் கீதை அவதரித்தது - அதில் இல்லாத பேரறிவா? அதில் கண்ணபிரான் கூறிய ஆன்ம சமத்துவத்தைத்தான் ஆழ்வார்களும் முழங்கினர். எந்த ஒரு ஜீவாத்மா:
* இறைவன் வகுத்த கடமைகளைப் பலனைக் கருதாமல் அவனுடைய உகப்புக்காகச் செய்கின்றாரோ
* இறைவனை உள்ளபடி உணர்கின்றாரோ
* இறைவன் மீது தூய்மையான அன்பைச் செலுத்துகின்றாரோ
* இறைவனின் திருவடிகளே கதி என்று இருக்கின்றாரோ
அவர் உயர்ந்தவர். அந்த ஜீவாத்மா எந்த உடலில் இருக்கின்றார் என்பது ஒரு பொருட்டா??
சத்திய யுகத்திலே சிறுமாமனிசரான பிரகலாதாழ்வான் சொல்லிக்கொடுக்காத சமத்துவமா? தன்னைக் கொல்ல வந்த அசுரர்களில், அவர்களின் ஆயுதங்களில் (!), யானைகளில், பாம்புகளில், நெருப்பினில் என்று அனைத்திலும் ஸ்ரீமந்நாராயணனைக் கண்டவர் அன்றோ? கேட்காமலேயே இறைவன் காத்தளித்தச் சிலருள் இவரும் ஒருவர். திருமாலடியார்களுக்கு ஒரு உதாரண புருஷர் என்பர் பெரியோர்.
இரணியனிடம் பிரகலாதாழ்வான் அருளியது: "இந்த ஆசிரியர்கள் நண்பனிடம் சாம, தான வழிமுறைகளைக் கடைபிடி; பகைவரிடம் பேத, தண்ட வழிமுறைகளைக் கடைபிடி என்கின்றனர். ஐயனே, இது தவறு. எல்லா உயிர்களிலும் திருமால் உறைகின்றார் - அதில் ஒருவனை நண்பன் என்றும் இன்னொருவனைப் பகைவன் என்றும் எப்படி நினைக்க முடியும்?" இதைவிடவா ஆன்ம சமத்துவமும் நல்லறமும் போதிக்கவேண்டும்?
வேதங்களிலும் இதிகாச புராணங்களிலும் காட்டப்பட்ட இந்த உண்மையைத்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் முழங்கினர் - "நம்பினார்கள்" என்பதை விட "உண்மையை எடுத்துரைத்தனர்" என்பதே சரி.
இதை மட்டும் விளக்கவே ஸ்ரீவைணவத்தில் ஸ்ரீபிள்ளைலோகார்யர் என்ற ஆசார்யாரும் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் (இருவருமே பார்ப்பனர்கள்!) மிக விரிவான நூல்களை எழுதியுள்ளனர்! அந்த உயர்ந்த நூலகளுக்குத் தமது திருக்கழுத்து நோக உரை எழுதியவரும் பார்ப்பனர்தான் - ஸ்ரீ இராமானுசரின் மறு அவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகள்!
3. “இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்” –என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார். வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தெய்வச் சிறப்பு வாய்ந்தவர்கள். எந்த ஒரு ஜீவனிலும் பரம்பொருளைக் காணும் ஞானம் பெற்றவர்கள் - இதைவிட ஒரு பேரறிவு என்ன இருக்கமுடியும்??
வர்க்க பேதம் என்ன - திணை பேதத்தையே உடைத்தெறிந்தவர்கள் ஆழ்வார்கள்!! "எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே" என்பதன்றோ குலசேகராழ்வார் திருவாக்கு? திருக்கோயில் கோபுரங்களைத் திருமாலடியார்கள் "திருகோபுரத்து நாயனார்" என்றன்றோ அழைப்பது! திருமடைப்பள்ளியைத் "திருமடைப்பள்ளி நாச்சியார்" என்றன்றோ வணங்குவது!
ஆதலால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களுக்கு நம் போன்ற அறிவிலிகள் ஞானம் புகட்டத் தேவையில்லை.
"இந்தக் குலத்தில் பிறந்ததால் எனக்குப் பெருமை" என்று ஒருவர் எண்ணினால் அவருக்கு பெரும் ஆன்மீக வீழ்ச்சி காத்துள்ளது என்று பொருள். குலச்செருக்கும் செல்வச்செருக்கும் ஞானச்செருக்கும் மதியை மயக்கும் தவறான எண்ணங்கள் என்றும் அதனை பல வருணத்தாரும் தாண்டியுள்ளனர் என்றும் சாத்திரங்கள் இயம்புகின்றனவே! இவற்றைக் காலப்போக்கில் மறந்தது அறியாமை.
புல், பூண்டு, பூச்சி, புழு, பறவை என்று எவ்வளவோ பிறவிகளைக் கடந்து, மனிதப் பிறவியிலேயே எவ்வளவோ குலத்தில் பிறவிகள் என்று முடித்துவிட்டுத்தான் நாம் அனைவருமே வந்திருக்கின்றோம். "மறுபிறவி உண்டா? இல்லையா? அப்படி இருந்தால் என்ன நிலைமை?" என்று அறியவோ முடிவு செய்யவோ யோக்கியதையும் இல்லை. இதில் இந்தப் பிறவியில் குறிப்பிட்ட வருணத்தில் பிறந்ததால் பெருமையோ சிறுமையோ எங்கிருந்து வந்தது??
யுகம் யுகமாக அனைத்து வருணத்தைச் சேர்ந்த அடியார்கள் திருமாலைக் கேட்காமலேயே மரம் முதல் பிரம்மராட்சதன் வரை அனைவருக்கும் மோட்சமே அளித்துள்ளனர்!
இதையெல்லாம் அறிந்தே ஆழ்வார்களும் "அடியார்கள் குலம் எதுவாகிலும் அவர்களை (உங்கள் அறிவின்மையால்) அலட்சியப்படுத்தாமல் அவர்களிடம் ஞானம் பெற்றுக்கொள்ளுங்கள்; அவர்களுக்கும் ஞானம் அளியுங்கள்" என்றனர். இதில் ஆழ்வார்களின் பரவசம் எப்படிக் குறுகிவிட்டது??
* வேளாள குலத்தின் திலகமானவரும்
* வேதம் தமிழ் செய்தவரும்
* இராமானுசரின் வழிபாட்டுத் தெய்வமும்
* இராமானுச தரிசனத்தோரின் குலபதியுமாகிய
நம்மாழ்வார் ஒவ்வொரு திருக்கோயிலிலும் இறைவனின் பாதுகைகளாக எழுந்தருளியிருக்கின்றார் - அவரை அனைவருமே சிரத்தால் வணங்கி உய்வு பெறுகின்றோம்!!
மதுரகவிகள் நம்மாழ்வாரின் அடி பணிந்து அவருக்கு விழா எடுத்தபொழுதே ஆழ்வார்களின் சமத்துவப் பேரறிவு நிலைநாட்டப்பட்டுவிட்டது.
குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என்றும் பாராமல் அடிக்கவோ கொல்லவோ சற்றும் தயங்காத முகலாயர்களும் ஐரோப்பியர்களும் நம்மை ஆண்ட காலத்தில் நம் நாட்டில் பெருங்குழப்பமும் பஞ்சமும் பயமும் ஏற்பட்டன. ஆங்கிலேயர்கள் நம் மனங்களில் பேதம் உண்டு செய்யவே திட்டமிட்டு "வர்க்க பேதம்" என்ற ஒரு மாயையைத் தோற்றுவித்தனர் - இன்றும் பேதம் ஓயவில்லை - இதுதான் "பிற்காலப் பேரறிவு."
*** ஸ்ரீஇராமாநுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகள் அருளியது ***
ஆழ்வார்கள் மற்றும் அவர்களது அருளிச்செயல்களை அவமதித்தால் நேரும் கேடு |
1. பின்னணி | 2. முன்னுரை | 3. பொருளுரை | 4. பட்டியல் | 5. முடிவுரை |
No comments:
Post a Comment