Search This Blog

Wednesday, 23 May 2018

வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடந்தோர்


வஞ்ச முக்குறும்பாம் குழி

"மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்" என்று இராமானுச நூற்றந்தாதியில் ஓரு வரி.

அதென்ன முக்குறும்பு? அதிலும் வஞ்ச முக்குறும்பு? அதிலும் வஞ்ச முக்குறும்பாம் குழி?

முக்குறும்பாவன மதியை மயக்கும் தவறான 3 எண்ணங்களால் மனதாலோ செயலாலோ பேச்சாலோ இறுமாப்பு தோற்ற இருப்பது:

குலச்செருக்கு: "நான் உயர்ந்த வருணத்தில் அல்லது சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் உயர்ந்த நிலையில் உள்ள குடும்பத்தில் பிறந்தேன்" என்ற தவறான எண்ணம்

செல்வச்செருக்கு: "என்னிடம் இருக்கும் செல்வச்செழிப்பு! ஆகா!" என்ற தவறான எண்ணம் (16 வகையான செல்வத்தில் எதுவாயினும் சரி!)

ஞானச்செருக்கு: "என்னிடம் இருக்கும் நற்குணங்கள், ஞானம், தவம் போன்றவை உயர் ரகம்" என்ற தவறான எண்ணம்

இவற்றுள் எந்தச் செருக்கானாலும் அது யாரைப் பற்றி இருக்கின்றதோ அவருக்கு மிகவும் போதை தருவதாக இருந்துகொண்டே அவருடைய முன்னேற்றத்திற்கு (முக்கியமாக ஆன்மீக முன்னேற்றத்திற்கு) உலை வைத்துவிடும். அதானாலேயே "வஞ்ச முக்குறும்பாம் குழி" என்று கூறினர்.


பேரரசர் அம்பரீஷர்

பேரரசர் அம்பரீஷர் திரேதா யுகத்தில் வாழ்ந்த திருமால் பக்தர். 7 கடல்களால் சூழ்ந்த இவ்வுலகை ஆண்டார். திருமால் அடியார்களை உவந்து பூசிப்பார். ஏகாதசி / துவாதசி விரதம் காப்பவர்.

ஒரு துவாதசி திதியன்று 60000 கோடி அந்தணர்களுக்குப் பசுக்களைத் தானம் செய்துவிட்டு உணவு அருந்த முற்படுகையில் துருவாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அரசரும் முனிவரை முறைப்படி வரவேற்று உணவு உண்ணுமாறு வேண்டினார். யமுனையில் நீராடியபின் வருவதாகக் கூறிச் சென்ற முனிவர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்.

குறிப்பிட்ட நேரம் முடியும் முன் துவாதசி விரதம் காக்க இறைவனின் பிரசாதம் உண்ணவேண்டும் என்பது விதி. விருந்தினர் உண்ணும் முன் உண்ணுதல் தவறு என்பதும் விதி. கலங்கிய அரசர் இறைவனைத் தியானித்து ஒரு முடிவுக்கு வந்தார். இறைவனுக்கு அளித்த துளசி தீர்த்தம் என்ற தூய நீர்த்துளிகளைப் பருகி விரதம் காத்தார். ஆனால் உணவு உட்கொள்ளவில்லை.

திரும்பி வந்த முனிவரோ 'அதெப்படி நான் வரும் முன் நீ நீரைப் பருகலாம்!' என்று சினந்து ஒரு பிசாசைத் தோற்றுவித்து அம்பரீஷரைக் கொல்ல முயல திருமாலின் திருவாழி அந்தப் பிசாசைக் கொன்று துருவாசரை நோக்கிப் பாய்ந்தார்!!

எங்கு சென்றும் விடாமல் துரத்தி வரும் திருவாழியைக் கண்ட முனிவர், முடிவில் திருமாலிடம் சென்று மன்னிப்பு வேண்ட அப்பொழுது ஒரு மிக அற்புதமான வார்த்தையைத் திருமால் தெள்ளத் தெளிவாகக் கூறினார்: "ஞானமும் தவமும் பணிவுடன் கூடியிருந்தால் மட்டுமே வெகுமானத்திற்கு உரியதாகும். என் அடியவன் அம்பரீஷரைச் சரண் அடைவாய்!" என்றார்!!

முனிவரும் அவ்வாறே செய்தார். அம்பரீஷர் முனிவருக்காக வேண்ட திருவாழியும் அங்கிருந்து மறைந்தார். துருவாசரும் மன்னனை வாழ்த்திச் சென்றார்! ஆனால் அம்பரீஷரோ இதைப் பற்றி எள்ளளவும் கர்வம் கொள்ளவில்லை. எப்போதும் போல இருந்தார்!!!!

துருவாசர் பார்ப்பனர் மட்டும் அல்ல. தவநெறியில் வாழ்ந்த முற்றும் துறந்த முனிவர் வேறு! அவர் சாபமிட்டால் அவருடைய தவம் குறையாமல் இரட்டிப்பு ஆகும்!!! ஆனாலும் பேரரசர் அம்பரீஷரின் பணிவும் பக்தியும் இவற்றையெல்லாம் வென்றன! இறுதியில் அம்பரீஷர் மோட்சமும் பெற்றார்.


குறும்பறுத்த நம்பி

குறும்பறுத்த நம்பி என்று பெரியோர்களால் அழைக்கப்படும் ஒரு அடியவர் இருந்தார். அவர் ஒரு குயவர். தினமும் மண்ணால் செய்த தாமரை மலர்களை அவர் வாழும் வீட்டில் சிறு சிலை வடிவில் உள்ள திருவேங்கடவனின் திருவடிகளில் அர்ப்பணிப்பார்.

திருவேங்கடவனின் இன்னொரு பக்தன் தொண்டைமான் என்ற அரசன். அவன் தினமும் தங்கத்தால் ஆன தாமரை மலர்களை ஏழுமலையில் வாழும் திருவேங்கடவனின் திருவடிகளில் நேரடியாகவே அர்ப்பணிப்பான். நாளடைவில் அவனுக்கு ‘நம்மைப்போல் தங்கத் தாமரைகளை அளிப்பவரும் உண்டோ?’ என்ற எண்ணம் வளர திருவேங்கடவன் ஒரு நாள் அரசன் அளித்த தங்க மலர்களை ஒரு ஓரமாகத் தள்ளி மண் தாமரைகளைத் திருவடிகளில் வைத்து நின்றார்.

மறுநாளும் இதேபோல இருப்பதைக் கண்டு அதிர்ந்த அரசன் ‘ஐயனே! இது என்ன?’ என்று வருந்தி வினவ, அன்று அவன் கனவில் குறும்பறுத்த நம்பி பக்தியுடனும் பணிவுடனும் இட்ட மண்மலர்களே தமக்கு அதிக இன்பம் தருவதாகத் திருவேங்கடவன் தெரிவித்தான்.

நெகிழ்ந்த அரசனும் அந்தக் குயவரைத் தேடி அவரிடம் ஆசி பெற்று இதனைத் தெரிவித்தான். ஆனால் குறும்பறுத்த நம்பியோ இதனைக் கேட்டு ‘இப்படி எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு அன்பு பரிமாற்றத்தை எல்லோரும் அறிய திருவேங்கடவன் வெளியிட்டானே!’ என்று வருந்தி (!!!!) தம் உயிரையே விட்டார்!!!! வைகுந்தம் அடைந்தார்!!!!

குலத்தால் வேளாளர். தான் செய்யும் மண்மலர்கள் சேவையைப் பாரபட்சம் இன்றி இறைவன் அன்புடன் ஏற்கின்றான் என்ற ஞானம்! இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை என்ற ஞானம்! தம்முடைய அந்தரங்கமான சேவையைப் பற்றிய செய்தி வெளிவந்ததால் உயிரையே விட்டார் என்றால் என்னே ஒரு அன்பு! பணிவு! புலன் அடக்கம்! ‘இந்த ஆன்மா இறைவனின் அடியவன்’ என்ற எண்ணம்!


குலமோ அல்லது செல்வமோ அல்லது ஞானமோ தமக்கு இருப்பதாக இறுமாந்து இருப்பவருக்கு இறைவன் அருள் புரிவதில்லை என்பதுவும் பணிவும் தூய அன்பும் மட்டுமே இறைவனின் மனதை வெல்லும் குணங்கள் என்பதுவும் நமது சனாதன தருமம் காலம் காலமாக எடுத்துரைக்கின்றது.


No comments:

Post a Comment