ஆசாரியனின் இலக்கணம் என்ன? பொய் இல்லாத மணவாள மாமுனிகள் கூறுகின்றார்:
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் - மாநிலத்தீர்
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்
ஆசாரியனுக்கு இவர் கூறும் இரண்டு தகுதிகளான ஞானம் மற்றும் அனுட்டானம் என்பவை ஒருவருக்கு ஏற்படுவது என்பது மிக மிக அரிது. ஏன் என்று பார்ப்போம்.
ஞானம்
ஒரு ஆசாரியன் என்பவர் ஞானம் உடையவராக இருத்தல் வேண்டும். என்ன ஞானம்? இந்தக் கேள்வியின் விடையை 'ஸப்த காதை' என்ற 7 பாசுரங்கள் மட்டுமே கொண்ட ஒரு சாரமான நூலில் அழகியதொரு பாசுரத்தில் தருகின்றார் அந்த அற்புத நூலை இயற்றிய விளாஞ்சோலைப்பிள்ளை:
அம்பொன் அரங்கற்கு ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி - உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ ஆசாரியன்
ஆசாரியன் என்பவன் கீழ்கண்ட ஐந்து கேள்விகளுக்கும் (அர்த்த பஞ்சகம்) வேதங்களில் கூறிய விடைகளைத் தமது குருவிடம் கற்று பின்பு தம் சீடர்களுக்கும் அளித்துத் தெளிவு பிறப்பிக்க வேண்டும். அந்த ஐந்து கேள்விகள்:
1. பரமாத்மா யார்?
2. (ஜீவாத்மா யார் மற்றும்) பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஆன்மீகத் தொடர்புகள் யாவை?
3. ஜீவாத்மா பரமனை அடையத் தடைகளாய் இருப்பவை எவை?
4. ஜீவாத்மா பரமனை ஏன் அடைதல் வேண்டும் (பரமபதம் அடைந்தால் என்ன நன்மை)?
5. ஜீவாத்மா பரமனை அடைய என்ன வழி?
மதுரகவி ஆழ்வார் தமக்கு ஒரு நல்ல குரு வேண்டும் என்று இறைவனை நோக்கி வேண்டினார். இறைவன் அவரைத் திருக்குருகூருக்கு வரவழைக்க முதலில் திருப்புளிய மரத்தின் அடியில் அமர்ந்திருந்த 16-17 வயது குழந்தை முனியைப் பார்த்து அவர் ஞானம் உள்ளவரா என்பதையே மதுரகவிகள் கண்டறிந்தார்.
ஞானத்தின் ஏற்றம் புரிந்தவுடன் வயது, சாதி போன்றவற்றைப் பற்றி வீணாகக் குழம்பாமல் நம்மாழ்வாராகிய அச்சிறுவனைத் தமது குருவாக ஏற்றார் 250 வயதான யோகியாம் மதுரகவிகள்!
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று வாழ்ந்த அந்த குழந்தை முனியும் 32 ஆண்டுகள் வாழ்ந்து 4 வேதங்களைத் தமிழ் செய்து பின் பரமபதம் எழுந்தருளினார்!
அனுட்டானம்
ஒரு ஆசாரியன் என்பவர் அனுட்டானம் உடையவராக இருத்தல் வேண்டும். அதாவது மனம், செயல், பேச்சு ஆகிய மூன்று அளவிலும் மற்றையோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பண்புகள் உடையவராக இருத்தல் வேண்டும். என்ன பண்புகள்? இந்தக் கேள்விக்கான விடையையும் அதே ஸப்த காதையில் அற்புதமானதொரு பாசுரத்தில் தருகின்றார் விளாஞ்சோலைப்பிள்ளை:
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என் பக்கல் நம்மை எனும் இயல்வும் - மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு
இதில் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை:
1. ஒரு ஆசாரியனுக்கு “இந்த சீடன் என்னிடம் அன்றோ ஞானம் கற்றான்” என்ற தவறான நினைப்பு
2. “என்னிடம் உயர்ந்த ஆன்ம நற்குணங்கள் இருப்பதால் அன்றோ என்னைச் சீடர்கள் வந்தடைகின்றனர்” என்ற தவறான எண்ணம்
3. (இறை அடியார்கள் மற்றும்) இறை அடியார்களுக்கு அடியாராய் இருப்பவரின் பிறப்பை (அதாவது சாதியை) ஆராய்வது
இவை மூன்றும் ஆன்மாவை நேரே மாசுபடுத்தும் பெருங்குற்றங்கள் என்கின்றார்.
பிள்ளைலோகார்யரின் 'ஸ்ரீவசனபூஷணம்' என்ற மாபெரும் ரகசிய கிரந்தத்தின் சீரியதொரு கருத்துப்பொழிவே ஸப்த காதை. ஸ்ரீவைணவத்தின் மொத்த சாரமே இந்த 7 பாசுரங்களில் உள்ளன என்றால் மிகையாகாது. அந்த 7 பாசுரங்களில் இது ஒரு பாசுரமாக உள்ளது என்றால் இந்தச் செய்தியின் அளத்தற்கரிய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்!
சீடன் ஆசாரியனைத் தெய்வமாக எண்ணவேண்டும் - குருவிடம் மாறாத நன்றி பாராட்டுதல் அவனுக்குத் தலையாய கடமை. அவனது பார்வையில் ‘ஆசாரியன்’ என்பவர் ஒரு பதவியில் வீற்றிருக்கும் முதலாளி.
ஆனால் ஆசாரியனுக்கோ அது ஒரு இறைச்சேவையான மாபெரும் கடமை. தமது குருவிடம் பணிந்து ஞானம் எல்லாம் கற்றபின்பு கற்றபின் அதற்கு தகுந்தவாறு நின்றாலும், ‘நான் சீடனுக்கு நன்மை செய்தேன்’ என்ற அகந்தையோ ‘நான் குருவாய் இருப்பது என் பெருமை’ என்ற அகந்தையோ ஒரு துளியும் இல்லாமல் இருப்பவனே ஆசாரியன். வேறு எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் ஆசாரியனின் ஆன்ம முன்னேற்றம் தடம் புரண்டுவிடும்!! இதனாலேயே நல்ல ஆசாரியர்களாகிய மகான்கள் நற்குணங்கள் நிறைந்த சீடர்களைப் பணிவர்.
இராமானுசரின் மறு அவதாரமாகிய மணவாள மாமுனிகளின் குருவாம் திருவாய்மொழிப்பிள்ளை ஒரு நாள் தமது தோட்டத்தில் விளைந்த கீரையை தமது சீடரான மணவாள மாமுனிகளுக்குக் கொடுத்தனுப்ப, மாமுனிகளும் ‘ஐயனே! குருவாகிய தங்களுக்கு அன்றோ சீடனாகிய அடியேன் இப்படி சேவை செய்யவேண்டும்! தாங்கள் இப்படிச் செய்தீரே!’ என்று அஞ்சி வியக்க, அதற்கு திருவாய்மொழிப்பிள்ளையும் ‘தங்களைப் போன்ற ஒரு அருமையான ஒருவரை இதுவரைக் அடியேன் கண்டதில்லை. உம்மை இறைவனின் அவதாரமாகவே நினைக்கின்றேன்’ என்று விடையளித்தார்!
பார்ப்பன குலத்தில் உதித்த திருவாய்மொழிப்பிள்ளை தமது ஆசாரியனாம் பிள்ளைலோகார்யரின் ஆணைப்படி ஈழவ குலத்தில் உதித்த விளாஞ்சோலைப்பிள்ளையிடம் ஸப்த காதை மற்றும் ஸ்ரீவசன பூஷணம் ஆகிய ஸ்ரீவைணவத்தின் சாரமான கருத்துக்களைக் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மயர்வற மதிநலம் உடைய நம்மாழ்வார் போன்றவர்களும், ஆவிக்கு நேரே அழுக்காகிய மூன்று குற்றங்களைக் கடந்த திருவாய்மொழிப்பிள்ளை போன்றவர்களுமே ‘ஆசாரியன்’ என்ற பொறுப்பை ஏற்று அகந்தை இன்றி அக்கடமையைச் செய்யத் தகுதியானவர்கள்.
No comments:
Post a Comment