Search This Blog

Tuesday, 29 May 2018

பணிவே உருவான ஸ்ரீவைணவ ஆசாரியர்கள்


முன்னுரை

'ஒரு நல்லாசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும்?' என்று நம் பெரியோர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். ஒரு சில உதாரணங்கள் இதோ:

மேற்கோள்களுக்கு நன்றி: https://guruparamparaitamil.wordpress.com


பொருளுரை

நிகழ்வு # 1 - "'நான்' செத்தபின் வா"


நடாதூரம்மாள் என்ற ஒரு ஆசார்யர் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம்) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான் “'நான்' செத்தபின் வா" என்று அனுப்பிவிட்டார்.

அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்” என்றார்.

அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்குச் சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார்.


நமக்கான முக்கியமான குறிப்பு: சீடனின் இலக்கணமே இப்படியென்றால் சீடனுக்கு ஞானம் போதிக்கும் ஒரு நல்லாசிரியர் எப்படி இருக்கவேண்டும்!!!


நிகழ்வு # 2 - "ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது"


ஒரு நாள் இராமாநுஜர் அவருடைய சிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது அவருடைய குருவான பெரிய நம்பிகள் இராமாநுஜரை விழுந்து சேவித்தார்.

பிறகு பெரிய நம்பியிடம் "ஏன் சேவித்தீர்?" என்று எல்லோரும் கேட்க “ஆளவந்தார் தம்முடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது" என்று கூறினார். ஆளவந்தார் பெரிய நம்பிகளுடைய குரு!! தமது குருவைத் தமது சீடரில் கண்டார்!!

'வார்த்தாமாலை' என்ற கிரந்தத்தில் ஒரு முக்கியமான வரி - “ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருப்பார்கள்.” இதன்படியே வாழ்ந்தவர் பெரிய நம்பிகள்.


நமக்கான முக்கியமான குறிப்பு: ஒரு நல்லாசிரியர் தம்மை ஒரு ஆசாரியன் என்றே நினைக்கமாட்டார்!!!


நிகழ்வு # 3 - "குருவி தலையில் பனங்காய்"


யஞ்ய மூர்த்தி என்பவர் பரந்த சாஸ்திர ஞானத்தினால் சிறந்த பேரும் புகழும் பெற்று நிறைய சிஷ்யர்களுடன் திகழ்ந்தார். இராமாநுஜரின் பெரும் புகழை அறிந்து அவருடன் வாதம் செய்ய விரும்பினார்.

விவாதம் ஆரம்பித்து 16 நாட்கள் சென்றன. அவர்களின் வாதத் திறமை இரண்டு யானைகள் சண்டை போடுவது போல இருந்தது. 17ம் நாள் அன்று வெற்றி யஞ்ய மூர்த்தியின் பக்கம் இருந்தது போல் தெரிந்தது. இராமாநுஜர் வருத்தம் கொண்டார். அவர் வணங்கும் பேரருளாளன் கனவில் தோன்றி "வருத்தப்பட வேண்டாம்; தகுந்த புத்திசாலியான சிஷ்யனை உம்மிடம் கொண்டு வருவதன் நோக்கத்திலேயே இந்தத் தெய்வீக லீலை" என்றார்.

18ம் நாள் இராமாநுஜர் அவைக்கு வந்த உடனேயே அவரின் கம்பீரமான ஒளியை உணர்ந்தார் யஞ்ய மூர்த்தி. தன்னுடைய தோல்வியை வணங்கி ஒப்புக்கொண்டார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜரால் பெயரிடப்பட்டார்.

அநந்தாழ்வான், எச்சான் முதலானோர் இராமாநுஜரின் சிஷ்யர்களாவதற்கு ஸ்ரீரங்கம் வந்த போது, இராமாநுஜர் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கீழ் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார். ஆனால் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அவரது சிஷ்யர்களிடம் "இராமாநுஜர் குருவி தலையில் பனங்காயைக் கட்டியது போலச் செய்தருளினார். இராமாநுஜரே உபாயம் என்று எப்பொழுதும் நினைத்து இருங்கள்" என்று அறிவுறுத்தினார்!!!


நமக்கான முக்கியமான குறிப்பு: ஒரு நல்லாசிரியர் தம்மை ஞானம் உடையவர் என்றே நினைக்கமாட்டார்! தம்மை ஒரு அறிவிலி என்றே மனப்பூர்வமாக நினைத்து இருப்பார். இராமாநுஜரே 17 நாள்கள் வாதம் புரியவேண்டியிருந்தவர்!! பரமனாலேயே 'புத்திசாலி' என்று பாராட்டப்பெற்றவர்!! அவரே இவ்வளவு பணிவுடன் வாழ்ந்தார் என்றால் நாம் எப்படி இருக்கவேண்டும்?


நிகழ்வு # 4 - "இப்பெருமைகள் யாவும் தேவரீரையே சாரும்"


ஒரு முறை ஸ்ரீவைஷ்ணவர்கள் இராமாநுஜரின் சீடரான எம்பாரின் ஞானம், பக்தி, வைராக்கியம் உள்ளிட்ட நற்குணங்களைக் கொண்டாட, எம்பாரும் “ஆம்! உண்மைதான்!” என்று ஆமோதித்தார்.

இதைக் கண்ட இராமாநுஜர் இவரை அழைத்து “உம்மை ஒருவர் புகழ்ந்தால் அதை ஏற்பது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் அல்லவே? ” என்று கேட்க, எம்பார் அதற்கு "அடியேனைத் திருத்திப்பணிகொண்டது தேவரீர் ஆகையால் இப்பெருமைகள் யாவும் தேவரீரையே சாரும்" என்று இராமாநுஜரிடம் பணிவுடன் விண்ணப்பம் செய்தார்.

அவரது பணிவும் குரு பக்தியும் தூய்மையாய் இருப்பதைப் பார்த்த இராமாநுஜர் அவரை அன்புடன் அணைத்துக்கொண்டார்.


நமக்கான முக்கியமான குறிப்பு: ஒரு நல்லாசிரியர் தம்மை அனுட்டானம் உடையவர் என்றே நினைக்கமாட்டார்! அவரது குணங்கள் யாவும் ஆசார்யாரின் அருளால் ஏற்பட்டவை என்பார்.


நிகழ்வு # 5 - "நீரே உலகாரியன்!"


நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. நம்பிள்ளையின் உபன்யாசங்களைக் கேட்க நல்ல கூட்டம் கூடும். இதனால் முதலியாண்டான் திருவம்சத்தில் வந்துதித்தவரான கந்தாடை தோழப்பர் என்பவருக்கு வருத்தம். ஒரு நாள் அது கடும் சொற்களாக வெளி வந்தது - கோயிலிலேயே நம்பிள்ளையை ஒருமையில் ஏசிவிட்டார். நம்பிள்ளை மறுவார்த்தை ஒன்றும் பேசவில்லை.

பிறகு தனது இல்லம் திரும்பிய கந்தாடை தோழப்பருக்கு, நடந்தவற்றைப் பிறர் வாயிலாகக் கேட்டறிந்த அவரது மனைவியார், நம்பிள்ளையின் பெருமைகளை உணர்த்தி, நம்பிள்ளையிடம் மன்னிப்பு வேண்டுவது பற்றியும் அறிவுறுத்தினார். தம் குற்றத்தை உணர்ந்த கந்தாடை தோழப்பர் மன்னிப்பு வேண்டப் புறப்பட்டார். வாயிற்கதவுகளைத் திறந்த பொழுது அங்கே ஒருவர் காத்துக்கொண்டிருப்பதைக் கவனித்தவர், அது நம்பிள்ளை என்றும் உணர்ந்தார்.

தோழப்பரைக் கண்ட நம்பிள்ளை அவரது பதம் பணிந்தார்! தோழப்பர் திருவுள்ளம் கன்றும் வண்ணம் தாம் அபசாரம் செய்து விட்டதாகக் கூறினார். தம்மீது குற்றம் இருந்த போதிலும் அதை நம்பிள்ளை பெருந்தன்மையோடு தானெடுத்துக்கொண்டு மன்னிப்பு கோரியதைக் கண்ட தோழப்பர் நம்பிள்ளையின் பெருமையைக்கண்டு பெரிதும் திடுக்கிட்டார்.

உடனே தோழப்பர் நம்பிள்ளையின் பதம் பணிந்தார். இத்தனை பெருமைகளால் நிரம்பப்பெற்றும் பணிவோடு இருக்ககூடிய ஒருத்தரே உலகாரியன் என்று போற்றப்படவேண்டியவர் என்றும் அது நம்பிள்ளையிடத்தே இருப்பதால் அவரே உலகாரியன் என்று போற்றப்பட வேண்டியவர் என்றும் தோழப்பர் முழங்கினார். பின் நம்பிள்ளை மீது தனக்கு இருந்த வெறுப்பைத் துறந்து, தோழப்பர் தமது மனைவியாரோடு நம்பிள்ளையிடம் கைங்கர்யத்தில் ஈடுபட்டார்.


நமக்கான முக்கியமான குறிப்பு: ஒப்பற்ற பணிவே நம்பிள்ளையை உலகாரியன் என உயர்த்திய உயிர்நாடியான குணம்!


முடிவுரை

ஸ்ரீவைணவத்தில் யாரும் தாமாக ஆசாரியன் ஆகவில்லை. ஆசாரியர்கள் இறைவனாலோ அல்லது அவர்களது ஆசாரியர்களாலோ தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனாலும் அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு நாளும் தம்மை ஆசாரியராக நினைத்ததில்லை. மற்ற சீடர்களும் இறைவனையோ ஆசாரியானையோ தம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் குறை கூறியதில்லை. அப்படிப்பட்டத் தூய குரு பக்தியால் ஒளி வீசும் குரு பரம்பரையை உடைய பெருமை ஸ்ரீவைணவத்தின் சிறப்பு.

பராசர பட்டர் இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வானின் குமாரர். ஒரு நாள் இராமானுஜர் தமது சீடர்களிடம் "இவரை நம்மைப் போல் நினைத்து இருங்கள்" என்று அருளினார். பராசர பட்டரைவிட வயதில் மூத்தவர்களும் 74 முக்கிய சீடர்கள் என்று இராமானுஜரால் நியமிக்கப்பெற்றவர்களுமான கிடாம்பியாச்சான், திருமலை அநந்தாழ்வான் போன்றவர்களும் பராசர பட்டரை மிக்க பக்தியுடன் ஆசாரியனுக்குச் சமமாக நடத்துவார்கள்.

நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளை 1000 பாசுரங்களுக்கு உரை எழுதினார். ஆனால் இன்னொரு சீடரான பெரியவாச்சான்பிள்ளை 4000 பாசுரங்களுக்கும் உரை எழுதினார். குரு பரம்பரையில் நம்பிள்ளையின் அடுத்த படியில் வடக்குத்திருவீதிப்பிள்ளைதான் உள்ளார். இதனால் பெரியவாச்சான்பிள்ளை பொறாமை கொண்டாரா? தாம் திருவாய்மொழிக்கு எழுதிய உரையான 24000 படியைவிட வடக்குத்திருவீதிப்பிள்ளை எழுதிய 36000 படி சிறப்பாக உள்ளது என்று கொண்டாடினார்!!

மணவாள மாமுனிகளின் சீடரான பட்டர்பிரான் ஜீயர் என்பவர் அவர் எழுதிய 'அந்திமோபாய நிட்டை' எனும் நூலில் "இதை எழுதுபவர் குருநாதர் மணவாள மாமுனிகள். அடியேன் வெறும் எழுத்தாணியே," என்று அருளியுள்ளார்.

அடியார்களுக்கு அடியாராக இருக்க முனைவதே உண்மையான ஸ்ரீவைணவனின் இலக்கணம். இதுவே அனைத்து ஸ்ரீவைணவப் பெரியோர்களும் நமக்கு உணர்த்திச் சென்றது.


No comments:

Post a Comment