யுகம் யுகமாகத் திகழும் தமிழகம் |
Image Credit: https://pbase.com/svami/image/91766806 |
முன்னுரை
இதிகாச புராணங்கள் யாவும் வரலாற்று உண்மைகள். முன்னோர்கள் காலத்தை வெறும் ஆண்டுகள், நூற்றாண்டுகள் என்பதோடு நின்றுவிடாமல் யுகங்கள், கல்பங்கள், மன்வந்திரங்கள் என்று பலவாகப் பிரித்தனர்.
ஒவ்வொரு யுகத்திலும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன.
தமிழர்களைப் பற்றி முந்தைய யுகங்களிலேயே இதிகாச புராணங்களில் பேசப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுக்கள் இதோ:
சத்திய யுகத்தில் தமிழர்கள் பற்றிய குறிப்பு
இதுவே முதல் யுகம். இந்த யுகக் காலத்தில் திருமால் கருடப் புள்ளூர்ந்து கஜேந்திரன் என்ற யானைக்கு அருள் செய்தார். இந்தக் கடந்தகால நிகழ்வைப் பற்றிப் பேசும்போது ஸ்ரீசுக முனிவர் கூறுவது:
ஸ்ரீமத் பாகவதம், 8-ம் ஸ்கந்தம், 4-ம் அத்தியாயம்:
"இந்த கஜேந்திரன் என்ற யானை முற்பிறவியில் திராவிடதேசத்தில் இந்திரதியும்னன் என்ற உயர்ந்த பாண்டிய மன்னனாகப் பிறந்தான். வனம் சென்று தவம் செய்யும் காலம் வந்தபோது மௌன விரதம் மேற்கொண்டு குலாசாலம் என்கிற மலய மலைச் சாரலில் திருமால் மீது மனத்தைச் செலுத்தி வாழ்ந்துவந்தான்.
ஒரு நாள் அகத்திய முனிவர் தம் சீடர்களுடன் அங்கு வந்தபோது அவன் அவரைக் கவனியாமல் தியானத்தில் மூழ்கியிருக்க, அதனால் சினந்த முனிவர் இவனை யானையாகும்படிச் சபித்தார்."
குலாசலம் என்ற மலய மலைதான் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கில் இருக்கும் பொதிகை மலை. அகத்திய முனிவர் பற்றிய குறிப்பும் தென்னாட்டில் நடந்த ஒரு புராண நிகழ்வில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரேதா யுகத்தில் தமிழர்கள் பற்றிய குறிப்பு
இது இரண்டாம் யுகம். ஸ்ரீவால்மீகி முனிவர் இயற்றிய இதிகாச இரத்தினமான இராமாயணத்தில் அன்னை சீதையைத் தேடச் சுக்கிரீவன் படைகளை அனுப்பும் சமயம் தென்னகத்தை வருணிக்கும் பொழுது கூறியது:
ஸ்ரீமத் இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், சர்கம் 41:
"கோதாவரி நதியோடும் தண்டக வனத்தைத் தாண்டி ஆந்திரம், புண்டிரம், சோழம், பாண்டியம், கேரளம் ஆகிய தேசங்களில் நன்றாகத் தேடுங்கள். செழிப்பானதும் சந்தன மரங்கள் நிறைந்ததுமான மலய மலையிலும் தேடுங்கள்.
குறிப்பு: சுலோகத்தில் இதே வார்த்தைகள் - சோழம், பாண்டியம், கேரளம் - உள்ளன.
தேவ கன்னிகைகள் விளையாடும் தெய்வீகக் காவிரி ஆற்றினைத் தாண்டிச் சென்றால் உயர்ந்தவரும் ஆதவனைப்போல் மின்னுபவருமான அகத்திய முனிவரை மலய மலையின் உச்சியில் காண்பீர்கள். அவரது உத்தரவு பெற்றபின் முதலைகள் வாசம் செய்யும் பெரும் நதியான தாமிரபரணியை அடைவீர்கள். அந்தப் பாண்டிய நாட்டின் கபாடபுரம் என்ற ஊரைக் காண்பீர்கள். அங்கும் தேடுங்கள்.
பின்பு தெற்குக் கடலை அடைவீர்கள். அருகில் உள்ள மகேந்திர மலையின் ஒரு பகுதியை அகத்திய முனிவர் முன்னொரு காலத்தில் கடலில் அழுத்தினார். இந்த மலையிலிருந்துத் தாவியே கடலைத் தாண்ட முடியும்."
பாகவதத்தில் உள்ளபடியே இராமாயணத்திலும் பொதிகை மலையைப் பற்றியும் தமிழகம் (கேரள, சோழ, பாண்டிய நாடுகள்) பற்றியும், அகத்திய முனிவரைப் பற்றியும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துவாபர யுகத்தில் தமிழர்கள் பற்றிய குறிப்பு
இது மூன்றாவது யுகம். ஸ்ரீமத்பாகவதத்தில் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும்பொழுது ஸ்ரீசுக முனிவர் அருளியது:
ஸ்ரீமத் பாகவதம், 11-ம் ஸ்கந்தம், 5-ம் அத்தியாயம்:
“கலி யுகத்தில் திராவிட நாட்டில் நாராயணனின் தூய அடியார்கள் பலரைக் காணலாம்.
- தாமிரபரணி
- கிருதமாலை (வைகை)
- பாலாறு
- மிகவும் உயர்ந்ததாம் காவிரி
- மகாநதி (பெரியாறு)
இதனை ஆழ்வார்கள் மற்றும் இராமானுசன் அடிபணிந்த ஸ்ரீவைணவத் தொண்டர்களைக் குறிப்பதாகப் பெரியோர் பணிப்பர்.
இந்தக் குறிப்பினைக் கேரளத்தைச் சேர்ந்த நாராயண பட்டாத்திரியும் ஸ்ரீமத்பாகவதத்தின் சாரமான நூலாம் தமது ஸ்ரீமந்நாராயணீயத்தில் ஒரு கவியாக வடித்துள்ளார்.
இது மட்டும் அல்ல. மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் பொழுது தீர்த்த யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரத நாட்டின் பற்பல புண்ணியத் தலங்களில் சென்று அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடித் தத்தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். அதில் திராவிட நாட்டில் உள்ள கடல்நீரில் நீராடினர். இந்த இடத்தில் மஹாபாரதத்தில் வேத வியாசர் கூறுவது:
ஸ்ரீ மஹாபாரதம், வன பர்வம் - தீர்த்த யாத்திரா பர்வம், பகுதி 118:
"அகத்தியரின் திருநாமத்தால் விளங்குவதும் மிகவும் தெய்வீகமானதும் ஈடு இணையற்ற தூய்மை வாய்ந்ததுமாகிய திராவிட நாட்டின் கடற்பகுதியில் (தருமன்) நீராடினான்."
முடிவுரை
இதுவன்றி தமிழகத்தில் இருக்கும் எவ்வளவோ திருத்தலங்களைப் பற்றிய புராணங்கள் உள்ளன. உதாரணம்: ஸ்ரீரங்கம் திரேதா யுகத்திலே உருவான திருக்கோயில். இராமாயணமும் இதை இராமபிரானின் முடிசூட்டு விழாவைப் பற்றிய சர்க்கத்தில் வெளியிட்டுள்ளது. இது போல நிறையவே சான்றுகள் உண்டு. சிலவற்றையே இக்கட்டுரையில் பதிவு செய்தேன்.
இக்கட்டுரையில் வெளியிட்ட உண்மைகள் வாயிலாகத் தெரிவது:
1. அகத்திய முனிவர் பொதிகை மலைச்சாரலில் வாழ்ந்தவர்
2. பண்டைய யுகங்களிலேயே 'திராவிடம்' வடமொழியில் உபயோகம் செய்யப்பட்ட சொல்
3. பண்டைய யுகங்களிலேயே தமிழகம் திராவிட நாட்டைச் சேர்ந்தது
4. பண்டைய யுகங்களிலேயே சோழ, பாண்டிய, சேர நாடுகள் இருந்தன
5. நீர்வளமும் மற்றைய வளங்களும் நிறைந்த நாடாகத் தமிழகம் திகழ்ந்தது
6. பண்டைய யுகங்களிலேயே பக்திமான்கள் நிறைந்த நாடாக வடமாநிலத்தவரும் பாராட்டும் வண்ணம் தமிழகம் ஒளி வீசியது
மிக அருமையான கட்டுரை. பாரதப் பண்பாட்டின் சாரம் தமிழகம்.
ReplyDelete// பாரதப் பண்பாட்டின் சாரம் தமிழகம்.
Deleteநன்று சொன்னீர்!