Search This Blog

Wednesday 6 June 2018

சனாதன தருமத்தில் பல தெய்வ வழிபாடு ஏன்?


முன்னுரை

"'லிங்காயத்' என்று அழைக்கப்படும் வீரசைவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரை ஒரு தனி மதமாக அறிவிக்கலாம்" என்று அப்போதைய கர்நாடக அரசு வலியுறுத்திய பொழுது பாகிஸ்தானிலிருந்து (!) ஒரு அம்மையார் பிரபலமான ஒரு சமூக வலைத்தளத்தில் “லிங்காயத் என்பது ஒரு தனி மதம்தான். இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளனர். லிங்காயத் பிரிவினர் ஒரே தெய்வத்தை வழிபடுகின்றனர் அன்றோ?” என்று ஒரு பதிவு இட்டார். சிலர் அவரைச் சாடி பதிவுகள் இட்டனர். “விகிபீடியாவில் பார்த்தத்தைச் சொன்னேன். என் தவறைச் சுட்டிக்காட்டுங்களேன்! திருத்திக்கொள்கின்றேன்," என்று பின்பு வருந்தியும் இருந்தார்.

"சனாதன தருமத்தில் ஏன் இவ்வளவு தெய்வங்கள்?? அவர்களை அடைய ஏன் இவ்வளவு வழிகள்?? 'இதுதான் பரம்பொருள் - இறையடியை அடைய இதுதான் வழி - இதுதான் ஜீவனின் / இவ்வாழ்வின் தத்துவம்' என்று திட்டவட்டமாகச் சொல்வதை விட்டு ஏன் இவ்வாறு குழப்பவேண்டும்??" என்று பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் இது சனாதன தருமத்தின் பலம் - பலவீனம் அல்ல!! அந்நியர்களின் படையெடுப்புக்கள், பற்பல மதமாற்றங்கள் போன்ற தடைக்கற்கள் யாவற்றையும் கடந்து இன்றும் சனாதன தருமம் கம்பீரமாக நிற்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்! இது பற்றிய உண்மைகளை வழக்கம்போல் பெரியோர்களிடம் கேட்டதையே தெரிவிக்கின்றேன்.


ஜீவாத்மாக்களின் மனப்பக்குவங்கள் வேறுபடும்

நம் ஊர் சோதிடர்களிடம் கேட்டுப்பாருங்கள். எளிய ஆனால் சீரிய பரிகாரங்கள் கூறினால் எல்லோருக்கும் எளிதில் திருப்தி ஏற்படாது. "தினமும் இராம நாமம் 16 முறை சொல்லிவாருங்கள்" என்றால் சிலருக்கு எளிதில் நம்பிக்கை பிறக்காது. இதே "48 நாள்கள் காலை ஒரு வேளையாவது பாலும் பழமும் மட்டும் அருந்தி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஸ்ரீஇராமரை 18 முறை வலம் வந்து சந்நிதியில் 5 நெய் தீபம் ஏற்றுங்கள்" என்றால் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வர். சிலர் திடமான நம்பிக்கையுடன் மனமுருக தினமும் 16 முறை சொல்லி வேண்டிய வரங்கள் பெறுவர். சிலர் 'கடவுளிடம் விட்டுவிடுவேன். அவர் பார்த்துக் கொடுப்பதை ஏற்றுக்கொள்வேன்' என்று அமைதியாக இருந்துவிடுவர்.

மனப்பக்குவம் என்பது எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஏன்? ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மீகப் பயணத்தில் அவரவர் முற்பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின்படி ஒரு குறிப்பிட்ட அளவு ஆன்ம முதிர்ச்சியை அடைந்திருப்பர். அதற்கேற்ப ஒவ்வொருவரின் ஆன்மீக வேட்கைகள், ரசனைகள், மன உறுதியின் எல்லை ஆகியவை வேறுபட்டு இருக்கும்.

இந்த ஒரு உண்மையைப் சரியாகப் புரிந்துகொண்டாலே பல தெய்வங்கள் ஏன்? பல வழிபாட்டு முறைகள் ஏன்? பக்தியில் பல மனோபாவங்கள் ஏன்? என்ற அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்! அது மட்டும் அல்ல - சனாதன தருமத்தில் ஊன்றியவர்கள் மதமாற்றத்தில் ஏன் ஈடுபடுவதில்லை என்றும் விளங்கும்!


மறைகளின் கருணை

இறைவனின் மூச்சுக்காற்று என்று விவரிக்கப்படும் வேதங்களுக்கு 1000 தாய் தந்தையரின் அன்பை ஒன்று சேர்த்தால் எவ்வளவு அன்பு உருவாகுமோ அவ்வளவு அன்பு ஒவ்வொரு ஜீவாத்மா மேலும் பாகுபாடின்றி உண்டு.

அதனால்தான் "இதுதான் பரம்பொருள் - அடைய இதுதான் வழி" என்று எளிதில் அறுதியிட்டுச் சொல்லமுடியாத வண்ணம் மறைத்துச் சொல்லியதோடு நில்லாமல் அவரவர் ரசனைக்கு ஏற்ப பல தெய்வங்கள், பல வழிபாட்டு முறைகள், தெய்வத்தை அடைய பல வழிகள் என்று இயம்பின. இறைவன் இது ஒவ்வொன்றையும் கருணையுடன் ஏற்றுக்கொள்கின்றன என்பதுதான் அழகே!

தத்துவங்களில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று இறைவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதிலும் ஜீவனின் மோட்சம் என்பது என்ன என்பதிலும் பல கண்ணோட்டங்கள்! அவ்வளவு ஏன் - யார் பரம்பொருள் என்பதிலேயே சைவம், வைணவம் என்று பற்பல கண்ணோட்டங்கள்!!

இந்தக் கருத்துக்களைத்தான் நம்மாழ்வாரும் "அவர் அவர் இறையவர் குறைவு இலர் * அவர் அவர் விதி வகை அடைய நின்றனரே" என்றும் "வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே" என்றும் இரத்தினச் சுருக்கமாகப் பாடினார்.


மறைகளின் தீர்க்கதரிசனமும் மகான்களின் அவதாரங்களும்

கருணையுடன் செய்த மேற்கூறிய ஏற்பாடோடு இறைவன் நிற்கவில்லை! வேதங்கள் போற்றும் சனாதன தருமத்தைக் காப்பதில் இறைவனின் ஊற்றம் அலாதியானது.

யுகங்கள் தோறும் தருமத்தில் நாட்டம் குறையும் என்பதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு யுகத்திலும் இறைவனின் எதிர்பார்ப்பும் குறைகின்றது - தருமம் தழைக்கும் சத்திய யுகத்தில் கடுமையான தவங்களால் மட்டுமே அடையக்கூடிய வரங்களைத் தருமம் பலம் குறைந்திருக்கும் கலி யுகத்தில் இறைவனின் திருநாமங்களைப் பாடியே பெறமுடியும்! ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற மகான்கள் கலியுகத்தில் பிறந்ததின காரணமும் இதுதான்.

எப்பொழுதெல்லாம் தருமம் துயர் அடைகின்றதோ அப்பொழுதெல்லாம் இறைவன் நேரடியாகவோ அல்லது தமது உயிர் போன்ற மகான்களையோ அனுப்பி தருமத்தைக் காக்கின்றான்.

* பௌத்தம், சமணம் ஆகிய மதங்களில் ஈடுபாடு கொண்டு பலரும் வேதங்கள் போற்றும் வைதீக மதத்தை விட்டுச் சென்ற பொழுது ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் அவதாரம் நிகழ்ந்தது.
* இஸ்லாமியர்கள் தலையெடுத்த காலத்தில் ஸ்ரீ இராமானுசரின் அவதாரம் நிகழ்ந்தது.
* ஸ்ரீ வியாசராய தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சமர்த்த இராமதாஸர் போன்ற மகான்களின் பெருமையைக் கண்டு இஸ்லாமிய மன்னர்களின் அநீதிகள் குறைந்தன.


ஏன் சனாதன தருமத்தைச் சேர்ந்தவர் எவரும் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை?

வேதங்களுக்குப் புறம்பான மதத்தினர் போற்றும் தெய்வங்களையும் இறைவன் அந்தச் சமுதாயத்தினருக்குச் செய்த ஒரு ஏற்பாடாகவே சனாதன தருமம் பார்ப்பதால் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. "ஒவ்வொரு ஜீவன் உள்ளும் பரமன் உறைகின்றான்; அவர்களது ஆன்மாக்களும் இறைவனின் பிள்ளைகளே; இந்தப் பிறவியில் அவர்கள் செய்யும் இறைவழிபாடும் நல்வினைகளும் வீணாகா; அவர்களும் நம்மைப் போலவே படிப்படியாய் முன்னேற்றம் அடைவர் - ஒரு நாள் பிறப்பிறப்புச் சூழலிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவர்" என்ற ஒரு உயர்ந்த கண்ணோட்டம்.


முடிவுரை

சனாதன தருமத்தின் இந்த அளப்பரிய கருணையையும் தீர்க்க தரிசனத்தையும் பெருந்தன்மையையும் புரிந்துகொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் நம் எல்லோரையும் இந்துக்கள் என்று அழைக்க இன்று அதுவே நிலைத்துவிட்டது. இதுவும் ஒரு வகையில் நன்மைதான். ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவோம். சனாதன தருமம் தழைக்க அவரவர் விரும்பும் தெய்வத்தை மனமுருக வேண்டுவோம்.

*** "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" ***


No comments:

Post a Comment