Search This Blog

Monday 23 July 2018

4.1 வைரமுத்துவின் கட்டுரை ('தமிழை ஆண்டாள்') - ஸ்ரீவைணவ ஆசாரியர்களின் பெருமை அறியாமை


   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   





1. உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.


திருப்பாவையில் 19ம் பாசுரத்தில் “பஞ்ச சயனத்தில் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!” என்ற வரியைப் பற்றிப் பேச்சு.

** "நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது" **

அதாவது: “இந்த வரிகளில் பாலியல் ரீதியான பொருள் மட்டுமே உள்ளது. ஆனால் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் இந்தப் பிரபந்தத்தைக் காக்கத் (இரட்சிக்கத்) தமது தீராப்புலமையைப் பயன்படுத்தி, இந்த வரிகளின் நேரடியான பொருளை அநியாயமாக மறைத்து, தத்துவம் நிறைந்த உருவகங்களைக் கொண்டு வேறுபொருள் கூற முற்படுவர். அதை நயம் என்று (ஒருவாறு) ஏற்கலாமே ஒழிய, உண்மையில் இந்த வரிகளில் உள்ளது பாலியல்தான்” - இதுவே "கவிப்பேரரசர்" வைரமுத்து கூறும் "கருத்து."

வைரமுத்துவின் இந்த (விதண்டா)வாதம் சரி என்றால் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள்:

1. திருப்பாவையிலேயே மற்றப் பாசுரங்களுக்கும்
2. பொதுவாகவே நாயகி மனோபாவம் அல்லாத மற்ற மனோபாவங்களுக்கும்
3. இதிகாசம் மற்றும் புராணச் சம்பவங்களுக்கும்

நேர்பொருளை மட்டும் கூறி இருக்கவேண்டும் அல்லவா? அதற்கெல்லாம் கூட தத்துவ ரீதியாகப் பொருள் அருளியுள்ளனரே!! அவற்றில் “தீராப்புலமையின் திமிர் காட்டி நயம் பேசி அநியாயமாக (???!!!) உண்மைப் பொருளை மறைக்க” அவசியம் என்ன??

ஏன், இதே திருப்பாவை 19ம் பாசுரத்திலேயே "தத்துவம் அன்று" என்றுத் தெளிவாக முழங்கித் திருமகளின் தத்துவமான "புருஷகாரம்" - அதாவது நம் போன்ற ஜீவாத்மாக்களைப் பரமனிடம் சேர்ப்பிக்கும் தன்மையைச் சொல்கின்றதே!! இதை ஏன் வைரமுத்து பேசவில்லை?? இது மட்டும் நியாயம் பாராட்டல் ஆகுமா??!!

சரி. ஒரு மிகவும் புகழ் வாய்ந்த ஆன்மீகச் சம்பவத்தை எடுத்துக்கொள்வோம் - ஆதிப்பிரான் அன்று ஆனைக்கு அருள் செய்தமை. குளத்தில் தாமரையைப் பறிக்கும் பொழுது, முதலை யானையின் காலைப் பிடிக்க, இரு விலங்குகளும் பற்பல வருடங்கள் போராட, யானைக்குப் பலம் குன்றி ஆதிமூலமேயெனக் கதற, அரியும் கருடப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டு, முதலைக்குச் சாபம் தீர்த்து யானையைத் திருநாடு கூட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்துவினாலேயே கூட (!) பெண்பித்தில் தோய்ந்தச் சிற்றின்ப உணர்வுகளைக் காண முடியாது என்று நம்புகின்றேன்.

இந்தச் சம்பவத்திலும் ஆசாரியர்கள் தத்துவார்த்தம் பேசுவார்கள்! எப்படி?

• குளம்: பிறவிக்கடல்

• முதலை: உலகியலில் பற்று

• யானை: ஜீவாத்மா

• யானை அந்த முதலையின் பிடியிலிருந்து விடுபடப் போராடுவது: ஜீவாத்மா தன்னைக் காக்கத் தானே முயல்வது

ஜீவாத்மா தன்னைத் தானே விடுவித்துக்கொள்ள முயல்வதைவிட்டுப் பரமனிடம் சரண் புகுந்தால் அவன் தவறாமல் இந்தப் பிறவிக்கடலிலிருந்து விடுவிப்பான் - இது தத்துவார்த்தம்!

இதில் எதை "நியாயம் இல்லாமல் மறைக்க" ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் தம் "தீராப் புலமையின் திமிர்" காட்டிவிட்டனர்????

திருமங்கையாழ்வார் அருளிய சிறிய திருமடலில் இதே சம்பவம் குறித்த ஒரு வரி - “நாராயணா! மணிவண்ணா! நாகணையாய்! வாராய்! என் ஆரிடரை நீக்காய்” என்ற இடத்தில் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் கூறிய ஒரு பொருள் என்ன தெரியுமா? “யானை இப்படிப் பரமனை அழைத்ததில் ‘இடர்’ என்று குறிப்பிட்டது முதலையின் பிடியை அல்ல - தான் கொய்த அத்தாமரை மலரை அவன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளும் முன் தன் உயிர் போய்விடுமோ என்ற அச்சமே அதன் இடர்” என்பர்! அந்த அளவிற்கு யானையின் மனோபாவத்தைப் புரிந்துகொண்டே பொருள் கூறுவர்!

ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் வெற்று மானுடர்களைத் துதி பாடியும் பெண்பிள்ளைகளை வருணித்தும் பணத்திற்காகத் தமிழை விற்று வயிறு வளர்த்தவர்கள் அல்ல. அவர்களுடைய எண்ணங்களின் உயர்வு, வாழ்க்கைமுறையின் தூய்மை, செயல்களின் கம்பீரம், பேச்சின் கனிவு ஆகியவற்றை நம்மால் எள்ளளவும் நடைமுறைப்படுத்த இயலாது.

பெரியாழ்வார் திருமொழியில் ("வண்ணமாடங்கள் திருகோட்டியூர்" எனத் தொடங்கும்) முதல் பதிகத்தில் ஒரு பாசுரம்:

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன் நங்காய்.

"தொட்டிலைக் காலால் உதைப்பது, இடுப்பில் எடுத்துக்கொண்டால் இடுப்பை முறிப்பது, மார்வில் அணைத்துக்கொண்டால் வயிற்றிலே பாய்வது என்று கண்ணன் செய்வதைப் பார்த்தால் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்" என்று யசோதை கூறுகின்றாள்.

இங்கே "மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்" என்ற வரிக்கு ஆசாரியர்கள் விளக்கிய பொருள் மிகவும் சுவையானது. "மிகச்சிறிய குழந்தையாகிய இவனுடைய செய்கையைப் பொறுக்கும் வல்லமை எனக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன்" என்று பொருள் சொல்லலாம். ஆனால் பாடுவது பெரியாழ்வார்! கண்ணனுக்கு என்னாகுமோ என்று பொங்கும் பரிவால் மிகவும் கலங்கும் ஆழ்வார்! அதனால் "இந்த செய்கைகளையெல்லாம் தாங்குவதற்கு வேண்டிய சக்தி இந்தக் குழந்தைக்கு இல்லாமலிருப்பதனால் நான் மெலிந்தேன்" என்று பொருள் என்பர்!

என்னே ஒரு ஆழமான சிந்தனை! என்னே ஒரு கம்பீரம்! ஆழ்வார் மீது என்னே ஒரு நேர்மையான பக்தி! இவர்களின் திருத்தாள்களின் ஒரு திருத்துகளுக்கு நம் போன்றவர்கள் சமமாக முடியுமா?

சங்கப்பலகை நம்மாழ்வாரின் தெய்வப் பாசுரங்களின் ஈடற்ற மகிமையை வெளிப்படுத்திய பொழுது அந்தச் சங்கப் புலவர்களின் தலைவர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகின்றது:




திருப்பாவை என்ற சங்கத் தமிழ் மாலை முப்பதில் வைரமுத்து இந்த ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டது ஏன்?

வைரமுத்து திருப்பாவையில் இந்த வரிக்கு வேறுபொருள் கூட்டித், பெண்பித்தில் தோய்ந்தத் திரைப்படப் பாடல்களில் வெளிப்படும் அவருடைய சிற்றின்பப் "புலமையின்" திமிர் காட்டி, நாத்திக ரட்சையில் வலிந்து விதந்தோதினாலும் அதை அறியாதார் மனங்களில் நஞ்சு விதைத்தல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. (திருப்பாவையின் மற்றத் தெய்வீக வரிகளைப் போலவே) இதற்கும் ஆன்மீகப் பொருளே ஏற்புடைத்து.




2. குலசேகர ஆழ்வார் குரலில், ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது. நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது.

இந்த வரிகளின் தோரணையில் சங்ககாலப் புலவர்களுக்கோ அவர்களது தமிழிற்கோ மதிப்பு அளித்ததுபோலத் தெரியவில்லை. ஏதோ சிறுபிள்ளைகளுக்குத் தலைமை ஆசிரியர் சான்றிதழ்கள் அளிக்கும் தோரணையில் எழுதியிருப்பதுபோலத் தெரிகின்றது!

ஆழ்வார்களின் பாடல்கள் தெய்வீகமானவை. கம்பர் பெருமானின் காவியமும் அப்படியே. ஆழ்வார் பாசுரங்களின் உரைகள் மனம் போன போக்கில் தான்தோன்றித்தனமாக எழுதப்படவில்லை - அவை அனைத்தும் அப்பழுக்கற்ற ஒப்புயர்வற்ற குரு பக்தியால் மலர்ந்தவை!

ஆழ்வார்களின் தெய்வீகப் பாடல்களுக்கு நாத்திகவாதிகள் பொருள் கூற முற்றிலும் தகுதியற்றவர்கள். அதை உணராமல் "இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து, "மட்டுமே முன்னுரிமை பெறுகிறது," "திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது" என்று அனைத்தும் அறிந்தவர் போல் (ஆனால் தப்பும் தவறுமாக) எழுதியிருக்கின்றார்.




3. எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான். இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்தபிறகும் ஆண்டாள் அருளிச் செல்லும் அருஞ்செய்தி இதுதான்.

"உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது...இறைவா நீ தாராய் பறை" என்று ஆண்டாள் முழங்கியிருக்க இவர் "இறைவனைக் கழித்தபிறகும்" என்று நகைச்சுவை விருந்து அளிக்கின்றார்!!! உரையாசிரியர்களின் பொருள்களைத் தள்ளிவிட்டார். இப்பொழுது நூலை அருளிய ஆண்டாளின் செய்தியையே தள்ளுகின்றார்???!!! இனி மிச்சம் என்ன இருக்கும்??

ஆண்டாளின் உடல் உள்ளம் உயிர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் திருமால் பக்தியைக் கழித்தால் ஒன்றுமே மிஞ்சாது! அந்த வெற்றிடத்திலிருந்து இவர் “அருஞ்செய்தியை” வேறு தேடிக் (?!) கண்டுபிடித்திருக்கின்றார்!!

இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள் சாலமன் பாப்பையா அவர்களை அறிந்திருப்பீர்கள். அவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். அவர் இன்பத்துப்பாலில் உள்ள ஒரு குறளுக்கு எழுதியிருக்க்கும் உரையைப் பாருங்கள்:



"தாமரைக்கண்ணனாகிய திருமால்" என்று உரை செய்துள்ளார். தம்முடைய மதக் கருத்துக்களைத் திணித்தாரா? இதுதான் நேர்மை. இவரை யாராவது குறை கூறினார்களா??

நாத்திகவாதிகளுக்கும் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற பழுத்த ஆன்மீகவாதிகளின் எழுத்துக்களுக்கும் என்ன தொடர்பு?? அவர்களின் தமிழை மட்டும்தான் ரசிக்கமுடியும். அப்பாடல்களுக்கு நாத்திக பொருளை எப்படியாவது திணிக்க முயன்றால் இப்படி வடிகட்டின அபத்தமாக மட்டுமே இருக்கும்.

உரையாசிரியர்களின் தத்துவ விளக்கங்களைப் புறக்கணித்தது மட்டுமின்றி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவையில் சராசரித் தமிழனுக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் திருமால் பக்தியையும் புறக்கணித்து நாத்திகவாதியான வைரமுத்து மனம் போன போக்கில் தரம் தாழ்ந்த பெண்பித்தர்களின் கண்ணோட்டத்தில் பொருள் கூறுவது ஏன்??

வைரமுத்து நாத்திகம் பேச விரும்பினால் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் இவர் என்ன சொல்ல விரும்புகின்றாரோ அதை இவருடைய பாடல்களாகவே வெளியிட்டு மகிழலாம். அதை விடுத்து தான் சொல்ல விரும்புவதை எப்படியாவது ஆண்டாளின் பாடல்களில் புகுத்திவிட இவ்வளவு துடிப்பது ஏன்??





*** ஸ்ரீஇராமாநுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகள் அருளியவை ***


ஆசாரியர்கள் ஏற்றம் என்ன என்பதை உணராமல் பேசுபவரை விட்டு ஆசாரியர்களையே பற்றி வாழ்வதன் அவசியம்
 
ஆசாரியர்கள் என்ன கற்பித்தனர் என்பதை முறையாகப் பயிலாமல் தனது கருத்தே சரி என்று பேசுபவர்கள் மூர்க்கர்கள்
 





   1. பின்னணி       2. முன்னுரை       3. பொருளுரை       4. பட்டியல்       5. முடிவுரை   





No comments:

Post a Comment