Search This Blog

Tuesday 1 November 2022

பொன்னி சூழ் திருவரங்கச் செல்வனார்

அனைத்து ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
பொன்னி சூழ் திருவரங்கச் செல்வனார்


Image Source: https://srirangaminfo.com/srirangamphotos/Srirangam-temple-photos/


முன்னுரை
 
திருவருள் பொழியும் ஐப்பசி மாதம். திருவரங்கத்தில் திருக்காவிரி நல்நதி பாய்ந்து ஓடி வரும் மாதம். அந்த ஐப்பசியில் இன்று திருவோணம் நட்சத்திரம். திருவரங்கனைப் பாடிய ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார் ஆகிய ஸ்ரீ பொய்கையாழ்வார் தேசுடனே தோன்றிய ஒப்பிலவா நாள். வெறி பிடித்த முகலாயாத் தாக்குதலின் போது, தமது நூறு வயதிற்கும் மேற்பட்ட திருமேனியைப் பொருட்படுத்தாமல், திருவரங்கத்து எம்பெருமானைக் காத்துக் கொடுத்த ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் திருவவதாரம் செய்த நன்னாளும் இதுவே.

இந்த நன்னாளில், பொன்னி சூழ் திருவரங்கனைப் பற்றி ஆழ்வார்களும் ஆசிரியர்களும் அருளிய பற்பல நல்முத்துக்களில் மிகச் சிலவற்றைச் சுவைத்து இன்புறுவோம், வாரீர்!

திருவரங்கமோ பெரிய கோயில். திருவரங்கனோ பெரிய பெருமாள். அவனது மணவாட்டியோ பெரிய பிராட்டியார் ஆகிய ஸ்ரீரங்கநாயகி. திருவரங்கனின் மாமனாரோ ஸ்ரீ பெரியாழ்வார். பெரும்பான்மையான பாசுரங்களின் உரைகளை அருளியவரோ ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. திருவரங்கனின் ஆசிரியரோ ஸ்ரீ பெரிய ஜீயர் ஆகிய ஸ்ரீ மணவாள மாமுனிகள். ஆதலால், இக்கட்டுரையும் சற்றே பெரியதாக இருக்கும். பொறுமையுடன் படித்துச் சுவைக்கும்படி வேண்டுகின்றேன். :-)




பகுதி 1 - திருவரங்கம் திருத்தலத்தின் பெருமை


பொன்னி சூழ் திருவரங்கம்!


Image Source: https://anudinam.org/2016/10/28/thula-snanam/


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 23
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
முதல் இரண்டு வரிகளுக்கான உரையும் அதன் பின்னணியில் உள்ள புராண நிகழ்ச்சியும்:

108 திவ்யதேசங்களுள் ஒன்றான திருச்சேறை என்ற திருத்தலத்தின் வரலாற்றில் இந்நிகழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது:

ஒரு முறை, கங்கைத் தாயும் காவிரித் தாயும் "நம்மில் யார் உயர்ந்தவர்?" என்று வாதம் புரிந்து, நான்முகனாரிடம் சென்று முறையிட, அவரும் "பரம்பொருளான திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையே சிறந்தவள்" என்று தீர்ப்பு சொல்ல, வருத்தமுற்ற காவிரித்தாய் "கங்கையைக் காட்டிலும் நான் சிறந்தவள் என்று பெயர் பெற என்ன வழி?" என்று கேட்க, "பரம்பொருளான திருமாலே உனக்குத் தஞ்சம்!" என்று நான்முகனார் வழி காட்டினார்.

காவிரித் தாயும் கடுமையாகத் தவம் புரிந்து, திருமாலை நேரில் தரிசிக்கும் பேறு பெற்று விளங்க, "காவிரியே! யசோதையின் தாய்மடியில் யாம் கண்ணனாகத் தவழ்ந்தோம். அது போல, உனது தாய்மடியில் ['காவிரி நடுவு பாட்டு'] ஸ்ரீரங்க சிசுவாக வந்து தவழ்வோம். அப்போது, நீ கேட்கும் வரம் சித்திக்கும்," என்று பெருமானும் அருள, 'திருவரங்கனே விரும்பி வந்து பள்ளிகொண்ட திருக்காவிரி ஆறு! திருவரங்கனின் திருவடிகளைத் தனது நீரால் எப்போதும் விளக்கி, அதனால் சொல்லொணாத பெருமை பெறும் திருக்காவிரி!' என்று திருக்காவிரியும் இன்று பெயர் பெற்றுத் திகழ்கின்றாள்.

திருவரங்கத்து எம்பெருமானின் திருவடிகளுக்குத் தொண்டு புரிய, பொங்கும் நீருடன், பரந்து, பாய்ந்து வருகின்றாள் திருக்காவிரித்தாய். திருக்காவிரி நீராலேயே திருவரங்கன் திருமஞ்சனம் கண்டு அருள்கின்றான். இப்படி, திருவரங்கனின் அருளால் திருக்காவிரி பெற்ற ஏற்றம் அளப்பரியது. திருவரங்கச் செல்வனே மெய்யான பொன்னியின் செல்வன், காணீர்!

திருவரங்கனைத் தொழுவதற்குத் திருக்காவிரியில் நீராடிச் செல்வதே முறையாம். ஐப்பசி மாதத்தில், திருக்காவிரியில் நீராடி, திருவரங்கனைத் தொழுவது நமது அனைத்துப் பாவங்களையும் போக்கி, இறுதியில் வைகுந்தப் பதவியையும் பெற்றுத்தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை!




தேனார் திருவரங்கம்!


ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 62
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"தேனார் திருவரங்கம்" என்பதற்கான உரை:

"வண்டினம் முரலும் சோலை" என்று ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரால் புகழப்படும் திருவரங்கம், பல பூஞ்சோலைகளால் சூழப்பட்டது. அப்பூஞ்சோலைகளுள் உள்ள மலர்கள் யாவும் தேனைச் சிந்திக்கொண்டு இருக்கும். இது திருவரங்கத்தின் இனிமைக்கு ஒரு சான்று. திருவரங்கத்து எந்தையை மகான்கள் சென்று வணங்கும்போது, அவ்வூரில் உள்ள சோலைகளையும் சேர்த்தே வணங்குவர் என்பதை 'ஸ்ரீ 6000 படி குரு பரம்பரா பிரபாவம்' மற்றும் 'ஸ்ரீ யதீந்த்ரப்ரவண பிரபாவம்' ஆகிய நூல்களில் காணலாம்.

இது மட்டுமின்றி, மற்ற அனைத்து திவ்யதேசங்களும் திருவரங்கத்திற்குச் சோலைகள் போலவாம். அந்தத் திவ்யதேசங்கள் ஆகிய மலர்ச்சோலைகளால் சூழ்ந்து விளங்கும் திருவரங்கம் "ஆராமம் சூழ்ந்த அரங்கம்" என்று கொண்டாடப்படுகின்றது.




அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!


Image Source: https://www.speakingtree.in/blog/srirangam---the-premier-vaishnava-temple


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருப்பள்ளியெழுச்சி - பாசுரம் # 1
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
உரையில் ஆசாரியர் தெரிவிப்பது - ஒரு சிறு பொழிப்புரை:

திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானே! பல கோடி நூறாயிரம் ஆதவர்கள் ஒன்றாக உதித்தது போல உனது திருமுகமண்டலம் உள்ளது. நீ திருவடியை வைத்திருக்கும் கிழக்குப் பக்கத்தின் உச்சிக்கு, இரவின் கடும் இருளைப் போக்கிக் கொண்டு, உன்னைத் தொழ ஆதவன் வந்துவிட்டான். நீ எழுந்தவுடன் மங்கலமான திருவிளக்கை ஏற்றி உனக்கு நல்விடிவு சொல்லி வாழ்த்த, அவன் தன்னுடைய கதிர்களால் உலகெங்கும் ஒளியைப் பரப்பியுள்ளான்.

உன்னைத் தொழுவதற்கு மிகவும் ஏற்றதான காலை நேரம் வந்துவிட்டதால், பூந்தோட்டங்களால் சூழப்பட்டத் திருவரங்கத்தில், சிறந்த பூக்களில் தேன் வடிகிறது.

உன்னுடைய திருக்கண்கள் நோக்கும் தெற்குத் திசையில், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு, தேவர்களும் அரசர்களும் முழு இடத்தையும் நிரப்பிக்கொண்டு நிற்கிறார்கள். உன்னுடைய இணைபிரியா அன்னமாகிய ஸ்ரீரங்கநாயகியுடன் நீ எங்களுக்கு அருள் பாலிக்கின்றாய். அதே போல, உன்னை வணங்க ஆண் மற்றும் பெண் யானைகள் [இவை தேவர்கள், மன்னர்கள் போன்றவர்களின் வாகனங்கள்] ஒன்று சேர்ந்து கூடியுள்ளன. இசைக்கருவிகளை வாசிப்பவர்களின் பெரிய குழுக்களும் வந்துள்ளன.

உனது திவ்ய தரிசனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, அனைத்து திசைகளையும் அடையும் ஒலிகள் யாவும் கடுமையான அலைகள் கொண்ட கடலின் பெரும் ஒலியை ஒத்திருக்கின்றன.

எனவே, அரங்கத்தம்மா! நீ இப்போது திருப்பள்ளி எழுந்தருளவேண்டும்!




பகுதி 2 - திருவரங்கனுடைய மேன்மை


Image Source: https://arjuna-vallabha.tumblr.com/post/671873796856250368/namperumal-rangannatha-utsava-murti-srirangam


செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்


ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 11-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
"பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்" என்பதற்கான உரையில் ஆசாரியர் அருளுவதாவது:

திருவரங்கன் இரண்டு செல்வங்கள் உடையவன்:

1. பொங்கோதம் சூழ்ந்த புவனி என்பது பிரம்மாண்டத்தின் எல்லையில் உள்ள ஆவரணக் கடல் நீரால் சூழப்பட்ட ஈரேழு பதினான்கு உலகங்கள் - இவை பிரளயத்திற்கு உட்பட்ட "லீலா விபூதி" எனப்படும். இது ஒரு செல்வம்.

2. விண்ணுலகம் என்பது பிரளயத்திற்கு உட்படாமல், என்றும் மாறாத, குற்றமேதும் இல்லாத பரமபதம் [எ] வைகுந்தம் - இது "நித்ய விபூதி" எனப்படும். இது மற்றொரு செல்வம்.

ஒரு செங்கோலை வைத்து, இந்த இரண்டு செல்வங்களும் சோராமல், திருவரங்கன் ஆட்சி புரிகின்றான். இப்புவனியில் வாழும் உயிரினங்களுக்கு, அவைகளின் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவற்றால் அடையும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும்படிச் செய்து ஆள்கின்றான். வைகுந்தத்தில் வாழும் அமரர்கள் யாவரையும், அவர்கள் விரும்பிச் செய்யும் திருப்பணிகளை ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிகின்றான்.

நாம் பரமபதம் செல்லவேண்டும் என்று விரும்பினாலும் கூட, அதற்கு முதலில் திருவரங்கனின் திருவுள்ளம் இசையவேண்டும்!




திருவரங்கனே தசாவதாரங்களின் தோற்றுவாய்


ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 4-9-9
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்தின் முதல் 4 வரிகளுக்கும் ஆசாரியர் அருளிய உரை:

தேவுடைய: "தேசு" - "ஒளி உடைய" என்று பொருள். வல்வினையின் காரணமாகப் பிறக்கும் நாம், பிறக்கப் பிறக்க, ஒளியை இழக்கின்றோம். நல்லோர்களைக் காக்கவும் [அதற்காகத் தீயோர்களை அழிக்கவும்] தோன்றும் பிறவா ஆக்கைப் பெரியோனான எம்பெருமான், தன் இச்சைப்படி இப்பூமியில் பிறக்கப் பிறக்க, அவனுடைய ஒளி கூடுகின்றது!

வேதங்களைக் காக்க மீனமாகவும், அலைகடல் கடைந்து அமுதம் எடுக்க ஆமையாகவும், பிரளய கால நீரில் மூழ்கிய பூமியைக் காக்க வராகமாகவும், இரணியனின் கொட்டத்தை அடக்க நரசிங்கமாகவும், மகாபலியிடம் இந்திரன் இழந்த செல்வத்தை மீட்க வாமனனாகவும், தீய அரசர்களைக் கொன்று பூமியின் பாரத்தைக் குறைக்கப் பரசுராமனாகவும், இராவணனை முடிக்கத் தயரத இராமனாகவும், தீயோரை அழிக்கப் பலராமனாகவும், பூமியின் பாரத்தைக் குறைக்கக் கண்ணனாகவும், கலியின் கொடுமையை ஒடுக்கக் கற்கியாகவும் யுகங்கள் தோறும் தோன்றுவது திருவரங்கனே.

முடிப்பான் கோயில் [புனல் அரங்கமே]: தீயோரை முடிப்பான் உறைகின்ற திருத்தலம் [நீர்வளம் மிக்கதாம் திருவரங்கம்]. மேற்கூறிய அவதாரங்கள் முடிந்த பின்பும், நம் போன்றோரும் அவனைத் தொழுவதற்காகத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளான்.




பகுதி 3 - திருவரங்கனுடைய திருவருள்


Image Source: https://www.andalyatra.com/


திருமணத்தூண் பெருமை


ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 1-2
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"மாயோனை மணத்தூணே பற்றி நின்று" என்பதற்கான அதிசயிக்கத் தக்க உரை:

திருவரங்கனுடைய திருவருளைப் பெறச் செல்வதற்கு முன்னால், நாம் ஸ்ரீ குலசேகராழ்வார் அருளும் ஒரு குறிப்பை நோக்கவேண்டும்: திருவரங்கனின் திருமேனியில் உள்ள நறுமணம் 2 தூண்களாக அவனது சந்நிதி முன்னே நின்று அருள் பாலிக்கின்றனர்! இவற்றைத் "திருமணத்தூண்" என்று பெரியோர் அழைப்பர். "திருவரங்கனைத் தொழும் போது இந்தத் திருமணத்தூணைப் பற்றி நின்று தொழ வேண்டும்," என்று ஸ்ரீ குலசேகராழ்வார் அருளுகின்றார்.

ஏன் என்பதை ஆசாரியர் விளக்குகின்றார்: "திருவரங்கனைத் தொழும் போது, 'நமக்கு அருள் புரிய, தமது திருவுள்ளம் இரங்கி, பரந்தாமன் இறங்கி வந்தானே!' என்று அவன் அருளையும், எளிமையையும் நினைத்து நினைத்து நாமே உள்ளம் உருகி நிற்க, அவனுடைய திருக்கண்கள் நம் மீது பொழியும் அருள் வெள்ளம் பாய்ந்துகொண்டு வரும். அவ்வெள்ளத்தில் நாம் அடித்துக்கொண்டு போக வாய்ப்புள்ளது!! எனவே, இந்தத் திருமணத்தூணைப் பற்றி நின்றே திருவரங்கனைத் தொழ வேண்டும்!" என்று ஆழ்வார் முழங்குகின்றார்!




"திருவரங்கனுடைய திருவருள் வெள்ளம் நம்மை அடித்துக்கொண்டும் போகுமோ?" என்ற கேள்விக்கு விடை:


ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 88
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் அருளிய உரை:

"திருவரங்கனின் திருவடிகளில் வாழ்ச்சியையும் [அதனால், வைகுந்த மாநகரைச் சென்றடைவதையும்] இழக்கும் மக்கள் இரண்டு வகையினர்:
1. அறியாமையால் எம்பெருமானிடம் வெறுப்பு பாராட்டியதால் இழப்பவர்
2. எம்பெருமானிடம் அன்பு பாராட்டியும், எம்பெருமான் நம்மை அடைய முயற்சி எடுக்கும்போது, அதைத் தள்ளிவிட்டு, அவனை அடைய தாமே [தவம், உபாசனை போன்ற வேறு வழிகளால்] முயற்சிப்பவர்! [நமது முயற்சியில் என்றுமே குற்றம் இருப்பது இயற்கை அன்றோ?]

அன்று, கீதையை உபதேசித்த கண்ணன், "என்னையே சரணம் அடைவாய்," என்று ஒரே ஒரு முறை அருளினான். நமக்காகவே திருவரங்கத்தில் கிடக்கும் எந்தையான திருவரங்கனோ, நாம் எல்லோரும் கிட்டும் வண்ணம் அர்ச்சைத் திருமேனியில் [விக்கிரக வடிவில்] எழுந்தருளி, "என்னையே சரண் அடைவாய்," என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கின்றான். இது எளிமையின் எல்லைநிலம்!

இதனால், தென்னரங்கத்து எந்தையான திருவரங்கனுடைய திருவருளால் திருவரங்கனை அடைவதே சிறந்தது. இதனை அறிந்தேன்!"




"நாம் ஒன்றுமே செய்யாமல் திருவரங்கன் தாமே அருள்வரோ?" என்ற கேள்விக்கு விடை:


ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 6
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கான உரையில் ஆசாரியர் அருளியுள்ளவை:

திருவெஃகா திருத்தலத்துத் திருக்கோயிலின் பொற்றாமரைத் திருக்குளத்தில் மலர்ந்த ஒரு பொற்றாமரையில் உதித்தவர் ஸ்ரீ பொய்கையாழ்வார். இவர் அந்தத் தாமரையின் கருவில் இருந்தபோதே, திருவரங்கநாதன் தாமே வந்து ஆழ்வாருக்குக் காட்சியளித்து, அவருக்கு மயர்வற மதிநலம் அருளினன்.

இதனால், "உலகியலில் ஈடுபட்டு இருக்கும் ஏழைகளே! நான் தாமரை மலரின் கருவில் இருந்தபோது, அவன் பரமபதநாதனாகக் காட்சி அளிக்கவில்லை. தன்னுடைய எல்லையற்ற எளிமைக்குச் சான்றாக, திருவரங்கனாகவே காட்சியளித்தான்! நான் ஏதும் வேண்டாமலேயே காட்சியளித்தான்! திருவரங்கனுடைய அருளால், கருவில் இருந்தபோதே அவனைக் கைகளைக் கூப்பித் தொழும் பேறு பெற்றேன். அப்படி இருக்க, அக்காட்சியை இப்போது எப்படி மறப்பேன்? திருவரங்கத்துக் கடல்நீர்வண்ணனுடைய வடிவழகையும், அவனது நற்குணங்களின் கூட்டங்களின் பெருமைகளையும் எப்போதும் மறவேன்!" என்று ஆழ்வார் முழங்குகின்றார்.




"திருவரங்கன் ஆழ்வாருக்கு அருள்வார்! நமக்கு அருள்வாரோ?" என்ற கேள்விக்கும் விடை!


ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம் - பாசுரம் # 55
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் அருளியுள்ள உரை:

"சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமாமகளுக்கும், வையத்தை ஆளும் நிலமாமகளுக்கும் மிகவும் விருப்பமான இளங்காளையாக இருக்கின்றாய்! ஆயர்மாமகளான நப்பின்னைப் பிராட்டியின் திருத்தோள்களையும் அனுபவக்கின்றாய்! இப்படிப்பட்ட நிறை புகழ் மேன்மையை உடையவனான நீ, குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளும் உன் பெருங்குணத்தினால், அடியேன் போன்ற அற்பனின் நெஞ்சிலும் உன் திருவடிகளை வைத்து, அடியேனுக்கும் மிகப் பெரிய நன்மையை நல்கினாய்.

இந்த உதவியை அடியேனுக்கு மட்டுமே செய்யாமல், தாமரை போன்ற அங்கங்கள் உடையதும், அழகும், மென்மையும், குளிர்ச்சியும் நிறைந்ததும் ஆகிய உன்னுடைய தாமரைத் திருமேனியை எல்லோருக்கும் கொடுக்க, திருக்காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் கிடக்கின்றாய்! என்னே உனது பெருங்குணம்!" என்று ஆழ்வார் உருகுகின்றார்.




"திருவரங்கனின் திருவருளைப் பெறச் சரணாகதி செய்யவேண்டும் அன்றோ?" என்ற கேள்விக்கு விடை:


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 30
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் அருளியுள்ள உரையும் இப்பாசுரம் போலவே உள்ளத்தை உருக்கும் வண்ணம் உள்ளது:

"என் மனத்தில் என்னாளும், எக்கணமும் ஒரு சிறு துளியும் தூய்மை ஏதும் இல்லை. என்னுடைய வாக்கினால் ஒரு நல்ல சொல்லும் என்றும் சொன்னதில்லை - ஒருவரை "நலமா?" என்று விசாரித்தது கூட இல்லை! என்னுடைய மனதில் இருக்கும் தீய கோவங்கள் யாவும் என்னுடைய கண்ணில் வெளிப்படும் படி அனல் விழி விழித்து, எல்லோரும் அந்த அனல் பார்வையாலேயே பொசுங்கும்படி நோக்குபவனாய் உள்ளேன். இந்நிலையில், உன்னை அடைய என்னால் எந்த ஒரு முயற்சியும் செய்ய இயலாது. செய்தாலும், என் குற்றங்களால் அவை ஒன்றும் பலிக்காது. என் போன்றோருக்கும் அருள் புரிய திருக்காவிரியான பொன்னி சூழ்ந்த இந்தத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளவனே! என் உயிரின் உரிமையாளனான திருவரங்கத்துக்கரசே! உன்னைத் தவிர அடியேனுக்கு வேறு கதி இல்லை, ஐயா!" என்று ஆழ்வார் அருளியுள்ளார்.

"நம்மிடம் எந்தக் கைமுதலும் இல்லை; அவனை அடைய நம்மால் முயன்று இயலாது; நாம் செய்யும் இந்தச் சரணாகதியும் அவனை அடைய ஒரு வழி அல்ல; அவனது அருள் ஒன்று மட்டுமே நமக்குத் தஞ்சம்," என்பதை உணர்ந்து, அதை வெளிப்படுத்தும் வண்ணம் திருவரங்கனின் திருத்தாள் பணிவதே சாலச் சிறந்ததாம்.




பகுதி 4 - குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூவழகர்!


Image Source: https://srirangaminfo.com/srirangamphotos/Srirangam%20temple%20photos/srirangam-golden-vimana-history


திருவரங்கனுடைய கிடந்த திருக்கோலத்தின் எழில்


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 19
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் வரைந்த உரை நம் பக்தியைச் சுய பரிசோதனை செய்து, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் கொண்டது:

"திருவரங்கத்து எம்பெருமான் திசைகளைப் படைத்ததன் பயனே அவனது திருமுடியையும் திருவடியையும் அவைகளை நோக்கி வைத்து, நம் போன்றவர்களுக்கு மோட்சத்தில் ஆசை உண்டாக்கவே என்று உணர்ந்தேன்!

"மண்ணுலகுக்கும் விண்ணுலக்குகும் நாமே நாயகன்!" என்று வெளிப்படுத்தும் அவனது திருமுடியை மேற்குத் திசையில் உள்ளோர் வாழும்படி மேற்கில் வைத்தான். திருமுடி வைத்த பக்கம் வாழும் எல்லோரும் வாழ்ச்சி அடையும்போது, எல்லோருக்கும் அருள்வதற்கே இருக்கும் அவனுடைய திருவடியை நீட்டிய கிழக்கில் உள்ளவர்கள் வாழ்வார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? வடமொழியில் பேசும் வடதிசையில் உள்ளோர் தீஞ்சுவைத் தமிழை அறியார் என்பதால் முன்பிலும் பின்பழகிய பெருமானான திருவரங்கன், தனது பின்னழகைக் காட்டி அவர்களை ஈர்க்கின்றான்!

திருவரங்கன் தெற்கு நோக்கி சயனித்து இருப்பது, தாய்ப்பசுவாகிய திருவரங்கனின் அன்புக் கன்றானச் செல்வ விபீடணனைக் காணவே! அன்று செல்வ விபீடணன் செய்த சரணாகதியை ஏற்ற திருவரங்கன், அவனுக்கு இலங்கை அரசை ஒப்புவித்து, ஒரு தாய் தன்னுடைய சேய் வாழ்வதைக் கண்டு மகிழ்வது போலவே, இலங்கை அரசைச் செல்வ விபீடணன் நன்கு ஆள்வதைத் திருவரங்கன் கண்டு களிக்கின்றான்.

கடலானது தன்னை நோக்குபவர்களின் களைப்பைப் போக்கும். அந்தக் கடலையும் கடந்த கடல் நிறக் கடவுள் ஆகிய திருவரங்கன், தங்கத்தில் பதித்த மணியைப் போலத் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு, புலன்களுக்கு அடிமைப்பட்டிருந்த எனக்கும் தன்பால் ஆதரம் பெருக வைத்தான்! அவனது எழில் மிகு திருக்கோலத்தைக் கண்ட எனது உடல், நீராய் உருகுகின்றது. உலகத்தீரே! அவனைக் கண்டும் உங்கள் உடல்கள் உருகாமல் முடக்குவாதம் வந்ததுபோல இருக்கின்றீரே! இந்த இரகசியத்தை எனக்குச் சொல்லுங்கள்!"




திருவரங்கனுடைய திருவுருவம் - முன்பிலும் பின்பழகிய பெருமாள்!


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பாசுரம் # 25
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ பரகால நாயகி தோழியிடம் பேசும் பாசுரம். உரையில் இதன் சுவை நன்கு வெளிப்படும் வண்ணம் ஆசாரியர் அருளியுள்ளார்:

  • "கருத்த மழைமேகம் போல ஒளிவீசும் திருவுருவமும்,
  • வந்து அடைந்தவருக்குப் புகலாக விளங்கி அவர்களைக் காக்கும் திருத்தோள்களும்,
  • குவலயாபீடம் என்ற கம்சனின் யானையைத் தள்ளியே கொன்ற திருக்கைகளும்,
  • அடியவர்கள் யாவரையும் 'ஆகா! இவற்றை அனுபவிக்க வேண்டுமே!' என்று மிகவும் பரவசப்படச் செய்யும் திருக்கண்களும்,
  • அவரிடம் தன்னை இழந்த என்னிடம் 'நிச்சயம் வருவேன்!' என்று பேசிய திருவதரமும்,
  • திருத்துழாய் மாலையை அணிந்த திருக்குழலும்,
  • மகரநெடுங்குழைகளால் அலங்கரிக்கப்பட்ட திருக்காதுகளும்

உடைய திருவரங்கன், முன்பிலும் அழகியதான அவரது பின்னழகு நன்கு ஒளிவீசும்படி நடந்து, ஸ்ரீ கருடாழ்வாரின் மீது ஏறி, காண்போரின் களைப்பை நீக்கும் திருக்காவிரியால் சூழப்பட்ட புனல் அரங்கத்திற்குப் போனார்!

தோழி! அவர் நடந்து சென்றபோது ஒளி வீசிய அவரது பின்னழகை நீ காணவில்லை! தம்மிடம் உள்ளதையெல்லாம் கொடுப்பவர் போல வந்த அந்த முன்பிலும் பின்பழகிய பெருமாள், என்னிடம் உள்ளதையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றார் காண்!"




திருவரங்கனுடைய பேதைமை செய்யும் திருக்கண்கள்


ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 8
ஆசாரியர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்தில் திருவரங்கனின் திருக்கண்களைப் போற்றும் வரிகளுக்கு மிக அழகான உரையை ஆசாரியர் வரைந்துள்ளார்:

"முகத்து:" திருவரங்கனின் திருமுகத்தில் உள்ள இரு திருக்கண்கள் சந்திர மண்டலத்தில் மலர்ந்த இரு தாமரை மலர்களைப் போலவும், ஒரு தாமரை மலரிலேயே மலர்ந்த இரு தாமரை மலர்களைப் போலவும் உள்ளன.

"கரியவாகி": அவற்றின் கரிய நிறம் பிறவிச் சுழற்சியின் தாபத்துடன் வந்தவருக்கு, முகத்தில் நீர்வெள்ளத்தைப் பாய்ச்சியது போலே, குளிர்ச்சி தருபவையாக உள்ளன.

"புடைபரந்து": கடலைத் தடாகமாக்கியது போல இருக்கும் அத்திருக்கண்கள், அந்தத் தடாகங்களின் இரு கரைகள் ஒன்றுக்கொன்று நல்ல தொலைவில் இருப்பது போல, நன்கு பரந்து விரிந்து உள்ளன.

"மிளிர்ந்து": "வந்து அடைந்தவர்களை அருள் புரிந்து காக்க வேண்டும்" என்ற திருவரங்கனின் திருவுள்ளத்தில் பொங்கும் கருணைக் கடல், அவனது திருக்கண்களில் அலைவீசிக் கொண்டிருப்பதால் அவை மிளிர்கின்றன!

"செவ்வரி ஓடி": அவன் திருமகள் கேள்வன் என்றும், நம் குற்றத்தையும் நற்றமாகக் கொண்டு உகப்பவன் என்றும் கோள் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் அவன் திருக்கண்கள் சற்றே சிவந்துள்ளன.

"நீண்ட": "புவியில் உள்ளோருக்கு அகப்படாமல், புலப்படாமல் எங்கோ அமர்ந்திருக்கும் ஸ்ரீ பரமபதநாதனுக்கும் இரண்டு திருக்கண்களாம். எல்லோரும் எளிதாகக் கிட்டிச் சென்று அடையும் படி, இங்கே வந்து பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கனுக்கும் இரண்டு திருக்கண்களாம்! இது சரியல்லவே. நாம் இருவரும் அவனது திருமேனி முழுவதும் படரவேண்டும்!" என்று எண்ணி திருவரங்கனின் திருக்கண்கள் இரண்டும் அவனது திருமேனி முழுவதும் பரவுவதற்கு நீள முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. திருவரங்கனின் திருக்காதுகள் வரை நீண்டு, அங்கே தடைபட்டு நிற்கின்றன," என்று ஆசாரியர் ஸ்ரீ பராசர பட்டரின் திருவாக்கு.

"அப்பெரியவாய கண்கள்": திருவரங்கனுடைய திருக்கண்களை மேலே வருணிக்க முடியாமலும், அவற்றைத் தாம் நோக்கினால் திருவரங்கனுக்குக் கண்ணெச்சில் [திருஷ்டி] ஏற்படுமோ என்ற அச்சத்திலும், தமது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு, "அப்பெரியவாய கண்கள்" என்று ஆழ்வார் முடித்துக்கொள்கிறார்.

"என்னைப் பேதைமை செய்தனவே": "நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்" என்று இருக்கும் என்னைக் கூடத் தம்மிடம் ஈர்த்த பெருமை உடைய திருக்கண்கள். திருவரங்கனின் திருக்கண்களின் கடாட்சம் அறிவைத் தெளிவிக்கும் என்றே சாத்திரங்கள் கூறுகின்றன. ஆனால், அடியேனது அறிவை மட்டும் கலக்கியது, காணீர்!

ஸ்ரீ மணக்கால் நம்பி என்கிற ஆசாரியர், ஸ்ரீ ஆளவந்தார் என்ற அவரது சீடரை, திருவரங்கன் முன்னே நிற்க வைத்து, "ஐயனே! திருப்பாணாழ்வாருக்கு உமது திருக்கண்ணழகைக் காட்டியது போல, இவருக்கும் காட்டி அருள வேண்டும்!" என்று வேண்ட, [அப்போது உலகியலில் ஈடுபட்டு இருந்த] ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் தமது திருக்கண்களைக் காட்ட, அந்தக் கணமே ஸ்ரீ ஆளவந்தார் துறவறம் ஏற்றுக்கொண்டு, திருவரங்கித்தேலேயே வாழ்ந்து, பின்னர் ஸ்ரீ இராமானுசருக்கும் பரமகுருவாகித் திகழ்ந்தார்.

இதே போல, தமது மனைவியின் கண்ணழகில் மயங்கியிருந்த ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாசர் என்பாருக்கு, ஸ்ரீ பெரிய பெருமாளின் திருக்கண்ணழகை ஸ்ரீ இராமானுசர் காட்டச் செய்ய, ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாசரும் ஸ்ரீ பெரிய பெருமாளுக்குப் பல்லாண்டு பாடும் மெய்யடியார் ஆகி, ஸ்ரீ இராமானுசரின் திருவுள்ளத்தில் நீங்காத இடம் பெற்றார்.




பகுதி 5 - திருவரங்கன் திருமுற்றத்து அடியார்களின் பெருமை!


Image Source: https://elayavilli.org/home/


வண் குருகூர்ச் சடகோபன் முகில்வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை!


ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 7-2-8
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்தின் உரை மிகவும் உருக்கமானது :

பாசுரத்தின் பின்னணி: திருவரங்கனைப் பிரிந்து இருக்கும் ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிய ஸ்ரீ பராங்குச நாயகியின் நிலை மிகவும் கவலை தருவதாக இருக்கின்றது - திருவரங்கனைக் காணமுடியாமல் நெருப்பில் இட்ட சிறு பறவையைப் போலத் துடிக்கின்றாள். பித்து பிடித்த நிலையில் இருக்கும் அவளால் பேசவும் முடியவில்லை. ஆதலால், அவளது தாய் திருவரங்கனைக் கேள்வி கேட்கின்றார்:

"நீ வைகுந்தத்தில் மிளிரும் வானவர்களுக்குக் கொழுந்து போல இருப்பவன். இது உன்னுடைய மேன்மையை வெளிப்படுத்துகின்றது. அன்று குன்றம் ஏந்தி ஆநிரைகளைக் [இந்திரன் பெய்த மழையைத் தடுத்துக்] காத்தாய். இது உன்னுடைய எளிமையை வெளிப்படுத்துகின்றது. அன்று ஆனிரைகளைக் காக்க இந்திரன் பெய்த மழையைத் தடுத்த நீ, இன்று என்னுடைய மகளின் கண்களில் பொழியும் மழையைத் தடுக்க ஏன் வரவில்லை?

அவள் உன்னை நோக்கி கைகளைக் கூப்பித் தொழவும் செய்தாள். நீ வரவில்லை. நீ வராததால் அவள் துடிதுடித்து, தன்னுடைய அனல் போன்ற வெப்பம் மிகுந்த பெருமூச்சினால், தனது உயிரையே [ஆன்மா] எரிக்க முயன்றாள். முடியவில்லை. அவளது பெருமூச்சின் வெப்பத்தைத் தணிக்க வல்ல உன்னுடைய மை போன்ற குளிர்ந்த திருமேனியைக் காட்டி அவளைக் காக்க நீ ஏன் வரவில்லை?

அவளோ நீ வரும் அந்த நொடியிலிருந்து உன்னைக் காண வேண்டும் என்று பத்துத் திசைகளிலும் நோக்கிக்கொண்டு இருந்தாள். நீ வரவே இல்லை.

நீ செங்கயல் பாயும் திருக்காவிரி ஆற்றினால் சூழப்பட்டிருக்கும் திருவரங்கத்தில் பள்ளி கொண்டது ஏன்? இவள் போன்ற ஒரு அடியாரைப் பெறுவதற்காகவே அன்றோ? நீ அவளைத் தேட வேண்டியிருக்க, அவள் உன்னைத் தேடும் படி வைத்தாயே! அடியேன் என்ன செய்ய முடியும்?

திருமாமகள் ஆகிய ஸ்ரீ மகாலட்சுமி உன்னைத் தவிர வேறு ஒருவரையும் விரும்பமாட்டாள். அதுவே அவளது பெருமை. என்னுடைய திருமகள் திருமாமகளுடன் என்றும் பிரியாமல் விளங்கும் திருமால் ஆகிய உன்னைத் தவிர வேறு ஒருவரையும் விரும்பமாட்டாள். இது அந்தத் திருமாமகளுக்கும் இல்லாத பெருமை அன்றோ? இப்படிப்பட்ட என் திருமகளை உன்னதாக்கிக் கொள்ள வேண்டாமா? விடை சொல்லாய், திருவரங்கா!"

இப்பேற்பட்ட ஒரு அருமையான அடியவரான ஸ்ரீ நம்மாழ்வாரின் அடி பணிந்து உய்ந்த ஸ்ரீ இராமானுசரே கதி என்கின்றனர் பெரியோர். அதனையும் காண்போம்.




தென்னரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்த எம் ஐயன் இராமானுசன்!


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 57
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"[ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ பராங்குச நாயகி போன்ற] திருவரங்கனின் திருவடிகளுக்கு மட்டுமே அடிமை செய்யும் ஒப்பற்ற அடியார்களையே தமக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமர் ஸ்ரீ இராமானுசர்!" என்று திருவரங்கத்து அமுதனார் போற்றுகின்றார். "அப்படிப்பட்ட ஸ்ரீ இராமானுசருடைய இன்னருள் அடியேனுக்குக் கிடைத்தது. அதன்பின் வேறு ஒன்றை அடைய விரும்புவது பேதைமையே!" என்று முழங்குகின்றார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஆர்த்தி பிரபந்தம் - பாசுரம் # 60
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம்
 
ஸ்ரீ இராமானுசர் திருவரங்கனிடம், "அடியேனுடைய தொடர்பைப் பெற்றிருக்கும் அடியார்களுக்கும், அவர்களின் அடியார்களுக்கும் வீடுபேறு அருள வேண்டும்!" என்று ஒரு பங்குனி உத்திர நன்னாளில் சரணடைந்தார். தென்னரங்கச் செல்வம் முற்றும் திருத்தி வைத்த ஸ்ரீ இராமானுசர், ஸ்ரீ நம்மாழ்வார் போன்ற திருவரங்கனின் மெய்யடியார்களுக்கு மெய்யடியார். திருமாமகளாம் ஸ்ரீரங்கநாயகியின் பூரண அருள் பெற்ற தவராசர். அவர் கேட்கும் வரத்தைத் தென்னரங்கன் மறுப்பானோ? திருவரங்கனும் அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, "நீ கேட்கும் வரம் தந்தோம்! இந்தத் திருவரங்கத்தில் எம்மை நம்பிச் சுகமாக வாழ்வாய்!" என்று அருளினார்.

இதனாலேயே, காரேய் கருணை இராமானுசர் அவருடைய திருவடிகளின் தொடர்பைப் பெற்ற அடியார்களுக்கு மோட்சம் அருளும் தெய்வமாகத் திகழ்கின்றார்.

தமது ஆசாரியன் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை காட்டிக் கொடுத்த தெய்வமான ஸ்ரீ இராமானுசரைப் போற்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகள், "இந்த வரம் எந்தை எதிராசருக்குக் [ஸ்ரீ இராமானுசருக்குக்] கொடுக்கப்பட்டதால், அவரது புதல்வனான அடியேனுக்கும் கொடுக்கப்பட்டது. தந்தையின் சொத்து புதல்வரையே சேரும் அன்றோ?" என்று கொண்டாடுகின்றார்.

இப்படிக் கொண்டாடும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமையை உணர்ந்த அடியவர்கள், ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேட்போம், வாரீர்!




அரங்க நகர் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!


ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஆர்த்தி பிரபந்தம் - பாசுரம் # 55
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா - சாற்றுமுறை
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம்
 
  • திருவரங்கனாலேயே ஆசாரியராகக் கொள்ளப்பட்டவரும்
  • தமது ஆசாரியருடைய கட்டளைப்படி, திருவரங்கத்திலேயே வாசம் செய்து, திருவரங்கனுக்குப் பல்லாண்டு பாடுபவரும்
  • ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை உணவாகப் பெற்றவரும், அந்தத் திருவாய்மொழியில் பொதிந்திருக்கும் "அடியார்க்கு அடிமை செய்தல்" என்பதையே தமது வாழ்வாகக் கொண்டவரும்
  • பூருவாசாரியர்கள் அருளிய பொன்மொழிகளைத் தமது திருவுள்ளத்தில் தேக்கிவைத்து, அவற்றைக்கொண்டே பொழுது போக்கியவரும்

ஆகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு நாம் பல்லாண்டு பாடினால்:

  • அடியார்கள் வாழ்வர்
  • அரங்கநகர் வாழும்
  • திருவாய்மொழி வாழும்
  • [மேற்கூறிய காரணங்களால்] கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழும்

என்று [ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் அருளிய] ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா அறுதியிடுகின்றார்.

இதனால், அடியார்களும், அரங்க நகரும், திருவரங்கனும், திருவாய்மொழியும், கடல் சூழ்ந்த மன்னுலகும் வாழவேண்டும் என்று விரும்பும் பெரியோர்கள், திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோயில் மணவாள மாமுனிகளுக்குப் பல்லாண்டு பாடுவர்!




முடிவுரை
 
'ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில், ஸ்ரீ பெரிய பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீ திருவரங்கனுடைய பெருமைகளை ஆழ்வார்களும், ஆசாரியர்களும் எவ்வாறு வெளியிட்டருளியுள்ளனர் என்பதைச் சில பாசுரங்கள் வாயிலாகச் சுவைத்தோம்.

இந்நீண்ட கட்டுரையைப் படித்த பின்பும் நாம் திருவரங்கனின் பெருமைகளுள் ஒரு சிறு துளியே சுவைத்துள்ளோம் என்பதே உண்மை. "பெரியோர்களின் இன்னருளால் இவ்வளவாகிலும் பெற்றோமே!" என்று கூறி ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடனுறை ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும், அந்த திவ்ய தம்பதிகளுக்குப் பல்லாண்டு பாடுவோருக்கும் பல்லாண்டு பாடுவோமாக.

பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாண்டு!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment