ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் திருமாமகள் |
Image Credit: http://southindiatoursandtravels.com/ |
முன்னுரை |
திருமாலைப் போற்றும் வைஷ்ணவ மார்க்கங்கள் பல உள. அதில் ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதத்தைத் தலையாய வழிகாட்டியாகக் கொண்ட ஸ்ரீ இராமானுசரின் தரிசனம் என்ற இக்குறிப்பிட்ட வைஷ்ணவ மார்க்கம் "ஸ்ரீ வைஷ்ணவம்" என்று குறிக்கப்பெறுகின்றது.
ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்கள் அருளிய பாசுர உரைகளைப் பற்றி அறியாக்காலத்தில், "ஆழ்வார்கள் திருமகளைப் போற்றும் பாசுரங்கள் ஏதும் பாடவில்லை போலும். எம்பெருமானையே ஏத்திப் பாடியுள்ளனரே!" என்று அடியேன் தவறாக நினைத்ததுண்டு. ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்கள் அருளிய பாசுர உரைகளைத் திருவிளக்காக ஏந்திக்கொண்டு, ஆழ்வார் பாசுரங்களைப் படித்தபோதுதான், "எம்பெருமானின் தனிப்பட்ட பெருமையே அவன் திருமகளின் கேள்வன் என்பதுதான்" என்று ஆழ்வார்கள் அருளியுள்ளமை புரிந்தது. "திருமகளால் திருமாலைப் பரம்பொருள் என அறிந்து, திருமகளை முன்னிட்டுக்கொண்டு திருமாலைப் பற்றி, திருமகளுடன் என்றும் கூடிய திருமாலுக்குத் தொண்டு புரியவேண்டும்" என்று அறுதியிடுவதால் இந்த வைஷ்ணவ மார்க்கம் [பிராட்டியின் திருநாமத்தை முன்னிட்டு] "ஸ்ரீ வைஷ்ணவம்" எனப்படுகின்றது. குறிப்பு: சிலர் இந்த மார்க்கத்தை "ஸ்ரீ சம்ப்ரதாயம்" என்று பிராட்டியை மட்டுமே சொல்லி விளிக்கின்றனர். இது சரியன்று. "ஸ்ரீ வைஷ்ணவம்" என்று அழைப்பதே முறையாகும். ஏன் என்பது ஆழ்வார் பாசுரங்களுக்கு ஆசாரியர்கள் அருளிய உரைகளின் மூலம் உணரமுடியும். |
முதலில், திருமால் தனது நாய்ச்சிமார்களான
திருமாமகள் நாய்ச்சியார் [ஸ்ரீ, மஹாலக்ஷ்மி, பெரிய பிராட்டியார்], நிலமாமகள் நாய்ச்சியார் [பூமி பிராட்டியார்], ஆயர்மாமகள் நாய்ச்சியார் [நீளா பிராட்டியார்] ஆகியோர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளான் என்பதைக் காண்போம். |
ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 42 |
ஆசாரியர் ஸ்ரீ பராசர பட்டரின் உரை - சுருக்கம் |
"இவன் திருமாமகளுக்கே அற்று தீர்ந்தவனோ?" என்று எண்ணும் வண்ணம் எம்பெருமான்
திருமாமகள் மீது பெருங்காதலைப் பொழிகின்றான்.
பூமி பிராட்டியாரும், நீளா பிராட்டியாரும் [பெரிய பிராட்டியார் என்று போற்றப்படும்] திருமகளின் அங்கங்கள். ஆதலால், எம்பெருமான் பெரிய பிராட்டியாரிடம் காதலைப் பொழியும்போது, பூமி பிராட்டியாரும், நீளா பிராட்டியாரும் நிலவு, தென்றல், சந்தனம், மலர்கள் போன்றவைகள் போல இருந்து அவர்களது இன்பத்தைக் கூட்டுவர். எம்பெருமான் பூமி பிராட்டியாரிடமோ அல்லது நீளா பிராட்டியாரிடமோ காதலைப் பொழியும்போது, பெரிய பிராட்டியாரின் திருமுலைத்தடங்கள், திருத்தோள்கள் ஆகியவற்றையே அவன் தழுவுகின்றான். பெருவெள்ளத்தில் இறங்குபவர்கள் திரளாகவே இறங்குவர். எம்பெருமான் அருளும் இன்பம் பெருவெள்ளம் ஆகையால், பிராட்டிமார்கள் பலர் இருந்தும் அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ இருக்காது. குறிப்பு:
|
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 10-6, 10-7 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம் |
"தனமருவு வைதேகி" என்ற சொற்றொடருக்கு "தான் விரும்பும் செல்வமாகப்
பொருந்திய சீதை பிராட்டியாரைப் பிரிந்து, அதனால் தளர்வு எய்தி" என்று உரை
பகர்கின்றது.
இதை ஆமோதிப்பதுபோல, அதே ஆழ்வார், அடுத்த பாசுரத்திலேயே, ஸ்ரீ இராமபிரான் சீதை பிராட்டியை அடைந்து, அயோத்தியில் மூடிசூடிய பொழுது, ஸ்ரீ இராமாபிரானை என்னவென்று போற்றுகின்றார் பாரீர்: "திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்" - தான் விரும்பும் செல்வமாகிய திருமகளைப் பெற்றபின்னே அவன் 'செல்வன்' ஆகின்றான்! தளர்வும் தீர்ந்து 'இனிது அமர்ந்த செல்வன்' எனக் காட்சி அளிக்கின்றான்!! |
"நாய்ச்சிமார்களும் இதே அன்பைத் திருமால் மீது செலுத்துகின்றனரா?" - அதற்கான விடையைக் காணீர்: |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 2-3-5 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம் |
அவனுக்கு இனிய துணையாக விளங்கும் அலர்மகளான திருமாமகளுக்கும் அவன்
இன்பன். திருவுக்கும் திருவாகிய செல்வன். நற்புவியான நிலமாமகளுக்கு இனிய
நாதன். தன்னையே துணையாக உடைய ஆயர்மாமகளாம் நப்பின்னை பிராட்டிக்கு இனிய
நாயகன். பிராட்டிமார்களும் அவன் மீது பித்தேறி இருப்பர்.
இங்கே "இன்துணை" என்று ஆழ்வார் திருமாமகளைப் போற்றியதற்கு ஒரு முக்கியமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது: எம்பெருமான் எந்தத் திருவவதாரம் எடுத்தபோதும், அதற்கேற்றதொரு திருவவதாரம் திருமாமகளும் எடுக்கின்றாள். அவன் ஸ்ரீ இராமபிரானாக அவதரித்தால், அவள் சீதையாக அவதரிப்பாள். அவன் ஸ்ரீ கண்ணபிரானாக அவதரித்தால், அவள் உருப்பிணியாக [ருக்மிணியாக] அவதரிப்பாள். அவன் ஸ்ரீரங்கநாதனாக அவதரித்தால், அவள் ஸ்ரீரங்கநாயகியாக அவதரிப்பாள். அதனால் அவள் "இன்துணை" எனப்படுகின்றாள். திருமகள் திருமாலை விட்டு என்றும் பிரிவதில்லை. "அகலகில்லேன் இறையும்" என்று அவன் திருமார்பிலேயே உறைகின்றாள். |
"திருமகளும் திருமாலும் ஒருவர் மீது ஒருவர் அளவிலா அன்பு கொண்டு என்றும் பிரியாமல் இருப்பதால் நமக்கு என்ன நன்மை?" - மேல்வரும் பாசுரங்களில் விடை பாரீர்: |
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 40 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம் |
"திருமறு மார்வ!" என்று ஆழ்வார் விளிப்பதற்கு பொருள்: "திருமார்பினில்
'அகலகில்லேன் இறையும்' என்று திருமகள் என்றென்றும் இருக்கப்பெற்றவனே!
அவளது திருவடிகளின் செம்பஞ்சுக்குழம்பினால் ஏற்பட்ட 'ஸ்ரீவத்சம்' என்ற
மறுவை உடையவனே! இதனால் நீயே பரம்பொருள் என்று தேறுகின்றது"
இங்கே ஒரு அற்புதம் காணீர்: ஆசாரியர் நமக்கு ஒன்று கற்பிக்கின்றார் - பாசுரத்தின் கடைசி வரியில் உள்ள "அருவினைப் பயனது உய்யார்" என்ற வரி "திருமறு மார்வ!" என்ற சொற்றொடருடன் தொடர்பு உடையதாம். அவன் திருமார்பினில் திருமகள் என்றென்றும் இருக்கப்பெற்றதனாலேயே மாநிலத்து உயிர்கள் எல்லாம் கொடுவினைகள் ஈட்டியிருந்தாலும், அவன் திருவடிகளை அடைந்தால், அப்பாபத்தின் பயனை அடையமாட்டார்கள். ஏனென்றால், "குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளும் திருமகளின் பெருங்குணத்தால், திருமகள் கேள்வனை அடைந்தோர் [அவளது அருளால் திருந்தி] உய்ந்தே போவர்" என்கிறார்! எம்பெருமான் நமக்கு [வீடுபேறு அடைய] வழியாக நிற்கும்பொழுது, அவள் அவனுக்கும் நமக்கும் நடுவே இருந்து, இருவரையும் சேர்த்துவைக்கும் ஒரு பாலமாக இருக்கின்றாள். எம்பெருமான் நம்மைத் திருத்தி, நம்மிடம் தொண்டுகளை ஏற்றுக்கொள்ளும்பொழுது, அவளும் அவனுடன் சேர்ந்து அத்தொண்டுகளை ஏற்றுக்கொள்கின்றாள். |
ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 5 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம் |
"திருவாரமார்பதன்றோ" என்ற இடத்தில் மிக அழகான உரை: "திருமகளை[யும்
ஆரத்தையும்] உடைய மார்பு அன்றோ? ஆழ்வார் தமக்குப் பற்றாசாகத் தாய்
நிழலிலே ஒதுங்குகின்றார்.
அசோக வனமாகிய சிறையில் இருந்தபோதே, இராவணனைப் பார்த்து "ஸ்ரீ இராமபிரானிடம் என்னை ஒப்படைத்து அவனிடம் நட்புறவு ஏற்படுத்திக்கொள்!" என்றும், ஸ்ரீ அனுமனிடம் "இந்த அரக்கிகளை ஒன்றும் செய்யாதே! இவ்வுலகில் யார்தான் குற்றம் புரியாதவர்?" என்றும் சேர்த்துவைக்கப் பார்ப்பவள். அப்படிப்பட்டவள் திருமார்பில் இருந்தால் பரமனையும் ஜீவனையும் சேர்க்காமல் இருப்பாளோ?" |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 7-2-9 |
ஆசாரியர் ஸ்ரீ நஞ்சீயரின் உரை - சுருக்கம் |
ஸ்ரீ நம்மாழ்வார் பெண் தன்மை எய்தி நாயகி மனோபாவத்தில் பாடிய பதிகங்கள்
பல உள. அவற்றுள் இப்பதிகம் ஸ்ரீ நம்மாழ்வாரின் தாய் "திருவரங்கா! என்
திருமகள் உன் மீது பித்தாகி உன் திருநாமங்களையே பாடுகின்றாளே - அவள்
திறத்தில் நீ என் செய்யப்போகின்றாய்?" என்று வினவுவதாக அமைந்துள்ளது.
இப்பதிகத்தில் ஒவ்வொவரு பாசுரத்திலும் "சங்கு சக்கரங்கள் என்றே கை கூப்பும்", "தாமரைக்கண் என்றே தளரும்" என்று தாய் தன் மகளை "செய்யும்", "என்னும்" என்று குறிப்பிடுவார். மேற்கூறிய பாசுரத்தில் மூன்று பிராட்டிமார்களின் திருநாமங்களும் இடம் பெற்றுள்ளன. "இவர்கள் மூவரும் உன்னுடன் இருக்க, நான் உன்னை இன்னும் அடைய முடியாமல் தவிப்பதோ? நீ என்னைக் கைவிட்டால், அவர்கள் மூவரும் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களே! [அவர்களது பேச்சை நீ தட்டமாட்டாயே!] பின்னும் ஏன் என்னை நீ ஆட்கொள்ளத் தாமதம் ஆகின்றது?" என்று ஸ்ரீ நம்மாழ்வார் கேட்பதாக உரை இயம்புகின்றது. இது முதல் சிறப்பு. "என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்" என்ற இடத்தில் "என்னுடைய மகள் 'என் திருமகள் சேர் மார்பனே!' என்கிறாள்! 'என்னுடைய ஆவியே!' என்கிறாள்!" என்று பிரித்துப் பொருள் கூறமுடியும். ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் ஆசாரியர்கள் "என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே" என்று சேர்த்துப் பொருள் அருளியுள்ளார்கள். அதாவது "என் [தாயான] திருமகள் உன் திருமார்பில் என்றும் பிரியாமல் வீற்றிருப்பதாலேயே நீ என்னுடைய உயிர்மூச்சான ஆவி ஆகின்றாய்" என்று அருமையான பொருள் கிடைக்கும்!!! இப்பொருளை ஆசாரியர் ஸ்ரீ நஞ்சீயர் உரைத்தபொழுது, "ஸ்ரீ ரங்கநாதா!" என்று அரற்றியபடி ஆசாரியர் ஸ்ரீ பராசர பட்டர் ['இவர் பரமபதம் சென்றுவிட்டாரோ?' என்று அனைவரும் அஞ்சும்படி] மயங்கிவிட்டாராம்!! "திருமகளின் கேள்வனாக இருப்பதாலேயே திருமாலுக்கும் நமக்கும் சம்பந்தம் - தாய் சொல்லியன்றோ குழவி தந்தையைத் தெரிந்துகொள்ளும்?" என்று ஆசாரியர்கள் உரைப்பர்!! நம் போன்றவர்களை மன்னிக்க எம்பெருமான் கோபத்தால் இசையாதிருந்தால்: திருமாமகள் "குற்றம் செய்யாதவர் யார்? ஏற்றுக்கொள்வீர்!" என்று உரிமையுடன் மன்றாடுவாள் - குற்றம் செய்தோரையும் மனமுவந்து ஏற்பதே சான்றோர் மாண்பு, பெற்றோர் இயல்பு என்பது அவள் திருவுள்ளம். நிலமாமகள் "குற்றம் செய்தவர் யார்?!" என்று கேட்பாள் - எல்லோருமே குற்றமற்றவர்கள் என்பது அவள் திருவுள்ளம்! ஆயர்மாமகள் "குற்றம் என்றால் என்ன?" என்று கேட்பாள் - 'குற்றம்' என்ற சொல்லே அறியாதவள் அவள்!! இப்படி எம்பெருமானிடம் நமக்காகப் பரிந்து பேச மூன்று பிராட்டிமார்களும் முனைந்து செயல்படுகின்றனர். |
"இவ்வளவு அறிந்தபின் எம்பெருமானை ஏன் பற்றவேண்டும்?! திருமகளை மட்டுமே வணங்கலாமே!" என்றால், கேண்மின்: |
ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 16 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளையின் உரை - சுருக்கம் |
இங்கே "ஒரு அல்லித்தாமரையாள் ஒன்றிய சீரமார்வன்" என்ற வரிக்கு
அருளப்பட்டுள்ள உரை பாரீர்: "அளவற்ற இனிமையை உடையவள் பெரிய பிராட்டியார். அவள் ஒரு பொற்கொடி. கொடியானது கொழுகொம்பின்றி வாழாதன்றோ? அலைகடலைக் கடைந்தபொழுது, அனைத்து தேவர்களும் பார்த்துக்கொண்டிருக்க, திருமகள் திருமாலின் திருமார்பினில் சென்று அமர்ந்தாள். அதன் பின், தேவர்களின் துயர் தீர அவர்களைத் தன்னுடைய அருட்பார்வை மழையால் நனைத்தாள். 'அவர்கள் துயர் கண்டு முதலிலேயே ஏன் கடாட்சம் செய்யவில்லை?' என்றால் முதலில் தன்னுடைய வாழ்ச்சியைப் பெற்றால் தானே மற்றவரை வாழ்விக்கமுடியும்! அதனால் அவள் முதலில் திருமாலின் சீர்மார்வை மிக விரும்பிச் சேர்ந்தாள். அதன் பின்னே, எம்பெருமான் திருவுள்ளத்தில் 'இவர்களை நீ கடாட்சம் செய்' என்று நினைத்தவுடன், அவன் திருவுள்ளம் அறிந்து, கடாட்சம் செய்தாள். ஸ்ரீ இராம பட்டாபிஷேகத்தில், ஸ்ரீ அனுமனுக்கு முத்து மாலை பரிசு அளிக்கும் முன் பிராட்டி பெருமாளை நோக்கினாள். ஸ்ரீ இராமபிரான் 'இதை நம் அனுமனுக்குக் கொடு' என்று மறைமுகமாகச் சொல்வதைப் புரிந்துகொண்ட பின்பே, பிராட்டி அம்மாலையை ஸ்ரீ அனுமனுக்குப் பரிசளித்தாள்!" [குறிப்பு: அதாவது, ஸ்ரீ இராமபிரான் ஸ்ரீ அனுமனின் திருநாமத்தை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், ஸ்ரீ அனுமனின் திருக்கல்யாண குணங்களை விவரித்தார் - அக்குணங்கள் ஸ்ரீ அனுமனை மட்டுமே குறிப்பவை. அன்னை சீதையும் எம்பெருமான் திருவுள்ளக் கருத்தைப் புரிந்துகொண்டார்.] என்று இருக்கின்றது! இதனாலேயே ஆசாரியர்கள்: "பெருமாளை விட்டுப் பிராட்டியை மட்டுமே பற்றுவது இராவணன் படி - தலை துண்டாகும். பிராட்டியை விட்டுப் பெருமாளை மட்டுமே பற்றுவது சூர்ப்பனகை படி - மூக்கும் காதுகளும் அறுபடும். இருவரையும் சேர்த்துவைத்துத் துதிப்பதே ஸ்ரீ இலக்குவன், ஸ்ரீ அனுமன், ஸ்ரீ விபீடணன் போன்ற அடியார்களின் படி - இருவராலும் கடாட்சிக்கப்படுவோம்" என்று உரைப்பர். |
"சரி, திருமகளுடன் கூடிய திருமாலை எவ்வாறு பற்றவேண்டும்?" - மேல்வரும் இரண்டு பாசுரங்களில் வழிகாட்டியுள்ளனர்: |
ஸ்ரீ ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 18 |
ஆசாரியர் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் உரையை அடியொற்றிய சுருக்கம் |
முதலில் திருமகளிடம் நாம் விண்ணப்பம் செய்யவேண்டும். அவளை
முன்னிட்டுக்கொண்டு எம்பெருமானிடம் செல்லவேண்டும்.
ஆண்டாளும் திருப்பாவையில்: பாசுரங்கள் 1-5: நோன்பைப் பற்றிப் பாடினாள் பாசுரங்கள் 6-15: அடியார்களை எழுப்பி, துதித்து அவர்களின் சத்சங்கத்தைப் பெற்றாள் பாசுரங்கள் 16-17: ஆசாரியர்களை எழுப்பி, துதித்து அவர்களின் அருள் பெற்றாள் பாசுரம் 18: திருவான நப்பின்னைப் பிராட்டியை மட்டுமே எழுப்பி, துதித்து அவளது அருளை வேண்டுகின்றாள்; பிராட்டியும் 20-ம் பாசுரத்தில் அருள் புரிகின்றாள். அதன் பின்னரே, பாசுரம் 21 தொடங்கி, எம்பெருமானை எழுப்புகின்றாள். இதுவே பற்றவேண்டிய முறை. திருக்கோயில்களுக்குச் செல்லும்போதும், பிராட்டியின் சந்நிதியில் அவளைப் போற்றியபின்பே, எம்பெருமானின் சந்நிதிக்குச் சென்று அவனைப் போற்றவேண்டும். |
ஸ்ரீ திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 92 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளையின் உரை - சுருக்கம் |
நான் திருவிருந்த மார்வன் சிரீதரனுக்கு ஆட்பட்டவனாய், அவனை என்னுடைய
நெஞ்சில் நிலைநிறுத்தியவனாய், எக்காரியம் செய்யும்போதும் அவனை
நினைத்தவனாய், அவனை என்றும் மறவாமல் இருப்பவன்.
ஏனெனில், அந்தத் திருவிருந்த மார்வன் சிரீதரனே என்னைக் கருவிலிருந்து காத்தவன். இதுவே திருமகள் கேள்வனின் திருவடிகளை அடைந்த ஒரு அடியவரின் நிலை. |
"திருமகள் கேள்வனைப் பற்றியபின் எப்படி பூசிக்கவேண்டும்?" - ஆழ்வார் வழி அருளியுள்ளார்: |
ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 57 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளையின் உரை - சுருக்கம் |
நால்திசைகளிலும் உள்ளவரே! கேளீரோ?
திருமங்கை வீற்றிருக்கும் தெய்வமான திருமாலை நாவால் வாழ்த்தும் செயலை நெஞ்சில் உறுதியுடன் கடைப்பிடியுங்கள். நீண்ட திருக்கைகளை உடைய திருமாலின் திருவடிகளையும், திருநாமங்களையும் "அவன் எந்தை" என்ற உரிமையுடன் ஏத்துங்கள். |
"திருமங்கை நின்றருளும் தெய்வத்தை நமது நாவால் எப்படி வாழ்த்தவேண்டும்? அவன் திருவடிகளையும், திருநாமங்களையும் எப்படி ஏத்தவேண்டும்?" - இதோ இப்படித்தான்: |
ஸ்ரீ பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு - பாசுரம் # 1, 2, 5 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம் |
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு!
உன்னைப் பரம்பொருள் என்று அடையாளம் காட்டுபவளாய், உன் திருவலமார்பினில் பொருந்தி வீற்றிருக்கும் அழகிய மங்கையான திருமகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு! மங்கையும் ['உம்' விகுதி] என்றதால் நிலமங்கைக்கும், ஆயர்மங்கைக்கும் சேர்த்தே பல்லாண்டு பாடுகின்றார் என்றே உரை பகர்கின்றது! உன் சங்கு, சக்கரம் முதலான அடியார்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு! அடியோமோடும் நின்னோடும் பிறிவின்றி ஆயிரம் பல்லாண்டு! அனுதினமும் ஒவ்வொரு இராமானுசன் அடியாரும் முதலில் இதைப் பாடிய பின்னரே பாசுரங்கள் ஓதுவர்! முடிவிலும் இதையே ஓதுவர்!! எம்பெருமானுக்கும் பிராட்டிமார்களுக்கும் பல்லாண்டு பாடும்பொழுது இருவருக்கும் சேர்த்தே பாடவேண்டும் என்பது மரபு. அதனால் முதல் இரண்டு இப்பாசுரங்களை ஒன்றாகவே ஓதுவர்!!! இதே பதிகத்தில் 5-ம் பாசுரத்தில் "தொண்டர்குலத்தோரே! வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப் பல்லாண்டு பாடுங்கள்!" என்றும் ஆழ்வார் அருளியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
சரி, "இப்படி அவர்களைப் "பல்லாண்டு! போற்றி!" என்று வாழ்த்தினால் நமக்கு என்ன பயன் உண்டாகும்?" - இதோ: |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 108 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியின் முடிவான பாசுரம் இயம்புவது என்னவென்றால்:
"நமக்கெல்லாம் உற்ற செல்வம் எது? செம்மையான புகழ் நிறைந்த குருவான ஸ்ரீ இராமானுசரின் திருவடித் தாமரைகள் நம் தலை மீது நிலை பெற்று இருப்பதே நமக்கு மேலான செல்வம். அதன்பின் எந்தை இராமானுசன் அருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவோம். குரு பார்த்தால் கோடி நன்மை அன்றோ? அழகிய கயல்மீன்கள் பாய்ந்தாடும் வயல்கள் நிறைந்த தென்னரங்கத்து நாயகனின் திருமார்பிற்கு அணியாக விளங்கும் பங்கயமாமலர்ப் பாவையான திருமாமகளைப் போற்றுவோம். திருமகளே செல்வம் அருளும் தெய்வம் அன்றோ? அவள் நமக்கு மேற்கூறிய செல்வத்தை அருள்வாள்." என்பதாம். |
Image Credit: By Debanjon - Own work, CC BY-SA 4.0 |
முடிவுரை |
ஒரு பங்குனி உத்திர நன்னாளில், ஆசாரியர்கள் அருளிய உரைகளின் துணை கொண்டு, திருமாலுக்கு இன்துணையான திருமகளின் பெருமைகளை ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் வாயிலாகக் கண்டோம்.
திருமகள் கேள்வனை வாழ்த்தும் பயனே அவனது அருளை - இதே பங்குனி உத்திர நன்னாளில் - நமக்குப் பெற்றுத் தந்த எந்தை இராமாநுசனின் திருவடிகளை நம் சிரத்தின் மீது தரித்து வாழ்ச்சி பெறுவதேயாம். அதனையும் ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் கண்டோம். திருமாலின் அருளால் திருவருளைப் பெறுவோம். திருவின் அருளால் குரு அருளைப் பெறுவோம். ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளை அடைந்து, அவரது அடியார்களுக்குத் தொண்டு செய்து, இம்மையிலும் மறுமையிலும் வாழ்ச்சி பெற்று உய்வோம். எம்பெருமானார் திருவடிகளே சரணம். |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
பெற்றோம் பெற்றோம் பேரின்பம் பெற்றோம் இந்நந்நாளில். தொகுத்து வழங்கிய அடியார்க்கு மிக்க நன்றி. எமபெருமானின் இன்னருளுக்கு அனைவரும் பாத்திரமாக வேண்டும் என்று நம்சார்பில் முறையாடும் தாயாரின் பெருமையினை கோர்வையாக எடுத்துரைத்த உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅடியேன் ராமானுஜதாஸன்
தங்களைப் போன்ற இராமானுசன் அடியார்கள் இதைப் படித்துச் சுவைப்பதே அடியேனின் பெரும் பேறு. மிக்க நன்றி. அடியேன் இராமானுஜதாசி.
Deleteதிருமகளாம் தாயாரின் பெருமைகளையும், அவளை வழிபட வேண்டிய அவசியத்தையும், வழிபடும் முறையையும், அதனால் அடையும் வீடுபேறையும் - அற்புதமான பாசுரங்கள் மூலமாகவும் ஆச்சாரியப் பெருமக்களின் உரைகள் மூலமாகவும் அழகாக விளக்கிவிட்டது இக்கட்டுரை.
ReplyDeleteமிக்க நன்றி, ஸ்ரீராம் ஜி. சத்விஷயங்களில் தங்களுக்கு உள்ள ஈடுபாடும், அவற்றை உள்ளத்தில் நன்றாகத் தேக்கிக்கொண்டு நீங்கள் பதிவு இடும் பங்கும் என்றுமே மிக்க இன்பம் பயக்கும் விஷயங்கள்.
Deleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteமிக்க நன்றி.
DeleteAbsolutely mesmerising. How beautifully explained that ஜீவத்மவான ஶ்ரீ லக்ஷ்மி தேவியின் திருக்கால்களை பற்றினால், she will immediately recommend you to the Paramaatma, due to her innate காருண்யம். Dhanyan ஆனேன். அடியேன் கோதா தாசி
ReplyDeleteSo very glad to hear the sweet words emanating from your anubhavam!!! Dhanyosmi. Adiyen Ramanujadasi.
DeleteArumiyaana thoguppu.
ReplyDeleteகனிவுடன் உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
Delete