Search This Blog

Tuesday, 12 July 2022

ஆயர்மாமகள் [நப்பின்னைப் பிராட்டி] பெருமை

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
ஆயர்மாமகள் [நப்பின்னைப் பிராட்டி]


Image Credit: https://anudinam.org/2011/12/25/nappinnai-piratti/


முன்னுரை
 
ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம் என்ற ஸ்ரீவைஷ்ணவத்தில், திருமாலின் பெருமைகளை நான்மறைகள் "புருஷ சூக்தம்" என்கிற பகுதியில் பறைசாற்றுவதாகப் பெரியோர் பணிப்பர். நான்மறைகளுள் திருமாமகளின் பெருமைகளைப் பறைசாற்றும் பகுதி "ஸ்ரீ சூக்தம்" என்றும், நிலமாமகளின் பெருமைகளைப் பறைசாற்றும் பகுதி "பூ சூக்தம்" என்றும் அழைக்கப்படுகின்றன.

புருஷ சூக்தத்தில் "ஹ்ரீச் ச லக்ஷ்மீச் ச பத்ந்யௌ" என்று எம்பெருமானின் தேவிமார்கள் விவரிக்கப்படுகின்றனர். "ஹ்ரீ" என்ற சப்தம் நிலமாமகளைக் குறிக்கும். "லக்ஷ்மீ" என்கிற சப்தம் திருமாமகளைக் குறிக்கும். இங்கே "ச" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது - இதன் பொருள் "மற்றும்" என்பதாகும். இரண்டு தேவிமார்களின் திருநாமங்கள் ஓதப்பட்டுள்ளன. எனினும், "மற்றும்" என்ற சொல் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவதாக ஒரு தேவியாரின் திருநாமம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. அவளே நீளா தேவி.

திருமாமகளின் வள்ளல் தன்மையும், நீர்மையும் சேர்ந்து நீளா தேவி என்ற வடிவெடுத்து வந்தது.

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் நீளா தேவியாகிய நப்பின்னைப் பிராட்டியை எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதை ஒரு சில பாசுரங்களைக் கொண்டு சுவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.




ஸ்ரீ நீளா தேவி என்கிற நப்பின்னைப் பிராட்டி
 
நீளா தேவியின் பெருமைகளை "நீளா சூக்தம்" என்ற வேதப் பகுதி முழங்குகின்றது:
  • ஜீவாத்மாவிற்கு ஒரு நல்வழியைக் காட்டுபவள்
  • பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் ஒன்று சேர்ப்பவள்
  • எம்பெருமானுக்கும் ஜீவர்களான நமக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துபவள்
  • பசும்நெய், பசும்பால் ஆகிய அருட்கொடைகளை நமக்கு அருள்பவள்
  • நமது இகபர நல்லாசைகள் யாவும் நிறைவேற அருள்பவள்
  • இவளுக்குத் தேவகுரு என்கிற பிருகசுபதியும், வாயுவும் அடியவர்கள்
என்று இந்த சூக்தம் முழங்குவதாகப் பெரியோர் விளக்கியுள்ளனர்.

இந்த நீளா தேவியே நப்பின்னையாக ஆயர் குலத்தில் திருவவதாரம் செய்து, கண்ணனைக் கைப்பிடித்தாள். ஆதலால், ஆழ்வார்கள் இவளை ஆயர்மாமகள் எனக் கொண்டாடுவர்.

ஏரார்ந்த கண்ணி யசோதையின் சகோதரரான கும்பர் என்பவருக்கும், அவரது மனைவியார் தர்மதை என்பவளுக்கும் பிறந்த பெண்பிள்ளையே பின்னை. நற்குணங்கள் நிறைந்த நங்கை ஆதலால், இவளை நல் + பின்னை = நற்பின்னை என்கிற நப்பின்னை என வழங்கலாயிற்று.

நப்பின்னைப் பிராட்டி தனது ஒப்பற்ற திருமேனி எழிலாலும், குறையொன்றுமில்லாத நற்குணங்களாலும் எம்பெருமானின் புலன்களுக்கே கூட மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றாள். நமக்குப் பசும்பால் மற்றும் பசும்நெய் வளத்தை அருளும் நம் அன்னையான இவள், நமக்கு ஆயுள், உடல்நலம் போன்ற செல்வங்களை அருள்வதால், நம்முடைய ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சியை அருள்கின்றாள். இதனால், இவளுக்கு ஆழ்வார்கள் அருளிய "புலமங்கை" என்ற திருநாமமும் உண்டு.
Image Credit: http://anudinam.org



நப்பின்னைப் பிராட்டியின் பெருஞ்சிறப்பு


ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம் - பாசுரம் # 41
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்" என்ற சொற்றொடருக்கு உரையில் உள்ள விளக்கம் பாரீர்:

இங்கே, "மங்கை" என்ற சொல்லுக்கு "நித்ய நவ யௌவனம்" என்று ஆசாரியர் பொருள் உரைத்துள்ளார்! அதாவது, "ஒவ்வொரு நாளும் புதிதாக தோன்றுவதும், என்றென்றும் மாறாததுமாகிய இளமை உடையவளாம் நப்பின்னைப் பிராட்டி! நாள்தோறும், அவளுக்கு 16 வயது முடிந்து, 17வது பிறந்த நாள் பிறக்குமாம்!

"வேய தோள்" என்ற சொற்றொடருக்கு உள்ள உரை: "மூங்கில் போன்றதும், மெல்லியதும், உயர்ந்ததும், இளமையானதும், மிகவும் விரும்பத்தக்கதும் ஆகிய தோள் உடைய நப்பின்னைப் பிராட்டி" என்பதாம்.

"கண்ணனைத் தவிர வேறு ஒன்றையுமே பயனாகக் கருதாத நப்பின்னைப் பிராட்டியை, ஏழு காளைகளை அடக்கி, கண்ணன் காத்தமை, '[அவளைப் போலவே] கண்ணனையே பயனாகக் கருதும் அடியவர்களைக் காப்பவன் கண்ணன்,' என்பதைக் காட்டும்," என்று ஆசாரியர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.




நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமான் மீது கொண்டிருக்கும் மெய்க்காதல்


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 2-3-5
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:

"எந்த மாவீரன் நான் காட்டும் ஏழு முரட்டுக் காளைகளை அடக்கி வெல்கின்றானோ, அவனுக்கே நப்பின்னையைத் திருமணம் செய்து கொடுப்பேன்!" என்று கும்பர் அறிவித்துவிட்டார். இதனால், கண்ணனும் நப்பின்னையும் ஒருவரை ஒருவர் காதலித்த போதும், போட்டியின் முடிவைக் கொண்டே திருமணம் நிச்சயிக்கப்படும் நிலை.

"என் உடலும் உயிரும் கண்ணனுக்கே. வேறொருவருக்குப் பேச்சுப்படில் வாழகில்லேன்!" என்ற நிலையில் இருந்த நப்பின்னை, "கண்ணனே வெல்லவேண்டும்!" என்று ஆவலுடன் காத்திருந்தாள். கண்ணனைத் தவிர வேறு ஒரு துணையை நினைத்தும் பாராதவள் நப்பின்னை என்பதால் ஆழ்வார் "தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை" என்று கண்ணனைப் போற்றுகின்றார்.




கண்ணன் எம்பெருமான் நப்பின்னைப் பிராட்டி மீது கொண்டிருக்கும் பெருங்காதல்


ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 33
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"வடிப்பவள வாய்ப் பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்திறுத்து" என்ற சொற்றொடருக்கு உரையில் உள்ள விளக்கம்:

  • திருவடியால் சகடாசுரனையும், காளிங்கனையும் வென்றான்.
  • திருக்கையால் குவலயாபீடம் என்ற யானையை வென்றான்.
  • திருவாயால் பூதனையை முடித்தான்.
  • அவதாரங்கள் முடிந்த பின்னும், தன் நினைவாலேயே அடியார்களின் எதிரிகளைப் போக்குவான்.

எதிரியை எப்படியும் மிக எளிதாக அழிக்கக்கூடியவன்.

அப்படிப்பட்டவன், பவளம் போன்ற சிவந்த திருவாயை உடையவளும், மிகவும் அழகான தோள்களை உடையவளும் ஆகிய நப்பின்னைக்காக, "அவளது நிகரற்ற பெருமைக்குத் தக்கவாறு பெருமுயற்சி எடுத்து வெல்லவேண்டும்!" என்று எண்ணி, தன்னுடைய திருமேனி முழுவதையும் பயன்படுத்தினான்!

அவளுடைய தோள்களைத் தழுவவேண்டும் என்ற ஆசையினால், பாய்ந்து சென்று, மிக்க வலிமை கொண்ட ஏழு காளைகளைத் தன் திருமேனியால் தழுவினான்!




தெய்வத் திருமணம் இனிதே நிறைவேறியது!


ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 85
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"பின்னைக்கா ஏற்றுயிரை அட்டான் எழில்" மற்றும் "புவியினார் போற்றி உரைக்கப் பொலியுமே" என்பவைக்கு உரை:

"நப்பின்னைப் பிராட்டியுடன் கூடுவதற்குத் தடையாக இருந்த ஏழு காளைகளைக் கண்ணன் எம்பெருமான் அடக்கிய அந்தப் பேரெழிலையும், அதன் பின், நப்பின்னைப் பிராட்டியை அவன் கடிமணம் புரிந்த அந்தப் பேரெழிலையும் பற்றிப் பேசவும் முடியுமோ?" என்று ஆழ்வார் ஈடுபட்டு வியக்கின்றார்.




"சரி, கண்ணன் எம்பெருமானும் நப்பின்னைப் பிராட்டியும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கடி மணம் புரிந்தனர். இதில் நமக்கு என்ன நன்மை?" என்ற கேள்விக்கு விடை:


ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 2-5-1
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"பின்னை மணாளனை பேரில் கிடந்தானை" என்பதற்கு ஆசாரியர் அருளும் உரை:

கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைப் பற்ற விரும்புவோருக்கு நப்பின்னை பிராட்டியே முதன்மையான எம்பெருமாட்டியாம். அவளை முன்னிட்டுக்கொண்டே கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைப் பற்றவேண்டும்.

எம்பெருமானின் மேன்மையைக் கோடிட்டுக் காட்டுவது அவன் திருமாமகள் கொழுனன் என்பதாம். அது போல, எம்பெருமானின் நீர்மையைக் [எளிமையைக்] கோடிட்டுக் காட்டுவது, அவன் ஆயர்மாமகளான நப்பின்னைப் பிராட்டியின் மணாளன் என்பதாம்.

நாம் எல்லோரும் எளிதாக சென்று அவனை அடையும்படி, [ஆழ்வார்களின் பாடல் பெற்ற 108 திருத்தலங்களில் ஒன்றான] திருப்பேர் நகர் [கோவிலடி] என்கிற திருத்தலத்தில், அவன் எழுந்தருளியிருப்பதன் வேர்க்காரணமே அவன் நப்பின்னை மணாளன் என்பதாம்.

குறிப்பு:

  1. எம்பெருமான் இயல்பாகவே வள்ளல் தன்மை உடையவன். எனினும், அவ்வள்ளல் தன்மையை அவனது விருப்பப்படி அவன் நடக்கும் சுதந்திரத் தன்மை மறைக்கின்றது. இதனால், நம் குற்றங்களைக் கண்டு நம்மைத் தள்ளிவிட வாய்ப்புள்ளது.

    பிராட்டி எம்பெருமானுக்கு மிகவும் இனிமையானவள் என்பதால் அவள் சொல்வதை அவன் கேட்பான். அவளுடைய குழந்தைகள் ஆகிய நாம் அவளிடம் சென்று முறையிட்டால், அவள் எம்பெருமானின் சுந்தந்திரத் தன்மையைக் குலைத்து, அவனது வள்ளல் தன்மையை மேலெழச் செய்கின்றாள். இதனைப் புருடகாரம் [புருஷகாரம்] என்பர். இதைச் செய்வதே பிராட்டிமார்களின் இயற்கைத் தன்மையாகும்.

  2. ஸ்ரீதேவி நாய்ச்சியார் சீதா தேவியாக அரசர் குலத்தில் திருவவதாரம் செய்தருளினாள். இது பெருஞ்சிறப்பு. கருணையின் இலக்கணமான இவள், "குற்றம் செய்யாதவர் எவர்? மன்னிப்பதே பெரியோரின் குணம்," என்று கூறுவாள்!

    பூதேவி நாய்ச்சியார் பட்டர்பிரான் கோதையாக அந்தணர் குலத்தில் திருவவதாரம் செய்தருளி, திருவாய்ப்பாடி மங்கைகளுள் ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டு வாழ்ந்தருளினாள். இது தனிச்சிறப்பு. பொறுமையின் இலக்கணமான இவள், "குற்றம் செய்தவர் எவர்? [எவருமில்லை!]" என்று கூறிவிடுவாள்!!

    நீளா தேவி நாய்ச்சியார் திருவாய்ப்பாடி மங்கைகளுள் ஒருத்தியாயான நப்பின்னையாக ஆயர் குலத்தில் திருவவதாரம் செய்தருளினாள். இது தனிப்பெருஞ்சிறப்பு. வண்மை மற்றும் நீர்மையின் இலக்கணமான இவள், "குற்றம் என்றால் என்ன?" என்று கேட்டுவிடுவாள்!!!

  3. எனவே, என்றுமே பிராட்டியை முன்னிட்டுக்கொண்டே எம்பெருமானைப் பற்றவேண்டும் என்று பெரியோர்கள் காட்டுகின்றனர். ஸ்ரீ இராமபிரானின் அருளைப் பெற, சீதா தேவியின் திருவடிகளில் விண்ணப்பிக்கவேண்டும். ஸ்ரீ வராகப் பெருமானின் அருளைப் பெற, பூமா தேவியின் திருவடிகளில் விண்ணப்பிக்கவேண்டும். ஸ்ரீ கண்ணன் எம்பெருமானின் அருளைப் பெற, நப்பின்னைப் பிராட்டியின் திருவடிகளில் விண்ணப்பிக்கவேண்டும்.



நப்பின்னைப் பிராட்டியுடன் எழுந்தருளியுள்ள கண்ணன் எம்பெருமானின் ஊர் - திருநறையூர்!


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 6-5-4
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர்" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:

"நறுமணம் மிக்க கூந்தலை உடைய நப்பின்னை பிரட்டிக்காக 7 எருதுகளை வென்ற கண்ணன் எம்பெருமான் உறையும் ஊர் திருநறையூரே," என்று ஆழ்வார் நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.

குறிப்பு: "நாய்ச்சியார் கோயில்" என்று பெயர் பெற்ற இவ்வூரில் நப்பின்னை பிராட்டியே 'வஞ்சுளவல்லி' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளாள். இங்கே, அவளுக்கே முதன்மையான இடம் வழங்கப்படுகின்றது. "நம்பிக்கை நாய்ச்சியார்" என்று கொண்டாடப்படும் வஞ்சுளவல்லி நாய்ச்சியார், அவளது சிற்றிடையில் சாவிக்கொத்து தொங்க, ஆசாரியர்கள் விளக்கி அருளிய அந்த நித்ய நவ யௌவனத்துடன், பேரெழில் கொஞ்சும் திருமுகமண்டலத்தில் மடப்பமும் புன்முறுவலும் தவழ எழுந்தருளியுள்ளாள்.

Image Credit: https://www.pinterest.com/pin/453808099947283462/



"சரி, திருநறையூர் சென்ற பின், நப்பின்னைப் பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு கண்ணனை எப்படிப் பற்றவேண்டும்?" - இக்கேள்விக்குப் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை அற்புதமான விடைகளைத் திருப்பாவையில் அருளியுளாள்!


ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 18
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
இந்தப் பாசுரத்தில் உள்ள பல சொற்றொடர்களுக்கு மிகவும் அழகான உரைகள் வரையப்பட்டுள்ளன:

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்: "ஐயர் ஸ்ரீ நந்தகோபனார் பார்த்து நம் கண்ணனுடன் திருமணம் செய்து வைத்தார்" என்ற பெருமிதம் கொண்டவளாம் நப்பின்னைப் பிராட்டி!

கந்தம் கமழும் குழலி: நப்பின்னைப் பிராட்டியின் கூந்தலின் நறுமணம் எம்பெருமானுக்கே நறுமணத்தைத் தரக்கூடியதாம். இது நாசி என்ற புலனுடைய இன்பத்திற்குக் காரணமாகும்.

கடை திறவாய்: நப்பின்னைப் பிராட்டியின் அருளும், எழிலும் திகழும் தெய்வத் திருமேனியைக் காண்பதே கண் பெற்ற பயனாம்.

பந்தார் விரலி: பந்து என்பது உயிரினங்கள் மற்றும் உணர்வற்ற பொருள்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகத்தைக் குறிக்கும். ஒரு கையில் அவளது பிள்ளைகளான நம்மையும், மறு கையில் கண்ணன் எம்பெருமானையும் தமது திருக்கையால் பற்றி இருப்பவள் நப்பின்னைப் பிராட்டி.

உன் மைத்துனன் பேர் பாட: கண்ணன் எம்பெருமான் நப்பின்னைப் பிராட்டியிடம் பந்து விளையாட்டில் தோற்றதைப் பாடி, நா பெற்ற பயன் பெற வேண்டும் என்று ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வேண்டுகின்றாள்.

சீரார் வளை ஒலிப்ப: நப்பின்னைப் பிராட்டி என்றுமே கண்ணன் எம்பெருமானைப் பிரியாதவள். எனவே, அவளது திருக்கைகளில் ஒரு நாளும் வளைகள் கழன்று விழுந்ததில்லை! அவளது திருக்கைகளில் உள்ள வளையல்களின் ஓசையைக் கேட்பது செவிச்செல்வத்தின் பயனாம்.

செந்தாமரைக்கை: "எவரைக் கண்டும் அஞ்சேல்!" என்று எம்பெருமானின் தாமரைக்கை அருளும். நப்பின்னைப் பிராட்டியின் செந்தாமரைக்கை "மாயக் கண்ணனையும் கண்டு அஞ்சேல்!" என்று நமக்கு அருள் பாலிக்கும்!




ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 19
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
கம்சன் ஏவிய குவலையாபீடம் என்ற யானையின் தந்தம் கொண்டு செய்த கட்டிலில் உறங்கும் வீரனின் மணவாட்டி ஆகிய நப்பின்னைப் பிராட்டி, கண்ணன் எம்பெருமானைக் குத்துவிளக்கொளியில் சேவிக்கும் பேறு பெற்றவளாம்.

"கண்ணனை விட்டுப் பிரிவது" என்ற குற்றம் இல்லாதவள் ஆகையால், அவள் திருக்கண்களில் மையிட்டுள்ளாள். கூந்தலில் மலர்களைச் சூடி உள்ளாள். அவள் தொட்டதாலேயே, பூங்கொத்து அலர்ந்ததாம்; கண்ணனின் மார்பும் மலர்ந்ததாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவளாம் நப்பின்னைப் பிராட்டி.

"நம்மை வந்தடைந்தவர்களுக்கு யார் முதலில் அருள் செய்பவர் பார்ப்போம்!" என்று நப்பின்னையும் கண்ணனும் போட்டி போட்டுக்கொண்டு அருள் செய்வராம். "நப்பின்னைப் பிராட்டியே! நீ எங்களுக்கு அருள் செய்வதில் காலம் தாழ்த்துவது, உனது இயற்கைத் தன்மைக்கும், உன் இன்னருளுக்கும் பொருந்தாதல்லவோ?" என்று ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வினவுகின்றாள்.




ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 20
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
இது நப்பின்னைப் பிராட்டியின் பெருமைகளை மிகவும் அழகாகத் தெரிவிக்கும் பாசுரம்.

"செப்பென்ன மென்முலை," "செவ்வாய்," "சிறுமருங்குல்" ஆகிய சொற்களால் நப்பின்னைப் பிராட்டியின் ஒப்பற்ற திருமேனி எழில் கொண்டாடப்படுகின்றன. இதனால், நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமானுக்கு மிகவும் இனியவளாக இருக்கின்றாள். அது மட்டுமே இன்றி, "செப்பென்ன மென்முலை" என்பது செழுமையான பக்தியைக் குறிக்கும். "செவ்வாய்" என்பது கனிந்த ஞானத்தைக் குறிக்கும். "சிறுமருங்குல்" என்பது வைராக்கியம் என்ற உலகியல் பற்றற்ற தன்மையைக் குறிக்கும்.

நங்காய்: "நற்குணங்கள் யாவும் நிறைந்த நப்பின்னை" என்று கொண்டாடப்படுகின்றாள். இதனால், நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமானுக்கு மிகவும் பொருத்தமானவளாகவும் இருக்கின்றாள்.

திருவே: எம்பெருமானுக்கே பெருஞ்செல்வமாகத் திகழ்பவள்; எம்பெருமானையே தனக்குப் பெருஞ்செல்வமாகப் பெற்றவள்!

உன் மணாளன்: உன் வடிவழகுக்கும் நற்குணங்களுக்கும் தோற்று உனக்கு அடங்கி இருப்பவன்!

நீராட்டு: உன் பரிந்துரையாலேயே நாங்கள் அவனைப் பெறவேண்டும். “நப்பின்னை பார்த்து எங்களுக்குக் கொடுத்த கண்ணன்” என்று இருத்தல் வேண்டும். நாங்களாக அவனைக் கிட்டியதாக இருத்தல் கூடாது.




"சரி, நப்பின்னைப் பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு கண்ணனைப் பற்றிய பின் என்ன செய்யவேண்டும்?" - இதற்கும் விடைகளை ஆழ்வார்கள் அருளியுள்ளனர்:


ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 9-10-4
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"மான்களைக் கூட நாணச் செய்யும் மிக அழகிய திருக்கண்களை உடையவளும், மடப்பம் நிறைந்தவளும் ஆகிய நப்பின்னை தன் கேள்வன், அடியார்களுடன் கலந்து பழக, உறையும் ஊர் திருக்கண்ணபுரம். அந்தத் திருக்கண்ணபுரத்து எம்பெருமானே நுமக்குச் சரண் ஆகும். தேன் சிந்தும் வாடாமலர்களை இட்டு நீர் அவனை இறைஞ்சுமின்!" என்று ஆழ்வார் நம்மை அழைக்கின்றார்.




ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 5-9-8
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"ஏழு உலகங்களும் அறியும்படி, அன்று திருவாய்ப்பாடியில், வஞ்சிக்கொம்பு போன்ற சிறுத்த இடை உடைய நப்பின்னைப் பிராட்டியை அணைவதற்காக, ஏழு எருதுகளைப் பொருதவன் திருப்பேர் நகரில் உறைகின்றான். அவனது திருநாமங்களை ஏத்தி நான் உய்ந்து போனேன் காணீர்!" என்கிறார் ஆழ்வார்.




"நப்பின்னைப் பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு கண்ணனின் பாதம் நண்ணிய எம் ஐயன் இராமானுசனின் புகழை மட்டுமே என் வாய் ஓதும்!" என்கிறார் ஒருவர்:


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 28
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
இங்கே, "பஞ்சு போன்ற மென்மையான திருவடிகளை உடைய எங்கள் நப்பின்னைப் பிராட்டியின் காதலன் கண்ணன் எம்பெருமான். அந்தக் கண்ணனுடைய பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரியவர்" என்று ஸ்ரீ இராமானுசர் போற்றப்படுகின்றார்.

ஸ்ரீ இராமானுசர் துறவறம் ஏற்ற பின், மாதுகரம் ஏற்று உண்ட காலத்தில், பட்டர்பிரான் கோதை அருளிய திருப்பாவையை மனத்துள் தியானித்துக்கொண்டே மாதுகரம் ஏற்கச் செல்வராம்.

ஒரு நாள், அவரது ஆசாரியர் ஸ்ரீ பெரிய நம்பிகளின் திருமாளிகையின் திருவாசலில் பிட்சை ஏற்க நின்றபோது, [நாம் இக்கட்டுரையில் முன்னமே சுவைத்த] "உந்து மதகளிற்றன்" என்ற திருப்பாவை 18-ம் பாசுரத்தைத் தியானித்துக்கொண்டிருந்தார்.

அவர் "வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்" என்ற வரியைத் தியானிக்க, அப்போது சரியாக அவரது ஆசாரியருடைய திருமகளான அத்துழாய் கதவைத் திறக்க, "நப்பின்னைப் பிராட்டியே கதவைத் திறந்தாள்!" என்று எண்ணி ஸ்ரீ இராமானுசர் மயங்கி விழுந்துவிட்டார்!

அத்துழாய் உள்ளே ஓடிச் சென்று, ஸ்ரீ பெரிய நம்பிகளிடம், "ஐயா! ஜீயர் மயங்கி விழுந்தார்!" என்று விண்ணப்பித்து, அவரை அழைத்து வந்தாள். அவரோ, புன்முறுவல் செய்துகொண்டே, மெதுவாக ஸ்ரீ இராமானுசரை எழுப்பி, "உந்து மதகளிற்றன் பாசுர அனுசந்தானம் செய்தீரோ, திருப்பாவை ஜீயரே?" என்றாராம்! அன்றிலிருந்து, ஸ்ரீ இராமானுசருக்குத் "திருப்பாவை ஜீயர்" என்ற சிறப்புத் திருநாமம் ஏற்பட்டது.

இதனால், ஸ்ரீ இராமானுசர் நப்பின்னைப் பிராட்டியின் திருவடிகளுக்கு மிகவும் அன்பு பூண்டவர் என்று விளங்குகின்றது அல்லவா? "அப்படிப்பட்ட ஸ்ரீ இராமானுசருடைய புகழையே என் வாய் ஓதும்! என்னே நான் பெற்ற வாழ்ச்சி!" என்று திருவரங்கத்து அமுதனார் பூரிக்கின்றார்.




முடிவுரை
 
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் நீளா தேவியாகிய நப்பின்னைப் பிராட்டியின் பெருமைகளை எவ்வளவு அழகாக எடுத்துரைத்துள்ளனர் என்பதை ஓரளவு கண்டோம்.

நாமும் திருப்பாவை ஜீயரின் திருவடி நிழலில் ஒதுங்கி, திருப்பாவையைத் தினமும் ஓதுவோம்!
நப்பின்னைப் பிராட்டியின் புகழைப் பாடி, செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்!


வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment