ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் நிலமாமகள் [பூமிப் பிராட்டி] |
Image Source: https://in.pinterest.com/ |
முன்னுரை |
திருமாலின் தேவிமார்கள் மூவர்:
ஆதலால், இக்கட்டுரையில்:
|
ஸ்ரீ நிலமாமகள் நாய்ச்சியார் ஆகிய ஸ்ரீ பூமிப் பிராட்டியார் |
Image Source: https://in.pinterest.com/pin/32721534783783169/ |
பொறுமையே ஸ்ரீ பூமிப் பிராட்டியாரின் தலையாய திருக்கல்யாண குணம்
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 2-6-2 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
"பார் வண்ண மட மங்கை" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:
இந்தப் பூவுலகிற்கு நாயக தேவதையாக விளங்குபவள் "ஞாலப் பொன் மாது" என்று சான்றோர்களால் போற்றப்படும் ஸ்ரீ நிலமாமகள் ஆகிய ஸ்ரீ பூமிப் பிராட்டியார். இவள் பொறுமையின் எல்லை நிலம். நாம், எவ்விதமான குற்ற உணர்வும் இன்றி, இவளிடத்தில் எண்ணற்ற குற்றங்களைப் புரிகின்றோம். நம் கால்களால் இவளை மிதிக்கின்றோம். ஆகிலும், இவள் தனது பொறுமையை இழப்பதில்லை. இவள் எம்பெருமானுக்கும் பொறுமையைக் கற்பிப்பவள். இவளும் திருமாமகளும் எம்பெருமானுக்கு இருபுறமும் திகழ்கையில், நாம் அவனைக் கிட்டி, அவன் திருவருளைப் பெறுவது நிச்சயம். |
எம்பெருமான் பார் வண்ண மட மங்கைக்குப் பக்தர் என்று ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளியுள்ளார்!
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பாசுரம் # 18 |
"பக்தர்" என்னும் அளவிற்கு ஸ்ரீ நிலமாமகளுக்காக எம்பெருமான் என்ன செய்தான்? காண்போம்.
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 4-4-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டியின் பொருட்டு எம்பெருமான் மிகப்பெரிய காட்டுப் பன்றி உருவம் எடுத்தது பற்றிப் பேசப்படுகிறது.
எம்பெருமான் திருக்குளம்பில் உள்ள சிலம்பில், பரல்கள் போல், பெரிய மேரு மலை சிக்கி, "கண கண" என்று ஒலியெழுப்பியது; திருமகள் உறையும் ஆகாரம் [திருமேனி] குலுங்கியது; பூமியை இடந்து, பூமிப்பிராட்டியைத் தழுவி, தனது தந்தத்தின் மேல் கருநீல மணியை வைத்தது போல் பூமியை வைத்து, ஸ்ரீ கோலவராகப் பெருமான் அருளினான். |
"ஏன் பன்றி உருவம் எடுத்துக் கொள்ளவேண்டும்?!" என்ற கேள்விக்கும் பாசுரங்களில் விடை!
|
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 4-2-6 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரச் சொற்றொடர்களுக்கான உரைகளைப் பாரீர்:
"மாதர் மா மண்மடந்தை": அன்பும், இனிமையும் நிறைந்த மடந்தையான ஸ்ரீ பூமிப் பிராட்டியார் மாதர்களுள் மிகச் சிறந்தவள். "பொருட்டு ஏனமாய்": இரணியாட்சன் என்ற அரக்கன் ஸ்ரீ நிலமாமகளை ஆவரணக்கடல் நீருக்கடியில் ஒளித்துவைத்தான். ஸ்ரீ பூமிப் பிராட்டியார் கடல் பாசியில் துன்புற்று இருந்தாள். அன்புக்குரிய தலைவி பாசியில் துவண்டு போயிருக்க, அவளது உயிரின் தலைவன், எவ்விதமான சலனமும் இன்றி, எந்த அழுக்கும் உடலில் ஒட்டாமல் இருப்பது அத்தலைவனுக்கு அழகாமோ? இதனாலேயே, ஸ்ரீ பூமிப் பிராட்டியின் பொருட்டு, நீரையும், பாசியையும், சேற்றையும் கண்டு விலகாத உயிரினமான பன்றியின் உருவத்தை எம்பெருமான் எடுத்துக்கொண்டான்! "அம் காலத்து": ஏனமாய் எம்பெருமான் தோன்றியபோது அவன் மிகவும் அழகாக இருந்தான். இதனாலேயே ஆழ்வார்கள் ஸ்ரீ வராகப் பெருமானைக் "கோல வராகம்" என்று அழைப்பர். ஆதலால், ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ கோல வராகம் திருவவதாரம் செய்த அந்தக் காலத்தை மிகவும் "அழகான காலம்" எனப் போற்றுகின்றார். குறிப்பு: ஸ்ரீ பூவராகப் பெருமான் திருவவதாரம் செய்தருளியபோது, முனிவர்களும், "செம்பெரும்தாமரைக்கண்ணா! நீ இவ்வுருவம் எடுத்து வந்தாலும், உன் திருக்கண்கள் நீ யார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொடுத்துவிட்டன! உன் திருமேனி யக்ஞங்கள் செய்யப் பயன்படும் மங்கலப் பொருட்களின் வடிவமாகவே உள்ளது!" என்று போற்றினர். இதனால், ஸ்ரீ யக்ஞவராகன் என்றும் இப்பெருமான் அழைக்கப்படுகின்றார். |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 2-6-3 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
"ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:
மனத்துக்கு இனியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவர் தம்மை அலங்கரித்துக் கொள்வது போல், ஸ்ரீ பூமிப்பிராட்டியாரின் திருவுள்ள உகப்புக்கு ஏற்ப, தன்னை ஏனத்தின் உருவத்தால் எம்பெருமான் அலங்கரித்துக் கொண்டான். ஸ்ரீ கோலவராகப் பெருமான், ஸ்ரீ பூமிப்பிராட்டியாரின் எழில் கலையாத வண்ணம், அவளை மிகவும் மென்மையாக மீட்டெடுத்தார். "வைகுந்தத்து அமரர்களுக்குத் தலைவராக இருப்பவர், நம் பொருட்டு இப்படி ஒரு உருவம் எடுத்துக் கொண்டாரே!" என்று நெகிழ்ந்த ஸ்ரீ நிலமாமகள், தம்முடைய எழிலை அவ்வெம்பெருமானுக்கே அளித்தனளாம். |
மேற்கூறியவற்றை ஸ்ரீ நிலமாமகளே ஸ்ரீ ஆண்டாளாகத் திருவாய்மலர்ந்து அருளினாள்
|
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 11-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம் |
இந்தப் பாசுரத்தில் உள்ள பல சொற்றொடர்களுக்கு மிகவும் அழகான உரைகள் வரையப்பட்டுள்ளன:
"பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு": ஆவரண நீரில் பல நாள் கிடந்த இப்பூவுலகம் பாசி தூர்த்துக் கிடந்தது. இதனால், இப்பூவுலகின் நாயக தேவதையான பார்மகளாம் பூமிப்பிராட்டியார் மிக்க வருத்தமுற்றாள். "மாசுடம்பில் நீர் வாரா": இதைக் கண்ட எம்பெருமான், "என் மனத்துக்கினியாள் அழுக்குப் படிந்திருக்க, நான் பார்த்திருப்பேனோ?" என்றெண்ணி, ஏனத்தின் உருவெடுத்தான். திருமேனியில் சேற்று நீருடனும், அழுக்குடனும் காட்சியளித்தான். "மானமிலா": தான் வைகுந்தத்து அமரர்கள் அதிபதி என்பதை அவன் எள்ளளவும் பொருட்படுத்தவில்லை! பன்றியாம்: கோரைக்கிழங்குகளை உண்டான். நிலத்தில் திரியும் சராசரிப் பன்றிகளும் அவனை வேறாக நினைக்கமுடியாத வண்ணம் அவன் திருமேனி விளங்கியது. தேசுடைய தேவர்: அடியார்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று காத்தருளும் இந்த அற்புதமான திருக்கல்யாண குணத்தால், இந்தக் கோல வராகப் பெருமான் தேசு [ஒளி] உடையவனானான். |
ஸ்ரீ நிலமாமகளுக்காகவே மிக்க புகழ் பெற்ற மற்றொரு திருவவதாரமும் எடுத்தான்!
|
துவாபர யுகத்தில் ஸ்ரீ சத்தியபாமைப் பிராட்டி |
Image Source: https://in.pinterest.com/pin/180214422576558957/ |
ஸ்ரீ கண்ணன் திருவவதாரம் பூமியின் சுமையை நீக்கவே!
|
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 9-1-10 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்" என்பதற்கு ஆசாரியர் உரை:
அகழ்வாரையும் தாங்கும் ஸ்ரீ பூமிதேவியும் பொறுக்க முடியாதபடி, எம்பெருமானுக்குத் துரோகம் செய்பவர் மிகவும் மலிந்து போக, அவளே எம்பெருமானைக் காக்கும்படி வேண்ட, ஸ்ரீ கண்ணனாக வந்து பிறந்தான். [பிறந்த சில நாள்களிலிருந்து தொடங்கி, திருவவதாரம் முடித்துக்கொள்ளும் வரையில், ஸ்ரீ பூமிக்குச் சுமையாகத் திரிந்த எண்ணற்ற அசுரக் குணத்தோரை வேட்டையாடிக் கொன்றான்.] |
ஸ்ரீ சத்தியபாமை பிராட்டியின் சிறப்பு
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 3-4-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
எம்பெருமான் ஸ்ரீ கண்ணனாகப் பிறந்தபோது, அவனுக்கென்றே ஸ்ரீ பூமிதேவியும் ஸ்ரீ சத்தியபாமையாகத் திருவவதாரம் செய்தனள். அவளது திருமேனி எழிலை இப்பாசுரம் போற்றுகின்றது:
"அழகிய சிற்றிடையும், பவளம் போன்ற செம்மையான உதடுகளும், மூங்கில் போன்ற தோள்களும், பெண் மான் போன்ற அழகிய, நீண்ட கண்களும், பால் போன்ற இனிய சொல்லும், அவள் கூந்தலைத் தொட்டதால் மலர்ந்த மொட்டுக்களில் தேனும், நறுமணமும் நிறைந்திருக்கும் பெருமை உடைய ஸ்ரீ சத்தியபாமைப் பிராட்டிக்குத் தேவர்களின் தலைவனான இந்திரனின் தோட்டத்திலுள்ள கற்பகத் தருவைத் திருத்துவாரகைக்கு ஸ்ரீ கண்ணன் கொண்டுவந்தான். அவனே திருத்தெற்றியம்பலம் என்ற திருத்தலத்தில் செங்கண்மாலாக அருள் புரிகின்றான்," என்கிறார் ஆழ்வார். |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 4-6-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
ஸ்ரீ கண்ணன் எம்பெருமானும், ஸ்ரீ சத்தியபாமையும் நரகாசுரனை முடித்த பின், இந்திரனிடம் நரகாசுரன் பறித்த செல்வங்களை இந்திரனுக்கே மீண்டும் அருள, இந்திரலோகம் சென்றனர். அங்கே, இந்திரனின் பொழிலில் திருப்பாற்கடலில் உதித்த கற்பகத்தரு இருந்தது. அதன் மலர்களைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ சத்தியபாமை, இந்திரனின் மனைவியான சசியிடம் அம்மலர்களைத் தரும்படி கேட்டாள். சசியோ, அவர்கள் அப்பொழுது செய்திருந்த உதவியையும் மறந்து, "இவையெல்லாம் மானிடருக்குத் தகுந்தவை அல்ல," என்று கூறிவிட்டாள். இதனால் மனம் நொந்த ஸ்ரீ சத்தியபாமை, அம்மலர்களைக் கொண்டு வரும்படி ஸ்ரீ கண்ணன் எம்பெருமானிடம் கேட்டாள். ஸ்ரீ கண்ணன் எம்பெருமானும் இந்திரனைப் போரில் எளிதில் வென்று, கற்பக மரத்தை ஸ்ரீ சத்தியபாமையின் அரண்மனைத் தோட்டத்தில் நட்டான். இந்நிகழ்வை ஆழ்வார் பாடுகின்றார்.
இப்பாசுரத்தில், ஆசாரியர் "ஏவிளம்" என்ற சொற்றொடரை "ஏவு இளம்" என்றும், "ஏவ இளம்" என்றும் இரு வகையாகப் பிரித்து, அதற்கேற்ப பொருள்களும் அருளியுள்ளார்:
|
கலியுகத்தில் ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் |
Image Source: @vishnuprabhanc |
ஸ்ரீ ஆண்டாள் திருவவதாரத்தின் குறிக்கோள் |
திருமால் ஸ்ரீ கோல வராகமாகத் தோன்றி இரணியாட்சன் என்ற அசுரனைக் கொன்று ஸ்ரீ பூமிதேவியை மீட்டார் என்று அறிவோம். அப்பொழுது எம்பருமானுக்கும் பிராட்டிக்கும் நிகழ்ந்த உரையாடல் ஸ்ரீ வராகப் புராணமாக வடிவம் பெற்றது.
ஸ்ரீ நிலமாமகள் நாச்சியார் ஸ்ரீ ஞானப்பிரான் என்ற திருநாமம் உடைய ஸ்ரீ வராகப் பெருமானிடம், "பூமியில் வாழும் நம் குழந்தைகள் உம்மை அடைய ஒரு எளிய வழியை அருள்வீர்" என்று வேண்ட, "என் பெயர்களைப் பாடினால், என்னை மனத்தினால் சிந்தித்தால், என்னைத் தூய மலர்களால் அர்ச்சித்தால் என்னை அடையலாம்," என்று திருமால் அருளினார். இதை நமக்கு வெளியிடுவதே ஸ்ரீ நிலமாமகளின் திருவவதாரமான ஸ்ரீ ஆண்டாளின் குறிக்கோள்.
இந்த இரகசியத்தை ஸ்ரீ இராமானுசரின் முக்கியமான சீடர்களுள் ஒருவரான ஸ்ரீ திருமலை அனந்தான்பிள்ளை என்பவர் தம்முடைய "ஸ்ரீ கோதா சதுசுலோகி" என்ற துதி நூலில் அருளியுள்ளார்.
ஸ்ரீ வராகப்பெருமானின் மூன்று அறிவுரைகளையும் ஸ்ரீ ஆண்டாள் தெள்ளத்தெளிவாக அருளினாள்.
ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 5 |
திருமால் பெயர்களைப் பாடச் சொன்னதன் பின்னணி |
திருப்பாவையில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி," "வாயினால் பாடி," "உன் மைத்துனன் பேர் பாட" என்று பல இடங்களிலும் பெயர்களைப் பாடுவதைக் குறித்து நம் கோதை அருளியது ஏன்? இதற்கு ஸ்ரீ இராமானுசரின் வாரிசான ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம் ஒன்று உண்டு.
ஸ்ரீ வராகப் புராணத்தின் ஒரு பகுதி ஸ்ரீ கைசிக புராணம். இந்தப் புராணம் திருமால் உகந்த ஏகாதசி திதி அன்று, இரவு முழுவதும் திருமால் பெருமையைப் பாடி வந்த "ஸ்ரீ நம்பாடுவான்" என்ற ஒரு அற்புதமான திருமாலடியார் [சண்டாளர் குலத்தில் உதித்தவர்] பற்றி இயம்பும்.
ஒரு கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இரவு, ஸ்ரீ நம்பாடுவானைப் பசியில் வாடிய ஒரு பிரம்மராட்சதன் கொல்ல முயல, “திருமாலைப் பாடிய பின் உனக்கு உணவாகின்றேன்!” என்று ஸ்ரீ நம்பாடுவான் 18 சபதங்கள் செய்து, பிரம்மராட்சதனிடம் விடைபெற்று, இரவு முழுவதும் திருமால் பெருமையைப் பாடி, மனித உருவில் வந்த இறைவன், “உயிர் தப்ப வாக்கினைத் தவறுவது குற்றமாகாது!” என்று அறிவுறுத்தியும் அதை மறுத்து, தாம் அளித்த வாக்கினை மெய்ப்பிக்க பிரம்மராட்சதன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்.
சொன்ன சொல் தவறாமல் மீண்டும் வந்த ஸ்ரீ நம்பாடுவானைக் கண்டு வியந்த பிரம்மராட்சதன், “நீ பாடிய பாடல்களின் நற்பயனை எனக்கு அளித்தால் உன்னை விடுவேன்,” என்று பல முறை நயமாகப் பேசியும், ஸ்ரீ நம்பாடுவான் தாம் செய்த இறைச்சேவையைத் தம் உயிருக்கு விலை பேசவில்லை. அதிர்ந்த பிரம்மராட்சதன், ஸ்ரீ நம்பாடுவானின் அடி பணிந்து, “இக்கொடிய பிரம்மராட்சதப் பிறவியிலிருந்து எனக்கு முக்தி அளிப்பீர்” என்று கெஞ்ச, ஸ்ரீ நம்பாடுவானும் கருணையுடன் தாம் பாடிய கைசிகப் பண்ணில் அமைந்த பாடலின் நற்பயனை அளித்தார். பிரம்மராட்சதனும் நற்குடியில் ஒரு அடியாராகப் பிறந்து இறுதியில் மோட்சத்தை அடைந்தார்.
திருமால் ஸ்ரீ நம்பாடுவானுக்கு இந்திரலோகத்துச் சுகங்களை அளித்தபோதும், அவர் சுவர்க்கத்திலும் எம்பெருமானின் பெருமையையே பாடி இருந்தார். மற்ற தேவர்களையும் பாட்டு கேட்கும் படிச் செய்தார்!
தன்னலம் அற்றதும், எள்ளளவும் பிசகாததும் ஆகிய ஸ்ரீ நம்பாடுவானின் பக்தியைக் கண்டு மிகவும் உகந்த திருமால், ஸ்ரீ நம்பாடுவான் பரமபதத்தை அலங்கரிக்கச் செய்தார்.
"ஸ்ரீ கைசிக புராணத்தை என் சந்நிதியில் வாசிப்பவனும் கேட்பவனும் என்னை வந்தடைகின்றான்," என்று ஸ்ரீ வராகப் பெருமான் அருள, இச்சரித்திரத்தை மிகவும் விரும்பித் திருச்செவியுற்ற ஸ்ரீ நிலமாமகள் நாய்ச்சியார் பெருமகிழ்ச்சி எய்தியதாக இப்புராணம் கூறுகின்றது.
இதுவே ஸ்ரீ ஆண்டாள், "இறைவனின் பெயர்களைப் பாடவேண்டும்," என்று அருளியதன் இரகசியம் என்று ஸ்ரீ பராசர பட்டர் விளக்கியுள்ளார்.
ஸ்ரீ ஆண்டாள் திருவவதாரத்தின் ஒப்பற்ற சிறப்பு
|
ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 22, 23, 24 | ||
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம் | ||
|
Image Source: https://in.pinterest.com/pin/853572935625097146/ |
ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
|
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 16 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
ஸ்ரீ ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை, அதன் ஈடற்ற இனிமைக்கும், நறுமணத்திற்கும் தோற்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்பெருமானாகிய ஸ்ரீ வடபெருங்கோயிலுடையான், "நமக்கு அதுவே மிக்க இனியது காணீர்! தினமும் கொண்டுவருவீர்!" என்று ஸ்ரீ பெரியாழ்வாரிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டான்.
திருவரங்கத்திற்கு மற்ற ஒவ்வொரு திவ்வியதேசமும் ஒரு தோட்டம் போலே. திருவரங்கமே முக்கிய திவ்வியதேசம். ஸ்ரீ ஆண்டாள் கைபிடித்ததும் திருவரங்கத்து எம்பெருமானையே. அதனால், ஸ்ரீ ஆண்டாள் அம்மாலையைத் திருவரங்கனுக்கே கொடுத்தாள் எனத் தட்டில்லை. அது மட்டுமின்றி, இன்றும், ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அவரது தை, மாசி, சித்திரை பிரம்மோற்சவங்களின் 6-ம் திருநாள் அன்று காத்திருந்து சூடிக் கொள்வது கண்கூடு. ஆதலால், "அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள்" என்றும், "செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக்கிளி" என்றும் ஆசாரியர்களால் ஸ்ரீ ஆண்டாள் போற்றப்படுகின்றாள். |
முடிவுரை | |||
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஸ்ரீ பூமி தேவியாகிய ஸ்ரீ நிலமாமகள் பெருமைகளை எவ்வளவு அழகாக எடுத்துரைத்துள்ளனர் என்பதை ஓரளவு கண்டோம்.
திருப்பாவையையும், நாய்ச்சியார் திருமொழியையும் கற்றோர்களிடமிருந்து கற்போம், கல்வி தன்னில் ஆசை உள்ளோருக்குக் கற்பிப்போம். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்!
வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்! |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
No comments:
Post a Comment