"இவளுக்கு என்ன ஆயிற்று?" என்று வினவும் பெண்டிரிடம், "இந்தப் பெண்பிள்ளையின் மனமானது [எம்பெருமானை நினைத்து] நீர்ப்பண்டமாக உருக, கண்ணீர் பெருகி நிற்கின்றாள். [எம்பெருமானை நினைத்து] மயங்கி விழுகின்றாள். இவள் சோறு உண்ணவில்லை. உறக்கத்தையும் விரும்பவில்லை. 'திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்ட நம்பீ!' என்றும், 'நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த கழனிகள் உடைய திருவாலியில் உறையும் இளங்குமரா!' என்றும் அழைக்கின்றாள். அழகிய சிறகுகள் உடைய கருடாழ்வாரைப் போல இவளும் ஆடுகின்றாள்! பாடுகின்றாள். தோழியிடம், 'தோழி! திருவரங்கம் திருக்காவிரியின் படித்துறையில் நாம் நீராடப் பெறுவோமோ?' என்று வினவுகின்றாள். 'அவள் சொற்படி நடவாத ஒரு பெண்பிள்ளையைப் பெற்றாள்!' என்று இம்மாநிலத்தில் ஒப்பற்றதொரு பழியைப் பாவியேன் பெற்றேன்! அந்தோ!" என்று ஸ்ரீ பரகால நாயகியின் தாயார் மனம் இரங்கிக் கூறுகின்றாள்.
இந்த 'ஒப்பற்றதொரு பழி' மிகவும் போற்றத்தக்கதாம். ஸ்ரீ பரகால நாயகியாகிய பெண்பிள்ளை ஆரோ ஒரு சராசரி ஆடவனுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கவில்லை. ஸ்ரீ புருடோத்தமன் ஆகிய எம்பெருமானுக்கே தன் மனதைப் பறிகொடுத்துள்ளாள். ஆதலால், "இது ஒப்பற்ற பழியே!" என்று தாய், மேலோட்டமாகப் புலம்புவது போலப் பேசினாலும், உள்ளூர மிக்க பெருமிதத்துடன் கூறுகின்றாள்!
சிருங்கார ரசம் [காதல் - தலைவியினுடைய தோழியின் நிலை]
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 11-5-2
|
|
பின்னணி
|
|
தமது திருவுள்ளத்தில் பெருகும் அனுபவ வெள்ளத்தை ஒருத்தியாக இருந்து பேசமுடியாமல், ஸ்ரீ திருமங்கையாழ்வார் தம் ஒருவரையே இரண்டு தோழிகளாகப் பாவித்துக்கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைந்த பதிகம் ஆதலால் இந்தப் பதிகம் தோழி நிலையிலும் ஒரு சிறப்பான நிலையாம். இப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாசுரத்தைக் காண்போம்.
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
முதல் தோழி கூறுவதாவது:
"ஆறு பிள்ளைகளைக் கொடியவனான கம்சனிடம் பறிகொடுத்து, கால்களில் தளைகளுடன் சிறையில் வருந்தும் நங்கள் வசுதேவரின் மனவருத்தத்தைப் போக்கும் வண்ணம் இப்பூவுலகில் தோன்றி, 'நமது இந்தக் குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவானோ!' என்று நங்கள் வசுதேவரும், தெய்வத் தேவகியும் அஞ்சாத வண்ணம், அவர்களின் அச்சத்தைப் போக்க, அன்று இரவே திருவாய்ப்பாடிக்குச் சென்று, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய திருவம்சத்தை ஏற்றம் பெறச் செய்யும் யசோதை இளஞ்சிங்கமாக வளர்ந்தான், காணேடீ!"
இரண்டாம் தோழி கூறுவதாவது:
"அப்படி நந்தன் குல மதலையாய் வளர்ந்தவன் யாரெனில் எல்லோரையும் பிறப்பிக்கும் அந்த நான்முகனாரைத் தனது திருத்தாமரை உந்தியில் பிறப்பித்தவன் காண்! அவ்வளவு பெரியவனாக இருந்தும் எனக்குத் தந்தையாய், என்னையும் இந்தப் பிறவிகடலிலிருந்து கைதூக்கி விட, எம்பெருமானாய் இப்பூவுலகில் வந்து பிறந்தான்!"
இப்படி ஒரே பாசுரத்தில், ஒரு தோழியின் திருவாயால் எம்பெருமானின் எளிமைக் குணத்தையும், இன்னொரு தோழியின் திருவாயால் எம்பெருமானின் பரமனான தன்மையையும் ஸ்ரீ திருமங்கையாழ்வார் பேசி மகிழ்கின்றார். மகிழ்விக்கின்றார்.
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 1-6-3
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
நம் போன்றோர் எம்பெருமானின் திருவடிகளில் எப்படிச் சரணடையவேண்டும் என்பதை ஸ்ரீ திருமங்கையாழ்வாரிடமிருந்து கற்கவேண்டும்! நம் குறைகளை விண்ணப்பித்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களைக் கொண்டாடி, அவன் திருவடிகளில் சரணடையவேண்டும். இப்பதிகத்தில் உள்ள பாசுரங்களில் அதை நமக்கு வெகு அழகாக ஸ்ரீ திருமங்கையாழ்வார் கற்பிக்கின்றார். இப்பாசுரத்திற்கு உரை அருளிய ஆசாரியர் அருளியவற்றுள் சில தேன் துளிகள்:
"பகலில் பொருள் ஈட்டுவதற்குச் சூதாட்டத்தில் ஈடுபட்டேன். இரவில் பொருள் ஈட்டுவதற்குப் பகலில் சூதாட்டத்தில் வென்றவனைக் கொள்ளையடித்தேன். சுருண்ட குழல்கள் உடைய பெண்கள் மீது ஆசை கொண்டு, ஈட்டிய பொருள்களைக் கொண்டு அவர்களுக்குச் சேவை செய்தேன். கண்கள் விரும்பிய பொருள்கள் யாவற்றின் பின்னும் சென்றேன்.
உன்னைத் தொழும் இந்திரன் முதலான தேவர்கள், உன் திருவடிகளில் தொண்டினை வேண்டாமல் வேறு பயனை வேண்டியபோதும், அதைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்காக ஆமையாய்த் தோன்றி, வெண்ணிற அலைகள் கொண்ட திருப்பாற்கடலைக் கிளர்ந்தெழச் செய்த பெருந்தகவுடையோனே! தேவர்களுக்கு மட்டுமே இல்லாமல், என் போன்றோரும் வந்து அடைய திருநைமிசாரண்யத்தூள் உறையும் அருளாளா! பாவிகளுக்கு யம சேவகர்கள் செய்யும் கொடுமைகளை நினைத்து நடுங்கிக் கைகால் வலுவிழந்து, உன் திருவடிகளில் வந்து சரணடைந்தேன்!"
|
பீபத்ச ரசம் [அருவருப்பு, வெறுப்பு]
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 6-2-1
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் அருளிய உரை:
பிறர் சொல்லும் தாழ்ந்த சொற்களைப் பொறுத்துக்கொண்டேன். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று இருக்க, அறத்தையும் வீடுபேற்றையும் மறந்து, என்னுடைய ஐம்புலன்கள் "பொருளைக் கொடு! இன்பத்தைக் கொடு!" என்று கடன் கொடுத்தவரைப் போல என்னை விரட்ட, அவைகளுக்குப் பொருளையும் இன்பத்தையும் ஈந்தேன். என் மனத்தின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடப்பவரை "உன் மீதுள்ள விருப்பம் என்றும் மாறாது" என்று வாயினால் கூறி, அதன் படியே ஆர்வத்துடன் நடத்தினேன். என் மனத்தின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடவாதவரை "உன் மீதுள்ள வெறுப்பு என்றும் மாறாது" என்று வாயினால் கூறி, அதன் படியே செற்றத்துடன் நடத்தினேன். இந்த உணர்வுகளை மனதில் அகலமாகப் பதித்துக் கொண்டேன்.
[காலம் பல சென்ற பின்,] "நான் ஏன் இவ்வாறு எல்லாம் செய்தேன்?" என்று எண்ணி, அவற்றை எல்லாம் துறக்க முயன்றேன். எவ்வளவு முயன்றாலும், என்னால் அவற்றை விட இயலவில்லை. வெறுத்தேன். "என்னால் இவை எதுவும் இயலாது" என்று உணர்ந்து, திருவிண்ணகர் மேயவனே, உன் திருவடிகளை வந்து அடைந்தேன்.
|
வீர ரசம் [வீரம், துணிச்சல்]
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 3-4-10
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
பாசுரத்தின் உரையில் உள்ள பொருள்களின் சுருக்கம்:
செங்கமலத்தில் உறையும் நான்முகனாருக்குச் சமமான மறையோதும் அந்தணர்கள் வாழும் திருக்காழிச்சீராம விண்ணகரம் என்ற திருத்தலத்தில் உறைகின்ற செங்கண்மாலை
- அழகிய தாமரை மலர்கள் நிரம்பிய தடாகங்களினாலும், வயல்களாலும் சூழப்பட்ட திருவாலி திருத்தலத்தைச் சேர்ந்தவரும் [ஆலிநாடன்]
- தமது திருவடிகளை அடைந்தவருக்கு மழைமேகம் போல அருளைப் பொழிந்து தம்மையும், தம் பாசுரங்களையும் அருள்பவரும் [அருள்மாரி]
- எதிர்த்து வருபவரை எதிர்க்க முடியாதபடி அமுக்குபவரும் [அரட்டமுக்கி]
- எதிரிகளால் வெல்லமுடியாத சிங்கம் போன்றவரும் [அடையார் சீயம்]
- கொங்கு மலர்க் குழலியர் [உள்பட எல்லோராலும்] மிகவும் விரும்பத்தக்கக் காமவேள் போன்ற அழகை உடையவரும் [கொங்கு மலர்க் குழலியர் வேள்]
- திருமங்கை நாட்டின் வேந்தனாகத் திகழ்பவரும் [மங்கை வேந்தன்]
- அடியார்களைக் காக்க வெற்றி தரும் வேலை ஏந்திக்கொண்டு, எதிரிகளுக்குக் காலன் போல இருப்பவரும் [கொற்றவேல் பரகாலன்] ஆகிய
- மிடுக்கை உடையவராம் [கலியன்],
கூட்டம் கூட்டமாக நற்றமிழை அனுபவிக்க வருவோருக்காகச் சொன்ன இந்தத் தமிழ் மாலையை, இதன் மெய்ப்பொருள்களுடன் கற்க வல்லவர்கள் யாவரோ, அவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் தலைவர்களாக விளங்குவார்கள்.
இது ஸ்ரீ திருமங்கையாழ்வார் தாமே தம் பெருமைகளைத் திருவாய்மலர்ந்தருளிய பாசுரம்! "ஆழ்வார் இப்படிச் செய்யலாமோ?" என்ற கேள்விக்கு, ஒரு சுவையான நிகழ்ச்சியின் வாயிலாக, ஆசாரியர் உரையில் விடை அருளியுள்ளார்:
திருவரங்கப் பெருமாள் ஒரு அடியவரிடம், "நம்முடைய ஆழ்வார்களிடம் நீர் ஏதேனும் குற்றம் கண்டதுண்டோ?" என்று வினவினாராம். அப்போது, அந்த அடியவர் இந்தப் பாசுரத்தை விண்ணப்பம் செய்து, "ஆழ்வார் உம்மைப் பாட வந்து, தம்மையே பாடிக்கொண்டுள்ளாரே!" என்றாராம். அதற்குத் திருவரங்கப் பெருமாள் சிரித்துக்கொண்டே, "அப்படி அன்று. 'அடியேனுக்கு ஏற்பட்ட பெருமைகள் யாவும் எம்பெருமான் அருளால் ஏற்பட்டவை. இவை யாவும் அவன் பெருமைகளே!' என்று ஆழ்ந்து, உணர்ந்து ஆழ்வார் பாடினார். ஆதலால், இதுவும் நம்மையே பாடியதாம்!" என்று அருளினாராம்.
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 8-10-3
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"திருக்கண்ணபுரத்தில் உறையும் அம்மானே! 'திருவெட்டெழுத்து' என்று புகழ் பெற்ற உனது அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருளாக மற்ற பல பொருள்களையும் நீ உரைத்தாலும், நீ உரைத்ததின் சாரமான பொருளாக நான் கற்றது என்னவெனில்: 'வேறு தெய்வங்களைப் பற்றியிருப்போரை விட்டு, உன் ஒருவனையே தெய்வமாகக் கொண்டு, உன் திருவடிகளையே பற்றி இருக்கும் அடியாருக்கு அடியேன் அடியவன் ஆவேன்,' என்பதேயாம்!" என்கிறார் ஆழ்வார்.
"நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று முதலில் முழங்கியவர், "அந்தத் திருநாரணன் தாளிணைகளைக் காலம்பெறச் சிந்தித்து உய்ந்தவர்களின் திருவடிகளே தமக்குப் பேறு," என்று இறுதியில் எம்பெருமானிடம் அறுதியிடுகின்றார்! இதுவே ஸ்ரீ திருமங்கையாழ்வார் அடைந்த ஞானத்தின் உச்சநிலை. இதை உணர்ந்த பின்னரே ஆழ்வார் அமைதி கண்டார்.
|
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 2
|
|
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
|
|
திருக்குறையலூர் என்ற திருத்தலத்தில் ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவவதரித்தார். அதனால், அவருக்கு "குறையல் பிரான்" என்ற திருநாமமும் உண்டு. "அந்தக் குறையல் பிரான் திருவடிக்கீழ் மாறாத அன்பினை உடையவர் ஸ்ரீ இராமானுசர். அந்த ஸ்ரீ இராமானுசரின் அளவில்லாத பெருமைகளைத் தவிர வேறு எதையும் அடியேனது உள்ளம் நினைக்காது. இதுவே அடியேனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நல்ல குணம்!" என்று ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் முழங்குகின்றார்.
குறிப்பு: ஸ்ரீ திருமங்கையாழ்வாருடைய திருவவதார திருத்தலத்தில், அவரது திருவடியின் கீழே ஸ்ரீ இராமானுசரின் சிறிய திருமேனி நமக்கு அருள் பாலிப்பதை இன்றும் கண்டு வணங்கலாம்.
|
முடிவுரை
|
|
1000-கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடிய ஸ்ரீ திருமங்கையாழ்வார், 80-கும் மேற்பட்ட திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர் மட்டுமே மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 40-கும் மேற்பட்டவை! இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இவ்வாழ்வாரின் கடல் போன்ற அருளிச்செயல்களில், ஸ்ரீ இராமானுசரின் இன்னருளால், ஒரு சில முத்துக்களை மட்டுமே சுவைத்தோம். பொங்கு புகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கு மனம் பெற ஸ்ரீ இராமானுச முனியின் திருவடி பணிவோமாக.
வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!
|
நன்றிகள் பல!
|
|
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
பொலிக! பொலிக! பொலிக!
|
-
Sri Vaduga Nambigal Image Credit: https://guruparamparai.wordpress.com This...
-
Avatharas of Sriman Narayana - As Explained by Sri Vaishnava Acharyas In Sri Vaishnava philosophy, Jivathmas are classified as Nithyas...
-
முன்னுரை சில நாள்களுக்கு முன் சில பெண்கள் “சூர்ப்பணகை தனது காதலைத் தெரிவித்தால் அவளை இராமனும் இலக்குவனும் மூக்கறுத்துத் துன்புறுத்தினர...
-
முன்னுரை பொதுவாகவே ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி எத்தகையது என்பதை “ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி” என்ற கட்டுரையிலும் ...
-
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் ஸ்ரீ கருடாழ்வார் ...
-
Sri Andal Thiru Avathara Vaibhavam Image Credit: Sri @vishnuprabhanc Avl Introducti...
| | |