Search This Blog

Monday, 10 September 2018

06. ஆழ்வார்கள் மீது ஆசாரியர்கள் செலுத்திய பேரன்பும் பெருமதிப்பும்


முன்னுரை

பொதுவாகவே ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி எத்தகையது என்பதை “ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி” என்ற கட்டுரையிலும்

ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் முன்னோர் அருளிய வியாக்கியானங்களை எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதை “ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் அவர்களது குருமார்கள் அருளிய வியாக்கியானங்கள் மீது கொண்ட பக்தி” என்ற கட்டுரையிலும் விவரித்திருந்தேன்.

"திவ்ய பிரபந்தப் பாசுரங்களைத் தம் வாழ்வில் ஒருங்கிணைத்த ஆசாரியர்கள்" என்ற கட்டுரையில் ஆழ்வார்களின் பாசுர வரிகளில் ஆசாரியர்கள் எவ்வளவு மூழ்கியிருந்தார்கள் என்பதைத் தெரிவித்தேன்.

இக்கட்டுரை ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் ஆழ்வார்கள் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை எடுத்துரைக்க ஒரு முயற்சி.




தனியன்களின் பெருமை

ஒவ்வொரு திவ்விய பிரபந்தத்தின் தொடக்கத்தில் தனியன்கள் என்ற சில குறுந்துதிகளை ஓதுவர்.

(அந்தப் பிரபந்தத்துடன் தொடர்பிருந்தும் அதிலிருந்து) தனித்து நிற்பது தனியன்.

ஒரு தனியனின் குறிக்கோளே அந்தப் பதிகத்தைப் / ஒரு துதியைப் பாடும் முன்னம் அதனை அருளியவரின் பெருமையை ஓதிவிட்டுத் தொடங்கவேண்டும் என்பதே.

ஏன்? இதற்கான இரண்டு விடைகள் திருக்குறளில் உள்ளன.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

"தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்"

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

"எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை"

ஆழ்வார்களின் ஒவ்வொரு சொல்லும் நம் பிறவிப் பிணிக்கு மருந்து. அப்படிப்பட்டவர்களை நன்றியுடன் போற்றியபின்னரே அவர்கள் அளித்த அமுதத்தைச் சுவைக்கவேண்டுமன்றோ? இது ஆழ்வார்களின் பாடல்களுக்கு மட்டும் அல்ல - மற்றைய துதிகளுக்கும் பொருந்தும். அவற்றை அருளிய குருவின் தனியனை ஓதிவிட்டுத் தொடங்கவேண்டும் என்பதே முறை.

இதனால் ஏற்பட்டவையே தனியன்கள். தமிழிலோ வடமொழியிலோ அமைந்த குறுந்துதிகள். ஆழ்வார்களின் புகழையும் அவரது கலைகளின் புகழையும் பாடும் அனைத்துத் தனியன்களையும் எழுதியதே ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் தாம்.

'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல் தனியன்கள் சிறிய வடிவில் இருப்பினும் அவைகளுக்குள் ஆழ்பொருள் உண்டு - அவைகளுக்கும் வியாக்கியானங்கள் உண்டு!

சில எடுத்துக்காட்டுக்கள்:

சான்று 1:



மேற்கண்ட பாசுரம் மதுரகவிகள் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பில் 2-ம் பாசுரம். நம்மாழ்வாருக்கும் இல்லை - நம்மாழ்வாரின் பாக்களுக்கும் இல்லை - நம்மாழ்வாரின் பாவின் இன்னிசைக்கு ஏற்றம்! அதனைப் பாடித் திரிவேன் என்கிறார் மதுரகவிகள்!

இதைக் கூர்ந்து கவனித்த நாதமுனிகள் அருளிய தனியனில் ஒரு வரி (வடமொழி) - "அவிதித விஷயாந்தர: சடாரே: உபநிஷதாம் உபகான மாத்ர போக:"

அதாவது:

"அவிதித விஷயாந்தர:" - வேறு விஷயங்களில் பற்று இல்லாமல்

"சடாரே: உபநிஷதாம்" - சடாரியான நம்மாழ்வாரின் உபநிடதமாம் திருவாய்மொழியின்

"உபகான" - கானம் என்பது பா. உப + கானம் என்பது பாவின் இன்னிசை!!

"மாத்ர போக:" - அதை (உபகானத்தை) மட்டுமே சுவைத்து அனுபவிக்கும் ('மதுரகவிகள் என் இதயத்தில் வீற்றிருக்கட்டும்' என்று இறுதியில் முடியும்)

தனியனின் கம்பீரத்தை, மதுரகவிகளின் அந்த ஒரு வார்த்தையில் நாதமுனிகளுக்கு உள்ள ஈடுபாட்டை வருணிக்க முடியுமா?



சான்று 2:

திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரானின் தனியன் - பெரிய திருமலை நம்பிகள் அருளியது:



"காட்டவே கண்ட" - எம்பெருமான் திருவரங்கன் தனது அன்பு அடியவருக்கு அவருக்கு மட்டுமே தெரியும்படித் தன்னுடைய திருமேனியைக் காட்டினான். நாமும் திருவரங்கம் சென்றால் திருவரங்கனைக் காண்போம். ஆனால் நம் போன்றோர் எவ்வளவுதான் விழியை விரித்துப் பார்த்தாலும் முடியாது - திருப்பாணாழ்வார் கண்டதுபோலக் காணமுடியாது. அது திருவரங்கனே தன்னைக் காணவே பசித்து வாடியிருக்கும் மெய்யடியாருக்கு காட்டியது - அவன் அருள் இல்லாமல் நமக்குக் கிடைக்காது!

ஆழ்வார் பாடிய அதே வரிசையில் திருமேனியின் அங்கங்கள் தனியனிலும் உள்ளதை நோக்கலாம். "பேதைமை செய்தனவே" என்று எம்பெருமானின் கண்களைப் பார்த்து ஆழ்வார் பிரமித்ததால் "வாட்டமில்" என்று கண்களுக்கு அடைமொழி!! இதில் அடியேன் மிகவும் ரசித்து மகிழ்வது: திருமகள் உறைவதால் "திருவாரமார்பதன்றோ" என்பார் ஆழ்வார் - அதை மறவாமல் "திருமார்பு" என்று மார்பை மட்டும் "திரு" என்ற அடைமொழியுடன் குறிப்பிடுகின்றார்!!! என்ன ஒரு திறன்! என்ன ஒரு சுவை! அற்புதம்! ஆசாரியர்களே அற்புதர்கள்! செல்வப்பிள்ளைகள் அவர்கள்!

"பாட்டினால் கண்டு" - அவர் கண்களால் காணவில்லை. பாட்டினால் கண்டார். எப்படி? தெரியாது! அது திருப்பாணாழ்வாருக்கு மட்டுமே தெரியும்!!!

நமக்கு இப்படியெல்லாம் எண்ணங்கள் வருமா? அவர்களது தரமே தனித்தன்மை வாய்ந்தது. நாம் வாயைப் பிளந்துகொண்டு கைகளைக் கூப்பலாம். அவ்வளவே.

நான்காயிரத் தனியன்கள் என்ற தொகுப்பில் தனியன்களும் அவற்றை அருளிய ஆசாரிய பெருமக்களின் திருநாமங்களும் உள்ளன. படித்து மகிழலாம்.




ஆழ்வார்களின் பெருமைகளைப் பகரும் துதிகள்

சில ஆசாரிய பெருமக்களால் ஆழ்வார்கள் மீது மிக மிக அழகான துதிகள் தமிழிலும் வடமொழியிலும் இயற்றப்பட்டுள்ளன!

ஆழ்வார் துதியின் திருநாமம் துதியை அருளிய ஆசாரியர்
நம்மாழ்வார் பராங்குச அஷ்டகம் பல ஆசாரியர்கள்
நம்மாழ்வார் பாதுகா ஸஹஸ்ரம் வேதாந்தாசாரியர்
நம்மாழ்வார் திருவாய்மொழி நூற்றந்தாதி மணவாள மாமுனிகள்
திருப்பாணாழ்வார் முனிவாஹன போகம் வேதாந்தாசாரியர்
திருமங்கையாழ்வார் வடிவழகு சூர்ணை மணவாள மாமுனிகள்
ஆண்டாள் கோதா சதுசுலோகி திருமலை அனந்தாண்பிள்ளை
ஆண்டாள் கோதா ஸ்துதி வேதாந்தாசாரியர்





இராமாநுச நூற்றந்தாதியில் ஆழ்வார்கள் மற்றும் அருளிச்செயல்களின் புகழ்

திருவரங்கத்து அமுதனார் முதலில் இராமாநுசரின் மீதான துதி ஒன்றை வரைந்து இராமாநுசரிடம் சமர்ப்பித்தார். அதைக் கண்ணுற்ற எம்பெருமானார் 'எம்மைப் பற்றி ஒரு துதி வரைய நீர் விரும்பினால் ஆழ்வார்கள், அருளிச்செயல்கள் மற்றும் எமது ஆசாரியர்கள் மீது எமக்குள்ள அன்பைப் பற்றி எழுதும்' என்று அருளினார்.

இதை மனதில் வைத்து புதியதொரு துதியை திருவரங்கத்து அமுதனார் இயற்றினார். இராமாநுசரிடம் சமர்ப்பித்தார்.

திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வாருக்கு முப்பது வருடங்களுக்கும் மேல் தொண்டு புரிந்த ஒரு அர்ச்சகர் கொடுத்தச் சுவையான தகவல்: எம்பெருமானார் அந்தப் புதிய துதியைத் தம் திருக்கண்களால் நோக்கினார். பின்னர் 'நம்மாழ்வார் மீதும் திருமங்கையாழ்வார் மீதும் அடியேனுக்கு உள்ள சிறப்பான அன்பைப் பேசவில்லையே!' என்று வருந்தினாராம்! இதனால் திருவரங்கத்து அமுதனார் மறுபடியும் ஒரு துதியை இயற்றினார்.

முதல் இரண்டு பாசுரங்களிலேயே நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மீது இராமாநுசருக்கு உள்ள சிறப்பான அன்பை வெளியிட்டார். இது மட்டுமின்றி வேறு சில பாசுரங்களிலும் இந்த உண்மை வெளிப்படும்படிச் செய்தார். அதன் பின் 8-ம் பாசுரம் முதல் 21-ம் பாசுரம் வரை மற்ற ஆழ்வார்கள் மீதும் ஆசாரியர்கள் மீதும் இராமாநுசர் வைத்திருக்கும் பெருமதிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் பாசுரங்கள் அமைத்தார்.

இதைச் செவியுற்ற இராமாநுசர் 'இந்த அந்தாதியால் எம்மை உருக்கிவிட்டீர்!' என்றாராம். அதுவே இன்று நமக்காகவே கிடைத்திருக்கும் மிக மிக மிக அற்புதமான துதியான இராமாநுச நூற்றந்தாதி! அந்த முதல் இரண்டு பாசுரங்கள்:

 





உபதேசரத்தினமாலையில் ஆழ்வார்கள் மற்றும் அருளிச்செயல்களின் புகழ்

ஆழ்வார்கள், அருளிச்செயல்கள், ஆசாரியர்கள் மற்றும் அவர்கள் அருளிய வியாக்கியானங்கள் மற்றும் முக்கிய நூல்களின் பெருமையை அறிவிக்கவே தோன்றிய நூல் உபதேசரத்தினமாலை.

{

அடியேனின் பணிவான கருத்து:

ஒவ்வொரு ஸ்ரீ வைணவரும் நிச்சயமாகக் கற்கவேண்டிய நூல்களுள் தலையாயது மணவாள மாமுனிகள் அருளிய ஈடு இணையற்ற நூலான உபதேசரத்தினமாலை.

இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் - ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் திறத்தில் சர்வ நிச்சயமாக எந்த ஒரு தவறும் செய்யமாட்டோம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு நூல்.

இதை அருளியது ஆயிரம் நா படைத்தவரும் நித்தியசூரிகளுள் தலைவரானவருமான திருவனந்தாழ்வானின் அவதாரம். மிகக் கடினமான நடையில் எழுதியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் எளியோருக்குப் புரியும் வண்ணம் அன்றோ அருளியுள்ளார்! என்னே ஒரு கருணை! என்னே ஒரு பரிவு! என்னே ஒரு எளிமை! என்னே ஒரு பேரியல்வு! நம் திருவனந்தாழ்வான் உண்மையிலேயே நமக்கு ஒரு தாய் போன்றவர்!

}


74 பாசுரங்கள் கொண்ட இந்த மனங்கவர் நூலில்:

* முதல் பாதியில் உள்ள பாசுரங்கள் ஆழ்வார்கள் (மற்றும் எதிராசரின்) பெருமைகளைப் பேசுவதாக அமைந்துள்ளன. அதன் பின்:

* ஆசாரியர்களின் பெருமை
* வியாக்கியானங்களின் பெருமை
* நம்பிள்ளையின் பெருமை, பிள்ளைலோகார்யரின் பெருமை
* பிள்ளைலோகார்யர் அருளிய ஸ்ரீ வசன பூஷணத்தின் பெருமை
* ஸ்ரீ வசன பூஷணத்தின் சாரமான குரு பக்தியின் பெருமை
* நம் போன்றோருக்குப் பொதுவான ஆனால் உயிரினும் மேலான ஆன்மீக அறிவுரைகள் சில
* பல சுருதி

என்று நூலை முடிக்கின்றார்.

நம்பெருமாள் அனுமதியுடன் எறும்பியப்பா அருளிய மணவாள மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளின் பெருமையைப் பேசும் பாசுரம் 74-ம் பாசுரம்!




வாழித் திருநாமங்களில் ஆழ்வார்கள் மற்றும் அருளிச்செயல்களின் புகழ்

மணவாள மாமுனிகளின் உத்தரவால் அவரது முக்கியச் சீடர்களுள் ஒருவரான அப்பிள்ளை அருளியதே வாழித் திருநாமம். ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு பாடும் ஒரு அற்புதமான நூல்.

ஒவ்வொரு ஆழ்வாரின் வாழித் திருநாமத்தில் அவர் பிறந்த மாதம், நட்சத்திரம், ஊர்; அவர் அருளிய பிரபந்தங்கள்; அவற்றில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்களும் இருக்கும்.

குறிப்பு: இதை அருளிய அப்பிள்ளை சொல்கின்றார்:



நூலின் ஆசிரியர் நூலைக் கற்பவரின் பாதங்களை முடிமேல் வைத்துப் பணிவாராம்!!! இதுவே சான்றோர்களாம் ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் மாண்பு.

ஆசாரியர்களுக்கும் பல்லாண்டு பாடும் வகையில் அமைந்த வாழித் திருநாமத்தில் ஒவ்வொரு ஆசாரியரின் பிறந்த மாதம், நட்சத்திரம்; அவரது ஆசாரியரின் திருநாமம்; அவருடைய முக்கிய பெருமைகள் சில என்று அமைந்திருக்கும்.




முடிவுரை

அருள் பெற்ற நாதமுனிகள் முதலாம் நம் தேசிகரை அல்லால் தெருளுற்ற ஆழ்வார்களின் சீர்மை அறிவார் ஆர்? அப்படிப்பட்ட ஆசாரியர்களின் அடிபணிவதே நமக்குச் சிறப்பு!




No comments:

Post a Comment