காரேய் கருணை இராமானுசர் |
Image Credit: https://pbase.com/svami |
முன்னுரை |
அண்மையில் ஒரு இராமானுசன் அடியாரிடம் பேச நேர்ந்தபோது, அவர் ஒரு சுவையான வார்த்தை சொன்னார்:
"ஸ்ரீ இராமானுசருக்கு 'ஸ்ரீ பாஷ்யகாரர்' - அதாவது மறைகளின் மெய்ப்பொருளை வெளியிட்டவர் - என்ற திருநாமத்தை விட 'எம்பெருமானார்' - காரேய் கருணை அன்னவர் - என்ற திருநாமமே சிறப்பு. எம்பெருமான் பரமபதநாதனாக இருப்பதைக் காட்டிலும் நம் போன்றோரும் கிட்டும் வண்ணம் திருவேங்கடத்தானாக இருப்பதே அவனுக்குச் சிறப்பு அன்றோ?" இந்த அழகான எண்ணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுது எழுந்த ஒரு சிறு அனுபவமே இக்கட்டுரை. 'எம்பெருமான்' என்று ஆழ்வார்கள் திருமாலை நன்றியும் அன்பும் பொங்க அழைப்பர். ஸ்ரீ இராமானுசர் அந்த எம்பெருமானைக் காட்டிலும் கருணை உள்ளவர், நம் பெருமதிப்புக்கு இலக்கானவர் என்னுமது தோற்ற 'எம்பெருமான்' என்ற சொல்லுடன் 'ஆர்' விகுதி சேர்த்து 'எம்பெருமானார்' என்ற திருநாமம் பிறந்தது. ஸ்ரீ இராமானுசர் அந்த எம்பெருமானைக் காட்டிலும் கருணை உள்ளவரா? எப்படி? ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி பாசுரங்கள் வாயிலாகக் காண்போம் வாரீர்! |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 36 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
மிடுக்கைக் கொண்ட சக்கரத்தை உடையவனும், நமது உயிரின் நாயகனுமானவன் அன்று வேத வேதாந்தச் சொற்களாகிய கடலைக் கடைந்து, அவற்றின் சாரமான [சிறப்பான] பொருள்களை நமக்கு ஸ்ரீமத் பகவத் கீதையாக அளித்தான்.
அதன் பின்னும் இவ்வுலகத்தோர் பிறவிக்கடல் துன்பத்தில் துவண்டனர். ஸ்ரீ இராமானுசர் அந்தக் கீதையின் பொருள்களைக் கொண்டு, தாமே வந்து நம் போன்றோரைப் பின் தொடர்ந்து, அவற்றை நமக்குப் புரியும்படிச் செய்து, நம்மை கரையேற்றினார். இதுவே அவரது பெருங்குணம்! எடுத்துக்காட்டு: ஸ்ரீ இராமானுசரின் சீடர்களுள் ஒருவரின் புதல்வரான அரங்கமாளிகை என்பவர் தீய வழிகளில் சென்றுவிட்டார். இதனைக் கேள்வியுற்ற ஸ்ரீ இராமானுசர், தமது சீடர்களைக் கொண்டு அரங்கமாளிகையைத் தூக்கி வரச் செய்தார்!! "இது என்?" என்று விழித்து நின்ற அரங்கமாளிகையிடம், "நீர் நம்மை வெறுத்து, நம்மை மறந்து சென்றாலும், நாம் உம் மீது வைத்திருக்கும் அன்பு மாறாது காணும். உம்மைத் தேற்றியே தீருவோம் காணும்," என்று அருளி, அவரைத் திருத்தினாராம் ஸ்ரீ இராமானுசர்! |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 41 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
இந்த மண்ணுலகில், புல், பூச்சி, பறவை ஆகியவை தொடங்கி, பற்பல பிறவிகளை எடுத்து, நமக்கு நன்மையே செய்யும் திருமகள் கேள்வன் நம் கண் முன்னே வந்து நின்றபோதும், நம் போன்றோர் திருந்தாமல் இருந்தோம்.
அண்ணல் இராமானுசர் தோன்றிய பின்னரே "நாரணனுக்கு நாம் அடிமை" என்ற ஞானம் கனிந்து அவனுக்கு ஆளானோம். எடுத்துக்காட்டு: ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாசர் முதலில் தமது மனைவியாரான திருமதி பொன்னாச்சியாரின் கண்ணழகில் ஈடுபட்டு இருந்தவர். ஸ்ரீ இராமானுசர் அவர் மீது பொழிந்த கருணையால், அவர் எம்பெருமானின் கண்ணழகைக் கண்டு, அதற்குத் தோற்று, மிகச் சிறந்த அடியவராக உயர்ந்தார். |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 66 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய ஒரு வேதக் கருத்து யாதெனின் முதலில் "திருமகள் கேள்வனான எம்பெருமான் பரமன்" என்ற ஞானம் ஏற்படவேண்டும். அதாவது அவன் பரத்வத்தின் மேன்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அவன் பரத்வத்தின் ஞானமே நன்கு கனிந்து பக்தியாகும். "பரம்பொருள் அன்றோ இவ்வளவு தூரம் நமக்காக ஸ்ரீ இராமனாகவும், ஸ்ரீ கண்ணனாகவும், திருவரங்கனாகவும் இறங்கி வந்தான்" என்று உள்ளம் நைந்து, நைந்து உருகும். இதுவே ஞானம் கனிந்த நலம். அவ்வாறு உருகுவோருக்கு மட்டுமே மாதவன் பரமபதம் அருள்வான். வல்வினையேன் மனத்தில் குற்றங்களைக் களைந்த ஸ்ரீ இராமானுசரோ அவரை அடைந்தோருக்குத் தமது தகவு [பெருந்தன்மை] என்ற பெருங்குணத்தாலேயே புகல் அருள்கின்றார். [நாம் செய்யவேண்டியது எதுவும் இல்லை. அவர் அருளே நமக்குப் புகல்.] எடுத்துக்காட்டு: ஒருவர் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். அவர் ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளில் வேரற்ற மரம் என விழுந்து, கண்களில் நீர் மல்க, "ஆழ்வார் பாசுரங்களையோ, இரகசிய மந்திரங்களையோ ஓத வல்லேன் அல்லேன். அடியேனுக்குப் புகல் ஏது?" என்று சைகையால் கேட்டார். ஸ்ரீ இராமானுசர் அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, தமது திருவடிகளை அவர் மீது வைத்து, "இவைகளையே நம்பி இரும். நாமே உமக்குத் தஞ்சம்" என்று சைகையால் பதில் உரைத்தார். |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 74 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
"இவர்கள் மறையின் வழியில் சென்று தேரமாட்டார்கள்" என்று மாதவன் தீயோரைத் தனது சக்கரத்தால் முடித்துவிடுவான்.
மழைமேகம் போன்ற வள்ளல் தன்மை ஆகிய அழகிய குணங்கள் உடைய ஸ்ரீ இராமானுசரோ மறையின் வழியில் சென்று தேராமல் இருப்போரை, அப்போதைக்கு அப்போது ஒரு சிந்தை செய்து அவர்களைத் திருத்துவார்! எடுத்துக்காட்டு: [மேல்கோட்டை அருகே] தொண்டனூர் என்ற ஊரில் சமணர்கள், தங்கள் மதம் சார்ந்த மன்னனை ஸ்ரீ இராமானுசர் ஏதோ சூழ்ச்சியால் ஸ்ரீவைஷ்ணவர் ஆக்கிவிட்டார் என்று நினைத்து, அதனால் கோபம் கொண்டு, அவருடன் வாதம் செய்தனர். ஒரே சமயத்தில் 8000 பேர் வெவ்வேறு கேள்விக்கணைகளைத் தொடுத்து, "இதற்குப் பதில் சொல்வீர்! இதற்குப் பதில் சொல்வீர்!" என்று ஸ்ரீ இராமானுசரை வாதப்போருக்கு அழைத்தனர். ஸ்ரீ இராமானுசர் அவர்களை ஒரு பக்கம் அமரச் சொன்னார். எதிரில் திரையிட்டு, திரைக்குப் பின் ஆயிரம் நா படைத்த ஆதிசேடனாக உருவெடுத்தார். ஒரே சமயத்தில், ஒவ்வொரு கேள்விக்கும், அக்கேள்வியைக் கேட்டவர் காதில் மட்டும் விழும்படி, விடை கொடுத்தார்! சமணர்களும் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகிச் சென்றனர். |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 69, 95 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
பிரளய காலத்தில், என் ஜீவாத்மாவானது, மனம் மற்றும் அதானால் இயங்கும் ஐம்புலன்கள் ஆகியவற்றை இழந்து, எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது. அதைக் கண்டு திருமாலும் தன் அருளால் அவற்றை அளித்து, ஒரு பிறவியைக் கொடுத்தான்.
அதே திருமால் என்னுள் அந்தர்யாமியாக நின்று, என்னை வழிநடத்தி, எனக்கு உற்றனவே செய்தான். ஆனால் அவன் தனது சரணங்களைக் காட்டித் தரவில்லை! "இவ்வளவு செய்த பரமனும் பரிவு இல்லாதவனே" என்று சொல்லும்படி ஸ்ரீ இராமானுசர் நமக்காகவே இம்மண்ணில் வந்து அவதரித்தார். மறை நான்கும் வளர்த்தார். அத்துடன் நில்லாமல், தமது சரணங்களை நமக்கு அளித்து "இவற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்" என்று புகல் அளித்து, அவர் திருவடிகளைப் பற்றிய நமக்கு வீடுபேற்றை அடைவது வெகு எளிது என்னும்படி ஆக்கித் தந்தார். இப்பாசுரங்களைக் குறித்து ஒரு சிறு விளக்கம்: திருகோட்டியூர் நம்பி என்ற ஆசாரியர் ஸ்ரீ இராமானுசரைத் திருவரங்கத்திலிருந்து திருகோட்டியூர் வரை 18 முறை நடையாய் நடக்கவைத்து, "ஸ்ரீ இராமானுசர் உள்ளத்தில் அம்மந்திரத்தின் பொருளைப் பற்றி எவ்வளவு ஆவல் உள்ளது, அந்த ஆவலின் தன்மை என்ன? அதன் ஆழம் என்ன?" என்றெல்லாம் பலவாறு சோதித்த பின்பே, மந்திரத்தின் பொருள் உரைத்தார். ஸ்ரீ இராமானுசரோ "இவ்வளவு சோதனைகளை எல்லோராலும் தாங்கவொண்ணாது. நாம் நரகம் சென்றாலும் சரி, ஆசை உடையோர்களுக்கெல்லாம் மந்திரத்தின் பொருள் கொடுக்கப்படட்டும்" என்று அருள் செய்தார். இந்த மாபெரும் கருணையைப் பற்றியே அவருக்கு "எம்பெருமானார்" என்ற திருநாமம் வழங்கப்பட்டது. ஸ்ரீவைஷ்ணவமும் "எம்பெருமானார் தரிசனம்" என்று பெயர் பெற்றது. அது மட்டுமின்றி, சரணாகதியே மோட்சத்திற்கு வழி என்று அறிந்து, அதையும் நம் போன்றோரால் சரியாகச் செய்யமுடியாது என்று அறிந்து, திருவுள்ளத்தில் கருணை கொண்டு, ஒரு பங்குனி உத்திரம் அன்று, பெரிய பிராட்டியார் அருளாசியுடன், திருவரங்கனிடம் "எனக்கும் எனது சம்பந்தா சம்பந்திகளுக்கும் மோட்சம் அருளவேண்டும்" என்று வேண்டி, திருவரங்கனின் சம்மதமும் பெற்று, தமது திருவடிகளையே நமக்குத் தஞ்சமாக அருளினார். |
எம்பெருமான் ஸ்ரீ இராமனாகவோ, ஸ்ரீ கண்ணபிரானாகவோ, திருவரங்கனாகவோ திருவவதாரம் செய்தபோது மேற்கூறிய நிகழ்வுகளுக்குச் சமமாக அருள் ஏதும் செய்யவில்லையே!
இது காரேய் கருணை இராமானுசரான எம்பெருமானாருக்கே உரிய தனிச் சிறப்பாம். இந்த நன்றியைப் பற்றியே மேற்கூறிய பாசுரங்கள் யாவும் புனையப்பட்டுள்ளன. அதனாலேயே மேலே விளக்கப்போகும் பாசுரங்களையும் திருவரங்கத்தமுதனார் அருளியுள்ளார். அவற்றையும் காணீர். |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 25, 104, 107 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உரை - சுருக்கம் |
கார்மேகம் போன்ற கருணை நிறைந்த இராமானுசரே! தங்கள் அருளின் தன்மையை யாரால் அறுதியிடமுடியும்? அடியேன் துன்பங்களுக்கெல்லாம் நேரான உறைவிடமாக இருக்கின்றேன். தாங்கள் அடியேனுக்காக வந்தீர், அடியேனை உய்வித்தீர். அதன் பின் தங்களது சீரான குணங்களே அடியேனின் உயிருக்கு உயிராய் இருந்து, [ஆராவமுதமாய்த்] தித்தித்து இருக்கும்.
அடியேன் நரகம் என்னும் குழியில் கிடந்தாலும் சரி, அடியேன் பரமபதம் என்ற ஒளி நிறைந்த திருநாட்டில் இருந்தாலும் சரி, அடியேனுக்குத் தாங்கள் ஒரு அருள் செய்தால் மட்டுமே அடியேனால் தரிக்க முடியும்: செழுமையான மேகத்தைப் போன்ற தன்மை உடைய இராமானுசரே! உள்ளங்கை நெல்லிக்கனியென கண்ணனைத் தாங்கள் காட்டித் தந்தாலும், தங்கள் தெய்வத் திருமேனி எழிலைக் கண்களால் பருகும் பேற்றையே அடியேனுக்கு அருளவேண்டும். இப்பேற்றை அன்றி வேறெதுவும் அடியேன் வேண்டேன். ஞான ஆனந்தம் நிறைந்தவரே! தாழ்ந்தோரிடமும் அன்புடன் கலந்து பழகும் சீரான எளிமை மிக்க இராமானுசரே! எலும்பு முதலானவைகளால் ஆனவைகளும், நோய்களால் நலியப்படும் தன்மை உடையவைகளுமான சரீரங்கள் தோறும் நான் பிறந்து இறந்து, எண்ணற்ற துன்பங்கள் உற்றாலும் சரி, ஒரே ஒரு அருள் மட்டும் தாங்கள் செய்யவேண்டும் - தங்களது தொண்டர்களுக்கே அடியேன் என்றும் அன்புற்றவனாய் இருக்கும்படிச் செய்து, அடியேனை அவர்களுக்கே ஆட்படுத்தி அருளவேண்டும். |
முடிவுரை |
ஒரு முறை திருவரங்கன் திருவீதிகளில் புறப்பாடு கண்டருளும்போது, அவனுக்கு 'ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி' கேட்கவேண்டும் என்று ஆவல் எழுந்தது!
எம்பெருமானார் முன்னிலையில் அதைக் கேட்டால் ஸ்ரீ இராமானுசர் பணிவினால் கூசுவர் என்பதால், எம்பெருமானாரை மடத்தின் உள்ளே போகச் சொன்னான்! மேளதாள வாத்தியங்களை நிறுத்தச் சொன்னான். 'ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி ஓதுங்கள்!' என்று திருவாணையிட்டான். அந்த அமைதியான சூழ்நிலையில், மகிழ்ச்சி பொங்க அதனைக் கேட்டு குதூகலித்தான். 'ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியை 4000 திவ்ய பிரபந்தங்களுடன் சேர்த்து ஓத வேண்டும்' என்று திருவாணை பிறப்பித்து அருளினான். அதனால் இன்றும் ஆழ்வார் பாசுரங்களுக்கு எப்படி அநத்யயன காலம் [அவற்றை ஓதக்கூடாத காலம்] என்று உள்ளதோ, அதே போல ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதிக்கும் உண்டு. எம்பெருமானை விட எம்பெருமானாரே உயர்ந்தவர் என்று ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி தெளிவாக முழங்கியுள்ளதால், அதை எம்பெருமானே முழுமையாக ஒப்புக்கொள்கின்றான் என்பது திண்ணம் ஆகின்றது. எம்பெருமானார் திருவடிகள் வாழி வாழி வாழியே! எம்பெருமானார் திருவடிகளே சரணம். எம்பெருமானார் அடியார்கள் வாழி வாழி வாழியே! |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
எம்பெருமானாரின் கருணையானது, எம்பெருமானின் கருணையையும் விடப் பெரியது என்பதை இந்தக் கட்டுரை மிக அழகாக விளக்கியுள்ளது.
ReplyDeleteகுரு மாதா, குரு பிதா, குருவே என் குலதெய்வம் என்று ஏக்நாத் மகாராஜ் பாடியது இந்த ஆசார்யர்களின் அருள்மழையை அனுபவித்ததால் தானே!
நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்து மகிழ்ந்தது பற்றி மிக்க உவகை எய்தினேன். ஸ்ரீ ஏகநாதர் கூறிய கூற்று மிகவும் அழகாகவும், இக்கட்டுரைக்குப் பொருத்தமாகவும் உள்ளது!
Delete