Search This Blog

Thursday 6 September 2018

04. ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் அவர்களது குருமார்கள் அருளிய வியாக்கியானங்கள் மீது கொண்ட பக்தி


முன்னுரை

"ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி" என்ற கட்டுரையில் பொதுவாக ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் குரு பக்தியின் தண்மையைச் சில சான்றுகளுடன் விவரித்திருந்தேன்.

இக்கட்டுரையில் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் தமது முந்தைய ஆசாரியர்கள் வியாக்கியானங்களை (ஆழ்வார் பாசுரங்களுக்கு மற்றைய நூல்களுக்கும் எழுதிய உரைகளை) எவ்வளவு தூரம் போற்றி பாதுகாத்தனர் என்பதைச் சில சான்றுகளுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.




திருமாலையாண்டானும் இராமாநுசரும்

ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் இராமாநுசருக்கு (ஆளவந்தாரின் கட்டளைப்படி) வெவ்வேறு ஞான விஷயங்களைப் போதித்தனர். அவர்களுள் ஒருவர் திருமாலையாண்டான். இவர் திருவாய்மொழியின் பொருள்களை இராமாநுசருக்குப் போதித்தார். எவருமே எந்த ஒரு ஆழ்வாரின் பாசுரத்திற்கும் உரையை ஏடுபடுத்தாமல் இருந்த காலம் அது.

திருமாலையாண்டான் அவ்வாறு போதிக்கும்பொழுது சிலவிடங்களில் ‘இப்பாசுரத்திற்கு இதுவே சரியான பொருள்’ என்று இராமாநுசர் கூற ‘ஆளவந்தார் அருளாத பொருள்களை இவர் விசுவாமித்திரர் இன்னொரு உலகம் செய்ய முற்பட்டதுபோலச் செய்கின்றார்’ என்று திருமாலையாண்டான் இராமாநுசரைக் கண்டித்து பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டார்!

பின்பு ஆளவந்தாரின் இன்னொரு சீடரான திருக்கோட்டியூர் நம்பிகள், ‘ஆளவந்தார் இந்தப் பொருளை அருளி அடியேன் கேட்டதுண்டு. இராமாநுசர் வைகுந்தத்து ஆதிசேடனின் அவதாரம். ஆளவந்தாரின் உபதேசத்தை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லார். அவர்களது கருத்துக்கள் ஒத்திருக்கும். இவர் நம்மிடம் பாடம் படிப்பது கண்ணபிரான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் படிப்பதுபோலவே. நீர் கவலைப்படாமல் பாடம் நடத்தும்’ என்றார்.

பிறகே திருமாலையாண்டானும் மகிழ்வுடன் பாடம் நடத்தினார்! எந்த அளவிற்கு ‘முந்தைய ஆசாரியர்களை மீறிப் பேசுதல் தவறு’ என்பதைக் கடைபிடித்துள்ளனர்!




இராமாநுசரும் திருக்குருகைப்பிரான்பிள்ளானும்

ஒரு நாள் இராமாநுசர் ஒரு பாசுரத்தின் பொருளைப் பற்றி மனத்துள் ஆராய்ந்து கொண்டிருக்க அவர் சீடரான பிள்ளான் “தாங்கள் இந்தப் பொருளைத் தானே சிந்திக்கின்றீர்?” என்று உரைக்க அவர் கூறிய பொருள் தம் நினைவுடன் ஒத்து இருப்பதைக் கண்டு இராமாநுசர் வியந்தார்.

‘நாதமுனிகள் ஞான வம்சத்தில் வந்ததால் இவர் இப்பொருளை உணர்ந்தார்’ என்று இராமாநுசர் அப்பொழுது நினைத்தார் என்று (வடுக நம்பிகள் அருளிய) அவருடைய வாழ்க்கை வரலாறாம் "யதிராஜ வைபவம்" பகர்கின்றது.

வைகுந்தத்து அரவரசப் பெருஞ்சோதியாம் இராமாநுசர் (மிக்க ஞானத்துடன் விளங்கும் பற்பல சீடர்கள் அவருக்கு இருந்தபோதும்) திருவாய்மொழியின் முதல் உரை நூலான 6000 படியை எழுதும் பணியைப் பிள்ளானிடம் அளித்தார்.

குறிப்பு: ‘படி’ என்பதே ஒரு அளவு. ஒற்றெழுத்துக்களை நீக்கி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (32 எனக் கேட்டதாக நினைவு) அளவு எழுத்துக்கள் இருப்பது ஒரு படி. இடைச்செருகல்கள் ஏற்படாமல் பின் வருவோருக்குச் சரியான பொருள்கள் சென்றடையவே செய்த ஒரு ஏற்பாடு! இதிலிருந்தே இடைச்செருகல்கள் தவறு என்பது விளங்கும்!


நம்பிள்ளையும் வடக்குத்திருவீதிப்பிள்ளையும்

36000 படி என்ற மற்றொரு உரை பிறந்த வரலாறு: நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையிடம் தாம் திருவாய்மொழியைப் பற்றிக் கற்றதை மறவாமல் இருக்க ஏடுபடுத்த, அதைப் படிக்க நேர்ந்த நம்பிள்ளை “குருவின் உத்தரவு இல்லாமல் ஏன் எழுதினீர்?” என்று கண்டித்தார்.

வடக்குத்திருவீதிப்பிள்ளை ‘உரை எழுதுகின்றேன்’ என்ற நினைப்பே இல்லாமால் எழுதினார் என்று தெரிந்தும் நம்பிள்ளை “குருவின் உத்தரவு இல்லாமல் ஏன் எழுதினீர்?” எனக் கண்டித்துப் பேசினார் என்றால் குருவின் ஆணை இன்றியமையாதது என்று தெரிகின்றது அல்லவா?

‘இந்த உரை மிக நன்றாக இருந்தபோதும் குருவின் உத்தரவின்றி செய்ததால் இது பரவவேண்டாம்’ நம்பிள்ளை அதை மறைத்துவைத்தார்!

நம்பிள்ளையின் மற்றொரு சீடரான ஈயுண்ணி மாதவப்பெருமாள் “அந்த அழகிய உரை எல்லோருக்கும் பரவ வேண்டும்” என்று திருவரங்கனை மனமுருக வேண்டினார்! திருவரங்கனும் நம்பிள்ளையின் கனவில் உத்தரவு பிறப்பிக்க குருவின் உத்தரவால் மாதவப்பெருமாள் அதைப் பரப்பினார்.

பொருள்கள் உரைத்தவர் நம்பிள்ளை. மறவாமல் இருக்க எழுதியவர் வடக்குத்திருவீதிப்பிள்ளை. ஆனால் உலகம் உய்ய பரப்பியவர் ஈயுண்ணி மாதவப்பெருமாள்!

நம்பிள்ளையின் சொற்களையும், வடக்குத்திருவீதிப்பிள்ளையின் எழுத்துக்களையும் கொண்ட அந்த 'ஈடு 36000 படி' என்ற நூலை ஈயுண்ணி மாதவப்பெருமாள் தமது திருக்கோயிலாழ்வார் (அதாவது தமது இல்லத்தில் திருவாராதனப் பெருமான் எழுந்தருளியிருக்கும் மண்டபம்) தன்னில் வைத்துப் பூசித்து வந்தார். அப்படி ஒரு பக்தி ஆசாரியர்களின் திருவாக்குகளுக்குக் கொடுக்கப்பட்டது.




பெரியவாச்சான் பிள்ளையும் மணவாள மாமுனிகளும்

பெரியவாச்சான் பிள்ளை ஏடுபடுத்திய பெரியாழ்வார் திருமொழியின் வியாக்கியானச் சுவடிகள் கரையானுக்கு இறையாகின. 461 பாசுரங்களில் கடைசி 40 பாசுரங்களுக்கான உரைகள் மட்டுமே எஞ்சின. இதனால் மணவாள மாமுனிகள் முதல் 421 பாசுரங்களுக்கு உரை அருளி அவற்றை மீதம் உள்ள 40 பாசுர உரைகளுடன் சேர்த்தார்.

பெரியவாச்சான் பிள்ளையின் மீதுள்ள பெருமதிப்பினால் மீதம் உள்ள 40 பாசுரங்களுக்கு இராமாநுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகள் உரை எழுதவில்லை. அந்த அளவு குரு மீதும் அவர்களின் உரைகள் மீதும் நேர்மையானதொரு பக்தி.




முடிவுரை

ஆசாரிய வியாக்கியானங்களை மீறிப் பேசுதல் தவறு - இது குறித்து மணவாள மாமுனிகள் செய்துள்ள உபதேசங்களைப் பாரீர்:

தம்முடைய ஞானத் தந்தையான ஆசாரியராம் திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேசங்களையே நமக்குத் தெரிவித்துள்ளார்:



மதுரகவிகளின் பாசுரங்கள் அட்டாட்சர மந்திரத்தில் "நம:" சப்தத்திற்குச் சமம் என்று ஆரியர்கள் (ஆசாரியர்கள்) தாத்பரியம் தெரிந்து நடுவில் அநுசந்திக்கும் படிச் செய்தனர் என்கின்றார்:



வியாக்கியானங்கள் செய்தவர்கள் யாவர் என்பதை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்கின்றார்:



நாதமுனிகள் முதலான ஆசாரியர்கள் அருள் பெற்றவர்கள் - அவர்கள் மட்டுமே ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் ஏற்றம் அறிந்தவர்கள் என்கின்றார்:



முன்னமே பிள்ளான் முதல் அனைத்து ஆசாரியர்கள் செய்த வியாக்கியானங்கள் இல்லையெனில் இக்காலத்தில் (திருவாய்மொழி முதலான) அருளிச்செயல்களுக்குச் சரியான பொருள் சொல்ல வல்லவர் எவரும் இல்லை என்கின்றார். திருவாய்மொழி சாம வேத சாரம் என்பதால் அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்கின்றார் - மற்றைய 3000 பாசுரங்களுக்கும் இது பொருந்தும்!



பிள்ளான் எதிராசர் அருளால் உரை செய்தார். நஞ்சீயர் பட்டர் அருளால் உரை செய்தார். பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளை அருளால் உரை செய்தார். குருவின் அருளால் செய்ததைக் கொண்டாடுகின்றார்:



4000 பாசுரங்களுக்கு வியாக்கியானம் செய்த பெரியவாச்சான் பிள்ளையாலேயே அனைவரும் அப்பாசுரங்களின் உண்மைப் பொருளை அறிந்தனர் என்கின்றார்:



பிள்ளைலோகாரியர் அருளிய "ஸ்ரீ வசன பூஷணம்" என்ற நூல் முன்னம் உள்ள குருமார்களின் வசனங்களே அணியாகக்கொண்ட நூல். அதனாலேயே அந்நூல் அப்பெயர் பெற்றது என்கின்றார். ஆசாரியர்கள் பேசிய வாக்கியங்கள் சேர்ந்து ஒரு முக்கியமான நூலாக மலர்ந்தது என்றால் அவற்றின் ஏற்றம் விளங்குகின்றதன்றோ? பிள்ளைலோகாரியர் காஞ்சி தேவப்பெருமாளின் திருவவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.



"முன்னோர்களின் மொழிகளை முறை தவறாமல் கற்று அதனைப் பின்பற்றியே பேசவேண்டும்; அப்படிச் செய்யாதார் மூர்க்கர்" என்கின்றார்:



"பூருவாசாரியர்களின் அறிவுரைகளை (போதம்) யார் கூறுகின்றனரோ அவர்களையே பின்பற்றுங்கள்" என்று அறிவுறுத்துகின்றார்:



இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமோ?? "பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்தார்" அன்றோ?




No comments:

Post a Comment