பொதுவாகவே ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி எத்தகையது என்பதை “ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி” என்ற கட்டுரையிலும்
ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் முன்னோர் அருளிய வியாக்கியானங்களை எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதை “ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் அவர்களது குருமார்கள் அருளிய வியாக்கியானங்கள் மீது கொண்ட பக்தி” என்ற கட்டுரையிலும் விவரித்திருந்தேன்.
திருவரங்கப் பெருமாள் அரையர்
திருவரங்கப் பெருமாள் அரையர் என்ற ஆசாரியர் திருவேங்கடம் சென்று திருமலையப்பனைத் தொழத் திருவரங்கத்திலிருந்து புறப்பட்டார். திருவரங்கநாதனிடம் விடைபெற்றுக்கொள்ளத் திருக்கோயிலுக்குச் சென்றவர் திருவரங்கனின் திருமேனி எழிலில் மயங்கி திருப்பாணாழ்வார் அருளிய “அமலனாதிபிரான்” என்ற பதிகத்தை அபிநயம் பிடித்துப் பாடினார்.
மூன்றாம் பாசுரத்தைப் பாடும் பொழுது அதன் முதல் இரண்டு வரிகளை நோக்குங்கால் “திருவரங்கனே திருவேங்கடத்தில் உளன் என்று ஆழ்வார் அருளினார். அவனை இங்கேயே கண்டாயிற்று. திருவேங்கடம் செல்லத் தேவையில்லை” என்று கூறி தமது இல்லம் திரும்பினார்!
பெரிய நம்பிகள்
மாறனேரி நம்பிகள் என்ற ஆளவந்தாரின் சீடர் பார்ப்பனர் அல்லாத குலத்தவர். அவருடைய இறுதிக்கால ஆசை என்னவெனில் ஆளவந்தாரால் தொடப்பட்ட அவருடைய திருமேனிக்கு ஒரு ஸ்ரீ வைணவர் இறுதிக் கடன்களைச் செய்யவேண்டும் என்பது. இதை ஆளவந்தாரின் இன்னொரு சீடரான பெரிய நம்பிகளிடம் தெரிவித்து மாறனேரி நம்பிகள் பரமபதம் சென்றார். பெரிய நம்பிகள் அவருடைய திருமேனிக்கு அனைத்துக் கடமைகளையும் செய்தார்.
“அந்தணர் நீர்! இப்படிச் செய்தீர்!” என்று வெகுண்ட மற்ற அந்தணர்கள் அவரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். பெரிய நம்பிகளோ இதற்கெல்லாம் அசையவில்லை.
தமது ஆசாரியரான பெரிய நம்பிகளிடம் இராமாநுசர் (மற்றவர்கள் உண்மையை அறியவேண்டும் என்பதற்கு) “வேறொருவரை இட்டுச் செய்திருக்கலாமே” என்று பணிவுடன் விண்ணப்பம் செய்தார். அப்பொழுது பெரிய நம்பிகள் “இராமாநுசரே! நம்மாழ்வாரின் பாசுர வரிகள் வெறும் கடலோசையோ? "பயிலும் சுடரொளி," "நெடுமாற்கடிமை" என்ற பதிகங்கள் வீணோ?” என்றார். அதாவது திருமாலடியார்களின் குலத்தை நோக்குவது மாபெரும் தவறு என்கிறார். அப்பதிகங்களில் நம்மாழ்வார் அடியார்கள் பெருமையைத் தெளிவாக உரைத்துள்ளார்:
திருவாய்மொழி, 3-7-9 |
திருவாய்மொழி, 8-10-10 |
இராமாநுசர்
திருவரங்க வீதிகளில் சிறுவர்கள் கோயிலின் நடைமுறைகளைக் கவனித்து அதனையே விளையாட்டாக விளையாடிக் கொண்டிருந்தனர். திருவரங்கன் உருவத்தை மண்ணில் வரைந்து, பாசுரங்கள் ஓதுவது, மண்ணையே பிரசாதமாக அளிப்பது போன்றவற்றைச் செய்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது இராமாநுசர் அங்கே எழுந்தருளினார். அச்சிறுவர்களுள் ஒருவன் அவருக்குப் 'பிரசாதம்' அளித்தான்! ஒரு பிடி மண்! உடனேயே அந்த மகானும் “மஹாபிரசாதம்” என்று அதை திருக்கைகளில் வாங்கிக்கொண்டார்.
அருகில் இருந்த சீடர்கள் வியக்க, எம்பெருமானாரும் பொய்கையாழ்வார் அருளிய பாசுரத்தை (முதல் திருவந்தாதி, 44) மேற்கோள் காட்டினார். “ஆழ்வார் திருவாக்கு. தமர்களான அடியார்கள் உகந்த உருவத்தில் எம்பெருமான் உறைகின்றான். அது வெறும் மண்ணில் வரைந்த சித்திரம் அல்ல. அது எம்பெருமானே,” என்றார்!
திருமலை அனந்தாண்பிள்ளை
இராமாநுசரின் நேர் சீடராம் திருமலை அனந்தாண்பிள்ளை என்ற மகான் திருவேங்கடத்திலிருந்து வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அன்னம் உண்ண அமர்ந்தபொழுது சோற்றில் பல எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன.
குலசேகராழ்வார் அருளிய பாசுரம் (பெருமாள் திருமொழி, 4-10) நினைவுக்கு வந்தது. “சில அடியார்கள் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆகவேண்டித் திருமலையில் எறும்பாகப் பிறந்து வாழ, நாம் அவர்களைப் பிரிக்கலாகாது” என்று கூறி மறுபடியும் திருமலைக்குச் சென்று அவ்வெறும்புகளை அங்கேயே வாழும்படிச் செய்தார்!
திருவாய்மொழிப்பிள்ளை
மணவாள மாமுனிகள் இல்லறத்தில் இருந்தபொழுது அவருடைய துணைவியார் ஒரு ஆண்மகவை ஈன்றார். மணவாள மாமுனிகளும் தமது ஆசாரியரான திருவாய்மொழிப்பிள்ளையிடம் “குழந்தைக்கு என்ன பெயரிடவேண்டும் என அருளவேண்டும்” என்று வேண்டினார்.
திருவாய்மொழிப்பிள்ளை “ஒருகால் சொன்னதுபோல 108 முறை சொல்லியுள்ளதே!” என்றார். அதாவது "இராமாநுச நூற்றந்தாதி" என்ற ஒரே பிரபந்தத்தில் இராமாநுசரின் திருநாமம் 108 முறை ஓதப்படும். அதையே அப்படி அருளினார். இதனால் அக்குழவிக்கு மணவாள மாமுனிகள் இட்ட பெயர்: “எம் ஐயன் இராமாநுசன்” (இராமாநுச நூற்றந்தாதி, 102).
முடிவுரை
வெகு சில எடுத்துக்காட்டுக்களே இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளேன். மேலும் பல சுவையான நிகழ்வுகள் உள்ளன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் இராமாநுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகள் அருளியபடியே ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் வாழ்ந்தனர் என்பதே உண்மை:
No comments:
Post a Comment