Search This Blog

Friday 31 August 2018

03. ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி


முன்னுரை

பொதுவாகவே ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் குரு பக்தி எத்தகையது? ஏன் நம் போன்றோர் அவர்களைப் போலக் கருத்து தெரிவித்து ஆழ்வார் பாசுரங்களுக்கோ அல்லது வேறு உயர்ந்த நூல்களுக்கோ உரைகள் எழுதக்கூடாது??

இதற்கான விடையின் ஒரு பகுதியைச் சிலச் சான்றுகளுடன் விளக்கிட ஒரு கட்டுரை.




தெய்வவாரியாண்டான்

இவர் (இராமானுசரின் மானசீக குருவும் பிரமகுருவுமான) ஆளவந்தாரின் சீடர். இவரைத் திருவரங்கத்தைக் காக்கும் படி ஆணையிட்டுக் குருவான ஆளவந்தார் திருவனந்தபுரம் சென்றார்.

ஆனால் தெய்வவாரியாண்டான் சில நாள்களில் உடல் இளைத்து, வெளுத்து, ஓரடிக்கூட எடுத்துவைக்கமுடியாமல் சோர்ந்து படுத்துவிட்டார். உயிரே போய்விடுமோ என்ற நிலையில் பதறி மருத்துவரைக் கொண்டு பரிசோதித்தனர். அவர் நாடி பிடித்துப் பார்த்து, ‘உடலில் ஒரு நோயும் இல்லை. மனதில் உள்ள பெரும் துயர் நீங்கினால் ஒழிய உயிர் பிழைத்தல் அரிது” என்று கூறிச் சென்றுவிட்டார்.

அனைவரும் “உமது மனக்குறை என்ன?” என்று வினவ, “ஐயன் ஆளவந்தாரின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. மனதில் தாங்கவொண்ணாதத் துயர். குருவின் சொல்லை மீறமுடியாது என்பதால் எவரிடமும் சொல்லவில்லை” என்றார் தெய்வவாரியாண்டான்.

உடனேயே அவரைத் தேற்றி, அவரைக் கிடத்தியிருந்தக் கட்டிலோடு, அவரை நான்கு பேர் தூக்கித் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றனர்!

தெய்வவாரியாண்டான், குருவை விரைவில் காணப்போகும் மகிழ்ச்சியில், உடல் வெளுப்பு நீங்கி, நடப்பது மட்டுமின்றி ஓடவே ஆரம்பித்துவிட்டார்! ஆளவந்தாரை மட்டுமே கண்டு மகிழ்ந்து, அவரது திருவடி வணங்கி, திருவனந்தபுரம் திருக்கோயிலின் உள்ளே கூட செல்லவில்லை நம் தெய்வவாரியாண்டான்!




மாறனேரி நம்பிகள்

இவரும் ஆளவந்தாரின் நேர் சீடர். ஆளவந்தாரை முதுமையில் இராஜபிளவை (முதுகெலும்பில் உயிர்க்கொல்லியான கட்டி என்பர்) என்ற நோய் வாட்டியது. அவர் போன்ற மகான்கள் எம்பெருமானிடம் எதையும் கேட்கமாட்டார்கள்.

ஒரு நாள் நோயின் கொடுமை தாளாமல் சீடர்களை நோக்கி, ‘இதன் கர்ம வினையை யோக முறையில் தானமாக உங்களில் ஒருவர் வாங்கிக்கொள்கின்கிறீரா?’ என்ன, அனைவரும் மெளனமாக இருக்க, ஆளவந்தாரின் ஞான உரைகளை வெளியிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்தவரும், பஞ்சம குலத்தில் உதித்த ஞானியுமான மாறனேரி நம்பிகள், ‘நாயேன்! ஏற்றுக்கொள்கின்றேன்!’ என்று கூறிவிட்டார்!!

ஆளவந்தாரின் காலத்திற்குப்பின் இராமானுசர் நம்பெருமாளிடம் முறையிட்டு மாறனேரி நம்பிகளைக் குணப்படுத்த முயன்றபோதும் ‘இது ஆசாரிய பிரசாதம்! இதனை அனுபவிப்பேன்!’ என்று மாறனேரி நம்பிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்று பெரியோர் சொல்லக் கேட்டதுண்டு.




கூரத்தாழ்வான்

இராமானுசரின் அணுக்கச் சீடரான இவர் இராமானுசர் ஸ்ரீபாஷ்யம் எழுத உறுதுணையாய் இருந்தார். தொடங்கும் முன்னர், இராமானுசர் இவரிடம் ‘நான் கூறுவது உமக்குச் சரியெனத் தோன்றினால் எழுதும்’ என்று சொல்லி, பிரம்மசூத்திரங்களுக்குப் பொருள் உரைக்க, கூரத்தாழ்வானும் அதை ஏடுபடுத்தினார்.

ஒரு முறை இராமானுசர் கூறிய பொருள் கூரத்தாழ்வானுக்குச் சரியெனப் படவில்லை - ‘ஆன்மாவின் இலக்கணங்கள் ஞானமும் இறையடிமைத்தனமும்’ என்றார் இராமானுசர்; 'இறையடிமைத்தனம்' என்பதை முதலில் சொல்லவேண்டும் என்பது கூரத்தாழ்வானுடைய எண்ணம் (அதுவே சரியும் கூட). அதனால் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

‘ஏன் நிறுத்திவிட்டீர்?’ என்று குரு வினவ சீடர் தலையைக் குனிந்தபடி ஒன்றும் பேசவில்லை - குருவிடம் ‘நீர் கூறுவது தவறு,' ‘நான் அப்படி எண்ணவில்லை,' ‘என் கருத்து என்னவென்றால்..,' ‘நீர் அப்படி எண்ணுங்கள் - நான் இப்படி எண்ணிக்கொள்கிறேன் - முடிந்தது வாதம்’ என்றெல்லாம் பெரியோர்கள் குருவிடம் முறை தவறிப் பேசமாட்டார்கள்.

கூரத்தாழ்வானுக்குச் சரியெனப் படவில்லை என்பதை உணர்ந்த இராமானுசர், ‘நீரே எழுதிக்கொள்ளும்!’ என்று கூரத்தாழ்வானைத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்!!! சிறிது நேரம் சென்றவுடன், கூரத்தாழ்வானின் தயக்கத்தின் காரணத்தை உணர்ந்த இராமானுசர், ‘ஆன்மாவின் இலக்கணங்கள் இறையடிமைத்தனமும் ஞானமும்’ என்றுரைக்கக் கூரத்தாழ்வானும் மகிழ்வுடன் ஏடுபடுத்தினார்!

பின்னர் சிலர் கூரத்தாழ்வானிடம் ‘நம் குரு உம்மிடம் சற்றுக் கடுமையாய் நடந்துகொண்டார்! நீர் வருந்தவில்லையா?’ என்ன, ‘அடியேன் அவர் சொத்து. அவர் அடியேனின் சொந்தக்காரர். சொந்தக்காரர் இட்ட வழக்காய் இருப்பதே சொத்தின் இலக்கணம்’ என்றார் கூரத்தாழ்வான்! அதாவது அவர் தம்மை ஒரு அஃறிணைப் பொருளாய் நினைத்திருந்தார்!




முதலியாண்டான்

இவரும் இராமானுசரின் அணுக்கத் தொண்டர்.

இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் பெற்றப் பெண்பிள்ளை அத்துழாய். அவரது புக்ககத்தில் அவரது மாமியார் ‘உன் வீட்டிலிருந்து சீதனமாக ஒரு வெள்ளாட்டியைக் கூட கொண்டு வரவில்லை’ என்ன, பெரிய நம்பிகள் சொல்லக்கேட்டு இராமாநுசரிடம் அத்துழாய் முறையிட, உடனே இராமானுசர் முதலியாண்டானைச் சீதன வெள்ளாட்டியாக அனுப்பிவிட்டார்!

பல நாள்கள் முதலியாண்டான் அத்துழாயின் புக்ககத்தில் அனுதினமும் வீட்டு வேலைகள் செய்துவந்தார். ஒரு முறை அங்குள்ள சிலர் ஆன்மீக விவாதம் செய்யும்பொழுது அவர்களுக்குச் சரியான விடை எது என்று முதலியாண்டான் கூறினார். இவர் ஞானத்தைக் கண்டு அதிர்ந்த அவர்கள் மேலும் விசாரிக்க இவர் யார் எனத் தெரியவந்தது! ‘தயவு செய்து எங்கள் வீட்டுவேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்’ என்று கெஞ்சியும் ‘ஆசாரியர் கட்டளை’ என்று மறுத்துவிட்டார் முதலியாண்டான். பின்னர் இராமாநுசரிடம் அவர்கள் முறையிட்டுத் துன்பம் தீர்ந்தனர்.




எம்பார்

இவர் இராமானுசரின் அணுக்கத் தொண்டர்.

இவருடைய முந்தைய குரு பெரிய திருமலை நம்பிகள். அவருக்கு இரவில் படுக்கையைத் தயார் செய்யும்பொழுது அதில் ஒரு முறை படுத்துப்பார்ப்பதை இராமானுசர் கண்டு பெரிய திருமலை நம்பிகளிடம் இதைச் சொன்னார்.

நம்பிகளும் ‘இப்படிச் செய்தால் என்ன பலன் தெரியுமா?’ என்று எம்பாரைக் கேட்க, ‘குருவின் படுக்கையில் படுப்பது நரகத்தை அளிக்கும். இருப்பினும் தாங்கள் சுகமாக உறங்கும் வண்ணம் படுக்கைச் சரியாக அமைந்தால் அடியேனுக்குப் போதுமானது’ என்றார் எம்பார். அதாவது “குரு நன்றாக உறங்கவேண்டும் - அதற்கு ஏற்றாற்போலப் படுக்கை உள்ளதா?’ என்று தினமும் சோதித்து இருக்கின்றார்!




வடுக நம்பிகள்

இவர் குரு பக்தியின் சிகரம். இராமானுசரின் அணுக்கத் தொண்டர். இவரது வழிபாட்டுத் தெய்வம் இராமானுசரின் திருவடி நிலைகள் (பாதுகைகள்).

ஒரு முறை இராமானுசர் ஊருக்குச் செல்லவேண்டும். பிரயாணக் காலங்களிலும் பெரியோர் தெய்வ ஆராதனையைக் கைவிடாமல் செய்வர்!

(பேரருளாளன் என்ற பெயருடைய) இராமானுசரின் வழிபாட்டுத் தெய்வத்தைப் பெட்டியில் பத்திரப்படுத்திய வடுக நம்பிகள் தம்முடைய வழிபாட்டுத் தெய்வமான இராமானுசரின் பாதுகைகளை அதே பெட்டியில் வைத்துவிட்டார். அதாவது இராமானுசரின் வழிபாட்டுத் தெய்வமும் இராமானுசரின் பாதுகைகளும் ஒரே பெட்டியில்...!

இது கண்டு இராமானுசர் ‘வடுகா! என் செய்தாய்!’ என வருந்த, வடுக நம்பிகளோ ‘உங்கள் பெருமாளுக்கு (அதாவது பேரருளாளன்) எங்கள் பெருமாள் (அதாவது இராமானுசர்) எந்த வகையில் குறைந்தவர்?’ என்று இராமானுசரைத் திருப்பிக் கேட்டாராம்!!!




கிடாம்பியாச்சான்

இவரும் இராமானுசரின் அணுக்கத் தொண்டர்.

ஒரு முறை அடியார்களுக்கு உணவிடும் பொழுது, ஒரு ஸ்ரீவைணவர் அருந்தத் தண்ணீர் வேண்ட, கிடாம்பியாச்சானும் அந்த ஸ்ரீவைணவருக்குப் பக்கவாட்டில் நின்று தண்ணீர் பரிமாற, தண்ணீர் கீழே சிந்திவிட்டது. அதைக் கண்ட இராமாநுசர் வெகுண்டு, ஓடி வந்து கிடாம்பியாச்சானை முதுகில் சற்றே ஓங்கித் தட்டி, "அவர் முன்னே நின்று தண்ணீர் பரிமாறினால் அன்றோ அவருக்குச் சுலபமாக அருந்தமுடியும்?" என்று கடிந்துகொண்டாராம். அதற்குக் கிடாம்பியாச்சான் "பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட" என்ற திருவாய்மொழி (4-8-2) வரியைக் கூறி, "எம்பெருமானார் இப்படி அடியேனை உரிமையுடன் கடிந்து, அடியேனின் பிழைகளைத் திருத்தியருளினாரே!" என்று மனம் பூரித்துப்போனாராம்!




பின்பழகிய பெருமாள் ஜீயர்

இவர் நம்பிள்ளை என்ற குருவின் சீடர்.

இவர் நோய்வாய்ப்பட்டு விரைவில் உயிர் பிரிய வாய்ப்பு உண்டு என்ற நிலையில் தமது அணுக்கர்களை அழைத்து ‘நம்பெருமாளிடம் ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து என் நோய் தீர்க்கும்படி வேண்டுங்கள்’ என்ன, அவர்களும் அவ்வாறே செய்ய, நோயும் தீர்ந்தது.

இதை அறிந்து சிலர் நம்பிள்ளையிடம் ‘இவர் பெருமாளிடம் இப்படி ஒன்றை வேண்டிப் பெற்றார்’ என்ன, நம்பிள்ளை புன்னகையுடன் இவரைக் காரணம் கேட்டார்.

அவரோ ‘குருவே! தாங்கள் பெருமாள் திருவாராதனம் முடித்தவுடன் தங்கள் திருமேனியில் வியர்வைத் துளிகள் இருக்கும். அப்பொழுது தங்களுக்கு விசிறி வீசுவேன் அல்லவா? அந்தத் திருத்தொண்டை இழந்து பரமபதம் செல்ல மனமில்லை. ஆதலால் அப்படிச் செய்தேன்’ என்றார்!!




எறும்பியப்பா

இவர் மணவாள மாமுனிகளின் அணுக்கத் தொண்டர். வேறு ஊரில் (திருக்கடிகை) வசித்தாலும் திருவரங்கத்தில் இருக்கும் குருவையே நினைத்து நினைத்து ஏங்குவார். இப்படி ஏங்கியே ‘பூருவ தினசரியா’ மற்றும் ‘உத்தர தினசரியா’ என்ற நூல்கள் இயற்றினார் - ஒரு நாள் முழுவதும் தமது குருவான மணவாள மாமுனிகளின் (அனுதினம் காலை முதல் இரவு வரை) உயர்ந்த அனுட்டானங்கள் நிறைந்த ஆன்மீக வாழ்க்கைமுறையை ஏடுபடுத்தினார்!

மணவாள மாமுனிகள் பரமபதம் சென்றபின் அவரது சீடர்கள் வருந்தினார்கள். அவர் ஆணைப்படி எவரும் உயிரை விடவில்லை. ஆனால் எறும்பியப்பா மட்டும் உயிரையும் விடாமல் குரவைப் பிரியவும் முடியாமல் உன்மத்தர் ஆனார் - சித்தப் பிரமை பிடித்துத் தமது இறுதி மூச்சு வரை ஒவ்வொரு கணமும் குருவின் திருநாமத்தையே கூறிவந்து பரமபதம் சென்றார்!




முடிவுரை

ஒருவர் குருவின் பாதுகைகளையும் இறைவனின் திருமேனியையும் ஒரே பெட்டியில் வைத்தார்.

ஒருவர் குரு சேவைக்காக இராஜபிளவை நோயை ஏற்றார். ஒருவர் குரு சேவைக்காகப் ‘என் நோய் தீரட்டும் - பரமபதம் வேண்டாம்’ என்றார். இன்னொருவர் ‘குரு சேவையில் நரகம் வந்தாலும் சுகம்’ என்றார்.

ஒருவர் தம்மை அஃறிணைப் பொருள் என்றார். ஒருவர் சீதன வெள்ளாட்டியானார். இன்னொருவர் ‘குரு என்னை எல்லோர் முன்னிலையிலும் தட்டிக் கோபித்தார்' என்று மகிழ்ந்தார்.

ஒருவர் குருவைப் பிரிந்து முற்றிலும் உடல் நலம் இழந்தார். இன்னொருவர் குருவைப் பிரிந்துச் சித்தப்பிரமை அடைந்தார்.

இப்படிப்பட்டவர்களே ஆழ்வார் பாசுரங்களுக்கும் மற்றும் உயர்ந்த நூல்களுக்கும் உரை எழுதியவர்கள். இவர்களுடன் நம் போன்றோர் போட்டியிடுவது பசுந்தோகை மயிலுடன் பொல்லாச் சிறகுடைய வான்கோழி போட்டியிட்டது போலாகும் அன்றோ? இவர்கள் எழுதிய ஒப்பற்ற உரைகளைக் கற்பதே நமக்குச் சிறப்பு.




8 comments:

  1. Very well compiled, great work. Thank you

    ReplyDelete
    Replies
    1. Adiyen Ramanujadasi 🙏 So glad that you enjoyed our Acharyas' greatness! ☺

      Delete
  2. அற்புதமான எளிய நடைப் பதிவு.மிக்க நன்றி ��������ஆனால்...கிடாம்பியாச்சான் பற்றி சொல்லும்போது தேவரீர் ".. இதைப் பார்த்து வெகுண்ட இராமானுசர் கிடாம்பியாச்சனை முதுகில் உதைத்து" என்று கூறியுள்ளீர்.. ஆயின் இஃது ஸ்வாமியின் ஸ்வரூபத்திர்கு மாறாக உள்ளது.. காரேய் கருணையாளன் இவ்வாறு தன் சிஷ்யரான ஸ்ரீவைஷ்ணவரை உதைத்திருக்க மாட்டார் என்பது அடியேனுடைய திண்ணமான அபிப்ராயம்.. தயை கூர்ந்து தேவரீர் மீண்டும் ஒரு முறை இச்செய்தியை பரிசோதிக்குமாறு தாழ்மையுடன் ப்ராத்திக்கின்றேன் ��������.. அடியேன் மதுரகவிதாசன் ��������

    ReplyDelete
    Replies
    1. தேவரீரின் இப்பதிவிற்கு மிக்க நன்றி. _/|\_ 6000 படி குரு பரம்பரா பிரபாவத்தில் "முதுகில் மோதி" என்று படித்ததாகவே நினைவு. சீறுவதும் அருளுவதேயாம். இதைக் கிடாம்பியாச்சான் பெறாப்பேறாகவே எண்ணியிருந்தார். எனினும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்து, தகவல் தவறாக இருப்பின் நிச்சயமாகத் திருத்திப் பதிவு செய்கின்றேன். மிக்க நன்றி. அடியேன். :-)

      Delete
  3. அடியேன் மதுரகவிதாசன். மிக்க நன்றி ஸ்வாமின்.
    மோது என்பது பயன் படும் இடம் சார்ந்து பொருள் கொள்ளத்தக்கதன்றோ.. ஆழ்வார்கள் அமுத மொழியிலும் இச்சொல் பயன்படுத்த பட்டுள்ளது.. ஆதலால் எம்பெருமானாரைக் கண் நோக்கி இங்கு 'தட்டி' - - - - முதுகில் தட்டி எனக் பொருள் கொள்ளலாமா?? Tap on the shoulder?? அடியேன் மதுரகவிதாசன்.. -/|\-Just wanted to share my thoughts on this wonderful blog.. Not to be pointing.. ஒரு நல்ல பதிவின் ஊடே இஃது மிகவும் வருத்தமாக உள்ளது.. அடியேன் மதுரகவிதாசன்

    ReplyDelete
    Replies
    1. Swamin, Adiyen modified the section as per Devareer's suggestion until proper clarity is available from an authentic source. 🙏

      Personally, adiyEn's view is that it's extremely sweet of Emperumanar to have taken that type of liberty - it'll only enthrall a good Shishya like Kidambiacchan. Anyways, shall explore this to understand better.

      Dhanyosmi for the kind interaction. 🙏

      Delete
    2. தேவரீர் அருளியபடியே மாற்றியுள்ளேன். இதைப் பற்றி முறையாக விசாரித்துச் சரியான முறையில் பதிவிடுகின்றேன். தங்கள் கனிவான பதிவிற்கு மிக்க நன்றி. அடியேன். 🙏

      Delete
    3. தேவரீரின் பதிவிற்கு மீண்டும் நன்றி - இதனால் அடியேனுக்கும் இந்த நிகழ்வைப் பற்றித் தெளிவு பிறந்தது. திருவாய்மொழி 4.8.2 ஈடு வியாக்கியானத்தில் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஒற்றித் திருத்திப் பதிவு செய்துள்ளேன். Ref: http://divyaprabandham.koyil.org/index.php/2017/03/thiruvaimozhi-4-8-2-manimamai/

      அடியேன் _/|\_

      Delete