Search This Blog

Monday 27 August 2018

02. ஆழ்வார்களின் பாசுரங்களும் ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் உரைகளும்


முன்னுரை

இரு நாள்களுக்கு முன் ஸ்ரீவைணவ அடியார் ஒருவர் ‘இனிய பண்டங்களைத் தனியே உண்ணலாகாது’ என்ற தருமத்தை அனுசரித்தும் ‘ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் அனைவரையும் சென்றடையவேண்டும்’ என்ற நியாயமான நோக்கத்திலும் ஒரு கருத்தினைத் தெரிவித்தார். அது:

‘ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஸ்ரீவைணவர்களுக்குச் சொந்தமா? அப்பாடல்கள் அனைவருக்கும் பாடப்பட்டவை - சொல்லப்போனால் அவை அனைத்தும் சராசரி மனிதனுக்கே பாடப்பட்டவை. ஆசாரியர்கள் உரைகள் வேண்டுமாயின் ஸ்ரீவைணவர்களுக்குச் சொந்தம் எனலாம். ஆனால் ஆழ்வார்கள் உலகுக்கே சொந்தம். இது குறித்த ஒரு மறுமலர்ச்சி தேவை.’

“ஆழ்வார்கள் பாசுரங்கள் எல்லோருக்கும்; ஆசாரியர்கள் உரைகள் ஸ்ரீவைணவர்களுக்கு” என்று கூறியதன் நோக்கம் ‘தத்துவ அர்த்தங்கள் நிறைந்த ஆசாரியர்கள் உரைகளைக் கற்பது மிகவும் கடினம்; ஆழ்வார்கள் பாசுரங்களைக் கற்பது எளிது’ என்பதே (இது கருத்தைக் கூறியவரே அளித்த விளக்கம்).

ஆனால் படிப்பவர் இதனை “ஆழ்வார்கள் பாசுரங்கள் தனி - அவை எல்லோருக்கும் பொது. ஆசாரியர்கள் உரைகள் தனி - அவை ஸ்ரீ வைணவர்களுக்கு மட்டும்” என்றுத் தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால் இது குறித்து மேலும் சில முக்கியமான உண்மைகளை வெளியிடவேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரையை வரைகின்றேன். இக்கட்டுரையைக் கேள்வி-பதில் நடையில் அமைத்துள்ளேன்.




ஆழ்வார்களும் அவர்களின் அருளிச்செயல்களும் ஸ்ரீவைணவர்களுக்கு மட்டும் சொந்தமா?

ஆழ்வார்களும் அவர்களின் அருளிச்செயல்களும் ஸ்ரீவைணவத்திற்குச் சொந்தம்; ஸ்ரீவைணவர்களுக்குச் சொந்தம் அல்ல.

இதன் பொருள்:

ஆழ்வார்கள் ஸ்ரீவைணவர்கள்; அவர்களின் பாதை விசிட்டாத்வைதம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீவைணவம்; அவர்கள் அருளிய பாசுரங்களில் போதித்த மார்க்கமும் ஸ்ரீவைணவமே. இதற்கு ஆழ்வார்களின் பாசுரங்களும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளும் அசைக்கமுடியாதச் சான்றாக இருப்பதால் இதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை.

திருமால் ஆழ்வார்களைப் பிறப்பித்ததன் காரணமே மற்றைய ஜீவர்களை ஆழ்வார்களைக் கொண்டு திருத்தவே. இதிலேயே ஆழ்வார்களை யாவரும் வணங்கி வழிபடலாம் என்பது விளங்கும்.

ஆழ்வார்களும் அவர்களது பாடல்களில் ‘ஸ்ரீ வைணவர்கள் மட்டுமே இதனைக் கற்கவேண்டும்’ என்று எங்கேயும் பாடவில்லை. இதனைக் கொண்டே அவர்களின் அருளிச்செயல்களும் உண்மையான ஆர்வமுள்ள எவரும் கற்கலாம்; ஓதலாம்; சுவைக்கலாம் என்பது விளங்கும்.




ஆசாரியர்களும் அவர்கள் அருளிய உரைகள் மற்றும் நூல்களும் ஸ்ரீவைணவர்களுக்குச் சொந்தமா?

இதற்கும் அதே விடைதான்! ஆசாரியர்களும் அவர்கள் அருளிய உரைகள் மற்றும் நூல்களும் ஸ்ரீவைணவத்திற்குச் சொந்தம்; ஸ்ரீவைணவர்களுக்குச் சொந்தம் அல்ல.

மாறன் அடி பணிந்து உய்ந்த இராமானுசன் தரிசனத்து ஆசாரியர்கள் அனைவரும் விசிட்டாத்வைதத்தைப் போற்றும் ஸ்ரீவைணவர்களே. அவர்களது உரைகளும் நூல்களும் மற்றும் வாழ்க்கை வரலாறுகளும் இதற்கு மாபெரும் சான்றாக இருப்பதால் இதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை.

ஆழ்வார்களின் அடி ஒற்றி வந்தவர்களே ஆசாரியர்கள். நாதமுனிகள் என்ற குருவிலிருந்து தொடங்கிப் பற்பல ஆசாரியர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அவற்றின் மெய்ப்பொருள்களையும் (மற்றும் வேத இதிகாச புராணங்களின் பொருள்களையும்) பரப்புவதையே தலையாய கடமையாகச் செய்தனர். நம் போன்றோருக்கு ஏடுபடுத்தினர். இதனாலேயே ஆசார்யர்களின் பாசுர உரைகளும் மற்ற நூல்களும் ஆழ்வார்களின் பாசுரங்களைப் போலவே ஆசை உடைய அனைவரும் கற்றுப் பயனடையவே எழுதப்பட்டவை என்பது விளங்கும்.

இதனாலேயே இராமானுசரின் மறு அவதாரமான பொய் இல்லாத மணவாள மாமுனிகளும் இவ்வாறு அருளினார்:






ஆழ்வார்கள் வேறு காலத்தவர்கள்; ஆசாரியர்கள் வேறு காலத்தவர்கள். இப்படி இருக்க ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் (ஆழ்வார்களுடைய காலத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் பின் வந்த) ஆசாரியர்களின் உரைகளுக்கும் நேரடித் தொடர்பு என்ன உள்ளது?

ஸ்ரீ வைணவ ஆசார்யர்களின் உரைகளே ஆழ்வார்களின் பாசுரங்களுக்குச் சரியானவை - ஏனெனில் அவைத் தெய்வீகமானவை.

ஆசார்யர்களின் உரைகள் தான்தோன்றியாக அவரவர் மனம் போன போக்கில் “என் கருத்து” என்ற தோரணையில் எழுதப்பட்டவை அல்ல. முன்னமேயே "குரு பக்தியால் மலர்ந்த ஆழ்வார் பாசுர உரைகள்" என்ற கட்டுரையில் சில உண்மைகளைத் தெரிவித்தேன்.

மேலும் சில முக்கியமான உண்மைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்:

ஆழ்வார்களின் காலத்திற்குப் பின், சில ஆயிரம் ஆண்டுகள் சென்றபின், இப்பூவுலகில் அவதரித்தவர் ஸ்ரீ (ரங்க)நாதமுனிகள் என்ற ஆசாரியர். வடநாட்டில் உள்ள திருமாலின் திருப்பதிகளைத் தொழச் சென்ற இவரை, இவரது ஊரில் (காட்டுமன்னார்கோயில்) உள்ள வீரநாராயணப் பெருமாள், (கனவில்) ஊருக்குத் திரும்பி வரும்படி அழைத்தார்.

சில நாள்கள் சென்றபின், “ஆராவமுதே” என்று தொடங்கும் பத்துப் பாடல்களைச் சிலர் நாதமுனிகள் முன் வீரநாராயணப் பெருமாளை நோக்கிப் பாடினர். அப்பாசுரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட நாதமுனிகள், “'ஓராயிரத்துள் இப்பத்து' என்று கடைசிப் பாசுரத்தில் உள்ளதே! உங்களுக்கு 1000 பாசுரங்களும் தெரியுமோ?” என்ன, அவர்களோ “ஐயா, இப்பத்தே நாங்கள் அறிந்தவை” என்று கூறிச் சென்றனர். வியந்த நாதமுனிகள், “குருகூர்ச் சடகோபன் சொன்ன” என்ற வரியை வைத்துத், திருக்குருகூர் (என்ற ஆழ்வார் திருநகரி) சென்று 'சடகோபன் யார்?' என்று விசாரித்தார்.

அவரது தேடலின் முடிவில், சடகோபன் என்ற நம்மாழ்வாரின் சீடராம் மதுரகவிகளின் சீடர் பரம்பரையில் வந்த பராங்குச தாசர் என்பவரின் அறிவுரைப் படி, நம்மாழ்வாரைக் குறித்து மதுரகவிகள் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பதிகத்தைத் திருப்புளியாழ்வாரின் முன் நீர், உணவு, உறக்கம் ஏதுமின்றி, நம்மாழ்வாரைத் தியானம் செய்தபடி 12000 முறை இடைவிடாமல் அனுசந்தானம் செய்தார்.

நம்மாழ்வார் பரமபதத்திலிருந்து இறங்கி அருளினார்; நாதமுனிகளுக்குக் காட்சி அளித்தார். “இவை 1000 மட்டும் அல்ல மற்ற ஆழ்வார்கள் பாடியவைகளும் உள்ளன” என்று அருளி, நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு 4000 பாசுரங்களையும் அவற்றின் பொருள்களையும் இரகசிய மந்திரங்களையும் உபதேசம் செய்துத் தமது நேரடிச் சீடராக ஏற்றுக்கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள் பற்பல உள்ளன:

1. நம்மாழ்வார் ஆழ்வார் மட்டும் அல்ல - அவர் ஆசாரிய பரம்பரையிலும் உள்ளார்.

2. நம்மாழ்வார் ஆழ்வார்களின் தலைவர். மற்ற ஆழ்வார்கள் நம்மாழ்வாரின் அங்கங்கள் என்பதால் மற்றைய ஆழ்வார்களும் ஆசாரிய பரம்பரையில் மறைமுகமாக நம்மாழ்வாருடன் இடம் பெறுகின்றனர்.

3. நம்மாழ்வார் மூலமாக ஆழ்வார்களுக்கும் நாதமுனிகள் முதலான ஆசாரியர்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டது.

4. நாதமுனிகள் கேட்டது 1000 பாசுரங்களை மட்டுமே. ஆனால் நம்மாழ்வாரோ நாதமுனிகள் கேட்காமலேயே:

* தம்முடைய மற்றைய பாசுரங்கள்

* ஆழ்வார்களின் வரலாறு

* மற்றைய ஆழ்வார்களின் அனைத்துப் பாசுரங்கள்

* 4000 பாசுரங்களுக்கும் உண்மைப் பொருள்கள்

* திருமந்திரம், துவயம், சரம சுலோகம் ஆகிய இரகசிய மந்திரங்கள் மற்றும் அவற்றின் பொருள்கள்

* எதிர்கால ஆசாரியரான இராமானுசரின் அர்ச்சைத் திருமேனி (விக்கிரகம்)

* அட்டாங்க யோகம்

ஆகிய அனைத்தையும் கருணை மழைமேகமாய் நாதமுனிகளுக்கு அருளினார்! இதே காரணத்தால் நம்மாழ்வாரை ஸ்ரீ வைஷ்ணவ குலபதி என்று கொண்டாடுகின்றனர்.

இது மட்டுமின்றி:

* நம்மாழ்வார் இராமாநுசருக்கு ஆழ்வார் திருநகரியில் சிறப்பாக அருள் செய்தது

* நம்பிள்ளை என்ற ஆசாரியருக்குத் திருவரங்கன் கனவில் தோன்றி “நாம் முன் நிற்போம். நீர் ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதும்” என்று கூறியது

* மணவாள மாமுனிகள் ஈடு 36000 படி என்ற உரையை விளக்கக் கேட்டு அவருக்குத் திருவரங்கன் சீடர் ஆனது

போன்ற மிக முக்கிய நிகழ்வுகளும் உண்டு.

ஆதலால் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை எழுதும் தகுதி நாதமுனி முதலான ஸ்ரீ வைணவ ஆசாரியர்களான அந்த அருள் பெற்ற மகான்களுக்கு மட்டுமே உள்ளது. இதைத்தான் ஸ்ரீ மணவாள மாமுனிகளும் இவ்வாறு அருளினார்:



ஆதலால் ஆசாரியர்களின் பாசுர உரைகள் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற கோட்டையின் அரண்; அன்றலர்ந்த மலரின் நறுமணம்; அருஞ்சொல்லின் பொருள்; ஒப்பற்ற மணியின் பேரொளி. அவற்றைப் பிரித்துப் பார்க்காமல் பாசுரங்களோடு கற்பதே சாலச் சிறந்த முறையாகும்.

ஆசாரியர்கள் அருளிய உரைகளை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பதையும் எந்தை ஸ்ரீ மணவாள மாமுனிகள் வலியுறுத்தி உள்ளதைக் காணீர்:








சரி. இருப்பினும் உரைகள் கடினமான மணிப்ரவாள நடையில் இருக்க அனைவருக்கும் புரிவது எங்ஙகனே? கடினமானத் தத்துவங்களும் அவற்றுள் விளக்கப்பட்டுள்ளனவே! தற்காலச் சூழ்நிலையில் ஆர்வம், பொறுமை, அறிவுத்திறன் எல்லாம் குறைந்திருக்கப் பாசுரங்களை மட்டும் கற்றால் ஆகாதோ?

இது நியாயமான வாதமே. கடினமான உரைகளை எளிதாக்கி ஸ்ரீ வைணவப் பூருவாசாரியர்களின் அடியொற்றி இக்காலத்துப் ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நூல்கள் வெளியிட்டுள்ளனர்; சிலர் பேச்சுரைகள் நிகழ்த்துகின்றனர். நேரமும் பொறுமையும் இருப்பின் அவற்றால் நிச்சயம் பயன் பெறலாம்.

இங்கே ஒரு சிறு குறிப்பு: கண்ணனின் அடியார் ஒருவர் “ஜீவாத்மா பரமாத்மா என்ற இந்தத் தத்துவ விளக்கங்கள் எதற்கு? அவை பக்தி ரசத்தின் சுவையைக் குன்றச் செய்கின்றன” என்று வருந்தினார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கோ அல்லது இதிகாச புராணங்களுக்கோ ஆசாரியர்கள் படைத்த உரைகளில் உள்ள ஒப்பற்ற பக்தி ரசமென்னும் நீர்வீழ்ச்சியில் மகிழ்ந்து நன்றாக நீராடலாம்! நீர்வீழ்ச்சியில் தத்துவப் பொருள்கள் என்ற சில மூலிகைகளின் ரசமும் இருந்து அது நாமும் அறியாத நமது நோயைப் போக்கினால் ‘அட! இதுவும் இலவசமாக நடந்ததோ!’ என்ற கூடுதல் மகிழ்ச்சிதானே! இதனை அறிதல் அருவியில் குளிக்கும் சுகத்தை எவ்வாறு குறைக்கும்?? அது போல பக்தி ரசத்துடன் கூடத் தத்துவப் பொருள்களையும் தெரிவித்துத் தெளிவிப்பதே ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் ஆற்றிய சீரிய திருப்பணி. இதில் குறை ஒன்றும் இல்லை.




ஆக மொத்தத்தில் “ஆழ்வார் பாசுரங்களை மட்டும் கற்கலாம்.” சரிதானே?

ஒரு முக்கியமான திருத்தம்: "ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் உரைகள் மட்டுமே ஆழ்வார் பாசுரங்களின் சரியான உரைகள்" என்ற புரிதலுடன் ஆழ்வார் பாசுரங்களை மட்டும் கற்கலாம்.




இதனை இவ்வளவு தூரம் மீண்டும் வலியுறுத்திச் சொல்லுவானேன்?

காரணங்கள் உள்ளன.

“ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்களை வைணவம் என்ற குறுகிய வட்டத்துள் (?!) அடைக்கமுடியாது. ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு யார் வேண்டுமானாலும் (வேற்று மதத்தினர் உட்பட!) அவரவர் 'கண்ணோட்டத்தில்' உரை எழுதலாம்” என்பதுதான் சில மாதங்கள் முன் வைரமுத்து அவர்கள் எழுதிய “தமிழை ஆண்டாள்” கட்டுரைக்கு ஆதரவளித்த அனைவரும் ஒரு சேரக் கூச்சலிட்டனர்.

வைரமுத்து அவர்களே இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் செய்துள்ளார்!

இதே கருத்தைக் குறித்து வைரமுத்து அவர்களின் ஆதரவாளருடன் ஒரு சூடான வாதத்தின் ஒரு பகுதியைக் காணீர்.




வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் நாத்திகர்கள். அவர்கள் இப்படிச் செய்ததில் வியப்பில்லை. ஆத்திகர்கள் இப்படிச் செய்வரோ?

உண்மையான ஆத்திகர் நிச்சயம் செய்யார். ஆனால் எல்லையை மீறிச் செயல்படுகின்ற சிலரும் உளர். ஆதாரம் வேண்டுமா? இதோ:

Vedic Approach to Vaiṣhṇava Āḻvārs by Dr. R. Nagaswamy

இந்த நாகசுவாமி என்பவர் வேறு யாரும் அல்ல - ‘இராமானுசர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள் கற்பனையே’ என்று ஒரு நூலை வெளியிட்டு ஸ்ரீ வைணவ ஆசாரியர்களுக்கும் ஜீயர்களுக்கும் அனுப்பிவைத்தவர். அவருக்கு ‘ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ’ கிரிஷ்ணமாசார்யர் சுவாமி ‘கருடசுவாமி’ என்றதொரு புனைப் பெயரில் எதிர்வினையாக ஒரு நூலை வெளியிட்டார்.

ஆழ்வார்கள் "திருமாலே பரம்பொருள்" என்று முழங்கிய பரமவைணவர்கள் - அவர்கள் போதித்த மார்க்கம் ஸ்ரீவைணவம்; “சிவபெருமான் என்றொரு தெய்வம் உண்டு; அவர் பரம்பொருள் அல்ல” என்பது அவர்களது கொள்கை. நாயன்மார்கள் சிவபெருமானே பரம்பொருள் என்று முழங்கிய பரமசைவர்கள் - அவர்கள் போதித்த மார்க்கம் சைவம்; “அரி என்றொரு தெய்வம் உண்டு; அவர் பரம்பொருள் அல்ல” என்பது அவர்களது கொள்கை. இதுதான் உண்மை. இதில் வருத்தப்படவோ கோபப்படவோ ஒன்றுமே இல்லை.

இரு சாராரும் சனாதன தருமத்தை நிலைநிறுத்தியுள்ளனர். தமிழகத்தைப் பக்தி பூமி ஆக்கினர். நம்மாழ்வார் அருளியதுபோல “அவர் அவர் இறையவர் குறைவு இலர். அவர் அவர் விதி வகை அடைய நின்றனர்.” சிலர் ஸ்ரீவைணவத்தில் மட்டும் ஈடுபடுவர் (வீர வைணவம்). சிலர் சைவத்தில் மட்டும் ஈடுபடுவர் (வீர சைவம்). சிலர் இரண்டிலும் பற்றுடன் இருப்பர் (இன்று பலரும் பின்பற்றுவது இந்த மார்க்கத்தையே). இதனை அறிந்து ஒற்றுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் செயல்படுதலே சரியான பாதை.

ஆனால் மேலே கூறிய கட்டுரையில் நாகசுவாமி அவர்கள் வைரமுத்து அவர்கள் செய்தது போலவே செய்திருக்கின்றார்:

* ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் உரைகளைப் புறக்கணித்தும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதே ஆழ்வார்களின் மற்றைய பாசுரங்களை மறைத்தும் நூலாசிரியர்களான ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்துக்கு நேர்மாறான தமது “கருத்துக்களை” ஆழ்வார்களின் பாசுரங்களில் திணிக்க முயன்றுள்ளார்.

* அவர் கூறும் வேத வாக்கியங்களின் பொருள்களும் அவர் பின்பற்றும் மார்க்கத்தில் கண்டவைகளானப் பொருள்கள் (வைணவத்தின் வேதக் கண்ணோட்டம் அதுவல்ல!) - அவற்றைக் கூறி அவை ஆழ்வார்களின் பாசுரங்களில் (?!) உள்ளதாக எழுதியுள்ளார். ‘இதனால் ஆழ்வார்களின் பாடல்கள் வேத சாரங்கள்’ என்று 'சான்றிதழ்' வேறு! சங்கப் பலகையும் சங்கப் புலவர்களின் தலைவரும் ஒப்புக்கொண்டதொரு உண்மையை இவர் வந்து “வழிமொழியவேண்டிய” அவசியம் இல்லை.

* ஆழ்வார்கள் அனைவரும் ஒரே கருத்தைப் பேசும் ‘ஏககண்டர்கள்’ (ஒருமிடறு உடையோர்) என்று பெயர் பெற்றிருக்க ‘திருமழிசைப்பிரானின் கருத்து மாறுபட்டது - அதனைப் பெரிதாக எண்ணத் தேவையில்லை’ என்று இவர் ‘தீர்ப்பு’ (?!) அளித்துள்ளார்.

நாயன்மார்களின் பக்திப் பாடல்களில் வேத வசனங்கள் எப்படிப் பொதிந்து உள்ளன என்பதைப் பற்றி எழுதியிருக்கலாம். அல்லது சைவ ஆசாரியர்கள் குறித்த வரலாற்றுச் சான்றுகள் வெளியிட்டிருக்கலாம். அதை விடுத்து ஆழ்வார்கள் "மும்மூர்த்திகளும் ஒன்று என்றனர்" என்று அபத்தமாகப் பேசுவதிலும் "இராமானுசர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் சில முக்கிய நிகழ்வுகள் கற்பனையே" என்று நகைச்சுவை "விருந்து" அளிப்பதிலும் நேரத்தைச் செலவிடுவதன் நோக்கம் என்ன?? இதனால் சைவம் எப்படி வளரும் என்று புரியவில்லை!

என் சொந்த அனுபவத்தில் பார்த்தத்தைச் சொல்கின்றேன்: நாத்திகம் பேசி வந்த ஒரு கல்லூரித் தோழி ‘கந்த ஷஷ்டி கவசம்’ என்ற துதியால் பெரும் துயர் தீர்ந்து இன்று முருகப்பெருமானின் அடியாராக மாறியிருப்பதைக் கண்டதுண்டு. இதே துதியைப் பலர் போற்றக் கேட்டதும் உண்டு.

உண்மையிலேயே நான் நல்ல சனாதன தருமவாதியாக இருப்பின் இதை நினைத்துப் பெருமைப்படவேண்டும். அதை விடுத்து இத்துதியின் நற்புகழில் பொறாமை கொண்டு “கந்த ஷஷ்டி கவசம் திருமாலையே துதிக்கின்றது” என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வரிகளை மட்டும் காட்டி ஒரு பதிவிட்டால் அது வடிகட்டினதொரு பொய்மை அன்றி வேறு என்ன?? அதிகப்பட்சம் ‘அனைத்து தெய்வங்களின் சக்தியும் திருமாலிடமிருந்து வருகின்றன’ என்று வைணவக கண்ணோட்டத்தில் பொதுவாகச் சமாதானம் சொல்வது வேறு. ஒரு குறிப்பிட்டத் தெய்வத்தை மட்டுமே நோக்கி அமைந்ததான ஒரு துதியை, அந்தத் தெய்வத்தின் மெய்யடியார் ஒருவரின் துதியை, அந்த அடியார் நினையாத வேறு தெய்வத்தை நோக்கிப் பாடியதாக உண்மையைத் திரித்துப் பேசுவது வேறு!





இது போன்றதொரு பதிவிட்டுச் சைவ வைணவ ஒற்றுமையைக் குலைப்பது ஏன்? சனாதன தருமத்தில் வைணவம் அல்லாத மற்ற மார்க்கத்தைச் சேர்ந்த அனைவருமே இப்படிச் செய்கின்றனரா? ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபட்ட மற்ற மார்க்கத்தினரைக் கண்டதில்லையோ? தவறு இழைத்தவர்களை மட்டும் நோக்கி எதிர்வினை வரைந்தால் போதுமே!

“இது போன்றதொரு பதிவிட்டுச் சைவ வைணவ ஒற்றுமையைக் குலைப்பது ஏன்?” - இக்கேள்வியை நாகசுவாமி அவர்களிடமும் அவரைப் போலவே செயல்படும் சிலரிடமும் கேட்கவேண்டும்!!!

சனாதன தருமத்தில் வைணவம் அல்லாத மற்ற மார்க்கத்தைச் சேர்ந்த அனைவருமே இப்படிச் செய்வதில்லை - அவர்களைப் போன்ற மெய்யான ஆத்திகர்களை எவரும் குறை கூறவும் இல்லை. அது போன்ற வைணவம் அல்லாத வேறு பாதையைச் சேர்ந்த ஆத்திகர்கள் பலர் எனக்கு நெருங்கிய தோழிகளாகவும் நண்பர்களாகவும் உள்ளதால் இதனைச் சொல்கின்றேன்.

'ஆண்டாள் வாஸ்து' புகழ் ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்கள் மிகச் சிறந்த ஆண்டாள் பக்தர். இராமானுசர் பக்தர். ஸ்ரீ நரசிம்ம பக்தர். அது மட்டும் இல்லை. காஞ்சி காமாட்சி அம்மனின் பக்தரும் கூட! நெற்றியில் விபூதிதான் அணிவார். ஆழ்வார் பாசுரங்கள் பாடுவார். இவரை யாராவது குறை கூறினார்களா??

எங்கள் இல்லத்தின் அருகே உள்ள திருக்கோயிலில் தினமும் ஒரு ஸ்மார்த்தர் நெற்றியில் விபூதி அணிந்து வருவார். ஆழ்வார் பாசுரங்களைக் கண்களில் நீர் மல்கக் கேட்பார். "நாராயணா!" என்று பல முறை அரற்றுவார். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும்! இவரை யாராவது குறை கூறினார்களா??

எண்ணமும் செயலும் பேச்சும் சரியாக உள்ளனவா என்பதுதான் கேள்வி! ஒரு சிலரது தவறானச் செய்கைகளால் சில உண்மைகளை ஆணித்தரமாக எடுத்துரைக்கவேண்டியுள்ளது. என் செய்ய??





அப்பொழுது ஸ்ரீவைணவம் அல்லாத மற்ற மார்க்கத்தினர் ஆழ்வார்களின் பாசுரங்களை மெய் ஆர்வமுடன் (அதாவது ஆசாரியர்கள் உரைகளை மீறிப் பொருள் கூறுவது போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல்) கற்பதை ஆதரிக்கின்றீரா?

நிச்சயமாக. நாத்திகர் உட்பட அனைத்து மார்க்கத்தினரும் ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் ஆசாரியர்களையும் அவர்கள் உரைத்தவைகளையும் அவமதிக்காமல் ஆழ்வார்களின் பக்தியையோ தமிழையோ (அல்லது இரண்டையுமோ) ரசித்து மகிழ்வதில் எந்தக் குறையும் இல்லை. இது ஆசாரியர்களின் உரைகளுக்கும் கூடப் பொருந்தும் - அவர்களது பக்தியையும் பரமகம்பீரமான சிந்தனைகளையும் அனைவரும் தாராளமாக ரசித்து மகிழலாம்!!




ஆழ்வார்களையும் ஸ்ரீவைணவ ஆசாரியர்களையும் வணங்குபவர்களும் மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் ஆசாரியர்கள் உரைகளையும் கற்பவர்களும் ஸ்ரீவைணவர்களாக மாறவேண்டும் என்று நிர்ப்பந்தம் உண்டா?

இல்லை. பொதுவாகவே சனாதன தருமத்தில் நிர்ப்பந்தம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஸ்ரீவைணவத்திலும் அதுவே உண்மை.

ஆழ்வார்களும் ஸ்ரீவைணவ ஆசாரியர்களும் போதித்த மார்க்கம் ஸ்ரீவைணவம். அவர்களை வணங்குபவர் இந்த மார்க்கத்தைப் பின்பற்றினால் ஆழ்வார்களும் ஸ்ரீவைணவ ஆசாரியர்களும் எதற்காகப் பாசுரங்களையும் உரைகளையும் பாடினார்களோ / எழுதினார்களோ அது முழுமையாகப் பயன்பெறும் என்பது உண்மைதான். இதனை மறுப்பது நேர்மையின்மை!

ஆனால் அப்படி நடக்கவில்லை என்றாலும் பாதகம் ஒன்றுமில்லை. அவரவர் ஜீவாத்மாவிற்கு என்ன செய்யவேண்டும் என்று பரமாத்மா அறிவார். ஆதலால் இதில் குறையேதும் இல்லை.




முடிவுரை

ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் நாதமுனிகள் முதலான ஆசாரியர்களும் அவர்கள் உரைத்தவைகள் யாவும் ஸ்ரீ வைணவம் என்ற இராமானுசன் தரிசனத்துச் சொத்துக்கள்.

ஆழ்வார்களின் பாசுரங்களும் அவைகளுக்கு ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் செய்த உரைகளும் பிரிக்கமுடியாதவை - ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் செய்த உரைகள் மட்டுமே சரியானவை.

ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீவைணவ ஆசாரியர்களது படைப்புக்கள் யாவும் ஏழ் பாரும் உய்யச் செய்யப்பட்டவை - உண்மையான ஆர்வமுள்ள அனைவராலும் - எவ்விதப் பாகுபாடுமின்றி - அன்புடனும் பெருமதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கப்படவேண்டியவை.




No comments:

Post a Comment