Search This Blog

Monday 28 November 2022

நற்கலியன் நவின்ற நவரச நற்றமிழ்

நற்கலியன் நவின்ற நவரச நற்றமிழ்


Image Source: LIFCObooks@twitter


முன்னுரை
 
ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 8, 9

4 மறைகளுக்குச் சமமாக 4 திவ்யப்பிரபந்தங்களை அருளியவர் வேதம் தமிழ் செய்த மாறன் ஆகிய ஸ்ரீ நம்மாழ்வார். நான்மறைகளுக்கு 6 வேதாங்கங்கள் உள்ளன. அதே போல, ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய 4 தமிழ் மறைகளுக்கு 6 அங்கங்களாக 6 திவ்யப்பிரபந்தங்களை, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் அன்று திருவவதாரம் செய்த ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளினார்.

ஸ்ரீ திருமங்கையாழ்வார் தமது திருவுள்ளத்து உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தும் பாசுரங்களை அருளியுள்ளார். நமது உணர்வுகளை 9 ரசங்களாகப் பெரியோர் வகுப்பர். ஸ்ரீ திருமங்கையாழ்வாரது திருவவதார உற்சவம் தொடங்கியுள்ள இந்த மங்கலமான காலக்கட்டத்தில், ஒவ்வொரு ரசத்திற்கும் பொருந்தும் பாசுரங்களை, ஆழ்வார் அருளிய 6 அருளிச்செயல்களிலிருந்து சுவைத்து மகிழலாம், வாரீர்!

குறிப்பு: ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவவதாரம் செய்த கார்த்திக்கை மாதம் கார்த்திகை நடச்சத்திரத்திலிருந்து 'அநத்யயன' காலம் தொடங்கும். அன்றிலிருந்து தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் ஆன்று ஆசாரியர் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம் கொண்டாடி முடிக்கும் வரை, எந்த ஆழ்வாரின் அருளிச்செயலையும் [ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி உட்பட] நம் இல்லங்களில் ஓதக்கூடாது. மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஓதலாம். தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் முடிந்த பின், முன் போல ஓதத் தொடங்கலாம்.




ஆனந்த ரசம் [இன்பம்]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் - பாசுரம் # 13
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்திற்கு ஆசாரியர் அருளிய உரை:

"பழுக்கக் காய்ச்சிய இரும்பு உண்ட நீரும் மறுபடியும் வெளியே நீராக வர இயலும் - இதைக் குறித்துக் கொள்ளுங்கள்! 'இது எப்படி நடக்கும்?!' என்கிறீர்களா? என்னை விட்டுப் பிரிக்க முடியாதபடி, என்னை வாட்டிய கொடுமையான பிணி பாவங்கள் யாவும் அகன்றுவிட்டன! இந்த அதிசயமே நடக்கும் எனில், நான் சொன்ன அதிசயமும் நடக்கலாம்!

[முன்பு பயனற்றவையைக் கண்டு களித்து நொந்த என் கண்கள்] வண்டு வாழ் சோலைகளால் சூழப்பட்ட அரங்கமா நகருள் கோயில் கொண்ட கரும்பினை [கரும்பைப் போன்ற மிகவும் இன்பம் பயக்கவல்ல திருவரங்கத்து எம்பெருமானை] என்னுடைய கண்களும் இன்று கண்டு பேரின்ப வெள்ளத்தில் திளைக்கின்றனவே!" என்று ஆழ்வார் மகிழ்ச்சியில் பூரிக்கின்றார்.




கருணா ரசம் - முதல் வகை [கருணை, உருக்கம்]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 10-4-7
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரையில் விளக்குகின்றார்:

"பூதனை உன்னைத் 'தன் மகன்' என்று எண்ணி வந்தாள். 'யசோதையே கொடுக்கின்றாள் போலும்!' என்று எண்ணும்படித் தானே தன்னுடைய முலையை உனக்குப் பாலூட்டத் தந்தாள். எனினும், பால் கொடுக்கும் வேடத்தில், மனத்தில் மிகவும் வன்மம் உள்ளவளாய், உனக்கு நஞ்சையே ஊட்டினாள். நீயும் 'இவள் நமது தாயா? அல்லது வேறொருத்தியா?' என்றெல்லாம் ஆராயாமல், 'நஞ்சாகவே ஆகிலும் எனக்குக் கொடுக்கவே வந்தாள்!' என்பதையே பெரிதாக எண்ணி, அந்தப் பிஞ்சுக் குழந்தைப் பருவத்திலும் வலிமை உள்ள மகனாய், அவளது தாய்ப்பாலை மட்டும் அன்றி, அவளது உயிரையே உண்டாய்! இப்படிப்பட்டத் வியக்கவைக்கும் செயல்களைச் செய்து நற்குணங்கள் நிறைந்த நம்பியும் ஆனாய்!

உனக்காகவே பிறந்தவளும், ஆயர்க்குலக்கொழுந்தானவளும், 'இயற்கையான பெண்மை' என்ற செல்வத்தை உடையவளும் ஆகிய நப்பின்னைப் பிராட்டிக்குக் கொழுநன் என்ற பெருமை உடையவன் நீ! [குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை ஆகிய] நான்கு வகை நிலங்களுக்கும் அபிமான தேவதை ஆகிய நிலமங்கையாம் பூமிப் பிராட்டிக்கு மணாளன் என்ற பெருமையும் உடையவன் நீ! அதைக் காட்டிலும் ஏற்றம் மிக்கதான பெருமை நீ 'என் மகன்' என்பதே! என்னுடைய தாய்ப்பால் ஆகிய அம்மமே உனக்குக் காவலாக இருக்கும். உனக்குச் சேமம் [நன்மை] விளைவிக்கும். ஆதலால், அம்மம் உண்ண வாராயே!" என்று யசோதைப் பிராட்டியின் மனோபாவத்தில், அன்பும், கருணையும் ததும்பத் ததும்ப, ஸ்ரீ திருமங்கையாழ்வார் கண்ணனை அழைக்கின்றார்.




கருணா ரசம் - இரண்டாம் வகை [துயரம்]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 4-7-5
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுர உரையில் ஆசாரியர் அருளியுள்ளவை:

"நாடு கொள்ளாத புகழை உடைய வேதம் ஓதுபவர்கள் நிறைந்த ஊர் திருநாங்கூர். அவ்வளவு புகழ் வாய்ந்த வேதியர்கள் யாவரும், நல்ல தருமங்களைத் தாமே செய்து, தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்வர். அடியேனோ அதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றேன்.

விளக்கு என்பது தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும். அதுபோல, திருநாங்கூரில் உறையும் நீயே உனது திருமேனி, உனது பெருமைகள், உனது திருநாமங்கள் ஆகியவற்றை [வேதியர்களுக்கு மட்டுமின்றி] வேடர்கள், குரங்குகள், காட்டுமிருகங்கள் ஆகியவற்றுக்கும் காட்டிக்கொடுத்துக்கொண்டு, திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்றாய்.

ஆதலால், தளிர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்டத் திருவெள்ளக்குளத்தில் உறைபவனே! நின் புகழைப் பாடி வருவேன். உன் திருவுள்ளத்தின் விருப்பப்படியே, உன்னை வெறுக்காமல், அன்புடன் உன் அருகே வருவேன். என்னுடைய வல்வினைகள் யாவற்றையும் உருத்தெரியாமல் அழித்துக் காத்தருளவேண்டும்!" என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார், தமது தாழ்ச்சியை வருத்தத்துடன் விண்ணப்பம் செய்து, திருவெள்ளக்குளத்துள் உறையும் ஸ்ரீ அண்ணன் பெருமாளிடம் உருகுகின்றார்.




ரௌத்திர ரசம் [கோபம்]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 4-9-4
பின்னணி
 
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவிந்தளூர் திருத்தலத்திற்கு எழுந்தருளியபோது, திருக்கோயில் நடை சாற்றிவிட்டனர். எம்பெருமானைக் கண்டு, அனுபவித்துப் பாசுரம் பாடப் பேராவலுடன் எழுந்தருளிய ஆழ்வாருக்கு மாபெரும் ஏமாற்றம். அதனால், பொங்கி வந்த கோபத்தில் ஒரு பாசுரம் பாட, தூய அன்பில் தோய்ந்த பாசுரங்களை மேலும் பெறுவதற்கு எம்பெருமானும் ஆழ்வாரின் கோபத்தை மேலும் தூண்டும் வண்ணம் விடைகள் அளிக்க, இந்தப் பதிகம் உருவெடுத்தது. எம்பெருமானின் விடைகளை ஆசாரியரின் உரையில் மட்டுமே கண்டு தெளியமுடியும். பாசுரங்களில் ஆழ்வாரின் அன்புக் கோபம் கொப்பளிக்கும் ரசமான சொற்களே காணமுடியும்.

ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரம் மிகவும் சுவை வாய்ந்தது. ஆசாரியரின் உரையும் இதற்குத் தகுந்தாற்போல அமைந்துள்ளது.

"காசின் ஒளியின் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்":

உருக்கியதும், மிகத் தூய்மையானதும் ஆகிய பொன்னைக் காட்டிலும் மிகவும் அருமையான திருமேனி வண்ணம் கொண்டவரே! அடியார்களுக்காகவே எடுத்துக்கொண்ட அந்தத் திருமேனியையும், அடியார்களுக்காகவே சாற்றிக்கொண்டிருக்கும் அந்தத் திருவாபரணங்களையும், எம்பெருமானாக [எமக்கு நாதனாக] இருந்தும் நீர் எமக்குக் காட்டவில்லையே!

"ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்கு ஆய்த்து அடியோர்க்கு":

"உம்மைப் போற்றிப் புகழ்ந்து ஏத்தவேண்டும்!" என்ற ஆசை ஒருநாளும் குறையாமல் இருக்கும் உமது அடியார்களான எம் போன்றோருக்கு, நீர் செய்த இந்தச் செயல் மிகவும் இழுக்கு விளைவித்தது காணீர்! எங்களுக்காக நீர் எடுத்துக்கொண்ட திருமேனியை எங்களுக்கே கொடுக்காமல் நீர் மறைத்து வைப்பது என்ன குணம்?!

"தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு":

"எம் போன்றோர் உமக்கே அடிமை" என்கிற உண்மை நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு இரகசியம் அல்ல! இது நாடும் நகரமும் நன்கு அறிந்த உண்மையாகும்! இந்த உண்மையை வாயாரச் சொல்லியே, நாளும் உம்மையே போற்றிக் கொண்டு, நீர் இருக்கும் இடம் எல்லாம் திரிகின்ற எமக்கு நீர் காட்டும் அன்பு இதுதானோ?

"வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!":

நீர் திருவிந்தளூருக்கு வந்ததன் காரணமே எம் போன்ற கடைநிலை அடியாருக்கும் அருள் புரியவே - உமது வடிவழகையும், நற்குணங்களையும் எம் போன்றோரும் ஆழ்ந்து அனுபவிக்கவே! அப்படி இருந்தும், உமது திருமேனியின் பெருமையையும், அடியேனது தாழ்ச்சியையும் கருத்தில் கொண்டு, உமது திருக்கோயில் திருக்கதவை அடைத்துக் கொண்டீரல்லவா? உமது பெருமையையும், எமது சிறுமையையும் கண்டீர் அல்லவா? நீரே உமது வடிவழகைக் கட்டிக்கொண்டு இரும்!




அத்புத ரசம் [அற்புதம், வியப்பு]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருவெழுகூற்றிருக்கை
பின்னணி
 
இந்த அருளிச்செயலே மிகவும் அற்புதமான ஒரு படைப்பு. இதில் ஸ்ரீ திருமங்கையாழ்வார் எண்களைக் கொண்டு பல சொற்களும் சொற்றொடர்களும் அமைத்துப் பாடியுள்ளார்.

திருக்குடந்தை என்கிற திருத்தலத்திற்காக இது அருளப்பட்டது. திருக்குடந்தையில் எம்பெருமானின் சந்நிதி ஒரு தேர் போன்ற அமைப்பால் கட்டப்பட்டிருக்கும். இந்த அருளிச்செயலில் ஸ்ரீ திருமங்கையாழ்வார் வரிசையாக அருளியுள்ள எண்களைச் சீராக அமைத்துப் பார்த்தால், இந்த அருளிச்செயலே ஒரு தேர் போன்ற வடிவம் கொண்டது என்பது புலப்படும்! இப்படிப் பாடுவதற்கு 'ரத பந்தம்' என்று பெயர்.

ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
'நாலு கவிப் பெருமாள்' என்று புகழ் பெற்ற ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 'திருவெழுகூற்றிருக்கை' என்ற இந்த அற்புதப் படைப்பில் ஒரு மிகச்சிறிய பகுதியைச் சுவைத்து இன்புறலாம்:

ஒப்பற்றதான ஒரு பெரிய திருவுந்தியில்

இரு [பெரிதான] தாமரை மலர் ஆசனத்தில்

ஒருகால் நான்முகனைப் படைத்தனை

ஸ்ரீ இராமபிரானாகத் திருவவதாரம் செய்த ஒரு காலத்தில்

சந்திரன் சூரியன் ஆகிய இரு சுடர்கள் வானில் [இராவணனிடம் உள்ள அச்சத்தால்] சஞ்சரிக்க ஒண்ணாததாய்

மூன்று மதில்களால் சூழப்பட்டதாய் [விளங்கிய] இலங்கையை

இரு நுனிகளும் வளைந்த

ஒரு ஒப்பற்ற வில்லாகிய சார்ங்கத்தில் பொருந்தியதும்

இரு பற்களை உடையதும் நெருப்பைக் கக்குகின்ற வாயை உடையதுமான அம்பினால் நீறு ஆக்கினை




மேல்வரும் பகுதியில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் நாயகி மனோபாவத்தில் பாடியுள்ள பாசுரங்களைக் காண்போம்.

நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் 'பரகால நாயகி' என்று அழைக்கப்படுகின்றார்.

இந்த மனோபாவத்தில் அவர் தலைவியின் நிலையிலும், தலைவியின் தாயாருடைய நிலையிலும், தலைவியின் தோழியினுடைய நிலையிலும் இருந்து பாசுரங்கள் பாடுவர்.


Image Source: https://pbase.com/svami/image/102841999


சிருங்கார ரசம் [காதல் - தலைவியின் நிலை]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல், பெரிய திருமடல்
பின்னணி
 
திருநறையூர் திருத்தலத்திற்காக ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இரண்டு சிறப்பு அருளிச்செயல்களே சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல். திருநறையூர் நம்பி பெருமான் ஸ்ரீ திருமங்கையாழ்வாரின் ஆசாரியர் ஆவார். ஆதலால், இந்தச் சிறப்பு அருளிச்செயல்களை அவருக்காகவே ஆழ்வார் அருளியுள்ளார்.

திருமடல்கள் இரண்டும் நாயகி மனோபாவத்தில், ஊடல் திறத்தில் பாடப்பட்டவை. ஸ்ரீ பரகால நாயகி என்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார், "என் நிலைமை கண்டு, எம்பெருமான் திருவுள்ளம் இரங்கி, என்னை ஆட்கொள்ளாவிட்டால், 'என்னைக் காதலித்துக் கைவிட்ட கொடியவன் இவனே!' என்று நாடும் நகரமும் நன்கறிய, தெருத் தெருவாக நடந்து, அவனைப் பற்றி எல்லோரும் அறியும்படிச் செய்வேன்!" என்று எம்பெருமானை மிரட்டும் [!] அருளிச்செயல்களே திருமடல்கள்.

ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"இவ்வாறு ஒரு பெண்பிள்ளை செய்வது மரபோ?" என்று ஸ்ரீ பரகால நாயகியின் தோழிகளும் அன்னைமார்களும் கேட்க, ஆழ்வார் சிறிய திருமடலில் விடை அளிக்கின்றார்:

"வடநாட்டில் வாசவதத்தை என்ற கற்பில் சிறந்த பெண் ஒருத்தி, கால்களில் தளையிட்டுச் சிறைப்படுத்தப்பட்ட வத்சராஜன் என்ற தன் காதலனுடன் சென்றுவிட்டாள். அவளை எல்லோரும் போற்றியே புகழ்ந்தனர். நானும் அவள் வழியே செல்வேன். பதற்றத்தில் இருக்கும் எனக்கு, நீங்கள் யாரும் பொறுமையைக் கற்பிக்காதீர்!"

மேலும் பெரிய திருமடலில் தெரிவிக்கின்றார்:

"விசுவாமித்திர முனிவர் சொன்னார் என்பதால், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் இவன் சூர்ப்பணகை என்ற பெண்ணின் மூக்கையும் காதையும் அறுத்த 'பெருமை'யும், பூதனை என்ற பெண்ணின் உயிரைக் குடித்த 'பெருமை'யும் பேசப்பட்டுள்ளன. பெண்களைக் கொடுமைப்படுத்துவதே இவன் 'பெருமை'," என்று தெருத்தெருவாகப் பேசிக்கொண்டு, பனை ஓலையைக் கையில் கொண்டு, மடல் ஊர்வேன். 'இதுவோ இவன் பெருமை!' என்று எல்லோரும் அவனை ஏசும்படிச் செய்வேன்!" என்கிறார்!!




சிருங்கார ரசம் [காதல் - தலைவியினுடைய தாயாரின் நிலை]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பாசுரம் # 12
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"இவளுக்கு என்ன ஆயிற்று?" என்று வினவும் பெண்டிரிடம், "இந்தப் பெண்பிள்ளையின் மனமானது [எம்பெருமானை நினைத்து] நீர்ப்பண்டமாக உருக, கண்ணீர் பெருகி நிற்கின்றாள். [எம்பெருமானை நினைத்து] மயங்கி விழுகின்றாள். இவள் சோறு உண்ணவில்லை. உறக்கத்தையும் விரும்பவில்லை. 'திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்ட நம்பீ!' என்றும், 'நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த கழனிகள் உடைய திருவாலியில் உறையும் இளங்குமரா!' என்றும் அழைக்கின்றாள். அழகிய சிறகுகள் உடைய கருடாழ்வாரைப் போல இவளும் ஆடுகின்றாள்! பாடுகின்றாள். தோழியிடம், 'தோழி! திருவரங்கம் திருக்காவிரியின் படித்துறையில் நாம் நீராடப் பெறுவோமோ?' என்று வினவுகின்றாள். 'அவள் சொற்படி நடவாத ஒரு பெண்பிள்ளையைப் பெற்றாள்!' என்று இம்மாநிலத்தில் ஒப்பற்றதொரு பழியைப் பாவியேன் பெற்றேன்! அந்தோ!" என்று ஸ்ரீ பரகால நாயகியின் தாயார் மனம் இரங்கிக் கூறுகின்றாள்.

இந்த 'ஒப்பற்றதொரு பழி' மிகவும் போற்றத்தக்கதாம். ஸ்ரீ பரகால நாயகியாகிய பெண்பிள்ளை ஆரோ ஒரு சராசரி ஆடவனுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கவில்லை. ஸ்ரீ புருடோத்தமன் ஆகிய எம்பெருமானுக்கே தன் மனதைப் பறிகொடுத்துள்ளாள். ஆதலால், "இது ஒப்பற்ற பழியே!" என்று தாய், மேலோட்டமாகப் புலம்புவது போலப் பேசினாலும், உள்ளூர மிக்க பெருமிதத்துடன் கூறுகின்றாள்!




சிருங்கார ரசம் [காதல் - தலைவியினுடைய தோழியின் நிலை]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 11-5-2
பின்னணி
 
தமது திருவுள்ளத்தில் பெருகும் அனுபவ வெள்ளத்தை ஒருத்தியாக இருந்து பேசமுடியாமல், ஸ்ரீ திருமங்கையாழ்வார் தம் ஒருவரையே இரண்டு தோழிகளாகப் பாவித்துக்கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைந்த பதிகம் ஆதலால் இந்தப் பதிகம் தோழி நிலையிலும் ஒரு சிறப்பான நிலையாம். இப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாசுரத்தைக் காண்போம்.

ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
முதல் தோழி கூறுவதாவது:

"ஆறு பிள்ளைகளைக் கொடியவனான கம்சனிடம் பறிகொடுத்து, கால்களில் தளைகளுடன் சிறையில் வருந்தும் நங்கள் வசுதேவரின் மனவருத்தத்தைப் போக்கும் வண்ணம் இப்பூவுலகில் தோன்றி, 'நமது இந்தக் குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவானோ!' என்று நங்கள் வசுதேவரும், தெய்வத் தேவகியும் அஞ்சாத வண்ணம், அவர்களின் அச்சத்தைப் போக்க, அன்று இரவே திருவாய்ப்பாடிக்குச் சென்று, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய திருவம்சத்தை ஏற்றம் பெறச் செய்யும் யசோதை இளஞ்சிங்கமாக வளர்ந்தான், காணேடீ!"

இரண்டாம் தோழி கூறுவதாவது:

"அப்படி நந்தன் குல மதலையாய் வளர்ந்தவன் யாரெனில் எல்லோரையும் பிறப்பிக்கும் அந்த நான்முகனாரைத் தனது திருத்தாமரை உந்தியில் பிறப்பித்தவன் காண்! அவ்வளவு பெரியவனாக இருந்தும் எனக்குத் தந்தையாய், என்னையும் இந்தப் பிறவிகடலிலிருந்து கைதூக்கி விட, எம்பெருமானாய் இப்பூவுலகில் வந்து பிறந்தான்!"

இப்படி ஒரே பாசுரத்தில், ஒரு தோழியின் திருவாயால் எம்பெருமானின் எளிமைக் குணத்தையும், இன்னொரு தோழியின் திருவாயால் எம்பெருமானின் பரமனான தன்மையையும் ஸ்ரீ திருமங்கையாழ்வார் பேசி மகிழ்கின்றார். மகிழ்விக்கின்றார்.




பய ரசம் [அச்சம்]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 1-6-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
நம் போன்றோர் எம்பெருமானின் திருவடிகளில் எப்படிச் சரணடையவேண்டும் என்பதை ஸ்ரீ திருமங்கையாழ்வாரிடமிருந்து கற்கவேண்டும்! நம் குறைகளை விண்ணப்பித்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களைக் கொண்டாடி, அவன் திருவடிகளில் சரணடையவேண்டும். இப்பதிகத்தில் உள்ள பாசுரங்களில் அதை நமக்கு வெகு அழகாக ஸ்ரீ திருமங்கையாழ்வார் கற்பிக்கின்றார். இப்பாசுரத்திற்கு உரை அருளிய ஆசாரியர் அருளியவற்றுள் சில தேன் துளிகள்:

"பகலில் பொருள் ஈட்டுவதற்குச் சூதாட்டத்தில் ஈடுபட்டேன். இரவில் பொருள் ஈட்டுவதற்குப் பகலில் சூதாட்டத்தில் வென்றவனைக் கொள்ளையடித்தேன். சுருண்ட குழல்கள் உடைய பெண்கள் மீது ஆசை கொண்டு, ஈட்டிய பொருள்களைக் கொண்டு அவர்களுக்குச் சேவை செய்தேன். கண்கள் விரும்பிய பொருள்கள் யாவற்றின் பின்னும் சென்றேன்.

உன்னைத் தொழும் இந்திரன் முதலான தேவர்கள், உன் திருவடிகளில் தொண்டினை வேண்டாமல் வேறு பயனை வேண்டியபோதும், அதைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்காக ஆமையாய்த் தோன்றி, வெண்ணிற அலைகள் கொண்ட திருப்பாற்கடலைக் கிளர்ந்தெழச் செய்த பெருந்தகவுடையோனே! தேவர்களுக்கு மட்டுமே இல்லாமல், என் போன்றோரும் வந்து அடைய திருநைமிசாரண்யத்தூள் உறையும் அருளாளா! பாவிகளுக்கு யம சேவகர்கள் செய்யும் கொடுமைகளை நினைத்து நடுங்கிக் கைகால் வலுவிழந்து, உன் திருவடிகளில் வந்து சரணடைந்தேன்!"




பீபத்ச ரசம் [அருவருப்பு, வெறுப்பு]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 6-2-1
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்திற்கு ஆசாரியர் அருளிய உரை:

பிறர் சொல்லும் தாழ்ந்த சொற்களைப் பொறுத்துக்கொண்டேன். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று இருக்க, அறத்தையும் வீடுபேற்றையும் மறந்து, என்னுடைய ஐம்புலன்கள் "பொருளைக் கொடு! இன்பத்தைக் கொடு!" என்று கடன் கொடுத்தவரைப் போல என்னை விரட்ட, அவைகளுக்குப் பொருளையும் இன்பத்தையும் ஈந்தேன். என் மனத்தின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடப்பவரை "உன் மீதுள்ள விருப்பம் என்றும் மாறாது" என்று வாயினால் கூறி, அதன் படியே ஆர்வத்துடன் நடத்தினேன். என் மனத்தின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடவாதவரை "உன் மீதுள்ள வெறுப்பு என்றும் மாறாது" என்று வாயினால் கூறி, அதன் படியே செற்றத்துடன் நடத்தினேன். இந்த உணர்வுகளை மனதில் அகலமாகப் பதித்துக் கொண்டேன்.

[காலம் பல சென்ற பின்,] "நான் ஏன் இவ்வாறு எல்லாம் செய்தேன்?" என்று எண்ணி, அவற்றை எல்லாம் துறக்க முயன்றேன். எவ்வளவு முயன்றாலும், என்னால் அவற்றை விட இயலவில்லை. வெறுத்தேன். "என்னால் இவை எதுவும் இயலாது" என்று உணர்ந்து, திருவிண்ணகர் மேயவனே, உன் திருவடிகளை வந்து அடைந்தேன்.




வீர ரசம் [வீரம், துணிச்சல்]


Image Source: https://pbase.com/svami/image/53788700


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 3-4-10
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் உள்ள பொருள்களின் சுருக்கம்:

செங்கமலத்தில் உறையும் நான்முகனாருக்குச் சமமான மறையோதும் அந்தணர்கள் வாழும் திருக்காழிச்சீராம விண்ணகரம் என்ற திருத்தலத்தில் உறைகின்ற செங்கண்மாலை

  1. அழகிய தாமரை மலர்கள் நிரம்பிய தடாகங்களினாலும், வயல்களாலும் சூழப்பட்ட திருவாலி திருத்தலத்தைச் சேர்ந்தவரும் [ஆலிநாடன்]
  2. தமது திருவடிகளை அடைந்தவருக்கு மழைமேகம் போல அருளைப் பொழிந்து தம்மையும், தம் பாசுரங்களையும் அருள்பவரும் [அருள்மாரி]
  3. எதிர்த்து வருபவரை எதிர்க்க முடியாதபடி அமுக்குபவரும் [அரட்டமுக்கி]
  4. எதிரிகளால் வெல்லமுடியாத சிங்கம் போன்றவரும் [அடையார் சீயம்]
  5. கொங்கு மலர்க் குழலியர் [உள்பட எல்லோராலும்] மிகவும் விரும்பத்தக்கக் காமவேள் போன்ற அழகை உடையவரும் [கொங்கு மலர்க் குழலியர் வேள்]
  6. திருமங்கை நாட்டின் வேந்தனாகத் திகழ்பவரும் [மங்கை வேந்தன்]
  7. அடியார்களைக் காக்க வெற்றி தரும் வேலை ஏந்திக்கொண்டு, எதிரிகளுக்குக் காலன் போல இருப்பவரும் [கொற்றவேல் பரகாலன்] ஆகிய
  8. மிடுக்கை உடையவராம் [கலியன்],

கூட்டம் கூட்டமாக நற்றமிழை அனுபவிக்க வருவோருக்காகச் சொன்ன இந்தத் தமிழ் மாலையை, இதன் மெய்ப்பொருள்களுடன் கற்க வல்லவர்கள் யாவரோ, அவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் தலைவர்களாக விளங்குவார்கள்.

இது ஸ்ரீ திருமங்கையாழ்வார் தாமே தம் பெருமைகளைத் திருவாய்மலர்ந்தருளிய பாசுரம்! "ஆழ்வார் இப்படிச் செய்யலாமோ?" என்ற கேள்விக்கு, ஒரு சுவையான நிகழ்ச்சியின் வாயிலாக, ஆசாரியர் உரையில் விடை அருளியுள்ளார்:

திருவரங்கப் பெருமாள் ஒரு அடியவரிடம், "நம்முடைய ஆழ்வார்களிடம் நீர் ஏதேனும் குற்றம் கண்டதுண்டோ?" என்று வினவினாராம். அப்போது, அந்த அடியவர் இந்தப் பாசுரத்தை விண்ணப்பம் செய்து, "ஆழ்வார் உம்மைப் பாட வந்து, தம்மையே பாடிக்கொண்டுள்ளாரே!" என்றாராம். அதற்குத் திருவரங்கப் பெருமாள் சிரித்துக்கொண்டே, "அப்படி அன்று. 'அடியேனுக்கு ஏற்பட்ட பெருமைகள் யாவும் எம்பெருமான் அருளால் ஏற்பட்டவை. இவை யாவும் அவன் பெருமைகளே!' என்று ஆழ்ந்து, உணர்ந்து ஆழ்வார் பாடினார். ஆதலால், இதுவும் நம்மையே பாடியதாம்!" என்று அருளினாராம்.




சாந்த ரசம் [அமைதி]


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 8-10-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"திருக்கண்ணபுரத்தில் உறையும் அம்மானே! 'திருவெட்டெழுத்து' என்று புகழ் பெற்ற உனது அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருளாக மற்ற பல பொருள்களையும் நீ உரைத்தாலும், நீ உரைத்ததின் சாரமான பொருளாக நான் கற்றது என்னவெனில்: 'வேறு தெய்வங்களைப் பற்றியிருப்போரை விட்டு, உன் ஒருவனையே தெய்வமாகக் கொண்டு, உன் திருவடிகளையே பற்றி இருக்கும் அடியாருக்கு அடியேன் அடியவன் ஆவேன்,' என்பதேயாம்!" என்கிறார் ஆழ்வார்.

"நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று முதலில் முழங்கியவர், "அந்தத் திருநாரணன் தாளிணைகளைக் காலம்பெறச் சிந்தித்து உய்ந்தவர்களின் திருவடிகளே தமக்குப் பேறு," என்று இறுதியில் எம்பெருமானிடம் அறுதியிடுகின்றார்! இதுவே ஸ்ரீ திருமங்கையாழ்வார் அடைந்த ஞானத்தின் உச்சநிலை. இதை உணர்ந்த பின்னரே ஆழ்வார் அமைதி கண்டார்.




Image Source: Sri Parakala Ramanujadasan, Sri Koil Annan Thirumaaligai Shishyar


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 2
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
திருக்குறையலூர் என்ற திருத்தலத்தில் ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவவதரித்தார். அதனால், அவருக்கு "குறையல் பிரான்" என்ற திருநாமமும் உண்டு. "அந்தக் குறையல் பிரான் திருவடிக்கீழ் மாறாத அன்பினை உடையவர் ஸ்ரீ இராமானுசர். அந்த ஸ்ரீ இராமானுசரின் அளவில்லாத பெருமைகளைத் தவிர வேறு எதையும் அடியேனது உள்ளம் நினைக்காது. இதுவே அடியேனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நல்ல குணம்!" என்று ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் முழங்குகின்றார்.

குறிப்பு: ஸ்ரீ திருமங்கையாழ்வாருடைய திருவவதார திருத்தலத்தில், அவரது திருவடியின் கீழே ஸ்ரீ இராமானுசரின் சிறிய திருமேனி நமக்கு அருள் பாலிப்பதை இன்றும் கண்டு வணங்கலாம்.




முடிவுரை
 
1000-கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடிய ஸ்ரீ திருமங்கையாழ்வார், 80-கும் மேற்பட்ட திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர் மட்டுமே மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 40-கும் மேற்பட்டவை! இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இவ்வாழ்வாரின் கடல் போன்ற அருளிச்செயல்களில், ஸ்ரீ இராமானுசரின் இன்னருளால், ஒரு சில முத்துக்களை மட்டுமே சுவைத்தோம். பொங்கு புகழ் மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கு மனம் பெற ஸ்ரீ இராமானுச முனியின் திருவடி பணிவோமாக.

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment