Search This Blog

Sunday 18 December 2022

பெருப்பெருத்த பெருமையுடைய பெரியாழ்வார்

பெருப்பெருத்த பெருமையுடைய பெரியாழ்வார்


Image Source: https://4krsna.files.wordpress.com/2008/07/dsc00418.jpg


முன்னுரை

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் எம்பெருமானின் ஒரு திருநாமத்தை 3 முறை ஓதியுள்ளாள் - "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!", "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!", "இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!" என்ற வரிகளை நம்மில் பலரும் அறிந்திருப்பர்.

ஆனால், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளைக்கு "கோவிந்தா" என்ற பகவானின் திருநாமத்தைக் காட்டிலும், அவளுக்கு ஸ்ரீ கோவிந்தனைக் காட்டிக்கொடுத்த அவளுடைய ஆசாரியரான ஸ்ரீ பெரியாழ்வாரின் திருநாமத்தின் மீது அன்பும், மதிப்பும் விஞ்சி இருக்கும்.

இதனைப் பறைசாற்ற ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி:

ஸ்ரீ இராமாநுசரின் 74 ஸிம்ஹாஸன அதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீ நடுவிலாழ்வானுடைய திருவம்சத்தில் திருவவதரித்த ஸ்ரீ கோவிந்த தாசர் என்பவர், ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய திருவடிகளில் தஞ்சம் புகுந்தார்.

ஒரு முறை, ஆழ்வார் திருமகளார் ஆண்டாளது தீர்த்தப் பிரசாதத்தை, அணி புதுவையாம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு மிக்க ஆதரத்துடன் ஸ்ரீ கோவிந்த தாசர் கொண்டு வந்தார். இதனால் மிகவும் உகந்த ஸ்ரீ மணவாள மாமுனிகள், பட்டர்பிரான் கோதையின் திருவுள்ள உகப்புக்கு, “பட்டர்பிரான் தாசர்” என்று ஸ்ரீ கோவிந்த தாசருக்குப் புதிய திருநாமம் சூட்டினார்! இவரே துறவறம் ஏற்ற பின் ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய 8 தலையாய சீடர்களுள் ஒருவரான “ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர்” எனத் திகழ்ந்தார்.

இதனால், பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதையின் திருவுள்ளம் உகக்கவேண்டும் என்றால், அவளுடைய ஆசாரியரும், திருத்தகப்பனாரும் ஆகிய ஸ்ரீ பெரியாழ்வாரின் பெருமையைப் பாடவேண்டும் என்று தேறுகின்றது!

மார்கழி மாதம் என்றாலே திருப்பாவை பாடிய செல்வி நம் மனங்களில் கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் எழுந்தருளிவிடுவாள். அதிலும், இன்று சுவாதி திருநட்சத்திரம். நல்முத்தை நல்கும் சுவாதி திருநட்சத்திரத்திலேயே பட்டர்பிரான் கோதையின் திருத்தகப்பனாராகிய ஸ்ரீ பெரியாழ்வார் [ஆனி மாதத்தில்] தோன்றினார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 16, 17

அதனால், இந்நன்னாளிலே இடும் இந்தப் பதிவு, விட்டுசித்தன் கோதையின் திருவுள்ளம் பெருமகிழ்ச்சி அடைவதற்காகவே, ஸ்ரீ பெரியாழ்வாரின் ஏற்றத்தை ஓரளவு பேச முற்படுகின்றது. இதைச் சுவைக்கும் ஒவ்வொருவருக்கும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருவருள் முழுவதும் கிட்டட்டும் என வேண்டுகின்றேன்.




மங்களாசாசனம் என்றால் என்ன?

Image Source: https://kazhiyurvaradanblog.in/2015/01/13/oh-my-lovely-lord-my-chella-pillaay-please-come-and-sit-on-my-lap/


மங்களம் + ஆசாசனம் = மங்களாசாசனம். ஒருவருக்கு நன்மை நடக்கவேண்டும் என வாழ்த்துவதே "மங்களாசாசனம்" ஆகும்.

நம்மைக் காட்டிலும் ஆன்மீக ஆற்றலில், அறிவில், வயதில், குணத்தில் பெரியவர்கள், "நூறாண்டு வாழ்வாய்," "வரப்புயர" போன்ற சொற்களால் நம்மை வாழ்த்துவது நமக்கு உண்மையிலேயே மங்கலங்களைக் கொடுக்கும் என்று சாத்திரங்கள் முழங்குகின்றன.

"தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாய்!" என்று ஒருவன் தன் நண்பனை வாழ்த்துவதும், "நம் தலைவன் புகழ் ஓங்கட்டும்!" என்று ஒரு தொண்டன் தன் தலைவனை வாழ்த்துவதும் சராசரி மனிதர்களிடையே கூட நாம் காண்கின்றோம்! இது வாழ்த்துபவரின் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தினாலும், அந்த வாழ்த்து மெய்யாகவே பலிக்கும் என்று சொல்லமுடியாது. இருப்பினும், அந்த எண்ணத்தால் எல்லோரும் நெகிழ்கின்றனர்.

இன்னொருவர் நன்றாக வாழவேண்டும் என்று மெய், நா, மனத்தால் வாழ்த்தும் இந்த நல்ல மனப்பான்மையை இறைவனுக்கும், குருமார்களுக்கும், சான்றோர்களுக்கும் நாம் அர்ப்பணித்தால், இந்த நல்ல மனப்பான்மை ஒப்பற்ற நிறம் பெறுகின்றனது. அதனால், நம் ஆன்மா செம்மை அடைகின்றது.

பரமபுருடனுக்கு மெய்யடியார்கள் செய்யும் மங்களாசாசனத்தைத் தமிழ் மொழியில் "பல்லாண்டு பாடுதல்," "வாழ்த்துதல்," "காப்பிடுதல்" என்று கூறுவர்.

தூய மங்களாசாசனம் செய்யும் அடியவரின் மனநிலையும் செய்கையும் - ஒரு எடுத்துக்காட்டு:

ஸ்ரீ இராமானுசர் திருநாராயணபுரம் என்ற மேல்கோட்டையில் 12 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். திருநாராயணன் என்ற மூலவர் பெருமானையும், ஸ்ரீ இராமானுசரின் திருமடியில் ஏறி அமர்ந்த ஸ்ரீ செல்வப்பிள்ளை என்ற உற்சவர் பெருமானையும் திருப்பிரதிஷ்டை செய்தார். பின், திருவரங்கத்தில் சோழனால் ஏற்பட்ட ஆபத்து நீங்கியது என அறிந்தவுடன், திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அப்போது, திருநாராயணபுரத்தில் வாழும் அடியார்களுக்கு ஸ்ரீ இராமானுசர் ஒரு திருக்கட்டளையிட்டார்: "நம் செல்வப்பிள்ளை கிணற்றின் அருகே விளையாடும் குழந்தை போல இருக்கும். கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்," என்றார்!




பரமபுருடனுக்கு அடியார்கள் மங்களாசாசனம் செய்வது தகுமா?

Image Source: http://www.parabrahmaa.com/lokas.htm


திருமாலுக்கு உள்ள பற்பல திருநாமங்களுள் "பகவான்" என்ற திருநாமம் ஒன்று. "பக" என்பது 6 குணங்கள் - ஞானம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம். புருஷோத்தமனான திருமால் இந்த 6 குணங்களையும் எல்லையற்ற அளவில், அனைத்து காலங்களிலும் கொண்டிருக்கிறார். இவ்வாறு இருக்கையில்:
  1. பிறவிச்சுழலில் போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு ஜீவன், பரமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தகுதியுள்ளவரா?
  2. ஒரு ஜீவன் முக்தி நிலையை எய்திவிட்டாலும் கூட, அந்த ஜீவன் பரமனுக்கு ஆட்பட்டு, அவனது திருவடி நிழலில் ஒதுங்கும் என்பதே என்றும் மாறாத உண்மையாக இருக்க, பரமனுக்கு மங்களாசாசனம் செய்ய முக்தி அடைந்த ஜீவர்களுக்குத் தகுதியுள்ளதா?
  3. பிறவிச்சுழலில் என்றும் சிக்காமல், நித்யசூரியாக எப்போதும் பரமபதத்தில் இருந்தாலும், அவர்களுக்கும் பரமனுக்கு ஆட்பட்டு இருக்கும் தன்மை என்றும் மாறாது ஆகையால், பரமனுக்கு மங்களாசாசனம் செய்ய நித்யசூரிகளுக்கும் தகுமா?

இவ்வினாக்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் தரிசனத்து ஆசாரியர்கள், அவர்களுக்கே உரிய தெய்வீகப் பாணியில், தெளிவைப் பிறப்பிக்கிறார்கள்!




ஞான தசையும் பிரேம தசையும்!

Image Source: https://in.pinterest.com/pin/365495326021223781/


இறைபக்தியில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் 2 நிலைகள் உண்டு:

  1. ஞான தசை:

    இறைவனின் திருக்கல்யாண குணங்களான அனைத்தும் அறியும் தன்மை, எங்கும் நிறைந்திருக்கும் தன்மை, சர்வவல்லமை படைத்த தன்மை ஆகியவற்றை உணர்ந்து, "அவனே என் உயிர்க்காவலன்" என்று இருப்பர்.

  2. பிரேம தசை:

    இறைவனுடைய திருமேனியின் எல்லையற்ற வடிவழகு மற்றும் எல்லையற்ற மென்மை ஆகியவற்றால் மூழ்கடிக்கப்பட்டு, "அந்தோ! இவனுக்கு எந்தத் தீமையும் நேரக்கூடாதே!" என்று மிகப் பெரிய அச்ச உணர்வை எய்தி மயங்கியிருப்பர். இந்த நிலையிலேயே, "பரமனே என்னைக் காப்பவன்" என்ற எண்ணம் மாறி, "நாம் பரமனைக் காக்கவேண்டும்!" என்ற எண்ணம் தலையெடுக்கும்!

பிரேம தசையின் சில பண்புகள்:

  1. அச்சமோ, சந்தேகமோ ஏற்படக் காரணமே இல்லாத ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையில் கூட, பிரேம தசையில் இருப்பவர்களுக்கு "எம்பெருமானுக்கு ஒரு குறையும் நேரக்கூடாதே!" என்ற அச்சம் மேலிடும். "இவன் எம்பெருமானுக்குத் தீங்கு செய்பவனோ??" என்று நல்லோரையும் சந்தேகிக்கும் குணம் கூட சில தருணங்களில் வெளிப்படும்!

  2. பிரேம தசையின் செயல்பாடு எம்பெருமான் எங்கு இருக்கின்றான் என்பதைப் பொருத்து அல்ல:

    அதாவது, திருநாடு [எ] வைகுந்தம், திருப்பாற்கடல், திருவயோத்தி, திருவடமதுரை, திருத்துவாரகை, அடியார்களின் இதய கமலம், திருவரங்கம், திருவேங்கடம் என்று எம்பெருமானின் இருப்பிடம் எதுவாயினும், பிரேம தசை மேலிட்டு எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவது சாலச் சிறந்ததே.

  3. பிரேம தசையின் செயல்பாடு அடியார்களின் நிலையைப் பொருத்து அல்ல:

    அதாவது, முக்தி அடையாத அடியாராக இருக்கலாம்; முக்தி அடைந்த அடியாராகவும் இருக்கலாம்; வைகுந்தத்தில் எப்போதும் வசிக்கும் அடியாராகவும் இருக்கலாம் - எந்த நிலையிலும், பிரேம தசை மேலிட்டு எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவது சாலச் சிறந்ததே.

ஒரு எடுத்துக்காட்டு:

தெய்வத்தேவகியும், வசுதேவரும் தங்கள் எட்டாவது திருமகன், கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நிற்க வந்திருக்கும் நெடுமால் என அறிந்தும், அவனைக் கண்டவுடன் அதை மறந்தனர். "ஐயனே! கம்சன் வருவதற்குள் திருவாழியை மறைத்துக்கொள்ளுங்கள்!" என்றார் வசுதேவர். "ஐயனே! நான்கு திருத்தோள்களை மறைத்து, இரண்டு திருத்தோள்களுடன் காட்சி அளியுங்கள்!" என்றாள் தேவகி.

பிரேம தசையின் ஒரே குறிக்கோள் எம்பெருமானும், எம்பெருமானின் அடியார்களும் எவ்விதமான குறையும் இன்றி, மிகவும் சுகமாக இருக்க வேண்டும் என்பதேயாம்.




புருடோத்தமனுக்கு மங்களாசாசனம் செய்வதன் பயன்

Image Source: https://in.pinterest.com/pin/32721534780924572/


"'பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடினால் எம்பெருமானுக்கு என்ன பயன்?!" என்றும் கேட்பவர் இருக்கலாம். இதற்கும் விடை அளித்துள்ளனர் செந்தமிழ் வேதியர்களான நம் ஆசாரியர்கள்!

எம்பெருமானுக்குத் திருவிளையாடல்கள் புரிவதென்றால் மிகவும் இன்பம். ['அது சரி' என்கிறீர்களா?] அவனுடன் எதிர்த்துப் போரிடும் அசுரர்களிடம் காரணமின்றி அடி வாங்குவது, திருக்கோயில்களில் அவனுக்கு நடக்கும் அநீதி கண்டும் காணாக்கண்ணிட்டு இருப்பது போன்றவற்றைச் செய்வான். அப்பொழுது மெய் அடியார்கள் அவனுக்குப் பல்லாண்டு பாடினால், அவர்களுக்காகத் தனது திருவிளையாடலை நிறுத்தி, தனது உண்மையான சக்தியை வெளிப்படுத்துவான்!

ஒரு எடுத்துக்காட்டு:

தூய பெருநீர் யமுனையுள், காளியன் மாயனைக் கட்டியபோது, மன்னு வடமதுரை மைந்தனும் ஆடாது அசங்காது இருந்தான். ஏரார்ந்த கண்ணி யசோதையும், நாயகனாய் நின்ற நந்தகோபனும், மற்றுமுள்ள திருவாய்ப்பாடி மக்களும் அழுதனர், அரற்றினார். ஸ்ரீ தேவாதிதேவனுக்குக் காளியனால் எந்த ஆபத்தும் இராது என்பதை நன்கு அறிந்த செம்பொற்கழலடிச் செல்வரான பலதேவர், "மாமாயா! மாதவா! எல்லோரும் கலங்கியுள்ளனர். [நீ இப்படி மெளனமாக இருந்து திருவிளையாடல் செய்தது] போதும். வெளியே வா!" என அழைக்க, செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனும் காளிங்க நர்த்தனக் கண்ணனாகக் காட்சியளித்தான்.

குறிப்பு: திருக்கோயில்களுள் எம்பெருமான் நலமாக இருத்தல் வேண்டும் என விரும்புவோர், பாசுரங்கள், மங்களச் சுலோகங்கள் போன்ற மகான்களின் திருவாக்குகளைக் கொண்டு ஆர்வமுடன் வேண்டினால், நம் வேண்டுகோளை எம்பெருமான் நிச்சயமாக நிறைவேற்றுவான்.




பரமனுக்கு மங்களாசாசனம் செய்தவர்கள் - சில எடுத்துக்காட்டுக்கள்

Image Source: https://www.allgodscollections.com/2014/04/sri-sita-rama-kalyanam-live-web.html


கொழுகொம்பு இல்லாத முல்லைக்கொடியைக் கண்ட பாரி மன்னன், தனது தங்கத் தேரினை அதற்கு ஈந்தான். மழைமேகத்தைக் கண்டு தோகையைக் குலுக்கிய மயிலைக் கண்ட பேகன் எனும் அரசன், அதற்குப் போர்வை போர்த்தினான். மேலோட்டமாக இவை அறிவு கலங்கிச் செய்த செயல்களாகத் தோன்றினாலும், இச்செயல்களின் அடிப்படையான கருணையைக் கொண்டே இவர்களைக் கடை எழு வள்ளல்களுள் இருவரெனப் போற்றுகின்றனர்.

இதற்கு ஒப்பான மனநிலையுடன், திருமாமகள் கேள்வனுக்கு நன்மையே நடக்கவேண்டும் என்று வாழ்த்தியவர் பலருண்டு.

மங்களாசாசனம் செய்தவர் மங்களாசாசனம் செய்த தருணம்
கோசலை [கௌசல்யை] தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களை வென்றது, ஈசனுடைய வில்லை முறித்தது, பரசுராமனின் கர்வத்தை அடக்கியது போன்ற ஸ்ரீ இராமபிரானின் சாகசங்களை அறிந்தும் ஸ்ரீ இராமபிரான் வனத்திற்குப் புறப்பட்டபோது. "உனக்கு எல்லா மங்களங்களும் நடக்கட்டும்!" என்றார்.
தயரதர் தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களை வென்றது, ஈசனுடைய வில்லை முறித்தது போன்ற ஸ்ரீ இராமபிரானின் சாகசங்களை அறிந்தும், பரசுராமனின் எதிர்ப்பு வந்தபோது, "சிறு குழந்தை ஸ்ரீ இராமனுக்கு ஆபத்து நேர்ந்ததே!" என மயங்கி விழுந்தார்.
விசுவாமித்திரர் "ஸ்ரீ இராமன் யார் என நான் அறிவேன்! அவனுக்கு எந்த ஆபத்தும் நேராது!" என்று தயரதன் சபையில் முழங்கியவர், தாடகை ஸ்ரீ இராமபிரானை எதிர்த்து ஓடி வந்தபோது பதறி, "இராகவா! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!" என்று ஆசி கூறினார்.
ஜனகர் ஸ்ரீ இராமபிரானின் வீரச் செயல்களை நன்கு அறிந்தும், தமது திருமகளாரை அவருக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, "உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்!" என்று திவ்ய தம்பதியினருக்குக் காப்பிட்டார்.
ஜனகன் பெற்ற அன்னம் [சீதை] ஸ்ரீ இராமபிரானின் தோள்வலிமையை நன்கு அறிந்தவளாய் இருந்தும், கைகேயியின் அந்தப்புரத்திற்கு ஸ்ரீ இராமபிரான் புறப்பட்டபோது, அவருக்கு மங்களம் பாடிக்கொண்டே பின் சென்றாள்.
குகப் பெருமாள் ஸ்ரீ இலக்குவன் ஸ்ரீ இராமபிரானைத் தொடர்ந்து கானகம் வந்தனன் என அறிந்தும், "இவனால் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆபத்து நேருமோ?" என ஐயம் கொண்டார். அவரது வேடக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களும், "நம் கூட்டத்தின் தலைவரால் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆபத்து நேருமோ?" என ஐயம் கொண்டனர்!
தண்டகாரண்ய முனிவர்கள் "ஸ்ரீ இராம! அரக்கர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாய்!" என வேண்ட வந்தவர்கள், "ஸ்ரீ இராமபிரானின் வடிவழகில் மிகவும் ஈடுபட்டு, "ஸ்ரீ இராமா! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!" என வாழ்த்தினர்.
பெரிய உடையார் என்ற ஜடாயு இராவணனுடன் போரிட்டுத் தம் உயிரை இழக்க இருந்த தருணத்திலும், "ஸ்ரீ இராமா! சீதையை நிச்சயம் திரும்பப் பெறுவாய்! நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக!" என வாழ்த்தினார்.
திருவடி என்ற அனுமன் ஸ்ரீ இராமபிரானைக் கண்ட அக்கணமே, "இவர் சுக்கிரீவ மகாராஜனுக்குத் தக்க துணையாக இருப்பார்!" என முடிவு செய்தபோதும், "ஸ்ரீ இராமபிரானின் திருத்தோள்கள் எல்லோரும் காணும்படி இருக்கின்றனவே! அவற்றுக்கு ஒரு கண்ணெச்சில் படாமல் இருக்கவேண்டுமே!" என எண்ணி, "தாங்கள் அணிகலன்களால் தங்களது திருத்தோள்களை ஏன் மறைக்கவில்லை?" என்று வினவினார்.
சுக்கிரீவ மகாராஜர் ஸ்ரீ இராமபிரானின் ஆற்றலை நேரில் கண்டவர் என்ற போதும், ஸ்ரீ விபீடணன் வந்து அடைந்தபோது, "இவரால் பெருமாளுக்கு ஆபத்து ஏற்படுமோ?" என அஞ்சினார்.
நந்தகோபர் தமது திருமகனான ஸ்ரீ கண்ணபிரான் பூதனையை முடித்தான் என்று கேள்வியுற்றபோதும், "பகவானே! கோவிந்தா! என் குழந்தைக் கண்ணனைக் காப்பாற்றுவாய்!" என வேண்டினார்.
விதுரர் பரம்பொருளே ஸ்ரீ கண்ணனாகத் திருவவதரித்தார் என்று அறிந்தபோதும், ஸ்ரீ கண்ணபிரான் தமது குடிலுக்கு எழுந்தருளியபோது, “துரியோதனின் சோற்றை உண்ணும் நான், எம்பெருமானுக்குப் பொய் ஆசனம் இட்டுள்ளேனோ?” என்று தம்மையே சந்தேகித்தாராம்!


மேற்கூறிய ஒவ்வொரு அற்புதமான பக்தரின் ஒவ்வொரு செயலும், எம்பெருமான் மீது அவர்கள் வைத்த மிகத் தூய்மையான அன்பின் வேகத்தால், தங்களை மீறிச் செய்யப்பட்டது.

இவர்கள் வாழ்த்தியதைக் காட்டிலும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மேலும் உருக்கமாக வாழ்த்துவராம். ஏனெனில், தம் முயற்சியேதும் இல்லாமல், எம்பெருமானது காரணமற்ற கருணையால் சிறப்பான அருள் பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்பதால், அவர்கள் பெற்ற ஞானமும் குறையற்றதாக இருக்குமாம். அவ்வாழ்வார்களிலும், ஸ்ரீ பெரியாழ்வாரே மங்களாசாசனத்தில் உயர்ந்தவராம். காரணம்? மேலே காண்போம்.




பெரியாழ்வாருடைய மங்களாசாசனத்தின் தனிச்சிறப்பு

Image Source: http://tamil.sampspeak.in/2019/07/aani-swathi-aani-garudan-and-sri.html


முதலாழ்வார்கள் காலத்தால் மூத்தவர்கள். ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களின் தலைவர். எனினும், பல்லாண்டு பாடிய ஸ்ரீ விட்டுசித்தருக்கே "பெரிய ஆழ்வார்" என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கான காரணங்களை ஆசாரியர்கள் விளக்கியுள்ளனர்:

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 18, 20
காரணம் # 1: "எம்பெருமானே! நாங்கள் காண வாராதே!" என்பார்!
 
மற்றுள்ள ஆழ்வார்கள் ஸ்ரீ பெரியாழ்வார்
எம்பெருமானைக் காணவேண்டும் எனத் துடிப்பர். எல்லோரும் காண எம்பெருமான் தானே முன் வந்து நின்றாலும், "அந்தோ! இவனுக்குக் கண்ணெச்சில் பட்டால் என் ஆவது!" என்று துடிப்பார். தாம் எம்பெருமானைக் கண்டு மகிழ்வதைக் காட்டிலும், எம்பெருமான் பாதுகாப்பாக இருப்பதே இவ்வாழ்வாருக்கு இன்றியமையாத பயனாம்.
எம்பெருமானின் வடிவழகிலும், குணங்களிலும் ஆழ்ந்து மயங்கிவிடுவர். எம்பெருமானின் அழகுக்கடலிலோ குணக்கடலிலோ மூழ்காமல், விழித்திருந்து, எப்போதும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவார். இதனால், அவரது இயற்கையான நிலையான "திருமாலால் காக்கப்படுபவர்" என்பது மாறினாலும், இவ்வாழ்வாருக்கு அது ஒரு பொருட்டு அல்ல.
எம்பெருமான் அருகில் இருக்கும்போது அன்புடன் புகழ்ந்து பாடுவர். எம்பெருமான் அருகே வராவிடில், பிரிவு ஆற்றாமையால் எம்பெருமானையும், சில நேரங்களில் அடியார்களையும் ["ஏன் கருடாழ்வாருக்குப் பறக்கத் தெரியவில்லையா?" என்பது போலக்] கோபிப்பர். "பல்லாண்டு பல்லாண்டு", "அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு" என்று மட்டுமே முழங்குவார்.
இவர்களை வாழச் செய்பவை: எம்பெருமானைக் காண்பது; தழைக்கச் செய்பவை: எம்பெருமான் வடிவழகையும் குணங்களையும் அனுபவிப்பது, அவனுக்குத் தொண்டு செய்வது, பல்லாண்டு பாடுவது. இவருக்கு வாழ்ச்சி அளிப்பதும், இவரைத் தழைக்கச் செய்வதும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவது மட்டுமே. திருப்பல்லாண்டு முழுவதும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவது மட்டுமே உள்ளது. எம்பெருமானுடைய 1000 திருநாமங்களைக் கூட அவனுக்குப் பல்லாண்டு பாடவே ஓதவேண்டும் என்கிறார் இவ்வாழ்வார்!
 
காரணம் # 2: காரணமே இல்லாவிடினும் தம் திருக்கண்களையே சந்தேகிப்பார்!
 
ஸ்ரீ பெரியாழ்வார் - ஸ்ரீ திருப்பல்லாண்டு - பாசுரம் # 1, 2
நற்குணக்கடலான ஸ்ரீ பெரியாழ்வார் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடியபோது, மற்றவர்களின் கண்களை மட்டுமல்ல, தம் திருக்கண்களையே அவர் நம்பவில்லை! "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்று தொடங்கி, எம்பெருமானுக்கும், பிராட்டிமார்களுக்கும், திருவாழியாழ்வானுக்கும் பல்லாண்டு பாடி வந்த ஸ்ரீ பெரியாழ்வார், "அந்தோ! நம் கண்ணெச்சில் படுமே!" என்றெண்ணி, தமது திருமுகமண்டலத்தையே திருப்பிக்கொண்டாராம்! அதனாலேயே "இப்பாஞ்சசன்னியம்" என்னாது "அப்பாஞ்சசன்னியம்" என்றாராம்!
 
காரணம் # 3: அச்சம் தவிர்க்கும் காரணங்களுக்கும் பல்லாண்டு பாடுவார்!
 
"ஆழ்வீர்! மல்லரை மாட்டிய எமது தோள்களைப் பாரீர்! மங்கலங்களுக்கெல்லாம் தெய்வமான திருமாமகள் பிரியாது வீற்றிருக்கும் எமது திருமார்பைப் பாரீர்! பகைவரை அடக்க அனலை உமிழும் எமது திருவாழியைப் பாரீர்! பகைவரை நடுங்கச் செய்ய முழங்கும் எமது திருச்சங்கைப் பாரீர்! அச்சம் தவிர்ப்பீர்!" என்று ஸ்ரீ பெரியாழ்வாரின் திருவுள்ளத்தை ஆற்ற எம்பெருமான் முயன்றான்.

ஆனால், ஸ்ரீ பெரியாழ்வாரோ, "மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு! அடியார்களும் நீயும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! திருமாமகளுக்கும் [நிலமாமகள், ஆயர்மாமகள் ஆகிய பிராட்டிமார்களுக்கும்] பல்லாண்டு! திருவாழியாழ்வானுக்கும் பல்லாண்டு! அந்தத் திருச்சங்காழ்வானுக்கும் பல்லாண்டு!" என்று எம்பெருமான் "நமக்கு இன்ன காரணங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது, ஆழ்வீர்!" என்று சொன்ன அதே காரணங்களுக்கும் சேர்த்தே பல்லாண்டு பாடிவிட்டார்!
 
காரணம் # 4: வெள்ளம் வடிந்த பின்னும் அணை கட்டுவார்!
 
என்றோ நடந்த எம்பெருமானின் திருவவதார நிகழ்ச்சிகளுக்கு, ஸ்ரீ பெரியாழ்வார் இன்று வயிறு பிடித்துப் பல்லாண்டு பாடிக் காப்பிடுவர். இத்தன்மையையே ஆசாரியர்கள் "வெள்ளம் வடிந்த பின்னும் அணை கட்டும்" தன்மை என்று போற்றுகின்றனர்.

ஒரு எடுத்துக்காட்டு:

ஸ்ரீ பெரியாழ்வார் - ஸ்ரீ திருப்பல்லாண்டு - பாசுரம் # 6
எம்பெருமான் ஸ்ரீ நரசிம்மமாக வந்து இரணியனின் குடலை அலட்சியமாகக் கிழித்து மாலையாக அணிந்துகொண்டான். இது நடந்தது முதல் யுகமான சத்திய யுகத்தில். இதை நினைத்து ஸ்ரீ பெரியாழ்வார், “திருவோணத் திருவிழவில் அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பாடுங்கோள்!" என்கின்றார்!

ஆழ்வாரின் இச்செயலுக்கு, "பலம் வாய்ந்த பிள்ளையைப் பற்றியே 'இவன் என்ன வம்புக்குப் போவானோ! இவனுக்கு என்ன நேருமோ!' என்று அன்னை அஞ்சுவாள். அதனாலேயே, சிங்கப்பிரானுக்குப் பல்லாண்டு என்கின்றார் ஆழ்வார்," என்று ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை அருளியுள்ளார். என்னே ஸ்ரீ பெரியாழ்வாரின் மாண்பு!

"சிங்கப்பிரான் தோன்றியது சுவாதி திருநட்சத்திரம் அன்றோ? பாசுரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் 'திருவோணம்' என்றது ஏன்? என்ற கேள்விக்கும் ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை விடையருளுகின்றார்: உண்மையான திருநட்சத்திரத்தைச் சொன்னால் யாரவது ஏவல் பில்லி சூன்யம் செய்துவிடுவார் என்பதால் ஆழ்வார் 'திருவோணம்' என்று மறைத்துச் சொல்கின்றாராம்! நம் போன்றோர் ஏவல் பில்லி சூன்யம் ஆகியவற்றிலிருந்து தப்புவதற்கு ஸ்ரீ சிங்கப்பிரானை வேண்டுவோம். அந்தச் சிங்கப்பிரானுக்கு ஏவல் பில்லி சூன்யம் செய்து விடுவரோ என்று ஸ்ரீ பெரியாழ்வார் அஞ்சுகின்றார். இவ்வாழ்வாரின் பெருமையைப் பேசி முடிக்க முடியுமா?
 
காரணம் # 5: கண் இமைக்காதவரையும் "உறங்காது எம்பெருமானைக் காப்பீர்!" என்பார்!
 
சுவர்க்கத்துத் தேவர்களும், ஸ்ரீ ஆதிசேடன், ஸ்ரீ கருடன் போன்ற வைகுந்தத்து அமரர்களும், நம்மைப் போல் கண்களை இமைப்பதில்லை, உறங்குவதும் இல்லை. இவர்களை வணங்கி நன்மையை வேண்டுவதே உலகத்தாரின் இயல்பு.

ஆனால், ஸ்ரீ பெரியாழ்வாரோ, 8 திக்பாலர்களையும், வைகுந்தத்து அமரர்களையும், "உறகல்! உறகல்!" என்று பாடி, "விழித்திருந்து எம்பெருமானுக்குக் காப்பு இடுமின்!" என முழங்குவார்:

ஸ்ரீ பெரியாழ்வார் - ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 5-2-10
காரணம் # 6: பரமனைக் காக்க, நம் போன்றோரைத் திருத்துவார்!
 
"பரமபதத்தில் எம்பெருமான் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை! மாறாக, எவருடனும் முகம் கொடுத்துப் பேசாமல், ஒரு வெறுமை தோற்ற எழுந்தருளியிருக்கின்றான்," என வேதாந்தம் கூறுகின்றது. காரணம்: அவன் பிள்ளைகளான நம் போன்றோரும் வைகுந்தத்தில் அந்தமில் பேரின்பத்தை அவனுடன் சுவைத்து மகிழ வேண்டியிருக்க, நம் வல்வினையால் இப்பிறவிக்கடலில் அகப்பட்டுத் தவிக்கின்றோம் என்பதே!

ஸ்ரீ பெரியாழ்வாரின் முக்கியமான குறிக்கோள்கள்:
  1. பல்லாண்டு பாடும் அடியவர்களின் கூட்டத்தை நன்கு வளர்த்து, எம்பெருமானுக்கு இடும் காப்பை நன்கு கனக்கச் செய்வது!
  2. எம்பெருமானின் இந்தத் தனிமையைப் போக்கி, அவனது திருமுகமண்டலத்தை மலரச் செய்வது!

இதனாலேயே, பல்லாண்டு பாடுவதில் மெய்யான விருப்பம் இல்லாத நம் போன்றோரையும் அழைத்து, "பல்லாண்டு பாடுதுமே!" என்று ஸ்ரீ பெரியாழ்வார் முழங்குகின்றார். தாம் மட்டுமே பல்லாண்டு பாடித் தமது ஆன்மாவை மட்டுமே கடைதேற்றாமல், நமக்கும் அதை ஒரு அருளிச்செயல் வடிவில் கொடுத்து, நம்மையும் பல்லாண்டு பாடவைத்த வள்ளல் ஸ்ரீ பெரியாழ்வார்.

"ஸ்ரீ பெரியாழ்வாரும், ஸ்ரீ இராமாநுசரும், 'எல்லோரும் வைகுந்தம் செல்லவேண்டும்!' என்று உரைப்பதன் காரணமே, 'பற்பல அடியார்களும் சேர்ந்து பல்லாண்டு பாடினால் எம்பெருமானுக்கு நலம்!' என்று எண்ணுவதாலேயே,” என்று ஆசாரியர்கள் விளக்கியுள்ளனர்!
 
காரணம் # 7: "பல்லாண்டு பாடுவதன் பயன் என்றென்றும் பல்லாண்டு பாடுவதே," என்பார்!
 
“பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே!” என்று ஸ்ரீ பெரியாழ்வார் திருவாக்கு. "பரமாத்மனைச் சூழ்ந்திருந்து" என்பதன் பொருள் "வைகுந்தத்தில் திருமாமணி மண்டபத்தில் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடப் பெறுவீர்!" என்பதே என ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை விளக்கியுள்ளார்.

"ஆபத்துக்கள் இருக்கும் இவ்வுலகில் பல்லாண்டு பாடினால், அதில் ஒரு நியாயம் உள்ளது. குறையொன்றுமில்லாத வைகுந்தத்தில் ஏன் பல்லாண்டு பாட வேண்டும்?" - இக்கேள்விக்கும் ஞானப்பெட்டகங்களான நம் ஆசாரியர்கள் விடையருளியுள்ளனர்!

பரமபதத்தில் திருவனந்தாழ்வான் [ஸ்ரீ ஆதிசேடன்], அடியார்கள் யாவரும் சேர்ந்து சாம கானம் பாடித் துதிக்கக் கேட்டு, "பலரும் எம்பெருமானைத் தாக்கப் படை திரட்டி வருகின்றனர்!" என அஞ்சி, நஞ்சுப்புகை உமிழ்வராம்! "இது பரமபதம். இங்கே எல்லோரும் மெய்யடியார். தீயோர் நெருங்கமுடியாத இடம்," என எண்ணுவது ஞான தசை. ஆனால், பேரன்பு மடை திறந்த பெருவெள்ளமெனப் பொங்கிவரும் தருணத்தில் ஞானத்திற்கு இடமில்லை - அது பிரேம தசை!

எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதே வேதப்பயனாம். மறைகளின் சாரமானது திருப்பல்லாண்டு. இதையே ஸ்ரீ மணவாள மாமுனிகளும் அருளியுள்ளார் - வேதத்திற்கு மங்களமான பிரணவம் [ஓம்காரம்] எப்படியோ, அப்படியே ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு மங்களமானதாம் திருப்பல்லாண்டு என்கின்றார்:

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 19



பெரியாழ்வார் பெற்ற பெற்றற்கரிய பெரும்பேறு

Image Source: WhatsApp Forward


இப்படி எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டே, எம்பெருமான் மிக உகந்த திருத்தொண்டான, திருநந்தவனம் அமைத்து, அதில் திருத்துழாய் வனம் அமைத்து, செண்பகம், இருவாட்சி போன்ற மலர்ச்செடிகளையும் வளர்த்து, எம்பெருமானுக்குப் பூமாலை தொடுத்துக் கொடுக்கும் நற்றவம் செய்து வந்த இவ்வாழ்வாருக்கு, வங்கக்கடல் கடைந்த மாதவன் நாடு புகழும் பரிசாக ஒரு பரிசளித்தான்: திருமாமகளின் நிழலான நிலமாமகளாம் பூமி தேவியே ஸ்ரீ பெரியாழ்வாருக்குத் திருமகளாராக, ஸ்ரீ பெரியாழ்வார் வளர்த்த நாற்றத்துழாய் வனத்திலேயே கிடைக்கச் செய்தான்!

அந்தத் தெய்வக் குழந்தயான கோதை ஆழ்வாரின் திருவளர்ப்பில், அவரைப் போலவே எம்பெருமானுக்கும், அவன் அடியார்களுக்கும் பல்லாண்டு பாடுபவளாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், உயர் அரங்கேற்க்கே கண்ணி உகந்து அளித்தவளாய், உலகம் நிறைந்த புகழால் திகழ, ஸ்ரீ பெரியாழ்வாரும் கோதையால் திருவரங்கம் பெரிய பெருமாளுக்கே மாமனார் ஆகும் பேறு பெற்றார்!

Image Source: Shared on Twitter





முடிவுரை

பரமனிடம் கலப்படமற்றதும், ஒப்பற்றதும் ஆகிய பேரன்பைப் பொழிவது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஸ்ரீ பெரியாழ்வாரின் பெருப்பெருத்த பெருமையை ஒரு சிறு கட்டுரையில் அடக்கிவிடமுடியாது. ஆழ்வார் திருமகளார் ஆண்டாளின் திருவுள்ள உகப்பிற்கு ஏதோ ஆன வரை சுவைத்தோம்.

இந்த அற்புதமான ஆழ்வாருக்கும், அவரது அருமையான திருமகளாருக்கும், அவர்களது அடியார்களுக்கும் பல்லாண்டு பாடி நம் நா பெற்ற பயனை அடைவோமாக.


எல்லோரும் இவ்வுலகில் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்ந்து அவ்வுலகில் பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்த மென்னடை அன்ன வயல் புதுவை ஆண்டாள் அருள் புரிவாளாக.

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment