Search This Blog

Friday 17 June 2022

ஸ்ரீ கருடாழ்வார் [பெரிய திருவடி] பெருமை

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
ஸ்ரீ கருடாழ்வார்


Image Source: https://www.ynotpics.com/downloads/garuda-idol-tirumala-2/


முன்னுரை
 
"திருமாலின் வாகனம்" என்றாலே நம் கண் முன்னே உடனே தோன்றுவது இறக்கைகளுடன் கூடிய ஸ்ரீ கருடாழ்வாரின் திருமேனியே.

திருமால் உறையும் திருக்கோயிலுக்கு உள்ளே சென்றால், முதன்முதலில் கொடிமரத்தை வணங்குகின்றோம். அக்கொடிமரத்தின் மேலே எழுந்தருளியிருப்பவர் எம்பெருமானின் வாகனமான ஸ்ரீ கருடாழ்வார். அதன் பின், ஸ்ரீ கருடாழ்வாரின் சந்நிதியில் அவரை வணங்கிய பின்னரே நாம் மேலே செல்கின்றோம்.

"பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம்" என்று சொன்னால், பலரும் கேட்கும் முதல் கேள்வி "கருட சேவை என்றைக்கு?" என்பதாக இருக்கும். கருட சேவை அன்று கூட்டம் அலை மோதும்.

  • திருவரங்கம் தங்கக் கருடன் சேவை மற்றும் வெள்ளிக் கருடன் சேவை
  • திருவேங்கடவன் பிரம்மோற்சவம் கருட சேவை
  • திருக்கச்சி ஸ்ரீ வரதர் வைகாசி பிரம்மோற்சவம் கருட சேவை
  • திருநாராயணபுரம் செல்வப்பிள்ளை பிரம்மோற்சவம் வைனமுடி கருட சேவை
  • ஸ்ரீ ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருவவதார உற்சவம் நவ திருப்பதி 9 கருட சேவை
  • திருநாங்கூர் ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் தை மாத 11 கருட சேவை
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் திருவவதார உற்சவம் 5 கருட சேவை
  • நாச்சியார் கோயில் கல் கருட சேவை
என்பவை மிகவும் புகழ் பெற்றவை அன்றோ?

அப்படிப்பட்ட ஸ்ரீ கருடாழ்வாரின் பெருமைகளை, ஆழ்வார்கள் அருளிய தீஞ்சுவைப் பாசுரங்களின் மூலமாகவும், அவற்றிற்கு ஆசாரியர்கள் அருளிய உரைகளின் மூலமாகவும் கற்று மகிழ்வோம், வாரீர்.




"எம்பெருமான், நான்மறைகளின் வடிவினராம் ஸ்ரீ கருடாழ்வாரை, வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பது 'எம்பெருமானே பரம்பொருள்' என்பதன் ஒரு அடையாளம்" என்று ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அருளியுள்ளார்கள். அதனைக் காண்போம்.


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 10-8-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரம் நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டுள்ளது. ஆயர்பாடியில் உள்ள ஒரு தலைவி நிலையில், கண்ணன் எம்பெருமானிடம் ஊடல் திறத்தில் பாடிய பதிகம். நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "பரகால நாயகி" என்று அழைக்கப்படுகின்றார்.

ஸ்ரீ பரகால நாயகியுடன் கண்ணன் எம்பெருமான் சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் காலம் கழித்தான். பின்னர், சிறிது நேரம் மறைந்துவிட்டான். எனவே, ஸ்ரீ பரகால நாயகிக்குப் பெருங்கோபம். சிறிது நேரம் சென்ற பின், மீண்டும் கண்ணன் எம்பெருமான் ஸ்ரீ பரகால நாயகி இருக்கும் இடம் தேடி வருகின்றான். அவளது கோபத்தை ஆற்ற முயல்கின்றான். அவள் இல்லத்துக் கதவின் பின்னே வந்து நிற்கின்றான். அவளோ "இது என்? இது என்? இது என்? ஓ!" [எதற்கு வந்தீர்? எதற்கு வந்தீர்? எதற்கு வந்தீர்?] என்று கோபத்துடன் கேட்கின்றாள்.

"கருளக் கொடி ஒன்று உடையீர்! தனிப் பாகீர்!" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:

கதவின் பின்னே வந்து நின்ற கண்ணன் எம்பெருமான், கள்ளத்தனத்துடன் மெதுவே ஸ்ரீ பரகால நாயகியின் இல்லத்தின் உள்ளே புகுந்தான். இந்தச் சூழலிலும் அவனது தாமரைக்கண்கள் தயிர்ப்பானையைத் தேடி, அதனைக் காணாமல் இருண்டன. இதை உணர்ந்த ஸ்ரீ பரகால நாயகி, மேலும் கோபம் கொண்டு கேட்கின்றாள்: "யாருக்கும் தெரியாமல் நீர் ஒன்றைச் செய்துவிட்டுத் தப்பிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்குமோ? வேத வடிவினரான ஸ்ரீ கருடாழ்வாரைக் கொடியாக உடையவர் நீரே அன்றோ? வேறு ஒருவர் அந்தத் தெய்வப் பறவை மீது பாகனாக ஏறி நடத்த முடியுமோ? அதைக் கொண்டே வந்திருப்பது நீர் என்று அறியலாமே!"




ஸ்ரீ கருடாழ்வார் எம்பெருமானுக்குச் செய்யும் தொண்டுகள் யாவை?


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 15
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இதற்கு முந்தைய பதிவில், "ஆழ்வார்கள் போற்றிய திருவனந்தாழ்வான்" என்ற கட்டுரையில், திருவனந்தாழ்வான் என்கிற ஸ்ரீ ஆதிசேடன் எப்படி எம்பெருமானுக்குப் பற்பல தொண்டுகள் புரிகின்றார் என்பதை ஆசாரியர்கள் எப்படி விளக்கியருளினார்கள் என்று கண்டோம். அதே போல, ஸ்ரீ கருடாழ்வார் செய்யும் முக்கியத் தொண்டுகளையும் விளக்கியருளியுள்ளனர்.

"புட்கொடி உடைய கோமான்" என்பதன் உரையில் ஆசாரியர் தெரிவிப்பது:

எம்பெருமானே ஸ்ரீ கருடாழ்வாரைத் தமது கொடியாகக் கொண்ட கோமான். அந்தக் கோமானுக்கு ஸ்ரீ கருடாழ்வார் ஒரு சேவகனாகவும், நண்பனாகவும், வாகனமாகவும், ஆசனமாகவும், கொடியாகவும், விதானமாகவும் தொண்டுகள் புரிகின்றார். எம்பெருமானின் திருவடிகள் ஸ்ரீ கருடாழ்வார் மீது படுவதால், ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமேனியில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஸ்ரீ கருடாழ்வார் மேலும் ஒளி பெறுகின்றார்!




ஸ்ரீ கருடாழ்வாரின் திருமேனி எழில் எத்தகையது என்பதைக் காண்போம்.


ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 57
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்தில் "பொலிந்த கருடன்" என்ற சொற்றொடர் உள்ளது - இதற்கான உரையில், "தங்க மயமாக, தகதகவென்று மின்னும் மேரு மலைபோல ஸ்ரீ கருடாழ்வார் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்கின்றார். அவர் மீது எம்பெருமான் வீற்றிருப்பது, அந்தத் தங்க மேரு மலை மீது கரிய மழை மேகம் வீற்றிருப்பது போல உள்ளது. இக்காட்சியால் ஸ்ரீ கருடாழ்வார் மிகவும் பொலிந்து காணப்படுகின்றார்," என்று ஆசாரியர் அருளியுள்ளார்.




ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 17
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"இருஞ்சிறைப் புள்" என்பதற்கான உரையில், ஆசாரியர் மேல்வரும் தகவல்களை அருளியுள்ளார்:

ஸ்ரீ கருடாழ்வாரின் சிறகுகள் மிகவும் பெரியதாக விளங்குகின்றன. எம்பெருமான், ஸ்ரீ கருடாழ்வாரின் இருபுறமும் தனது திருவடிகளை வைத்து, அவரை நடத்துகின்றான்.

எம்பெருமானின் திருவடிகளைத் தமது இரு திருக்கரங்களாலும் தாங்கிப் பறப்பதால், ஸ்ரீ கருடாழ்வாருக்குப் "பெரிய திருவடி" என்று திருநாமம் ஏற்பட்டது. தம் திருக்கைகளால் அத்திருவடிகளைப் பிடித்து, "எம்பெருமானின் திருவடிகளே நீங்கள் சரண் அடைய வேண்டிய இடம்" என்று நமக்குக் காட்டித் தருபவர் ஸ்ரீ பெரிய திருவடி நாயனார்.

எனவே, தங்கமென மின்னும் திருமேனியும், மிகவும் பெரியவைகளும், மிக அழகானவைகளுமாகிய சிறகுகளை உடையவர் ஸ்ரீ கருடாழ்வார் என்று தெரிகின்றது.




எம்பெருமானுக்குத் தொண்டுகள் புரியும்போது ஸ்ரீ கருடாழ்வாரின் மனப்பான்மை எத்தகையது என்பதைக் காண்போம்.


ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 1-8-1
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"ஓடும் புள்" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை:

எம்பெருமானைத் தாங்கும்போது ஸ்ரீ கருடாழ்வாருக்கு எந்த வித வலியோ அல்லது சுமையோ தெரியாது - அரசன் தொடுவதை அவனது பட்டத்து அரசி விரும்பி ஏற்பது போல, எம்பெருமானின் திருவடி தம்மைத் தீண்டுவதை ஸ்ரீ கருடாழ்வார் மிகவும் உகப்புடன் ஏற்கின்றார்.

எம்பெருமான் ஸ்ரீ கருடாழ்வார் மீது ஏறும்போது:
  1. இந்தக் காட்சியைக் காணும் வைகுந்தவாசிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது

  2. ஸ்ரீ கருடாழ்வாருக்கு, "நமது ஆன்மாவின் இயற்கைத் தன்மை நிறம் பெற்றது" என்ற பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது




ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 4-10-7
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
குறிப்பு:
  1. முகலாயர்களின் படையெடுப்பின் போது, 108 திருத்தலங்களில் ஒன்றான ஆழ்வார் திருநகரி என்கிற திருக்குருகூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ நம்மாழ்வாரின் திருமேனியை எடுத்துக் கர்நாடக மாநிலத்தில் ஒளித்து வைக்கும்படி நேர்ந்தது. பிறகு, வெகு காலம் கழித்து, ஒரு கருடப் பறவையின் உதவியால், ஸ்ரீ நம்மாழ்வாரின் திருமேனியை ஒளித்துவைத்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

  2. இதனால், இன்றும் ஆழ்வார் திருநகரி திருத்தலத்தில் பட்சிராசன் ['பக்ஷிராஜன்'] என்ற ஸ்ரீ கருடாழ்வாருக்குச் சிறப்பு மரியாதைகள் செலுத்தப்படுகின்றன. ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ கருடாழ்வாரின் திருவவதார நன்னாள். இது ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் 10 நாள் உற்சவமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

  3. இவ்வூர் மக்கள் தங்கள் வேண்டுதல்களை ஸ்ரீ கருடாழ்வாரின் திருவடிகளிலேயே விண்ணப்பிக்கின்றனர். வேண்டிய வரம் கிடைத்த பின், ஸ்ரீ கருடாழ்வாருக்கு அமுதக்கலசங்கள் [மோதகம்] பிரசாதம் சமர்ப்பித்து நன்றி செலுத்துகின்றனர்.

இப்பாசுரம் ஆழ்வார் திருநகரி திருத்தலத்திற்காக ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய பாசுரம். இதில் ஸ்ரீ கருடாழ்வாரின் பெருமை பேசப்பட்டுள்ளது.

"ஆடு புட்கொடி" என்பதற்கு ஆசாரியர் இரண்டு மிகவும் பொருத்தமான பொருள்களை உரைக்கின்றார்:
  1. "ஆடு" என்ற சொல்லுக்கு இங்கே "வெற்றி" என்று பொருள் கொண்டால், "என்றுமே வெற்றியுடன் திகழும் ஸ்ரீ கருடாழ்வார்" என்று ஒரு பொருள் கிட்டும்

  2. "ஆடு" என்ற சொல்லுக்கு "அசைதல் / நாட்டியம் ஆடுதல்" என்று பொருள் கொண்டால், "எம்பெருமானுக்குத் தொண்டு புரியப் போகும் மகிழ்ச்சியில் ஸ்ரீ கருடாழ்வார் ஆனந்தக் கூத்தாடுகின்றார்" என்று இன்னொரு பொருள் கிட்டும்

Image Source: http://anudinam.org/wp-content/uploads/2014/08/aazhwar-thirunagari-aadi-swathi-utsavam-6.jpg





ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 6-8-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
குறிப்பு: 108 திருத்தலங்களில் திருநறையூர் [நாச்சியார் கோயில்] என்ற திருத்தலத்தில் "ஸ்ரீ கல் கருடன்" என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கருடாழ்வாரை நம்மில் பலரும் அறிந்திருப்பர் [108 திவ்யதேச பெருமைகள் - திருநறையூர் நாய்ச்சியார் கோயில்].

இப்பாசுரம் அந்தத் திருநறையூர் திருத்தலத்திற்காக ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிய பாசுரம். இதில் ஸ்ரீ கருடாழ்வாரின் பெருமை பேசப்பட்டுள்ளது.

சென்ற பகுதியில் நாம் கண்டது போலவே இங்கும் - "தூ வாய புள்" என்பதற்கு ஆசாரியர் இரண்டு மிகவும் பொருத்தமான பொருள்களை உரைக்கின்றார்:
  1. "எம்பெருமான் திருவடிகளால் தீண்டி எப்படிப் பறக்கவேண்டும் என்று நியமிக்கும் போது, 'எங்கள் அம்மை நாயனாருடைய திருமேனியின் மென்மை இருக்கும் படி என்!' என்று எம்பெருமானின் பெருமையை ஏத்தும் தூய திருவாயை உடைய ஸ்ரீ கருடாழ்வார்" என்று ஒரு பொருள்

  2. "தூ வாய" என்பதற்கு "குற்றமற்ற சொல்லாகிய வேதம்" என்று பொருள் கொண்டால், அந்த வேதமே உருவான புள் ஆகிய பெரிய திருவடி என்று இன்னொரு பொருள்

Image Source: http://anudinam.org/wp-content/uploads/2013/08/Kal-Garudan-Vanjulavalli-Thayar-and-Srinivasa-Perumal.jpg





"ஆகில், ஸ்ரீ கருடாழ்வார் தம் மகிழ்ச்சிக்காக எம்பெருமானுக்குத் தொண்டு புரிபவரோ?" எனில், இதற்கும் ஆழ்வார்கள் பாசுரங்களில் சரியான விடை உண்டு.


ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 14-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
ஸ்ரீ கருடாழ்வார் மிகவும் பெரிய சிறகுகள் உடையவர் என்றும், எம்பெருமானுக்கு "விதானமாகவும்" தொண்டு புரிகின்றார் என்றும் முன்னமே கற்றோம் அல்லவா?

இதில் நம் பட்டர்பிரான் கோதை அருளுவதாவது:

கண்ணன் எம்பெருமான் வெயிலில் விளையாடும் போது, "குழந்தையின் திருமேனிக்கு எக்குறையும் வரக்கூடாதே!" என்ற பரிவினால், ஸ்ரீ கருடாழ்வார் தமது இருஞ்சிறகுகளை நன்கு விரித்து, கண்ணபிரானுக்கு ஒரு விதானமாக இருந்து, நிழல் கொடுத்தபடி, கண்ணன் செல்லும் வழியெல்லாம் மேலே பறந்துகொண்டே வருவாராம்.

இங்கே "வினதை சிறுவன்" எனபதற்கு உரை மிகவும் அழகாக அமைந்துள்ளது - "ஸ்ரீ கருடன் வினதைக்கு மட்டும் சிறுவன் அன்று, எனக்கும் அவன் மகனாம்" என்று திருவுள்ளம் உகந்து ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் இங்கே அருளுவதாக ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை அருளியுள்ளார்!

குறிப்பு: கோதை பிறந்த ஊரான சீராரும் வில்லிபுத்தூரில், எம்பெருமான் ஆழ்வார் திருமகளார் ஆண்டாளைத் திருமணம் செய்துகொள்வதற்காக, எம்பெருமானை மிக வேகமாக மின்னு புகழ் வில்லிபுத்தூருக்குக் கொண்டு வந்து சேர்த்த ஸ்ரீ கருடாழ்வார், இன்றும் ஸ்ரீரங்கமன்னாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக, அவருடனே சரி சமமாக ஒரே வேதிகையில், கைகூப்பிய நிலையில் நின்றபடி, நமக்குச் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ கருடாழ்வார் எம்பெருமானுக்கு ஒரு நண்பனாகவும் தொண்டு புரிகின்றார் என்று முன்னரே கற்றோம் அல்லவா?

Image Source: https://www.divyadesam.com/photofeature/thiru-aadi-pooram/sri-andal-sri-rangamannar-srivilliputtur-garudan.shtml





"இப்படி எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவுடன் தொண்டுகள் பல புரியும் ஸ்ரீ கருடாழ்வார் நம்மையும் காப்பரோ?" என்ற கேள்விக்கு ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களில் விடை காண்போம்.


ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 92
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"கொடி மேல் புள் கொண்டான்" என்பதற்கு உரை:

[தாமரை மலரில் வைக்கவேண்டிய திருவடிகளைக் கொண்டு தீயவனான கம்சன் மீது வைத்து, அவனைக் கொன்று, தேவர்களை மகிழ்வித்தான்.] எம்பெருமான் எல்லோரையும் காத்தருளவே கருடக் கொடியை உடையவனாக இருக்கின்றான். [அப்படிப்பட்டவனின் திருநாமங்களை ஏத்துங்கள். ஒரே ஒரு முறை நீங்கள் சொல்லி மறந்தாலும், அவன் அதனை மறவாமல் உங்களுக்கு அனைத்து வரங்களையும் விரைவில் அருள்வான்.]

இதே கருத்தினை ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் பாடி உள்ளார்.




ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம் - பாசுரம் # 19
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இது "திருச்சந்தவிருத்தம்" என்ற திவ்ய பிரபந்தத்தில் 19-ம் பாசுரம். இதற்கு முன்னால் இருக்கும் 18-ம் பாசுரத்தில் ஆழ்வார், "நீ ஏன் திருப்பாற்கடலில் சயனித்துக் கொண்டிருக்கின்றாய்?" என்று எம்பெருமானைப் பார்த்து வினவுகின்றார். அதற்கு எம்பெருமான், "ஆழ்வீர்! எல்லோரையும் காத்தருளவே இங்கே இருக்கின்றேன்," என்ன, அதற்கு மறுபடியும் ஆழ்வார் தொடுக்கும் கேள்விக்கணையே இப்போது நாம் பார்க்கும் பாசுரம்.

இப்பாசுரத்தில் "புட்கொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால்" என்ற சொற்றொடர் உள்ளது - இதற்கான உரையில் ஆசாரியர் அருளியுள்ளவை பாரீர்:

"நீ எல்லோரையும் காத்தருள்வாய் என்பதைப் பறைசாற்ற முன்பே பல அற்புத செயல்களைச் செய்துள்ளாய். அப்படி இருக்க, திருப்பாற்கடலில் வந்து இக்குளிரில் சயனிக்க வேண்டுமா?" என்கிறார் ஆழ்வார்.

அவ்வாறு செய்த அற்புதச் செயல்களாக, எம்பெருமான் அன்னப் பறவையாக வந்து வேதம் ஓதியது முதல் சிலவற்றைப் பட்டியலிடுகிறார். அவற்றுள், எம்பெருமான் கருடக் கொடியைப் பிடித்தபடி இருப்பதையும், கருடனை வாகனமாகக் கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, எம்பெருமான் கருடக் கொடியைப் பிடித்து இருப்பது, ஆபத்து அடைந்த அனைவருமே தன்னிடம் வந்து நன்மை அடையலாம் என்பதைத் தெரிவிக்கவேயாம்! "புட்கொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால்" என்று பாசுர வரிகள் இருப்பதால், "கருடக்கொடியைப் பிடித்துக் கொண்டதால் மட்டும் ஆகப்போவது என்ன?" என்று வினவுபவர்களுக்கும் ஐயம் தீரும்படி, அந்தக் கருடனை வாகனமாகவும் எம்பெருமான் கொண்டுள்ளான் என்கிறார் ஆழ்வார். "நீ எல்லோரையும் காத்தருள்பவன் என்று உணர இதுவே போதுமே! இப்படி உன் திருமேனி குளிரில் வாடும்படித் திருப்பாற்கடலில் வேறு வந்து சயனிக்கவேண்டுமோ?" என்று ஆழ்வார் பரிவுடன் வினவுகின்றார்.




"சரி, கருடனை வாகனமாகக் கொண்டதால் மட்டும் எம்பெருமான் எல்லோரையும் காத்தருள்வார் என்பது எப்படி விளங்கும்?" என்ற கேள்விக்கு மேலும் சில பாசுரங்களைக் காண்போம்.


ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 9-2-6
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"பொன்மலை போன்ற ஸ்ரீ கருடாழ்வார் மீது கருமுகில் போன்ற எம்பெருமான் பறந்து செல்கின்றான். இவன் [நவ திருப்பதிகளில் ஒன்றான] திருப்புளிங்குடி என்ற திருத்தலத்தில் 'காய்சின வேந்தன்' என்ற திருநாமத்துடன் உறைபவன். காய்கின்ற சினத்தால் அடியார்களின் எதிரிகளை அழிப்பவன்.

அவனைத் தாங்கிப் பறக்கும் பறவையோ 'காய்சினப் பறவை' - அடியார்களின் எதிரிகளை அழிக்க எம்பெருமானே சற்று தயங்கினாலும், அடியார்களின் எதிரிகளை அழிக்கச் சிறிதும் தயங்காத ஸ்ரீ கருடாழ்வார் "காய் சினப் பறவை" எனப்படுகின்றார்," என்று ஆசிரியர் உரையில் அருளியுள்ளார்.

இதிலிருந்து, அடியார்களின் எதிரிகளை அழிப்பதில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு உள்ள ஊற்றம் நன்றாக வெளிப்படுகின்றது.




ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 1-8
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரத்தில் "புறஞ்சூழ் காப்ப" என்ற சொற்றொடரால், எம்பெருமானை அவரது பஞ்சாயுத ஆழ்வார்களும், ஸ்ரீ கருடாழ்வாரும் சூழ்ந்திருந்து காப்பர் என்று ஆழ்வார் அருளியுள்ளார். "ஆழ்வார்கள் போற்றிய திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும்" என்ற கட்டுரையில் இது குறித்து முன்பே பதிவு செய்திருந்தேன்.

இங்கே, ஸ்ரீ கருடாழ்வாரைக் குறிக்கும்பொழுது ஆழ்வார், "கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக் கடும் பறவை" என்று அருளியுள்ளார். இதன் பொருள் ஆவது: "காற்றைப் போன்ற மிகவும் வேகமான நடையை உடைய கருடன் என்கிற வெற்றிப் பறவை" என்பதாம்.

எம்பெருமான் அடியார்களைக் காக்க மிக வேகமாகச் செல்லும் பொழுது, அவனது திருவுள்ளத்திற்கு ஏற்ற வேகத்துடன் தாமும் செல்ல வேண்டும் என்பதற்காகவே காற்றின் நடை போன்ற அதி வேகமான நடை உடையவர் ஸ்ரீ கருடாழ்வார். ஸ்ரீ கருடாழ்வார் எப்போதுமே வெற்றி வாகை சூடும் பறவை என்பதால், அவர் எப்பொழுதும் அடியார்களைக் காப்பதில் வெற்றியையே அடைவார் என்பதும் புலப்படுகின்றது.




ஸ்ரீ கருடாழ்வார் நம்மைக் காப்பதில் பெரும் ஊற்றமும் வேகமும் உடையவர் என்று கண்டோம். ஒரு ஆன்மா மோட்சம் அடையும் தருவாயில் இருக்கும்போது, எம்பெருமான் அவ்வான்மாவை ஸ்ரீ கருடாழ்வார் மீது ஏறி வந்து அழைத்துச் செல்கின்றான் என்பதையும் காண்போம்.


ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 5-4-2
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இது ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய இறுதிப் பதிகத்தில் உள்ள பாசுரம்.

எம்பெருமான் ஸ்ரீ பெரியாழ்வாரைத் திருநாடு என்கிற வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்ல ஸ்ரீ கருடாழ்வார் மீது ஏறி அவர் முன் எழுந்தருள, "கருடப் பறவை ஏறுபவனே! இதைக் கொண்டே நீயே பரமபுருடன் என்பது தெரிகின்றது! நீ எல்லோரையும் காப்பவன் என்று புரிகின்றது! தாழ்ந்தவனான என்னை நீ ஆட்படுத்திக் கொண்ட பின், இப்பிறவிக்கடல் வற்றி ஏற்றதைப் பெற்றது; அடியேனின் இருள் தரும் பாபங்கள் வெந்துபோயின; ஞானமாகிய அமுத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது," என்று ஆழ்வார் உருகுகின்றார்.

இதே ஸ்ரீ பெரியாழ்வார், மதுரையில் "எம்பெருமானே பரம்பொருள்" என்று நிலைநாட்டிய பின், அவரை யானை மீது ஏற்றி ஊர்வலம் வர, அப்போதும் இதே போல, எம்பெருமான் ஸ்ரீ கருடாழ்வார் மீது ஏறி, அங்கே எல்லோரும் காண எழுந்தருள, ஸ்ரீ பெரியாழ்வார் அப்போது மிக்க புகழ் வாய்ந்த "திருப்பல்லாண்டு" பாசுரங்களை அருளினார் என்பது இங்கே நினைக்கத்தக்கது.




ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஆர்த்தி பிரபந்தம் - பாசுரம் # 52
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம்
 
இப்பாசுரம் "ஆர்த்தி பிரபந்தம்" என்ற பிரபந்தத்தில் உள்ள பாசுரம். இவை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் தம்முடைய இறுதிக் காலத்தில், தம்முடைய திருவவதாரக் குறிக்கோள்களைச் செவ்வனே முடித்த பின், ஸ்ரீ இராமானுசரிடம் தம்மை வைகுந்தத்திற்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் உருகி வேண்டிய பாசுரங்கள்.

"எந்தை எதிராசர் ஆகிய ஸ்ரீ இராமானுசரின் இன்னருள் அடியேனுக்கு என்றும் இருப்பதால், அடியேன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது, தன்னுடைய திருமேனி எழில் எல்லாம் அடியேனுக்கு மகிழ்வுடன் காட்ட, பொன்மலை மீது வீற்றிருக்கும் கருமுகில் போல, எம்பெருமான் ஸ்ரீ கருடாழ்வார் மீது எழுந்தருளி, அடியேனைத் தன்னுடன் வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்வான் என்பதில் ஐயமேதும் இல்லை," என்று இப்பாசுரத்தில் முழங்குகிறார்.




முடிவுரை
 
'ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில், ஆழ்வார்களும், ஆசாரியர்களும் பெரிய திருவடி என்று போற்றப்படும் ஸ்ரீ கருடாழ்வாருடைய பெருமைகளை எவ்வாறு வெளியிட்டருளியுள்ளனர் என்பதைச் சில பாசுரங்கள் வாயிலாகச் சுவைத்தோம். நாமும் வினதை சிறுவன் ஆகிய பொலிந்த கருடனுக்குப் பல்லாண்டு பாடி மகிழ்வோமாக. பொலிக! பொலிக! பொலிக!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment