ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் திருச்சங்காழ்வான் திருவாழியாழ்வான் |
Image Source: https://www.kindpng.com/imgv/hiTohJb_symbol-of-tirupati-balaji-hd-png-download/ |
முன்னுரை |
ஒருவர் நம்மிடம் "திருமாலின் சின்னங்கள்" என்று மட்டுமே சொன்னாலும் போதும் - பெரும்பாலும் நம் நினைவிற்கு முதலில் வருவது திருமாலின் திருக்கைகளில் மிளிரும் திருச்சங்கமும் திருச்சக்கரமும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமாலின் இத்தெய்வச் சின்னங்களைப் பற்றி ஆழ்வார்கள் அருளாமல் இருப்பரோ?
எம்பெருமானார் தரிசனம் என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்பெருமானின் திவ்ய ஆயுதங்களை "திரு ஆயுத ஆழ்வார்கள்" அல்லது "திவ்ய ஆயுத ஆழ்வார்கள்" அல்லது "பஞ்சாயுத ஆழ்வார்கள்" என்று அழைப்பதே மரபு. வெறும் "சங்கு சக்கரம்" என்னாமல் "திருச்சங்காழ்வான்" என்றும் "திருச்சக்கரத்தாழ்வான்" அல்லது "திருவாழியாழ்வான்" என்று வழங்குவது பெரியோர்கள் வகுத்த மரபு. திருச்சங்கம், திருச்சக்கரம் என்றும் அழைப்பதுண்டு. திருச்சங்காழ்வானைப் பற்றியும் திருவாழியாழ்வானைப் பற்றியும் ஆழ்வார்கள் நமக்கு எடுத்துச் சொன்னவற்றுள் சில அற்புதமானவற்றை ஆசாரியர்களின் உரைகளைத் திருவிளக்காகக் கொண்டு கற்போம், வாரீர்! |
திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் "எம்பெருமானே பரம்பொருள் என்பதன் அடையாளம்" என்று ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அருளியுள்ளார்கள். அதனைக் காண்போம்.
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 2-8-4 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரம் நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டுள்ளது. நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "பரகால நாயகி" என்று அழைக்கப்படுகின்றார்.
108 திவ்யதேசங்களுள் திருவட்டபுயகரம் என்கிற திருத்தலத்தில் இப்பாசுரம் பாடப்பட்டது. அங்கு உள்ள எம்பெருமான் எட்டுத் திருக்கைகளில் எட்டு திவ்ய ஆயுத ஆழ்வார்களைப் பிடித்த வண்ணம் அருள்பாலிக்கின்றார். பரகால நாயகி அவரைக் கண்டு, "அன்று கோவர்த்தன மலையை எடுத்து, கல்மாரி தடுத்து, ஆநிரை காத்து, கம்சனின் யானையான குவலயாபீடத்தைச் செற்ற கண்ணனோ இவர்?" என்று வியந்த வண்ணம் இருக்க, எம்பெருமானும், வேதங்கள் முழங்க, தன்னுடைய திருச்சுடராழியையும் திருவெண்சங்கத்தையும் ஏந்தி ஒரு பெரும் சுடரொளியாய் மின்னிக் காட்சி அளிக்க, பரகால நாயகியும், "நீர் பரமபத நாதனோ?" என்று வினவ, எம்பெருமான் "[நான்] அட்டபுயகரத்தேன்" என்று பதில் அளிக்கின்றார். இங்கே, ஸ்ரீ பரகால நாயகி எம்பெருமானைப் "பரமபதநாதன்" என்று அடையாளம் கண்டமை, எம்பெருமான் தன்னுடைய திருச்சுடராழியையும் திருவெண்சங்கத்தையும் மிக்க ஒளி தோற்ற ஏந்தி நின்றபோதே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
பெரும்பாலும், எம்பெருமானின் திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் அவனது திருக்கைகளில் எழுந்தருளி இருப்பதை மட்டுமே நாம் எண்ணுகின்றோம். அவனுடைய திருவடிகளிலும் திருச்சங்கு திருச்சக்கர ரேகைகள் உள்ளன - இவை அவனே பரம்பொருள் என்று அடையாளப்படுத்துகின்றன. ஸ்ரீ இராமானுசன் அடியார்களின் தோள்களிலும் ஒற்றப்படுகின்றன.
|
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 1-7-6 | ||
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் | ||
முதல் இரண்டு வரிகளின் பொருள்:
கண்ணபிரான் ஆகிய சிறு குழந்தைக்குத் திருவடிகளில் ஒரு காலில் திருச்சங்க ரேகையும், இன்னொரு காலில் திருச்சக்கர ரேகையும் உள்ளன. இவை பரம்பொருளான புருடோத்தமனின் சின்னங்கள். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, அவன் திருவடி பதித்த இடங்களிலெல்லாம் திருச்சங்கு திருச்சக்கர முத்திரைகள் தரையில் எழுதினாற் போல் இருக்க, இதனை ஸ்ரீ யசோதைப் பிராட்டி [ஆகிய ஸ்ரீ பெரியாழ்வார்] கண்டு மகிழ்கின்றார். இதே ஆழ்வார் திருப்பல்லாண்டு அருளும்போது பின்வருமாறு அருளியுள்ளார்:
இன்றும், ஸ்ரீ இராமானுசன் அடியார்கள் திருத்தோள்களில் திருச்சங்கம் மற்றும் திருச்சக்கர அடையாளங்கள் ஒற்றப்படுகின்றன. அவ்வடையாளங்களை ஒற்றப் பயன்படுத்தப்படும் திருக்கோல்களும் திருவாழியாழ்வார், திருச்சங்காழ்வார் என்றே அழைக்கப்படுகின்றன. இதனால், திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் எம்பெருமானுக்கு மட்டுமே அன்றி அடியார்களுக்கும் அடையாளங்களாம். |
எம்பெருமானுக்குத் திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் திருவாயுதங்கள் மட்டுமல்ல - திருவாபரணங்களும் கூட. அவனுடைய அளவற்ற செல்வத்தின் அடையாளங்களுமாம். இதனைக் காண்போம்.
|
ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 28, 31 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"கைய வலம்புரியும் நேமியும்" என்பதன் உரையில், "ஸ்ரீ பாஞ்சஜன்யமும், ஸ்ரீ சுதர்சனமும் உன் திருக்கையில் உள்ளன - நீயே அகில செல்வங்களுக்கும் அதிபதி என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி வேண்டுமோ?" என்கிறார் ஆசாரியர்.
இதே ஆழ்வார் மற்றொரு பாசுரத்தில் "புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி" என்று அருளியுள்ளார் - இதற்கான உரையில் ஆசாரியர் கூறுவது: "இப்பாசுரத்தில் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் போற்றப்பட்டுள்ளது. இரணியன் 'ஆயுதங்களால் எனக்கு மரணம் கூடாது' என்று வரம் பெற்று இருந்ததால், எம்பெருமான் அவன் மார்பினைப் பிளந்தபோதும், தன்னுடைய திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் இரணியன் உடலில் படாமல் இருக்க அவ்வாயுதாழ்வார்களை நன்கு பிடித்துக் கொண்டான்! அவ்வாயுதாழ்வார்களும், எம்பெருமானின் திருவுள்ளம் அறிந்து, அவனுக்குத் திருவாபரணமாக இருந்தனரே ஒழிய, அவ்வசுரனை மாய்ப்பதில் தொண்டு புரியவில்லை," என்பதாம்! இதிலிருந்து, திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் எம்பெருமானின் திருவுள்ளக் குறிப்பறிந்து செயல்படும் மெய் அடியார்கள் என்பதும் புலப்படுகின்றது. மகாபாரதப் போரில் அர்ச்சுனனைக் காக்க எம்பெருமான் ஆதவனைத் தம் திருவாழியாழ்வானை ஏவி மறைத்தனன். "இது எப்படி நடக்கும்? திருவாழியாழ்வான் "சஹஸ்ர ஆதித்ய சங்காசம்" [ஆயிரம் கதிரவன்களின் ஒளியைக் கொண்டவர்] என்றல்லவோ நாம் படிக்கின்றோம்? அப்பொழுது இருள் ஏற்பட வாய்ப்பே இல்லையே!" என்ற கேள்வி எழும். இதற்கான விடை: இத்தருணத்தில், எம்பெருமான் திருவுள்ளக் குறிப்பை அறிந்த திருவாழியாழ்வான், கறுத்த நிறத்தை எடுத்துக்கொண்டபின் ஆதவனை மறைத்தார். அதனால், சூரியன் மறைந்தது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது! |
இரணியனைக் கொல்லத் தொண்டு புரியப் போவதில்லை என்றபோது திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் எம்பெருமானைப் பின்தொடரவேண்டிய அவசியமென்ன? இதற்கும் ஆழ்வார் பாசுரத்தில் விடை உண்டு.
|
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 1-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தில் "புறஞ்சூழ் காப்ப" என்ற ஒரு சொற்றொடரை ஆழ்வார் அருளியுள்ளார். "பஞ்சாயுதங்கள்" என்று போற்றப்படும் ஸ்ரீ சுதர்சனம் என்ற திருச்சக்கரம், ஸ்ரீ பாஞ்சசன்னியம் என்கிற திருச்சங்கு, ஸ்ரீ சார்ங்கம் என்கிற திருச்சிலை [வில்], ஸ்ரீ கௌமோதகி என்கிற திருத்தண்டு [கதை], ஸ்ரீ நந்தகம் என்கிற திருவாள் மற்றும் ஸ்ரீ கருடாழ்வார் ஆகிய அறுவரும் நாற்புறமும் சூழ்ந்து எம்பெருமானைக் காப்பர் என்று தேறுகின்றது. எம்பெருமானிடம் உள்ள பரிவால் அவனது எல்லையற்ற சக்தியை மறந்து அவனைக் காக்க முற்ப்பட்டனர்! என்னே ஒரு தூய அன்பு!
இதனாலேயே, திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் எம்பெருமானைப் பிரியாது பின்தொடர்வர். "அவனுக்கு என்ன நேருமோ?" என்று அஞ்சி அவனைக் காக்க முற்படுவர்! ஸ்ரீராம அவதாரத்திலும் திருச்சங்காழ்வான் ஸ்ரீ பரதாழ்வானாகவும், திருவாழியாழ்வான் ஸ்ரீ சத்ருக்னாழ்வானாகவும் திருவவதாரம் செய்தனர் என்பர் பெரியோர். இது குறித்து மேலும் சில ஆழ்வார்கள் அருளியுள்ள பாசுரங்களைக் காண்போம். |
ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 71 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி" என்பதற்கு உரை:
எம்பெருமான் இந்த உலகத்தைத் திரிவிக்கிரமனாக அளந்தபோது திருச்சங்காழ்வான் மிகவும் மகிழ்ந்து, பெரிய முழக்கங்களை எழுப்பி எதிரிகளைத் தரையில் விழச் செய்தாராம். அதே போல, திருவாழியாழ்வானும் மிகவும் மகிழ்ந்து, அனலை உமிழ்ந்து, நமுசி போன்ற எதிரிகளைப் பயமுறுத்தினாராம். இந்நிகழ்வைப் பற்றி மேலும் சில தகவல்களை ஸ்ரீ நம்மாழ்வார் அருளுகின்றார். அவற்றையும் பார்ப்போம். |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 7-4-1 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"எம்பெருமான் இந்த உலகத்தை அளக்கப் போகின்றான் என்று உணர்ந்த திருவாழியாழ்வான், 'எம்பெருமானுக்கு என்ன நேருமோ?' என்று பதறி எம்பெருமானுக்கு முன்னமே தாம் எழத் தொடங்கினார். திருவாழியாழ்வான் திவ்ய ஆயுதாழ்வார்களின் தலைவர் என்பதால் அவர் எழுவதைக் கண்ட மற்ற திவ்ய ஆயுதாழ்வார்களும் எழுந்தனர்," என்று உரையாசிரியர் அருளியுள்ளார்.
இப்பாசுரத்தில் "திசை வாழி எழ" என்ற சொற்றொடர் உள்ளது. இதற்கு உரையாசிரியர், "திவ்ய ஆயுதாழ்வார்கள் எழுந்தபோது, திசையெங்கும் அவ்வாயுதாழ்வார்களுக்கு 'வாழி! வாழி! வாழி!' என்று மற்ற அடியார்கள் பல்லாண்டு பாடினர்," என்று விளக்கி அருளியுள்ளார். மற்றொரு ஆழ்வாரும் இதனை அருளியுள்ளார். மேலே காண்போம். குறிப்பு: 1. எடுத்த எடுப்பிலேயே "ஆழி எழ" என்று தொடங்கும் இப்பதிகம் [மற்ற திவ்ய ஆயுதாழ்வார்களையும் பேசினாலும்] திருவாழியாழ்வானது பெருமையையே முக்கியமாகக் கூறும் பதிகமாகப் பெரியோர்களால் போற்றப்படுகின்றது. இன்றும் ஸ்ரீ கூரநாராயண ஜீயர் என்ற ஆசாரியர் அருளிய 'ஸ்ரீ சுதர்சன சதகம்' என்ற நூலைப் பாராயணம் செய்யும் முன்னே இப்பதிகத்தை ஓதும் வழக்கம் இருப்பது கண்கூடு. திருவாழியாழ்வானது அருளைப் பெறுவதற்குப் பெரியோர்கள் இப்பதிகத்தையே ஓதுவர். 2. "எம்பெருமான் அடியார்கள் ஆயுள், உடல்நலம், செல்வம் போன்ற உலகியல் பலன்களைப் பெறத் திருவாழியாழ்வானிடம் முறையிடுவது எம்பெருமானே அங்கீகரித்த ஒன்று" என்று ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி அருளக் கேட்டதுண்டு. திருக்கோயில்களில் தனிச் சந்நிதி, சஹஸ்ரநாமம் உள்ளிட்ட பற்பல துதிகள், ஹோமங்கள் என்று திருவாழியாழ்வானுக்குச் சிறப்பாக அமைந்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே அன்றோ? |
ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 36 | ||
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் | ||
இப்பாசுரத்தில் "செய்ய படை" என்ற சொற்றொடர் உள்ளது - இதற்கான உரையில், "எம்பெருமானின் திவ்ய ஆயுதாழ்வார்கள் மிகவும் சிறப்பான படை. ஏனெனில், அவர்கள் எம்பெருமானின் அடியார்களின் எதிரிகளை அழிக்கின்றனர். எம்பெருமானுக்கும் திருவாபரணங்களாகத் திகழ்வதால் ஒளி பெற்று விளங்குகின்றனர். இவர்கள் இருக்கும் வரையில் 'எம்பெருமானுக்கு என் வருமோ?' என்று கலங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தச் செய்ய படைக்கு 'வாழி வாழி வாழி' என்று பல்லாண்டு பாடினாலே போதுமானது - அதுவே எம்பெருமானையும் சேர்த்தே காக்கும்," என்று ஆசாரியர் அருளியுள்ளார்.
இதையே ஸ்ரீ பெரியாழ்வாரும் செய்தனர் - திருப்பல்லாண்டில் மிளிரும் இவ்விரு பாசுரங்களைச் சொல்லியே 4000 திவ்ய பிரபந்தங்களில் உள்ள எந்தப் பதிகத்தையும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஓதத் தொடங்குவர், ஓதி முடிப்பர்.
|
திருவாழியாழ்வான் திவ்ய ஆயுத ஆழ்வார்களின் தலைவர் என்று கண்டோம். இருந்தும், எப்போதும் "சங்கு சக்கரம்" என்று திருச்சங்காழ்வானையும் சேர்த்தே சொல்கிறோம். மற்ற திவ்ய ஆயுத ஆழ்வார்களைத் தனியே எடுத்துச் சொல்வதில்லை. அதிலும், "சங்கம்" என்றே முதலில் சொல்கிறோம். "சக்கர சங்கம்" என்று சொல்வதில்லை. இதன் காரணம் என்ன?
|
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 7-7 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம் |
4000 திவ்யப் பிரபந்தத்தில் ஒரு முழு பதிகமே திருச்சங்காழ்வானுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது! வேறு எந்த அடியவருக்கும் இப்பெருமை இல்லை எனலாம். இது அப்பதிகத்தில் உள்ள பாசுரம். இதில் நம் பட்டர்பிரான் கோதை அருளுவதாவது:
1. கமல மலரில் அமரும் வெண்மையான அன்னப்பறவை தேனை உகந்து உண்ணும். அதுபோல எம்பெருமான் திருக்கை ஆகிய கமல மலரில் அன்னம் போன்ற வெண்மையான திருச்சங்காழ்வான் அமர்ந்துள்ளார். எம்பெருமான் திருச்சங்க நாதம் செய்யும்போது எம்பெருமானின் வாய் அமுதத்தை இன்பமாக உண்பார்! 2. எதிரிகளை அழிக்கவேண்டிய போதும், எம்பெருமான் திருக்கையில் அமர்ந்தபடியே ஆர்ப்பரித்து, அந்த நாதத்தால் அடியார்களின் உள்ளங்களில் அச்சம் தவிர்த்து, எதிரிகளின் உள்ளங்களைத் தவிடுபொடியாக்கிவிடுவார். எம்பெருமானை விட்டு எக்கணமும் பிரியார். திருச்சங்காழ்வானுக்கு உள்ள இந்த இரட்டைச் சிறப்பு வேறு எந்த திவ்ய ஆயுதாழ்வானுக்கும் [திருவாழியாழ்வான் உள்பட!] இல்லை அன்றோ? இதையே நம் பட்டர்பிரான் கோதையும் "சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே!" என்று போற்றுகின்றாள். இக்காரணத்திற்கே [ஸ்ரீ இராமாவதாரத்தில்] திருவாழியாழ்வானின் அம்சமான ஸ்ரீ சத்ருக்னாழ்வான் திருச்சங்காழ்வானின் அம்சமான ஸ்ரீ பரதாழ்வானைப் பணிந்து தொண்டு புரிந்தார் என்று பெரியோர் கூறுவர். "நானே திவ்ய ஆயுதங்களின் தலைவன்" என்ற இறுமாப்பு ஏதுமின்றி, அடியார்க்கு அடியாராக இருப்பதையே விரும்பியமை திருவாழியாழ்வானின் பெருமையையும் பறைசாற்றுகின்றது. |
சரி, பஞ்சாயுத ஆழ்வார்கள் நம்மைக் காப்பர் என்றும் பெரியோர்கள் கூறுவரே. அதைப் பற்றி ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்ன அருளியுள்ளனர்?
|
ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 7 |
ஆசாரியர்கள் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை - சுருக்கம் |
"கையினார் சுரிசங்கனலாழியர்" என்பதற்கு உரை:
"சுரி திருச்சங்காழ்வானுக்கு இயற்கையான தன்மை. அனல் திருவாழியாழ்வானுக்கு இயற்கையான தன்மை. இவ்விரண்டு திவ்ய ஆயுத ஆழ்வார்களை எம்பெருமான் திருக்கைகளில் பிடித்திருப்பது என்னுடைய பாபத்தை அகற்றவே அன்றோ?" என்று ஆசாரியர் அருளியுள்ளார். இதனால் திருச்சங்காழ்வானும், திருவாழியாழ்வானும் நம்முடைய பாபத்தை அகற்றி, நமக்கு நன்மை பயக்கும் தன்மையினர் என்பதை உணரமுடிகின்றது. திரௌபதி ஆபத்தில் "சங்க சக்ர கதா பாணே!" என்று அழைத்தபோது, "நீ திருக்கைகளில் திவ்ய ஆயுதாழ்வார்களை ஏந்தி இருக்க, உன் திருவடி அடைந்தவளான என்னுடைய இடுப்பில் உள்ள சேலை எவ்வாறு நழுவலாம்? அவ்வாயுதாழ்வார்கள் எழுந்தருளியிருப்பதே என் போன்றோரைக் காக்கவே அன்றோ?" என்று வினவுவதாக ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை அருளியுள்ளார். ஸ்ரீமத் பாகவதத்திலும் ஸ்ரீ அம்பரீடரின் சரித்திரம், ஸ்ரீ கஜேந்திராழ்வானின் சரித்திரம், காசி ராஜன் ஏவிய பிசாசத்தை அழித்த சரித்திரம் என்று திருவாழியாழ்வான் விரைந்து வந்து அடியார்களின் துயர் தீர்த்ததைப் பல இடங்களில் காண்கின்றோம். ஸ்ரீ துருவனின் கன்னத்தில் திருச்சங்காழ்வான் தீண்டியதால் குழந்தை மிக்க ஞானம் பெற்றான் என்பதையும் காண்கின்றோம். இப்படி அடியார்களின் திருவுள்ளங்களில் அச்சம் தவிர்த்து, அவர்களது எதிரிகளை முடித்து, மகிழ்ச்சியை நிரப்புவதும், அவர்களுக்கு நல்ஞானத்தை அளித்துக் காத்து அருள் புரிவதுமே திருச்சங்காழ்வானும் திருவாழியாழ்வானும் செய்யும் 'ஆச்ரித விரோதி நிரசன கைங்கர்யம்' என்று சான்றோர் போற்றுகின்றனர் - அதாவது, எம்பெருமானின் திருவடிகளை அடைந்த அடியார்களின் [ஆச்ரித] விரோதியான எதிரிகளை முடிக்கும் [நிரசன] திருத்தொண்டு [கைங்கர்யம்]. |
இதுவரை, திருச்சங்காழ்வான் மற்றும் திருவாழியாழ்வானின் பெருமைகளைக் கற்றோம். இருப்பினும், ஒருவர் "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என் முன்னே வந்து விடாமல் நின்றாலும், நான் அவனைக் காண விரும்பமாட்டேன்" என்று முழங்கினார். ஏன்? காண்போம்.
|
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 75, 33 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
"திருச்சங்கொடு திருவாழியையும் திருக்கையில் ஏந்தியபடி, 'உன்னை விடேன்!' என்று எம்பெருமான் என் முன்னே தன் வடிவழகை எல்லாம் காட்டி நின்றாலும் கூட, எம் ஐயன் இராமானுசனின் மெய்ப்புகழைத் தவிர என் மனமும் புலன்களும் வேறு எதிலும் ஈடுபடமாட்டா!" என்று திருவரங்கத்தமுதனார் தம் ஆசாரிய பக்தியில் உருகுகின்றார்.
மேலும், திருவாழியாழ்வான், திருச்சங்காழ்வான் முதலான பஞ்சாயுத ஆழ்வார்கள் ஒன்றாகக்கூடி, இந்த பூதலத்தைக் காப்பதற்கே ஸ்ரீ இராமானுச முனியாகத் தோன்றினர் என்று திருவரங்கத்தமுதனார் முழங்கியுள்ளார். இதிலிருந்து, திருவனந்தாழ்வான் என்ற ஸ்ரீ ஆதிசேடன் ஸ்ரீ இராமானுசராகத் திருவவதாரம் செய்தபோது, நம் போன்றோரை வாழ்விக்க, பஞ்சாயுத ஆழ்வார்களும் தத்தம் சக்திகளை அவருடன் சேர்த்து, கொடுமையான கலியுகத்தில் இந்தப் பூதலத்தைக் காக்கும் மாபெரும் திருப்பணியில் அவருக்குத் துணையாக இருந்து தொண்டு புரிந்தனர் என்று விளங்குகின்றது. எனவே, "வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!" என்று வாழ்த்தும்போது பஞ்சாயுத ஆழ்வார்களுக்கும் சேர்த்தே பல்லாண்டு பாடுகின்றோம் என்றும் தேறுகின்றனது! |
முடிவுரை | |
'ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்களும், ஆசாரியர்களும் திருச்சங்காழ்வானையும், திருவாழியாழ்வானையும் அவர்களின் பெருமைகளைக் கொண்டு எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதைச் சில பாசுரங்கள் வாயிலாகச் சுவைத்தோம். நாமும் தினந்தோறும் அவர்களுக்குப் பல்லாண்டு பாடுவோம். பொலிக! பொலிக! பொலிக!
|
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
திருச்சங்காழ்வார், திருவாழியாழ்வார் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. எம்பெருமானின் சங்கு சக்கரம் திருவாபரணமாகவும், எம்பிரானுக்கே காப்பாகவும், அடியார்களுக்கு இகபர நலன்கள் அருள்வனவாகவும் திகழ்வதைத் திருப்பாசுரங்களும் ஆச்சாரியர்களின் உரைகளும் மிக அழகாக எடுத்துரைக்கின்றன. அவற்றை நீங்கள் விளக்கிய விதமும் மிகச் சிறப்பு.
ReplyDeleteஉங்கள் உண்மையான ஈடுபாடும், அனுபவங்களும் உங்கள் சொற்களில் மிளிர்வது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. மிக்க நன்றி.
Delete