இப்பாசுரத்தில் "பணிந்த பண மணிகளாலே" என்ற சொற்றொடர் உள்ளது - இதற்கான உரையில் வெகு அழகானதொரு தகவலை ஆசாரியர் அருளியுள்ளார்.
திருப்பாற்கடலில் எம்பெருமான் சயனித்து இருக்கும்போது திருப்பாற்கடலின் அலைகள், அலைத்துளிகள் ஆகியவை எம்பெருமான் திருமேனியைத் தொட முயல்கின்றன. "அந்தோ! இவை அவனது மென்மையான திருமேனியின் மீது மோதிவிடுமோ!" என்று மலைகள் எம்பெருமானை மோதப்போவது போல ஆழ்வார் வருந்துகின்றார்.
ஆழ்வாரின் வருத்தத்தைத் தீர்க்கும் வண்ணம், திருவனந்தாழ்வான் தம்முடைய ஆயிரம் தலைகளைத் தாழ்த்தி, நன்கு விரிந்த குடையாகப் பிடித்து, அவ்வலைகளும் அலைத்துளிகளும் எம்பெருமான் திருமேனியைத் தீண்டாத வண்ணம் காத்து அருள்கின்றார்!
ஆயிரம் தலைகள் இருக்க இதுவும் ஒரு காரணம். மேலும் ஒரு காரணம் உண்டு! அதையும் காண்போம்.
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 10
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இப்பாசுரத்தில் "ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணைை" என்ற சொற்றொடர் உள்ளது - இதற்கான உரையில் ஆசாரியர் அருளியுள்ளவை பாரீர்:
"ஆங்கு" என்ற சொல்லுக்கு இங்கே இரண்டு பொருள்கள் அருளப்பட்டுள்ளன:
1. ஸ்ரீவைகுண்டம் என்கிற பரமபதம்
2. ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரம் எடுத்த இடம்
பரமபதத்தில் அடியார்கள் யாவரும் சாமகானம் இசைத்து, "ஹாவு ஹாவு" என்று ஆனந்தத்தால் பாடுவார்கள். அதைக் கேட்டு, "எம்பெருமானைத் தாக்க எதிரிகள் திரண்டு வருகின்றனர் போலும்!" என்று பதறும் திருவனந்தாழ்வான், ஆயிரம் நாவால் நச்சுப் புகையை உமிழ்வராம்! எம்பெருமானுக்குப் பரமபதத்தில் எந்த ஆபத்தும் இல்லை! எம்பெருமானால் எதிர் கொள்ள முடியாத ஆபத்து என்றும் எதுவுமே இல்லை! இது, "அவனுக்கு என்ன நேருமோ?" என்ற பொங்கும் பரிவினால் திருவனந்தாழ்வான் செய்யும் பேரன்பின் செயல்.
இதேபோல, ஸ்ரீ திரிவிக்கிரம அவதார காலத்திலும், நான்முகனார் முதலான தெய்வங்கள் எம்பெருமானைப் போற்றித் துதித்தனர். அந்த ஆரவாரம் கேட்டபோதும், திருவனந்தாழ்வான் இதேபோல நச்சுப்புகைகளை எட்டுத் திக்குகளிலும் உமிழ்ந்தார்! அதே பேரன்பின் செயல்.
கல் போன்ற உள்ளங்களையும் உருக்கும் இந்தச் செயலையே ஆழ்வார் "வாழ்த்து" என்று சொல்லிக் காப்பு இடுகின்றார்.
ஆயிரம் தலைகள் இருக்க இதுவும் ஒரு காரணம்! இதிலிருந்து, திருவனந்தாழ்வான் மிகச் சிறந்த மங்களாசாசனபரர் என்பது விளங்கும்.
குறிப்பு: மெய்யடியார் ஒருவரின் தூய அன்பின் காரணமாக வெளிவரும் இந்த நச்சுப்புகை எம்பெருமானையோ மற்ற அடியார்களையோ துன்புறுத்தாது.
ஆயிரம் தலைகளைக் கொண்டு திருவனந்தாழ்வான் செய்யும் பல்வேறு தொண்டுகளைப் பற்றி தெரிந்துகொண்டு மகிழ்ந்தோம். அவரது தொண்டுகள் மேலும் பல உள! அவற்றையும் கற்போம்.
|
ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 53
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இப்பாசுரத்தின் உரை மிகவும் அழகானது!
கட்டிப் பொன்னை நம் விருப்பத்திற்கு ஏற்ற அணிகலனாக மாற்றிக்கொள்வது போல, திருமாமகளுடன் உறையும் எம்பெருமானின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து, அதற்கு ஏற்பத் தமது வடிவத்தை மாற்றிக்கொண்டு, திருவனந்தாழ்வான் தொண்டுகள் புரிவார்.
எம்பெருமான் நடந்தால், குடையாவார்; அமர்ந்தால், சிங்காதனம் ஆவார்; நின்றால், பாதுகைகள் ஆவார்; கிடந்தால், திருப்பள்ளி என்கிற படுக்கை ஆவார்; எம்பெருமான் எதையேனும் காண விரும்பினால், அணி விளக்காக மின்னுவார்; எம்பெருமான் புத்தாடை உடுத்திக்கொள்ள விரும்பினால், பூம்பட்டாடையாக மாறுவார்; எம்பெருமானுக்குப் பிராட்டியாருடன் ஊடல் ஏற்பட்டால், எம்பெருமான் அணைத்துக்கொண்டு உறங்கத் தலையணையாக இருப்பார்!
இதனாலேயே அவர் 'ஆதிசேடன்' [முதல் தொண்டன்] என்று அழைக்கப்படுகின்றார்.
"ஒரு தாய் தன் குழந்தைகளைத் தனது மடியில் பேரன்புடன் வைத்துக்கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதைக் கண்டு, அக்குழந்தைகளின் உகப்பால் தானும் உகப்பது போல, திருவனந்தாழ்வானும் எம்பெருமானையும், பிராட்டிமார்களையும் தமது மடி மீது வைத்துக்கொண்டு, அவர்கள் மகிழ்வதால் தாமும் மகிழ்ந்து, அவர்களைப் பத்திரமாகக் காத்துக்கொண்டிருப்பர்," என்பர் பெரியோர்.
|
எம்பெருமான் திருவனந்தாழ்வான் மீது சயனிக்க வேறு ஒரு சுவையான காரணமும் உண்டு!
|
ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 7
|
|
ஆசாரியர்கள் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை - சுருக்கம்
|
|
"அரவின் அணை மிசை மேய மாயனார்" என்பதற்கு உரை:
இரத்தினங்களைத் தங்கத்தில் பதித்துக் காட்டுமா போலே எம்பெருமான் தனது திருமேனி எழிலைத் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக் காட்டுகின்றான் - அதாவது, அணி விளங்கும் உயர் வெள்ளை அணையான திருவனந்தாழ்வான் மீது முடிவில்லதோர் எழில் நீலமேனியனான எம்பெருமான் சயனித்திருப்பது எம்பெருமானின் ஒப்பற்ற திருமேனி எழிலுக்கு மேலும் அழகூட்டுகின்றது!
|
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 19
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"அரவணைத் துயிலுமா கண்டு" என்பதற்கு ஆசாரியர் அருளியுள்ள உரை மிகவும் சுவையானது:
ஒரு மாணிக்கக் கல்லின் விலை, அக்கல்லைத் தங்கத்தில் பதித்த பின், மிகவும் உயர்ந்து விடும். அதுபோலவே, எம்பெருமானின் பெருமையும் அவன் திருவனந்தாழ்வான் மீது சயனிக்கும் போது மிகவும் உயர்ந்து விடுகிறது!! "அந்த அரவணையின் மீது அவன் துயிலும் அழகைக் காணும் போது என் உடல் உருகுகின்றதே! என் செய்வேன்!" என்று கதறுகின்றார் ஆழ்வார்!
|
ஒப்பற்ற அடியவராகத் திகழும் திருவனந்தாழ்வான் மீது எம்பெருமான் வைத்திருக்கும் ஆராத அன்பையும் ஆழ்வார்கள் போற்றியுள்ளனர்.
|
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 5-2-10
|
|
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
|
|
ஸ்ரீ பெரியாழ்வார் போன்ற அறப்பெரிய சான்றோர்களின் திருவுள்ளங்களில் எம்பெருமான் குடிகொள்ள எழுந்தருளும்போது, அரவத்து அமளியான திருவனந்தாழ்வானை விட்டுப் பிரிய முடியாமல், அரவிந்தப் பாவையான திருமகளையும் விட்டுப் பிரிய முடியாமல், அவ்விருவரோடும், அவனது அன்புக்குரிய மாமனாரான அழகிய திருப்பாற்கடலோடும் சேர்ந்தே வந்து சான்றோர்களின் திருவுள்ளங்களில் இனிதே அமர்கின்றான்!
|
எம்பெருமான் இப்பூவுலகில் திருவவதாரம் செய்யும்போதெல்லாம் திருவனந்தாழ்வானும் அவனை விட்டுப் பிரியாது ஆட்செய்கின்றார்.
|
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 8-6
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இப்பாசுரத்தில் "சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே" என்ற வரியைப் பற்றிய ஒரு கேள்வி எழுந்ததாம்.
ஸ்ரீ இராமாநுசரின் சீடர்கள் அவரிடம், “ஆசாரியரே! அயோத்தி மக்கள் மட்டுமன்றோ ஸ்ரீ இராமபிரானைப் பின்தொடர்ந்தனர். ஸ்ரீ இலக்குமனையும் ஸ்ரீ சீதையையும் தவிர்த்து, அவனது சுற்றத்தார் யாவரும் அரண்மனையிலேயே இருந்தனர் அன்றோ? ஆழ்வார் ‘சுற்றமெல்லாம்’ என அருளியுள்ளது பொருந்தவில்லையே!” என்ன, அதற்கு ஸ்ரீ எம்பெருமானார், "இளைய பெருமாள் [ஸ்ரீ இலக்குமன்] 'அஹம் சர்வம் கரிஷ்யாமி' [அதாவது 'சீதையுடன் கூடியிருக்கும் உமக்கு எல்லாவடிமைகளும் அடியேன் செய்வேன்'] என்று கூறிக் கூடவே சென்றார் அல்லவா? ‘அவர் ஒருவர் சென்றதே அனைத்துச் சுற்றமும் சென்றதற்குச் சமம் - ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து இவரே அடிமை செய்தார்!’ என்பதையே ஆழ்வார் இப்படி அருளியுள்ளார்," என்றாராம்.
அன்னை சீதை கேட்ட மலர்களைப் பறித்துக் கொடுத்தல் முதல் இந்திரசித் போன்ற கொடிய அரக்கர்களைப் போர்க்களத்தில் அழிப்பது வரை ஸ்ரீ சீதாராமனுக்கு ஸ்ரீ இலக்குமன் செய்யாத தொண்டுகளே இல்லை எனலாம். 14 ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் தொண்டு புரிந்தார். அவதார காலத்திலும் திருவனந்தாழ்வானின் இலக்கு ஒன்றே - ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னித் திருமகள் கேள்வனுக்கு வழுவிலா அடிமை செய்தல். தன்னலமற்ற தெய்வத் திருத்தொண்டின் இலக்கணம் திருவனந்தாழ்வான்!
குறிப்பு: பலரும் "ஸ்ரீ இலக்குமன் கோபக்காரர்!" என்று கூறுகிறார்கள். உண்மையில், ஸ்ரீ இராமபிரானுக்கு ஏதேனும் ஒரு துயரம் நேர்ந்தபோது மட்டுமே ஸ்ரீ இலக்குமன் கோபம் கொள்கிறார். தனக்கென்று ஒரு நாளும் ஸ்ரீ இலக்குமன் கோபம் கொண்டதில்லை! ஸ்ரீ சீதாராமனுக்கு தொண்டு புரிவதே அவரது ஒரே குறிக்கோள். எம்பெருமான், "ஸ்ரீ சீதையைப் பற்றி என்னிடம் யாரும் தகவல் சொல்லவில்லை என்றால் இவ்வுலகத்தை ஒரே அம்பில் அழித்து விடுகிறேன்!" என்று புறப்பட்ட போதும், ஸ்ரீ இலக்குமனே அவரைத் தடுத்து, அவரது கோபத்தை ஆற்றினார்.
|
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 17
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"செம்பொற்கழலடிச் செல்வா பலதேவா" என்பதற்கு உரை:
"நம்பி மூத்த பிரான்" என்று கொண்டாடப்படும் பலராமன் முதலில் இப்பூவுலகில் திருவவதாரம் செய்து, தமது பொன்னான திருவடிகளை இப்பூமியில் பதித்ததாலேயே, இப்பூமிக்கு ஸ்ரீ கண்ணபிரானின் திருவவதாரம் என்ற பரிசு கிடைத்தது.
இப்பூவுலகைத் தமது சிரத்தால் தாங்கிக் காத்தருளும் திருவனந்தாழ்வான், இம்மண்ணின் பாரத்தைத் தீர்க்கவே வடமதுரை வந்து பிறந்த கண்ணன் எம்பெருமானின் திருவவதாரத்திற்குக் காரணமானார் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இது ஒரு பூரண அவதாரம் இல்லை என்றாலும், திருவனந்தாழ்வானின் திருக்கல்யாண குணங்களுள் சில இந்த அவதாரத்தில் வெளிப்பட்டுள்ளன. எம்பெருமான் உருப்பிணி [ருக்மிணி] நங்கையைத் திருக்கல்யாணம் செய்துகொள்ள, திருத்துவாரகையிலிருந்து தேர் ஏறி விதர்ப நாட்டுக்குச் சென்றபோது, அதைக் கேட்டறிந்த ஸ்ரீ நம்பி மூத்த பிரான், "அந்தோ! கண்ணன் தனியாகச் சென்றுள்ளானே! அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேராமல் காக்கவேண்டும்!" என்று பதறி, படைகளைத் திரட்டிக் கொண்டு, தாமும் விரைந்து சென்றார். கண்ணன் மீது திருவனந்தாழ்வானுக்கு என்னே ஒரு பரிவு!
|
இப்படி மொழியைக் கடக்கும் பெரும்புகழாளரான திருவனந்தாழ்வான் நம் போன்றோருக்கு அருள்வரோ? அதைப் பற்றி ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்ன அருளியுள்ளனர்?
|
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 5-10-11
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"நாகணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு" என்பதன் உரையில் ஆசாரியர் அருளியுள்ளது: "திருவனந்தாழ்வான் திருமாமகளின் திருவடித் தொண்டரானாதால், பரிந்துரை செய்யும் முழுத் தகுதி உடையவர்" என்பதாம்.
நமக்காக எம்பெருமானிடம் பரிந்துரை செய்பவள் திருமாமகள் நாச்சியார். அவளது திருவருள் பெற்று, அவளுக்கு அணுக்கத் தொண்டுகள் புரிபவர்களே நம் போன்றோரை எம்பெருமானிடம் பரிந்துரை செய்யமுடியும்.
திருவனந்தாழ்வான் எம்பெருமானின் பேரன்புக்கு உரியவளான திருமாமகள் நாச்சியாருக்கும் குடை, சிங்காதனம், திருப்பள்ளி போன்ற தொண்டுகளைச் செய்பவர். அவளது திருவாணைக்கு உட்பட்டு இருப்பவர். ஆதலால், திருமாமகள் கேள்வனின் அடியவர் ஆகிய திருவனந்தாழ்வான், நம் போன்றவர்களுக்கு எம்பெருமானிடம் பரிந்துரை செய்யக்கூடிய முழுமையான தகுதியை உடையவர்.
|
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 10-3-4
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இராவணன் படையில் உள்ள அரக்கர்கள் "எங்களைக் கொல்லவேண்டாம்!" என்று அஞ்சி வேண்டுவதாக இப்பதிகம் அமைந்துள்ளது.
"இளையோன் குணங்கள் பாடி ஆடுகின்றோம்" என்பதன் உரையில் ஆசாரியர் அருளியுள்ளது:
"ஸ்ரீ இராமனின் அருள் இருந்தால் மட்டும் போதாது. ஸ்ரீ இராமனின் அருளைப் பெற, ஸ்ரீ இராமனின் வலக்கரம் போன்றவரும், ஸ்ரீ இராமனுக்குத் தயரதனை விட ஒரு சிறந்த தந்தையைப் போல இருப்பவரும், ஸ்ரீ இராமனைப் பிரியாதவரும், தமது மனைவியையும் விட்டு, உண்ணாமல் உறங்காமல் 14 ஆண்டுகள் ஸ்ரீ இராமானுக்குத் தொண்டு புரிந்தவரும், ஸ்ரீ இராமனின் தம்பியும் ஆகிய ஸ்ரீ இராமானுசனின் அருள் இருந்தே ஆகவேண்டும் என்று உணர்ந்தோம்.
இராமபிரானே, தாங்கள் செல்வ விபீடணனை ஏற்றுக்கொண்டதும் ஸ்ரீ இலக்குமன் உம்முடன் இருந்ததாலேயே! தங்களது இளையோனின் குணங்களைப் பாடுகின்றோம்.
இளங்கோவே, எமக்கு அருள்வீர்! எங்களைக் கொல்லவேண்டாம் என்று உமது தமையனாரிடம் பரிந்துரைப்பீர்!"
|
திருவனந்தாழ்வானின் இன்னருளை நாம் பெற, அவர் நம்மைத் தேடி இப்பூமிக்கு ஸ்ரீ இராமானுசராக எழுந்தருளினார், காணீரே!
|
ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 28, 29, 37, 38
|
|
|
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம்
|
|
"காரேய் கருணை இராமானுசர்" மற்றும் "சொல்லுவோம் அவன் நாமங்களே" என்ற கட்டுரைகளில் மேலும் சில தகவல்கள் முன்னமே விண்ணப்பம் செய்துள்ளேன்.
ஸ்ரீ இராமாநுசர் தமது திருவவதாரத்தில் செய்த திருத்தொண்டுகளை நான்காகப் பிரிக்கலாம்:
-
வேத வேதாந்தங்களின் பொருள் அனைத்தும் உரைத்தார்:
- பிரம்மசூத்திரங்களுக்கு அருளிய உரை: "ஸ்ரீபாஷ்யம்"
- "ஸ்ரீ வேதாந்த தீபம்" மற்றும் "ஸ்ரீ வேதாந்த சாரம்" என்னும் நூல்களையும் அருளினார்
- உபநிடதங்களுக்குச் அருளிய உரை: "ஸ்ரீ வேதார்த்த சங்கிரகம்"
- ஸ்ரீமத் பகவத் கீதைக்கு அருளிய உரை: "ஸ்ரீ கீதா பாஷ்யம்"
- ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு அருளிய உரை: "பகவத் குண தர்ப்பணம்" - தமது முக்கிய சீடரான ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருமகனாராகிய ஸ்ரீ பராசர பட்டரைக் கொண்டு எழுதவைத்து, அவ்வுரையைத் திருவரங்கன் முன்னே அரங்கேற்றினார்
- பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து விசிட்டாத்துவைத்த சித்தாந்தத்தை நிலைநாட்டினார்
-
ஆழ்வார்கள் மற்றும் அவர்கள் உரைத்த அருளிச்செயல்களின் சிறப்பை வெளிப்படுத்தினார்:
- ஆழ்வார்கள் மீதும் 4000 அருளிச்செயல்கள் மீதும் பேரன்பு கொண்டிருந்தார் - அப்பாசுரங்கள் உரைக்கும் மெய்ப்பொருள்கள் படியே வாழ்ந்தார். ஸ்ரீ இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றைப் பகரும் நூல்களும், ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியும் இதனைப் போற்றிப் பாடும்.
- திருக்கோயில்களில் ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கும் திருமேனிகள் திருப்பிரதிஷ்டை செய்யும் முறையைத் தோற்றுவித்தார்.
- தகுதி உள்ள சீடர்களைக் கொண்டு, ஆழ்வார்கள் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு மெய்ப்பொருள்களை ஏடுபடுத்துவது என்ற முறையைத் துவக்கிவைத்தார்.
-
திருவரங்கம் முதலான திருத்தலங்களில் உறையும் திருமகள் கேள்வனின் செல்வங்களைத் திருத்தினார்:
- திருவரங்கம், திருவேங்கடம், திருக்கச்சி, திருநாராயணபுரம் ஆகிய திருத்தலங்களில் மகத்தான தொண்டுகள் புரிந்தார்.
- நம் இல்லங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு எவ்வாறு திருவாராதனம் செய்யவேண்டும் என்பதை "நித்யம்" என்ற நூலில் அருளினார்.
-
உலகத்தில் உள்ள ஜீவன்களுக்குப் பரமபதம் எளிதில் கிட்டும்படி அதற்கான வழியாய்த் தாமே நின்று கலியை வென்றார்:
- "மோட்சத்தில் ஆசையுடையோருக்கெல்லாம் மந்திர உபதேசம் உண்டு" என்றார் - இதையே மேற்கோளில் உள்ள 3-ம் மற்றும் 4-ம் பாசுரங்கள் கொண்டாடுகின்றன. இதனால், ஆழ்வார் பாசுரங்களின் மெய்ப்பொருள்களையும் ஆசை உடையோர் எல்லாம் அறிந்திட வழி வகுத்தார்.
- நமக்கும் சேர்த்து தாமே சரணாகதி செய்தார் - "திருவரங்கா! அடியேனுக்கும் அடியேனது சம்பந்தா சம்பந்திகளுக்கும் முக்தி அளிக்கவேண்டும்" என்று திருவரங்கனைச் சரண் அடைந்தார். திருவரங்கனும் "தந்தோம்!" என்றான். இவ்வுரையாடலை விளக்கும் ஸ்ரீ சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம் என்ற நூல்களை இயற்றினார்.
அவரிடம் நாம் எதையுமே வேண்டாமல் இருந்தபோதும், நமக்காக வந்து இப்பூமியில் தோன்றி, ஆழ்வார்களின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று, தமது திருவடிகளின் தொடர்பாலேயே நம் போன்றோரும் மோட்சம் அடைய வழி செய்தமைக்காக அவர் தோன்றிய நாள் ஆழ்வார்கள் உதித்த நாள்களிலும் சிறந்தது என்று மேற்கோளில் உள்ள 1-ம் மற்றும் 2-ம் பாசுரங்கள் கொண்டாடுகின்றன.
|
கலி யுகத்தில் திருவனந்தாழ்வான் செய்த மிக முக்கியமான திருவவதாரம் இரண்டு பாகங்களாகப் பிரித்து எடுக்கப்பட்டவை.
ஸ்ரீ இராமானுசராகத் தோன்றி, 120 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்து, வடமொழி வேதங்களின் பொருள்கள் எல்லாம் வெளியிட்டருளி, ஒரு ஆசாரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மெய் நா மனத்தால் வாழ்ந்து காட்டிய பின், அப்போதைக்குப் பரமபதம் எழுந்தருளிவிட்டார்.
அதன் பின், ஸ்ரீ மணவாள மாமுனிகளாகத் தோன்றி, 73 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து, தென்மொழி வேதமாகிய திருவாய்மொழியின் பொருள்கள் எல்லாம் வெளியிட்டருளி, ஒரு சீடன் [இராமானுச தாசன்] எப்படி இருக்கவேண்டும் என்பதை மெய் நா மனத்தால் வாழ்ந்து காட்டிய பின், திருவவதாரத்தை முடித்துக்கொண்டு, பரமபதம் எழுந்தருளினார்.
|
ஸ்ரீ அப்பிள்ளார் - ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை - பாசுரம் # 1
|
|
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது திருவவதாரத்தில் செய்த மிக முக்கியமான திருத்தொண்டுகளை மூன்றாகப் பிரிக்கலாம்:
-
ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் மெய்ப்பொருள்களை, அதிலும் குறிப்பாக ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய சாம வேத சாரமாம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களை, ஸ்ரீ நம்பிள்ளை என்ற ஆசாரியர் அருளிய ஈடு 36000 படி என்ற உரையின் வழி நின்று, பாமரரும் அறிந்து உய்யும் வண்ணம் அவற்றைப் பரவச் செய்தார்.
இது குறித்து, "ஸ்ரீசைலேச தனியனின் மாபெரும் சிறப்பு" என்ற கட்டுரையில், முன்னுரைக்குப் பின் உள்ள "'ஈட்டுப்பெருக்கர்' மணவாள மாமுனிகள்" என்ற பகுதியில் ஓரளவு விவரித்துள்ளேன். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் இந்தத் தொண்டினால் மிக உகந்த திருவரங்கன் அவருக்குச் சீடன் ஆன சரித்திரத்தை மீதமுள்ள கட்டுரை விவரிக்கின்றது.
-
ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் அருளிய திருவாய்மொழியின் தேர்ந்த பொருளான "ஸ்ரீவசனபூடணம்" முழங்கிய படியே வாழ்ந்து காட்டினார்; தமது ஆசாரியர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் இன்னருளையே தஞ்சமாகப் பற்றியிருந்தார்; ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை காட்டிக்கொடுத்த ஸ்ரீ இராமானுசரையே தெய்வமாகப் பற்றியிருந்தார். "ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் - சில தேன்துளிகள்" என்ற கட்டுரையில் இதைச் சிறிதளவு விண்ணப்பம் செய்துள்ளேன்.
-
திருவரங்கனுக்கும், ஆழ்வார்களுக்கும், ஆசாரியர்களுக்கும் பொங்கும் பரிவுடன் பல்லாண்டு பாடி, நமக்கும் அதைச் செய்யக் கற்பித்தார்.
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
என்று முழங்கியவர் அன்றோ?
|
குறிப்பு: இவை மட்டுமின்றி, பாடல் பெற்ற திருத்தலங்களில் தொண்டுகள், ஸ்ரீ மன்னார்குடியில் சிறப்பான கைங்கர்யம் என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் செய்த கைங்கர்யங்கள் மேலும் பல உள.
இதனால், ஸ்ரீ மணவாள மாமுனிகளது சீடர்களும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளைப் பாசுரங்களாகப் பாடி அருளினார்கள்:
ஸ்ரீ அப்பிள்ளை - ஸ்ரீ மணவாள மாமுனிகள் வாழித் திருநாமம்
|
|
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா - ஸ்ரீ மணவாள மாமுனிகள் வாழித் திருநாமம்
|
|
ஸ்ரீ எறும்பியப்பா - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 74
|
|
முடிவுரை
|
|
எம்பெருமானைப் போலவே திருவனந்தாழ்வானும் யுகம் தோறும் முக்கியமான திருவவதாரங்கள் செய்கின்றார் - சத்ய யுகத்தில் ஸ்ரீ அனந்தன், திரேதா யுகத்தில் ஸ்ரீ இலக்குமன், துவாபர யுகத்தில் ஸ்ரீ பலராமன், கலி யுகத்தில் ஸ்ரீ இராமானுசர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவேங்கடமாமலை, திருப்புளியாழ்வார், திருமலை அனந்தாண்பிள்ளை, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் என்று மேலும் பல திருவவதாரங்கள் எடுத்த திருவனந்தாழ்வானின் பெருமைகளை இது போன்ற கட்டுரைகளிலெல்லாம் அடக்கமுடியாது. ஏதோ ஆன வரை சில அமுதத் துளிகளைச் சில பாசுரங்கள் வாயிலாக விண்ணப்பித்தேன் இத்தனை!
நாள்தோறும் திருவனந்தாழ்வானுக்குப் பல்லாண்டு பாடுவோம். திருமாலின் பேரன்புக்கு இலக்காவோம். பொலிக! பொலிக! பொலிக!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!
|
நன்றிகள் பல!
|
|
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
பொலிக! பொலிக! பொலிக!
|
-
Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Sharanam Image Source: https://elayavilli.o...
-
Sri Andal Thiru Avathara Vaibhavam Image Credit: Sri @vishnuprabhanc Avl Introducti...
-
கோதா சதுச்லோகி Image Source: https://www.tamilbrahmins.com ...
-
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் திருவேங்கடமாமலை Image Source: https://tiru...
-
முன்னுரை இரண்டு நாள்களுக்கு முன் ஒருவருடன் ஆண்டாள் நாச்சியார் பற்றி வைரமுத்து அவர்களின் கட்டுரை குறித்து விவாதித்த பொழுது “ஆழ்வார்களின...
-
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் ஆயர்மாமகள் [நப்பின்னைப் பிராட்டி] ...
| |
No comments:
Post a Comment