ஸ்ரீசைலேச தனியனின் மாபெரும் சிறப்பு |
Image Source: https://guruparamparai.files.wordpress.com/ |
முன்னுரை |
ஸ்ரீ ஆதிசேடன் திருமாலடியார்களில் முதன்மையானவர். அவரே ஸ்ரீ இராமபிரானின் இளைய சகோதரரான ஸ்ரீ இலக்குவனாகத் தோன்றினார். ஸ்ரீ கண்ணபிரானின் மூத்த சகோதரரான ஸ்ரீ பலராமனும் ஸ்ரீ ஆதிசேடனின் அம்சம் கொண்டவர். திருவனந்தாழ்வான் என்று அழைக்கப்படும் அவரது சிறப்புகளைச் சில பாசுரங்கள் மற்றும் அவற்றின் உரைகளின் வாயிலாக இக்கட்டுரையில் சுவைக்கலாம்.
கலியுகத்தில், ஸ்ரீ ஆதிசேடன் ஸ்ரீ இராமானுசர் என்ற பார் போற்றும் திருவவதாரம் செய்தருளி ஆசை உடையோரெல்லாம், தமது திருவடிகளின் தெய்வத் தொடர்பின் மூலம், வைகுந்தம் செல்ல வழி வகுத்தார். ஆழ்வார்களையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் தம் உயிரின் உயிராகப் போற்றிக் கொண்டாடினார். ஆயினும், தம் வாழ்நாளில் பெரும்பங்கை, வடமொழி வேத வேதாந்தங்களின் மெய்ப்பொருள்களை வெளியிட, வடமொழி உரைகள் வரையவே செலவிட்டருளினார்.
அதே ஸ்ரீ ஆதிசேடன் மறுபடியும் திருவவதாரம் செய்தருளினார். அவரே ஸ்ரீ மணவாள மாமுனிகள் என்று போற்றப்படும் மகத்தான ஆசாரியர். இம்முறை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் மறைகளாம் பாசுரங்களின் மெய்ப்பொருள்களை எல்லோரும் பெறும்படி, எல்லோருக்கும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் அவற்றை விளக்கி அருளி, அவைகள் பரவச் செய்தார். ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெருமை வாய்ந்த ஆசாரியரின் அடியாராகத் திகழ்ந்தார்.
"ஈட்டுப்பெருக்கர்" மணவாள மாமுனிகள் |
ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு, அவர் திருவவதார காலத்திலேயே, "ஈட்டுப்பெருக்கர்" என்ற புகழாரம் சூட்டப்பட்டது. அதன் காரணங்களைச் சற்று சுவைப்போம்.
ஈடு 36000 படி உரையைத் தம் நெஞ்சுள் நிறுத்தியவர் |
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி என்ற சாம வேத சாரத்திற்கு "ஈடு 36000 படி" என்ற மிகச் சிறந்த உரையை அருளியவர் ஸ்ரீ நம்பிள்ளை என்ற மகாசாரியர். இவர் ஸ்ரீ இராமானுசருக்குப் பின் தோன்றியவர். இவர் தமது ஆசாரியரின் பூரண அருள் பெற்றவர். இதனால், திருவரங்கனின் இன்னருளுக்கு இலக்கானவர். [குறிப்பு: இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர் இக்கட்டுரையில் தகவல்களைப் பெறலாம்.]
ஸ்ரீ நம்பிள்ளை அருளிய ஈடு 36000 படியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் நிபுணராக இருந்தார். திருவாய்மொழியின் பாசுரங்கள் மட்டுமேயின்றி ஈடு 36000 படியின் திருவாய்மொழிப் பாசுர உரைகளும் கூட விசதவாக்சிகாமணியான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் நீக்கமற நிறைந்திருந்தன.
ஸ்ரீ காஞ்சிபுரத்தில் [திருவெஃகா] ஸ்ரீ கிடாம்பி நாயனாரிடம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீபாஷ்யம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த சமயம். அன்றைய பாடங்கள் முடிந்த பிறகும், மெல்லிய குரலில் ஈடு 36000 படி வியாக்கியானத்தை [!] ஸ்ரீ மணவாள மாமுனிகள் மனப்பாடமாக முணுமுணுக்கிறார் என்பதை உணர்ந்து ஸ்ரீ கிடாம்பி நாயனார் மிகவும் வியந்தார்!
ஈடு 36000 படி உரைக்கு உள்ள சாத்திர ஆதாரங்களைப் பற்றிப் பரந்து விரிந்த ஆழ்ந்த நல்ஞானம் |
ஈடு 36000 படிக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் "பிரமாணத் திரட்டு" அருளியுள்ளார் - அதாவது ஈடு 36000 படி உரையில், ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை அருளியுள்ளதற்கு, தக்க சான்றுகளாக, வேத வேதாந்தங்கள், ஸ்ம்ரிதிகள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றிலிருந்து சரியான மேற்கோள்கள் காட்டியிருப்பார்! ஒருவருக்கு வடமொழி சாத்திரங்களிலும், திருவாய்மொழியிலும் எவ்வளவு ஆழ்ந்த ஞானமும், பரந்து விரிந்த அறிவும் இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்க முடியும்! என்னே மணவாள மாமுனிகளின் மாண்பு!
ஈடு 36000 படி சாரத்தை ஒரு பிரபந்தமாக வெளியிட்டருளிய பாங்கு |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்ற ஒரு நூலையும் அருளியுள்ளார். 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியில், ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு பாசுரம் என்ற வண்ணம், 100 பாசுரங்கள் கொண்டது இந்நூற்றந்தாதி.
ஒவ்வொன்றும் நேரிசை வெண்பா பாசுரம். வெண்பா கற்பது எளிது, இயற்றுவது கடினம். அதற்குரிய எதுகை, மோனை மற்றும் ஒரு வரியில் இருக்கவேண்டிய சொற்களின் எண்ணிக்கை முதலான யாப்பு இலக்கணங்கள் தவறக்கூடாது.
அது மட்டுமின்றி ஸ்ரீ மணவாள மாமுனிகள் இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவிலும்:
• ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம் அமையும்படியும்
• ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடையவேண்டும் என்ற செய்தி வெளிப்படும்படியும்
• அப்பாசுரத்துடன் தொடர்புடைய திருவாய்மொழிப் பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே அப்பாசுரத்திற்கும் முதல் மற்றும் இறுதிச் சொற்களாக அமையும்படியும்
• அப்பாசுரத்துடன் தொடர்புடைய திருவாய்மொழிப் பதிகத்தின் சாரமான ஆழ்பொருளை [அதாவது, ஈடு 36000 படி உரையில் ஸ்ரீ நம்பிள்ளை அருளியுள்ள சீரிய ஆழ்பொருள்] வெளிப்படுத்தும்படியும்
புனைந்துள்ளார்!!!
எனவே, இந்நூல் திருவாய்மொழியின் ஈடு 36000 படி உரையே எளிமையான ஒரு செய்யுள் வடிவில் உள்ள ஒரு நூல்!!
திருவாய்மொழியின் சாரமான ஸ்ரீவசனபூடணத்திற்கு உரை வெளியிட்டருளிய பாங்கு |
ஸ்ரீ நம்பிள்ளையின் ஆசிகளோடு, ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடைய அம்சமாகத் தோன்றியவர் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர். இவரே துருக்கர்களின் படையெடுப்பின்போது திருவரங்கம் நம்பெருமாளைக் காடு வழியே எடுத்துச் சென்று காத்தவர்.
உபநிடதங்களின் ஆழ்பொருள்களைச் சூத்திர வடிவில் கொண்ட "பிரம்மசூத்திரம்" என்ற நூலை முனிவர் பெருமான் ஸ்ரீ வேத வியாசர் அருளினார். இதற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை ஸ்ரீ பகவத் இராமானுசர் அருளினார்.
அதே போல, திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைச் சூத்திர வடிவில் கொண்ட "ஸ்ரீவசனபூடணம்" என்ற நூலை ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் அருளினார். இதற்கு கற்றோர்கள் மெச்சும் உரை ஒன்றை ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளினார்.
ஸ்ரீவசனபூடணத்தின் ஆழ்பொருள் எல்லாம் அறிந்து, ஸ்ரீவசனபூடணத்தின் சொல்லை நேரே அனுட்டித்து, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீவசனபூடணத்தின் ஆழ்பொருள்களை நடைமுறைப்படுத்தினார். தமது உபதேசரத்தினமாலையில் ஸ்ரீவசனபூடணத்தின் பெருமையையும், [ஞானமும் அனுட்டானமும் நன்றாகவே உடைய ஒரு குருவின் இன்னருளே நமக்குத் தஞ்சம் என்ற] அதன் தேர்ந்த பொருளையும் வெளியிட்டருளினார்.
திருவவதாரம் முடிக்கும் தருவாயிலும் ஈட்டிலேயே திருவுள்ளம் |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் செல்லும் தருவாயிலும், அடியார்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம், "மகாசாரியரே! இப்பொழுது தங்கள் திருவுள்ளத்தில் என்ன நினைவு ஓடுகிறது?" என்று கேட்க, "ஈடு 36000 படியில் உள்ள ஆழ்பொருள்களின் ரசத்திலே மூழ்கி உள்ளது!" என்று அருளினார். இதிலிருந்தே ஸ்ரீ மணவாள மாமுனிகள் இந்தத் திருவவதாரத்தின் பெரும்பங்கைத் திருவாய்மொழிக்கே அர்ப்பணித்தார் என்பது விளங்கும்.
மேற்கூறிய அற்புதமான காரணங்களாலும், "மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்" என்றும், "முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம்" என்றும், "முழுதும் நமக்கிவை பொழுதுபோக்காகப் பெற்றோம்" என்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகளே அருளியபடி, எப்பொழுதும் ஈடு 36000 படியைக் காலட்சேபமாக அருளிச்செய்து பொழுதைப் போக்கியதாலும், அதன் ஆழ்பொருளின் படி வாழ்ந்து காட்டியதாலும், ஸ்ரீ மணவாள மாமுனிகள் 'ஈட்டுப்பெருக்கர்' என்ற பட்டத்தால் அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
இக்கட்டுரையின் நோக்கம் |
ஸ்ரீ மணவாள மாமுனிகளது ஈடு 36000 படி காலட்சேபத்தைக் கேட்டுத் திருவரங்கனே இவரைக் குறித்து ஒரு தனியன் ஓதி, இவரது அடியார் ஆனான். அன்றே வேறு சில அதிசயங்களையும் நிகழ்த்தினான்.
அது மட்டுமின்றி, ஸ்ரீ மணவாள மாமுனிகளது தனியனைத் திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலை அழகர், திருவதரி பதரிநாராயணன் ஆகிய எம்பெருமான்களும் வெளியிட்டருளினார்கள். இந்தத் தனியனைக் கொண்டு, சில நல்லடியார்களை வழிநடத்தி, அவர்களை ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளுக்கு ஆட்படுத்தி அருளினார்கள்.
இந்த அழகிய நிகழ்வுகளை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமக்கு மிகவும் அந்தரங்கரான 8 அடியார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை "அஷ்டதிக்கஜங்கள்" [அட்டத்திக்கயங்கள்] என்று நியமித்தருளினார். அவர்களுள் ஒருவர் ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர். ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயரது பூர்வாசிரம திருவம்சத்தில் [துறவறம் ஏற்கும் முன்னே இருந்த திருவம்சத்தில்] தோன்றிய அவரது திருக்கொள்ளுப்பேரனார் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர். இவர் ஸ்ரீ திருவரங்கப் பெருமாளைக் காத்துக்கொடுத்த ஸ்ரீ பிள்ளைலோகாசார்யரின் அம்சமாகத் தோன்றியவர். இந்த ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் அருளிய "ஸ்ரீ யதீந்த்ரப்ரவண ப்ரபாவம்" என்ற நூலில் 'ஸ்ரீசைலேச' தனியனின் திருவவதார நிகழ்வுகள் யாவும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன. அந்நிகழ்வுகளின் சுருக்கத்தை இக்கட்டுரையில் மேலே வாசிக்கலாம்.
ஸ்ரீசைலேச தனியனைத் திருவரங்கன் வெளியிட்டருளினான் |
Image Source: https://www.tamilbrahmins.com/media/sri-namperumal.179/ |
திருவரங்கனின் திருவாணை |
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் திருக்கட்டளையை அடியொற்றி, 'ஈடு 36000 படியை எல்லோரும் அறிந்து உய்யவேண்டும்' என ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவுள்ளம் பற்றியிருந்தார்.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் குடி கொண்டிருந்த மாமாயனான திருவரங்கன் அறிந்தான். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் இக்கிடக்கையைத் தலைக்கட்டித் தருவது மட்டுமின்றி, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளையும் வெளியிடத் திருவுள்ளம் பற்றினான்.
ஒரு நாள், திருப்பவித்திர மண்டபத்தில், பேரோலக்கத்தில் [பல அடியார்களும் திரளாகக் கூடியிருக்கையில்], ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சகர் மீது ஆவேசித்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு அருளப்பாடு சாதித்து, உரத்த குரலில், “நாளை முதல் அனைத்து உற்சவங்களையும் நிறுத்துங்கள். ஓ மணவாள மாமுனிகளே! நாளை முதல், ஒரே ஒரு உற்சவம் மட்டுமே நடைபெறும் - பெரிய திருமண்டபத்தில், நீர் திருவாய்மொழியின் பொருளெல்லாம், ஈடு 36000 படி முதலான உரைகளுடன், நன்கு விளக்கி அருள, உமது சொற்பொழிவைத் திருச்செவிச் சாற்றுவோம்!" என்று அருளினான்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
நாம் ஆர்? பெரிய திருமண்டபம் ஆர்? நம்பெருமாள்
தாமாக நம்மைத் தனித்து அழைத்து - நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாளும் இங்கே
வந்து உரை என்று ஏவுவதே வாய்ந்து!
என்று திருவுள்ளம் உருகி அருளினார்.
ஈட்டுப் பெருக்கரின் சொற்பொழிவு தொடங்கியது |
நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில், நலமான ஆவணியின் முப்பத்தொன்றில், ஸ்ரீ நம்பெருமாள், நாச்சியார்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் உட்பட, திருவரங்கம் திருக்கோயில் சந்நிதிகளில் உறையும் அனைத்து அடியார்களும் அர்ச்சைத் திருமேனியில் [விக்கிரக வடிவத்தில்] எழுந்தருளினார்கள். பலரும் பெருந்திரளாய்க் கூடியிருந்தனர்.
ஒவ்வொரு நாளும், ஸ்ரீ மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருள்களை இது ஒண்பொருள், இது உட்பொருள் என்று விளக்கியருளினார். ஈடு 36000 படி, 6000 படி, 9000 படி, 24000 படி, 12000 படி ஆகிய உரைகளில் உரைத்த பொருள்களை, முன்னோர் மொழிந்த முறை தப்பாமல், விளக்கியருளினார். வேத வேதாந்தங்கள், ஸ்ம்ரிதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், ஸ்ரீ பாஷ்யம், ஸ்ரீ கீதா பாஷ்யம், ஸ்ரீ ச்ருதப்ரகாசிகை, ஸ்ரீவசனபூஷணம், ஸ்ரீ ஆசாரிய ஹ்ருதயம் போன்றவற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி, ஒவ்வொரு பாசுரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் [சப்த, அர்த்த, பாவ ரசங்கள் முதலியன] விரிவான முறையில் விளக்கியருளினார்.
"போத மணவாள மாமுனிவன் ஈடு உரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்" என்ற படி, திருவரங்கனும் அடியார்களும் பேரின்பக் கடலில் ஆழ்ந்தனர். இப்படியே ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் சென்றது.
ஸ்ரீசைலேச தனியனைக் குறித்து ஸ்ரீ திருவரங்கன் நிகழ்த்திய மிகவும் பிரபலமான முதல் அதிசயம் |
பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம், திருமூலம் திருநட்சத்திரத்தில், சாற்றுமுறை நாள் [அதாவது, திருவாய்மொழி இறுதிப் பதிகத்தின் பொருள் உரைக்கும் நாள்] வந்தது. ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமுன்பே, பல சம்பாவனைத் தட்டுகள், பழங்கள், மலர்மாலைகள், தாம்பூலம் முதலியவை வைக்கப்பட்டன.
திருவரங்கம் அர்ச்சகருக்கு அரங்கராஜன் என்ற ஐந்து வயது குமரன் இருந்தான். திடீரென, அச்சிறுவன் ஓடி வந்து, கூடியிருந்த அனைவரும் பார்க்க, சம்பாவனைத் தட்டுகளுக்கு நடுவே நின்றான். அங்கிருந்த பெரியவர்கள் பலமுறை அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றபோதும், அச்சிறுவன் மறுபடியும் அங்கேயே வந்து நின்றான்!
அங்கு எழுந்தருளியிருந்த பெரியவர்கள், "நீர் இப்படி நிற்பதன் நோக்கம் ஏது?" என்று குழந்தையைக் கேட்க, குழந்தை கைகளைக் கூப்பி நின்று, உரத்த குரலில், தெளிவாக, "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" என்றான். 'ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது ஆசாரியரான ஸ்ரீ திருமலையாழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் அருளுக்கு இலக்கானவர்' என்பது "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" என்ற இந்த வடசொல்லின் பொருள்.
அனைவரும் "இந்த ஐந்து வயதுக் குழந்தை ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றியும் அவரது ஆசாரியரைப் பற்றியும் எப்படித் தெரிந்துகொண்டான்? இப்படி மிகவும் பொருத்தமானதொரு திருநாமத்தைச் சொல்லி ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் துதிக்கின்றானே!" என்று வியந்தனர்.
அக்குழந்தை தொடர்ந்து, "தீபக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம்" என்று ஓதினான். பின்னர், அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டான்!
ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் புகழும் ஒரு அற்புதமான தனியன் குழந்தையால் ஓதப்பட்டது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது! அவர்களில் சிலர் குழந்தையைத் தேடி, அழைத்து வந்து, அக்குழந்தையைக் கொண்டாடி, அச்சிறுவனை மீண்டும் தனியனை ஓதச் சொன்னார்கள். பல முறை கேட்டும், சிறுவன் "நான் ஒன்றும் அறியேன்!" என்று சொல்லி, இறுதியில் விளையாட ஓடிவிட்டான்.
"அர்ச்சகரின் குழந்தையின் வடிவத்தில் தோன்றி, திருவரங்கனே அத்தனியனை ஓதினார்! ஈட்டு பெருக்கராம் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியாராகி மகிழ்ந்தார்!" என்று அங்கு எழுந்தருளியிருந்த சான்றோர்கள் அறுதியிட்டார்கள்.
அப்பொழுது, ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சகர் மீது ஆவேசித்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அட்டத்திக்கயங்களில் ஒருவரான ஸ்ரீ அப்பிள்ளைக்கு அருளப்பாடு சாதித்து [திருநாமத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி அழைத்து], 'நீர் வாழித் திருநாமம் ஓதும்!' என்று திருவாணையிட, ஸ்ரீ அப்பிள்ளை
என்ற பாசுரத்தை அருளினார்.
ஸ்ரீசைலேச தனியனைக் குறித்து ஸ்ரீ திருவரங்கன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம் |
அப்பொழுது, கூடியிருந்தவர்களில், இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அட்டத்திக்கயங்களை அணுகி, அவர்களை வணங்கி, பின்வருமாறு கூறினர்:
“நாங்கள் திருவதரியிலிருந்து [ஸ்ரீ பதரிநாத்] திருவரங்கம் திரும்பினோம். 'கதியாக எங்களுக்கு ஓர் பொருளை அருளவேண்டும் கண்ணனே!' என்று அங்குள்ள திருவதரி எம்பெருமானிடம் வேண்டினோம்.
அதற்கு விடையாக, திருவதரி எம்பெருமானும் இப்போது ஸ்ரீ நம்பெருமாள் ஓதிய அதே 'ஸ்ரீசைலேச' தனியனின் முதல் வரியை மட்டும் எங்களுக்குக் கற்பித்தார்! 'இரண்டாவது பாதியைத் திருவரங்கத்தில் வெளியிடுவோம்!' என்று அருளி, எங்களைத் திருவரங்கத்திற்குச் செல்லும்படிக் கட்டளையிட்டார்.
இன்று, இங்கே வந்து, ஸ்ரீ நம்பெருமாள் அருளால் இந்தத் தனியனைக் கற்றோம்!”
இதைக் கேட்டு அனைத்து அடியார்களும் மிகவும் வியந்தனர்.
ஸ்ரீசைலேச தனியனைக் குறித்து ஸ்ரீ திருவரங்கன் நிகழ்த்திய மூன்றாவது அதிசயம் |
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அட்டத்திக்கயங்களுள் ஒருவர் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன். ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் தேவிகளும் [மனைவியார்] மற்றும் ஞானத்தில் சிறந்த சில அம்மைமார்களும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனிடம் ஒரு பனை ஓலையை ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் தேவிகள் ஒப்படைத்தார். அவ்வோலையில் ‘ஸ்ரீசைலேச’ தனியன் எழுதப்பட்டிருந்தது!
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் தேவிகள் தெரிவித்த செய்தி யாதெனில்:
“நாங்கள் எல்லோரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளை வாயாரத் துதித்துக் கொண்டிருந்தோம். வெளியே இருந்து ஒரு குரல் அழைப்பதைக் கேட்டு, வெளியே சென்றேன்.
அங்கே ஒரு பிரம்மச்சாரி இதனை அடியேனது கையில் கொடுத்து, 'இதனைக் கோயில் கந்தாடை அண்ணனிடம் கொடுத்துவிடுங்கள்!' என்றார். அதைப் படித்து, 'ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருஞ்சிறப்புகளை இப்படி அற்புதமானதொரு தனியனாய் அருளியுள்ளாரே!' என மிகவும் வியந்து, அவருக்குச் சற்காரங்கள் செய்ய நிமிர்ந்து பார்த்தேன். அவரோ அங்கு காணக் கிடைக்கவில்லை!
'இது நம்பெருமாளின் திருவிளையாடல்!' என்று மற்ற அம்மைமார்கள் அறுதியிட்டனர். இந்நிகழ்வைத் தங்களிடம் விண்ணப்பிக்கவே இங்கு வந்தோம்!"
கூடியிருந்த அடியார்கள் யாவரும் மகிழ்ச்சியில் குளிர்ந்தனர்!
ஸ்ரீசைலேச தனியனைக் குறித்து ஸ்ரீ திருவரங்கன் பிறப்பித்த திருவாணைகள் |
பின்னர், ஸ்ரீ நம்பெருமாள் யாவரையும் அழைத்து, “ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘ஈட்டுப்பெருக்கர்’ என்பதைக் கண்டோம். இனிமேல், ஆழ்வார்கள் அருளிய அருளிச்செயல்களின் [4000 திவ்ய பிரபந்தங்களின்] பாராயணத்தை 'ஸ்ரீசைலேச' தனியனுடன் தொடங்கி, 'ஸ்ரீசைலேச' தனியனுடன் முடிக்கவும்! பாராயணத்தின் இறுதியில் வாழித்திருநாமப் பாசுரங்களை ஓதவும்!" என்று திருவாணை பிறப்பித்தருளினான்.
ஸ்ரீ நம்பெருமாளின் இந்த உத்தரவுகளைத் தாங்கிய ஸ்ரீ விஷ்வக்சேனரின் ஸ்ரீமுகங்கள் [கடிதங்கள்] ஆழ்வார்களின் பாடல் பெற்ற அனைத்து திருத்தலங்களுக்கும் அனுப்பப்பட்டன.
ஸ்ரீ நம்பெருமாளின் கட்டளைப்படி, சத்திர சாமராதிகளுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஒரு திருப்பல்லக்கில் ஸ்ரீ மணவாள மாமுனிகளை அவரது மடத்திற்கு எழுந்தருளச் செய்தனர்.
ஒரு அடியானின் 5 கடமைகளையும் திருவரங்கன் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் நிறைவேற்றுகின்றான் |
அடியானின் கடமை #1 - 'ஆசாரியனுக்குத் தனியன் சமர்ப்பிக்கவேண்டும்' - இதனை விரிவாகக் கண்டோம்.
அடியானின் கடமை #2 - 'மந்திரத்தை மனதில் வைத்துத் தமது குருவின் திருநாமத்தையும் பெருமையையும் பரப்பவேண்டும்' - திவ்யதேசங்கள் யாவற்றிலும் அருளிச்செயல்களை ஓதும் முன்னும், ஓதிய பின்னும் 'ஸ்ரீசைலேச' தனியன் ஓதவேண்டும் என்று திருவரங்கன் ஓலை அனுப்பினார் அல்லவா?
அடியானின் கடமை #3 - 'தமது செல்வத்தை ஆசாரியன் திருவடிகளில் சமர்ப்பிக்கவேண்டும்' - ஸ்ரீ பெரிய பெருமாளின் உண்மையான பெருஞ்செல்வம் "திருமாற்கு அரவு" என்று போற்றப்படும் ஸ்ரீ திருவனந்தாழ்வானே! [ஸ்ரீ ஆதிசேடன்] அதனால் அவரையே ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்குத் தொண்டு புரியும்படி ஏவ, இன்றும் ஸ்ரீ திருவனந்தாழ்வான் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமேனி அமரும் சிம்மாசனமாகவும், அதே நேரம் அவருக்கு ஒரு குடையாகவும் விளங்குகின்றார்.
அடியானின் கடமை #4 - 'ஆசாரியன் திருநாமத்தைத் தரிக்கவேண்டும்'
ஸ்ரீ மணவாள மாமுனிகள் துறவறம் ஏற்கும் முன், 'அழகிய மணவாளப் பெருமாள்' என்பதே அவரது திருநாமம். ஸ்ரீ மணவாள மாமுனிகள் துறவறம் ஏற்றபொழுது, அவருக்குத் துறவறம் அளித்தவர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் மற்றொரு அடியாரான ஸ்ரீ சடகோப ஜீயர்.
துறவறம் ஏற்றதால் புதிய திருநாமம் பெறவேண்டும். ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கும் 'சடகோப ஜீயர்' என்றே புதிய திருநாமம் சூட்டப்பட்டது.
துறவறம் ஏற்றபின், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ பெரிய பெருமாளைச் சேவித்து நின்றபோது, திருவரங்கன் 'முந்தின திருநாமத்தோடே நடத்தும்' என்றான். அதனால் “ஸ்ரீ சடகோப ஜீயர்” என்ற திருநாமம் மீண்டும் “ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள்” என்றே ஆனது! அதனால், திருவரங்கன் தனியன் ஓதிய பின், தனது ஆசாரியரின் திருநாமத்தையே தாமும் சூடியது போல ஆனது!!
அடியானின் கடமை #5 - 'ஆசாரியரின் திருநட்சத்திரத்தையும், அவர் பரமபதம் சென்ற தீர்த்த திவசத்தையும் கொண்டாடவேண்டும்' - இன்றும் திருவரங்கன் அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூல நன்னாளையும், மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியையும் கொண்டாடுவது கண்கூடு!
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் முக்கியச் அடியார்களான அட்டத்திக்கயங்களின் மகிழ்ச்சி |
"ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்காக எம்மால் தனித்தனியே இயற்றப்பட்டத் தனியன்கள் யாவையும் 'ஸ்ரீசைலேச' தனியனுடன் ஐக்கியமாம்!" என்று அட்டத்திக்கயங்கள் முழங்கினர்.
ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர் திருவம்சத்தில் தோன்றிய ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் 'ஸ்ரீசைலேச' தனியனில் உள்ள ஒவ்வொரு பதமும் அஷ்டாக்ஷரம் என்று புகழ் பெற்றதாம் திருமந்திரத்தின் பொருளையே ஓதுகின்றனது என்றும், அதே காரணத்தால் இது தனியன் மட்டுமல்ல மந்திரமும் ஆகும் என்றும் காட்டியருளினார். [குறிப்பு: இது ஆசாரியரிடம் கற்கவேண்டிய இரகசியம் என்பதால் இதைப் பற்றி மேலும் இங்கே வெளியிடவில்லை.]
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிய 'ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற நூலில் சாற்றுப் பாசுரம் 'ஸ்ரீசைலேச' மந்திரத்தின் பெருமையைப் பேசும்படி அருளினார்.
ஸ்ரீ எறும்பியப்பா, இம்மந்திரம் திருவவதாரம் செய்த வரலாற்றை விளக்கி, வடமொழியில் 'ஸ்ரீசைலேச அஷ்டகம்' என்ற ஒரு துதி அருளினார்.
ஸ்ரீ அப்பிள்ளார் 'ஸ்ரீசைலேச' தனியன் வைபவத்தை வெளியிடும் 'ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை' என்ற தமிழ் நூலை அருளினார்.
சாற்றுமுறையில், இம்மந்திரத்தை ஓதிய பின், ஸ்ரீ அப்பிள்ளை அருளிய வாழித் திருநாமம் மட்டுமின்றி, ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா அருளிய சாற்றுமுறை வாழித் திருநாமங்களையும் ஓதவேண்டும் என்று பெரியோர்கள் வகுத்தனர்:
ஸ்ரீசைலேச தனியனை ஸ்ரீ கள்ளழகர் வெளியிட்டருளினான் |
Image Source: https://www.wallsnapy.com/wallpaper/venkatachalapathy/new-kallalagar-images-download-4708.html |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்து அருளிய ஸ்ரீ யதிராஜ ஜீயர் |
துருக்கர்களின் படையெடுப்புகளின் காரணமாக, ஸ்ரீ கள்ளழகர் [உற்சவர்] பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த சமயம், திருமாலிருஞ்சோலைக்கு ஒரு யாத்திரையாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் எழுந்தருளி, உற்சவர் இல்லாத் திருத்தலத்தைக் கண்டு வருந்தி, "'நங்கள் குன்றம் கைவிடான்' என்ற ஆழ்வாரின் பொய்யில் பாடலை மெய்ப்பித்துத் தந்தருளவேண்டும்!" என்று வேண்டி, ஸ்ரீ சுந்தரத்தோளுடையானுக்குப் பல்லாண்டு பாடிக் காப்பிட்டார்.
சிறிது காலம் சென்ற பின், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கள்ளழகரிடமிருந்து ஒரு ஸ்ரீமுகம் [கடிதம்] பெற்றார்! “உம்முடைய மங்களாசாசனத்தின்படி, நாம் திருமாலிருஞ்சோலை எழுந்தருளினோம். நம் கோயிலைப் பராமரிக்க ஒருவரை அனுப்புங்கள்," என்ற ஸ்ரீ கள்ளழகரின் உத்தரவைத் தாங்கி வந்த அக்கடிதத்தை வாசித்து மகிழ்ந்த ஸ்ரீ மணவாள மாமுனிகள், தமது அடியாரான ஸ்ரீ யதிராஜ ஜீயர் என்ற நல்லோரை அனுப்பியருளினார். ஸ்ரீ யதிராஜ ஜீயர் திருமாலிருஞ்சோலைத் திருக்கோயிலை செவ்வனே பராமரித்து வந்தார்.
ஸ்ரீ யதிராஜ ஜீயரின் வேண்டுதலும் ஸ்ரீ சேனைமுதலியார் என்ற அடியவர் வந்து சேர்ந்ததும் |
ஸ்ரீ யதிராஜ ஜீயருக்கு ஒரு தெய்வீகத் தேடல் இருந்தது: தாம் தினந்தோறும் ஓத, தமது ஆசாரியரான ஸ்ரீ மணவாள மாமுனிகளைக் குறித்து ஒரு தனியன் பெரியோர்களின் திருவாக்கிலிருந்து தோன்றவேண்டும் என்பதாம். [குறிப்பு: திருவரங்கத்திலிருந்து ஸ்ரீமுகம் இன்னும் திருமாலிருஞ்சோலையை அடையவில்லை என்பதால் ஸ்ரீ யதிராஜ ஜீயருக்கு 'ஸ்ரீசைலேச' தனியன் திருவவதாரம் பற்றித் தெரியாது இருந்த சமயம்.]
இது பற்றி, ஸ்ரீ யதிராஜ ஜீயர் நீண்ட காலமாக எம்பெருமானை வேண்டிக்கொண்டிருந்தார். திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரும் ஸ்ரீ யதிராஜ ஜீயருடைய இந்த வேண்டுதலைப் பற்றி அறிந்திருந்தார்.
ஒரு நாள், ஸ்ரீ யதிராஜ ஜீயர் தமது வழக்கமான வேண்டுதலை ஸ்ரீ சேனைமுதலியார் [பெருமாள் கோயில்களில் நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் அடியவரான ஸ்ரீ விஷ்வக்சேனர்] சந்நிதியில் விண்ணப்பித்தார். திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரும் ஸ்ரீ யதிராஜ ஜீயர் சார்பாக ஸ்ரீ சேனைமுதலியாரிடம் வேண்டினார்.
அந்நேரம், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியார் ஒருவர், திருத்தல யாத்திரைகள் பலவற்றை முடித்துக்கொண்டு, திருமாலிருஞ்சோலைத் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார் - அவரது திருநாமம் ஸ்ரீ சேனைமுதலியார் என்பதாகும்!
ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீசைலேச தனியனை வெளியிட்டருளினார் |
ஸ்ரீ யதிராஜ ஜீயர் ஸ்ரீ சேனைமுதலியாரை வரவேற்று, ஸ்ரீ கள்ளழகர் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகர் ஸ்ரீ சேனைமுதலியாரின் திருமுடியை ஸ்ரீ சடகோபனால் [ஸ்ரீ சடாரி] அலங்கரித்தார். அப்பொழுது, திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகர் மூலம், ஸ்ரீ சேனைமுதலியரிடம் ஸ்ரீ கள்ளழகர் உரையாடினார்! "இப்போது நாம் உமது நாவின் மூலம் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் புகழ் பாடும் ஒரு தூய பெரும் தனியனை அளித்தருள்வோம். அதை நீர் ஸ்ரீ யதிராஜ ஜீயரிடம் தெரிவிப்பீர்!” என்றார்.
மாயனான ஸ்ரீ கள்ளழகரின் மாயையால் மெய் மறந்த நிலையில் இருந்த ஸ்ரீ சேனைமுதலியார், திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகருக்கு, தம்மை மறந்த நிலையில், 'ஸ்ரீசைலேச' மந்திரத்தைத் தெரிவித்தார்.
அதனைத் திருச்செவியில் கேட்டவுடன், திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரும், தம்மை மறந்த நிலையில், அந்த 'ஸ்ரீசைலேச' மந்திரத்தை ஸ்ரீ யதிராஜ ஜீயரிடம் தெரிவித்தார்.
தமது ஆசாரியரின் புகழ் பாடும் தனியனைப் பெற்ற ஸ்ரீ யதிராஜ ஜீயரின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. ஸ்ரீ சேனைமுதலியாரையும், திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரையும் மனம், மெய், மொழிகளால் பேருவகையுடன் வணங்கி, தமது பேரன்புக்குரிய ஆசாரியரான ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் புகழ்ந்துகொண்டு, ஸ்ரீ யதிராஜ ஜீயர் தமது மடத்திற்கு எழுந்தருளிவிட்டார்.
ஸ்ரீ கள்ளழகர் நிகழ்த்திய மாயத்தை அடியார்கள் உணர்ந்தனர் |
ஸ்ரீ யதிராஜ ஜீயர் மடத்திற்கு எழுந்தருளிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்ரீ சேனைமுதலியாரும், திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரும், ஸ்ரீ கள்ளழகர் அருளால், தம்மை மறந்த நிலையிலிருந்து மீண்டனர். தமக்கு ஸ்ரீ கள்ளழகர் இட்ட கட்டளையை மட்டும் ஸ்ரீ சேனைமுதலியார் நினைவுகூர்ந்தார். எனினும், அவரால் 'ஸ்ரீசைலேச' தனியனை நினைவு கூர முடியவில்லை. திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகராலும் 'ஸ்ரீசைலேச' தனியனை நினைவு கூர முடியவில்லை.
இருவரும் ஸ்ரீ யதிராஜ ஜீயரின் மடத்திற்குச் சென்று, ஸ்ரீ யதிராஜ ஜீயரை வணங்கி, "அடியோங்களுக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் போற்றும் அத்தனியனை அருளவேண்டும்!" என்றனர்.
ஸ்ரீ யதிராஜ ஜீயர் வியந்து, "தாங்கள் அன்றோ அடியேனுக்குக் கற்பித்தீர்? அடியேனையே கேட்பதென்?" என்ன, ஸ்ரீ சேனைமுதலியாரும், திருமாலிருஞ்சோலைத் திருக்கோயில் அர்ச்சகரும் நடந்தவற்றையெல்லாம் ஸ்ரீ யதிராஜ ஜீயரிடம் விண்ணப்பித்தனர். இந்தத் தெய்வீகத் திருவிளையாடல் மூலம், ஸ்ரீ கள்ளழகர் 'ஸ்ரீசைலேச' தனியனைச் சிறப்புடன் வெளிப்படுத்தியருளியதை மூவரும் உணர்ந்து மகிழ்ந்தனர்.
ஸ்ரீ சேனைமுதலியார் திருவரங்கத்திற்குச் சென்று, இந்நிகழ்வுகளை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முதலான அனைவருக்கும் அறிவித்தார். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியார்களும் "ஸ்ரீ கள்ளழகர் 'ஸ்ரீசைலேச' தனியனின் பெருமையை இவ்வளவு அழகாக வெளியிட்டருளினாரே!" என்று கொண்டாடினர்.
ஸ்ரீசைலேச தனியனைத் திருவேங்கடவன் வெளியிட்டருளினான் |
Image Source: https://twitter.com/gotirupati |
தீர்த்த யாத்திரை அந்தணருக்குத் திருவேங்கடவன் புரிந்த இன்னருள் |
ஒரு அந்தணர் தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கே தமது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
ஒரு இரவு, திருவேங்கடவன் அவரது கனவில் தோன்றி, 'ஸ்ரீசைலேச' தனியனை வெளிப்படுத்தி, "இம்மந்திரத்தைத் தினமும் ஜபம் செய்வாய்!" என்று திருவாணையிட்டருளினான்.
தீர்த்த யாத்திரை அடியவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பற்றி எதுவும் அறிந்திலர் என்றாலும், திருவேங்கடவன் திருவாணைப்படி, அவர் தினந்தோறும் மிகுந்த பக்தியுடன் 'ஸ்ரீசைலேச' தனியனை ஓதி வந்தார்.
தீர்த்த யாத்திரை அந்தணர் தனியனின் மகிமையை உணர்ந்தார் |
ஒரு நாள், அந்தத் தீர்த்த யாத்திரை அடியவர், திருப்புரட்டாசித் திருவோணம் திருநாள் உற்சவத்திற்குத் திருவேங்கடம் எழுந்தருளினார். அப்பொழுது, அங்கே ஸ்ரீ திருவேங்கட இராமானுஜ ஜீயர் தலைமையில், அருளிச்செயல் பாராயணம் தொடங்க இருந்த நேரம். திடீரென, திருவேங்கடவன் அர்ச்சகரின் மீது ஆவேசித்து, தீர்த்த யாத்திரை அடியவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, அருளிச்செயல் கோஷ்டியின் முன் நிற்க வைத்து, "அவர்கள் சொல்வதைக் கேள்!" என்றும், கோஷ்டியினரிடம், "இவன் சொல்வதைக் கேளுங்கள்!" என்றும் அருளினான்.
திருவரங்கன் அருளிய ஸ்ரீமுகம் படியே, ஸ்ரீ பெரிய கேள்வி அப்பன் ஜீயரும் 'ஸ்ரீசைலேச' தனியனை ஒதத் தொடங்கினார். தீர்த்த யாத்திரை அடியவர் திகைத்தார். "ஒரு விண்ணப்பம் கேட்டருளவேண்டும்" என்று வணங்கி, "திருவேங்கடவன் இத்தனியனை அடியேனுக்குக் கனவில் கற்பித்தார்! இதை நீங்களும் ஓதுகின்றீர்! இதென்ன அதிசயம்!!" என்று உரைத்தார். கோஷ்டியினர் அவரிடம், "ஆகில், நீர் தனியனை முழுவதும் ஓதுங்கள், கேட்போம்!" என்ன, தீர்த்த யாத்திரை அடியவரும், கைகளைக் கூப்பியபடி, 'ஸ்ரீசைலேச' தனியனை ஓதினார்.
அதைக் கேட்டுகந்த கோஷ்டியினரும், 'ஸ்ரீசைலேச' தனியனின் வரலாற்றை நன்கு விளக்கினார்கள். அவர்கள் உரைத்தவற்றையெல்லாம் கேட்டபின், தீர்த்த யாத்திரை அடியவர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளில் தஞ்சமடைய திருவரங்கத்திற்கு விரைந்தார்.
தீர்த்த யாத்திரை அந்தணர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தார் |
மடத்தை அடைந்த பிறகு, தீர்த்த யாத்திரை அடியவர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் வேரற்ற மரமென விழுந்து வணங்கி, ஸ்ரீ மணவாள மாமுனிகள் கேட்டருளிய கேள்விகளுக்கு விடைகளையும் விண்ணப்பித்து, தமக்குத் திருவேங்கடவன் செய்த இன்னருளையும் விவரித்தார். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தம் சிரத்தின் மீது வைத்து வணங்கினார்.
"இப்படித் திருவேங்கடவனுடைய திருக்கண்களின் அருள் நோக்குக்கு இலக்கானவனோ நீ?" என்று மகிழ்ச்சியடைந்த ஸ்ரீ மணவாள மாமுனிகள், தீர்த்த யாத்திரை அடியவரைத் தம் திருக்கைகளால் தொட்டு எழுந்திருக்கச் சொல்லி, புன்முறுவலுடன், "இனி உனக்கு வேண்டுவது என்?" என்ன, தீர்த்த யாத்திரை அடியவர், "மோட்சத்திற்கான மந்திரமாம் ஸ்ரீசைலேச மந்திரத்தைப் பெற்றேன். மந்திரத்தைக் கற்பித்த ஆசாரியரான திருவேங்கடவனின் இன்னருளைப் பெற்றேன். அம்மந்திரத்தால் வணங்கப்படும் தெய்வமான தங்களது இன்னருளையும் பெற்றேன். இதற்கு மேலும் அடியேனுக்கு வேண்டுவது ஒன்றுண்டோ?" என்று கூறி, கைகளைத் தட்டிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்.
தீர்த்த யாத்திரை அந்தணர் வீடுபேறு பெற்றார் |
தீர்த்த யாத்திரை அடியவரின் நினைவும், வாக்கும், செயலும் தமது பரமாசாரியரான [குருவின் குருவான] ஸ்ரீ பிள்ளைலோகாசாரியரின் திருவாக்கினை அடியொற்றி உள்ளதைக் கண்டு, ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவுள்ளம் மிகவும் உகந்தருளி, தீர்த்த யாத்திரை அடியவருக்குத் திருவிலச்சினை சாதித்து, தமது அடியாராக ஏற்றுக்கொண்டு, 'திருவேங்கட ராமானுஜ தாசர்' என்ற திருநாமமும் அருளினார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியார்கள் ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ தாசரை ஸ்ரீ நம்பெருமாளிடம் அழைத்துச் சென்றனர். ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ தாசரின் திருமுடியை ஸ்ரீ சடகோபன் அலங்கரித்தபோது, ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சகர் மூலம் "திருவேங்கட ராமானுஜ தாசரே, உமக்கு மேல்வீடு தந்தோம்!" என்று அருள, உடனே, ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ தாசரின் திருமேனி தரையில் விழுந்தது! அவர் பரமபதம் எழுந்தருளிவிட்டார்!!
ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ தாசரின் சரம கைங்கர்யங்களை [இறுதிச் சடங்குகளை] ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியார்கள் செய்தருளினார்கள்.
ஸ்ரீசைலேச தனியனை ஸ்ரீ பதரிநாராயணன் வெளியிட்டருளினான் |
Image Source: https://www.aartichalisa.com/badrinath-ki-aarti/ |
ஸ்ரீ அயோத்யா இராமானுச தாசருக்கு ஸ்ரீ பதரிநாராயணப் பெருமாள் செய்த இன்னருள் |
ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் என்ற அடியவர் திருவதரி [பத்ரிநாத்] திருத்தலத்தில் ஸ்ரீ பதரி நாராயணப் பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தார்.
ஸ்ரீ பதரி நாராயணன் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரது கனவில் தோன்றி, அவருக்கு "ஸ்ரீசைலேச" தனியனைப் பல முறை கற்பித்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளைகளிலும், அருளிச்செயல் பாராயணத்தைத் தொடங்குவதற்கு முன்னும், முடித்த பின்னும் ஓதுமாறு திருவாணையிட்டருளினான்.
ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி ஏதும் அறிந்திலர் என்றாலும், எம்பெருமானின் திருவாணையைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பாரிப்பும் ஸ்ரீ இராமானுச தாசரின் ஆசாரிய சேவையும் |
இதற்கிடையில், ஒரு நாள், திருவரங்கத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருக்கண்களில் தாரை தாரையாகத் திருமுத்துக்கள் [கண்ணீர்] உதிர்த்த படி, வடநாட்டுத் திருத்தலங்களின் திருநாமங்களைப் பாடிப் பரவினார். அடியார்கள் அவரைச் சமாதானம் செய்ய முயன்றும் திருக்கண்களைத் திறக்கவில்லை. அடியார்கள் யாவரும் "இதுவென்?" என வருந்தினர்.
அந்நேரத்தில், ஸ்ரீ ராமானுஜ தாசர் என்ற அடியார், “ஆசாரியரே! தாங்கள் திருவுத்தரவிட்டால், தங்கள் சார்பாக வடநாட்டுத் திருத்தலங்களை அடியேன் சேவித்து வந்து, தங்கள் திருவடிகளில் அதைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன்," என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருக்கண்களைத் திறந்து, "வாரீர் ராமானுஜ தாசரே!" என்றருளி, அவருக்குத் தமது திருவுத்தரீயத்தைப் பிரசாதித்து, திருவுள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியுடன் அனுமதி வழங்கினார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திவ்ய பாதுகைகளை எப்போதும் வழிபடும் ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை என்ற மற்றொரு அடியாரையும் ஸ்ரீ ராமானுஜ தாசருடன் செல்லும்படி ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவாணை பிறப்பித்தருளினார்.
திருவதரியில் ஸ்ரீ அயோத்யா இராமானுச தாசருடன் சந்திப்பு |
ஸ்ரீ ராமானுஜ தாசர் மற்றும் ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை ஆகிய இருவரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திவ்ய பாதுகைகளைச் சிரத்தின் மேல் வைத்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, தங்கள் வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டனர். அனைத்துத் திருத்தலங்களையும் சேவித்த பிறகு, அவர்கள் இறுதியாக திருவதரியை அடைந்து, ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரைச் சந்தித்தனர்.
ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் அவர்களை மிகவும் அன்புடன் வரவேற்று, நன்றாக உபசரித்து, சன்னிதியில் அருளிச்செயல்களை ஓதுமாறு வேண்டினார். ஸ்ரீ ராமானுஜ தாசரும், ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையும் 'ஸ்ரீசைலேச' தனியனை ஓதினர்.
ஸ்ரீசைலேச தனியனின் மகிமையை ஸ்ரீ அயோத்யா இராமானுச தாசர் அறிந்தார் |
பெரும் வியப்புற்ற ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர், “இந்த மந்திரம் தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினார். ஸ்ரீ நம்பெருமாள் அருளால் திருவரங்கத்தில் 'ஸ்ரீசைலேச' மந்திரம் திருவவதாரம் செய்ததையும், மற்றும் திருமாலிருஞ்சோலையிலும், திருவேங்கடத்திலும் இத்தனியன் தொடர்பாக நிகழ்ந்த தெய்வீக நிகழ்வுகளையும் ஸ்ரீ ராமானுஜ தாசரும், ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையும் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்கு விளக்கினர்.
மிகுந்த உற்சாகமடைந்த ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர், அதே பிரமாதீச வருடம், ஆனித் திருமூல நன்னாளில், இரவு தம் கனவில் திருவதரி எம்பெருமான் தோன்றி, இத்தனியனைத் தமக்கு அருளியதை விவரித்தார். இதைக் கேட்ட ஸ்ரீ ராமானுஜ தாசரும், ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையும் மிகவும் மகிழ்ந்தார்கள்.
"ஸ்ரீ மணவாள மாமுனிகள் பற்றி மேலும் அறியவேண்டும்" என்று ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் வேண்ட, ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சிறப்புகளைத் தெரிவித்தார்.
பிறகு, ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் புக விரும்பினார். ஸ்ரீ ராமானுஜ தாசர் அவர் சார்பாகத் திருவதரி திருக்கோயிலைப் பராமரிக்கத் தாமே முன்வந்தார். தமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்த ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர், ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையுடன் திருவரங்கத்திற்குப் புறப்பட்டார்.
திருவேங்கடத்தில் ஒரு திருப்பம்! |
வழியில், இருவரும் திருவேங்கடம் சென்றடைந்து எம்பெருமானைச் சேவித்தனர். திருவேங்கடவன் [அர்ச்சகர் மூலம்] ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரைத் திருவேங்கடத்தில் தங்கித் தமக்குக் கைங்கர்யங்கள் புரியும்படித் திருவாணையிட்டான். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளைத் தஞ்சமடைய முடியாததால் வருத்தமடைந்தாலும், ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் திருவேங்கடவனின் திருவாணைக்குக் கீழ்ப்படிந்தார்.
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் கனவில் திருவேங்கடவன் |
இதற்கிடையில், திருவரங்கத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தது:
ஸ்ரீ பிரதிவாதி பயங்காரம் அண்ணா ஒரு கனவு கண்டார். திருவேங்கடவன் [ஒரு ஏகாங்கி வடிவத்தில்] தோன்றி,“அண்ணா! நாளை, ஸ்ரீ ஆதிசேடனின் திருவவதாரமாகிய உமது ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ நம்மாழ்வாரின் "ஒழிவில் காலமெல்லாம்" பாசுரம் [திருவாய்மொழி] காரணமாக, நமக்குச் சேவை செய்வதில் மிகுந்த பாரிப்புடன் இருப்பர். நாம் தேர்ந்தெடுத்த நல்லதொரு அடியவரின் சேவையால் அவருடைய திருவுள்ள விருப்பம் நிறைவேறும் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்!" என்றருளினான்.
அடுத்த நாள், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா தமது ஆசாரியரை வணங்கச் சென்றபோது, ஸ்ரீ மணவாள மாமுனிகள், அதே "ஒழிவில் காலமெல்லாம்" திருவாய்மொழிப் பாசுரம் குறித்து, திருவேங்கடப் பெருமாளுக்குத் தொடர்ந்து சேவை செய்ய ஏங்கியபடி, மிகவும் பரபரப்பான நிலையில் இருப்பதைக் கண்டார்!
உடனேயே, ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா தமது கனவை விவரித்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தை ஆற்றினார். ஸ்ரீ மணவாள மாமுனிகள், மிகவும் உகந்தவராய், தமது மற்ற அட்டத்திக்கயங்களை நோக்கி, "உங்கள் திருவுள்ளங்களுக்கு என்ன தோன்றுகின்றது?" என்று வினவ, "இந்நேரம் திருவேங்கடத்திலும் ஒரு அதிசயம் நடந்திருக்கும். அதனை அறிந்து வர ஒருவரை நியமித்தருளவேண்டும்," என்று அவர்கள் விண்ணப்பித்தனர்.
ஸ்ரீ அழகர் அண்ணன் என்ற அடியார் திருவேங்கடம் சென்றார் |
ஸ்ரீ அழகர் அண்ணன் என்ற ஒரு அடியார் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்கி, அச்சேவையை மேற்கொண்டு ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளதை உகப்பித்தார்.
ஸ்ரீ அழகர் அண்ணன் திருவேங்கடத்தை அடைந்து, ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையைச் சந்தித்தார். ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரை ஸ்ரீ அழகர் அண்ணனுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் புகுவதற்கு, திருவதரியிலிருந்து திருவரங்கம் நோக்கி ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் புறப்பட்டதையும், அவரைத் திருவேங்கடத்திலேயே இருந்து தொண்டு புரியும்படித் திருவேங்கடவன் திருவாணையிட்டதையும் ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை ஸ்ரீ அழகர் அண்ணனுக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரே “ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை” செய்யத் திருவேங்கடவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று புரிந்துகொண்ட ஸ்ரீ அழகர் அண்ணன், திருவரங்கத்தில் நடந்தவற்றைத் தெரிவித்தார். ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவுள்ள உகப்புக்கு, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சார்பாகத் திருவேங்கடத்தில் தொண்டு புரிவதே தமது பேறு என்று அறுதியிட்டார்.
ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை திருவரங்கம் திரும்பினார் |
பிறகு, ஸ்ரீ இளையழ்வார் பிள்ளையும் ஸ்ரீ அழகர் அண்ணனும், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திவ்ய பாதுகைகளுடன், திருவரங்கத்தை அடைந்தார்கள். ஸ்ரீ இளையழ்வார் பிள்ளை ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்கி, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் இன்னருளால் தாமும் ஸ்ரீ ராமானுஜ தாசரும் வடநாட்டு யாத்திரையை வெற்றிகரமாக முடித்ததையும், திருவதரி திருத்தலத்தில் நடந்த அற்புதமான நிகழ்வுகள் பற்றியும் தெரிவித்தார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவுள்ளம் மிகவும் உகந்து, ஸ்ரீ இளையழ்வார் பிள்ளையைத் தழுவி, மிகுந்த அன்பான வார்த்தைகளை அருளினார். தாம் பாரித்தபடியே, திருவேங்கடத்தில் அன்றாடம் கைங்கர்யங்கள் செய்யத் திருவேங்கடவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரைப் பற்றிக் கேள்வியுற்று, ஸ்ரீ மணவாள மாமுனிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைப் பார்த்துப் புன்னகைத்து, “திருவேங்கடவன் உமக்காகவே இவ்வாறு அருள் புரிந்தான்!” என்று அருளினார்.
சில நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்கு திவ்ய பாதுகைகளை அருளுமாறு ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளை விண்ணப்பிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் சம்மதித்து அருளினார். அப்போது, சில அடியார்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் திருப்புரட்டாசி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளத் திருவேங்கடம் செல்ல அனுமதி கோரினர்!! ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்காக ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திவ்ய பாதுகைகளை அவர்களே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சென்றனர்!
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்குத் திருவேங்கட யாத்திரை மேற்கொள்ளத் திருவாணை |
சில நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு, திருப்புரட்டாசித் திருவோணத்தை முன்னிட்டு, திருவேங்கடம் செல்ல உத்தரவிட்டருளினார். ஸ்ரீ அப்பிள்ளை, "காவேரி கடவாத கந்தாடையண்ணன் அன்றோ?" என்ன, "அரங்கத்து அரவின் அணையான் வானவர்கள் சந்தி செய்ய நின்றது மந்தி பாய் வடவேங்கட மாமலையில் அன்றோ?" என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளினார் [இவை ஸ்ரீ திருப்பாணாழ்வார் அருளிய 'அமலனாதிபிரான்' பாசுர வரிகள்].
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தமது ஆசாரியரின் திருவுள்ளத்திற்கு உடனடியாக பணிந்து, பயணத்திற்குத் திருப்பல்லக்கில் ஏற மறுத்து, மற்ற அடியார்களுடன் சேர்ந்து, திருவடிகளால் நடந்து யாத்திரை மேற்கொண்டருளினார்.
திருவதரியிலிருந்து திரும்பிய ஸ்ரீ இராமாநுச தாசர் திருவேங்கடம் எழுந்தருளினார் |
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவேங்கடத்தை அடைந்தார். திருத்தலத்தார் எல்லோராலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டார். ஸ்ரீ திருமலை அனந்தாழ்வானின் திருவம்சத்தினர் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு அனைத்து வகையான கைங்கர்யங்களும் செய்தனர்.
அதே நாள், திருவதரியிலிருந்து ஸ்ரீ ராமானுஜ தாசரும் திருவேங்கடம் எழுந்தருளினார்! ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனைக் கண்டு, அவரது திருவடிகளைத் தரையில் தடி போல விழுந்து தொழுதார்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அவரைக் கண்டு, "வாரீர் ராமானுஜ தாசரே! அந்நிய தேசத்தில் இருக்கும் புத்திரனின் மீது தகப்பனாரின் இதயம் ஈடுபட்டு இருக்குமாபோலே, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளம் உம்மிடம் ஈடுபட்டு உள்ளது!" என்றருளி, ஸ்ரீ ராமானுஜ தாசரை ஆரத் தழுவினார். ஸ்ரீ இராமானுஜ தாசரின் ஆசாரிய பக்தியை அங்குள்ள எல்லோருக்கும் விளக்கி, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் கொண்டாடினார்! பிறகு, திருவேங்கடவனை மங்களாசாசனம் செய்தருளினார்.
ஸ்ரீ இராமானுச தாசர் அளித்த அற்புதமான ஆலோசனை |
ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரும் ஸ்ரீ ராமானுஜ தாசரைக் கண்டு மிகவும் ஆனந்தித்தார். ஒரு தகுதியான ஸ்ரீவைஷ்ணவரிடம் திருவதரித் திருக்கோயில் நிர்வாகத்தின் பொறுப்பைத் தாம் ஒப்படைத்ததை ஸ்ரீ ராமானுஜ தாசர் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்குத் தெரிவித்தார். ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரும் தாம் ஸ்ரீ இளையாழ்வார் பிள்ளையுடன் திருவதரியை விட்டுத் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்ட பிறகு நடந்தவற்றையெல்லாம் விளக்கினார்.
அப்போது, ஸ்ரீ ராமானுஜ தாசர், "வாரீர் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசரே! ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் புகமுடியவில்லை என்ற குறையை விடும். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்திற்கு இரட்டிப்பு உகப்பை அளிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் அடைவதைக் காட்டிலும் சிறப்பான நற்பயனைப் பெற, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவடித்தாமரைகளில் தஞ்சமடைவீர்!" என்று அருள, இந்த ஆலோசனையை மிகுந்த உகப்புடன் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசர் ஏற்றுக்கொண்டு, ஸ்ரீ ராமானுஜ தாசர் முன்னிலையில், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவடிகளில் பணிந்து முறையிட்டார்.
ஸ்ரீ அயோத்யா இராமானுச தாசர் பெற்றற்கரிய பேறு பெற்றார் |
"ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுளத்தை ஒட்டி ஸ்ரீ ராமானுஜ தாசர் ஆலோசனை அருளினாரே!" என்று ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உகந்தருளி, பொங்கும் கருணையுடன் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்குத் திருவிலச்சினை சாதித்தருளினார். திருவேங்கடவனும் ஸ்ரீ அயோத்யா ராமானுஜ தாசருக்குப் பல பிரசாதங்களைப் பரிசளித்து, அவருக்கு ‘கந்தடை ராமானுஜ ஐயங்கார்’ என்று திருநாமம் சூட்டினான்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவுள்ளம் முற்றும் மகிழ்ச்சியால் நிறைந்தது |
பின்னர், ஸ்ரீ ராமானுஜ தாசர், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவடிகளை வணங்கி, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுடன் பல திருத்தலங்களுக்குச் சென்று சேவித்து, முடிவில் திருவரங்கத்தை அடைந்தார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு வடநாட்டுத் திருத்தலங்களின் அனைத்துப் பிரசாதங்களையும் ஸ்ரீ ராமானுஜ தாசர் சமர்ப்பித்தார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் அனைத்துப் பிரசாதங்களையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, தமது பொன்னடிகளை ஸ்ரீ ராமானுஜ தாசரின் திருமுடியில் வைத்து, "வடநாட்டுத் திருத்தலங்களைச் சென்று சேவித்தோம் ஆயிற்று!" என்று அருளி, கருணை பொங்க, ஸ்ரீ ராமானுஜ தாசரை இறுகத் தழுவி அருளினார்.
'ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர' தனியன் வரலாறு |
Image Source: https://vanamamalai.us/ |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமக்கு மிகவும் பிரியமான அடியாரான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் 8 சிறப்பான அடியார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் "அஷ்டதிக்கஜங்கள்" [அட்டத்திக்கயங்கள்] என்று நியமித்தருளினார். அவர்களுள் ஒருவர் ஸ்ரீ இராமாநுசப் பிள்ளான்.
ஸ்ரீ இராமாநுசப் பிள்ளானின் திருமகனார் "ஸ்ரீ ஆத்தான்" என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ வரதகுரு. ஸ்ரீ ஆத்தான் வரதகுருவின் திருமகனாராகிய ஸ்ரீ "ஞானத்ருஷ்டி" அழகப்பங்கார் ஸ்ரீ வானமாமலை தெய்வநாயகப் பெருமாளின் அம்சமாகத் தோன்றியவர். இந்த ஸ்ரீ "ஞானத்ருஷ்டி" அழகப்பங்கார் அருளிய "ஸ்ரீ ககனகிரி முனி சரித்திரம்" என்ற நூலில் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் தனியனின் திருவவதாரம் விவரிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் ஆவது:
ஒரு நாள், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் கோஷ்டியில், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும், அவரது அடியார்களும், மற்றையோரும் சத் விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருக்க, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் அடியாரான ஸ்ரீ தொட்டையங்காரப்பையை ஸ்ரீ மணவாள மாமுனிகள் நோக்கி, "உமது ஆசாரியரின் பெருமையை எப்பொழுதும் பேசும் வண்ணம் ஒரு தனியன் அருளிச்செய்வீர்!" என்ன, ஸ்ரீ தொட்டையங்காரப்பையும் தமது குருவான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டு, அவரது திருவடித் தாமரைகளைத் தியானித்தபடி
ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் சதா |
ததாயத் ஆத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||
என்ற தனியனை இட்டருள, ஸ்ரீ மணவாள மாமுனிகள் மிகவும் உகந்து, "திருப்பல்லாண்டில் முதல் இரண்டு பாசுரங்களை ஒன்றாகவே சேவிப்பது போலவும், இரண்டு வரிகளாக இருந்தும் துவயத்தை ஒரே மந்திரமாகப் பார்ப்பது போலவும், இரண்டு பத்தியங்கள் இருந்தும் ஸ்ரீ ஞானப்பிரான் அருளிய சரம சுலோகத்தை ஒரே சுலோகமாகப் பார்ப்பது போலவும், இரண்டு எழுத்துக்கள் இருந்தும் "ஹரி" என்பதை ஒரே திருநாமமாகப் பார்ப்பது போலவும், திருவரங்கன் அருளிய ஸ்ரீசைலேச தனியனும், ஸ்ரீ தொட்டையங்காரப்பை அருளிய ரம்யஜாமாத்ரு தனியனும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், ஒரே மகிமை பொருந்தியவை என்றும் புரிந்துகொண்டு, இவற்றை நீங்கள் ஒன்றாகவே சேவிக்கவேண்டும்," என்று அருளினார்.
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் தலையாய அடியார்களான ஸ்ரீ தொட்டையங்காரப்பை, ஸ்ரீ சமரபுங்கவகுரு, ஸ்ரீ சுத்தசத்வமண்ணன், ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா, ஸ்ரீ இராமானுஜம் பிள்ளை, ஸ்ரீ திருக்கோட்டியூர் ஐயர், ஸ்ரீ ஞானக்கண் ஆத்தான், ஸ்ரீ பள்ளக்கால் சித்தர், ஸ்ரீ களமூர் வரதமுனிகள் ஆகிய நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் இதனைக் கொண்டாடி, இரு தனியன்களையும் ஒன்றாகவே சேவித்தனர்.
இதனால், சில ஆசாரிய பரம்பரைகளில் இவ்விரண்டு தனியன்களையும் சேர்த்து ஓதும் வழக்கமும் இருந்து வருகின்றது.
முடிவுரை |
எம்பெருமானுக்கு மிகவும் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ ஆதிசேடன். அவரது திருவவதாரமாகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளைப் பறைசாற்றும் இத்தனியனை, ஆழ்வார்களின் பாடல் பெற்ற 108 திருத்தலங்களுள் முதன்மையானதான திருவரங்கத்தில், அந்த 108 திருத்தலங்களுக்கும் தலைவனானவனும், குரு பரம்பரையில் முதல் ஆசாரியனாகத் திகழ்பவனும் ஆகிய ஸ்ரீ திருவரங்கநாதனே வெளியிட்டு அருளினான். இது ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.
நாமும் இத்தனியனை ஸ்ரீ நம்பெருமாள் திருக்கட்டளையின் படியே ஓதி, "மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்!" என்று எப்போதும் அந்த உத்தம ஆசாரியருக்குப் பல்லாண்டு பாடுவோமாக.
All Pasuram Quotations Source: http://www.acharya.org/wp/ & http://www.prapatti.com/ |
Pardon my ignorance Ammangar. Is this eedu commentary available as pdf somewhere? And also has any acharya made this a bit compact so that it is easily readable? If so, requesting to share the same. Sri varavaramunaye namaha
ReplyDeleteSwamin, kindly refer to http://divyaprabandham.koyil.org/index.php/thiruvaimozhi/ - a team of Sri Vaishnavas have done this kainkaryam to spread Eedu commentary to one and all. They have also made e-Books for each decad. Hope this helps. Yathindrapravanam Vandhe! :)
DeleteThank you so much for guiding adiyen. Yathindrapravanam vandhe🙏
ReplyDeleteAdiyen's utmost pleasure! Yathindrapravanam Vandhe! Namo nama: :)
Delete