Search This Blog

Monday, 28 February 2022

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் - சில தேன்துளிகள்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் - சில தேன்துளிகள்


Image Source: Sri Srirangam Raghava Perumal Ramanujadasar, Swami Periya Nambigal Thirumaaligai Shishya


முன்னுரை


ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய நூல்களுள் "ஆர்த்தி பிரபந்தம்" என்ற நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாகும்.

இந்நூலில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் "எதிராசர்" என்று கொண்டாடப்படும் ஸ்ரீ இராமானுசரை நோக்கி, தம்மிடம் எல்லையற்ற குறைகள் இருந்தபோதும், தாம் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தவர் என்பதே காரணமாகத் தமக்கு [எவ்விதத் தடையும் அற்ற தொண்டுகள் செய்ய] மோட்சம் அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்வதாக அமைந்துள்ளது.

கற்றற்கரிய நான்மறைகளின் நுட்பமான உட்பொருள்களாக விளங்கும் மிக மிகச் சீரிய ஆன்மீக உண்மைகளை, மிக மிக எளிமையான நடையில், முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் அருளுவதில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஒப்பற்றதொரு மாமேதை. இவ்வுண்மையை இந்நூல் தோறும் காணலாம். அவற்றுள் வெகு சில தேன்துளிகளைச் சுவைப்பதே இச்சிற்றுரையின் நோக்கம்.

மேல்வரும் 5 கேள்விகளுக்கு ஆர்த்தி பிரபந்தம் என்ற நூலில் ஸ்ரீ மணவாள மாமுனிவகள் அருளிய விடைகள் யாவை என்பதனைக் காண்போம், வாரீர்!

1. தமக்கு யார் இறை?

2. தாம் யார்?

3. எது பேறு?

4. அப்பேற்றுக்கு எது வழி?

5. அப்பேற்றுக்கான தடைகளைத் தகர்க்க எது வழி?






தமக்கு யார் இறை?


திருமகள் கேள்வனே பரம்பொருள். அவனது திருப்பாதுகையாகத் திகழ்பவர் ஸ்ரீ நம்மாழ்வார் என்கிற செல்வச் சடகோபர். ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் திருப்பாதுகையாகத் திகழ்பவர் எந்தை எதிராசர் ஆகிய ஸ்ரீ இராமானுசர். அந்த ஸ்ரீ இராமானுசரைத் தமது தெய்வமாகக் கொண்டவர் ஸ்ரீ வடுக நம்பிகள் என்கிற மகான். ஸ்ரீ வடுக நம்பிகளது நிலையே தமக்கும் ஸ்ரீ இராமானுசர் அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்.




தாம் யார்?


ஆசாரியர்கள் யாவரும் போற்றும் புகழ் பெற்றவர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை என்கிற மகாசாரியர். அவருடைய நறுமணம் கமழும் மலரடிகளை அடைந்த ஒரு பொருள் ['வத்து'] என்றே தம்மை ஸ்ரீ மணவாள மாமுனிகள் அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

இதனால், தமது நறுமணத்தின் [பெருமைகளின்] காரணம் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடி தொடர்பே என்பதையும், தம்மை ஸ்ரீ இராமானுசர் எப்படி வேண்டுமென்றாலும் ஏவிக் குற்றேவல் கொள்ளலாம் என்பதையும் உணர்த்துகின்றார்.

"ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை தமக்குக் காட்டிக்கொடுத்த மிக்க பெரும் தெய்வமான ஸ்ரீ இராமானுசரே தமக்கு எல்லா உறவும்!" என்று முழங்குகின்றார்.




எது பேறு?


"மனம், மெய், மொழிகளால் ‘வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!’ என வாழ்த்துவார்களது அடியார்களின் அடியார்களுடைய திருவடிகளில் [ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் போன்ற] விண்ணோர்களும் சிரம் தாழ்த்துவர்!” என்று அருளுகின்றார். இதனால், ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளுக்குப் பொங்கும் பரிவுடன் பல்லாண்டு பாடும் அடியார்களுக்கு அடியார்கள் என்று தொடங்கி இறுதி நிலையில் இருக்கும் ஸ்ரீ இராமானுசரின் அடியார்கள் வரை அவ்வடியவர்கள் அனைவருக்கும் நாம் பல்லாண்டு பாடி, தொண்டு செய்து இருத்தல்வேண்டும் என்று புலப்படுகின்றது.

"சரி, அதற்கு ஏன் பரமபதம் செல்லவேண்டும்?" என்றால், இந்த உலக வாழ்வில் பிணி, பசி, மூப்பு, துன்பம், பிரளய காலம் போன்ற தடங்கல்கள் இருப்பதால், தொண்டுகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போகும். ஆதலால், "பவம்" என்ற இவ்வுலக வாழ்வில் இருப்பது நமது ஆன்மாவின் பண்பன்று, "திவம்" என்ற ஸ்ரீவைகுந்தத்தில் தடையின்றி தொண்டு புரிவதே நமது ஆன்மாவின் பண்பு என்று அருளுகின்றார்.




அப்பேற்றுக்கு எது வழி?


தமது ஆசாரியரான ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் இன்னருளே தமக்குத் தஞ்சம் என்று பறைசாற்றுகின்றார். "ஸ்ரீ இராமானுசர், 'இவர் நம் திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தவர்!' என்று எண்ணியே நமக்குப் பரமபதம் அருளுவார்," என்று உணர்ந்து, தம் ஆன்ம வாழ்ச்சியைப் பற்றிய பயமற்று வீற்றிருக்கின்றார்.

"ஆசாரிய அபிமானமே உத்தாரகம்" - என்பதே ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் அருளிய சீரிய பொருள் அன்றோ? அதாவது, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையவரான ஒரு ஆசாரியர், தமது இன்னருளால், நம்மைப் பற்றி "இவன் நம் பையல்" என்று திருவுள்ளத்தில் நினைத்திருப்பார் என்றால் அதுவே நமது ஆன்ம வாழ்ச்சிக்கு வழியாம்.




அப்பேற்றுக்கான தடைகளைத் தகர்க்க எது வழி?


"அற்றது பற்றெனில் உற்றது வீடு" என்று ஸ்ரீ நம்மாழ்வார் திருவாக்கு. சிற்றின்பங்களில் மூழ்கியிருக்கும் ஐம்புலன்களே தடையாம். கலியை வென்று, இந்த உலகத்தை காத்தருளிய ஸ்ரீ இராமானுசருடைய திருவடிகளின் இன்னருளால் ஐம்புலன்களை அடக்கி, ஸ்ரீ இராமானுசருடைய திருவடிகளை அடைந்த அடியார்களின் திறத்தில் மனம், மெய், மொழிகளால் தொண்டு செய்து இருப்பதே நமக்கு நலம் என்று அருளி உள்ளார்.




முடிவுரை


ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளின் மீது ஸ்ரீ மணவாள மாமுனிகள் எவ்வளவு அன்பு பூண்டு இருந்தார் என்பதைச் சிறிதளவு கண்டோம். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியார்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளின் மீது இதே அன்பைப் பொழிந்தனர்! அப்படிப்பட்ட ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அடியவர்களின் அடியவர்களுடைய திருவடிகளில் மெய் நா மனத்தால் தொண்டு புரிந்து அனைத்து நன்மைகளையும் பெறுவோமாக!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




4 comments:

  1. அடியேன்..So simply and beautifully saying, உய்ய ஒரே வழி உடையவர் திருவடி. அற்புதமாக எழுதி, எங்களுக்கு தேன் புகட்டியுள்ளீர்கள். 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Adiyen. Dhanyosmi, Ma. That's a such a wise summary, indeed!

      It's also interesting to note that Swami Manavala Mamunigal's Shishyas directed that faith towards Swami Manavala Mamunigal Himself and proclaimed "உய்ய ஒரே வழி மாமுனிவன் பொன்னடி!" Ref: மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன் Paasuram by Sri Erumbiyappaa. :-)

      Delete
  2. அருமையான கட்டுரை. ஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஆர்த்தி பிரபந்தம் அருமையான தமிழ். அதற்கான உங்கள் விளக்கவுரையும் மிகச் சிறப்பு. ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ஸ்ரீராம். உங்கள் மெய்யான அனுபவத்தைப் படித்தலே ஒரு இனிமையான அனுபவம்.

      Delete