ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் ஸ்ரீ அனுமன் |
Image Source: https://in.pinterest.com/pin/35325178303834023/ |
முன்னுரை |
ஸ்ரீ இராமனின் புகழ் எங்கெல்லாம் பாடப்படுகின்றதோ, அங்கெல்லாம் சிரத்தின் மேல் கூப்பிய திருக்கரங்களுடன், திருக்கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைய எழுந்தருளும் ஸ்ரீ அஞ்சனை மைந்தனின் பெருமையை ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் மூலமாகவும், அவற்றிற்கு ஆசாரியர்கள் அருளிய உரைகள் மூலமாகவும் இக்கட்டுரையில் ஓரளவு சுவைக்கப்போகின்றோம்.
இக்கட்டுரையில் உள்ள பாசுரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். மகிழ்வோம், வாரீர். குறிப்பு: இக்கட்டுரையை அலங்கரிக்கும் பாசுரங்களை 7 தலைப்புகளின் கீழ் பகுத்துள்ளேன். அந்தத் தலைப்புகளின் கீழ் குறிப்பிட்ட பாசுரங்களையும், அவற்றிற்கான உரைகளையும் தொகுத்தளித்தால் பொருத்தமாக இருக்கும் என்பது முற்றிலும் அடியேனின் கற்பனையே. இக்கண்ணோட்டத்திற்கும் ஸ்ரீ இராமானுச தரிசன ஆசாரிய பெருமக்களுக்கும் [அடியேன் அறிந்தவரையில்] எந்தத் தொடர்பும் இல்லை. இதில் தவறுகள் இருப்பின், அடியேனே பொறுப்பு. சரியாக இருப்பின், அது ஆசாரியர்களின் இன்னருள். |
1. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 31 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
"ஸ்ரீ இராமானுசர், காண்பதற்கு மிக அழகான தோள்களை உடைய தென்னத்தியூரர் என்கிற ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் திருவடிகளுக்கு, மிகவும் அன்பு பூண்டவர்," என்று முழங்கும் இப்பாசுரத்தில் "காண்தகு தோள் அண்ணல்" என்ற சொற்றொடருக்கு, ஆசாரியர் அருளியுள்ள உரையில், ஸ்ரீமத் இராமாயண சுலோகம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:
ஸ்ரீ அனுமன் முதன்முதலில் ஸ்ரீ இராமபிரானைக் கண்ட போது, "தங்களது பருத்து, உருண்டு, நீண்டு இருக்கும் அழகிய தோள்கள், ஏன் தக்க அணிகலன்களால் அலங்கரிக்கப்படவில்லை?" என்று வினவுகின்றார். ஆசாரியர்கள் அருளியுள்ள உரையில் ஸ்ரீ அனுமனின் வீரத்தைப் பற்றிய ஒரு குறிப்பு: "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பது போல, ஸ்ரீ அனுமன், தாமே ஒரு மாவீரர் என்பதால், ஸ்ரீ இராமபிரானின் மாவீரத்தைப் பறைசாற்றும் அந்தச் சுந்தரத் தோள்களைக் கண்டு மிகவும் ஈர்க்கப்படுகின்றார். "எல்லோருக்கும் நிழல் தரக்கூடிய இப்பெரிய தோள்களை உடைய இவரே சுக்கிரீவனைக் காக்கத் தகுந்தவர்!" என்று திடமாக முடிவு செய்கின்றார். குறிப்பு: இதே சுலோகத்திற்கு ஆசாரியர்கள் அருளியுள்ள மற்றுமொரு அற்புதமான ஆழ்பொருள்: ஒரு புறம் எம்பெருமானின் வீரத்தை மெச்சினாலும், அந்தச் சுந்தரத் திருத்தோள்களைக் கண்ட ஸ்ரீ அனுமனுக்கு, "அந்தோ! இப்படிப்பட்ட திண்தோள்களை அணிகலன்கள் இட்டு மறைக்காமல், எல்லோர் கண்ணெச்சில் படும்படிக் காட்டுகின்றாரே!" என்று பரிவு பொங்கி வர, இக்கேள்வியைக் கேட்டார் என்பதாம். |
2. ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் |
Image Source: https://in.pinterest.com |
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 3-10-8, 3-10-9, 3-10-10 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
முதல் இரண்டு பாசுரங்கள், ஸ்ரீ இராமபிரானின் கணையாழியை ஸ்ரீ அனுமன் வெற்றிகரமாக ஸ்ரீ சீதா தேவியிடம் சேர்ப்பித்து, அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்ததை விவரிக்கும் பாசுரங்கள். ஸ்ரீமத் இராமாயணத்தின் மையப்பகுதியாக ஸ்ரீ சுந்தர காண்டம் திகழ, ஸ்ரீ சுந்தர காண்டத்தின் மையப்பகுதியாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மூன்றாம் பாசுரத்தில் உள்ள "சீராரும் திறல் அனுமன்" என்பதற்கு ஆசாரியர் அருளும் உரை: வானரப்படையில் எவ்வளவோ திறமை மிகு வானரர்கள் இருந்த போதும், "இவனே காரியம் செய்ய வல்லான்!" என்று ஸ்ரீ இராமிபிரானே தேர்ந்தெடுத்து, தமது கணையாழியையும் கொடுக்கும் அளவிற்கு ஞானம் முதலான நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றவரும், நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்றவருமாகத் திகழ்பவர் ஸ்ரீஅனுமன். இதனாலேயே ஸ்ரீ இராமபிரான் இவரிடம் இந்த அரிய செயலை ஒப்படைத்தார். |
ஸ்ரீ பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு - பாசுரம் # 9 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
"திசைக் கருமம் திருத்தி" என்ற சொற்றொடருக்கு உரையில் உள்ள விளக்கம் பாரீர்:
ஒரு வேலையை "இதைச் செய்து விட்டு வா!" என்று சொல்லி அனுப்பினால், அவ்வேலையை மட்டுமின்றி, அதற்குப் பொருத்தமான மற்ற வேலைகளையும் செய்து முடித்து, "இனிமேல் அந்தத் திக்கை நோக்கி வேறு ஒருவரை அனுப்பவேண்டாம்" என்னும்படி வெற்றியுடன் திரும்புபவன் உத்தம சேவகன். இதுவே "திசைக் கருமம் திருத்துதல்" என்பதாம். ஸ்ரீ இராமபிரான் ஸ்ரீ அனுமனிடம், "சீதை இருக்கும் இடத்தை அறிந்து வா!" என்று தெற்குத் திசை நோக்கி அனுப்பினார். சீராரும் திறல் அனுமன் அன்னை சீதையைக் கண்டது மட்டுமின்றி:
இதுவே ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானிடமிருந்து 'உத்தம சேவகன்' பட்டம் பெறக் காரணம். |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 10-3-7 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
ஸ்ரீ இராமபிரானின் அடியவர்கள் கொடுக்கும் அடியைத் தாங்க முடியாமல் இராவணனின் படையைச் சேர்ந்தவர்கள், "எங்களை விட்டுவிடுங்கள்! கருணை காட்டுங்கள்!" என்று கெஞ்சுவதாக இப்பதிகத்தை ஆழ்வார் அமைத்துள்ளார்.
"ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமன்" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை: சில அரக்கர்கள் ஸ்ரீ இராமபிரானின் படையில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் மற்ற அரக்கர்களைப் பார்த்து, "சுக்கிரீவன் முதலானோருடைய கோபம் போகவேண்டுமானால், அநாதி காலமாக மிக்க வலிமையும் பக்தியும் மிக்க ஸ்ரீ அனுமனுக்குப் பல்லாண்டு பாடுவீர். [ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரான் முதலாக எல்லோருக்கும் மிகவும் பிரியமானவர் என்பதால்,] இதுவே வானரர்கள் நம் மீது கொண்டுள்ள சீற்றத்தைத் தணிக்கும் வழி!" என்றனராம்! "அனுமன் ஒருவன் உளன் எனில், நாம் எல்லோரும் பிழைத்தோம்!" என்று ஸ்ரீ ஜாம்பவானும் அவரைப் போற்றினார் அன்றோ? |
3. ஸ்ரீ சொல்லின் செல்வர் ஆஞ்சநேயர் |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 10-6-8 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"பரம்பொருள் ஆகிய நாராயணன், எனைப் போன்றோரும் கிட்டி அடையும்படி, திருவாட்டாற்றில் உறைகின்றான். நான் அவனுக்கு என்ன நன்றி செய்தேன் என்று அவன் என் மனதில் வந்து, உறைந்து, ஒளி வீசுகின்றான்?" என்று ஸ்ரீ நம்மாழ்வார் வினவுகின்றார்.
"எந்நன்றி செய்தேனோ?" என்பதற்கு ஆசாரியர் உரை: இங்கு ஸ்ரீ அனுமனின் சொல்லாற்றல் கொண்டாடப்படுகின்றது. அவர் இலங்கையிலிருந்து திரும்பியவுடன் ஸ்ரீ இராமரைச் சந்தித்த அந்தத் தருணம். "சீதையை" என்று பேச ஆரம்பித்தால் "காணவில்லை" என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. அந்நொடிப் பொழுதில் ஸ்ரீ இராமன் துடிதுடித்துவிடுவார் என்பதால், "கண்டேன்" என்று வினைச்சொல்லை முதலில் சொல்லி, பெருமாளின் உயிரைக் காத்தவர் ஸ்ரீ அனுமன். "அப்படிப்பட்ட ஒரு சீர் மிகு தொண்டை நான் செய்தேனோ?" என்று ஆழ்வார் கேட்கின்றார். "ராம" என்ற சொல் போகும் உயிரையும் தக்கவைக்கும் என்பர். அந்த ஸ்ரீ இராமபிரானுக்கே உயிர் கொடுக்கும் வண்ணம் உள்ளன நம் சொல்லின் செல்வனின் தெய்வச் சொற்கள்! |
4. ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் |
ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 90 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"எம்பெருமானைத் தொழுததால், மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டையுமே ஆளப் பெற்றேன்," என்று ஆழ்வார் முழங்குகின்றார்.
"மேவேனே" என்பதற்கு உரை பாரீர்: ஸ்ரீ இராமபிரான் போரில் வெற்றி பெற்ற செய்தியை, ஸ்ரீ சீதா தேவியிடம் சொல்ல, ஸ்ரீ அனுமன் அன்னையின் முன் வணங்கி நின்றார். அப்போது, "ஸ்ரீ இராமபிரான் எவ்வித ஆபத்துமின்றி போரில் வெற்றி பெற்று விளங்குவதைக் கண்டதும், சுவர்க்கம் உள்பட அனைத்து உலகங்களும் பெற்றதுபோல இன்பத்தை அடைந்தேன்!" என்று முழங்குகின்றார். என்னே ஒரு தூய பக்தி! இந்தத் தன்னலமற்ற பக்தியை ஆசாரியர் இப்பாசுரத்தின் உரையில் மேற்கோளாகக் காட்டுகின்றார்! |
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 3-10-1, 3-10-2, 3-10-7 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
இப்பதிகத்தில் ஸ்ரீ அனுமன் ஸ்ரீ சீதாதேவியிடம் ஸ்ரீ இராமபிரான் தமக்குச் சொன்ன அடையாளங்களை எல்லாம் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்து, அதன் பின் ஸ்ரீ இராமபிரானின் கணையாழியை ஸ்ரீ சீதா தேவியிடம் அளிப்பதாகப் பாசுரங்கள் உள்ளன.
இம்மூன்று பாசுரங்களில், "நின் அடியேன்" என்றும், "அடி பணிந்தேன்" என்றும், "மெய்யடியேன்" என்னும் சொற்கள் ஸ்ரீ அனுமன் சொல்வதாக உள்ளன. இவைகளுக்கான உரையில் உள்ளவை: "நின் அடியேன்": "அன்னையே! ஸ்ரீ இராமபிரானுக்கு அடியவன் ஆனபோதே தங்களுக்கும் அடியவன்," என்று ஸ்ரீ அனுமன் கூறுகின்றார். "அடி பணிந்தேன்": "தாயே! அடியேனுடைய இயற்கைத் தன்மையின் படி, தங்களது திருவடிகளில் எனது சிரத்தை இட்டு, சிரம் பெற்ற பயனைப் பெற்றேன். இப்போது நா பெற்ற பயனை அடைய, ஸ்ரீ இராமபிரான் சொன்ன அடையாளத்தை விண்ணப்பம் செய்கின்றேன். கேட்டருளவேண்டும்," என்று ஸ்ரீ அனுமன் வேண்டுகின்றார். "மெய்யடியேன்": "அன்னையே! தங்களுக்கும் தங்கள் தெய்வக் கொழுநனுக்கும் எது நன்மையோ அதை மட்டுமே விரும்பும் இந்த அடியவன் விண்ணப்பத்தைக் கேட்டருளவேண்டும்," என்று ஸ்ரீ அனுமன் வேண்டுகின்றார். இதைவிட அழகாக ஸ்ரீ அனுமனின் ஸ்ரீ ராம பக்தியை எடுத்துக் கூறவும் முடியுமோ? |
5. ஸ்ரீ சீதாராம பக்த ஆஞ்சநேயர் |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பாசுரம் # 28 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரம் நாயகி மனோபாவத்தில், ஊடல் திறத்தில் பாடப்பட்டுள்ளது. நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "பரகால நாயகி" என்று அழைக்கப்படுகின்றார்.
எம்பெருமானுடன் கூடியிருந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த ஸ்ரீ பரகால நாயகி, எம்பெருமான் பிரிந்து சென்ற பின் சொல்லொணாத துயரம் அடைந்தாள். அதனால் கோபம் அடைந்தாள். மற்றொரு முறை பிரிவுத் துயரத்தைத் தாங்கத் தயாராக இல்லை. அதனால், இம்முறை அவன் வரும்போது, அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல், அவன் கண் முன்னே தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள். இதைக் கேட்ட ஸ்ரீ பரகால நாயகியின் தோழிக்கும் எம்பெருமான் மீது பெருங்கோபம் எழுகின்றது. "நீ உயிரை விடுவது வீண். அவனெல்லாம் மேட்டுக்குடி. மேல் உலகம், கீழ் உலகம் இரண்டிற்கும் நாயகன். அப்படிப்பட்டவர்கள் நம் போன்ற பேதைகளைக் காதலிப்பது போலப் பாசாங்கு செய்வர். அவன் அடியார்களின் குரல் கேட்டு நேரத்திற்கு வருபவன் அல்லன்," என்கின்றாள். இந்த இடத்தில் ஆசாரியர்கள் ஸ்ரீ அனுமனை நினைக்கிறார்கள்: ஸ்ரீ சீதாதேவியை ஸ்ரீ அனுமன் கண்டுபிடித்து விடுகிறார். ஸ்ரீ அனுமன் வாழ்வில் அது ஒரு பொன்னான தருணம். ஸ்ரீ சீதாதேவியைக் காண்பதற்கு முன்னே, 'இராமனின் மனைவியாகிய ஒரு பெண் பிள்ளை' என்று மட்டுமே அவளை எண்ணியிருந்தவர், திருமாமகளான ஸ்ரீ சீதாதேவியைக் கண்டபோது, அவருடைய எண்ணம் அடியோடு மாறியது: "ஒப்பற்ற இந்தச் சீர் மிகு பெண்மணியைப் பிரிந்து ஸ்ரீ இராமபிரான் எப்படி உயிரோடு இருக்கிறார்?! சக்கிரவர்த்தித் திருமகன் என்றாலும் இவள் அருகில் இல்லையென்றால் அப்பெருமையும் வீண் அன்றோ? இவளுக்காக இந்த உலகங்களை எல்லாம் ஸ்ரீ இராமபிரான் தலைகீழாக மாற்றினாலும் தகும் என்பேன்!" என்று அறுதியிட்டார்!! அதே போல, ஸ்ரீ பரகால நாயகியின் தோழியும், "எம்பெருமான் உலகங்களுக்கெல்லாம் நாயகனாக இருப்பது என்ன பெருமை! நம் அருமைப் பெண்மணியாம் பரகால நாயகியின் துயர் தீர்ப்பதன்றோ பெருமை!" என்று கோபமுற்றாளாம்! |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 4-1-5 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"இளமையில் அழகிய மாதர்களின் உடல் அழகில் மயங்கி, அவர்களிடம் உம்மைத் தொலைத்து, பின்பு செல்வம் இழந்தபின் அவர்களிடம் மானத்தைத் தொலைப்பவர்களே! மணி போல் மின்னும் திருமேனி உடைய எம்பெருமான் திருநாமங்களைப் பாடி வாழ்ச்சியடையுங்கள்," என்கிறார் ஆழ்வார்.
"மணி மின்னு மேனி" என்பதன் உரையில் ஆசாரியர் ஸ்ரீ அனுமனைப் புகழ்கின்றார்: ஸ்ரீ சீதா தேவி தற்கொலை செய்ய முயற்சித்தபோது, ஸ்ரீ இராமபிரானின் திருநாமத்தைச் சொல்லி, அவரது கணையாழியையும் கொடுத்து ஸ்ரீ சீதா தேவியின் உயிரை ஸ்ரீ அனுமன் காப்பாற்றினார். அதேபோல, ஸ்ரீ இராமபிரானிடம் ஸ்ரீ சீதாதேவி பற்றிய செய்தியைத் தெரிவித்து ஸ்ரீ இராமபிரானின் உயிரைக் காப்பாற்றினார். "இப்படிப்பட்ட ஸ்ரீ அனுமனுக்கு ஒரு உயர்ந்த பரிசு அளிக்க வேண்டுமே! தன்னலமற்றவனும் பற்றற்றவனும் ஆகிய இவனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையே. நான் என் செய்வேன்?" என்று ஸ்ரீ இராமபிரான் சிந்தித்தார். "அமுதத்தை மட்டுமே விரும்பும் இவனுக்குப் புல்லை இடுதல் தகாது. என் நலனை மட்டுமே விரும்பும் இவனுக்குத் தாழ்ந்த பரிசுகள் தகாது," என்று உணர்ந்து, அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடமான தமது "மணி மின்னு மேனியால்" ஸ்ரீ அனுமனை பெருவெள்ளமெனப் பெருகும் அன்புடன் அணைத்துக்கொண்டார். |
ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 10 | ||
ஆசாரியர்கள் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை - சுருக்கம் | ||
ஸ்ரீ திருப்பாணாழ்வார் தம் வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் திருவரங்கனைக் கண்டார். கண்டவுடன், "அவனைக் கண்ட கண்கள் [ஸ்ரீ பரமபதநாதன் உள்பட] வேறு ஒன்றையும் காணமாட்டா," என்று அறுதியிட்டு திருவரங்கனின் திருவடிகளிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
"மற்றொன்றினைக் காணாவே" என்பதன் உரையில் ஆசாரியர் ஸ்ரீ அனுமனை எடுத்துக்காட்டாக உரைக்கின்றார்: ஸ்ரீ இராமபிரான் தம்முடைய திருவவதாரத்தை முடித்துக் கொண்டு, வைகுந்தம் செல்லும் முன்னே, ஸ்ரீ அனுமனிடம், "நம்முடன் வைகுந்தம் வருவாய்," என்ன, ஸ்ரீ அனுமன் அவரிடம், "ஐயனே! உமது இன்னருளால் அடியேனுக்கு உம் மீது ஏற்பட்ட அன்பு உம்மிடமே நிலைத்துவிட்டது. அடியேனது நெஞ்சு உம்மை விட்டு [ஸ்ரீ பரமபதநாதன் உள்பட] வேறு ஒன்றிலும் செல்லாது. நீர் அடியேனை அழைத்துச் சென்றாலும், அடியேனின் நெஞ்சை அழைத்துச் செல்ல முடியாது!" என்று விண்ணப்பம் செய்துவிட்டார்.
|
6. ஸ்ரீ விநய ஆஞ்சநேயர் |
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 27 | ||
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம் | ||
"நாடு புகழும் பரிசினால் நன்றாக" என்பதன் மிக அழகிய உரை:
ஸ்ரீமத் இராமாயணத்தில் பல தருணங்களில் ஸ்ரீ இராமபிரானும் ஸ்ரீ சீதா தேவியும் ஸ்ரீ அனுமன் மீது அவர்கள் வைத்திருக்கும் சிறப்பான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு நிகழ்ச்சி ஸ்ரீ இராமபிரானின் பட்டாபிஷேகம் அன்று நடந்தது: இந்திரன் கொடுத்த முத்துமாலையை ஸ்ரீ சீதா தேவி ஸ்ரீ அனுமனுக்குப் பரிசளிக்க விரும்பி, அதை ஸ்ரீ இராமபிரானிடம் திருக்கண்களால் தெரியப்படுத்த, ஸ்ரீ இராமபிரானோ, "நீ அடியார்களின் தரம் அறிந்து அவர்களைச் சிறப்பிப்பவள். எனவே, நீயே உன் திருக்கையால் பரிசளிப்பாய்," என, ஸ்ரீ சீதா தேவியும் உடனே அதை ஸ்ரீ அனுமனின் கழுத்தில் இடுகின்றாள். அதை நினைவில் வைத்து, நம் பட்டர்பிரான் கோதையும், "கண்ணா! நங்கள் நப்பின்னைப் பிராட்டியும் நீயும் எங்களுக்கும் அதே போல பரிசளிக்கவேண்டும்!" என வேண்டுகின்றாள். இப்படி ஸ்ரீ இராமபிரானும் ஸ்ரீ சீதாதேவியும் மாறி மாறிக் கொண்டாடும்போது ஸ்ரீ அனுமனின் மனநிலை எப்படி இருந்தது? அதை அடுத்த பாசுரத்தின் மூலமாகக் காண்போம்.
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - பாசுரம் # 14 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரம் நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டுள்ளது. நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "பரகால நாயகி" என்று அழைக்கப்படுகின்றார்.
ஸ்ரீ பரகால நாயகி எம்பெருமானின் திருநாமங்களைத் தன்னுடைய கிளிக்குக் கற்றுக்கொடுத்தாள். ஒரு நாள், "அந்தோ! அனைவரையும் காப்பவன் நம்மைக் காக்க வரவில்லை அல்லவா!" என்று ஸ்ரீ பரகால நாயகி சோர்ந்து மயங்கி விழ, அவளது நிலை கண்ட அந்தக் கிளி, உடனே அவள் கற்றுக்கொடுத்த அதே திருநாமங்களை, வரிசை மாறாமல், பாடியது. இதனால் விழித்துக்கொண்ட ஸ்ரீ பரகால நாயகி, அக்கிளியைக் கண்டு, "உன்னை வளர்த்ததனால் பயன் பெற்றேன்!" என்று கைகூப்பி வணங்கினாள். அக்கிளியோ மடப்பத்தால், "இவளுக்கு ஒரு அடியாராக இருக்கும் நான், அன்பினால் செய்த ஒரு சிறிய தொண்டு. இதை இவள் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகின்றாள்?" என்று மிகவும் நாணி நின்றது. "மடக்கிளி" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை: இந்த இடத்தில் ஆசாரியர்கள் ஸ்ரீ அனுமனை நினைக்கிறார்கள். ஸ்ரீமத் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஸ்ரீ சீதா தேவிக்கு ஸ்ரீ இராமபிரானின் வெற்றியை ஸ்ரீ அனுமன் அறிவிக்க சென்ற தருணம். அக்கட்டத்தில் உள்ள ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டித் தெரிவிக்கின்றனர்: ஸ்ரீ அனுமன் கைகளைக் கூப்பியபடி, அசையாமல், மௌனம் காத்து, தலையைக் கவிழ்த்து, குனிந்து நின்றார். அதே போல அக்கிளியும் இருந்தது. |
7. ஸ்ரீ அருள் மிகு ஆஞ்சநேயர் |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 2-9-10 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"மிகவும் அழகான இலங்கையை [ஸ்ரீ அனுமனைக் கொண்டு] எரித்தவனே! என்னை உன் திருவடிகளை விட்டகன்று இவ்வுலகியல் இன்பங்களில் ஈடுபடும்படிச் செய்யாதே காத்தருளவேண்டும்!" என்று ஆழ்வார் வேண்டும் பாசுரம்.
ஆழ்வார் எதற்கு "ஏர் கொள் இலங்கை" என்று இலங்கையைப் புகழ்கின்றார்? ஆசாரியர் உரையில் தெரிவிக்கின்றார்: ஸ்ரீ அனுமன் நினைத்ததை ஒட்டி ஆழ்வார் பேசுகின்றார். ஸ்ரீ அனுமன் பற்றற்ற தன்மையின் தோற்றுவாயாகத் திகழ்பவர். அவர் ஏன் இலங்கையைப் புகழ்கின்றார்? அவர் இலங்கையைச் சுற்றி சீதா தேவியை தேடினார். அப்போது, இராவணன் அவனுடைய மனைவியர்களுடன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அவரது திருவுள்ளத்தில் ஓடிய எண்ணம்: "அந்தோ! இவ்வளவு அழகான இலங்கைக்கு அரசனாக இருக்கும் இந்த வீரன், இவனது மனைவியர் எப்படி இவனுடன் கூடி இருக்கின்றனரோ, அதே போல சீதா தேவியையும் ஸ்ரீ இராமபிரானுடன் கூடி இருக்கும்படிச் செய்தால், இந்திரனை விட உயர்ந்த இடத்திற்குச் செல்வானே! அதனை உணராமல் இப்படி மதி கெட்டுப் பாழாகப் போகிறானே!" என்று கருணையுடன் நினைத்தாராம். ஸ்ரீ அனுமன் பகைவனுக்கும் அருளும் உள்ளம் கொண்டு, நன்மையே நினைப்பவர், காணீர்! |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 10-3-2 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
ஸ்ரீ இராமபிரானின் அடியவர்கள் கொடுக்கும் அடியைத் தாங்க முடியாமல் இராவணனின் படையைச் சேர்ந்தவர்கள், "எங்களை விட்டுவிடுங்கள்! கருணை காட்டுங்கள்!" என்று கெஞ்சுவதாக இப்பதிகத்தை ஆழ்வார் அமைத்துள்ளார்.
"நம்பி அனுமா" என்பதற்கு ஆசாரியர் அருளிய உரை: "நம்பி" என்றால் 'நற்குணங்களால் நிறைந்து இருப்பவர்' என்று பொருள். "ஸ்ரீ சுக்கிரீவன் போன்றவர்கள் தடுத்தாலும் கூட, கருணை நிறைந்த நம்பி அனுமன் ஸ்ரீ இராமபிரானிடம் நமக்காகப் பரிந்துரை செய்வார்! ஸ்ரீ அனுமன் பேச்சை நிச்சயமாக ஸ்ரீ இராமபிரான் கேட்பார்," என்று உணர்ந்து கேட்கின்றார்கள். ஸ்ரீ சுக்கிரீவன் முதலானோர் "விபீடணனை நம் தரப்பில் சேர்க்கக்கூடாது," என்று ஒருமனதாக வாதாடினார்கள். அப்போது, ஸ்ரீ அனுமன் மட்டுமே, ஸ்ரீ இராமபிரானின் திருவுள்ளத்தை நன்கு அறிந்தவராய், "செல்வ விபீடணனை நம் தரப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும்," என்று முழங்கினார். "ஸ்ரீ அனுமனின் பேச்சுக்கள் பொருத்தம் உடையவை; பொருள் உடையவை; இனிமை உடையவை; எளிமையாய்ப் புரிந்துகொள்ளக்கூடியவை," என்று பெரியோர்கள் கொண்டாடுகின்றனர். ஸ்ரீ அனுமனால் ஸ்ரீ இராமபிரானின் திருவுள்ளத்திற்குத் தக்கவாறு எவ்வாறு பேச முடிகின்றது? ஸ்ரீ அனுமனின் எண்ணம் இத்தகையதாம்: "நான் எனது கருத்தை முன்னே நிறுத்தப் பேசுவதில்லை; மற்றவர் பேசுவதைக் கண்டு பொறாமையால் பேசுவதில்லை; வீண் வாதம் செய்யப் பேசுவதில்லை; தருமமே உருவான ஸ்ரீ இராமபிரான் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாலே, எனது பேச்சும் தன்னடையே அறத்திற்கு ஒத்ததாக இருக்கும்!" ஸ்ரீ அனுமனின் நல்ஞானத்தின் சீர்மை இது! |
முடிவுரை | |
எம் ஐயன் இராமானுசனுக்கு "இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்" என்று ஒரு திருநாமம் உண்டு. அப்பெருந்தகையின் வழி வந்த ஆசாரியர்கள், அக்கோயிலின் நிழலில் ஒதுங்கியதால், எவ்வளவு ஆழமாக அந்தப் பத்தி வெள்ளத்தில் மூழ்கியிருந்தார்கள் என்பதை ஓரளவு உணர்வதே மிக வியப்பாகவும், மிக இனிமையாகவும் உள்ளது.
நாமும் அம்மகான்களின் திருவடிகளைப் போற்றி, அவர்களது இன்னருளால், ஸ்ரீ அனுமனின் பெருமைகளை உள்ளம் உருகப் போற்றுவோம். வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்! |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
ஸ்ரீ அனுமனைப் பற்றிய அருமையான கட்டுரை இது. இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பாசுரங்களும் ஸ்ரீ ஆசாரியர்களின் விளக்கங்களும் மிகப் பொருத்தம். ஆழ்ந்து அனுபவித்துப் படிக்க வேண்டிய சிறப்பான பதிவு.
ReplyDeleteஉங்களது தூய பக்தி அனுபவத்தை மனமாரப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
DeleteParama krupai swami 🙏
ReplyDeleteAho Bhagayam, Swami. Dhanyosmi. 🙏
Delete