Search This Blog

Sunday, 12 May 2024

பெரும்பூதூர் மாமுனியின் பெருங்கீர்த்தி

பெரும்பூதூர் மாமுனியின் பெருங்கீர்த்தி


Image Source: https://www.tamilbrahmins.com/threads/sriperumbudur-swamy-ramanujar-pavithra-utsava-sevai.52357/


முன்னுரை
எம்பெருமானாரின் பெருங்கீர்த்தியை அடியேன் மொழிவதென்பது எள்ளி நகையாடத்தக்கதொரு செயல். எனினும், பெரும்பூதூர் மாமுனியைக் குறித்து சில செய்திகளை விண்ணப்பித்து, சித்திரையில் செய்ய திருவாதிரையான இந்த நன்னாளில், இராமானுசனடியார்களை ஓரளவேனும் மகிழ்விப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அந்த நோக்கம் நன்கு நிறைவேற மொழியைக் கடக்கும் பெரும்புகழாளரான கூரத்தாழ்வானுடைய திருவடிகளை அருள் புரிய வேண்டி நிற்கிறேன்.

இராமானுசராம் எம்பெருமானார் பெருமைகளைச் சில சிறப்பான திருத்தலங்களில் உறையும் தெய்வங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் குறித்து பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய 6000 படி குரு பரம்பரா பிரபாவம் மற்றும் நாயனாராச்சான் பிள்ளை அருளிய சரமோபாய நிர்ணயம் என்ற இரு ஒப்பற்ற நூல்களில் உள்ள தகவல்களை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது. "உய்ய ஒரே வழி உடையவர் திருவடி" என்ற மையக் கருத்தையே இந்நிகழ்ச்சிகள் பறைசாற்றும். இந்நிகழ்வுகளை விவரித்த பின்பு, "இராமானுசருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு சொல்லப்படுகிறது?" என்ற கேள்விக்கு விடையாக ஒரு சிற்றுரையுடன் இக்கட்டுரை முடிக்கப்படும்.




திருக்குருகூர்ச் சடகோபன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.tamilbrahmins.com/threads/alwar-thirunagari-sri-ramanujar.47551/

இராமானுசர் திருவவதாரத்திற்குப் பற்பல ஆண்டுகள் முன்பே, திருக்குருகூர்ச் சடகோபன் [ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார்] இராமானுசரின் பெருமையை மூன்று முறை வெளியிட்டருளினார்! அதன் பின்னர், இராமானுசரின் திருவவதார காலத்திலும், நம்மாழ்வார் இராமானுசருக்குச் சிறப்பான கௌரவத்தை அளித்து, இராமானுசரது பெருமையை எல்லோரும் நன்கு உணரும் வண்ணம் அருளினார்.

1. திருவாய்மொழிப் பாசுரம் [5-2-1] வாயிலாக மறைமுகமாக வெளியிட்டு அருளியது

'கலியும் கெடும் கண்டுகொண்மின்' என்ற வரியின் வாயிலாக "பிற்காலத்தில் இராமானுசர் திருவவதாரத்தால் கலியின் செருக்கு அடங்கும்," என்று, இராமானுசரின் திருநாமத்தையோ அல்லது இராமானுசரைப் பற்றிய வேறு தகவல்களையோ வெளியிடாமல், முதலில் மறைமுகமாகவே நம்மாழ்வார் வெளியிட்டு அருளினார்.
2. ஸ்ரீ மதுரகவியாழ்வாருக்கு வெளியிட்டு அருளியது

நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின் [பரமபதம் எழுந்தருளிய பின்], அவருடைய சீடரான மதுரகவியாழ்வார், திருக்குருகூரில் நம்மாழ்வாருக்குத் தனிச் சன்னிதி ஒன்று ஏற்படுத்தி, அங்கு நம்மாழ்வாரின் திருமேனியைத் திருப்பிரதிஷ்டை செய்யும் சீரிய திருத்தொண்டைத் தொடங்கினார். தமது ஒரே தெய்வமான நம்மாழ்வாரின் திருவடிகளில், "ஆழ்வீர்! தங்களின் அர்ச்சைத் திருமேனியை [விக்கிரக வடிவை] அடியேனுக்கு அருள வேண்டும்!" என்று மனமுருக வேண்டினார். அன்று இரவு, மதுரகவியாழ்வார் கனவில் நம்மாழ்வார் தோன்றி, "திருத்தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சினால், எமது அர்ச்சைத் திருமேனி உமக்குக் கிடைக்கும்!" என்று அருளினார்.

மறுநாள், மதுரகவியாழ்வார் திருத்தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது, ஒரு திருமேனி அவருக்குக் கிடைத்தது - ஆனால், அந்தத் திருமேனி கைகளைக் கூப்பிய படி, முக்கோல் ஒன்றை ஏந்தி இருந்தது! மறுபடியும் நம்மாழ்வார் திருவடிகளில், "ஆழ்வீர்! இது தங்களது திருமேனி அல்லவே!" என்று மதுரகவியாழ்வார் மானசீகமாக விண்ணப்பித்தார்.

அன்று இரவு, மதுரகவியாழ்வார் கனவில் மறுபடியும் தோன்றிய நம்மாழ்வார், "வாரீர் மதுரகவியாரே! இவரே நாம் அருளிய திருவாய்மொழிப் பாசுரமான 'பொலிக பொலிக பொலிக' பாசுரத்தில் உள்ள 'கலியும் கெடும் கண்டுகொண்மின்' என்ற வரியின் மெய்ப்பொருள்! இவரே ப்ரபந்நர்களின் [சரணாகதி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின்] குலத்தைத் தழைக்கச் செய்யத் தோன்ற இருக்கும் வருங்கால ஆசாரியனான 'பவிஷ்யதாசாரியர்' காணீர்! நீர் மறுபடியும் திருத்தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சும்," என்று அருளினார். இதைக் கேட்டு மிக உகந்த மதுரகவியாழ்வார், 'பவிஷ்யதாசாரியர்' திருமேனியை ஆராதிக்கத் தொடங்கினார். மறுநாள் திருத்தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது, நம்மாழ்வாரின் திருமேனியைப் பெற்றார்.

நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தை நன்கு உணர்ந்துகொண்ட மதுரகவியாழ்வார், தமக்கு அருளப்பட்ட நம்மாழ்வாருடைய திருமேனி மற்றும் பவிஷ்யதாசாரியருடைய திருமேனி ஆகிய இரு திருமேனிகளையுமே திருக்குருகூரில் திருப்பிரதிஷ்டை செய்தார். இந்த இரு ஆழ்வார், பவிஷ்யதாசாரியர் திருமேனிகளே, இன்றும் நாம் எல்லோரும் வணங்கி வழிபட, திருக்குருகூரில் அருள் பாலிக்கின்றார்கள்! இந்நிகழ்ச்சி இராமானுசர் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு வெளியிட்டு அருளியது

மதுரகவியாழ்வார் திருநாடு அலங்கரித்த பின், திருமங்கை ஆழ்வார் உள்பட மேலும் சில ஆழ்வார்கள் தோன்றி, அவர்களும் பரமபதம் எழுந்தருளினார்கள். பின்னர், காலம் செல்லச் செல்ல, மக்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களை மறந்தனர். அந்தக் காலத்தில், இராமானுசர் தோன்றுவதற்குச் சில ஆண்டுகள் முன்னர், நாதமுனிகள் என்ற ஆசாரியர் தோன்றினார்.

எம்பெருமான் அருளால், நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பற்றியும், திருக்குருகூர் என்ற திருத்தலத்தைப் பற்றியும் கேள்வியுற்று, திருக்குருகூருக்கு எழுந்தருளி, நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வார் அருளிய 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பதிகத்தை முறையாகக் கற்று, உண்ணும் சோறு, பருகும் நீர், இரவில் உறக்கம் யாவற்றையும் முழுவதுமாகத் தவிர்த்து, அந்தப் பதிகத்தைத் தொடர்ந்து 12000 முறை ஓதி, நம்மாழ்வாரை நேரில் காணும் பெரும்பேற்றைப் பெற்றார்!

அருள்மாறனான நம்மாழ்வார், நாதமுனிகளைத் தமது சீடராக ஏற்று, நாதமுனிகளுக்குத் திருமந்திரம் முதலான இரகசிய மந்திரங்களையும், 4000 அருளிச்செயல் பாசுரங்கள் யாவற்றையும் கற்பித்தார். அவ்வாறு கற்பிக்கும் போது, நம்மாழ்வார் 'பொலிக பொலிக பொலிக' பாசுரத்தின் மெய்ப்பொருளை நாதமுனிகளுக்கும் வெளியிட்டு அருளினார். அதைக் கேட்டு மிக உகந்த நாதமுனிகள், "ஆழ்வீர்! அடியேனுக்கு அந்த வருங்கால ஆசாரியனைக் காண மிகவும் ஆவலாக உள்ளது!" என்று ஆழ்வாரிடம் விண்ணப்பித்தார். அன்று இரவு, நம்மாழ்வார் நாதமுனிகள் கனவில் எழுந்தருளி, இராமானுசரின் வடிவழகை நாதமுனிகளுக்குக் காண்பித்து அருளினார்.

மறுநாள், நாதமுனிகள் நம்மாழ்வாரிடம், "ஆழ்வீர்! இந்த அறப்பெரியோனை அடியேன் நேரில் கண்டு வணங்கும் பேறு பெறவில்லை ஆகிலும் அவரது அர்ச்சைத் திருமேனியை அடியேன் வணங்கி வழிபடும் வண்ணம் அருள வேண்டும்!" என்று மிகவும் உருகி வேண்ட, திருவுள்ளம் உகந்த நம்மாழ்வாரும், அவ்வூர் சிற்பியின் கனவிலும், நாதமுனிகள் கனவிலும் இராமானுசர் வடிவழகைக் காண்பித்து அருளி, அதேபோல ஒரு அர்ச்சைத் திருமேனியைச் செய்யும்படித் திருவாணை பிறப்பித்தார். சிற்பியும், நம்மாழ்வாரின் திருக்கட்டளையைச் சிரமேற் கொண்டு, பக்தியுடன் ஒரு திருமேனியைச் செய்தார். நம்மாழ்வாரும் அந்தத் திருமேனியை நாதமுனிகளுக்கு அருளினார்.

நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் அந்தத் திருமேனியை அருளியபோது, "நாதமுனிகளே! பவிஷ்யதாசாரியராகிய இவர் 'இராமானுசர்' என்ற திருநாமத்துடன் திகழ்வார். இராமானுசர் எமது திருமேனியின் திருவடிகளே ஆவார். எமது வலது திருக்கரம் போன்றவர். உலகத்தோரை உய்விக்கவே எம்பெருமான் எமக்கு மயர்வற மதிநலம் அருளினான். அந்தக் குறிக்கோளை எம் சார்பாக இராமானுசர் செவ்வனே நிறைவேற்றுவார்!" என்று அருளினார்.

"இராமபிரானின் திருமுடி சூட்டு விழா நடந்த சித்தரை மாதத்தில், எமது நட்சத்திரமான விசாகத்திலிருந்து 18 நட்சத்திரங்கள் கழித்து வரும் திருவாதிரை திருநட்சத்திரத்தில் இராமானுசர் தோன்றுவார். உமது திருவம்சத்தில் உதிக்கும் ஒருவர் [ஆளவந்தார்] இராமானுசரை நேரில் காணும் பெரும்பேற்றைப் பெறுவார்!" என்றும் நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார்.

நம்மாழ்வாரின் மேற்கூறிய இந்தத் திருவாக்குகளாலேயே, நாதமுனிகள் தொடங்கி உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், நாதமுனிகள் திருப்பேரனாரான ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள் என்று இராமானுசருக்கு முந்தைய ஆசாரியர்கள் யாவரும், அவர்களுக்குப் பின் தோன்றப் போகும் இராமானுசரை நம்மாழ்வாரின் திருமேனியின் அங்கமான திருவடிகளாகவே அறிந்து, உணர்ந்து, போற்றி, வணங்கி, வழிபட்டனர்! இராமானுசரின் திருவடிகளின் தொடர்பு பெற்று இராமானுசருடைய சீடராக இருக்கும் பேற்றைப் பெறாவிடிலும், இராமானுசருக்கு 'ஆசாரியன்' என்ற பெயரில், இராமானுசரது திருமுடியின் தொடர்பாவது பெற்று உய்ய வேண்டும் என்று அவர்கள் யாவரும் திருவுள்ளம் பற்றினார்கள்.

4. இராமானுசர் முன்னிலையிலேயே வெளியிட்டு அருளியது

இராமானுசர் இப்பூவுலகில் எழுந்தருளியிருந்த போது, ஒரு நாள், திருக்குருகூர் எழுந்தருளினார். நம்மாழ்வாரின் திருவடிகள் மீது பெருங்காதல் கொண்ட இராமானுசர், மதுரகவியாழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பை நம்மாழ்வாரின் முன்னிலையில் விண்ணப்பம் செய்து நின்றார்.

அப்பொழுது நம்மாழ்வார் இராமானுசரிடம், "இராமானுசரே! உமது சிரத்தை எமது பாதங்களில் வைப்பீர்!" என்று அருள, இராமானுசரும் மிகவும் உகந்து அக்கட்டளையை நிறைவேற்ற, அங்குள்ள யாவரும் கேட்கும்படி, "இராமானுசர் நமது திருவடிகளே ஆவார்! இராமானுசர் திருவடிகளை அடைந்தோர் நம் திருவடிகளை அடைந்தவர்கள் ஆவர்," என்று நம்மாழ்வார் அருளினார்.

"தேவரீர் தங்களது திருவடிகளைத் தாங்கும் திருவடி நிலைகளுக்கு [பாதுகைகளுக்கு] அடியேனின் பெயரைச் சூட்டி அருள வேண்டும்!" என்று இராமானுசர் நம்மாழ்வாரை வேண்ட, "வாரீர் இராமானுசரே! அப்படியே ஆகட்டும்!" என்று நம்மாழ்வாரும் அருள் புரிந்தார். இதனால், இன்றும் திருக்குருகூரில் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளை "ஸ்ரீராமானுசன்" என்றே வழங்குவர்.




திருக்கச்சி பேரருளாளன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://in.pinterest.com/pin/378020962494291613/

இராமானுசருக்கு முதலில் பாடம் சொல்லி வந்த யாதவபிரகாசர், சித்தாந்தக் கருத்துகளில் இராமானுசருடன் வேறுபாடு ஏற்பட்டு, அதனால் இராமானுசரை, "இனி நீ இங்கே படிக்க வேண்டாம்!" என்று அனுப்பிவிட்டார்.

காலம் சென்ற பின், யாதவபிரகாசரின் தாயாருக்கு இராமானுசரின் திருவடிகள் மீதும், இராமானுசர் போதித்த சித்தாந்தத்தின் மீதும் நம்பிக்கையும், உற்றமும் ஏற்பட்டன. ஒரு நாள், "நம் யாதவனும் இராமானுசர் திருவடிகளில் தஞ்சம் புகுந்து உய்வு பெறலாமே!" என்று அந்த அம்மையார் எண்ண, அவர் செவியில் "நல்லது நல்லது!" என்று யாரோ சொன்ன சொற்கள் வந்து விழ, யாதவபிரகாசருக்கு அதைத் தெரிவித்தார். "தாயே! இது நாள் வரை நான் சிகையும் புரிநூலும் இல்லாது இருந்தேன். இராமானுசர் திருவடிகளில் நான் தஞ்சம் புக வேண்டும் என்றால், அவற்றை நான் துறந்ததற்கு பூப்ரதக்ஷிணம் செய்யவேண்டும். நான் வயது சென்றவன் ஆதலால், அது நடவாதே!" என்று வருந்தினார். பூப்ரதக்ஷிணம் என்பது வேத பூமியான பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை உள்ள பற்பல முக்கியத் திருத்தலங்களை வலமாக வந்து சேவித்தல். அவரது தாயார், "யாதவா! நீ இராமானுசரை ஒரு முறை வலம் வந்து, அதன் பின் இராமானுசர் திருவடிகளில் தஞ்சம் புகுவாய்!" என்று அறிவுறுத்தினார். எனினும், யாதவர் மனதில் குழப்பத்துடனே இருந்தார்.

அன்று இரவு, திருக்கச்சிப் பேரருளாளன் [காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்] யாதவரின் கனவில் தோன்றி, "நம் இராமானுசரை ஒரு முறை வலம் வந்து, அதன் பின் இராமானுசரிடம் துறவறம் பெற்று, இராமானுசர் திருவடிகளில் தஞ்சமும் புகுவாய்!" என்று அருளினார். மறுநாள், "இக்கனவு உண்மையோ?" என்று ஐயப்பட்ட யாதவர், 'வரதராஜப் பெருமாளிடம் பேசும் உரிமை பெற்றவர்' என்று பெயர் பெற்ற திருக்கச்சி நம்பிகளிடம், "நம்பிகளே! அடியேன் மனதில் ஒரு ஐயப்பாடு உள்ளது. அது குறித்துப் பெருமாள் அருளும் செய்தியை அடியேனுக்குத் தெரிவிப்பீர்!" என்று வேண்டினார்.

அன்று இரவு, வரதராஜப் பெருமாள், "நம்பியே! ஏதேனும் சொல்ல எண்ணுகிறீரோ?" என்ன, திருக்கச்சி நம்பிகளும் நடந்ததை விண்ணப்பிக்க, பெருமாளும் திருக்கச்சி நம்பிகளிடம் நடந்தவற்றையெல்லாம் தெரிவித்து, "இதுவே நடந்தது. யாதவனிடம் நம் இராமானுசனை ஒரு முறை வலம் வந்து, அதன் பின் இராமானுசரிடம் துறவறமும் திருவிலச்சினையும் பெற நாம் சொன்னோம் என்று சொல்லும்," என்று அருள, திருக்கச்சி நம்பிகளும் யாதவபிரகாசரிடம் இதைத் தெரிவிக்க, அவரும் குழப்பம் தீர்ந்து, இராமானுசரை வணங்கி, இராமானுசரை ஒரு முறை வலம் வந்து, இராமானுசரிடமே துறவறமும் திருவிலச்சினையும் பெற்று, "கோவிந்த ஜீயர்" என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருந்து, முடிவில் திருநாடு புகுந்தார்.

எம்பெருமானை "வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுதால் போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்," என்பர் பெரியோர். அந்த எம்பெருமானே, "நம் இராமானுசனை ஒரு முறை வலம் வந்தால் பூப்ரதக்ஷிணம் செய்ததற்குச் சமம்," என்று அருளியுள்ளான். என்னே இராமானுசரின் அளப்பரிய பெருமை!




திருவரங்கன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.tamilbrahmins.com/threads/panguni-uthiram.40600/

திருவரங்கத்தில் நித்தியவாசம் செய்ய எழுந்தருளிய இராமானுசரை, பெரிய பிராட்டியாரின் கேள்வனான திருவரங்கன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, "இராமானுசரே! வைகுந்தமும் இப்பூவுலகமும் உமக்கு உடைமைகள் ஆக்கினோம்!" என்று திருவுள்ளம் மிக உகந்து அருள, இராமானுசர் "[பரமபதத்தையும், அதற்கு அப்பாற்ப்பட்ட உலகங்கள் யாவற்றையும்] உடையவர்" என்று திகழ்ந்து அருள்கின்றார்.

இந்தத் திருநாமம் வெறும் சொல்லளவில் நின்றுவிடாமல், நடைமுறையிலும் மெய்ப்பட்டது. சரணாகதியே மோட்சத்திற்குச் சுலபமான வழி என்று அறிந்த இராமானுசர், அதையும் நம் போன்றோரால் சரியாகச் செய்யமுடியாது என்று அறிந்து, திருவுள்ளத்தில் பெருங்கருணை கொண்டு, ஒரு பங்குனி உத்திரம் அன்று, பெரிய பிராட்டியார் அருளாசியுடன், திருவரங்கனிடம், "அடியேனுக்கும் அடியேனது சம்பந்தா சம்பந்திகளுக்கும் மோட்சம் அருளவேண்டும்," என்று வேண்டி, திருவரங்கனின் முழுச் சம்மதமும் பெற்று, தமது திருவடிகளையே நமக்குத் தஞ்சமாக அருளினார்.

இதனால், ஆழ்வார்கள் காட்டியருளிய சரணாகதிப் பாதையில் செல்ல விரும்புவோருக்கு, நம்மாழ்வாரின் பொன்னடிகளான ஸ்ரீ இராமானுசருடைய திருவடி நிழலில் ஒதுங்குவதே மோட்சத்திற்கு வழி என்றாயிற்று. ஸ்ரீவைணவர்களுக்கு "ஸ்ரீமதே ராமாநுஜாய நம:" என்பதே உத்தாரக மந்திரம் ஆயிற்று; "எம்பெருமானார் திருவடிகளே சரணம்" என்று இருப்பதே அவர்களின் இயற்கைத் தன்மை ஆயிற்று. இராமானுசரும் துறவறம் பூண்டு, 120 ஆண்டுகள் இப்பூவுலகில் எழுந்தருளியிருந்து, பல்லாயிரக்கணக்கானோருக்கு அருள் புரிந்து, கலியின் கொட்டத்தை வீழ்த்தினார். இன்றும் அர்ச்சைத் திருமேனியாக எழுந்தருளி, இராமானுசர் நமக்குத் தமது இன்னருளைப் பொழிகின்றார்.




திருவேங்கடவன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.tamilbrahmins.com/threads/tirumala-sri-malayappan-in-peddah-sesha-vahanam-brahmotsavam.55148/

இராமானுசர் ஒரு முறை திருவேங்கடத்திற்கு யாத்திரையாக எழுந்தருளியிருந்தார். அச்சமயம், இராமானுசர் எழுந்தருளியிருந்த திருமடத்திற்குப் பால், தயிர் போன்றவற்றை, தும்பையூர் கொண்டியம்மாள் என்ற பெண்மணி விற்று வந்தாள். சில நாள்கள் சென்ற பின், அவள் விற்ற பொருள்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்ள, இராமானுசரின் திருமடத்திற்கு வந்து, இராமானுசரையும் இராமானுசரது சீடர்களையும் வணங்கி நின்றாள். இராமானுசரும் கிடாம்பியாச்சான் என்ற தமது அணுக்கத் தொண்டரை அழைத்து, "இப்பெண்பிள்ளைக்கு நமது மடத்தின் தளிகைப் பிரசாதம் ப்ரசாதிப்பாய்," என்று கட்டளையிட, கிடாம்பியாச்சானும் அப்பெண்மணிக்குத் தளிகைப் பிரசாதமும், இராமானுசரின் ஸ்ரீபாததீர்த்தமும் அருளினார்.

பிரசாதங்களை அப்பெண்மணி வணக்கத்துடன் ஏற்று உண்ட பின், அவளுக்கு ஞானம் மிகவும் விரிவடைந்தது. இராமானுசரிடம், "எம் ஐயனான இராமானுசரே! பால், தயிர் ஆகியவற்றை விற்ற பணம் ஏதும் அடியேனுக்கு வேண்டாம். தாங்கள் அடியேனுக்கு மோட்சம் அருள வேண்டும்," என்று வேண்டினாள்! "பெண்பிள்ளாய், அதற்குத் திருவேங்கடமுடையானே கடவர்!" என்று இராமானுசர் அருள, அவளும் விடாமல், "தாங்கள் ஒரு சிறு ஓலையில் அடியேனுக்கு மோட்சம் அருளியதாக எழுதித் தந்து அருள வேண்டும்!" என்று வேண்ட, அதைக் கேட்ட இராமானுசரும் உகந்து, அவ்வாறே அருளினார்!

அவளும் அவ்வோலையைப் பெற்றுக்கொண்டு, திருவேங்கடமாமலையை விரைந்து ஏறி வருவதைக் கண்ட திருவேங்கடவன், [இராமானுசரின் திருமுறியையும், இராமானுசரின் எல்லையற்ற இன்னருளுக்கு இலக்கான அப்பெண்மணியையும் கௌரவிக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றி,] தாமே ஒரு மனித உருவில் தும்பையூர் கொண்டியம்மாளின் எதிரே வந்து, "அம்மையே! எங்கே கடுகச் செல்கின்றாய்?" என்று வினவ, "இராமானுசர் அடியேனுக்கு மோட்சம் அருளி, அந்த அனுமதியை ஓலையில் அருளியுள்ளார். அதைத் திருவேங்கடமுடையானிடம் காண்பித்து, மோட்சம் பெறச் செல்கின்றேன்," என அவளும் விடையளிக்க, "அம்முறியை இங்கே கொடு!" என்று அதைக் கேட்டு வாசித்த அலர்மேல்மங்கை உறை மார்பனும், "தந்தோம்!" என்று புன்முறுவலுடன் அருள, அந்தக் கணமே தும்பையூர் கொண்டியம்மாளும் திருநாடு புகுந்தாள்!

"மந்தி பாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்" என்று திருப்பாணாழ்வார் அருளியது போல, திருவரங்கனே திருவேங்கடவனாக எழுந்தருளியுள்ளான். ஆதலால், "இராமானுசரே! பரமபதமும் மற்ற உலகங்களும் நீரிட்ட வழக்காக இருக்கும். உமக்கும் உமது சம்பந்தா சம்பந்திகளுக்கும் பரமபதம் தந்தோம்!" என்று திருவரங்கத்தில் இராமானுசருக்கு அருளியிருந்த திருவாக்கைத் திருவேங்கடத்தில் நடத்திக் காட்டினான். திருவேங்கடத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த தும்பையூர் கொண்டியம்மாளுக்குத் திருவேங்கடவனால் வாழ்ச்சி ஏற்படவில்லை. இராமானுசரின் திருவுள்ளத்தின் பேரருளுக்கு இலக்காகியதன் காரணமாகவே அவர் வீடுபேறு பெற்றார். "ஆசாரிய அபிமானமே உத்தாரகம்" என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான சான்றாகும்.

குறிப்பு: தளிகைப் பிரசாதம் - இராமானுசர் தினமும் வணங்கும் பெருமாளான பேரருளாளனுக்கு, அன்று திருமடத்தில் சமைத்த அன்னத்தைக் கண்டருளப் பண்ணி, அதன் பிறகு இராமானுசரும் அமுது செய்த பின், மீதம் இருந்த தூய அன்னம்.




திருநாராயணபுரம் செல்வப்பிள்ளை வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://in.pinterest.com/pin/587367976428320225/

இராமானுசர் திருநாராயணபுரம் என்கிற மேலக்கோட்டைக்கு எழுந்தருளியபோது, திருநாராயணபுரத்துத் திருக்கோயில் மூலவரான திருநாராயணப் பெருமாள், இராமானுசரின் கனவில் தோன்றி, தான் பூமிக்கு அடியில் எழுந்தருளி இருக்கும் இடத்தையும் தெரிவித்து, தன்னைத் திருக்கோயிலில் திருப்பிரதிஷ்டை செய்யுமாறு அருளினான். இராமானுசரும் திருநாராயணப் பெருமாளின் திருக்கட்டளையைச் சிரமேற்கொண்டு, மூலவர் திருமேனியை வெற்றிகரமாகத் திருப்பிரதிஷ்டை செய்தார். இருப்பினும், "அடடா! இந்தப் பெருமாளுக்கு உற்சவங்கள் செய்வித்து அவரை மகிழச் செய்ய உற்சவ மூர்த்தி ராமப்ரியர் இல்லையே!" என்று இராமானுசர் மிகவும் வருந்தினார்.

அன்று இரவு, திருநாராயணப் பெருமாள் இராமானுசர் கனவில் மறுபடியும் தோன்றி, "நம் இராமானுசரே! நமது உற்சவர் துருஷ்க அரசனின் டில்லி அரண்மனையில் உள்ளார்!" என்று தெரிவிக்க, மறுநாள் இராமானுசரும் தமது கனவைச் சீடர்களுக்குத் தெரிவித்து, அவர்களுடன் கலந்தாலோசித்து, விரைந்து பயணித்து, டில்லி அரசனின் அரண்மனைக்கு எழுந்தருளினார்!

இராமானுசரின் ஞான ஒளி வீசும் அற்புதத் திருமேனியைக் கண்ட துருஷ்க அரசனும், "தாங்கள் வேண்டுவது என்ன?" என்று இராமானுசரிடம் வினவினான். இராமானுசரும், "எங்கள் ராமப்ரியர் உங்கள் அரண்மனையில் உள்ளார். அவரை எங்களிடம் தர வேண்டும்," என்று அருளினார். அவ்வரசனும் பற்பல கோயில்களிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்த பல விக்கிரங்கங்களை இராமானுசருக்குக் காண்பிக்கச் செய்தான். ஆனால், அந்த விக்கிரகங்களில் ஒரு திருமேனியும் திருநாராயணப் பெருமாள் மூலவர் திருமேனியுடன் ஒத்து இருக்கவில்லை. இதனால், இராமானுசர் மிகவும் வருந்தினார்.

அன்று இரவு, திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தியான ராமப்ரியர் இராமானுசரின் கனவில் எழுந்தருளி, "நம் இராமானுசரே! நாம் இளவரசியின் அந்தப்புரத்தில் இருக்கின்றோம். அங்கு வாரீர்!" என்று அருள, மறுநாள் இராமானுசர் இதை அரசனுக்குத் தெரிவிக்க, அவனோ, "அவருக்குத் தங்கள் மீது அவ்வளவு அன்பு உண்டாகில், அவரே உங்களைத் தேடி வருவார்!" என்றான். "அவரைக் கண்ணாரக் கண்டு ஒரு முறை சேவிக்க, அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றால் ஆகாதோ?" என்று இராமானுசர் அருளினார். அரசனும் [மறுத்துப் பேச மனம் வராமல்] சம்மதித்து இராமானுசரை இளவரசியின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்!

இளவரசியின் அரண்மனைக்கு எழுந்தருளிய இராமானுசரைக் கண்ட ராமப்ரியர், இராமானுசர் மீது பொங்கிய பேரன்பால், தம் திருச்சதங்கைகள் கலகலவென ஒலிக்க, துள்ளிக் குதித்து ஓடி வந்து இராமானுசரின் திருமடியில் ஏறி அமர, இராமானுசரும் சொல்லிலடங்கா பேரன்பு மடை திறந்த வெள்ளமெனப் பொங்கி வர, திருக்கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்த, "என் செல்வப்பிள்ளையோ நீர்!" என்று ராமப்ரியரை ஆரத் தழுவிக் கொண்டார். இதைக் கண்டு மிக மிக வியந்த அரசனும், இராமானுசருக்குப் பல மரியாதைகளைச் செய்து, இராமானுசரின் செல்வப் பிள்ளையான ராமப்ரியரை இராமானுசருடன் அனுப்பி வைத்தான்.




திருமாலிருஞ்சோலைமலைக் கள்ளழகர் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.divyadesam.com/

"இராமானுசரே குரு!"

அக்காலத்தில், "அருளப்பாடு!" என்று கூறி, [அர்ச்சகர் மூலமாக] எம்பெருமான் ஒருவர் பெயரைச் சொல்லி அழைத்தால், அந்த நபர் எம்பெருமான் முன்னே வந்து நிற்க வேண்டும். எம்பெருமானும் அந்த நபரைக் குறித்து [அர்ச்சகர் மூலமாக] ஏதேனும் தெரிவிப்பான்.

ஒரு நாள், "நம் இராமானுசன் அடியார்களுக்கு அருளப்பாடு!" என்று திருமாலிருஞ்சோலைப் பெருமான் அருளினான். அங்கு குழுமியிருந்த இராமானுசரின் அடியார்கள் யாவரும் கள்ளழகர் முன்னே கூடி நின்றனர். எனினும், இராமானுசரின் குருவான பெரிய நம்பிகளின் திருவம்சத்தவர் மட்டும் எழுந்தருளவில்லை! இதைக் கவனித்த கள்ளழகர், "பெரிய நம்பிகளின் திருவம்சத்தவர் மட்டும் ஏன் வரவில்லை?" என்று வினவினார். இதைக் கேள்வியுற்ற அவர்களும், கள்ளழகர் முன்னே வந்து வணங்கி நின்று, "தாங்கள் இராமானுசரின் சீடர்களுக்கு அன்றோ அருளப்பாடு அருளினீர்? நாங்கள் இராமானுசரின் குருவான பெரிய நம்பிகளின் திருவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வரவில்லை," என்று விண்ணப்பம் செய்தனர் [ஆசாரியரின் திருவம்சத்தில் தோன்றியவர்களும் ஆசாரியருக்குச் சமமாகவே போற்றப்படுவர்].

அதைக் கேட்ட கள்ளழகர், "நாம் இராமனாகத் திருவவதாரம் செய்தபோது, விசுவாமித்திர முனிவரிடம் பாடம் கற்றோம். கண்ணனாகத் திருவவதாரம் செய்தபோது, சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்றோம். அது நாம் நடத்திய திருவவதார நாடகத்தில் ஒரு லீலை. அது போலவே, நம் இராமானுசரும், தமது திருவவதார லீலைக்கு ஏற்ப, சில ஆசாரியர்களிடம் பாடம் கற்றார். உண்மையில், இராமானுசர் கற்க வேண்டியது எதுவும் இல்லை. இராமானுசர் கற்க வரவில்லை. கற்பிக்கவே வந்தார்! 'ஏழ்பாரும் உய்ய உதித்தருளிய நம் இராமானுசனுடைய அடியார்' என்ற பெற்றற்கரிய செல்வத்தை நீங்கள் இழந்தால், உங்களுக்கு யார் கதி?" என்று கேட்டருளினான்! அவர்களும் இராமானுசரின் பெருமையை உளமார உணர்ந்து, "அடியோங்களும் இராமானுசதாசர்களே!" என்று கொண்டாடினர்.

"இராமானுசரே கதி!"

இராமானுசருடைய சீடர் கிடாம்பியாச்சான், கள்ளழகராம் சுந்தரத்தோளுடையானுக்குப் பல்லாண்டு பாடத் திருமாலிருஞ்சோலை எழுந்தருளினார். அப்போது கள்ளழகர், "கிடாம்பியாச்சானே! நம்மைக் குறித்து ஒரு துதி பாடுவீர்!" என்று அருளினான். இராமானுசரின் பரமாசாரியரான [குருவின் குருவான] ஆளவந்தார் அருளிச்செய்த ['அபராத ஸஹஸ்ரபாஜனம்' என்று தொடங்கும்] ஒரு வடமொழித் துதியைக் கிடாம்பியாச்சான் கள்ளழகர் முன்னே விண்ணப்பம் செய்தார்.

அந்தத் துதியில், "எம்பெருமானே! அடியேன் புகலற்றவன்!" என்று பொருள் பொதிந்த வரிகள் இருந்தன. அதைக் கேட்ட கள்ளழகர், "கிடம்பியாச்சானே! நீர் நம் இராமானுசரின் இன்னருளுக்கு இலக்கானவர் அன்றோ? அப்படி இருக்க, நீர் புகலற்றவர் அல்ல! என்றும் அவ்வாறு பேசாதீர்!" என்று திருத்தி அருளினான்!

"உமக்கு யாம் இருக்கிறோம்!" என்று அருளாமல், "இராமானுசர் இருக்க உமக்குப் பயம் ஏன்?" என்று ஓங்கி உலகளந்த உத்தமனே அருள்கின்றான்! இதைவிடத் தெளிவாக இராமானுசர் பெருமையை அருள முடியுமா?




ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: Srivilliputhur Andal

ஒரு நாள், இராமானுசர் ஆண்டாள் அருளிய நாய்ச்சியார் திருமொழிப் பாசுரங்களைப் பொருள்களுடன் சுவைத்துக் கொண்டிருந்தபோது, மேல்வரும் [நாய்ச்சியார் திருமொழி 9-6] பாசுரத்தைக் கண்டு, சிந்தனையில் ஆழ்ந்தார்.
"அடடா! கள்ளழகருக்கு நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறு குழந்தை ஆண்டாள் அன்று பாரித்தாள். இதை நாமே நிறைவேற்ற வேண்டும்!" என்று முடிவு செய்து, திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளி, ஆண்டாள் பாரித்தபடியே, கள்ளழகருக்கு நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் இராமானுசர் சமர்ப்பித்தார்.

அதன் பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளி, "தாயே! இப்போது தங்கள் திருவுள்ளம் மகிழ்ந்ததா?" என்று ஆண்டாள் முன்னிலையில் இராமானுசர் வினவி நின்றார். ஆண்டாள் நாய்ச்சியாரின் உவகைக்கு எல்லையே இல்லை! ஒரு பெண்பிள்ளையின் ஆசையை அவளது தமையனாரே நிறைவேற்றுவார் அன்றோ? ஆதலால், இராமானுசரை நோக்கி, "நம் கோயிலண்ணர் வந்தார்!" ['கோயில்' என்றால் 'திருவரங்கம்' என்று பொருள்] என்று மகிழ்ச்சி பொங்க அருளினாள்.

இதனால், காலத்தால் பிற்பட்டவர் ஆகிலும், இராமானுசர் ஆண்டாளுக்குத் திருத்தமையனார் [அண்ணன்] ஆகிவிட்டார்! "பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!" என்று பெரியோர்கள் ஆண்டாளை இராமானுசரின் திருத்தங்கையாகவே வாழ்த்துவர். இன்றளவும், ஆண்டு தோறும், இராமானுசர் திருவவதாரத் திருத்தலமான ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு "அண்ணன் வீட்டுச் சீர்" அனுப்பப்படுகிறது.

பொதுவாக, மனவிருப்பங்கள் நிறைவேறப் பிராட்டியாரின் திருவடிகளை உலக மக்கள் பற்றுவது கண்கூடு. அந்தப் பிராட்டியாருக்கே ஒரு நிறைவேறாத மன விருப்பம் உள்ளதை, அவளேதும் அருளாமல் இருந்தபோதும் உணர்ந்து கொண்டு, அதைச் செவ்வனே நிறைவேற்றிய நற்செல்வரான இராமானுசருடைய பெரும் புகழானது மொழியைக் கடக்கும் தன்மையை உடையது!




திருக்குறுங்குடி நம்பி வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.facebook.com/photo/?fbid=783202680515521&set=ecnf.100064773874230/

இராமானுசர் திருக்குறுங்குடி நம்பியை மங்களாசாசனம் செய்கையில், திருக்குறுங்குடி நம்பி இராமானுசருக்கு அருளப்பாடு இட்டு, "நம் இராமானுசரே! நாம் இராமன், கண்ணன் என்று பூவுலகில் பற்பல அவதாரங்கள் செய்து, பலரையும் திருத்திப் பணிகொள்ள முயன்றோம். எனினும், ஒருவரும் சொல் பேச்சு கேளாமல், அடுத்தடுத்த பிறவிகளில் தாழ்ந்த நிலைகளையே அடைந்தார்கள். நமக்கு அகப்படாத இவர்களைத் தாங்கள் எப்படித் திருத்தினீர்கள்?" என்று வினவ, "தேவரீர் கேட்கும் முறைப்படிக் கேட்டால் சொல்கிறேன்," என்று இராமானுசர் விண்ணப்பித்தார்!

திருக்குறுங்குடி நம்பியும் தமது சீரிய சிங்காசனத்திலிருந்து இறங்கி, ஒரு இரத்தினக் கம்பளத்தில் எழுந்தருளி, தம் அருகிலேயே இராமானுசருக்கு ஒரு சீரிய சிங்காசனத்தை இட்டு, "எமக்கு அருள்வீர்!" என்று இராமானுசரை வேண்ட, இராமானுசரும் அந்தச் சிங்காசனத்தில் தமது பரமகுருவான ஆளவந்தாரும், தம்முடைய குருவான பெரிய நம்பிகளும் எழுந்தருளி உள்ளதாக எண்ணியபடி, [தாம் அதில் எழுந்தருளாமல், நின்ற திருக்கோலத்திலேயே], திருக்குறுங்குடி நம்பியின் திருவலச்செவியில் த்வய மகாமந்திரத்தை உபதேசம் செய்தார்.

இதனால், திருக்குறுங்குடி நம்பியும் மிகவும் உகந்து, "நம் இராமானுசனை உடையோம்!" [அதாவது, "நமக்கும் இராமானுசர் சம்பந்தம் கிடைத்தது! இராமானுசரது திருவுள்ளத்தின் அன்பிற்கு நாமும் இலக்கானோம்!"] என்று கொண்டாட, இராமானுசரும் திருக்குறுங்குடி நம்பிக்கு "ஸ்ரீவைஷ்ணவ நம்பி" என்று தாஸ்ய திருநாமம் இட்டார்.

நம்மாழ்வாரின் பெற்றோர் ஆகிய காரியாரும் உடையநங்கையாரும் இந்தத் திருக்குறுங்குடி நம்பியையே பிள்ளை வரம் வேண்டித் தொழுதனர். "நாமே உங்களுக்குப் பிள்ளையாக பிறப்போம்!" என்று நம்பியும் அருள, அவர்களுக்கு நம்மாழ்வார் குழந்தையாகத் தோன்றினார். ஆதலால், திருக்குறுங்குடி நம்பி ஒரு வார்த்தை அருளினால் அவ்வார்த்தையை நம்மாழ்வாரே அருளியதாகக் கொள்வதில் தடையேதும் இல்லை. "நாம் செய்து முடிக்க வேண்டியதை, இராமானுசர் கலியைக் கெடுத்துச் செய்து முடிப்பார்," என்று நம்மாழ்வார் நாதமுனிகளிடம் அருளினார் என்பதை முன்னமே கண்டோம். "இராமானுசரே! எப்படி இவர்களை வெற்றிகரமாகத் திருத்தினீர்?" என்று திருக்குறுங்குடி நம்பி கேட்டதால், அன்று நம்மாழ்வார் அருளியதை இராமானுசர் குறையின்றி நிறைவேற்றிவிட்டார் என்பதும் புலப்படுகின்றது.




காஷ்மீர தேசத்து நாமங்கை வெளியிட்டருளிய பெருமை

Image Source: https://in.pinterest.com/pin/4714774599916389/

இராமானுசர் காஷ்மீர தேசம் சென்றபோது, அங்கே கோயில் கொண்டு அருள் பாலிக்கும் நாமங்கை [ஸரஸ்வதி தேவி], "வாரீர் இராமானுசரே! சாந்தோக்ய உபநிடத்தில் உள்ள 'கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி' என்ற வேதவாக்யத்தின் பொருள் என்ன என்று உரைப்பீர்!" என்ன, "'சூரியனால் அன்று அலர்த்தப்பட்ட தாமரையின் இதழ்கள் போன்ற திருக்கண்களை உடைய பரமபுருடன்' என்று இதற்குப் பொருள்," என்று இராமானுசரும் அருளினார்.

இதைக் கேட்டு மிக உகந்த நாமங்கையும், "இராமானுசரே! வேதவியாசரின் பிரம்மசூத்திரத்திற்குத் தாங்கள் அருளிய இந்த உரையே 'ஸ்ரீபாஷ்யம்'" என்று முழங்கி, இராமானுசரின் ஸ்ரீபாஷ்ய பட்டோலையைத் தமது சிரத்தில் தரித்து, "நீரே ஸ்ரீபாஷ்யகாரர்," என்றும் இராமானுசருக்குப் பட்டமளித்து, தான் வணங்கும் பரிமுகப்பெருமாளான ஹயக்ரீவர் திருமேனியை இராமானுசருக்குச் சமர்ப்பித்தாள். இராமானுசரும் தம்மை அன்புடன் நாடி வந்த ஹயக்ரீவர் பெருமானைத் தமது திருவாராதனத்தில் எழுந்தருளச் செய்து உகந்தார்.

"பரிமுகப் பெருமாளின் சிஷ்யையான ஸரஸ்வதி தேவி ஞானத்திற்கு அதிதெய்வமாக நியமிக்கப்பட்டவள். பிரம்மாண்டத்தின் மிகச்சிறந்த உலகமான சத்ய லோகத்தின் இல்லத்தரசி. அனைவருக்கும் பேச்சு வல்லமையை அருள்பவள். அவளே தனது நாவால் இராமானுசரை 'ஸ்ரீபாஷ்யகாரர்' என்று புகழ்ந்து உரைத்திருக்கின்றாள் என்பதால் உலகமே இராமானுசரின் புகழை உரைத்திருக்கிறது என்றே கொள்ளவேண்டும்," என்று ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் அருமையாக விளக்குகின்றார்.




திருப்பாற்கடல்நாதன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.uveda.org/divya-desam/thirupp%C4%81rkadal

திருவத்தியூர் என்கிற காஞ்சிபுரத்தில், ஐந்தாறு வயது ஆகியும் பேச்சு வராமல் இருந்த ஒரு சிறு பிள்ளை, திடீரென மூன்று நான்கு ஆண்டுகளாக காணாமல் போயினன். பின்னர், ஒரு நாள் பேசும் திறமையுடன் அந்தப் பிள்ளை திருக்கச்சிக்கு மீண்டும் வந்தனன். அவனது இந்த அற்புதமான மாற்றத்தைக் கண்ட ஊரார் எல்லோரும் மிகவும் வியந்து, "பிள்ளாய்! நீ எங்கு போனாய்?" என்று கேட்க, அந்தப் பிள்ளையும், "நான் திருப்பாற்கடல் சென்றேன்," என்றான். மேலும் வியப்படைந்த எல்லோரும், "அங்கே என்ன சிறப்புச் செய்தி?" என்று கேட்க, "சேனைமுதலியார் [விஷ்வக்சேனர்] இங்கே இராமானுசராகத் திருவவதாரம் செய்துள்ளார்," என்று அந்தப் பிள்ளை உரைத்து, அக்கணமே அங்கிருந்து மறைந்தும் போயினன்!

இப்படி ஒரு புது விதமான லீலையைப் புரிந்து, "இராமானுசரின் பெருமையைத் திருப்பாற்கடலிலும் பேசி மகிழ்கின்றோம்!" என்று திருப்பாற்கடல்நாதன் வெளியிட்டருளி, தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டான் என்றே கொள்ளவேண்டும்!

குறிப்பு: இராமானுசர் ஆதிசேடனின் திருவவதாரம் என்பது சரியே. அத்துடன், எம்பெருமானின் படைத் தளபதியான சேனைமுதலியார் மற்றும் எம்பெருமானின் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய பஞ்சாயுதாழ்வார்கள் ஆகியோரின் சிறப்பு அம்சங்களும் இராமானுசருக்குள் இருந்து செயல்பட்டனர்.




திருப்பரமபதநாதன் வெளியிட்டு அருளிய பெருமை

Image Source: https://www.uveda.org/divya-desam/paramapadam

குமாண்டூர் இளையவில்லி ஆச்சான் என்று இராமானுசருக்கு ஒரு சீடர் இருந்தார். ஒரு நாள், இரவில், இளையவில்லி ஆச்சான் ஒரு கனவு கண்டார்: எல்லையற்ற ஒளி பொருந்திய ஒரு தெய்வீக விமானத்தில், இராமானுசர் எழுந்தருளியிருக்க, வைகுந்தத்திற்கும் பூமிக்கும் நடுவே, தன்னுடைய மனத்திற்கு இனியோரான வைகுந்தவாசிகளாம் சேனைமுதலியார், கருடாழ்வார், நம்மாழ்வார், நாதமுனிகள் என்று பல்லாயிரம் நல்லடியார்கள் புடை சூழ, சங்கம், முரசு முதலான பல மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபதநாதன் இராமானுசரை வந்து எதிர்கொண்டு அழைக்கிறான். பின்னர், இராமானுசர் எழுந்தருளியிருந்த தெய்வீக விமானம் முன்னே செல்ல, இளையவில்லி ஆச்சான் அவ்விமானத்தைப் பின்தொடர்கிறார்.

கனவு கலைந்து, திடுக்கிட்டு எழுந்த இளையவில்லி ஆச்சான், அவரது பக்கத்து அகத்தில் எழுந்தருளியிருந்த வள்ளல் மணிவண்ணன் என்பவரிடம், "எங்கள் ஆசாரியர் எம்பெருமானாராம் இராமானுசர் ஒரு தெய்வீக விமானத்தில் ஏறி அருள, பரமபதநாதன் அடியார்கள் புடை சூழ வந்து இராமானுசரை எதிர்கொண்டு வரவேற்க, எம்பெருமானாராம் எங்கள் இராமானுசர் பரமபதம் எழுந்தருளியதாகக் கனாக் கண்டேன். இது மெய்ப்பொருள் செறிந்ததொரு கனவு - எங்கள் இராமானுசர் பரமபதம் எழுந்தருளிவிட்டார் என்பது திண்ணம். இனி அடியேனால் தரிக்க இயலாது. எம்பெருமானார் திருவடிகளே சரணம்!" என்று அருள, அக்கணமே இளையவில்லி ஆச்சான் உயிர் பிரிந்து, அவரும் இராமானுசரின் திருவடிகளை அடைந்தார்!

பொதுவாக, ஒரு அடியவர் திருநாடு என்ற பரமபதம் எழுந்தருளினால், அவரை வரவேற்க எம்பெருமானின் திருப்பாதுகைகளை அடியார்கள் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து, வந்திருக்கும் முக்தாத்மாவிற்குச் சிரத்தில் எம்பெருமானின் திவ்ய பாதுகைகளைச் சாற்றிக் கௌரவிப்பர், பேராவலுடன் வரவேற்பர். இராமானுசரின் எல்லையற்ற பெருமைக்குச் சேர, அந்தத் திருப்பரமபதநாதனே முன்னே இருந்து வழி நடத்தி, அனைத்து வைகுந்தவாசிகளுடன் சேர்ந்து, மங்கல இசைக்கருவிகள் முழங்க, இராமானுசரை வரவேற்றுள்ளான் என்றால் இராமானுசரின் பெருமையைப் பேசி முடிக்க இயலுமா? இதை நாமும் உணரவே, இராமானுசரின் அணுக்கத் தொண்டருடைய கனவின் மூலமாக இச்செய்தியைத் திருப்பரமபதநாதன் வெளியிட்டருளினான் என்றே கொள்ளவேண்டும்.




"இராமானுசருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு சொல்லப்படுகின்றன?"

Image Source: https://in.pinterest.com/pin/245657354663281539/

"இராமானுசர் எந்தை ஆதலால் அவரைக் கொண்டாடுகிறேன்," என்பது சீரிய நிலை. அதை அடையமுடியாவிடிலும், இராமானுசர் செய்து அருளிய மாபெருஞ்செயல்களை எண்ணி இராமானுசர் திருவடிகள் மீது மாறாத காதல் கொள்ளலாம்.

நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் வேத வேதாங்கங்களைப் பாசுரங்களாக அருளினார்கள். ஆகிலும், எம்பெருமானிடமிருந்து அவர்களைப் பிரிக்கும் பிறவிக்கடலின் அடிக்கொதிப்பைத் தாங்காமல், வெகு விரைவில் பரமபதம் எழுந்தருளினார்கள். இராமானுசரோ, நாம் ஏதும் வேண்டாமலேயே, நம் நிலை கண்டு நம் மீது பேரருள் புரிந்து, வைகுந்தத்தை விடுத்து, எம்பெருமானுக்கும் நமக்கும் நன்மை விளைவிக்கவேண்டும் என்ற ஒரே தூய நோக்கத்துடன் இப்பூமியில் திருவவதரித்து, 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து, பற்பல அற்புதமான தொண்டுகளைச் செய்தார்.

இராமானுசர் செய்த அற்புதத் தொண்டுகளை 4 வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. வேத வேதாந்தங்களின் மெய்ப்பொருள்களை, இராமானுசர் தாம் இயற்றிய நூல்களின் மூலம், ஐயம் திரிபற விளக்கியருளினார். பாரத பூமியெங்கும் திக்விஜயம் செய்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பரப்பி, பற்பல மதிப்பிற்குரிய ஞானவீரர்களை வாதப்போரில் இராமானுசர் வென்றருளினார்.

    "சர்க்கரைப் பொங்கல் இனிக்கும்," என்று ஒருவர் ஆயிரம் முறை சொன்னாலும், அதைச் சுவைத்த பின்னரே அவர் சொன்னதன் பொருள் விளங்கும். அது போலவே, இராமானுசர் வேதாந்தங்களின் மெய்ப்பொருளை விளக்கியருளிய பாங்கைப் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இராமானுசர் அருளிய வேதாந்தக் கருத்துக்களின் உரை நூல்களான கீதா பாஷ்யம், வேதார்த்த சங்கிரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு நூலையாகிலும் [இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு நல்லாரிடம்!] பயிலவேண்டும். அப்போது மட்டுமே ஸ்ரீபாஷ்யகாரர் செய்தருளிய இந்த இணையற்ற தொண்டின் ஏற்றத்தை ஓரளவேனும் புரிந்துகொள்ள இயலும்.

  2. ஆழ்வார்கள் அருளிய திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுடைய பெருமைகளை வெளியிட்டு, அவற்றிற்கான ஆழ்பொருள்களை விளக்கும் சிறப்பான உரைகளை நல்ல தகுதியுள்ள ஆசாரியர்கள் மூலமாக வெளியிட்டு, அவற்றை ஏடுபடுத்தும் வழக்கத்தையும் இராமானுசரே துவக்கியருளினார். இராமானுசருடைய இந்த மாபெரும் தொண்டே ஆழ்வார்களின் வாழ்வை முளைக்கச் செய்தது என்பர் பெரியோர்.

    பலரும் ஆழ்வார்களின் பாசுரங்களில் [குறிப்பாக அவற்றின் அருந்தமிழில்] மூழ்கிவிடுகிறார்கள். இது சரியே ஆயினும், இது முதல் படியே. உண்மையில், அப்பாசுரங்களின் ஆருயிர் அவற்றிற்கு நல்லாசிரியர்கள் அருளிய விளக்க உரைகளிலேயே உள்ளது! அந்த விளக்க உரைகளை நாம் [ஒரு நல்லாசிரியரிடம்!] பயின்றால், "இவற்றை அடியேனும் பெறும்படி நம் பெரியோர் செய்தனரே!" என்ற நன்றியுணர்வு பொங்கும். இதற்கு வழி வகுத்தவர் கருணையின் இதத் தாயாம் இராமானுசரே!

  3. திருவரங்கம், திருவேங்கடம் முதலான திருக்கோயில்களில் எம்பெருமானுக்குச் செய்யும் திருவாராதனங்களில் பல சீர்மையான திருத்தங்களை இராமானுசர் செய்தருளினார்.

    இதை உணர்ந்து மகிழ, கோயிலொழுகு, வேங்கடேச இதிகாச மாலா ஆகிய நூல்களை வணங்கி, வாசிக்கவேண்டும். இராமானுசர் எம்பெருமானுக்கு அடிமை செய்ய எவ்வளவு பாரிக்கின்றார், அவரது ஞான, பக்தி, வைராக்யாங்களை எம்பெருமான் மற்றும் அவனது அடியார்களுடைய நன்மைக்கு எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றார் என்பதை இவை நமக்கு ஒருவாறு உணர வைக்கும்! இராமானுசர் செய்த தொண்டுகளால் எம்பெருமானும் எம்பெருமாட்டியும் எவ்வளவு உகந்தருளினார்கள் என்பதற்கான சான்றை மேலக்கோட்டை செல்வப்பிள்ளையும், பட்டர்பிரான் கோதையும் வெளியிட்டருளினரே!

  4. நம் போன்ற எளியோரும் மோட்சம் அடையவேண்டும் என்பதற்காக, நம் சார்பில் தாமே திருவரங்கன் திருவடிகளில் சரணாகதி செய்து, 'தமது திருவடிகளைச் சார்ந்தவருக்கு மோட்சம்' என்ற வரத்தைப் பெற்று, நம்மெல்லோருடைய வைகுந்தப் பேற்றுக்குத் தம் திருவடிகளே வழியாய் இருந்து அருளும் வண்ணம் இராமானுசர் செய்தருளினார். 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தி, அவர்களுடைய திருவம்சத்தவர் மூலமாக நமக்கும் "ராமானுஜ திருவடி சம்பந்தம்" என்ற வைத்தமாநிதி கிடைக்க இராமானுசர் வழி வகுத்தார். இது எம்பெருமானார் இராமானுசர் மட்டுமே செய்த ஒரு ஈடற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த, மாபெரும் ஆன்மீகச் சாதனை!

    நம் போன்றோர் உய்யவேண்டும் என்று பரபரக்கும் எம்பெருமானாராம் இராமானுசருடைய இன்னருள் என்கிற அமுதக்கடலில் ஒரு சில துளிகளை "காரேய் கருணை இராமானுசர்" என்ற கட்டுரையில் முன்னமே விண்ணப்பம் செய்திருந்தேன். விரிவுக்கு அஞ்சி இத்துடன் நிறுத்துகின்றேன். எம்பெருமானாராம் இராமானுசருடைய கருணை என்ற மாபெருங்கடலுக்குக் கரை காண இயலுமா? இராமானுசர் அருளிய கத்ய த்ரயம், நித்யம் போன்ற நூல்களை [ஒரு நல்லாரிடம்!] பயின்றால் இதில் மேலும் ஈடுபாடும், தெளிவும் பிறக்கும்.

இந்தத் தொண்டுகளையெல்லாம், "நான் செய்கிறேன்" என ஒரு போதும் எண்ணாமல், தமது ஆசாரியர் பெரிய நம்பிகளும், பரமாசாரியர் ஆளவந்தாரும் செய்தருளுவதாகவே இராமானுசர் எண்ணினார் என்பது கூடுதல் தகவல்!




முடிவுரை

Image Source: https://in.pinterest.com/pin/576883033525393539/

எந்தை மணவாள மாமுனிகள் உபதேசரத்தினமாலையில் முழங்கியுள்ள அற்புதமான, பொருள் செறிந்த பாசுரங்கள் - இதைவிடச் சிறப்பாக எந்தை இராமானுசர் திருவவதரித்த இந்நன்னாளின் ஏற்றத்தை அருள இயலாது:




வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment