கோதா சதுச்லோகி |
Image Source: https://www.tamilbrahmins.com |
முன்னுரை |
ஸ்ரீ இராமானுசரின் முக்கிய சீடர்களுள் ஒருவரான ஸ்ரீ திருமலை அனந்தாண்பிள்ளை என்ற மிகச்சிறந்த அடியவர், ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாளின் திருவடிகள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஸ்ரீ திருமலை அனந்தாண்பிள்ள ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளியிருந்தபோது, "திருமுக்குளம்" என்ற திருக்கோயில் திருக்குளத்தில் ஆழ்ந்து மூழ்கி எதையோ தேடிக் கொண்டிருந்தாராம். வெகு நேரம் அவர் தேடிக் கொண்டிருந்ததைக் கண்டு, உடன் இருந்தவர்கள், "என்ன தேடுகிறீர்?" என்று கேட்க, "முன்னொரு காலம் அன்னை கோதை இங்கே நீராடியிருப்பள். அவள் பயன்படுத்தி மிகுந்த மஞ்சள் கிழங்கு ஏதேனும் பிரசாதமாகக் கிடைக்குமா என்று தேடுகின்றேன்," என்று பதில் உரைத்தாராம்!
ஸ்ரீ இராமானுசரின் திருவுள்ளம் உகக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திருவேங்கடவனின் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ திருமலை அனந்தாண்பிள்ள, வைகுந்தம் எழுந்தருளிய நாளும் ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாளின் திரு அவதார தினமான திருவடிப்பூரமே ஆகும்!
ஸ்ரீ திருமலை அனந்தாண்பிள்ள தமது பெருமதிப்பிற்குறிய ஆசாரியரான ஸ்ரீ இராமானுசரின் பெருமைகளைப் பாடும் "ஸ்ரீ இராமானுஜ சதுச்லோகி" என்ற நூலையும், ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாளின் பெருமைகளைப் பாடும் "ஸ்ரீ கோதா சதுச்லோகி" என்ற நூலையும் அருளியுள்ளார்.
"ஸ்ரீ கோதா சதுச்லோகி" என்ற நூலில் உள்ள சுலோகங்களின் பொருள்களைச் சுவைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
Image Source: https://in.pinterest.com/pin/3237030970653837/ |
கோதா சதுச்லோகி - சுலோகம் # 1 |
நிஸ்ஸம | [எந்தக் கோதை மாமகளின்] ஒப்பற்றதும் |
உத்துங்க | உயர்ந்ததும் ஆகிய |
வார்த்தா | வார்த்தை |
நிகம சிரஸாம் | தமிழ் மறைகளின் [மற்றும் வேதாந்தங்களின்] சிரத்தை |
நித்யா பூஷா | எப்போதும் அணி செய்கின்றதோ |
காந்தோ யஸ்யா: | [எந்தக் கோதை மாமகளின்] திருவுள்ளத்திற்கு இனியவன் |
கச விலுலுதை: | அவள் திருக்குழற்கற்றையிலிருந்து களைந்ததால் |
மால்ய ரத்னை: | இரத்தினத்தைப் போன்று விலைமதிப்பற்றதும், ஒளியுடன் கூடியதும் ஆகிய மாலையை |
காமுகோ | மிகவும் விரும்புகின்றானோ |
ஸூக்த்யா யஸ்யா: | [எந்தக் கோதை மாமகளின்] திருவாக்குகள் என்கிற |
ஶ்ருதி ஸுபகயா | இனிமையான மறைகளால் |
தரித்ரீ | உலகத்துக்கே |
ஸுப்ரபாதா | நல்விடிவு ஏற்படுகின்றதோ |
ஸைஷா [ஸ + ஏஷா] | அப்படிப்பட்ட |
தேவீ | தெய்வீகமான [ஸ்ரீ கோதை மாமகளே!] |
ஸகல ஜனனீ | எங்கள் எல்லோருக்கும் திருத்தாயானவளே! |
அபாங்கை: | உன் திருக்கடைக்கண்களுடைய உயர்ந்த பார்வையை |
மாம் | அடியேன் மீது |
ஸிஞ்சதாம் | பொழிந்து அருளவேண்டும்! |
சுலோகம் # 1 - பொழிப்புரை |
[எந்தக் கோதை மாமகளின்] ஒப்பற்றதும் உயர்ந்ததும் ஆகிய வார்த்தை தமிழ் மறைகளின் [மற்றும் வேதாந்தங்களின்] சிரத்தை எப்போதும் அணி செய்கின்றதோ
[எந்தக் கோதை மாமகளின்] திருவுள்ளத்திற்கு இனியவன் அவள் திருக்குழற்கற்றையிலிருந்து களைந்ததால் இரத்தினத்தைப் போன்று விலைமதிப்பற்றதும், ஒளியுடன் கூடியதும் ஆகிய மாலையை மிகவும் விரும்புகின்றானோ
[எந்தக் கோதை மாமகளின்] திருவாக்குகள் என்கிற இனிமையான மறைகளால் உலகத்துக்கே நல்விடிவு ஏற்படுகின்றதோ
அப்படிப்பட்ட தெய்வீகமான [ஸ்ரீ கோதை மாமகளே!]
எங்கள் எல்லோருக்கும் திருத்தாயானவளே!
உன் திருக்கடைக்கண்களுடைய உயர்ந்த பார்வையை அடியேன் மீது பொழிந்து அருளவேண்டும்!
Image Source: https://in.pinterest.com/pin/63191201013495594/ |
கோதா சதுச்லோகி - சுலோகம் # 2 |
மாதா சேத் துலஸீ | [எந்தக் கோதை மாமகளின்] திருத்தாயார் முளைக்கும் போதே நறுமணம் வீசும் நாற்றத் திருத்துழாயோ |
பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணுசித்தோ மஹாந் | [எந்தக் கோதை மாமகளின்] திருத்தகப்பனார் எம்பெருமானுக்கே பொங்கும் பரிவால் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாராம் விட்டுசித்தரோ |
ப்ராதா சேத் யதிஶேகர: | [எந்தக் கோதை மாமகளின்] திருத்தமையனார் ஆசாரிய பரம்பரையின் சிகரமானவரும், எதிகட்கு இறைவரும் ஆகிய ஏராரும் எதிராசரோ |
ப்ரியதம: ஸ்ரீரங்கதாமா யதி | [எந்தக் கோதை மாமகளின்] மனத்துக்கினியான் பரமபதம் உள்ளிட்ட 108 திவ்யதேசத்து எம்பெருமான்களுள் முதன்மையானவனான செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனாரோ |
தனயா: | [எந்தக் கோதை மாமகளின்] திருமகனார்கள் |
ஸ்தன்யேன | அவளது பக்தி என்கின்ற திருமுலைத்தடங்களில் பெருகுகின்ற |
த்வதுக்தி ஸரஸ | [திருப்பாவை மற்றும் நாய்ச்சியார் திருமொழி ஆகிய] திருவாக்குகளாம் அமுதமன்ன தாய்ப்பாலைப் பருகி |
ஜ்ஞாதார: ஸம்வர்த்திதா: | அறப்பெரிய ஞானிகளாக வளர்ந்தவர்களோ [அதாவது, ஸ்ரீ இராமானுசர் தரிசனத்தின் ஆசாரியர்கள்] |
கோதா தேவி | [அப்படிப்பட்ட] கோதா தேவியே! |
கதம் த்வம் | எப்படி [இவ்வளவு பெருப்பெருத்த பெருமைகளையுடைய] நீர் |
அந்ய | மற்றவர்களுக்கு |
ஸுலபா ஸாதாரணா | மிக மிக எளிதாக |
ஸ்ரீரஸி | உமது திருவருளை அடையும்படி எழுந்தருளியிருக்கின்றீர்? |
சுலோகம் # 2 - பொழிப்புரை |
[எந்தக் கோதை மாமகளின்] திருத்தாயார் முளைக்கும் போதே நறுமணம் வீசும் நாற்றத் திருத்துழாயோ
[எந்தக் கோதை மாமகளின்] திருத்தகப்பனார் எம்பெருமானுக்கே பொங்கும் பரிவால் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாராம் விட்டுசித்தரோ
[எந்தக் கோதை மாமகளின்] திருத்தமையனார் ஆசாரிய பரம்பரையின் சிகரமானவரும், எதிகட்கு இறைவரும் ஆகிய [ஸ்ரீ இராமானுசராம்] ஏராரும் எதிராசரோ
[எந்தக் கோதை மாமகளின்] மனத்துக்கினியான் பரமபதம் உள்ளிட்ட 108 திவ்யதேசத்து எம்பெருமான்களுள் முதன்மையானவனான செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனாரோ
[எந்தக் கோதை மாமகளின்] திருமகனார்கள் அவளது பக்தி என்கின்ற திருமுலைத்தடங்களில் பெருகுகின்ற [திருப்பாவை மற்றும் நாய்ச்சியார் திருமொழி ஆகிய] திருவாக்குகளாம் அமுதமன்ன தாய்ப்பாலைப் பருகி அறப்பெரிய ஞானிகளாக வளர்ந்தவர்களோ [அதாவது, ஸ்ரீ இராமானுசர் தரிசனத்தின் ஆசாரியர்கள் என உயர்ந்தவர்களோ]
[அப்படிப்பட்ட] கோதா தேவியே!
[இவ்வளவு பெருப்பெருத்த பெருமைகளையுடைய] நீர் எப்படி மற்றவர்களுக்கு மிக மிக எளிதாக உமது திருவருளை அடையும்படி எழுந்தருளியிருக்கின்றீர்?
Image Source: https://www.tamilbrahmins.com/threads/srivilliputhur-sri-andal-sri-rengamannar-pushpa-yagam.54769/ |
கோதா சதுச்லோகி - சுலோகம் # 3 |
கல்பாதௌ | இந்தச் சுவேதவராக கல்பத்தின் தொடக்கத்தில் |
ஹரிணா ஸ்வயம் | அரியாகிற எம்பெருமான் [ஸ்ரீ பூவராகப் பெருமாளாகத் தோன்றி] தாமே |
ஜன ஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம் | [பூமிப் பிராட்டியின் திருவுள்ள உகப்புக்காக அவளது குழந்தைகளான] இவ்வுலகத்தோரின் இதத்தை வேண்டி |
ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச | [ஸ்ரீ கைசிக புராணத்தைத் தன்னகத்தே கொண்ட ஸ்ரீ வராகப் புராணத்தில் மேல்வரும் விஷயங்களைத்] திருவாய் மலர்ந்து அருளினான்: |
கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிரஸூநார்ப்பணம் | என் திருநாமங்களை வாயினால் பாடி, என்னையே வழியாக மனத்தினால் சிந்தித்து, என்னைத் தூமலர் தூவித் தொழவேண்டும் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாதுமனிஶம் | [பிறவிக்கடலைக் கடக்க எம்பெருமான் உபதேசித்த இந்த எளிமையான வழியை] இவ்வுலகத்தோர் யாவருக்கும் தெளிவாக அறிவிக்க [எமக்காக வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து] |
வைதிக விஷ்ணுசித்த தநயாம் | வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தவரும், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடியவரும் ஆகிய ஸ்ரீ பட்டர்பிரான் விட்டுசித்தரின் திருமகளாராக |
ஸ்ரீதந்விநவ்யேபுரே ஜாதாம் | ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதாரம் செய்தவளை |
கோதாம் | கோதா தேவியை |
உதாராம் | இன்னிசையால் நற்பாமாலை பாடிக்கொடுத்த வள்ளலை |
ஸ்தும: | அடியேன் துதிக்கின்றேன்! |
சுலோகம் # 3 - பொழிப்புரை |
இந்தச் சுவேதவராக கல்பத்தின் தொடக்கத்தில் அரியாகிற எம்பெருமான் [ஸ்ரீ பூவராகப் பெருமாளாகத் தோன்றி], தாமே [பூமிப் பிராட்டியின் திருவுள்ள உகப்புக்காக அவளது குழந்தைகளான] இவ்வுலகத்தோரின் இதத்தை வேண்டி, [ஸ்ரீ கைசிக புராணத்தைத் தன்னகத்தே கொண்ட ஸ்ரீ வராகப் புராணத்தில்] மேல்வரும் விஷயங்களைத் திருவாய் மலர்ந்து அருளினான்: "என் திருநாமங்களை வாயினால் பாடி, என்னையே வழியாக மனத்தினால் சிந்தித்து, என்னைத் தூமலர் தூவித் தொழவேண்டும்!"
[பிறவிக்கடலைக் கடக்க எம்பெருமான் உபதேசித்த இந்த எளிமையான வழியை] இவ்வுலகத்தோர் யாவருக்கும் தெளிவாக அறிவிக்க [எமக்காக வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து], வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தவரும், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடியவரும் ஆகிய ஸ்ரீ பட்டர்பிரான் விட்டுசித்தரின் திருமகளாராக, ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதாரம் செய்தவளை, கோதா தேவியை, இன்னிசையால் நற்பாமாலை பாடிக்கொடுத்த வள்ளலை அடியேன் துதிக்கின்றேன்!
Image Source: https://www.tamilbrahmins.com/threads/srivilliputhur-sri-kodhai-nachiar-neerattu-utsavam.53358/ |
கோதா சதுச்லோகி - சுலோகம் # 4 |
ஆராம | விரையார் பொழில் |
ஶைலேஶிது: | வேங்கடவன் |
ஆகூதஸ்ய | திருவுள்ளத்தை |
பரிஷ்க்ரியாம் | அலங்கரிப்பவளை |
அநுபமாம் | ஒப்பற்றவளை |
சக்ஷூஷோ: | எல்லோர் கண்களுக்கும் |
ஆஸேசனம் | மிகவும் இனிமையானவளை |
ஆனந்தஸ்ய பரம்பராம் அநுகுணாம் | எம்பெருமானுடைய திருவுள்ளத்திற்கு ஏற்றார் போல் [அடியார்களிடம் போர கருணையுடன்] நடப்பவளாகையால் அவனது மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பவளை |
தத் தோர்மத்ய | எம்பெருமானுடைய திருமார்பிலும் |
கிரீடகோடி | திருவபிஷேகத்தின் உச்சியிலும் |
ஸ்வோச்சிஷ்ட மால்யா | அவளது திருக்குழற்கற்றையில் அவள் சூடிக் களைந்த மாலையின் |
கடித | [விலைமதிப்பற்ற, உயர்ந்த] தொடர்பால் |
கஸ்தூரிகா | மிக்க நறுமணம் கமழ்வதால் |
மோத | எம்பெருமானின் திருவுள்ள உகப்பை |
ஸமேதிதாத்ம | பன்மடங்கு பெருக்கும் |
விபவாம் | பெருமை உடையவளை |
கோதாம் | கோதா தேவியை |
உதாராம் | எம்பெருமானுக்குப் பூமாலை சூடிக்கொடுத்து அவனையும் உகப்பித்த வள்ளலை |
ஸ்தும: | அடியேன் துதிக்கின்றேன் |
சுலோகம் # 4 - பொழிப்புரை |
- விரையார் பொழில் வேங்கடவன் திருவுள்ளத்தை அலங்கரிப்பவளை
- ஒப்பற்றவளை
- எல்லோர் கண்களுக்கும் மிகவும் இனிமையானவளை
- எம்பெருமானுடைய திருவுள்ளத்திற்கு ஏற்றார் போல் [அடியார்களிடம் போர கருணையுடன்] நடப்பவளாகையால் அவனது மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பவளை
- எம்பெருமானுடைய திருமார்பிலும், திருவபிஷேகத்தின் [மகுடத்தின்] உச்சியிலும் அவளது திருக்குழற்கற்றையில் அவள் சூடிக் களைந்த மாலையின் [விலைமதிப்பற்ற, உயர்ந்த] தொடர்பால் மிக்க நறுமணம் கமழ்வதால், எம்பெருமானின் திருவுள்ள உகப்பை பன்மடங்கு பெருக்கும் பெருமை உடையவளை
- கோதா தேவியை
- எம்பெருமானுக்குப் பூமாலை சூடிக்கொடுத்து அவனையும் உகப்பித்த வள்ளலை
Image Source: https://www.tamilbrahmins.com/threads/srivilliputhur-sri-kodhai-nachiar-in-sesha-vahanam.54698/ |
முடிவுரை |
எல்லோருக்கும் இனிய மார்கழி உதிக்கட்டும். எல்லோரும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறட்டும். ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
ஸ்ரீ கோதா சதுச்லோகி மிக அருமை. அந்த அழகான சுலோகங்களின் பொருளை, தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது பொழிப்புரை. ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்.
ReplyDeleteமிக்க நன்றி. நீங்கள் ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடும் இந்த உயர்ந்த சுலோகங்களின் பொருள்களில் மூழ்கித் திளைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.
Delete