Search This Blog

Thursday 19 January 2023

அட்டத்திக்கயங்கள்

அட்டத்திக்கயங்கள்


Image Source: Srirangam Raghava Perumal, Sri Periya Nambigal Thirumaaligai Shishyar


முன்னுரை


ஸ்ரீ ஆதிசேடனாகிய ஸ்ரீ திருவனந்தாழ்வானே ஸ்ரீ நம்மாழ்வாரின் பொன்னடியான ஸ்ரீ இராமாநுசராகவும், ஸ்ரீ மன்னு புகழ் மணவாள மாமுனிகளாகவும், ஸ்ரீ மணவாள மாமுனிகளது உயிரான சீடரான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயராகவும் திருவவதாரம் செய்தருளினார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் பணிந்து உய்ந்த சீடர்களுள் எண்மர், ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய பூரண இன்னருளுக்கு இலக்காகி விளங்கினர். இவர்களையே ஸ்ரீ மணவாள மாமுனிகள் "அட்டத்திக்கயங்கள்" [அஷ்டதிக்கஜங்கள்] என்று போற்றி அருளினார். தாம் பெற்ற பெருமைகள் யாவும் தமது உயிரான சீடராம் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும் பெறவேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய சீடர்களுள் 8 அற்புதமான அடியார்களை "ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய அட்டத்திக்கயங்கள்" என நியமித்து அருளினார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய திருவடிகளில் அவருடைய அட்டத்திக்கயங்கள் வந்தடைந்த மிகச் சுவையான வரலாற்று நிகழ்வுகளையும், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய திருவடிகளில் அவருடைய அட்டத்திக்கயங்கள் தஞ்சம் புகுந்த நற்சுவைக் குறிப்புகளையும் பகிர்ந்தளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இச்சுவையான நிகழிச்சிகள் யாவும் "ஸ்ரீ யதீந்த்ரப்ரவண பிரபாவம்" மற்றும் "ஸ்ரீ ககனகிரி முனி சரித்திரம்" என்ற நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. இந்நூல்களை அருளிய பேரருளாளர்களான அம்மகான்களைப் பற்றிய சிறு முன்னுரைக்குப் பின் கட்டுரையின் பொருளுரை தொடங்கும்.




"ஸ்ரீ யதீந்த்ரப்ரவண பிரபாவம்" அருளிய ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர்

Image Source: Sri Venkatesh Srinivasadasar, Sri Dhoddayacharyar Thirumaaligai Shishyar

  1. ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயர் [எ] ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர்
  2. ஸ்ரீ திருவேங்கட இராமானுஜ ஜீயர்
  3. ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர்
  4. ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்
  5. ஸ்ரீ எறும்பியப்பா
  6. ஸ்ரீ அப்பிள்ளை
  7. ஸ்ரீ அப்பிள்ளார்
  8. ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா

ஆகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஸ்ரீ அட்டத்திக்கயங்களுள், ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர் என்ற நல்லோரின் பூருவாசிரமத் [துறவறம் ஏற்பதற்கு முன்] திருவம்சத்தில், [முகலாயர்களின் வெறித் தாக்குதலிலிருந்து திருவரங்கனைக் காத்துக்கொடுத்த] ஸ்ரீ பிள்ளைலோகாசாரியரின் அம்சமாகத் திருவவதரித்த ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் புண்ணிய சரித்திரத்தை 'ஸ்ரீ யதீந்த்ரப்ரவண பிரபாவம்' என அருளி, திருவரங்கன் முன் விண்ணப்பிக்க, "நீரே உலகாரியன்!" என ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயரைத் திருவரங்கன் கொண்டாடினான்.





"ஸ்ரீ ககனகிரி முனி சரித்திரம்" அருளிய ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார்

Image Source: https://koilathan.wordpress.com/aavani/athan-swami/

  1. ஸ்ரீ தொட்டையங்காரப்பை
  2. ஸ்ரீ சமரபுங்கவகுரு
  3. ஸ்ரீ சுத்தசத்வமண்ணன்
  4. ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா
  5. ஸ்ரீ இராமானுசம் பிள்ளான்
  6. ஸ்ரீ திருக்கோட்டியூர் ஐயர்
  7. ஸ்ரீ ஞானக்கண் ஆத்தான்
  8. ஸ்ரீ பள்ளக்கால் சித்தர்

ஆகிய ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ஸ்ரீ அட்டத்திக்கயங்களுள், ஸ்ரீ இராமானுசப் பிள்ளான் என்ற நல்லோரின் திருப்பேரனாராகவும், ஸ்ரீ வரத குரு ஆத்தானின் திருமகனாராகவும், ஸ்ரீ வானமாமலை தெய்வநாயகப் பெருமாளின் அம்சமாகத் திருவவதாரம் செய்தருளியவரும், கற்றோர்களால் கொண்டாடப்பட்டவரும் ஆகிய “ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார்” எனும் ஸ்ரீ சுந்தராரியர், அப்போது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீ வானமாமலை ஜீயரும், கனவில் தோன்றிய ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளும் அவரை நியமிக்க, 'ஸ்ரீ ககனகிரி முனி சரித்திரம்' அருளினார்.





ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர்


Image Source: http://acharya.org/mm/images/mamunigal/slides/Srirangam%201.html


"ஆமுதல்வன் இவன்!"

ஸ்ரீ மணவாள மாமுனிகள் துறவறம் ஏற்பதற்கு முன் "அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்" என்ற திருநாமத்துடன் திகழ்ந்தார். ஸ்ரீ வானமாமலையில், ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான ஸ்ரீ ரங்காசாரியார், தமக்கு இரண்டாவதாகத் திருவவதரித்த ஆண்மகவுக்கு 'அழகிய வரதர்' என்று திருநாமமிட்டு, ஸ்ரீ ஆழ்வார் திருநகரி சென்று, ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையிடம் தமது 3 திருமகனார்களுக்குத் திருவிலச்சினை [பஞ்ச சம்ஸ்காரம்] வேண்ட, தமது பிரிய சீடரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் திருவவதாரமே ஸ்ரீ அழகிய வரதரென ஞானத்தால் உணர்ந்த ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை ஸ்ரீ அழகிய வரதருக்குத் திருவிலச்சினை அருள நியமிக்க, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஸ்ரீ அழகிய வரதரை "ஆமுதல்வனிவன்" என்று குளிர நோக்கி, முதலில் ஸ்ரீ அழகிய வரதருக்கே திருவிலச்சினை அருளி, தமது ஸ்ரீ பாததீர்த்தமும், போனக சேடமும் [உண்ட பின் மீதம் இருக்கும் பிரசாதம்] சீடர்களுக்கு அருளி, அவர்களுடன் ஸ்ரீ இராமானுசரான ஸ்ரீ பவிஷ்யதாசாரியருக்குப் பல்லாண்டு பாடி, ஸ்ரீ அழகிய வரதரிடம் ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளைக் காட்டிக்கொடுக்க, ஸ்ரீ அழகிய வரதரோ தமது ஆசாரியரையே ஸ்ரீ இராமானுசரின் திருவடிகள் என அறுதியிட்டு, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாட, அனைவரும் ஸ்ரீ இராமானுசரின் தீர்த்தமும், பாதுகையாம் ஸ்ரீ முதலியாண்டானும் பெற்று, ஸ்ரீ இராமானுசரை வலம் வந்த பின், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீ நம்மாழ்வார் முன் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' சேவிக்கையில் 'அன்னையாய் அத்தனாய்' எனும் போது மிகவும் ஈடுபட்டு நிற்க, ஸ்ரீ அழகிய வரதரும் தமது ஆசாரியரின் திருமேனி எழிலிலும், பக்தியிலும் போர ஈடுபட்டு நிற்க, ஸ்ரீ அர்ச்சகர்களும் இந்த ஆசாரிய-சீடர் உறவைக் கண்டுகந்து, ஸ்ரீ நம்மாழ்வாரின் தீர்த்தம், திருப்பரிவட்டம், பாதுகையாம் ஸ்ரீ இராமாநுசன் ஆகிய மரியாதைகளை அருள, பின் அனைவரும் ஸ்ரீ நம்மாழ்வாரை வலம் வந்து, ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிகளை வணங்கினர்.

குருவே தெய்வமென முழங்கிய பெருமகனார்

மறு நாள், ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை ஸ்ரீ அழகிய வரதரிடம், "நீர் ஸ்ரீ வானமாமலை சென்று, பெற்றோருக்கும், ஸ்ரீ தெய்வநாயகனுக்கும் தொண்டுகள் செய்திரும்," என்ன, ஆசாரியனைப் பிரிய மனமின்றி ஸ்ரீ அழகிய வரதரும் மெளனமாகத் தலையைக் கவிழ்க்க, ஸ்ரீ அழகிய வரதரது திருவுள்ளத்தையறிந்த ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், "அழகிய வரதரை மேலும் சில நாள்கள் இங்கேயே தங்க அருளவேண்டும்," என விண்ணப்பிக்க, ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையும் சம்மதித்தருள, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் திருமுகமண்டல மலர்ச்சியே பயனாக ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் திருவடிகளில் சேவை புரிந்த ஸ்ரீ அழகிய வரதர், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய திராவிட வேதம், அதன் ஆழ்பொருள்கள், இரகசிய திரயங்களின் ஆழ்பொருள்கள் யாவும் கற்றுணர்ந்திருக்க, ஒரு நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீ அழகிய வரதரை ஸ்ரீ தெய்வநாயகனுக்கும், பெற்றோருக்கும் தொண்டு புரிய நியமிக்க, ஸ்ரீ அழகிய வரதரும், "நாம் இன்னும் உலகியலில் இருப்பதாலேயே ஆசாரியனைப் பிரிய நேரிடுகின்றது!" என வருந்தினாலும், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இட்ட வழக்காய், தமது குருவின் நற்குணங்களின் கூட்டங்களையே சிந்தித்து சென்று, ஸ்ரீ தெய்வநாயகனுக்குத் தொண்டுகள் புரிந்தார்.

"வானமாமலை இராமாநுஜ ஜீயர்" வந்தார்

எனினும், தமது திருவுள்ளம் ஆசாரியன் திருவடி சேவையையே நாட, ஸ்ரீ அழகிய வரதர் இல்லறம் ஏற்காமலே ஸ்ரீ தெய்வநாயகனிடம் துறவறம் வேண்ட, ஸ்ரீ தெய்வநாயகனும் ஸ்ரீ அழகிய வரதருக்குத் துறவறம் அளித்து, "வானமாமலை இராமாநுஜ ஜீயர்" என்று திருநாமம் அளித்து, "நம் இராமானுசரைப் போலே இத்திவ்வியதேசத்தில் இருந்து, நம் சந்நிதி கைங்கர்யங்களை நிர்வகித்து, இராமானுசர் தரிசனத்தை வளர்த்து வாரும்," என்றருளி, அபய ஹஸ்தம், ஸ்ரீசடாரி, திருமாலை, திருப்பரியட்டம், மாதுகரமாகப் பொன்வட்டிலில் பிரசாதம் ஆகியவற்றை அருளி, "நம் வானமாமலை இராமாநுஜ ஜீயர் இட்ட வழக்காய் இரும்!" என மற்றையோருக்கு அருளி, ஸ்ரீ வானமாமலை இராமாநுஜ ஜீயருக்குத் திருக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு திருமடம் அமைக்க அருள, அனைவரும், ஸ்ரீ தெய்வநாயகனின் திருவாணைப்படியே, ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயரை, மங்கள வாத்தியங்களுடன், திருமடத்தில் எழுந்தருளச் செய்து, "நம் இராமானுசரே நம்மை எடுத்தளிக்க எழுந்தருளினார்!" என்று கொண்டாட, ஸ்ரீ வானமாமலை இராமாநுஜ ஜீயரும் ஸ்ரீ தெய்வநாயகன் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தார்.

"நம் பொன்னடி ஆனீரோ, பொன்னடிக்கால் ஜீயரே?"

ஸ்ரீ தெய்வநாயகன் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தாலும், ஸ்ரீ வானமாமலை இராமாநுஜ ஜீயருடைய திருவுள்ளம் ஆசாரியன் திருவடி சேவையையே நாடியிருந்ததால், ஒரு தக்க அடியவரிடம் ஸ்ரீ வானமாமலை கைங்கர்யங்களை ஒப்படைத்து, ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட, அதே சமயம், சில கைங்கர்யங்களுக்காக ஸ்ரீ வானமாமலை இராமாநுஜ ஜீயரை அழைத்து வர ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஒரு அடியவரை அனுப்ப, ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் அந்த அடியவருடன் ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்குச் சென்று, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளை மிக உகந்து வணங்க, ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், தமது பேரன்புக்குரிய சீடரைக் கண்டுகந்து, "நம் பொன்னடி ஆனீரோ, பொன்னடிக்கால் ஜீயரே? நாம் துறவறம் ஏற்றபின் உமக்களிக்க நினைத்தோம். நீர் முந்தினீரே! உமக்குத் துறவறம் அளிக்கும் பேற்றை இழந்தோமே!" என்று, ஸ்ரீபாததீர்த்தமும், போனக சேடமும் உகந்து அருளினார்.

குருவருளால் திருவருளும், திருவருளால் இறையருளும் பெற்ற நற்குணசீலர்

Image Source: https://pbase.com/svami/image/29354362


ஸ்ரீ வானமாமலை திருத்தலத்து ஸ்ரீவரமங்கைத் தாயார் உற்சவர் முதலில் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்க, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் திருவேங்கடம் எழுந்தருளியபோது, அவரது கனவில் ஸ்ரீவரமங்கைத் தாயார் ஒரு குழந்தையாகத் தோன்றி, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய திருமடியின் மீது ஏறி அமர்ந்து, "என் திருத்தகப்பனாரே! என்னை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்குத் திருமணம் செய்துகொடுங்கள்!" என்றருள, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் இன்னருளால் திருவருள் பெற்ற ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும், ஸ்ரீவரமங்கைத் தாயாரை ஸ்ரீ வானமாமலை தெய்வநாயகப் பெருமானுக்குத் தாரை வார்த்துத் கொடுத்து, ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளால், "ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரே! திருப்பாற்கடலரசன், ஸ்ரீ ஜனக மகாராஜர், ஸ்ரீ பெரியாழ்வார் போலே நீரும் நமக்கு மாமனார் ஆனீர்!" என அருளப் பெற்றார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்


Image Source: Srirangam Raghava Perumal, Sri Periya Nambigal Thirumaaligai Shishyar


திருவேங்கடத்துத் திருத்தலத்தார் கேட்டுக்கொண்டதால், ஸ்ரீ இராமானுசர் ஏற்படுத்திய ஸ்ரீ அனுமன் முத்திரை பதித்த மோதிரம் தரிக்கும் ஸ்ரீ திருவேங்கட கேள்வி அப்பன் ஜீயர் பட்டத்தை “ஸ்ரீ பெரிய கேள்வி அப்பன் ஜீயர்” என ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்து, அதற்கு உறுதுணையாகத் தமது சீடராம் ஸ்ரீ திருவேங்கட இராமானுஜ ஜீயரை, ஸ்ரீ இராமானுசர் முத்திரை பதித்த மோதிரம் தரிக்கும் “ஸ்ரீ சிறிய கேள்வி அப்பன் ஜீயர்” என நியமித்தார்.

இதனாலேயே, இன்றும் திருவேங்கடத்தில் தொண்டு புரிய இரண்டு ஜீயர்கள் எழுந்தருளியுள்ளனர்.

Image Source: Sri Vikram Ramanujadasar, Sri Thiruvenkata Ramanuja Jeeyar Matam Shishyar





ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர்


Image Source: Srirangam Raghava Perumal, Sri Periya Nambigal Thirumaaligai Shishyar


ஸ்ரீ இராமாநுசரின் 74 ஸிம்ஹாஸன அதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீ நடுவிலாழ்வான் திருவம்சத்தில் திருவவதரித்த ஸ்ரீ கோவிந்த தாசர், ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகளை அடைந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் மோர் பிரசாதத்தை முதலில் உண்ணும் “மோர் முன்னர் ஐயர்” எனத் திகழ, ஸ்ரீ மணவாள மாமுனிகளே, "தேவு மற்று அறியேன் என இருப்பவர் இவர் ஒருவரே!", "நீர் நமக்கு தக்ஷிண பாஹு [வலது திருக்கரம்]" என அபிமானிக்க, ஒரு முறை, ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாளது தீர்த்தப் பிரசாதத்தை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு மிக்க ஆதரத்துடன் ஸ்ரீ கோவிந்த தாசர் கொண்டு வர, போர உகந்த ஸ்ரீ மணவாள மாமுனிகளால் “ஸ்ரீ பட்டர்பிரான் தாசர்” என ஸ்ரீ பட்டர்பிரான் கோதையின் திருவுள்ள உகப்புக்குத் திருநாமம் சூட்டப்பெற்று, துறவறம் ஏற்ற பின் “ஸ்ரீ பட்டர்பிரான் ஜீயர்” எனத் திகழ்ந்தார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்


Image Source: https://pbase.com/svami/image/104625134


ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் நற்குடிப் பிறப்பு

ஸ்ரீ முதலியாண்டான், ஸ்ரீ கந்தாடையாண்டான், ஸ்ரீ துன்னு புகழ் கந்தாடை தோழப்பர் முதலான மகான்களால் விளங்கும் ஸ்ரீ கந்தாடை திருவம்சத்தில் தோன்றிய காவேரி கடவாத கோயில் கந்தாடை அண்ணனான ஸ்ரீ வரத நாராயணன், திருவரங்கன் அவரை "என் அண்ணன்" என அழைக்கும் வண்ணம் திருவரங்கன் மீது அன்புடன் எழுந்தருளியிருக்க, ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் ஆணைப்படி வாழ்நாள் முழுவதும் திருவரங்கத்திலே வாசம் செய்ய ஸ்ரீ மணவாள மாமுனிகள் எழுந்தருள, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனோ, "ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என இருக்க, "ஸ்ரீ அண்ணன் திருவடிகளே தஞ்சம்" எனவிருந்த அவருடைய மருமக்கள் ஸ்ரீ திருவாழியாழ்வார் பிள்ளை மற்றும் ஸ்ரீ சுத்தசத்துவம் அண்ணன் ஆகியோர்களுள், ஸ்ரீ சுத்தசத்துவம் அண்ணனுக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் மீது பெருமதிப்பு ஏற்பட, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவுள்ளம் சற்றே கலங்கினாலும், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளைப் பணிவுடன் அவ்வப்போது விண்ணப்பம் செய்வார்.

ஸ்ரீ "திருமஞ்சனம் அப்பா"

ஸ்ரீ கந்தாடை சிற்றண்ணர் என்பவர் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தமையானார் ஆவார். ஸ்ரீ கந்தாடை சிற்றண்ணரின் திருத்தேவிகளே ஸ்ரீ ஆச்சியார். திருவரங்கனின் மெய்யடியாராம் ஸ்ரீ தேவராஜன் என்பார் ஸ்ரீ ஆச்சியாரின் திருத்தகப்பனார். ஸ்ரீ தேவராஜன் என்னும் அம்மெய்யடியார், திருக்காவிரியில் நீராடும் போது, தினமும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் நீராடிய தீர்த்தத்தின் பிரவாகத்தில் நீராடும் வண்ணம் அமைய, அவருக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் மீது அன்பு மிகுந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் அடைய, அவருக்குத் "திருமஞ்சனம் அப்பா" என்றே திருநாமம் ஏற்பட்டது.

ஸ்ரீ "அப்பாச்சியார்"

ஒரு நாள், ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருக்காவிரியில் நீராடச் செல்லும்போது, திடீரென மழை பொழிய, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருகிலிருந்த ஒரு திருமாலடியாரின் திருமாளிகையின் திருவாசலில் ஒதுங்க, அங்கிருந்த ஒரு பெண்மணி, தமது புடவையின் தலைப்பால் திண்ணையைத் துலக்கி, "சுவாமி! இத்திண்ணையின் மீது எழுந்தருளவேண்டும்," என வேண்ட, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் திண்ணை மீது ஏறியருள, அப்பெண்மணி மழையில் நனையும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஸ்ரீ பாதுகைகளைத் தமது சிரத்தில் சுமந்து வந்து, தமது புடவையின் தலைப்பால் உலர வைத்து, மீண்டும் தமது சிரத்தில் பணிவுடன் தரித்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகள் முன் வைக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும், "நீ யார்? இது யாருடைய திருமாளிகை?" என வினவ, "அடியேன் உமது சீடர் திருமஞ்சனம் அப்பாவின் பெண். அடியேன் பெயர் ஆச்சி. இது அவருடைய மணவாளப் பிள்ளை கந்தாடை ஐயங்காரின் திருமாளிகை," என அப்பெண்மணியும் விண்ணப்பிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும், "நம் அப்பாச்சியாரோ!" என உகந்தருளி, மழை நின்றவுடன் நீராடச் சென்றார்.

ஸ்ரீ அப்பாச்சியாரும், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஸ்ரீ பாதுகா தீர்த்த மகிமையால், “இப்பொழுதே ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகளில் தஞ்சம் புகவேண்டும்!” என்ற துடிப்பை அடைந்து, புக்ககத்தில் இதைக் கூறினால், ஸ்ரீ கந்தாடை ஐயங்கார்கள் ஏற்க மறுப்பர் என்பதால் ஸ்ரீ திருமஞ்சனம் அப்பாவிடம் விண்ணப்பிக்க, ஸ்ரீ திருமஞ்சனம் அப்பாவும் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம், "இப்பெண்பிள்ளையைச் சிஷ்யையாக ஏற்றருள்வீர்," என இரகசியமாக வேண்ட, "கந்தாடை திருவம்சத்தவருக்குத் தெரியாமலா! காரியப்படாது!" என ஸ்ரீ மணவாள மாமுனிகள் முதலில் மறுத்தாலும், ஸ்ரீ திருமஞ்சனம் அப்பாவின் மனமுருக்கும் வேண்டுதலால் திருவுள்ளமிரங்கி, "ஆகில் இவளால் இவளது குலமே உய்வு பெறும்!" என்று, ஸ்ரீ அப்பாச்சியாருக்குத் திருவிலச்சினையும், உபதேசங்களும் அருள, ஸ்ரீ அப்பாச்சியாரும் தமது திருகப்பனாரான ஸ்ரீ திருமஞ்சனம் அப்பாவின் திருமாளிகையிலேயே சில காலம் தங்க, சில நாள்கள் சென்ற பின், ஸ்ரீ அப்பாச்சியாரின் திருமாமனார் ஸ்ரீ கந்தாடை தேவராஜ தோழப்பருடைய திருவத்யயனத்திற்கு [தீர்த்தத் திவசத்திற்கு] ஸ்ரீ அப்பாச்சியாரைத் தளிகை [சமையல்] செய்யப் புக்ககத்தில் அழைக்க, ஸ்ரீ அப்பாச்சியாரும் சென்றார்.

தெய்வீக இரகசியங்கள்

அன்று, திருவத்யயனம் கைங்கர்யங்களை முடித்து, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகையின் திண்ணையில் அமர, அவர் கண்டிராத ஒரு திருமாலடியார் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமடத்திலிருந்து அத்தெருவில் எழுந்தருள, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அவரிடம், "நீர் யார்? எந்த ஊர்? இங்கு ஏன் வந்தீர்?" என வினவ, அவரும் "அடியேன் சிங்கரையர். ஊர் வள்ளுவராசேந்திரம். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சரண் புகும் காலத்தை எதிர்ப்பார்த்து வந்தேன்," என்ன, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், "திருவரங்கத்தில் ஆசாரியர்கள் பலர் இருக்க, ஏன் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் அடைகின்றீர்?" என வினவ, அதற்கு ஸ்ரீ சிங்கரையர், "அடியேனுக்கு எம்பெருமான் நியமனம்," என்ன, "எப்படி?" என ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் கேட்க, "அது தேவ இரகசியம்," என ஸ்ரீ சிங்கரையர் சொல்ல மறுக்க, "இவர் எம்பெருமான் அருள் பெறவேண்டும்!" எனத் திருவுள்ளம் பற்றிய [எண்ணிய] ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், ஸ்ரீ சிங்கரையருக்குப் பிரசாதங்கள் அளித்து, "இன்று இரவு எங்கள் திருமாளிகையிலேயே தங்குங்கள்," என ஆதரத்துடன் நியமித்தருள, அன்று இரவு உறங்கும் முன், "ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்! ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்! வாழி ஸ்ரீ பிள்ளைலோகாரியர்!" என்று ஸ்ரீ அப்பாச்சியார் களைப்புடன் படுக்கையில் சாய, வாசல் திண்ணையில் இருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கும், அவருடைய திருத்தம்பிமார்களான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பனுக்கும், ஸ்ரீ திருக்கோபுரத்து நாயனார் பாட்டருக்கும் அவர்களது திருமதனியார் சொன்னது திருச்செவியில் பட்டு அவர்கள் திடுக்கிட, "அடியேன் உள்ளே சென்று விசாரித்து வருகின்றேன்," என்று அருளிய ஸ்ரீ திருக்கோபுரத்து நாயனார் பாட்டர் உள்ளே சென்று "மதனியாரே!" என அழைக்க, நிலைமையை உணர்ந்து அச்சமடைந்த ஸ்ரீ அப்பாச்சியார் ஒன்றுமே பேசாமல் இருக்க, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும், ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பனும், "அவரை எழுப்பவேண்டாம். எல்லாம் பொழுது விடிந்ததும் தெரியும்," என்ன, அவர்கள் மூவரும் உறங்கச் செல்ல, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவுள்ளம் தவிக்க, ஸ்ரீ சிங்கரையரை எழுப்பி, அவர் உக்கும்படிச் சில ஆழமான ஸ்ரீ வைணவக் கருத்துக்களை எடுத்துரைத்து, "ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை அடைய உமக்கு இறைவன் நியமித்த அதிசயத்தை அறிய மிக ஆவலாக உள்ளது," என்றார்.

ஸ்ரீ சிங்கரையரின் வியத்தகு வரலாறு

ஸ்ரீ சிங்கரையரும் கூறலானார்: “அடியேன் வைத்திருக்கும் தோட்டத்துக் காய்கறிகளைத் தினமும் அடியார் ஒருவருக்குச் சமர்ப்பிப்பேன். ஒரு நாள், ஒரு திருமாலடியார், "ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமடத்தில் காய்கறிகளைக் கொடும்" என்ன, அடியேனும் அன்றே ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகள் முன் காய்கறிகளை வைத்து வணங்க, "நீர் யார்? இது எங்கே விளைந்தது? யார் வளர்த்தது? எதற்காகக் கொண்டு வந்தீர்?" என ஸ்ரீ மணவாள மாமுனிகள் வினவ, அடியேனும், "அடியேன் சிங்கரையர். இது ஸ்ரீவைணவ நிலத்தில் விளைந்தது. தேவரீரின் [தங்களின்] அடியார்கள் நீர் பாய்ச்சியது. பாகவத சொத்து," என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் உகந்து ஏற்றுக்கொண்டு, "கோயிலுக்குச் சென்று, பெருமாளைச் சேவித்து, ஊரேரப் போம்," என அருள, அடியேனும் திருக்கோயிலுக்குச் சென்றேன். திருவரங்கம் திருக்கோயில் அர்ச்சகர், "இன்று காய்கறிகளை யாருக்குச் சமர்ப்பித்தீர்?" என்ன, அடியேனும் தெரிவிக்க, அவர் மகிழ்ந்து, அடியேன் முதுகைத் தட்டி, "நீர் பாக்கியவான்! உமக்கு ஒரு சிறப்பான சம்பந்தம் கிடைக்கப்போகின்றது!" என்று கூறி, எம்பெருமானின் திருமாலை, சந்தனம் எனப் பல பிரசாதங்கள் அருள, "இன்று இவ்வளவு கருணை செய்தருளினீரே!" என அடியேன் வியந்து, மறுபடியும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமடத்திற்கே செல்ல, வழியில், "இவனை மல்லுகட்டிப் பிடி," என்றொருவர் சொல்லக் கேட்டு மிக வியந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் நடந்தவற்றை விண்ணப்பிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சீடர்களும், "திருமடத்துப் பிரசாதம் பெற்றுச் செல்வீர்!" என்ன, அடியேனும் அப்படியே செய்து, ஊருக்குச் செல்லும் வழியில் பிரசாதப்பட [உண்ண], அன்று இரவு, கனவில் ஸ்ரீ பெரிய பெருமாள் தோன்றி, தாம் சாய்ந்திருக்கும் திருவனந்தாழ்வானைத் தொட்டுக்காட்டி, "இவரே ஸ்ரீ மணவாள மாமுனிகள்! இவரோடு சம்பந்தம் உண்டாக்கிக்கொள்!" என்றார்," என்ன, வியப்பிலும், அச்சத்திலும் ஆழ்ந்த ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், ஸ்ரீ சிங்கரையரிடம் விடைபெற்று, ஸ்ரீ சிங்கரையர் அருளியதை நெடும்போது சிந்தித்து, அதன் பின் உறங்கச் சென்றார்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுடைய கனவு

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு ஒரு கனவு: அவரை ஒரு திருமாலடியார் கசையால் அடிக்க, "நாம் ஏதோ தவறு செய்ததால் தண்டிக்கிறார்," என எண்ணி ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தடுக்காமல் இருக்க, கசையோ பல துண்டுகளாக உடைய, அந்தத் திருமாலடியார் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனை இழுத்து ஒரு ஏணி மேல் ஏறச் சொல்ல, ஏறினால் ஒரு மெத்தையின் மீது ஒரு முக்கோல் ஏந்திய துறவி கோபமாக ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனைக் கசையால் அடிக்க, அக்கசையும் பல துண்டுகளாக உடைய, மேலும் அடிக்க அவர் முக்கோலின் உபதண்டத்தை எடுக்கப் புக, முதலில் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனை அடித்த அந்தத் திருமாலடியார், அத்துறவியிடம், "இவன் சிறுபிள்ளை. மிகவும் அடிபட்டான். இனி பொறுத்து அருளவேண்டும்," என்ன, அத்துறவி சாந்தமாகி, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனைத் திருமடியிலமர்த்தி, உச்சி முகர்ந்து, திருமேனியைத் தடவிக்கொடுத்து, "குழந்தாய்! நாமே இராமாநுசர். இவர் முதலியாண்டான். நாமே மணவாள மாமுனிகள். சீரிய முதலியாண்டான் திருவம்சத்தில் பிறந்த நீயும் உனது சம்பந்திகளும் மணவாள மாமுனிகளது திருவடிகளைத் தஞ்சமடைந்து உய்யுங்கள்," என்ன, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும் ஸ்ரீ இராமானுசரின் திருவடிகளில் மன்னிப்பு வேண்ட, ஸ்ரீ இராமானுசரும் மிகவும் கருணையுடன் அருள் புரிய, கனவு கலைந்தது!

ஸ்ரீ கந்தாடை ஐயங்கார்களுக்குக் கிடைத்த இன்னருள்

விழித்தெழுந்த ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் மிக வியந்து, திருத்தம்பிமார்களை எழுப்பி, நடந்ததை உகப்புடன் தெரிவித்து, ஸ்ரீ அப்பாச்சியாரை வணங்கி, அவர் அஞ்சாதிருக்க அவருக்கும் தமது கனவை விண்ணப்பித்து, "உமது திருக்கைகளால் நேற்றுப் பிரசாதப்பட்டன்றோ அடியோங்களுக்கு இப்பேறு சித்தித்தது! ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் புக ஏற்பாடு செய்தருள்வீர்!" என வேண்ட, ஸ்ரீ அப்பாச்சியாரும் உகந்து, தமது ஸ்ரீ பாதுகா தீர்த்த அனுபவத்தையும், ஸ்ரீ திருமஞ்சனம் அப்பாவின் தீர்த்த மகிமை அனுபவத்தையும் உரைக்க, மிக வியந்த ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், ஸ்ரீ சிங்கரையருக்கும் எல்லாவற்றையும் உகப்புடன் அருளி [தெரிவித்து], தமது கைங்கர்யங்களை விரைவாக முடித்து, தமது உறவினர்களின் திருமாளிகைகளுக்குச் சென்று, தமது கனவை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட சுப சகுனங்களையும், கனவுகளையும் தெரிவிக்க, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும், “இவருக்குச் சுத்தசத்துவம் என்ற திருநாமம் யதார்த்தம் ஆயிற்று. திருநாமத்திற்கு ஏற்ப, [அடியேனுக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றிப்] போர நல்வார்த்தை சொல்லுவர். இவருடைய திருவுள்ளம் படியே எல்லாம் நடந்தது. இனி ஒரு குறையும் இல்லை,” என்று தமது மருமகனார் ஸ்ரீ சுத்தசத்துவம் அண்ணனைக் கொண்டாட, ஸ்ரீ அப்பாச்சியாரின் திருமகனார்களான ஸ்ரீ வரதர் என்கிற ஸ்ரீ அண்ணாவும், ஸ்ரீ தாசரதியப்பையும், ஸ்ரீ தந்தை தாய் எம்பாவும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருவடிகளைப் பணிய, "'இப்பொழுதே திருவரங்கத்திற்கு எழுந்தருள்வீர்! ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சிறப்பான அருட்பார்வைக்கு இலக்கான மெய்யடியாராம் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் தஞ்சம் அடைவீர்!' என அடியேனது கனவில் ஸ்ரீ காஞ்சிபுரம் தேவப்பெருமாள் நியமனம்," என ஸ்ரீ அண்ணா விண்ணப்பிக்க, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும் மிக உகந்து, தமது உறவினர்களைக் அழைத்துக்கொண்டு, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்திற்குப் புறப்பட்டார்.

ஸ்ரீ "அசட்டாச்சான்"

ஸ்ரீ கந்தாடை ஐயங்கார்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் தஞ்சம் அடையப் புறப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் முந்துற விண்ணப்பம் செய்ய, ஸ்ரீ அப்பாச்சியார் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்தை விரைவாகச் சென்றடைந்து, பல அடியார்கள் முன் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகள் அருகே சென்று விண்ணப்பிக்கத் தயங்கி, ஒரு சாத்வீகமான சீடரிடம், "கந்தாடை ஐயங்கார்கள் கூடி வருகின்றனர்! ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் தெரிவிப்பீர்," என வேண்டிச் செல்ல, அச்சீடரோ ["ஏதேனும் வாக்குவாதம் நடக்குமோ!" என] அஞ்சி, ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் விரைந்து சென்று, "ஐயனே, தயவு செய்து புழைக்கடையில் எழுந்தருள்வீர்! கந்தாடை ஐயங்கார்கள் எல்லோரும் கூடி வருகின்றனராம்!" என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் புழைக்கடையில் எழுந்தருள, சிறிது நேரம் சென்ற பின், ஸ்ரீ அப்பாச்சியாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தேடி, புழைக்கடையில் கண்டு, "இன்றைக்குச் சோபனம்! திருவடிகளை அடைய கந்தாடை ஐயங்கார்கள் கூடி வருகின்றனர்," என விண்ணப்பிக்க, இதற்கிடையில், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தமது உறவினர்களுடன் திருமடத்துத் திருவாசலை அடைந்து, அங்கு எழுந்தருளியிருந்த ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளை வணங்கி, "ஐயனே! தேவரீரே ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் அடியோங்களைச் சேர்ப்பித்தருளவேண்டும்!" என வேண்ட, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் உள்ளே மகிழ்ந்தோடி, புழைக்கடையில் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் செய்தியை விண்ணப்பிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகள் முதலில் பதறிய அந்த அடியவரைப் பார்த்து, "உமது பெயர் என்ன?" என விநோதமாகக் கேட்டருள, அவரும், "அடியேன் இராமாநுசதாசன்" என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகளோ, "அப்படியன்று. நீர் அசட்டாச்சான்!" என்று பரிகசித்தருளினார்!

ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய பொன்னடிகளைப் பற்றிய ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

பின்னர், 'இதெற்கெல்லாம் மூல காரணம் நம் அப்பாச்சியார் அன்றோ?' என ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவுள்ளம் மிக உகந்து, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் அவருடைய உறவினர்களைச் சந்தித்து, ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவம்சத்தின் ஏற்றதை ஒரு சுலோகமாக அருள, அவர்களும் கனிகள் முதலானவற்றை ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் "பொலிக பொலிக பொலிக" பாசுரத்திற்கும், திருப்பல்லாண்டிற்கும் சுருக்கமாகப் பொருள் அருளி, ஆசி கூறி, விடை கொடுக்க, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் கலங்கி, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரிடம், "அடியோங்களை ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகளில் சேர்ப்பித்தருளவேண்டும்," என மீண்டும் வேண்ட, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் விண்ணப்பிக்க, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைக் கொண்டு தனியே அழைப்பித்து, "நீரே கந்தாடை திருவம்சம் அன்றோ? எதற்கு இப்படி?" என்ன, கலங்கிய ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும் தாம் முன்னிருந்த இருப்புக்கு மன்னிப்பு கோரி, தமது கனவை முதலிலிருந்து தப்பாமல் விண்ணப்பித்து, "அடியோங்களை ஏற்றுக்கொண்டருள்வீர்!" என வேண்ட, "மேலும் சில பாக்கியவான்களைத் திருத்தத் திருவரங்கன் திருவுள்ளம் பற்றியுள்ளதால், இன்றிலிருந்து நான்காம் நாள் திருவிலச்சினை," என ஸ்ரீ மணவாள மாமுனிகள் விடை கொடுத்தருள, திருவரங்கனும் மேலும் பலருடைய கனவில், "நாமே ஸ்ரீ மணவாள மாமுனிகள்!" என்றருள, அவர்களும் திருந்த, நான்கு நாள்கள் சென்ற பின், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் முதலான அனைவரும் [ஸ்ரீ சிங்கரையர் உள்பட] ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்தில் ஒன்று கூட, முதலில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்குத் திருவிலச்சினை அருளினார்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் ஸ்ரீ "அப்பாச்சியாரண்ணா"

Image Source: https://koilathan.wordpress.com/aavani/appaciaranna-srirangam/

அதன் பின், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைச் சுட்டிக்காட்டி, "இவர் நமது பிராண ஸுஹ்ருத் [உயிரான அடியவர்]. நமக்கு நடந்த அதிசயமெல்லாம் இவருக்கும் நடக்கவேண்டும். முதலியாண்டான் திருவம்ச சம்பந்தம் இவருக்கும் உண்டாகவேண்டும்," என்ன, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம், "அடியேனை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய திருவடிகளிலேயே பணித்து அருளியிருக்கலாமே!" என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகள், "நீர் எமது பாக்கியத்தின் பலன் அன்றோ? உம்மை எப்படி விடுவேன்?" என்ன, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் இதன் உள்ளர்த்தத்தை அறிந்து, தமது உறவினர்களைப் பார்க்க, அப்பார்வையை ஸ்ரீ அப்பாச்சியாரின் திருமகனாராம் ஸ்ரீ அண்ணா புரிந்துகொண்டு, கைகளைக் கூப்பி நிற்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும், "நீர் வேண்டுவது என்?" என்ன, ஸ்ரீ அண்ணாவும், "அடியேனை எங்கள் ஆண்டவன் வானமாமலை இராமானுஜ ஜீயரின் திருவடிகளில் ஆச்ரயிப்பித்து அருளவேண்டும்!" என்ன, ஸ்ரீ மணவாள மாமுனிகள், "நம் அப்பாச்சியாரண்ணாவோ!" என மிக உகந்து, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவைத் தழுவி, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் தயங்கினாலும், “நமக்குப் பிரியமானதைச் செய்யும்,” என்றருளி, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைத் தாம் எழுந்தருளும் பீடத்தில் இருத்தி, தாம் திருவிலச்சினை அருளும் திருவாழி திருச்சங்கு ஆழ்வார்களை [திருவிலசசினை அருள பயன்படுத்தப்படும் தெய்வீகக் கோல்கள்] ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் திருக்கைகளில் பிரசாதித்து, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவைப் பேரன்புடன் தழுவி இருந்து, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவிற்கும், ஸ்ரீ அப்பாச்சியார் நியமனத்தால் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளை வந்தடைந்த ஸ்ரீ தாசாரதியப்பைக்கும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரே திருவிலச்சினை சாதிக்கச் செய்ய, "இனி அடியேனை விடவேண்டும்!" என நற்பணிவுடன் வேண்டி ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஒரு ஓரமாக நிற்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் சம்மதித்து, [ஸ்ரீ சிங்கரையர் உள்பட] மற்ற 120 பேருக்கும் தாமே திருவிலச்சினை அருள, மங்கள வாத்தியங்களுடன் ஸ்ரீ பெரிய பெருமாளும் பிரசாதங்கள் அருள, அனைவரும் பிரசாதப்பட்டு, திருக்கோயிலுக்குச் சென்று, எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடினார்கள்.

திருக்கோயில்களில், ஸ்ரீ திருமாலின் திருவடி நிலைகளை [ஸ்ரீ பாதுகைகளை] "ஸ்ரீ சடாரி" என்ற ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமத்தால் வழங்குவர். ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடி நிலைகளை "ஸ்ரீ மதுரகவிகள்" அல்லது "ஸ்ரீ இராமானுசன்" என வழங்குவர். ஸ்ரீ இராமானுசரின் திருவடி நிலைகளை "ஸ்ரீ முதலியாண்டான்" என வழங்குவர். ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடி நிலைகளை "ஸ்ரீ பொன்னடியாம் செங்கமலம்" என வழங்குவர். ஸ்ரீ வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் திருவடி நிலைகளை "ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா" என வழங்குவர்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் ஸ்ரீ சுத்தசத்வமண்ணன்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு, “நீர் இரகசிய அர்த்தங்களை நம் பொன்னடிக்கால் ஜீயரிடம் பெற்றுக்கொள்வீர்!” என்றருள, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும் மிகவும் உகந்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை மேலும் கொண்டாடும் வண்ணம், தம் திருவடிகளையே அண்டியிருந்த ஸ்ரீ சுத்தசத்துவம் அண்ணனையும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளைத் தஞ்சம் புகச் செய்ய, ஸ்ரீ சுத்தசத்துவம் அண்ணனும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருக்கல்யாண குணங்களையும், திருமேனி எழிலையும், ஞான அனுட்டானங்களையும் எண்ணி எண்ணி மிகவும் ஈடுபட்டு, பல்லாண்டு பாடி இருந்தார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ எறும்பியப்பா


Image Source: Shared on Twitter


முதல் சந்திப்பு

திருக்கடிகை அருகே ஸ்ரீ எறும்பியைச் சேர்ந்த ஸ்ரீ தேவராஜன் என்ற ஸ்ரீ எறும்பியப்பா, ஒரு திருவரங்கத்துத் திருமாலடியார் மூலமாகத் தமது உற்றாரான ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சீடரானதைக் கேள்வியுற்று, தமது திருத்தகப்பனாரிடம் ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்க ஆவலுடன் உத்தரவு பெற்று, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுடன் சென்று ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் ஸ்ரீ எறும்பியப்பாவைக் கண்டு மிக மகிழ்ந்து, ஸ்ரீ எறும்பியப்பா பண்டிதர் என்பதால், திருவாய்மொழி “உயர்வற உயர்நலம்” பதிகத்தைப் பல வடமொழி சாத்திர மேற்கோள்களுடன் விளக்க, “தென்மொழி வேதத்தில் மட்டுமின்றி, வடமொழி சாத்திரங்களிலும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் விற்பன்னராக இருக்கிறாரே!” என ஸ்ரீ எறும்பியப்பா வியந்து கொண்டாட, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ எறும்பியப்பாவைத் திருமடத்தில் பிரசாதம் உண்ண வேண்ட, ஸ்ரீ எறும்பியப்பாவோ, "சன்யாசிகளால் தொடப்பட்ட அன்னம், தொட்ட வட்டிலில் உள்ள அன்னம் ஆகியவற்றைப் புசித்தால் சாந்திராயண விரதம் அனுட்டிக்க வேண்டும்," என்ற பொது தருமத்தைப் பற்றி, "போனக சேடம் தருவரேல் புனிதம்," என்ற சிறப்பான தருமத்தை மறந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்திலும் உண்ணாமல், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருமாளிகையிலும் தங்காமல், ஸ்ரீ எறும்பிக்கு எழுந்தருளினார்.

ஸ்ரீ எறும்பியப்பாவிற்குக் கிடைத்த இன்னருள்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் ஸ்ரீ எறும்பியப்பாவைத் தமது கருணைக்கு இலக்காக்க வேண்ட, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் இன்னருள் ஸ்ரீ எறும்பியப்பாவிற்குக் கிட்டிய பின், ஸ்ரீ எறும்பியப்பா அவருடைய திருமாளிகையின் திருவாராதனப் பெருமானான ஸ்ரீ சக்கிரவர்த்தித் திருமகன் [ஸ்ரீ இராமபிரான்] வீற்றிருக்கும் திருக்கோயிலாழ்வாரைப் [பூஜை மண்டபம்] பல வகையில், பல முறை முயன்றும் திறக்கமுடியாமல் போக, சோகத்தில் ஸ்ரீ எறும்பியப்பா எதுவும் உண்ணாமல் உறங்க, ஸ்ரீ எறும்பியப்பாவின் கனவில் ஸ்ரீ சக்கிரவர்த்தித் திருமகனார், “நீர் ஸ்ரீ ஆதிசேஷாவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் அபசாரப்பட்டீர். ஸ்ரீ நாரத முனிவர் முற்பிறவியில் எம்மடியார்ளான துறவிகளின் பிரசாதம் உண்டதனாலேயே மறுபிறவியில் தேவமுனிவராகப் பிறந்தார் அன்றோ? ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் நீர் மன்னிப்பு வேண்டி, அவருடைய திருவடிகளை அடைந்த பின்னரே, உம்முடைய கைகளால் திருவாராதனத்தை ஏற்றுக்கொள்வோம்," என்றருள, திடுக்கிட்ட ஸ்ரீ எறும்பியப்பா, தமது திருத்தகப்பனாரை வேண்டி, வெகு விரைவில் திருவரங்கம் அடைந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்தின் திருவாசலுக்கு அருகில் எழுந்தருள [செல்ல], ஸ்ரீ மணவாள மாமுனிகளும் திருவரங்கனுக்குப் பல்லாண்டு பாட வெளியே எழுந்தருள, எண்ணிய பலனை எதிரே கண்ட ஸ்ரீ எறும்பியப்பா, தடி போல விழுந்து ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் உகந்து, ஸ்ரீ எறும்பியப்பாவைத் திருமுடி பிடித்து எடுக்க, அனைவரும் திருமடத்தின் உள்ளே செல்ல, 'ஒரு ஆன்மா திருந்தினாலும் பரமனுக்கு அது பெரும் லாபம்,' என்றறிந்த ஸ்ரீ மணவாள மாமுனிகள், தம் சீடர்களை எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடி வர அருளி, தாம் ஸ்ரீ எறும்பியாப்பாவுடனே உரையாடிக்கொண்டிருக்க, சீடர்கள் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருக்கட்டளையை நிறைவேற்றி, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்க, "திருவரங்கன் இன்றைக்கு இன்ன இன்ன அன்னங்களை அமுது செய்து, இன்ன இன்ன ஆடை ஆபரணங்களை அணிந்தருளினார்," என ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருள, அனைவரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய அனைத்தும் அறியும் திறனைக் கண்டு வியக்க, ஸ்ரீ எறும்பியப்பா மிகவும் பரவசத்துடன் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமேனியைச் சேவித்திருந்து, மறு நாள், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் பரிந்துரையை முன்னிட்டு, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடி பணிய, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ எறும்பியப்பாவிற்குத் திருவிலச்சினையும், போனக சேடமும் அருளினார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ அப்பிள்ளை, ஸ்ரீ அப்பிள்ளார்


Image Source: Srirangam Raghava Perumal, Sri Periya Nambigal Thirumaaligai Shishyar


ஸ்ரீ எறும்பியப்பாவைத் தரிசித்ததன் நற்பயன்

திருவரங்கனை வணங்க ஸ்ரீ பிரணதார்த்திஹரராம் ஸ்ரீ அப்பிள்ளையும், ஸ்ரீ அப்பிள்ளாரும் திருக்காவிரிக்கரையில் தங்க, திருவரங்கத்துச் செய்திகளைச் சில திருமாலடியார்கள் கூறக் கேட்டு, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் திருக்குடும்பத்தாரும், ஸ்ரீ எறும்பியப்பாவும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த செய்தியையும் கேள்வியுற்று, "ஸ்ரீ முதலியாண்டான் திருவம்சத்தவர்கள் இப்படிச் செய்யலாமோ?" என அதிர்ச்சியுற, ஸ்ரீ எறும்பியப்பா ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்தில் இருக்கின்ற செய்தியையும் அறிந்த ஸ்ரீ அப்பிள்ளார், “சகல சாத்திர வல்லவரான ஸ்ரீ எறும்பியப்பா இப்படிச் செய்யார். அடியேன் விசாரித்து வருகின்றேன்," என்று, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமடத்துத் திருவாயிலில் ஒரு திருமாலடியாரிடம், “ஸ்ரீ எறும்பியப்பாவிடம் 'ஸ்ரீ அப்பிள்ளார் உம்மைத் தேடி வந்துள்ளார்' என அறிவிக்க வேண்டுகின்றேன்," என்ன, அந்தத் திருமாலடியார் அப்படியே செய்ய, “அவருக்கு நல்விடிவு!” என மகிழ்ந்த ஸ்ரீ எறும்பியப்பா வெளியே எழுந்தருள, ஸ்ரீ எறும்பியப்பாவின் திருத்தோள்களில் இருந்த சங்கொடு சக்கரச் சின்னங்களைக் கண்ட ஸ்ரீ அப்பிள்ளாருக்கு ஒரு எதிர்பாராத தெளிவு ஏற்பட, ஸ்ரீ சக்கிரவர்த்தித் திருமகனால் தாம் திருந்தியதை ஸ்ரீ எறும்பியப்பா ஸ்ரீ அப்பிள்ளாருக்கு விவரித்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் திருவடிகளில் நடந்தவற்றையெல்லாம் விண்ணப்பித்து, "ஐயனே! அடியேன் திருக்காவிரிக்கரைக்குச் சென்று ஸ்ரீ அப்பிள்ளையையும் அழைத்து வருகிறேன். தாங்களே ஸ்ரீ அப்பிள்ளையையும், ஸ்ரீ அப்பிள்ளாரையும் திருக்கண்களால் நோக்கி அருளவேண்டும்!" என வேண்டி விடைகொண்டார்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் பொன்னான பரிந்துரை

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில், "ஸ்ரீ எறும்பியப்பா போன்ற அடியார் ஸ்ரீ அப்பிள்ளை என்பாருக்கும் ஸ்ரீ அப்பிள்ளார் என்பாருக்கும் பரிந்துரை செய்துள்ளார். இதுவே தேவரீரைப் போன்ற ஒப்பற்ற ஆசாரியருடைய திருவடிகளின் தொடர்பு அமையத் தகுந்த காரணமாம். ஒரு ஆன்மா கிடைத்தாலும் பரமனுக்கு அதைவிடப் பெரிய பேறில்லை என்றன்றோ தேவரீரும் திருவுள்ளம் பற்றியிருப்பீர்? ஸ்ரீ அப்பிள்ளையையும் ஸ்ரீ அப்பிள்ளாரையும் தேவரீரின் திருவடிகளில் ஏற்றருளி, ஸ்ரீ எறும்பியப்பாவின் வேண்டுதலும், அடியேனுடைய வேண்டுதலும் நிறைவேற அருளவேண்டும்," என வேண்ட, "ஸ்ரீ இராமானுசரும் அப்படியே திருவுள்ளமாய் அருளினார். ஒருவருக்கு ஸ்ரீ இராமானுசர் திருநாமம்," என ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளினார்.

ஸ்ரீ அப்பிள்ளைக்கும், ஸ்ரீ அப்பிள்ளாருக்கும் கிடைத்த இன்னருள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு, மற்ற சில சீடர்களுடன், ஸ்ரீ அப்பிள்ளையையும் ஸ்ரீ அப்பிள்ளாரையும் வரவேற்கத் திருக்காவிரிக்கரைக்கு மகிழ்ச்சியுடன் விரைய, ஸ்ரீ எறும்பியப்பாவும், ஸ்ரீ அப்பிள்ளாரும் ஸ்ரீ அப்பிள்ளைக்கு நடந்ததெல்லாம் தெரிவிக்க, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் அங்கு எழுந்தருள்வார் என அறிந்த ஸ்ரீ அப்பிள்ளார், தாம் விரும்பும் உயர்ந்த பட்டுச் சேலையை நடைபாவாடையாக இட்டு, ஸ்ரீ எறும்பியப்பாவின் பரிந்துரையை முன்னிட்டு, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரையும் மற்ற சீடர்களையும் அதன் மீது எழுந்தருள வேண்ட, பின், அவர்களது திருவடித்துகள்களை ஸ்ரீ அப்பிள்ளையும், ஸ்ரீ அப்பிள்ளாரும் தம் திருமுடிகளில் [சிரங்களில்] ஏந்தி, அவர்களுக்குக் கனிகள், கீரை ஆகியவற்றை அளித்து, மதிப்புடன் வரவேற்று, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை மிகச் சிறப்பாகக் கொண்டாடி, அதன் பின்னர், அனைவரும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருமாளிகைக்கு எழுந்தருள, ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனும் ஸ்ரீ இராமானுசர் தமக்குக் கனவில் அருளியதை விவரிக்க, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், ஸ்ரீ எறும்பியப்பா ஆகிய நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகர்களைப் பின் தொடர்ந்த ஸ்ரீ அப்பிள்ளையும், ஸ்ரீ அப்பிள்ளாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய திருமடத்தை அடைந்து, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருமேனி எழிலில் ஈடுபட்டு, ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகளை வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் அவர்களைத் தம் அடியார்களாக ஏற்று, ஸ்ரீ அப்பிள்ளாருக்கு "ஸ்ரீ இராமாநுசர்" என்று திருநாமம் அருளினார்.




ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா


Image Source: https://guruparamparai.files.wordpress.com/2013/08/pb-annan-kanchi.jpg


ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் பெயர்க்காரணம்

ஸ்ரீ இராமாநுசரின் 74 ஸிம்ஹாஸன அதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ முடும்பை நம்பிகள் திருவம்சத்தில் திருத்தண்காவில் திருவவதரித்த ஸ்ரீ அத்திகிரிநாதர் அண்ணா, ஸ்ரீ குமார வரதாசாரியாரிடம் வடமொழி, தென்மொழி வேதங்கள் கற்று, மிக எளிதாக வாதிகளை வெல்லும் திறனுடன் விளங்க, ஸ்ரீ குமார வரதாசாரியாரும் உகந்து, “இவர் பிரதிவாதி பயங்கரர்!” என்றருளினார்.

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் திருத்தேவிகளும் [திருமனைவியார்] ஸ்ரீ கூரத்தாண்டாளைப் போலத் திகழ, அவர்களுடைய 3 திருக்குமாரர்களான ஸ்ரீ அண்ணாவப்பன், ஸ்ரீ அனந்தாசார்யர், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோரும் சிறு வயதிலேயே ஞான பக்திகளுடன் திகழ்ந்தனர்.

நறுமணம் கமழும் நல்லதொரு நிகழ்ச்சி

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, திருவாய்மொழி “ஒழிவில் காலமெல்லாம்” பாசுரத்தில் ஈடுபட்டு, திருக்குடும்பத்துடன் திருவேங்கடம் சென்று, ஸ்ரீ திருமலை தோழப்பரின் அறிவுரையால் தினமும் ஆகாச கங்கையின் தீர்த்தத்தில் கற்பூரம், ஏலக்காய், இலவங்கம் சேர்த்து, திருவேங்கடவனின் திருமஞ்சனத்திற்கு அளித்து வர, ஒரு நாள், திருவேங்கடம் எழுந்தருளிய ஒரு திருவரங்கத்துத் திருமாலடியாருக்கு ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ததீயாராதனை [விருந்தோம்பல்] செய்து, அன்று இரவு அந்தத் திருமாலடியாரைத் தமது திருமாளிகையில் தங்கச் செய்து, அவரிடம் திருவரங்கம் திருக்கோயிலைப் பற்றி விசாரிக்க, அனைத்தையும் உரைத்த அத்திருவரங்கத்துத் திருமாலடியார், ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றியும் பலவற்றைத் தெரிவிக்க, மறு நாள், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஆகாச கங்கைக்குச் செல்ல, அத்திருவரங்கத்துத் திருமாலடியாரும் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவுடன் செல்ல, வழியில், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, “நீர் ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றிக் கூறியவற்றை மீண்டும் கேட்க மிக ஆவலாக உள்ளது," என வேண்ட, அத்திருவரங்கத்துத் திருமாலடியாரும் உற்சாகமாக உரைக்க, ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, தமது தீர்த்த கைங்கரியத்தைக் காலம் தாழ்த்திச் செய்துகொண்டிருப்பதை உணராதிருக்க, ஒரு திருவேங்கடம் ஏகாங்கி ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் தீர்த்தக் குடத்தை மிக வேகமாக எடுத்துச்செல்ல, “ஐயனே! வாசனைப் பொருள்களைச் சேர்க்கவில்லை!” என்று உரக்கக் கூறிக்கொண்டே அவர் பின் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா வேகமாகச் சென்றபோதும், திருவேங்கடவனுக்குத் திருமஞ்சனம் காலத்தில் நடைபெறவேண்டும் என்ற பதற்றத்தால் அவர் விடுவிடுவெனச் சென்றுவிட, “அப்பனுக்குச் செய்த சேவையில் குற்றம் செய்தேனே!” என வருந்திய ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்ரீ அப்பனிடம் மன்னிப்பு வேண்ட, ஸ்ரீ அர்ச்சகர் மேல் ஸ்ரீ அப்பன் ஆவேசித்து, “அண்ணா! இன்று நீர் அளித்த தீர்த்தத்தில் வழக்கத்தை விட நறுமணம் விஞ்சியிருந்தது!” என்றருள, பெரும் வியப்பிலாழ்ந்த ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, அத்திருவரங்கத்துத் திருமாலடியார் ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றிக் கூறியதைத் தாம் ஆழ்ந்து கேட்டதால், தீர்த்தமும் நறுமணம் பெற்றதை உணர்ந்து நெகிழ்ந்தார்!

குருவைத் தேடிச் சென்ற சீடரும், சீடரைத் தேடி வந்த குருவும்

ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை, “தர்க்கங்களில் காலத்தைச் செலவு செய்யாமல், ஆழ்வார்களின் பாசுரங்களின் பொருள்களையே ஆசை உடையோருக்குப் பரப்புவீர்!" என ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு நியமித்ததால், கிருஷ்ணாநந்தி என்ற துறவி ஸ்ரீ மணவாள மாமுனிகளை வாதத்திற்கு அழைத்தபோது, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ கந்தாடை வேடலப்பையை வாதம் புரிய அழைக்க, கிருஷ்ணாநந்தி ஸ்ரீ கந்தாடை வேடலப்பையிடம் பாடம் பயின்றவர் என்பதால் வாதம் புரியாமல் வணங்கிச் சென்றுவிட, இது போன்ற வாதிகளைச் சந்திக்க ஸ்ரீ கந்தாடை வேடலப்பையைத் திருமடத்திலேயே வசிக்கும்படி ஸ்ரீ மணவாள மாமுனிகள் வேண்ட, வயது முதிர்ந்ததால் அதை ஏற்க முடியாத ஸ்ரீ கந்தாடை வேடலப்பை வணங்கி விடைகொள்ள, “இதற்கென ஒருவர் இருத்தல் வேண்டுமே,” என எண்ணி, ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது சீடர்கள் இருவரை, “திருவேங்கடத்தில் வாழும் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைத் திருவரங்கத்திற்கு அழைத்து வாருங்கள்," என நியமிக்க, இதற்கிடையில், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்குவதற்காகத் திருவேங்கடத்திலிருந்து திருவரங்கத்திற்குப் புறப்பட்டு, வழியில் ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமானை வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அனுப்பிய சீடர்களும் அதே சமயம் ஸ்ரீ காஞ்சிபுரம் எழுந்தருளி ஸ்ரீ வரதராஜப் பெருமானை வழிபட, ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி மகிழ, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை வணங்கத் திருவரங்கத்திற்குச் செல்லும் வழியை வைகுந்தம் செல்லும் பாதையான அர்ச்சிராதிகதி என எண்ணி ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா நடக்கலானார்.

"அடியேன் ஸ்ரீவைஷ்ணவதாசன்!"

பேராவலுடன் திருவரங்கம் திருக்கோயிலை அடைந்து, திருச்சித்திர மண்டபத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் தம் சீடர்களுக்குத் திருவாய்மொழி "ஒன்றும் தேவும்" பாசுரத்தை விளக்கக் கேட்டு, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகளை ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா வணங்க, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் இவர் யாரென அறிந்ததும், “இவ்வளவு நாள் சென்ற பின், உம்மைச் சேவிக்கப் பெற்றேன்!” என ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை அன்புடன் தழுவ, ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்ரீ மணவாள மாமுனிகள் மேலும் அருளிய சில பாசுர விளக்கங்களைக் கேட்ட பின், ஸ்ரீ மணவாள மாமுனிகளும், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் திருவரங்கனைத் தொழ, திருவரங்கனும் ஸ்ரீ அர்ச்சகர் மேல் ஆவேசித்து, “பிரதிவாதி பயங்கரம் அண்ணரே! திருமலையில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பெருமைகளை நீர் கேட்டதை நாம் உகந்தோம். இப்போது உமக்கு ஸ்ரீ மணவாள மாமுனிகளுடன் சிறப்பான ஒரு தொடர்பைத் தந்தோம்!” என்றருள, பின், ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது திருமடத்திற்கு எழுந்தருள, ஸ்ரீ மணவாள மாமுனிகளது அனுமதியுடன், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் திருமாளிகையை அடைய, ஒருவரை ஒருவர் வணங்க, அங்கே ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரையும் கண்ட ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, “அருள் கொண்டாடும் அடியவர்!” என ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை வணங்க, பிறகு மூவரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பெருமைகளைச் சிறிது பேசிச் சுவைத்த பின், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவடிகள் முன் கனிகள் ஆகியவற்றை வைத்து வணங்கி, தமது திருக்குடும்பத்தாருடன், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஸ்ரீபாததீர்த்தம் முதலான பிரசாதங்களைப் பெருமதிப்புடன் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் மற்றும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனின் பரிந்துரையை முன்னிட்டு, “அடியேனைத் திருவடிகளில் ஏற்றருளவேண்டும்,” என ஸ்ரீ மணவாள மாமுனிகளை வேண்ட, ஸ்ரீ மணவாள மாமுனிகள் சிரித்துக்கொண்டே, “நீரோ பிரதிவாதி பயங்கரர்! நாமோ சாது! நமக்குள் ஆசாரியர் சீடர் உறவு கூடுமோ?” என்ன, ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, “பிரதிவாதி பயங்கரம் என மற்றவர்கள் மத்தியிலே அடியேன் பிரசித்தனாக இருக்கலாம், திருமாலடியார் மத்தியிலே அவர்களுடைய தாசன் என்றே அடியேன் பிரசித்தன்!” என்ன, மிக உகந்த ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைத் தமது சீடராக்கி, “ஸ்ரீவைஷ்ணவ தாசன்” என்று திருநாமம் அருளினார்.




ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் ஸ்ரீ அட்டத்திக்கயங்கள்

Image Source: https://archai.co.in


ஸ்ரீ தொட்டையங்காரப்பை ஸ்ரீ மணவாள மாமுனிகளது திருவடிகளில் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்ட, ஸ்ரீ மணவாள மாமுனிகளோ, "நம் பொன்னடிக்கால் ஜீயரை நும் ஆசாரியராகக் கொள்ளும்! இதனால் அனைத்து நன்மைகளும் பெறுவீர்!" என்றருள, ஸ்ரீ தொட்டையங்காரப்பையும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளை அடைந்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரையே தியானம் செய்து, ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் தினசரியை, ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் மங்களாசாசனம், ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயர் பிரபத்தி என்ற துதிகளால் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் பெருமைகளைப் பாடியருளினார்.

ஸ்ரீ சமரபுங்கவாசாரியர், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் பெருமைகளைக் கேள்வியுற்று, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் அனைத்தையுமே சமர்ப்பித்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரிடம் மந்திரோபதேசமும், திருவாய்மொழி விளக்கமும் பெற்று, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடி சேவையிலேயே ஈடுபட்டிருந்தார்.

"இவர் ஸ்ரீ பெரிய பெருமாள் இன்னருளால் தரிசனத்தைப் வளர்ப்பார்!" என ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஸ்ரீ இராமானுசப் பிள்ளான், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரிடம் மந்திரோபதேசமும், திருவாய்மொழி விளக்கமும் பெற்று, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் 32 ஆண்டுகள் சேவை புரிந்து நிறம் பெற்றார். ஒரு நாள், தமது திருத்தேவிகள் பல திருவாபரணங்களைத் தரித்திருப்பதை ஸ்ரீ இராமானுசப் பிள்ளான் கண்டு, "கற்புடைய மங்கையருக்கு ஆன்ம குணங்களே அணிகலன்," என்ன, அவ்வம்மையாரும் ஸ்ரீ இராமானுசப் பிள்ளானிடம் தம் அணிகலன்களை மகிழ்ந்து அளிக்க, ஸ்ரீ இராமானுசப் பிள்ளானும் அவற்றைக் கொண்டு ஸ்ரீ திருமாமகளின் திருவுருவம் பதித்த ஒரு பதக்கம் செய்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரிடம் உத்தரவு பெற்று, அதனைத் ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்குச் சமர்ப்பித்து, தமது திருத்தேவிகளுடன் மங்களாசாசனம் செய்ய, மிக உகந்த ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர், தம் திருவாராதனத்திலிருந்த ஸ்ரீ உபய நாச்சியார்கள் உடனுறை ஸ்ரீ தேவப்பெருமாளையும், திருவிலச்சினைச் சின்னங்களையும் ஸ்ரீ இராமானுசப் பிள்ளானுக்கு அருளினார். ஸ்ரீ இராமானுசப் பிள்ளான், ஸ்ரீ நம்மாழ்வார் தமக்குக் கனவில் அருளியவாறு, ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஆசையுடையோருக்குத் திருவாய்மொழி விளக்கங்கள் அருளியிருக்க, ஸ்ரீ இராமானுசப் பிள்ளானின் திருத்தேவிகள் ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளில் வேண்ட, ஸ்ரீ நம்மாழ்வாரின் இன்னருளால் ஸ்ரீ இராமானுசப் பிள்ளானுக்கு நன்மதியும், சாத்வீக குணங்களும் கொண்ட ஒரு ஆண்மகவு திருவவதரிக்க, ஸ்ரீ இராமானுசப் பிள்ளான் அக்குழந்தைக்குத் தமது ஆசாரியரின் "வரத குரு" என்ற திருநாமமிட்டார்.

புலன்களை வென்ற மகானாம் ஸ்ரீ ஆத்தான், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளைத் தமது பாக்கியமாகக் கருதி, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடைய திருவாய்மொழி விளக்கங்களால் மிக்க ஞானம் பெற்று, "ஸ்ரீ ஞானக்கண் ஆத்தான்" என்றே திகழ்ந்தார்.

ஸ்ரீ திருகோட்டியூர் நம்பிகளின் திருக்குலத்தில் தோன்றிய ஸ்ரீ திருக்கோட்டியூர் ஐயர், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவடிகளில் பணிந்து, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருவுள்ளத்தை உகப்பித்து, சத்தைப் பெற்றார்.

ஸ்ரீ பள்ளக்கால் சித்தரும், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ஞானம், பக்தி, வைராக்கியம் முதலான திருக்கல்யாண குணங்களைக் கேள்வியுற்று, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரது திருவடிகளில் பணிந்து உய்ந்தார்.





ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் நிறுவிய ஸ்ரீ வானமாமலை திருமடத்தின் சீர்மை

Image Source: http://vanamamalai.us/home
"மதுரகவி மலர்ப்பதங்கள் மகிழ்ந்தினிது வாழியே!"
"எம் மதுரகவி இணையடிகள் இனிதூழி வாழியே!"
"வாழி மதுரகவி மாமுனிவன் வண்கழல்கள்!"


ஸ்ரீ வானமாமலை திருமடத்துத் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ அரங்கநகரப்பன் எழுந்தருளிய வரலாறு

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீ வானமாமலைக்கு அனுப்பக் கோரி, ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ சேனைமுதலியாரிடமிருந்து [ஸ்ரீ விஷ்வக்சேனர்], ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஒரு திருமுகம் [கடிதம்] வர, ஸ்ரீ மணவாள மாமுனிகளும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை அவ்வாறே நியமித்து, அன்று, ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி இறுதிப் பதிகத்தில் "அரங்கநகரப்பா!" என்ற சொல்லை ஓத, திருவரங்கம் கருவறையில் இருந்த ஒரு மூர்த்தியாம் ஸ்ரீ அரங்கநகரப்பன், "உமது சீடராம் பொன்னடிக்கால் ஜீயருக்கும், உமக்கும் நாம் வானமாமலை எழுந்தருள்வோம்!" என ஸ்ரீ அர்ச்சகர் மூலமாக ஸ்ரீ மணவாள மாமுனிகளிடம் அறிவிக்க, மகிழ்ந்த ஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பார்த்து ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும், "பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு," என விண்ணப்பிக்க [அதாவது, திருவாய்மொழி, பாசுரம் # 10-6-9, 3-ம் வரியைக் கூறி, "உத்தம ஆசாரியரான மணவாள மாமுனிகளே! தங்களது பெருமையாலேயே தங்களுக்கு ஆட்பட்ட இந்த அடியவனுக்கும் இப்பேற்றை எம்பெருமான் அருளினான்," என்று ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் விண்ணப்பம் செய்கின்றார்], ஸ்ரீ அரங்கநகரப்பனை ஸ்ரீ மணவாள மாமுனிகளே ஸ்ரீ வானமாமலை திருமடத்தில் திருப்பிரதிஷ்டை செய்து, பிரிவுத்துயர் தாளாத ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருடன் திருவரங்கம் திரும்பினார்.

ஸ்ரீ வானமாமலை திருமடத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமேனி எழுந்தருளிய வரலாறு

ஒரு முறை ஸ்ரீ வரவரமுனிகள், வைகாசி விசாக உற்சவத்தின் போது ஸ்ரீ தேவப்பெருமாளை மங்களாசாசனம் செய்ய, உற்சவம் முடிந்த தருவாயில், அவ்வூர் அடியவர்கள், "இந்த முறை வைகாசி விசாக உற்சவம் மிகவும் சிறப்பாக நடந்தது!" என்ன, அதைக் கேட்டு ஸ்ரீ வரவரமுனிகள் மிக உகந்து, அவர்களுக்கு உபதேசங்களைச் செய்து ஆதரித்து அருள, அவர்களும் மிக்க நன்றியுடன், "அப்படியே ஆகட்டும். அடியோங்களைத் திருத்திப் பணிகொள்ள ஒருவரை நியமித்து அருள வேண்டும்," என வேண்ட, ஸ்ரீ வரவரமுனிகள் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜியரை அழைத்து, "நம் அப்பாச்சியாரண்ணாவை அழைத்து வாரும்," என அருள, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும் அப்படியே செய்ய, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவை எல்லோருக்கும் காட்டி, "இவரை நம் மரியாதையாக எண்ணி அருளுங்கள்," ["நம்மைப் போலவே இவரையும் மதித்து இருங்கள்"] என்று நியமித்து, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவிடம், "நீர் முதலியாண்டான் திருவம்சத்தவர் ஆகையால், முதலியாண்டான் திருவம்சத்து ஆசாரியர்களின் திருவுள்ளம் உகக்கும்படி இங்கே எழுந்தருளியிருந்து, நமது வாக்யனுவிதாயியாய், இவர்கள் எல்லோருக்கும் உபதேசங்களைச் செய்து, பேரருளாளனுக்கு மங்களாசாசனபரராய் இரும். திருமாமகள் கொழுநனான அத்திகிரி அருளாளன் உமக்கு எல்லா நன்மைகளும் செய்வாராக," என ஆசி கூறி அருளினார்.

சில நாள்கள் சென்ற பின், மறுபடியும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீ வானமாமலைக்கு அனுப்பக் கோரி ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ சேனைமுதலியார் திருமுகம் வர, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பிரிவுத் துயரால் வருந்த, அதே சமயம், ஸ்ரீ வரவரமுனிகள் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவை அழைத்து, "முன் நியமனப்படிக்குப் பெருமாள் கோயிலுக்குச் [ஸ்ரீ காஞ்சிபுரத்திற்கு] சென்று நித்யவாசம் செய்யும்," என்று அருள, "இந்தச் சேவையும் கோஷ்டியையும் விட்டு விடைகொள்ள வல்லேனோ?" என்று ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா வருந்த, ஸ்ரீ வரவரமுனிகள் ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு, சந்நிதியில் எழுந்தருளி, "நாம் பல நாளாய் பயன்படுத்திய ஸ்ரீ இராமாநுசத்தை [பஞ்சபாத்திரத்தை] உமது ஆசாரியர் பொன்னடிக்கால் ஜீயர் தமது திருமண் கூடையிலே வைத்து வழிபட்டு வருகின்றார். அத்தையிட்டு நம்மைப் போலே இரண்டு விக்கிரகங்கள் உண்டாக்கி, உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்கிரகமும் உமக்கு ஒரு விக்கிரகமுமாகக் கொள்ளும்," என்று அருள, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பழைய திருவாழி, திருச்சங்கு சாதிக்கும் ஆழ்வார்கள் மற்றும் திருமண், ஸ்ரீசூர்ண உபகரணங்களையும் ஸ்ரீ இராமானுசனோடு சேர்த்து, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா அப்படியே செய்ய, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருக்கும், ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவிற்கும் அத்திருமேனிகளை ஸ்ரீ வரவரமுனிகள், ‘நாமே உங்களுடன் வருகின்றோம்! நம் ஆணைப்படி தொண்டுகள் செய்வீர்,’ என்றருளி, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவை அழைத்து, “கோயிலாழ்வாரிலே எழுந்தளியிருக்கிற என்னைத் தீமனங்கெடுத்தார் என்கிற பெருமாள் ஸ்ரீ ஆட்கொண்ட வில்லி ஜீயர் திருவாராதனமாய் எழுந்தருளியிருந்தவராகையாலே, ஸ்ரீ ஆட்கொண்ட வில்லி ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கரான ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருவம்சத்தவராக, ஸ்ரீ கந்தாடை ஆண்டானுடைய கைங்கர்யம் போலே நீரும் கைங்கர்யம் பண்ணத்தக்கவர் ஆகையாலே, உமக்கு இவர் திருவாராதனம்," என்று உகந்தருளி, கோஷ்டியிலே எழுந்தருளி, ஸ்ரீ அப்பாச்சியாரண்ணா விஷயமாக ஒரு சுலோகமும் அருளிச்செய்து, "பேரருளாளரே ஆச்சியாருக்குக் குமாரராக அவதரித்து அருளினார்!" என்று பேரன்பினாலே அருளிச்செய்து, "பெருமாள் கோயிலில் நித்தியவாசம் பண்ணிக்கொண்டு, சுகோத்ரராய் இரும்," என்று ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவிற்கு விடை சாதித்து [தந்து] அருளினார்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும் ஸ்ரீ வானமாமலை திருமடத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அர்ச்சைத் திருமேனியைத் திருப்பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ இராம பாதுகைகளின் தாசனாய்த் திருவயோத்தியை ஆண்டது போல, ஸ்ரீ மணவாள மாமுனிகளது உத்தரவு பெற்றே திருத்தொண்டுகளைச் செய்தார். ஸ்ரீ அப்பாச்சியாரண்ணாவும் ஸ்ரீ வரவரமுனிகள் அருளிய திருமேனிகளைத் திருகச்சியிலே தம் திருமாளிகையில் எழுந்தருளச்செய்து, ஆசாரியன் திருவுள்ள உகப்புக்கே கைங்கர்யங்கள் செய்து எழுந்தருளியிருந்தார்.

ஸ்ரீ வானமாமலை திருமடத்தில் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் திருமேனி எழுந்தருளிய வரலாறு

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் வைகுந்தம் செல்லவிருப்பதை உணர்ந்த சீடர்கள் வருந்த, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தியானித்து, தமது சீடர்களில் சமர்த்தராம் ஒருவரான ஸ்ரீ களமூர் வரதமுனிகளை "2-ம் பட்ட வானமாமலை ராமாநுஜ ஜீயர்" என நியமித்து, ஸ்ரீவரமங்கை உடனுறை ஸ்ரீ தெய்வநாயகனின் திருவடிகளில் அவரைச் சமர்ப்பித்து, "இவரது நித்திய கைங்கர்யங்களை ஏற்றருளவேண்டும்," என வேண்ட, ஸ்ரீ களமூர் வரதமுனிகளும், ஸ்ரீ இராமாநுஜப் பிள்ளானும், ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரது அர்ச்சைத் திருமேனிகளைச் செய்ய, ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரும், ஒன்றை ஸ்ரீ வானமாமலை திருமடத்திலேயே வைக்க ஸ்ரீ களமூர் வரதமுனிகளுக்கு அருளி, மற்றொன்றை ஸ்ரீ இராமாநுஜப் பிள்ளானுக்குப் அருளினார். ஸ்ரீ களமூர் வரதமுனிகள் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் திருமேனியைத் திருமடத்தில் திருப்பிரதிஷ்டிக்க, ஸ்ரீவரமங்கையும், ஸ்ரீ தெய்வநாயகனும் மிக உகந்தார்கள்.

வாழையடி வாழையென வரும் ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் பெற்ற அருளாசிகள்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைகுந்தம் திரும்பியபோது, அவரது [பூருவாசிரம] திருப்பேரனாராகிய ஸ்ரீ ஜீயர் நாயனாரும், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவாணைப்படி, ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடி நிலைகள், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் உபதண்டம், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் கணையாழி ஆகியவற்றை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருக்கு அளித்து அருளினார். இன்றும், புதிதாகப் பட்டத்தை ஏற்கும் ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஒவ்வொருவரும் அவற்றைப் பூசித்து, அதன் பின் அவற்றைத் தரிக்கும் பேற்றைப் பெற்றுள்ளனர்.




முடிவுரை


என்று ஆன்றோர்கள் அருளியவாறு, எண்திக்கயம் சூழ் ஸ்ரீ மணவாள மாமுனிகளையும், எண்திக்கயங்களை அடிமை கொண்ட ஸ்ரீ வானமாமலை ராமானுஜ ஜீயரையும் சிந்திக்கும் மகத்தான பேறு பெற்றோம். இப்பேற்றைச் சுவைக்க வழி வகுத்த வள்ளல்களான ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயருக்கும், ஸ்ரீ 'ஞானத்ருஷ்டி' அழகப்பங்காருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்! இப்பேற்றை ஆசையுடன் சுவைத்த ஒவ்வொருவரும் எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர்.



வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment