Search This Blog

Monday 26 December 2022

அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள்


அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள்


Image Source: https://in.pinterest.com/pin/9148005503639887/


முன்னுரை
 
ஸ்ரீ மணவாள மாமுனிகள், "அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததி" என்று ஸ்ரீ ஆண்டாளைப் போற்றுகின்றார்.

தமிழில் "அஞ்சு" என்ற சொல் 5 என்ற எண்ணைக் குறிக்கும் அல்லது அச்ச உணர்ச்சியைக் குறிக்கும்:

ஸ்ரீ ஆண்டாளுக்கு முன் 5 ஆழ்வார்கள் திருவவதாரம் செய்தார்கள். ஸ்ரீமுதலாழ்வார்கள் பிரிக்கமுடியாதவர்கள் என்பதால் அவர்களை ஒன்றாகக் கணக்கிட்டால், ஸ்ரீ ஆண்டாள் 5 ஆழ்வார்களின் ஞான வாரிசு. அவர்களின் பக்தி, ஞானம் அனைத்தையும் அவள் பிறந்த வீட்டுச் சீராக ஒரு சேரப் பெற்றாள்.

மேலும், திருமாலுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எப்போதும் திருமாலுக்குப் பல்லாண்டு பாடி வருபவர் ஸ்ரீ பெரியாழ்வார். அத்தகைய புகழ்பெற்ற திருவம்சத்தின் வாரிசு ஸ்ரீ ஆண்டாள்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீ உபதேசரத்தினமாலை - பாசுரம் # 24
"பெருப்பெருத்த பெருமையுடைய பெரியாழ்வார்" என்ற கட்டுரையில் மங்களாசாசனத்தைப் பற்றியும், ஸ்ரீ பெரியாழ்வாருடைய மங்களாசாசனத்தின் தனிச்சிறப்பைப் பற்றியும் ஆசாரியர்கள் அருளியவற்றைப் பகிர்ந்துகொண்டேன். இக்கட்டுரையை அக்கட்டுரையின் ஒரு தொடர்ச்சி என்றே கொள்ளலாம்.

மாதவனுக்கு மங்கலமே மொழிந்த மாதகவோராகிய ஸ்ரீ பெரியாழ்வாருக்குத் திருமகளாரான ஆண்டாளின் திருவாக்கிலும் திருப்பல்லாண்டின் மங்கல நாதம் ஒலிக்கும். இதற்குத் திருப்பாவையில் சான்றுகள் உள்ளன. அவற்றுள் மிகவும் தெள்ளத் தெளிவான சான்று திருப்பாவை பாடிய செல்வி அருளிய 24-ம் பாசுரமான "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" பாசுர வரிகள்.

"வாழி," "போற்றி," "பொலிக," ஆகிய சொற்களும் "பல்லாண்டு" என்பதையே பொருளாகக் கொண்ட சொற்கள். திருப்பாவை 24-ம் பாசுரத்தில் 6 வரிகள் "போற்றி" என்று எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடும் வரிகள். இவற்றுள் திருப்பல்லாண்டின் பிரணவ நாதம் ஒலிக்கின்றது. இதைச் சுவைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாம்.

இக்கட்டுரையில் பாசுர விளக்கங்கள் யாவும், திருப்பாவைக்கு ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை அருளிய 6000 படி என்ற உரையையும், ஆசாரியர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய 3000 படி என்ற உரையையும் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பெற்றுள்ளன.




1. "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"


Image Source: https://in.pinterest.com/pin/602708362644892603/


ஸ்ரீ பெரியாழ்வாரைப் போலவே, அன்று நடந்த திருவவதார நிகழ்ச்சிகளுக்குத் தென்புதுவை வேயர் பயந்த விளக்காம் ஆண்டாள் இன்று பல்லாண்டு பாடுகின்றாள்.

ஸ்ரீ பெரியாழ்வார் "உன் சேவடிச் செவ்வித் திருக்காப்பு" என்றே திருப்பல்லாண்டைத் துவங்கியருளினார். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையும் "அடி போற்றி" என்று திருவடிக்குப் பல்லாண்டு பாடியே பாசுரத்தைத் துவங்குகின்றாள்.

"எம்பெருமான் அன்று உலகளந்தபோது, இந்திரன் அவன் கேட்டதைப் பெற்றுப்போனான். மகாபலியோ 'மாபெரும் வள்ளல்' என்று பெயர் பெற்றான். ஆனால், எம்பெருமானுக்கு அருகே இருந்து ஒருவரும் பல்லாண்டு பாடிக் காப்பிடவில்லையே!" என்று ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வயிறு பிடித்துக் காப்பிடுகின்றாள்.

"பிராட்டிமார்கள் தங்களுடைய செந்தாமரைக்கைகளால் தொட்டாலும் கன்றிப் போகும் மிக மென்மையான திருவடிகளை உடைய எம்பெருமான், காடும் மேடும் நிறைந்ததும், வேண்டுவோர் வேண்டாதார் என்று அனைவராலும் நிரம்பப் பெற்றதும் ஆகிய இந்த உலகத்தை அளந்தானே!" என்று ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வருந்துகின்றாள்.

"உலகளந்த களைப்பு நீங்கட்டும்! அன்று பாடமுடியாமல், இன்று பாடுகின்றோம்!" என்று பல்லாண்டு பாடுகின்றாள்.




2. "சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி"


Image Source: https://in.pinterest.com/pin/1049198044412314999/


ஸ்ரீ பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 3-ம் பாசுரத்தில் "இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு" என முழங்கினார். அதே போல, ஆழ்வார் திருமகளார் ஆண்டாளும் ஸ்ரீ இராமபிரான் இலங்கையைப் பொடிப்பொடியாக்கியதற்குப் பல்லாண்டு பாடுகின்றாள்.

"ஆழ்வீர்! துயர் தீர்வீர்! எனக்குத் தீங்கு ஏதும் வராது!" என்று எம்பெருமான் திண்டோள்களைக் காட்ட, ஸ்ரீ பெரியாழ்வார், "மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உனக்குப் பல்லாண்டு" என்றார் அன்றோ? அதே பாதையை அவரது திருமகளாரும் பின்பற்றுகின்றாள்.

"மனத்துக்கினியானே! சீதைப் பிராட்டியையும், உன்னையும் பிரித்த அக்கயவன் இருக்கும் ஊருக்கோ சென்றாய்? கொட்டும் கொடிய குளவிகள் எல்லாம் கூட்டாக உறைவது போல, கொடிய அரக்கர்கள் கூட்டாக வாழும் ஊருக்குச் சென்றாயே! உன்னுடைய மென்மையான திருவடிகளைக் கொண்டு திருவயோத்தியிலிருந்து நடந்து, நடந்து தென்னிலங்கை வரை சென்றாயே!" என்று பட்டர்பிரான் கோதை வயிறு பிடிக்கின்றாள்.

எம்பெருமானும் தனது திருத்தோள்களின் திறல் தன்னை ஆழ்வார் திருமகளார் ஆண்டாளுக்குக் காட்டிக்கொடுக்க, "எம்பெருமானைக் காத்த அத்திறலுக்கு என் வருமோ?" என மேலும் அஞ்சி, மதிளுக்கு மதிள் கட்டுவார் போல, அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியான கோதை அந்தத் திருத்தோள்களின் திறலுக்குப் பல்லாண்டு பாடுகின்றாள்.

ஸ்ரீ இராமபிரான் குழந்தைப் பருவத்திலேயே அத்திர சத்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்து, அரக்கர்களை வீழ்த்தி, சிவதனுசையும் முறித்தவன். இதற்கெல்லாம் பல ஆண்டுகள் கழித்தே இராவண வதம் நடந்தேறியது. சூடிக்கொடுத்த சுடர்கொடி பேரன்பு வெள்ளத்தில் இதனை மறந்தனள்.




3. "பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி"


Image Source: https://in.pinterest.com/pin/813814595153129991/


ஸ்ரீ இராமபிரானைக் காட்டிலும் ஸ்ரீ கண்ணபிரான் எதிர்கொண்ட ஆபத்துக்கள் அதிகம். போர்த்தொழில் அறியாத பெற்றோரிடம், சேனைகள் எதுவும் இல்லாத திருவாய்ப்பாடியில் வளர்ந்தான். தாய்வேடம் [பூதனை] உள்பட வெவ்வேறு வேடத்தில் அவனைத் தாக்க வந்த கொடிய அரக்கர்களைச் சந்திக்கும் ஆபத்தான சூழ்நிலையில் ஸ்ரீ கண்ணபிரான் வளர்ந்தான்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 7-ம் பாசுரத்தில் "மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு" என்றும், 10-ம் பாசுரத்தில் "ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே" என்றும் ஸ்ரீ கண்ணபிரானுக்குப் பல்லாண்டு பாடினார். ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் பற்பல இடங்களில் பாடியுள்ளார். அவ்வழியே சென்று, பட்டர்பிரான் கோதையும் ஸ்ரீ கண்ணபிரானுக்கு இப்பாசுரத்தில் 4 வரிகளில் பல்லாண்டு பாடியுள்ளாள்.

இராவணன் தான் ஒரு எதிரி என்பதை வெளிப்படுத்தினான். ஆனால், கள்ளச் சகடமோ தன் தீமையை மறைத்து, ஒரு சகடம் போலவே காட்சி அளித்தான். அந்தத் தருணத்தில் ஸ்ரீ கண்ணபிரானைக் காக்க அன்னை யசோதையும் அருகே இல்லை. எனினும், ஸ்ரீ கண்ணபிரான் அந்தக் கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சினான்.

பொதுவாக, ஸ்ரீ கண்ணபிரானின் இச்செயலைப் பற்றிக் கேட்கும் பெண்பிள்ளைகள் எம்பெருமானின் மிடுக்கிற்கும், வீரத்திற்கும் மயங்குவார்கள். ஆனால், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையோ விழிப்புடன் அவனுக்குக் காப்பிடுகின்றாள்!




4. "கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி"


Image Source: https://www.amarchitrakatha.com/wp-content/uploads/2020/08/Bhagwat_KrishnaVatsasura.jpg


"அந்தோ! 'கள்ளச் சகடமே ஒரு படி மேல்!' என்னலாம் படி அன்றோ இரு கொடியோர்கள் கன்றுக்குட்டியின் வடிவத்திலும், விளாங்கனியின் உருவத்திலும் வந்தனர்! இருவரும் சேர்ந்து நம் கண்ணன் மீது பாய்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்!" என்று பூமாலை சூடிக்கொடுத்தாள் அஞ்சுகின்றாள்.

ஸ்ரீ கண்ணபிரான் கன்றின் வடிவில் வந்த வத்சாசுரனை விளாங்கனியின் வடிவில் இருந்த அசுரன் மீது எறிந்து, ஒரே அடியில் இருவரையும் வீழ்த்தினான். அவனுக்கே உரிய பாணியில், ஒரு திருவடியை வளைத்து வெற்றியுடன் நின்றான். அந்த வளைத்தத் திருவடிக்கும், அந்தக் கழலின் செம்மையான நிறத்திற்கும் விட்டுசித்தன் கோதை காப்பு இடுகின்றாள்!




5. "குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி"


Image Source: https://in.pinterest.com/pin/850687817121973899/


மேற்கூறிய யாவரும் அசுரர்கள். ஆனால், எம்பெருமான் திருவருளால் பற்பல திருவவதாரங்களில் [ஸ்ரீ கண்ணபிரான் திருவவதாரம் உள்பட!] நன்மையே பெற்றுப்போன இந்திரன், ஓயாமல் திருவாய்ப்பாடியை மூழ்கடிக்கக் கல்மழை பொழிந்தான்.

திருவாய்ப்பாடியில் வாழும் அனைவருக்கும் [பசுக்கள், கன்றுகள் உள்பட], தனது சிறு விரலால் கோவர்த்தன மலையை ஏழு நாள்கள் கருணையுடன் தாங்கிப்பிடித்து, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் காத்தருளினான். இந்திரனையும் கருணையுடன் ஒன்றும் செய்யாது மன்னித்துவிட்டான். இந்தக் கருணைக்குத் தோற்று, அக்கருணைக்குப் பெரியாழ்வாரின் திருக்குமாரத்தி பல்லாண்டு பாடுகின்றாள்.




6. "வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி"


Image Source: https://in.pinterest.com/pin/1118440888683606068/


ஸ்ரீ பெரியாழ்வார் "சுடராழியும் பல்லாண்டு" என்றும், "அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே" என்றும் திருவாயுத ஆழ்வார்களுக்குக் காப்பிட்டார். அதே பாதையில் விட்டுசித்தன் கோதையும் பயணிக்கின்றாள்.

கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிய ஸ்ரீ நந்தகோபர் வேல் பிடித்திருப்பதால், ஸ்ரீ கண்ணபிரானும் வேல் பிடித்திருக்கின்றான்.

எம்பெருமான் செய்தருளின மாயச் செயல்களைக் குறிப்பிட்டு, அவற்றுக்குப் பல்லாண்டு பாடினால், அதனாலாயே அவனுக்குக் கண்ணெச்சில் ஏற்படக்கூடும் என அஞ்சி, "அவன் கையில் இருக்கும் வேலே அவன் வெற்றிகளுக்குக் காரணம்," என்று சொல்லி, ஸ்ரீ கண்ணபிரானைக் காக்க முற்படுகின்றாள். அது மட்டுமின்றி, கையில் வேல் பிடித்த ஸ்ரீ கண்ணபிரானின் திருக்கோலத்தின் ஒப்பற்ற பேரெழிலுக்கும் காப்பிடுகின்றாள். அந்த வேலுக்கும் காப்பிடுகின்றாள்.




முடிவுரை
 
ஸ்ரீ பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டை அடியொற்றியே இப்பாசுரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய அன்ன வயல் புதுவை ஆண்டாள், "என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" ["உன்னுடைய வெற்றிகளைப் பாடுவதன் பயன் உன்னுடைய வெற்றிகளைப் பாடுவதே"] என்றே பாசுரத்தைத் தலைக்கட்டுகின்றாள்.

நாமும் ஸ்ரீ பெரியாழ்வாரின் திருவடிகளுக்கும், வண்புதுவைநகர்க் கோதையின் மலர்ப்பதங்களுக்கும், அவர்களின் அடியார்களின் திருவடிகளுக்கும் "போற்றி! போற்றி! போற்றி!" என்று எப்போதும் காப்பிடுவோம்.


வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment