இப்பாசுரங்களுக்கு ஆசாரியர் அருளிய மெய்யுரைகள் மிக அருமையானவை:
"காண் கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை": [பொதுவாக] எம்பெருமான் எவருக்கும் தன்னை எளிதாகக் காட்டிக்கொடுப்பவன் அல்லன்.
"கை செய் அப்பாலதோர் மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி": "ஒப்பற்றதோர் ஓவியம் உயிர் பெற்று வந்ததோ?" என்று எண்ணும் படி, எவராலும் படைக்கமுடியாததும், அனைவரும் வியந்து மயங்கும் தன்மை உடையதும் ஆகிய ஒரு மிக அழகான உருவத்தை எடுத்துக்கொண்டான். தானம் ஏற்கும் ஒரு திருக்குறளப்பனாய் வந்தான்!
"மாண் குறள் கோல வடிவு": தன் பெருமையை மறைத்துக்கொள்ளவே குறள் வடிவாக வந்தான். எனினும், அதுவே அவனுடைய பெருமைக்குக் காரணமாயிற்று. "இந்த அழகிய வடிவிற்கு எந்த ஒரு கண்ணெச்சிலும் வராமல் இருத்தல் வேண்டுமே!" என்று எல்லோரும் எண்ணும் வகையில் திகழ்ந்தான். ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமான் பல படிகள் கொள்ளும் பால் போன்றவனாம். ஸ்ரீ வாமனப் பெருமானோ அவ்வளவு படிப்பாலையும் சுண்டக் காய்ச்சக் கிடைக்கும் சுவை மிக்கதாம் திரட்டுப்பால் போன்றவனாம்!
"கொள்வன் நான் மாவலி மூவடி தா": எம்பெருமான் இந்த உலகத்தின் முழுமுதல் நாயகன். ஆதலால், அவனுக்கு ஒருவரிடம் எதுவும் வாங்கிப் பழக்கம் இல்லை! தேவர்களும் அவனைப் பணிந்தே பழக்கம் - அவன் அரசர்களைப் பணிந்து பழக்கம் இல்லை! அது மட்டுமின்றி, ஸ்ரீ வாமனன் பிறந்த அன்றே தானம் ஏற்கச் சென்றுவிட்டான். அவனுக்கு அரசர்களிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படி தானம் கேட்கவேண்டும், முறையாக என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை. அதனால், சீராகப் பேசாமல், "கொள்வன் நான் மாவலி மூவடி தா" என்று மழலை மொழியில் பேசிவிட்டான்! "ஏது? பூமியிலிருந்து ஒரு மழலைக் குரல் கேட்கிறதே!" என்று மகாபலி கூர்ந்து நோக்க, அங்கே நம் திரட்டுப்பால் நின்று கொண்டிருந்ததாம்!
"கள்வனே": "இந்த மகாபலி 'வள்ளல்' என்று பெயர் பெற்றவன். அவனைக் கொல்வது தகாது. இந்திரனோ நம்மைக் கெஞ்சுகின்றான். என் செய்வோம்?" என்று எண்ணி, மகாபலியை மயக்க இந்த அற்புதமான குறள் உருவத்தை எம்பெருமான் எடுத்துக்கொண்டான். தனது குருவான சுக்கிராசாரியர் உண்மையைச் சொல்லித் தடுத்தும், மகாபலியால் வாமனப் பெருமானுக்குக் கட்டுப்படாமல் இருக்கமுடியவில்லை. அவனது சிறு குறளான கோல வடிவும், மதுரச் சொல்லும் மகாபலியைச் சுண்டி இழுத்தன.
ஸ்ரீ வாமனப் பெருமானின் பொறுமையும் பெருந்தன்மையும்
|
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 1-8-7
|
|
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 1-8-8
|
|
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
|
|
இந்தத் திருவவதாரத்தில் எம்பெருமான் ஒருவரையும் கொல்லவில்லை!
"மகாபலி! வந்திருப்பவன் பரம்பொருளான திருமால்! கொடுக்காதே!" என்று சுக்கிராசாரியர் தடுத்தார். ஒரு சிறு வண்டாக மாறி, தானம் கொடுக்க மகாபலி நீர் வார்ப்பதைத் தடுக்க முயன்றார். எம்பெருமான் அவரது ஒரு கண்ணைத் தர்ப்பைப்புல்லால் கிளறிவிட்டான்.
"இது என்ன கள்ளத்தனம்! சிறிய காலைக் காட்டி, பெரிய காலால் அளக்கின்றாயே! இதையெல்லாம் என் தந்தை அறியமாட்டார்! முதலில் காட்டிய காலால் அளப்பாய்!" என்று மகாபலியின் குமரன் நமுசி பிணங்கி வந்தான். எம்பெருமான் அவனை அப்படியே தூக்கி வானில் சுழற்றிவிட்டான்.
இவற்றை ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரங்களாகப் பாடி, எம்பெருமானுக்கு "அச்சோ" கொட்டுகின்றார்.
|
ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 79
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
இப்பாசுரத்திற்கான உரையை மிகச் சுவையாக ஆசாரியர் வரைந்துள்ளார்.
"ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே": மகாபலி எம்பெருமானுக்கு மூன்றடி மண் கொடுக்க நீரை வார்க்க, அந்த நீரின் துளிகள் எம்பெருமானின் திருக்கைகளில் பட்ட மறுகணமே, ஸ்ரீ வாமனப் பெருமான் நெடுநெடுவென ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமானாக வளர்ந்தான்!
"நீள் விசும்பில் ஆரங்கை தோய அடுத்து": எம்பெருமான் வளர்ந்த வேகம் எத்தகையது என்றால், மகாபலி நீர் வார்த்த மறுகணமே, பிரம்மாண்டத்தின் எல்லையில் இருக்கும் சத்திய லோகத்தில் வசிக்கும் நான்முகனார், சத்திய லோகம் வரை நீண்ட எம்பெருமானின் திருவடிக்கு, தமது கமண்டலத்தில் உள்ள நீரால் மஞ்சனமாட்டினாராம்!
"கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்": "திருவுக்கும் திருவாகிய செல்வனான நீ திருக்குறளப்பானாகச் சென்று, மூவடி மண் வேண்டி, நெடுநெடுவென வளர்ந்து, உலகளந்தாய். இந்த உலகத்தில் உள்ளவர்கள் நற்றத்தைக் குற்றமாகவும், குற்றத்தை நற்றமாகவும் பார்ப்பவர்கள். 'மகாபலி கொடுத்தான், வாமனன் கொண்டான்' என்பதையே பற்றிக்கொண்டு, உன்னைப் பழித்துப் பேசுகிறார்கள்! இப்படிச் செய்துகொண்டாயே என்னப்பனே!" என்று ஆழ்வார் உருகுகின்றார்.
மகாபலி சொன்னது: "இனி இது தேவர்கள் சொத்து அல்ல, என் சொத்து"
தேவர்கள் சொன்னது: "எங்கள் சொத்தை மகாபலி பறித்தான். அதனைப் பெற்றுத் தாருங்கள்"
சுக்கிராசாரியர் சொன்னது: "பரம்பொருள் உன் சொத்தைப் பறிக்க வந்துள்ளான்! கொடுக்காதே!"
நமுசி சொன்னது: "கள்வா! சிறிய காலைக் காட்டி, பெரிய காலால் அளக்கின்றாயே! சிறிய காலால் அளப்பாய்!"
இவர்களுள் ஒருவரும் அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களும் எம்பெருமானின் சொத்து என்று உணரவில்லை. தாங்களும் தங்கள் ஜீவன்களும் கூட எம்பெருமானின் சொத்துக்களே என்பதையும் உணரவில்லை. ஆயினும், இவர்கள் எல்லோரிடமும் எம்பெருமான் பொறுமையையே கடைப்பிடித்தான். இது பெருங்குணம் அல்லவா?
|
ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமானின் திருக்கல்யாண குணங்கள்
|
நான்முகனார் செய்த நற்றவமும், பெற்ற நற்பயனும்
|
ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 78
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
நான்முகனார் எம்பெருமானின் திருநாமங்களை எப்போதும் பேசும் நற்றவத்தைச் செய்தார். அந்த நற்றவத்தின் பயனை நன்றாகப் பெற்றார். இந்தத் திருவவதாரம் இந்திரன் முதலான தேவர்களுக்காக எடுக்கப்பட்டாலும், "அவர்கள் பெறாத நற்பயனை நான்முகனே பெற்றான்!" என்று ஆழ்வார் போற்றுகின்றார்.
நான்முகனார், தம் இருப்பிடமான சத்தியலோகத்திலிருந்து அகலாமல் வீற்றிருக்க, அவரைத் தேடி எம்பெருமானின் திருவடி வந்தது! "இந்தத் திருவடியை நான் கழுவ வேண்டும்!" என்று நான்முகனார் நினைத்த மாத்திரத்திலேயே, அவரது கமண்டலத்தில் கங்கை நீரைத் தர்மம் நிரப்பியது. "தான் பெற்ற ஒவ்வொரு சிவந்த கையும் நன்றாகப் பசியாறும்படி, எம்பெருமானின் திருவடியை நான்முகன் கழுவினான்!" என்று ஆழ்வார் கொண்டாடுகின்றார்.
|
ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமான் மகாபலிக்குச் செய்த பேரருள்
|
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம் - பாசுரம் # 25
|
|
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 3-4-1
|
|
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 4-9-7
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
முதல் பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:
"மதியாது": மகாபலி ஒரு அசுரன் என்பதையும் மதியாது [அவனுக்கு அருள் புரிந்தாய்]
"மற்றும் வகையால் வருவது ஒன்று உண்டே": நீ குறளாய் வந்து, ஓங்கி வளர்ந்ததால் உனக்கு ஏதேனும் பயன் உளதோ? உன்னடியார்களுக்கு மட்டுமே இதனைச் செய்தாய் அன்றோ?
"வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலி": வைரக்கல்லை நேராக உண்டால் உயிர் போகும் என்பதால், அதனைச் சிறுகச்சிறுகப் பொடித்து, மூலிகைகளுடன் குழைத்து உண்ணும் அளப்பரிய செல்வச்செருக்கு உடைய மகாபலி
"மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய்": மேலோட்டமாக மகாபலி எம்பெருமானுடைய அடியவர் போல் நடந்து கொண்டாலும், எம்பெருமான் திருவுள்ளத்திற்கு எதிர்மறையாக நடந்து, இந்திரலோகத்தைப் பற்றினான். இதனால், மெய்யடியார்கள் போல் அல்லாமல், எம்பெருமானுக்கு ஒரு எதிரியைப் போலவே நடந்து கொண்டான். மகாபலியின் இந்த விரோத வழக்கை, அவனது செருக்கை அடக்கி, எம்பெருமான் திருத்தி அருளினான்.
இரண்டாவது பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:
"உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த": மகாபலியின் செருக்கை அடக்கும் வண்ணம் மூவடி மண் கேட்ட எம்பெருமான், இரண்டே அடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்தான்! "மகாபலி! எனது மூன்றாவது அடியை எங்கே வைக்கவேண்டும், சொல்! உன் வாக்குறுதி என்ன ஆயிற்று?" என்று கூறி, [ஸ்ரீ கருடாழ்வார் மூலமாக] மகாபலியைச் சிறை பிடித்தான்.
மூன்றாவது பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:
"இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து": செருக்கழிந்த மகாபலி, "அடியேன் சிரத்தின் மீது வைப்பீர்!" என்று கூறி, சிரத்தைத் தாழ்த்த, எம்பெருமான் ஒரே கணத்தில் தனது திருவடியால் மகாபலியைப் பாதாளத்தில் அழுத்தினான். பாதாளம் என்பது சுவர்க்கத்தை விட செலவச்செழிப்பு உடைய இடம்! ஆதலால், மகாபாலியும் தன மனம் ஈடுபட்டு அவ்வுலகில் வாழத் தொடங்கினான். "மனம் கலந்து இருக்கை" - "கலவிருக்கை" ஆகும்.
குறிப்பு: இது மட்டுமின்றி, பாதாளத்தில் எம்பெருமான் மகாபலியின் வாயில்காப்போனாகவும் இருந்து அருள் புரிகின்றான்!
நம் போன்றோர் மீதும் ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமான் பொழிந்த தாயன்பு!
|
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 35
|
|
ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 2
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"தாவியன்று உலகமெல்லாம் தலை விளாக்கொண்ட எந்தாய்" என்ற சொற்றொடருக்கும், "உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து" என்ற சொற்றொடருக்கும் ஆசாரியர் அருளிய உரை மிகச் சுவையானது:
குழந்தை உறங்கும் பொழுது, அதன் அன்னையானவள், தாயன்பால் தூண்டப்பட்டு, அக்குழந்தையைக் கட்டி அணைத்து முத்தமிடுவாள். இதைக் குழந்தை அறியாது. அக்குழந்தை இதனைக் கேட்கவும் இல்லை. இருப்பினும் தாய் இதனைச் செய்து உகப்பாள் அன்றோ?
அதே போல, "இவன் பரமபக்தன், அவன் பாதகன்," என்றெல்லாம் பாராமல், "இவர்கள் நம் குழந்தைகள்!" என்ற ஒரே எண்ணத்தோடு, நம் போன்றோர்களின் சிரங்களில், பிராட்டிமார்கள் தொட்டாலும் சிவந்து போகும் தன் மென்மையான திருவடியை உலகளந்த எம்பெருமான் பதித்தான்.
முன்னமே நம்மிடம் சொன்னால், "வைக்காதே!" என்று நாம் அவனுக்கு ஆணையிடுவோம் என்பதால், நம்மிடம் சொல்லாமலேயே, உலகைத் தாவி அளந்து இதனைச் செய்தான். இதனைச் செய்து, உறங்கும் குழந்தையை அணைக்கும் அன்னையைப் போல, அவனே திருவுள்ளம் உகந்தான்!
|
"உலகமளந்த பொன்னடியே அடைந்து உய்வோம்!"
|
ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 91
|
|
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"ஞாலத்தை எல்லாம் அளந்தான்" என்பதற்கு உரை:
"'பரம்பொருள் யார்?' என்ற தேடலின் விடையை மறைத்துச் சொல்பவை நான்மறைகள். அந்த நான்மறைகளை வருந்தித் தேடத் தேவை ஏதும் இன்றி, அனைத்து உலகங்களையும் தன் திருவடியால் திருமால் அளந்தான். இதிலிருந்தே அவனே பரம்பொருள் என்பது விளங்குகின்றது அன்றோ? அவனுடைய செம்மையான திருவடிகளை அடைந்து உய்யுங்கள்!" என்று ஆழ்வார் முழங்குகின்றார்.
|
ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமானின் அடி போற்றி போற்றி போற்றி!
|
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 24
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!" என்ற வரிக்கு ஆசாரியர் அருளிய அற்புதமான உரை:
ஸ்ரீ பெரியாழ்வார் "சேவடிச் செவ்வித் திருக்காப்பு" என்றார். எனவே, ஸ்ரீ பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையும் "அடி போற்றி" என்று திருவடிக்குப் பல்லாண்டு பாடியே பாசுரத்தைத் துவங்குகின்றாள்.
"அன்று": ஸ்ரீ பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளைக்கு எம்பெருமான் அன்று உலகளந்தது இன்று அளப்பது போலத் தோன்றுகின்றது. என்றோ நடந்து முடிந்த ஒன்றுக்கும், "எம்பெருமானுக்கு என் வருமோ?" என இன்று அஞ்சுவது அன்றோ பல்லாண்டு பாடும் மெய் அடியார்களின் தலையாய திருக்கல்யாண குணம்? "எம்பெருமான் அன்று உலகளந்தபோது, இந்திரன் அவன் கேட்டதைப் பெற்றுப்போனான். மகாபலியோ 'மாபெரும் வள்ளல்' என்று பெயர் பெற்றான். ஆனால், எம்பெருமானுக்கு அருகே இருந்து ஒருவரும் பல்லாண்டு பாடிக் காப்பிடவில்லையே!" என்று ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வயிறு பிடித்துக் காப்பிடுகின்றாள்.
"இவ்வுலகம்": "பிராட்டிமார்கள் தங்களுடைய செந்தாமரைக்கைகளால் தொட்டாலும் கன்றிப் போகும் மிக மென்மையான திருவடிகளை உடைய எம்பெருமான், காடும் மேடும் நிறைந்ததும், வேண்டுவோர் வேண்டாதார் என்று அனைவராலும் நிரம்பப் பெற்றதும் ஆகிய இந்த உலகத்தை அளந்தானே!" என்று ஸ்ரீ ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வருந்துகின்றாள்.
"அடி போற்றி": "உலகளந்த களைப்பு நீங்கட்டும்! அன்று பாடமுடியாமல், இன்று பாடுகின்றோம்!" என்று பல்லாண்டு பாடுகின்றாள்.
|
"ஸ்ரீ திரிவிக்கிரமப் பெருமானுடைய அடியார்களைப் பூசிப்போம்!"
|
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 2-3
|
|
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
|
|
"ஸ்ரீ திரிவிக்கிரம பெருமாள் உலகளந்ததைச் சொல்லிப் பாடி, திருக்காவிரி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் கண்ணீரினால், திருவரங்கநாதனின் திருக்கோயில் திருமுற்றத்தைச் சேறாக்கும் தொண்டர்கள் எவரோ, அவர்களது செம்மையான திருவடிகளில் உள்ள செழுமையான திருத்துகள்களை என் சிரத்திற்கு அணிகலனாகச் சூடிக் கொள்வேன்!" என்று ஸ்ரீ குலசேகரப் பெருமாள் முழங்குகின்றார்.
|
வாமனன் சீலன் எம் ஐயன் இராமானுசன்!
|
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 40
|
|
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
|
|
"இவன் பக்திமான், இவன் பாதகன்," என்று தராதரம் பாராமல், எல்லோர் தலையிலும் அன்புடன் தம் திருவடிகளை வைத்த ஸ்ரீ வாமனப் பெருமானைப் போலவே, ஸ்ரீ இராமானுசரும் நம்மில் எந்தவித ஏற்றத்தாழ்வும் பாராமல், வேதங்களின் ஆழ்பொருள்களைத் தமது ஈடற்ற பேரருளால் நமக்களித்து, நம்மை உய்ப்பித்தார். இதனால், "எம் ஐயன் இராமானுசன் வாமனன் சீலன் காணீர்!" என்று ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் பாரிக்கின்றார்.
குறிப்பு:
"எம்பெருமானின் ஈடு இணையற்ற திருக்கண்களுக்குச் செந்தாமரையின் இதழ்களை ஒப்பிடுவது இணையாகாது. வேறு ஒரு உவமை காணப்படாததால் இதனை உவமையாகச் சொல்கிறார்கள்," என்பர் பெரியோர். அதே போலத்தான் இங்கும். ஸ்ரீ வாமனப் பெருமான் நமக்காகச் செய்ததைக் காட்டிலும் எம் ஐயன் இராமானுசன் நமக்களித்த அருட்கொடைகள் பற்பல மடங்கு மேன்மையானவை.
ஸ்ரீ வாமனப் பெருமாள் என்ன செய்தார்? என்றோ ஒரு குறளாக வந்தார், மூவடி மண் ஏற்றார், உலகளந்தார், நம் தலைமீது நமக்கே தெரியாமல் திருவடி வைத்தார், சென்றார். ஆனால், எம் ஐயன் இராமானுசனோ, கலியிருள் நிறைந்த காலத்தில், 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து, நாம் கேட்காமலேயே நான்மறைகளின் தேர்ந்த ஆழ்பொருள்களை நமக்கும் கற்பித்து, நம் போன்றோருக்கும் திருமாமகள் கேள்வனாம் திருவரங்கனின் திருவடிகளில் சரணாகதி செய்து, தமது தெய்வத் திருவடிகளின் தொடர்பு மூலமாகவே பிறவிக்கடலைத் தாண்டுவித்து, நமக்கு வீடுபேற்றை அளிக்கின்றார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் நம்மிடம் காட்டிய தாயன்பைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. எம் ஐயன் இராமானுசனுக்கு உவமை சொல்ல முடியாது என்பதால், "வாமனன் சீலன்" என்று ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் ஒருவாறு சொல்லி முடித்தார்.
திருமால் பக்தியின் முதல் கட்டத்தில் இருப்பவர்கள், ஸ்ரீ வாமனப் பெருமான் பெருமைகளில் மூழ்கித் திளைப்பர்கள்.
திருமால் பக்தியின் இரண்டாம் கட்டத்தில் இருப்பவர்கள், திருக்குறளப்பனாகி வந்து, திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனின் அடியார்களின் திருவடிச் செழுஞ்சேற்றினைச் சென்னியில் சூடுவார்கள்.
திருமால் பக்தியின் இறுதி நிலையில் இருப்பவர்கள், ஆசாரியன் செய்த பேரருளில் ஒரு சிறு பங்கில் ஸ்ரீ வாமனப் பெருமானின் சீலத்தைக் காண்பார்கள்!
|
முடிவுரை
|
|
ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் பொழிந்த இன்னருளால், இந்நன்னாளில் ஸ்ரீ வாமன மற்றும் ஸ்ரீ திரிவிக்கிரம திருவவதாரங்களில் உள்ள சில தேர்ந்த பொருள்களை ஓரளவு சுவைக்கப் பெற்றோம்.
இதன் பயனாக என்றென்றும் திருமாலவனுக்கும், திருமால் அடியார்களுக்கும் பல்லாண்டு பாடி, நம்மால் ஆன அடிமைகள் செய்வோம்.
எல்லோரும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற ஸ்ரீ பட்டர்பிரான் கோதை இன்னருள் புரிவாள்!
வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!
|
நன்றிகள் பல!
|
|
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
பொலிக! பொலிக! பொலிக!
|
-
Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Sharanam Image Source: https://elayavilli.o...
-
Sri Andal Thiru Avathara Vaibhavam Image Credit: Sri @vishnuprabhanc Avl Introducti...
-
கோதா சதுச்லோகி Image Source: https://www.tamilbrahmins.com ...
-
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் திருவேங்கடமாமலை Image Source: https://tiru...
-
முன்னுரை இரண்டு நாள்களுக்கு முன் ஒருவருடன் ஆண்டாள் நாச்சியார் பற்றி வைரமுத்து அவர்களின் கட்டுரை குறித்து விவாதித்த பொழுது “ஆழ்வார்களின...
-
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் ஆயர்மாமகள் [நப்பின்னைப் பிராட்டி] ...
| |
🙏🙏🙏The real mighty of the Almighty is realised wholly only when see his Vishwaroopam. I Truly felt His Omnipresence and Realised His imposing Presence @ the Pandava Thoodhar Sannidhi, Thiru Paadagam, Kanchipuram where we can have His Dharshan from the Closest Quarter and feel His Almighty Swaroopam.
ReplyDeleteThank you so much for sharing such a wonderful anubhavam. Yes, it's a great feeling to get even a glimpse of Emperuman's Vishwarupam 🙏☺💐
DeleteVery nice. Dhanyosmi 🙏
ReplyDeleteSo glad you enjoyed it, thank you. Dhanyosmi ☺💐🙏
Delete